10.சாராவின் ஜீபூம்பா

 அத்தியாயம்-10



"இப்பெல்லாம் சண்டே சண்டே நான் லக்கிகூட தான் தூங்குறேன் தெரியுமா? லக்கி பிரபா மம்மிகிட்ட பேசி சண்டே சண்டே என்னைக் கூட்டி வந்து வச்சுப்பாங்க. மறுநாள் லக்கியே என்னை ரெடி பண்ணி ஸ்கூலுக்கு கூட்டிட்டு வந்துடுவாங்க" என்று ஆரண்யாவிடம் சாரா வம்பளந்துக் கொண்டிருக்க, 


"இதோட பத்து தடவை இதயே சொல்லிட்டா சித்தி" என்று மதி கூறினாள்.


அதில் நிலா பக்கெனச் சிரிக்க, 


"உன்கிட்ட மட்டுமா சொன்னேன். நான் வேற வேற ஆள்கிட்ட சொல்லும்போதுலாம் நீயும் கூட இருக்க. அதனால அத்தனை முறை கேட்டுட்ட. நீ சொல்லு ஆரு உன்கிட்ட இப்பதானே சொல்றேன்?" என்று சாரா கேட்டாள்.


அவள் குண்டு கன்னங்களைப் பிடித்து கிள்ளிய நிலா, "ஆமாடி பட்டு" என்க, 


"ம்ம்.. பாரு" என்று சாரா கூறினாள். 


அவர்களது சிரிப்பொலியே அங்கு நிலவியிருக்க, சாராவைக் கூட்டிக் கொண்டு போக, இலக்கியன் வந்திருந்தான். 


அவனைக் கண்டதும் சாலையினைக் கவனியாது சாரா "லக்கி.." என்று ஓட, வேகமாக வந்த மகிழுந்தைக் கண்டு அங்கு அனைவருமே பதறிப் போயினர்.


கொக்குக்கு ஒன்றே மதி என்பதாய் லக்கியை மட்டுமே பார்த்துக் கொண்டு ஓடிய சாரா, "பேபி நோ.." என்று அவன் கத்தும் வேளை திரும்பி பக்கவாட்டில் பார்க்க, வேகமெடுத்து வந்த மகிழுந்து பச்சைப் பிள்ளை அவளை மிரட்சிக்கு உள்ளாக்கியது. 


"பாப்பா.." என்று அவன் வருவதற்குள், "பட்டூ.." என்று கத்திக் கொண்டு வந்த ஆரண்ய நிலா அவளை இழுத்திட, தனது ஜீ.பூம்.பா திருவிளையாடல் சரிவர வேளை செய்ததில் ஜீபூம்பா மந்தகாசப் புன்னகை சிந்தியது.


உடல் நடுநடுங்க பனியில் நனைந்த கோழிக்குஞ்சைப் போல் சாரா நடுங்க, கண்களில் கண்ணீர் துளிர்த்திட, "ஒ..ஒன்னுமில்ல பேபி.. ஒன்றுமேயில்லை.. ஆ..ஆரு..ஆருகிட்ட தான் இருக்க. உன் ஆருகிட்ட தான் இருக்க. காம் டௌன்" என்று அவள் முதுகை வருடிக் கொடுக்கையில் பதைபதைப்பாய் இலக்கியன் வந்தான்.


பயத்தில் சாரா அழத்துவங்கிட அவளை மேலும் அணைத்துக் கொண்ட ஆரண்யாவின் கண்களிலும் கண்ணீர் வழிந்துவிட்டது. 


"அம்முபட்டு.. ஒன்னுமில்லடா. இங்க பாரு.. ஆரு பாரு.. ஒன்னுமில்லடா" என்று அவள் முகம் நிமிர்த்தி கண்ணீரை துடைக்க, 


"ஆ..அம்மா.." என்று அழுதபடி சாரா அவள் கழுத்தில் முகம் புதைத்தாள்.


