திருப்பம்-100

 திருப்பம்-100



இரவு… வீடு வந்த சேர்ந்த அவிநாஷுக்குத் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்த சங்கமித்ரா அவன் குடித்து முடித்ததும், ‘நா வீட்டுக்குப் போறேன் அத்தான்' என்று சைகை செய்தாள்.


அவள் செயலில் பதறியவன், “ஏன்டா பாப்பா?” என்று கேட்க,


தனது அலைபேசியை எடுத்து, 'அம்மா அப்பா சொன்னதுக்கு எல்லாம் இல்லை அத்தான். சில உறவுகளை உணர்ந்தாலே புரியும். அடிக்கடி சொல்லிக்காட்ட வேண்டாம். இது எனக்குத் தாய்வீடு.. ம்ஹும்.. தந்தை வீடு. எனக்கு உரிமை இருக்குனு தான் வந்தேன். இனியும் வருவேன். இப்ப நான் போறது உங்க தம்பிக்காக. பாவம்ல? ரெண்டு வாரம் ஆச்சு. நான் இல்லாம இளைச்சுப் போயிருப்பாருல்ல?’ என்று தட்டச்சு செய்து நீட்டினாள்.


அதைப் பார்த்து புன்னகைத்தவன், “என்ன லெட்டர் எதும் வந்ததா?” என்று கேட்க,


சிறு வெட்கப் புன்னகையுடன் தலையசைத்தாள்.


“நீ ஸ்டேடஸ் வைக்கும் போதே நினைச்சேன்” என்று சிரித்த அவிநாஷ், “எப்ப வரானாம்?” என்று கேட்க,


'இன்னிக்கே' என்று கையசைத்தாள்.


“சரி உங்கக்காட்ட சொல்லிட்டியா? உன்னைக் கூப்பிட்டுப் போற அவசரத்துல சாப்பிடாமத்தான் வருவான்” என்று அவிநாஷ் சிரிக்க,


“அதெல்லாம் உங்க பாப்பா எம்புருஷன் வராரு நைட்டுக்கு காட்டமா கொஞ்சம் சட்னி தனியா அரைச்சு வையுடி சங்கினுட்டா” என்று கூறியபடி சங்கீதா அவ்விடம் வந்தாள்.


அக்காவை முறைத்தவள், ‘ஒரு பச்சைமிளகாய் தானே கூட போடச்சொன்னேன்?’ என்று சைகை செய்ய,


“விடுடா பாப்பா. அவ கேலி செய்றா” என்றான்.


இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே வாசலில் வண்டி சப்தம் கேட்க, சட்டெனத் தன் பார்வையைத் திருப்பினாள்.


“ம்ம்.. வந்தாச்சு வந்தாச்சு” என்று நகரவிருந்த தங்கையைப் பார்த்து சங்கீதா கேலி செய்ய,


சிணுங்கலாய் தன் அத்தானைப் பார்த்தான்.


அதில் வாய்விட்டு சிரித்த அவிநாஷ், “சாரிடா பாப்பா.. கீதா சும்மா இரேன்டி” என்று கூறி, “நீ போடா” என்க,


செல்லமாய் அவனை முறைத்துவிட்டு வாசலுக்குச் சென்றான்.


வண்டியை நிறுத்தியவன் உள்ளிருந்து கண்கள் சிரிக்க வரும் தன் மனைவியை அத்தனை மன நிறைவோடு பார்த்தான். எத்தனை மாதங்களாயிற்று இத்தனை புன்னகையுடன் அவளைக் கண்டு? என்று நினைத்து நெகிழ்ந்தவன், தன்னருகே வந்தவளை வண்டியில் அமர்ந்தபடியே இடையோடு இழுத்துக் கொண்டான்.


அதில் தடுமாறி அவன் தோள்களைப் பற்றியவள், விழிகள் விரிக்க,


அதனை ஆழ்ந்து பார்த்தவன் மனதில் ஒருவித நிம்மதி குடிபுகுந்தது.


