திருப்பம்-102
திருப்பம்-102
காலை எழுந்த சங்கமித்ரா குளித்து, உடை மாற்றிவிட்டுக் கீழே சென்று நேரே பூஜையறையைச் சுத்தம் செய்து விளக்கேற்றி இறைவனை வணங்க,
தெய்வாவும் குளித்து முடித்து வந்திருந்தார்.
கண்கள் மூடி பூஜையறையில் நின்று வேண்டிக் கொண்டவள், மெல்ல கண் திறந்து தெய்வப் படங்களைப் பார்த்தபடி மெல்லத் தன் தொண்டையை வருடிக் கொண்டாள்.
பின் அன்றலர்ந்த மலரைப் போன்ற புன்னகை ஒன்றைப் பூக்கச் செய்தவளாய் அவள் திரும்ப, தெய்வா அவளை நோக்கி வந்து நின்றார்.
அவரைப் பார்த்தவள் அமைதியாய் நகர,
“ஒரு சோலியும் பாக்க வேணா. சும்மா ஒக்காந்துகிடு. பொறவு வெரதமும் இருக்கச்சொல்லி வேலையும் வாங்குதீய எம்பொண்டாட்டியனு எம்புள்ள என்னைய வையுவியாம்” என்று கூறினார்.
அவர் பேச்சை ஒரு பொருட்டாய் ஏற்றுக்கொண்டதைப் போல் தலையசைப்புக் கூட கொடுக்கத் தோன்றாமல் அமைதியாய் சென்று நீள்விருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
காலை ஒவ்வொருவராய் குளித்துவர,
“இஞ்சாருடி கார்த்தி.. போயி தனத்த கூட்டியா. இன்னும் ஒறங்குதாலாக்கும்? வைத்துப்புள்ளக்காரி நேரத்துக்கு உங்க வேணாமா? வந்து உங்கிட்டுப் போயி ஒறங்கச்சொல்லு” என்று தெய்வா கூறினார்.
கார்த்திகாவும் சென்று தனத்தைக் கூட்டிக் கொண்டுவர,
சோர்வாய் வந்து நீள்விருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
விக்ரமனும் வளவனும் அப்போது கீழே வர,
சோர்வே உருவாய் இருந்த தனத்தைப் பார்த்த வளவன், “என்ன தனம் ரொம்ப தெனயாருக்க? ஒடம்புக்கு எதும் பண்ணுதா?” என்று கேட்டான்.
“இல்லண்ணே.. அசதியாருக்குது. இப்பத்தான எழுந்து வந்தேம். அதேம்” என்று அவள் கூற,
“வேற ஒன்னுமில்லத்தானலே? ஏதுமின்னா சொல்லு” என்று விக்ரமன் கூறினான்.
“சரிண்ணே” என்ற தனம், “ஓங்கூட்டுக்காரவியளுக்கு சோலி எங்கவாம்?” என்று கேட்க,
“அதுசரி.. இதேம் மொக வாட்டத்துக்குக் காரணமாக்கும்?” என்று கார்த்திகா கேட்டாள்.
“நாங்கேக்கல மைணி. உள்ளார இருக்குதே அவிய புள்ள. அதேம் கேக்கு” என்று அவள் தன் வயிற்றைக் காட்டிக் கூற,
பிள்ளை உருண்டு அசைவு கொடுத்தது.
அதைப் பார்த்த அனைவருமே, “ஹே..” என்று பூரித்தனர்.
“நாஞ்சொல்லல?” என்ற தனம், “ஐயன் பேச்ச எடுத்தாலே குஸியாயிடுவாவப்புடி” என்று கூற,
மீண்டும் குழந்தை அசைந்துக் கொடுத்தது.
சங்கமித்ரா ரசனையாய் அதைப் பார்த்து தனம் அருகே அமர,
அவள் கரமெடுத்துத் தன் வயிற்றில் வைத்தவள், “இந்தாரேம் ஆட்டத்த.. எட்டி ஒதைக்காம் நல்லா” என்று கூறினாள்.
குழந்தையின் அசைவைத் தன் கையில் உணர்ந்த சங்கமித்ரா, கண்கள் விரிய வளவனை நோக்க,
அவனும் அவளைப் பார்த்து அழகாய் புன்னகைத்தான்.
“நல்லாருக்கும்லே.. நம்ம சுடரு இப்புடித்தேம்.. நாம்பேசினாலே ஆட ஆரமிச்சுடுவா. இவதேம் வையுவா. தூங்க வுடாதபடிக்கு அப்பனும் மவளும் படுத்துறீயனு” என்று விக்ரம் கூற,
கார்த்திகா சிரித்துக் கொண்டாள்.
இவற்றையெல்லாம் கேட்டபடி தனம் வயிற்றிலிருந்து அசைவை உணந்த சங்கமித்ரா அவள் வயிற்றைக் கொஞ்சி விரல்களுக்கு முத்தம் வைக்க, தெய்வாவிற்கு அச்செயல் அத்தனை உவகையானதாய் இல்லை.
“இஞ்சாருங்க.. இதென்ன கண்ணடையா பேச்சு? ரெண்டேரும் எந்திச்சுப் போயி போட்டுவச்ச சூஸக் குடிங்க” என்று மகளையும் மூத்த மருமகளையும் விரட்டினார்.
மற்றவர்களுக்கு சாதாரணமாகத் தெரிந்தாலும் சங்கமித்ராவிற்கு, தனது செயல் ஏற்படுத்திய அதிருப்தியின் வெளிப்பாடே அது என்று புரிந்தது.
