திருப்பம்-101

 திருப்பம்-101



“நமக்கு எடம் பக்கந்தேம் மித்ரா. நீயே வண்டியில வந்துட்டுப் போயிக்கலாம். தோதாதேம் இருக்கும்” என்று வளவன் கூற,


‘என் வண்டிதான் போச்சே' என்று சைகை செய்தாள்.


“மைணியோடத எடுத்துக்கிடு மித்ரா. பொறவு ஒன்னு வாங்கிப்பம். இப்பத கையிருப்பு இல்லம்மா” என்று அவன் கூற,


மெல்லிய புன்னகையுடன் தலையசைத்தாள்.


இருவரும் பண்ணைத் துவங்குவதற்காக வாங்கிய இடத்தைத் தான் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.


“ஓம் அக்கௌண்டுலருந்து எடுத்ததுப் போக நம்ம கையிருப்பலருந்தும் போட்டிருக்கேம். சோலியெல்லாம் முடிஞ்சு தொறக்க எப்புடியும் மாசமொன்னு ஆவிப்போவும். அப்பைக்கு அப்ப வந்து சோலியென்னாவுதுனு பாத்துகிடுன்ன?” என்று வளவன் கூற,


தன்னைத் திசைதிருப்பவே இம்முயற்சி என்று புரிந்தவளாய், சிரித்தபடி தலையசைத்தாள்.


அவளது சின்னப் பின்னலைப் பற்றி இழுத்தவன், தன்மீது வந்து மோதிக் கொண்டு கோபப் பார்வையுடன் தன் புதர் முடியைப் பற்றிக் கொண்டு இழுத்தவளைப் பார்த்து, “எம்புட்டு நா ஆச்சு..” என்று சிரித்தபடி மீண்டும் இழுத்தான்.


“ஆ..” என்று தன் முடியைப் பிடித்தவள், அவன் கூந்தலை இறுக பற்றிக் கொண்டு இழுத்துவிட,


“அடியே..” என்றபடி அவள் முடியை விட்டான்.


'அது..’ என்ற பார்வையுடன் தன் குட்டி முடியை அவள் தடவிக் கொடுக்க,


“சீனிப்பட்டாசு” என்று சிரித்துக் கொண்டான்.


அனைத்தையும் பார்வையிட்டு முடித்த இருவரும் பாலகிருஷ்ணன் கோவிலுக்குச் சென்றனர்.


கோவிலை அடைந்ததும் அதன் வாசலிலேயே ஒரு நிமிடம் தேங்கி நின்றவளுக்கு என்னற்ற உணர்வுகளுடனும், என்னற்ற மனநிலைகளுடனும் அங்கு வந்தது நினைவில் மின்னி மறைந்தது.


தேங்கி நின்றவள் தோள் தாங்கி அழைத்தவன், கண்கள் மூடி திறக்க, மெல்லிய புன்னகையுடன் சென்றாள்.


உள்ளே சந்நிதியில் இறைவனை தரிசித்த இருவரும், பிரகாரத்தைச் சுற்றிவர, முதல் முறை சுற்றி முடித்ததும் அவனை நிறுத்தியவள், ‘நா முன்னாடி போறேன். நீங்க பின்னாடி வாங்க' என்று சைகை செய்தாள்.


அதில் தன் முறல்கள் மின்னி சிரித்தவன், ஒற்றைக் கண் சுருக்கி தலையசைக்க,


தானும் நாணப்பூப் பூத்தவளாய் முன்னே சென்றாள்.


அவள் பாத சுவடுகளைப் பின் தொடர்ந்து தானும் அவள் பின்னே வளவன் செல்ல,


அவ்வப்போது அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டு புன்னகைத்தாள்.


இறுதி சுற்றில் அவனைத் திரும்பிப் பார்த்து நெருங்கியவள், தன் கையிலுள்ளக் குங்குமத்தை அவன் நெற்றியில் இட்டுவிட,


அவன் இதழ் இன்னும் பூவாய் மலர்ந்தது.


அவன் கரத்துடன் தன் கரம் கோர்த்துக் கொண்டவள் இறுதி சுற்றை அவனோடு சேர்ந்து முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்.


நேரே இருவரும் பூக்கடைக்குச் செல்ல, “நல்லாருக்கியாலே மக்கா” என்று அந்த பாட்டி வாஞ்சையுடன் கேட்டார்.


அழகிய புன்னகையுடன் அவள் தலையசைக்க,


“மவராசி மொவமே மின்னுதுபோ” என்றபடி பூவை வெட்டி நீட்டினார்.