அதில் சிலிர்த்துப்போன நிலாவின் மயிர்சிகைகள் குத்திட்டு நின்றிட, அவள் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர் கூட கன்னத்தில் உரைந்து நின்றது. 


"சாரா அழாத சாரா.." என்ற மதியின் குரலில் நிலைக்கு வந்தவள் மண்டியிட்டபடியே நிமிர்ந்து இலக்கியனைப் பார்த்து, "பயந்துட்டா" என்க, 


அவளைத் தன் கைகளில் வாங்கியவன் கண்டிப்பான குரலில், "பேபி லக்கிய பாரு" என்றான்.


அழுதபடியே தன் கண் துடைத்தவள் அவன் சொல்லிட்ட மந்திரம் போல் நிமிர்ந்து பார்க்க, "ரோட்ல இப்படி ஓடிவரக் கூடாதுனு எத்தனை முறை சொல்லிருக்கேன்? வண்டி வர்ற ரோடு. இப்படியா லெப்ட் ரைட் பார்க்காம வருவ?" என்றான்.


"சாரீ லக்கீ.." என்றவள் அழுதபடி அவனை கழுத்தோடு கட்டிக் கொள்ள, அவள் முதுகில் தட்டிவிட்டவன் கண்களை அழுந்த மூடி எச்சிலைக் கூட்டி விழுங்கிவிட்டு, "ஒ..ஓகேடா பாப்பா. ஒன்னுமில்லை" என்றான்.


"லக்கீ.." என்று அழுதபடி அவள் மேலும் அவனை இறுக்கிக் கொள்ள, கண் திறந்து பார்த்தவன் தனக்கு எதிரில் நாசி விடைத்து கண்கள் மற்றும் இளஞ்சிவப்புக் காதுகள் சிவந்து கண்ணீரோடு நிற்கும் ஆரண்ய நிலாவைப் பார்த்தான். சாராவுக்காக அவன் பதறித் துடிக்கும் அதே படபடப்பு அவள் கண்களில் தென்படவே, அவன் உடலில் மின்சாரம் பாய்ந்த சிலிர்ப்பு எழத்தொடங்கியது.


அவள் அருகே அவளது கரத்தை இறுக பற்றிக் கொண்டு பயந்து கலங்கிய முகத்துடன் மதி நிற்க, ஒற்றைக் காலை குற்றி அமர்ந்தவன், "ஒன்னுமில்லடா. உன் ஃப்ரண்டு பயந்துபோய் அழறா" என்றான்.


"பாவம் பயந்துட்டா" என்று மதி பாவம் போல் கூற, லேசாய் இதழ் பிரித்தவன், கண்களை உயர்த்தி ஆரண்யாவைப் பார்த்துக் கொண்டு,


 "உன் சித்தியும் ரொம்ப பயந்துட்டாங்க போல பாரு" என்க, 


தன் சித்தியை நிமிர்ந்து பார்த்தவள், "ம்ம்.. சித்தியும் அழறாங்க" என்றாள்.


அதில் சிரித்துக் கொண்டு அவள் கன்னம் தட்டிவிட்டு எழுந்தவன், ஆரண்யாவைப் பார்த்து "ஒன்னுமில்லமா" என்க 


"ப..பயந்துட்டேன்" என்றாள்.


இன்னும் அழுகை நில்லாது விசும்பிய குழந்தைக்குத் தட்டிக் கொடுத்தவன், "பேபிடால்.. போதும்டா. பாரு உன் ஆருவும் பயந்துட்டாங்க" என்க, 


"ம்ம்.." என்ற சிணுங்களோடு அவனை இறுக்கிக் கொண்டாள்.


