திருப்பம்-94

 திருப்பம்-94



'அன்புள்ள திருமாலுக்கு,


இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மிஸ்டர் திருமால் மித்ரா. யோசித்துப் பார்க்கும்போது ஒருமாதிரி புல்லரிக்குது. ஒரு வருஷம் ஆயிடுச்சு நாம கல்யாணம் பண்ணி! இந்த ஒரு வருஷத்தில் எத்தனை எத்தனை மாற்றங்கள், உணர்வுகள், ஆசைகள், ஏக்கங்கள், சண்டைகள், எல்லாத்தையும் தூக்கி சாப்பிடும் விதமான காதல் மழைகள்!

ஒருமாதிரி நல்லாருக்கு. காதல் கசக்குதைய்யானு இருந்த என்னைக் காதலிச்சு, காதலிக்க வச்சு, காதல்மேல ஒரு தூய்மையான அபிப்ராயத்தை உருவாக்கி, என் காதலுக்கான இலக்கணமாவே ஆயிட்டீங்க. நம்மளோட இந்த அழகான காதலும், அதுக்கு உரிமம் கொடுத்த உறவும் நிலைச்சு நிற்கனும்னு மனசார வேண்டிக்குறேன். மீண்டும் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்ங்க. உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்குது. இன்னும் இன்னும் பிடிக்கனும்’ என்று எழுதி இதய வடிவங்கள் பல வரைந்து, அழகான இதய வடிவ உறைக்குள் அதை வைத்தாள்.


பால்கனிக்குச் சென்று, அவன் பராமரித்துப் பாதுகாத்திருந்த சங்குப்பூச் செடியிலிருந்து பூக்கள் இரண்டு பறித்தவள், அதனை உறைக்குள் வைத்துவிட்டு அதனை மேஜையின் இழுப்பறையினுள் பதுக்கி வைத்தாள். இழுப்பறைக்குள் முந்தைய நாள் அவள் செய்த காகித சங்குப்பூ மலர்கள் இருந்தது. அதனை லேசாய் வருடியவள், இழுப்பறையைப் பூட்டிவிட்டு வந்து கட்டிலில் படுத்தாள்.


சில நிமிடங்களில் அவள் உறங்கிவிட, நல்லிரவு நேரம், அவளை வளைத்துப் பற்றிக் கொண்ட வலிய கரங்களுக்கு சொந்தமானவன் அவள் கண்களிலும் முத்தங்கள் பதித்தான்.


மெல்ல மெல்ல தூக்கம் களைந்து அவள் விழிக்க,


அவள் தலைகோதிய வளவன் அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.


தூக்கம் கலைந்தும் நிகழ்வை உணர அவளுக்கு நேரமெடுக்க, சில நிமிடங்களில் சுயம் பெற்றவள் விழிகள் விரிய அவனைப் பார்த்தாள்.


அழகாய் அவன் இதழ்கள் விரிய, வேகமாய் எழுந்து அமர்ந்தாள்.


பெண்ணவள் தன் சிகை ஒதுக்கிக் கொண்டு எழ முற்பட, அவள் கரம் பற்றித் தடுத்தவன் எழுந்து விளக்கை ஒளிரவிட்டான்.


பின் மெல்ல எழுந்தவள் இழுப்பறையைத் திறந்து, அவள் செய்த காகிதப் பூச்செண்டை எடுத்து புன்னகையாய் அவன் முன் நீட்ட,


விழிகள் விரிந்து முறல்கள் மின்ன அதனை வாங்கிக் கொண்டான்.


தான் எழுதிய மடலை எடுத்து அவனிடம் அவள் நீட்ட, அதை பிரித்துப் பார்த்தவன், அவற்றை வாசித்து முடித்து முகம் மலர்ந்தான்.


இதயம் போல் வடிவம் பிடித்துக் காட்டியவள் கைகளை அகள விரிக்க,


“திருமாலுக்கும் மித்துவ ரொம்ப பிடிக்கும்ல?” என்றவன், “கல்யாண நாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி” என்று அவளை அணைத்துக் கொண்டான்.


அவன் அணைப்பில் பாந்தமாய் பொருந்தியவளுக்கு அந்த நிமிடம் வேறெந்த கசடுமே மனதில் இல்லை.


அவள் முகத்தைக் கரங்களுக்குள் தாங்கிக் கொண்டவன், மிக இதமாய் அவள் இதழோடு இதழ் பொருத்திக் கொள்ள, அவன் புறாக்கூட்டிற்குள் தன் கரம் நுழைத்துப் பற்றிக் கொண்டாள்.