அவன் கரத்தின் அழுத்தம் அதிகரிக்க, அவன் ஏக்கம் அதன் வழியாய் அவள் அகத்தை ஊடுருவியது..


மனம் பிசைய நின்றவள், சுயம் பெற்று அவன் கரத்தில் செல்லமாய் அடிக்க,


தன் கன்னம் குழையப் புன்னகைத்தவன் இறங்கி அவளோடு உள்ளே வந்தான்.


“வாடா வாடா” என்று அவிநாஷ் வரவேற்க,


மற்றவர்களும் அவனை வரவேற்றனர்.


“எங்கண்ணே குட்டி ராணியக் காணல?” என்று கேட்டபடி அவன் அவிநாஷுடன் அமர,


“அப்பா வெளியத் தூக்கிட்டுப் போயிருக்காங்க டா. வந்துடுவாங்க” என்றான்.


“சரிண்ணே” என்றவன் பொதுவாய் அவனுடன் பேச,


“என்னடா ரொம்ப டயர்டா தெரியுற? வேலை ஜாஸ்தியோ?” என்று அவிநாஷ் கேட்டான்.


“ஒரு ஆடரு ஏத்தத்துக்கு எடுத்தேம் அண்ணே. பெரிய ஆடரு. அதுல வேல பெண்ட நிமுத்துது. எல்லு கில்லு எல்லாம் நோவிடுச்சு இன்னிக்கு அம்புட்டயும் ஏத்தி அனுப்புறதுக்குள்ள” என்றவன், “அண்ணே.. நம்ம தோட்டம் போற பக்கட்டு ஒரு எடம் எடுத்துருக்கியேம்” என்க,


“அப்படியா சூப்பர்டா. என்ன விஷயமா?” என்று அவிநாஷ் கேட்டான்.


“பண்ண போட போதோம் நானும் ஒங்க பாப்பாவும். அவியதேம் ஓனரம்மா அங்கன. மீன் பண்ண ஆரிமக்கப் போறாவ” என்று அவன் கூற,


இன்பமாய் அதிர்ந்த அவிநாஷ், “ஏ சூப்பர்டா? இதெப்ப யோசிச்சீங்க?” என்று கேட்டான்.


“அதெல்லாம் ரொம்ப மாசம் முன்னுக்க பேசி வச்சதுதேம் அண்ணே. அதுக்குள்ளார அவ கீழ வுழுந்து, படுக்க எந்திரிக்கனு ஓடி போச்சுது. இப்பம் ஒரு மாசமாவே ரோசிச்சுட்டு இருந்தேம். அப்பத பாத்து வச்ச எடம் கையுமீறி போச்சுது. அதேம் வேறெடம் பாத்து இப்பத ஓகே பண்ணிப்டேம்” என்று வளவன் கூற,


“சூப்பர்டா. ரொம்ப நல்ல விஷயம். நல்லபடியா பண்ணுங்க” என்று அவிநாஷ் மனமார வாழ்த்தினான்.


அவிநாஷின் தந்தையும் சங்கவியுடன் வந்துவிட, குழந்தையைக் கொஞ்சவது, இரவு உணவை உண்பதென்று நேரம் அழகாய் கடந்தது.


இரவு உணவு இனிதே முடிய, “சரிண்ணே.. வாரோம்” என்று வளவன் கூற,


“சரிடா.. பாத்து போங்க” என்று கூறினான்.


“சங்கு.. இந்தாமா.. இதுல துக்கடா வச்சுருக்கேன்” என்று பாமா ஒரு டப்பாவை கொடுக்க, அதனைப் பார்த்தவளுக்கு எப்போதோ வீட்டுப் பண்டம் குறைவாகக் கொண்டு வந்ததற்கு தெய்வாவும் திரிபுராவும் சண்டை பிடித்தது தான் நினைவு வந்தது.


ஒரு நொடி அவள் அசைவற்று நிற்க,


அவள் தோளில் கரமிட்ட வளவன், “வாங்கிக்க மித்ரா” என்றான்.