'வாங்குங்க' என்பதாய் அவள் கண்காட்ட,


பூவை வாங்கி அவள் தலையில் சூடியவன், காசையும் கொடுத்துவிட்டு அவளோடு வீடு வந்து சேர்ந்தான்.


அமைதியான நல்ல மனநிலையோடு இருவரும் உள்ளே வர,


“வாங்க மக்ளே.. எடமெல்லாம் பாத்தாச்சா?” என்று சுயம்புலிங்கம் கேட்டார்.


“பாத்தாச்சுங்கைய்யா. சோலியெல்லாம் தொவங்கியாச்சு” என்றவன், “மித்ரா தெவக்கமாருக்கு போஞ்சு கலக்கி எடுத்தாரியா?” என்று கேட்டான்.


சிறு தலையசைப்புடன் அவள் செல்ல,


“போயி பாத்துட்டு கோயிலுக்கும் போயி வந்தோம் ஐயா. அப்பைக்கு அப்ப அவளயும் போயி பாத்துகிட சொல்லிருக்கேம். அவளுக்கும் கொஞ்சம் மனமாத்தமாருக்கும்ல?” என்று கூறினான்.


“ம்ம்.. ஆஸ்பத்ரில என்னம்லே சொல்றாவ?” என்று சுயம்புலிங்கம் கேட்க,


“எல்லாம் நல்லபடிக்குத்தேம் சொல்றாவ ஐயா. ஆபரேஷனுக்கோ மருந்து மாத்தரைக்கோ அவசியமில்லயாம். தொண்டைக்குக் கொடுக்குற பயிற்சி எடுத்தாலே போதுமுங்காவ” என்று கூறினான்.


“எதும் பேச்சு வருதாய்யா இப்பத?” என்று அவர் கேட்க,


“பேச்சுனு இல்லேங்கய்யா. ஆனா முன்னைக்கு இப்பத சொல்ல வர்ற வார்த்தைக்கு ஏத்தாப்புல சத்தமெல்லாம் கொடுக்க வருது. ஒன்னு ரெண்டு எழுத்துலாம் உச்சரிக்கா” என்று கூறினான்.


“முருகா” என்று கைகூப்பிக்கொண்டவர், “சரிம்லே. ரொம்ப சந்தோசம்” என்று கூற,


இருவருக்குமான எலுமிச்சை பழச்சாறுடன் வந்தாள்.


பின்னோடே தானும் வந்த தெய்வா, “ஏம்லே மக்கா” என்று அழைக்க,


“சொல்லுங்கம்மா” என்றான்.


“நாளமறுநா..” என்று அவர் துவங்க,


“நெனவிருக்குதும்மா. முருகேனுக்கு வேண்டுதலு வச்சுருக்கீய. காலயில எந்த சோலியும் வச்சுகிடக்கூடாது. அதான?” என்று கூறினான்.


“ம்ம்.. அதுவுந்தேம்” என்றவர், சங்கமித்ராவைப் பார்த்து, “ரெண்டேரும் சுத்த பத்தமா இருந்துகிடுவ. நாள ஒருநா மட்டும் வெரதம் இருந்துகிடனும்” என்று கூற,


“வெரதமா?” என்றான்.


“ம்ம்.. கார்த்தி புள்ள உண்டாயி இருக்கா. அவளால இருக்க முடியாது. அதேம் ஒங்கள இருந்துகிட சொல்லுதேம்” என்று தெய்வா கூற,


“ஏம்மா அவோளுக்கு இப்பத்தேம் ஒடம்பு தேரி வந்துருக்குது. இப்பத இது தேவயா?” என்று கேட்டான்.


“ஏந்தெய்வா அந்த புள்ளையக்கேக்காம நீயா என்னத்த முடிவு செய்யுறவ? திடீருனு கொண்டோயி ஒன்னய கோயிலுல நிறுத்தி தீமிதுனு வுட்டா அறுப்பாத போயிடுவியா? இப்பத வந்து நாள வெரதமிருங்குறியே. முடியாத புள்ள, அதுக்கு தோதுபடுமானு ரோசிச்சியா?” என்று சுயம்புலிங்கம் கேட்க,


“இது என்னங்க வம்பாருக்கு? சாமி வெசயத்துல எப்பதயும் கொற வெக்கக்கூடாதும்பீய. இப்பத நீயளே இப்புடிச் சொல்லுதீய” என்று நெட்டி முறித்தார்.