விளக்கை எப்போது அணைத்தனர், எப்போது பஞ்சனைக்கு மீண்டனர் என்பது இருவருமே அறியாததாய் மாறிப்போனது.


“மித்ரா..” என்று அவன் மெல்லொலியில் அழைக்க,


அவள் கருமணிகள் அவனைப் பார்த்து பளபளத்தன.


“எப்பமும் எம்மேல இதே காதலோடு இருடி. இது போதும் எனக்கு. ஆயிசுக்கும் வாழ ஓங்காதலு ஒன்னு போதும். இம்புட்டு குடுத்தாலும் அத நூறாக்கி ஒனக்குத்தர எனக்குத் திராணியிருக்கு. எதும் ரோசிக்காத புள்ள. நாயிருக்கேம். வளவேம் எப்பமும் ஒனக்காவத்தேம் இருக்கேம், இருப்பேம்” என்று கூறியவன், அவள் முகம் பற்றி, “ஓந்திருமால நம்புததான?” என்க,


அவள் விழியோரம் வழிந்த நீர்த்துளி அவன் கரத்தில் தஞ்சம் புகுந்தது.


“எதையும் மனசுல போட்டு ஒலட்டாதடி. எதுனாலுஞ் சொல்லு. நீ எம்புட்டு வேணா பொலம்பு. ஒருநாளுகூட நீயு புலம்புதனு குத்திக்காட்ட மாட்டேம்டி. என்னமாது ஒன்னய அரிச்சுட்டு இருந்தா, எங்கிட்டக்கக் கொட்டிபுடு” என்று அவன் கூற, மெல்லிய விசும்பலுடன், தன் தொண்டையைத் தொட்டுப் பார்த்தாள்.


“கொரலு கெடக்குது போடி. கலியாணத்துக்கு முன்னுக்க, காதலிக்கயில மணிக்கணக்கா ஓங்கிட்ட பேசியாடி காதல வளத்தேம்? இந்தா இப்பம் தந்தீயே கடுதாசி, அதுலதேம்டி வளத்தேம் நம்ம காதல. எதுவும் ரோசிக்கதட்டி ஆருவேணா என்ன வேணா சொல்லட்டும். இந்த வளவேம் ஒன்னய நீயு எப்புடிருந்தாலும், எப்புடி மாறினாலும் காதலிப்பாம். எவியளும் ஏதும் பேசினா மொகத்துல அறையுற கணக்கா சொல்லு, ஏம் புருஷனுக்கு நாயெப்புடியிருந்தாலும் ஒசத்தித்தேம்னு சொல்லு. இந்த வளவேம் மனசுல மித்ரா என்னிக்குமே சாமிதான்டி” என்று அவன் கூற,


அவனைத் தாவி அணைத்துக் கொண்டு விசும்பினாள்.


'எனக்கு நீங்க சாமிக்கும் மேல' என்று மனதோடு நினைத்துக் கொண்டவள், அவன் இதழை முற்றுகையிட,


மொட்டவளை மெல்ல ஆராதித்து, மலரச்செய்தான் ஆணவன். பல மாதங்கள் கழித்து, அவர்களை ஆக்கிரமித்த உணர்வுகள், கரைகாணா தேடலுக்கு அழைத்துச் செல்ல,


இருவரின் வேட்கையுடன் இணைந்த தாபம் இசைமீட்டி, மோகமுத்தெடுத்து அயர்ந்து கலைத்து உறங்க வைத்தது… மனரீதியான காதலுக்கும் தேடலுக்கும் உடல்ரீதியாய் அமைத்த சங்கமம், ஒருவித இதத்துடன் இருவரையும் தாலாட்டி தலைசாய்க்கச் செய்தது…


காலை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து கீச்சிடும் கிளிகளும், குறுவிகளும் அவர்களை எழுப்ப,


அணைப்பின் இதத்தை உளமாற உணர்ந்தபடியே இருவரும் கண்விழித்தனர்.


நாணம் குடைபிடிக்க, இமைகள் தாழ்த்திய சங்கமித்ரா, அவன் மார்பில் தன் நெற்றியைக் கொண்டு அழுத்த,


“ஓஞ்சலம்பலுக்கும் சவடாலுக்கும் கொறச்சலே இல்லத்தா. ஆனாலும் சரியான பூனையால்ல இருக்க?” என்று வளவன் கூறினான்.


அவன் பேச்சின் சாராம்சம் புரியாது அவள் நிமிர்ந்து பார்க்க,


அவள் மேனி கூச் செய்யும் ரகசியங்களை அவள் காதோடு பேசியவன், “இப்பத வெக்கத்துக்கு மட்டும் கொறச்சலே இல்ல” என்று சிரித்தான்.