ஆரண்யாவைப் பார்த்து இதழ் பிதுக்கி, "ம்ஹும்.. இப்போதைக்கு ஓகேயாக மாட்டா. நான் பார்த்துக்குறேன்" என்று திரும்பியவன் சட்டென மீண்டும் திரும்பி அவள் கண்ணோடு தன் கண் கோர்த்து, "நீ காப்பாத்தினது என்னோட உயிரை. தேங்ஸ் ம்மா" என்க, 


கண்ணீரைத் துடைத்தவள் குழந்தை முதுகில் தட்டிக் கொடுத்து, "எனக்கும் உயிர் தான்.. பார்த்துக்கோங்க" என்றுவிட்டு திரும்பினாள்.


மதியையும் கூட்டிக் கொண்டு அவள் செல்ல, சென்றவளையே பார்த்து நின்றவன் குழந்தையின் சீரான மூச்சுக் காற்றில் அவள் தூங்கியதை உணர்ந்து குனிந்து பார்த்தான். அவளைத் தட்டிக் கொடுத்தபடியே வண்டியில் அமர்த்தி சாய்த்துப் படுக்க வைத்து மெல்ல இயக்கிவிட்டு மீண்டும் நிலா சென்ற திசையைப் பார்த்தவனுக்கு மூளையில் ஒரு எண்ணம் பளிச்சிட்டது.


அது காதல் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை… அவன் கண்டெடுத்த கழுகு பிரேஸ்லெட்டினை எங்கு கண்டோம் என்ற நினைவு பெற்றவனுக்கு அன்று ஆரண்யாவை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு கார்த்திக்கிடம் கைகுலுக்கிய காட்சி கண்முன் வந்தது. கண்களை அழுந்த மூடி அக்காட்சியை மனதில் நிறுத்தியவனுக்கு கார்த்திக்கின் கரத்தில் அந்த பிரேஸ்லெட் இருந்தது நினைவு வந்தது.


"ஓ காட்.." என்று முனுமுனுத்தவன் வண்டியை கிளப்பிக் கொண்டு பாதுகாப்பாய் தன் வீட்டை அடைந்தான். சாராவைத் தூக்கிக் கொண்டு வந்த மருமகனைக் கண்ட ராதா, "கண்ணா என்னப்பா பாப்பாவை இங்க தூக்கிட்டு வந்திருக்க? ஹோம் போலயா?" என்று வினவ, அப்போதுதான் நேராய் தன்வீடு வந்தது அவனுக்குப் புரிந்தது.


"அத்தை பிரபா மேம்கிட்ட பேசிடுறீங்களா?" என்று அவன் வினவ, குழந்தையை வாங்கியவர், 


"என்னப்பா பாப்பா அழுத மாதிரி இருக்கு? நீ எதும் அதட்டிட்டியா?" என்று கேட்டார். 


"இல்ல அத்தை. என்னை பார்த்துட்டு வேகமா ரோட்ட கடந்து வர பார்த்துட்டா. வண்டி வேற குறுக்க வந்துடுச்சு" என்று அவன் கூற, 


"அச்சுச்சோ.." என்று பதறியபடி அவளுக்கு அடியேதும் உள்ளதா என்று ஆராய்ந்தார்.


"இல்ல (அ)த்தை. ஆரண்யா புடிச்சு இழுத்துட்டாங்க" என்று அவன் கூற, 


"அது யாரு?" என்றார். 


ஒரு பெருமூச்சுடன் நடந்ததைக் கூறி முடித்தவன், "எனக்கு ஒரு முக்கியமான வேலை. நீங்க பிரபா மேம்கிட்ட சொல்லிடுங்க" என்றவன் விறுவிறுவென வெளியேறிட, குழந்தையின் கன்னம் வருடிவிட்டு உள்ளே படுக்க வைத்தார்.


அங்கிருந்து புறப்பட்டவன் நேரே சென்றது தினேஷின் ஆய்வகத்திற்குத் தான். வெளியே அனுமதி கோரிவிட்டு காத்திருந்தவனை அவர்கள் உள்ளே அனுமதிக்க, தினேஷின் அறைக்குள் நுழைந்தான்.