“சொல்லுவேந்தேம்.. கொறைங்குறது நாம செய்யுற வெசயத்த மனசார செய்யுறதுலயும் இருக்கு. முடியாத மாட்டாதத வுட்டுபுட்டு வருத்திக்கிட்டு செய்யுறதுதேம் சரினு எந்த சாமியும் சொல்லல” என்று அவர் காட்டமாய் கூற,


“இப்பத என்னங்க கேட்டுபுட்டேம்? இதேம் நா இவ பக்கட்டு சேதிக்கே வாரதில்ல. ஒத்த நா. ராப்பொழுதுவார வெரதமிருங்கேம். இதொரு குத்தமா? அவ வாயும் வயிறுமா இருக்குதா, நானு இந்த வயசுல அதெல்லாம் இருக்க முடியாது. அதான இருக்கச் சொல்லுதேம். வந்தா இந்தூட்டு மருமவளாத்தேம் வருவேம்னு வந்தவ ஒத்த நா வெரதமிருக்க மாட்டாளாமா? மொத அவ சொல்லட்டுமே.. பொறவு நீங்கயெல்லாம் வாங்க. அவ வாய தொறக்கும்குள்ள வரிஞ்சுட்டு வாரியலே ரெண்டேரும்” என்றவர், “இஞ்சாருமா.. ஒன்னால இருக்க முடிஞ்சா இரு. இல்லாட்டப் போவுது நானே இருந்துகிடுதேம்” என்றார்.


சுள்ளென்று ஏரியக் கோபத்துடன் வளவன் ஏதோ பேச வர, அவன் கரம் பற்றித் தடுத்தவள், ‘நா இருக்கேன்' என்று சைகை செய்தாள்.


“ஒனக்கென்ன கோம்பயாடி?” என்று அவன் சப்தம் போட,


'ஒரு நாள் தான? நான் மெடிகேஷன்ஸும் எதும் ஃபாலோ பண்ணலை. எனக்கு பிரச்சினை இல்லை. நான் இருக்கேன்” என்று சைகை செய்தாள்.


வளவன் அவளைத் தீயாய் முறைக்க,


“அதேம் அவளே இருக்கேங்குறாள்ல? பொறவென்ன?” என்று தெய்வா நீட்டி முழங்கினார்.


அன்னையை சூடானதொரு பார்வை பார்த்தவன், விடுவிடுவென மேலே செல்ல,


“ஏத்தா சங்கு.. ஒனக்கெதுக்கு இந்த வேண்டாத வேல?” என்று சுயம்புலிங்கம் கேட்டார்.


'இருக்கட்டும் ப்பா. நான் இருக்கேன்' என்றவள், 


தெய்வாவைப் பார்த்து ‘சாப்பிடாம இருக்குறது மட்டும்தானா?’ என்று சைகை செய்ய அவருக்குப் புரியவில்லை.


தனது அலைபேசியில் தமிழில் தட்டச்சு செய்து அவள் நீட்ட,


அதை வாங்கிப் பார்த்தவர், “ம்ம்.. ஆமா.. ராவுக்கு பூச ஒன்னு போட்டுட்டு வெரதத்தக் கழிச்சுட்டுப் படுத்துக்க” என்று கூறிவிட்டுச் சென்றார்.


தன்னவனை சமாதானம் செய்ய விரைந்து மேல வந்தவள், உப்பரிகையில் தன் கோபம் அடக்க இயலாது நடந்துக் கொண்டிருந்தவன் முன் வந்து நின்றாள்.


அவளைத் தீயாய் முறைத்தவன், “அங்கோடிப் போயிடு. கோவத்துல என்னமாது அறுப்பிடப்போதேம்” என்று நகர எத்தனிக்க,


அவனைப் பிடித்து நிறுத்தியவள், ‘அவங்க திட்டுவாங்கனோ, அவங்களுக்குப் பரிதாபம் பட்டோ சரி சொல்லலை. நம்ம குடும்பத்துக்கானது, நமக்கானதுனுதான் சரி சொன்னேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைனு என் மனசு சொன்னதாலதான் அந்த முடிவை எடுத்தேன்' என்று திடமாய் சைகை செய்தாள்.


“ஒன்னய புரிஞ்சுகிடவே முடியலடி” என்று அவன் கூற,


களுக்கென்று சிரித்தவள், ‘நா சைகை செய்தா என் அம்மா அப்பாக்குக் கூட புரிஞ்சுக்க கஷ்டமாதான் இருக்கு. அப்படியிருக்க வேற அடைமொழியே இல்லாம புரிஞ்சுக்குறவர் நீங்க. நீங்க என்னைப் புரிஞ்சுக்க முடியலைனு சொல்றீங்களாக்கும்' என்று சைகை செய்தாள்.