'அச்சோ' என்று வெட்கம் பிடுங்கித் தின்ன, தன் கரம் கொண்டு முகம் மூடிக் கொண்டவள், அவன் மார்பில் குத்த,


“மேடம் செயலுல காட்டயில நாணல, இப்பத நாஞ்சொல்லயில மட்டும்..” என்று பேசிக் கொண்டிருந்தவன் வாய் பொத்தியவள், கெஞ்சுதளாய் நோக்கினாள்.


செஞ்சாந்தாய் சிவந்து போனது அவள் முகம்.


அதை ரசனையோடு பார்த்தபடி வருடியவன், “அழகாருக்கடி” என்க,


'போதும் போங்க' என்றாள்.


“பதிலுக்கு என்னய ஒருக்காவாது சொல்லுறியா நீயு” என்று அவன் கூற,


'நான் சொல்லனுமா? உங்க அழக்குக்கு என்ன கொறை?” என்று சைகை செய்தாள்.


“அழகு சும்மாருக்குறதுல என்னடி அழகு? இப்புடி பாராட்டி ஆராதிக்கனுமில்ல?” என்று அவன் கேட்க,


ஏதோ சைகை செய்ய விளைந்தவள், சட்டென கரமெடுத்துக் கொண்டு, ‘போங்க’ என்றாள்.


'நான் ஆராத்திக்கலையா?’ என்று அவள் கேட்க விழைந்ததை அவள் கண்களே கேட்டுவிட, சைகைக்கு என்னடி பெண்ணே அவசியம்? என்று எண்ணியவனாய் சிரித்தவன், அவள் நெற்றியில் அழுந்த முத்தம் பதித்து, எழுந்து சென்றான்.


அவன் செல்லும் திசையை ஒருவித மந்தகாசப் புன்னகையுடன் பார்த்தவள்,


தானும் எழுந்து தயாராக, அவர்களது காலை பணி விரைவே நடந்தேறி முடிந்தது.


அவன் குளித்து வந்ததுமே உடையை அவள் பரிசாய் நீட்ட,


“இஞ்சாருடா” என்று அதைப் பிரித்துப் பார்த்தவன்,


“அட்ரா சக்க.. கலரு அம்சமா இருக்குடி மித்ரா” என்று கூறினான்.


பளீர் வெந்தைய மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த சட்டையை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.


அதை அணிந்துக் கொண்டவன், அவளைப் பார்த்து புருவம் ஏற்றி இறக்க,


ஒற்றைக் கண் சுருக்கி, ‘சூப்பர்’ என்று விரல் அபிநயம் பிடித்துக் காட்டினாள்.


அவளை ரசித்துப் பார்த்தவன், உச்சியில் லேசாய் முட்டி, குங்குமம் வைத்துவிட, அதன் நிறத்திற்கு இணையாய் சிவந்து புன்னகைத்தாள்.


சென்று தனது பரிசை எடுத்து வந்த வளவன் நீட்ட,


ஆர்வத்துடன் அதை பிரித்துப் பார்த்தாள்.


இதய வடிவ முகம் பார்க்கும் கண்ணாடி போல் ஒரு அலங்காரப் பொருள் இருக்க, பின்னிருந்து அவளை அணைத்துப் பிடித்தவன், அதில் தங்கள் பிம்பத்தைப் பார்த்தபடி, அதன் கீழிருக்கும் பொத்தான் ஒன்றை அழுத்த,


அதில் வெளிச்சம் எறிந்து, உள்ளே அவர்கள் படம் ஒலிர்ந்தது.


திருமணத்தின்போது எடுத்த படங்கள் பலவற்றை அடிக்கடி அவன் மென்தகடிட்டு அறையில் மாட்டி வைத்திருப்பதை வழமையாய் வைத்திருந்தான். அதனால் சற்றே வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என்று முயற்சித்தவன், இதனை வாங்கியிருக்க, உள்ளே அவர்கள் முதன்முதலில் திருமணத்திற்கு முன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒளிர்ந்தது.


ஒரே நிறத்தில் உடை அணிவதாய் சொல்லி வைத்துப் போட்டு வந்து, வீட்டு ஆட்களுக்குத் தெரியாமல் அவன் அவள் தோள் பற்றியிருக்க, தயக்கமும் நாணமும் ஆசையும் பளிரிட புன்னகைத்தபடி அவள் நிற்கும் படம் அது. கூடுதலாய் அதன் ஓரங்களில் சங்குப்பூ வரைபடங்கள் வேறு ஒளிர்ந்தது.