அவனைத் திரும்பிப் பார்த்தவள், பாமாவைப் பார்த்து நன்றியாய் புன்னகைத்தபடி வாங்கிக்கொள்ள, “ஒழுங்கா ஆஸ்பிடல்லாம் போ. எதும் யோசிக்காது. ஃப்ரீயாருந்தா கால் பண்ணு” என்று அவள் தலை கோதி, முகம் திருத்தியபடியே சங்கீதா கூறினாள். ஆடவர்களுக்கு தாய் மகளைப் பள்ளிக்கு சரிபார்த்து அனுப்புவதைப் போன்று தெரிந்தது அக்காட்சி.


புன்னகையாய் தலையசைத்தவள் சங்கவியை வாங்கிக் கொஞ்சிவிட்டுக் கொடுக்க,


அவள் தோளில் கரமிட்டபடி வாசலுக்குக் கூட்டி வந்த அவிநாஷ், “என் பாப்பா எதையும் போல்டா ஃபேஸ் பண்றவனு எனக்குள்ள ஒரு நம்பிக்கை உண்டு. அதை நீ கடைபிடிப்பனு நம்புறேன்டா. உன் ஹெல்தை நீயே கெடுத்துக்கும்படியா எதுவும் செஞ்சுக்காதடா பாப்பா. எதுவாருந்தாலும் அவன்கூட மனசு விட்டுப் பேசிடு” என்று கூறி அவள் தலைகோத,


புன்னகையாய் தலையசைத்தாள்.


“ஆனாலும் மைணி.. ஒங்களுக்கு இவியளப் பாத்து பொறாமையா இல்ல?” என்று வளவன் சங்கீதாவிடம் கேட்க,


“ஹ்ம்.. என்ன செய்ய? பொறாமையாதான் இருக்கு” என்று பெருமூச்சு விட்டாள்.


“ரொம்பத்தேம் பண்றாவ மைணி ரெண்டேரும். பேசாம இவியளுக்கு நாம ரெண்டேருமா சேந்து ஒரு பாயாசத்தப் போட்டுடுவமா?” என்று வளவன் கேட்க,


“நல்ல ஐடியாவா இருக்கே? ரெண்டு பேருமா சேந்து போட்டுடுவோம்” என்று கூறியவள் அவனுடன், ‘ஹை-ஃபை’ தட்டிக் கொண்டு சிரித்தாள்.


அதில் திரும்பிப் பார்த்த இருவரும், ‘நம்மலைத்தான் கலாய்க்குறாங்களாமாம்' என்றபடி பார்த்துக் கொண்டனர்.


செல்ல சண்டைகளுடன் மனம் நிறைய விடைபெற்ற இருவரும் புறப்பட, வண்டியில் அவனை பின்னிருந்து இறுக அணைத்துக் கொண்டு அமர்ந்தபடி அவன் தோள் சாய்ந்தாள்.


அவள் தன்னுடன் இருப்பதையும், அவள் மனம் அமைதியாய் இருப்பதையும் ரசித்தவன், ‘தேங்ஸ் அண்ணே.. எம்பொஞ்சாதிய ரெண்டே வாரத்துல நிம்மதியாக்கித் தந்துட்டீய' என்று மனதோடு அவிநாஷுக்கு மனமாற நன்றி கூறினான்.


முதலில் அவனுக்குமே வருத்தமாகத்தான் இருந்தது. தன்னுடன் இருக்கும் பொழுது அவளுக்கு நிம்மதி கிடைக்கவில்லையா? என்று வருத்தமாகவும் கொஞ்சம் கோபமாகவும் கூட இருந்தது.


மூன்று நாட்கள் அதே மனநிலையில் யோசித்தவன், பின்புதான் தன் எண்ணங்களில் இருந்து வெளிவந்து அவள் புறமாக யோசித்தான்.


என்னவோ நடந்துள்ளது என்று யோசித்தவனுக்கு தன் அன்னையும் அக்காவும் தான் ஏதோ பேசியுள்ளர் என்று புரிந்து கொள்ள அதிகம் நேரம் தேவைப்பட்டிருக்கவில்லை. மேலும் அவள் சில மாதங்களாகவே அமைதியாகவே இருக்க, எதையோ தன்னிடம் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்க தயங்குகின்றாள் என்பதும் புரிந்தது.