"டேய் என்னடா பர்மிஷன்லாம் கேட்டுட்டு இருக்க? நேரா உள்ள வரவேண்டியது தானே?" என்று தினேஷ் வினவ, 


"இது உன் வேலையிடம்டா. இதுக்கான மரியாதையை நான் கட்டாயம் தரனும்" என்றான்.


"எப்பா டேய்.." என்று சிரித்தவன் நண்பனின் முகம் வைத்தே ஏதோ சரியில்லை என்று உணர்ந்து "என்னாச்சுடா?" என்று விஷயத்திற்கு வந்தான். 


"அந்த குழந்தை கேஸ்.." என்று இலக்கியன் துவங்க, "அதை தான் மிஸ்டர் ராஜ் ஹேண்டில் பண்றாரே" என்று தினேஷ் வினவினான். 


ஆம்.. அந்த வழக்கை இலக்கியன் கையகலிருந்து ராஜ் என்னும் காவலருக்கு மாற்றப்பட்டு இவன் கையில் வேறு வழக்கு ஒப்படைக்கப்பட்டது.


"ப்ச்.. இருந்துட்டு போகட்டும்டா. லீட் கிடைச்சா ஷேர் செய்துக்கக் கூடாதா?" என்று பல்லைக் கடித்த இலக்கியன், "உன்கிட்ட ஒரு பிரேஸ்லெட் தந்தேன்ல?" என்று வினவ, 


"ம்ம்.. அதான் அதுல உள்ள டி.என்.ஏ வச்சே சொன்னேனே. முப்பதுக்கு நாலு ஐந்து வயது கூடவோ குறையவோ உள்ள ஒரு ஆணுடையது தான் அது" என்று தினேஷ் கூறினான்.


"ம்ம்.. நான் ஒருத்தர் மேல சந்தேகமப்படுறேன்" என்ற இலக்கியன், அன்று ஆரண்ய நிலாவின் விபத்து, மருத்துவமனையில் சேர்த்தது, கார்த்திக் வந்தது, எனக் கூறி முடித்தான்.


"ம்ம்.. உன் சந்தேகம் நியாயமானது தான். ஆனா அதேபோல ப்ரேஸ்லெட் நிறையா இருக்கே. அவரோட டி.என்.ஏ குடுத்தீனா மேட்ச் பண்ணி பார்த்துடுவேன்" என்று தினேஷ் கூற, 


"லீகலா போக முடியாது. இந்த கேஸ்லயே நான் இல்லை. இல்லீகலா தான் எடுக்கனும்" என்று இலக்கியன் கூறினான்.


"ம்ம்.. எச்சில்,‌ வேர்க்கால்கள் கொண்ட தலைமுடி, இரத்தம் இப்படி எதாவது கொண்டு வந்து தந்தா கண்டுபிடிச்சுடுவேன்" என்று தினேஷ் கூற, 


"ம்ம்.. சரிடா. முடிஞ்சளவு சீக்கிரம் கொண்டு வரேன். உடனே மேட்ச் ஆகுதானு பாரு" என்று கூறிவிட்டு எழுந்தான்.


அவன் ஆய்வகம் விட்டு வெளியே வந்தவன் மனதில் தான் அத்தனை அத்தனை குழப்பம். அது அவனுடையதாகவே இருந்தாலும் அதை வைத்து மட்டுமே அவனைக் குற்றவாளி என்று கூறிவிட இயலாதே? அது இருந்ததோ விவசாய நிலத்தில். கொலையாளி தப்பி ஓடும்போது தவற விட்டதாக கூறினாலும் முறையான சான்றென ஏதும் இல்லையே என்று யோசித்தான்.


சற்று சிந்தித்து, 'ஃபோன் நம்பர் இருந்தா எதும் ட்ரேஸ் பண்ணலாம். ஆனா எப்படி எடுக்க?’ என்று யோசித்தவன் மனதில் ஆரண்ய நிலாவின் முகம் வந்து மின்னி மறைந்தது.


Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02