அதை அத்தனை ரசித்துப் பார்த்தவள், தலைதிருப்பி அவனைப் பார்த்து கண்கள் விரித்து தலையசைத்தாள்.


அவள் விழிகாட்டிய அயிரம்கோடி சூரியனின் ஒளியே, அவளது அகத்தை அவனுக்குப் படம் போட்டுக் காட்டியிருந்தது. அதை மேஜையில் வைத்து ரசித்துப் பார்த்தவள், அவனை அணைத்துக் கொள்ள, தானும் அவளை அணைத்துக் கொண்டு உச்சியில் கன்னம் பிதித்தான்.


அவள் இல்லையே என்று துடிக்கும் குரலுக்கு அங்கு வேலையே இருக்கவில்லை. உணர்வுகளும், உடல் பாவமும், விழிமொழிகளும் உணர்த்திடும் உவகையை இக்குரல் உணர்த்தப்போவதில்லை என்பதை அவளுக்கு சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான். அவள் கேட்டாளா என்பதே கேள்வி?!


இருவரும் கீழே வந்து சேர,


“திருணம நாள் வாழ்த்துக்கள்லே, திருமண நாள் வாழ்த்துக்கள்பா” என்று விக்ரமன் இருவரையும் வாழ்த்தினான்.


“ஹாப்பி அனிவர்ஸரி கொழுந்தரே, ஹாப்பி அனிவர்ஸரி சங்கு” என்று கார்த்தியும் வாழ்த்த,


மனமார அவர்களுக்கு நன்றி கூறினர்‌.


சுயம்புலிங்கம் தனது வாழ்த்தைத் தெரிவிக்க,


“அம்மாவயும் கூப்பிடுவ ஐயா. கால்ல விழுந்து கும்பிட்டுக்குறேம்” என்றான்.


இனிப்புடன் வந்த தெய்வா, “அவளால விழ முடியாதுன்ன? தனியா விழ வேணாம்” என்க,


தன் நெஞ்சில் கரம் வைத்தவன், “இங்க இருக்கா அவ. தனியால்லாம் விழல அம்மா. அவளுக்கும் சேத்தே நா விழுந்துகிடுதேம்” என்றான்.


சுயம்புலிங்கம் மகனைப் பெருமையாய் பார்க்க, சங்கமித்ரா நெகிழ்வாய் பார்த்தாள்.


பெரியோரிடம் ஆசி பெற, அலைபேசி மூலம் தீபிகா, திரிபுரா மற்றும் தனமும் குடும்பத்துடன் வாழ்த்தினர்.


வாழ்த்துப் படலம் முடிய, அவளை அழைத்துக் கொண்டு, பாலகிருஷ்ணன் கோவிலுக்கு வந்து சேர்ந்திருந்தான்.


இறைவனை அவன் மனமார தரிசிக்க,

 

அவன் கரம் பற்றிய சங்கமித்ரா, அதில் தான் வாங்கியிருந்த வெள்ளிக்காப்பை போட்டுவிட்டாள்.


அவள் போடு‌வதைப் பார்த்தவன் மெல்ல அவளை நோக்க,


'எப்படி?’ என்று புருவம் ஏற்றி இறக்கினாள், பெண்.


அதை பார்வையிட்டவன், ‘திருமால்(ஒரு இதய வடிவம்)மித்ரா’ என்று அச்சிடப் பட்டிருப்பதைக் கண்டு, “ஹே” என்று உற்சாகமாய் வருடினான்.


அதில் மித்ரா தன் முறல்கள் மின்ன புன்னகைக்க,


“ரொம்ப அழகாருக்குடி” என்றான்.


அவள் அவன் மீசையை முறுக்கும்படி சைகை செய்ய,


அதில் சிரித்தவன் காப்பை முழங்கை வரை ஏற்றிவிட்டு, தோரணையாய் மீசையை முறுக்க,


அதனை ரசித்துப் புன்னகைத்தவள், அவன் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டாள்.


அன்றைய நாளை அவள் ரசித்திடும்படி, அவளுக்குப் பிடித்த மலர்கள் வாங்கி சூட்டுவது, அவளுக்குப் பிடித்த உணவு, முக்கியமாக மீன் வருவல் வாங்கித்தருவது, என மகிழ்ச்சியாய் உணர வைத்தான்.


இவன் ஒருவனுக்காகவேணும் தனது தேவையில்லாத சிந்தைகள் துறந்து மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்று அவள் மனதோடு உறுதிமொழி எடுத்துக் கொள்ள, அது அத்தனை எளிதில்லை என்று எண்ணிய விதி தூர நின்று சிரித்தது.





Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02