இன்னும் அவளைக் குறைபேசுபவரிடமே இருக்கச் சொல்லி அவளைப் பழைய நிலைக்குக் கொண்டுவரச் சொல்வது எத்தனை அபத்தம் என்றும் புரிய, அவள் அங்கிருந்து எப்போது தன்னை அழைக்கின்றாளோ அப்போதே கூட்டிக் கொண்டு செல்லலாம் என்று அமைதியாகக் காத்திருக்கத் துவங்கினான்.


இத்தனை மாதங்கள் இல்லாமல் தற்போது அவள் மனநிலையே கெடுமளவு ஆகியிருக்கின்றதெனில் விடயம் பெரிது, அவளாக மனமுவந்து வரட்டும் என்று அவன் காத்தக் காத்திருப்புக்குப் பலனாய் தன் மனநிலையைத் தேற்றிக் கொண்டு அவள் வர, அவிநாஷுக்கு மனமார நன்றி கூறிக் கொண்டான்.


இருவரும் வீட்டை அடைய,


அவளின் வரவு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாய் அமைந்தது.


“ஏ மைணி..” என்று தனம் உற்சாகமாய் எழ,


அவளைக் கண்டிப்பாய் பார்த்தவள், ‘மெல்ல எழு' என்று சைகை செய்தாள்.


“அதெல்லாம் எம்புள்ள ஸ்டிராங்குடி மைணி” என்று தன் வயிற்றைத் தடவிக் கொடுத்தவள், 


“எப்புடியிருக்க? சாப்டியா?” என்று கேட்க,


'ம்ம்' என்று தலையசைத்தாள்.


“ஏ புள்ள” என்று அவளைக் கண்டு ஆர்வமாய் வந்த கார்த்திகா, 


“ஒன்னய ரொம்ப மிஸ் பண்ணேம்டி சங்கு” அணைத்துக் கொள்ள,


புன்னகையாய் தானும் அவளை அணைத்துக் கொண்டாள்.


“வாப்பா.. சங்கு எப்ப வருவாளோ சங்கு எப்ப வருவாளோனுதேம் பேச்சு இவளுக்கு” என்று விக்ரமன் கூற,


“இவிய மட்டும் என்னவாம் சங்கு? காலையில சாப்பிட ஒக்காந்துட்டு சங்கு வரலியா சாப்பிடனு கேக்காவ. நாந்தேம் நெனவு செய்ய வேண்டி கிடக்கு. இவிய பரவால்ல, மாமா போன வாரங்கூட பொறிச்ச மீனு வாங்கியாந்து சங்குனு கூடத்துல நின்னு ஒன்னய அழைக்காவ. சங்கு எங்க இங்கனருக்கானு கேட்டப் பொறவுதேம் நெனவே வந்துருக்கு” என்று கார்த்திகா கூறினாள்.


'அப்படியா?’ என்ற பார்வையோடு சிரித்தவள் தன் மாமனாரைப் பார்க்க,


“வயசாயிட்டுல்லத்தா? நெனவேயில்ல எனக்கு” என்று கூறினார்.


அனைவரும் அவளை மாறி மாறி விசாரிக்க, தெய்வா இவற்றை வேடிக்கைப் பார்த்தபடி நின்றார்.


தற்செயலாய் திரும்பியவள் அவரை நோக்க,


அவள் பார்த்துவிட்டாள் என்பதற்காக, சிறு தலையசைப்புக் கொடுத்தவர், “உங்கியாச்சா இனிதானா?” என்று கேட்டார்.


'சாப்டாச்சு' என்று அவள் சைகை செய்ய,


சரியென்ற தலையசைப்புடன், “மருந்து ஏதும் இருக்காக்கும் போட? இருந்தா போட்டுகிட்டுப் படு” என்றார்.


'எதும் இல்லை' என்று அவள் சைகை செய்ய,


சரியென்றதோடு சென்றுவிட்டார்.