“போடி.. எனக்கு சிரிப்பே வரல. காந்தளாத்தேம் இருக்கு” என்று அவன் நகர எத்தனிக்க,


அவனை விடாது அணைத்துப் படித்தவள், ஒரு கையால் அவனை வளைத்துக் கொண்டு மறுகையால் அவன் சிகையை இறுக்கிப் பிடிக்க,


“எட்டிக் கோம்ப.. வலிக்கி” என்றான்.


அவனைத் தன் கண்களை உருட்டி மிரட்டலாய் பார்த்தவள், ‘சும்மா சும்மா கோபப்படக்கூடாது. புரியுதா?’ என்று சைகை செய்ய,


“முடியாது போ” என்றான்.


“ப்ச்” என்றபடி அவனைப் பிடித்துக் கொண்டவள் முறைக்க,


“இங்கன என்னம்லே நடக்குது?” என்ற விக்ரமனின் குரல் கேட்டது.


அதில் பதறிப் போய் சங்கமித்ரா திரும்ப,


தங்கள் அறைவாசலில் ஆளுக்கொருபுறமாய் சாய்ந்து நின்றுக் கொண்டு கைகளை மார்பிற்குக் குறுக்கே கட்டியபடி நின்றுகொண்டிருந்தனர், விக்ரமனும் கார்த்திகாவும்.


பேய் விழி விழித்தவள் சட்டென வளவனிடமிருந்து பதறி நகர,


“இஞ்சாருடா” என்றபடி அவளைத் தன்னோடு இருத்துக் கொண்டவன், “என்னம்லே ஒங்களுக்குச் சோலி. நா எம்பொஞ்சாதிய கட்டிப் புடிச்சுப்பேம். வேணுமின்னா முத்தங்கூட வெப்பேம்” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.


அதில் அதிர்ந்து போனவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்ன,


தன்னவனைத் தீயாய் முறைத்தபடி அவனை நகர்த்த முற்பட்டாள்.


“பெரிய இவமானிக்கு சாமாதனஞ்செய்ய வந்த?” என்று அவன் சண்டை பிடிக்க,


அவன் கரத்தை எடுத்துவிடுவதிலேயே குறியாக இருந்தாள்.


“ஏட்டி சங்கு.. நாங்க வேண்ணா உள்ளக்கப் போயிடுதோம்” என்று கார்த்திகா சிரிக்க,


வளவனை முறைத்துப் பார்த்தவள், ‘கைய எடுங்க' என்று கண்களாலேயே மிராட்டினாள்.


“ஆத்தே.. விட்டா எரிச்சுடுவ போலியேடி” என்றபடி அவளை விட்டவன், நகர எத்தனித்தவள் கரம் பற்றி நிறுத்தி, “இருட்டி.. லேய் இவ என்ன காரியம் பண்ணானு கேளு” என்று தன் இரட்டையனிடம் குறை பாட துவங்கினான்.


“என்னம்லே ஆச்சு?” என்று அவனும் சங்கமித்ராவின் சங்கடம் புரிந்து கேலியைக் கைவிட்டவனாய் கேட்க,


“ஏதோ வேண்டுதலுனு அம்மா சொன்னாவல்ல? அதுக்கு நாங்க வெரதமிருக்கனுமாம். நா இவளுக்கு அதுலாம் வேணுமுனு ஒடக்கிழுத்துட்டு இருக்கியேம், மேடம் சரினு சொல்லிட்டாவ” என்று கோபமாய் கூறினான்.


“ஏத்தா எதுக்கு இதெல்லாம்?” என்று விக்ரமன் கேட்க,


“ஏட்டி சங்கு.. ஒனக்கு என்னத்துக்கு இந்த வேண்டாத வேலை?” என்று கார்த்திகா கேட்டாள்.


'எனக்கு பிரச்சினை இல்லை அக்கா' என்று அவள் சைகை செய்ய,


“இப்பத அப்படித்தேம் சொல்லுவ. ஒரு நா பூர பட்டினி கெடக்கனும்மின்னா கஸ்டமுத்தா” என்று விக்ரம் கூறினான்.


மூவரும் மாறி மாறி அறிவுரை வழங்கியும் அவள் தன் பிடியில் இருக்க, “சரி வுடுலே.. அவதேம் இம்புட்டு உறுதியா சொல்லுதால்ல? பாத்துகிடலாம்” என்று விக்ரமன் கூறினான்.


“என்னமோ போலே.. எனக்கு இதுலாஞ் சரியாவே படலை” என்றபடி வளவன் சொல்ல, அவன் மனதை பிசைவதைப் போல் மறுநாள் பெரும் பிரளயம் நடக்கவிருப்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.


Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02