மற்றவர்களும் அவள் நலம் கேட்டுவிட்டு உறங்கச் செல்ல,


தானும் தன்னவனுடன் தங்களறைக்கு வந்து சேர்ந்தாள்.


சென்று உடைமாற்றி வந்தவள், அவனோடு கட்டிலில் படுக்க,


அவள் முகத்தைப் பார்த்தபடியே அமைதியாய் படுத்திருந்தான்.


'என்ன?’ என்பதைப் போல் அவள் புருவம் ஏற்றி இறக்க,


“இந்த ரூமுலதேம்டி நான் ஏம்பதினஞ்சு வயசுலருந்து தூங்குதேம். இந்தா ஆச்சு முப்பது வயசு. ஆனா இம்புட்டு வருசமா இல்லாதது நீ வந்த பொறவு என்னமோ மாறிபோச்சுது இந்த ரூமுல” என்றான்.


புருவங்கள் சுருங்க, ‘என்ன?’ என்பதாய் அவள் தலையசைக்க,


“தெரிலட்டி.. ஆனா என்னமோ மாறி போச்சுது. இல்லாட்ட நீயில்லாத இந்த அறையில தூங்க முடியாதபடிக்கு என்னய ஆட்டி வக்குமா?” என்று கேட்டான்.


புருவங்கள் ஏற அவனைப் பார்த்தவள், ‘அப்றம் எங்க படுத்தீங்க?’ என்று சைகை செய்ய,


“கழுத கெட்டா குட்டிச்சொவரு.. நீயில்லாட்ட நா யாருட்டப் போவேம்?” என்றான்.


'கொட்டாவுக்குப் போயிருப்பாங்க' என்று மனதோடு கூறிக் கொண்டவள், தன் நெஞ்சில் தட்டிக் கொண்டு இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொள்வதாய் பாவனை செய்ய,


“உண்மதேம்.. எல்லாம் ஏம்மித்ரா மாயம்” என்றவன், அவளை அணைத்துக் கொண்டு அவள் வாசம் உணர்ந்தான்.


அவன் மூச்சுக்காற்றின் ஓசையும் கதகதப்பும் காதோரம் உரச, அதில் கூச்சம் கொண்டவள், லேசாய் நெழிந்து சிரித்தாள்.


அவள் சிரிப்புச் சத்தத்தில் அவன் இன்பமாய் சிதைந்தான்…


“மித்ரா.. என்னமாதுனா எங்கிட்டச் சொல்லிப்புடுடி.. ஒனக்கு நெனவிருக்கோ இல்லியோ.. எதையும் எங்கிட்ட மறைக்க மாட்டனு சத்தியஞ் செஞ்சு தந்திருக்க. எங்கிட்ட ஆதாரத்துக்கு நீ எழுதித்தந்த கடுதாசிக்கூட இருக்குது ஆமா. மனசுக்குள்ள போட்டு வதபாடதடி.. எங்கிட்ட கொட்டிபுடு. என்னைய அடிக்கனும்முனாகூட அடிச்சுபுடுடி.. நீயு உள்ளக்கயே போட்டு நோவாத” என்று வருத்தம் நிறைந்த சிறுபிள்ளையின் பாவத்தில் அவன் கூற,


அவன் தாடை பற்றியவள், ‘உங்கட்ட சொல்லாம எங்க போகப் போறேன்? சொல்றேன்.. எனக்குக் கொஞ்சம் நேரம் குடுங்க. கண்டிப்பா சொல்லுவேன்' என்று சைகை செய்தாள்.


சற்றே வருத்தமாகத்தான் இருந்தது. தன்னிடம் வெளிப்படுத்தக்கூட நேரம் தேவையா என்றும் தோன்றியது. ஆனால் அவள் இத்தனை நெருடுவதற்கும் ஏதும் காரணமிருக்குமென்று உணர்ந்தவனாய் தலையசைத்தான்.


அவன் நெற்றியில் முத்தம் பதித்தவள், அவனை அணைத்துக் கொண்டு படுக்க, அவளுக்குத் தட்டிக் கொடுத்தபடி தானும் உறங்கினான்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02