“மைணி நீயும் வா” என்று தனம் அழைக்க,
இடவலமாய் தலையாட்டி மறுத்தாள்.
“இஞ்சாருடி.. ஓம்மைணியும் அண்ணேனும் வெள்ளிமலையனுக்கு வெரதம் இருக்காவ. அச்சானியமா அழைக்காத நீயு போயி குடி” என்று தெய்வா அதட்ட,
“இதென்னம்மா இது?” என்று அதிர்ந்தாள்.
கண்கள் மூடித் திறந்து இடவலமாய் தலையாட்டிய சங்கமித்ரா, ‘போ’ என்பதாய் தலையசைக்க,
கார்த்திகாவும் அவளை அழைத்துக் கொண்டு சமையலறை சென்றாள்.
சுயம்புலிங்கமும் வயலிலிருந்து வந்துவிட,
காலை உணவு படலம் உள்ளே நடைபெற்றது.
தன் மனைவியுடன் அவள் கரம் கோர்த்தபடி வளவன் கூடத்தில் அமர,
ஏனோ இருவரின் மனதிற்கும் ஏதோ தவறாக நடக்கவிருப்பதாகவே தோன்றியது.
கோர்த்துக் கொண்ட அவர்களின் கரங்கள் அவ்வப்போது அழுத்தம் பெற,
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“லேய்.. வளவா” என்று குரல் கொடுத்தபடி வடிவேல் வர,
“வாம்லே.. ஓம் ஆளு கூப்டாளாக்கும்?” என்றபடி நண்பனை வரவேற்றான்.
“எம்பொஞ்சாதியும் புள்ளையும் என்னைய பாக்கனும்முனு கேட்டாவ. அதேம் வந்தேம்” என்று கூறியபடி வடிவேல் அமர,
மற்றவர்களும் உண்டு முடித்து வந்தனர்.
“அட எப்ப வந்தீய?” என்றபடி தனம் அவன் அருகே சென்று அமர,
“இப்பத்தேம்த்தா” என்றான்.
அவன் குரல் கேட்டதும் குழந்தை அசைந்து கொடுக்க,
“இந்தா ஆரமிச்சாச்சுல?” என்று சிரித்தாள்.
பேச்சும் சிரிப்புமாகவே நேரம் சென்றது.
சில நிமிடங்கள் தொலைக்காட்சியைப் பார்வையிடுவது, மற்றவர்கள் பேசுவதை வேடிக்கைப் பார்ப்பது என்று தன்னை எதாவது ஒரு செயலில் நிலை நிறுத்திக் கொண்டிருந்த சங்கமித்ராவிற்கு என்னவோ செய்வதைப் போலிருந்து. மனம் பிசைகிறதா வயிறு பிசைகிறதா என்றே புரியாத நிலையை உணர்ந்தாள்.
'அனைவரும் வேண்டாம் என்று தடுத்ததைக் கேட்டிருக்க வேண்டுமோ? நிஜமாகவே தன்னால் இயலவில்லையோ?’ என்ற யோசனையோடு அவள் மதிய வேளையைக் கடக்க,
மதியம் இரண்டு மணிக்கு மேல் தலை சுற்றுவதைப் போன்ற உணர்வுத் தோன்றத் துவங்கியது. அனைவரும் கூடத்தில் தான் இருந்தனர்.
சிறிது நேரம் படுத்து எழுந்தாள் நேரம் ஓடிவிடும் என்று எண்ணிய சங்கமித்ரா, வளவன் தொடையில் தட்டி அழைத்து, உறங்க செல்வதாய் சைகை காட்ட,
“சரிமா போயி ஒறங்கு” என்றான்.
சிறு தலையசைப்புடன் எழுந்தவளுக்கு ஓரெட்டு வைத்தது தான் நினைவு. அதற்குமேல் ஈடு கொடுக்காமல் தலைசுற்றி கண்களை இருட்டிக் கொண்டு வர,
“ஏ அண்ணே.. மைணி சாயிது” என்று தனம் கத்தியதில் தான் அவள் தன்னிலை இழந்துத் தள்ளாடி சரிவதையே கண்டனர்.
பதறி எழுந்த வளவன் அப்படியே அவளைப் பின்னிருந்துத் தாங்கிக் கொண்டு, “ஏட்டி” என்க,
அவள் கண்களை சிமிட்டி முழிக்க முயற்சித்தாள்.
“லேய் மக்கா.. ஒக்காத்துடா புள்ளைய” என்று சுயம்புலிங்கம் பதட்டமாய் கூற,
பாந்தமாய் அவளை நீள்விருக்கையில் அமர்த்தினான்.
விக்ரம் விரைந்து சென்று தண்ணீரெடுத்துவர,
அதை அவளுக்குப் புகட்ட முற்பட்டான்.
குவளையைப் பிடித்தவள் இடவலமாய் தலையசைக்க,
“ஏட்டி என்னைய மிருகமாக்கிப்புடாத. மரியாதயா குடிச்சுப்புடு” என்று உச்சக்கட்டக் கோபத்தில் உறுமியவன், அவளைத் தண்ணீர் குடிக்க வைத்தான். மெல்ல தண்ணீரைப் பருகியவளுக்கு அடிவயிற்றையெல்லாம் பிரட்டியது அந்த நீர். தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு அவள் மெல்ல கண் திறக்க,
“ஆத்தா என்னமும் பண்ணுதா சாமி? ஏலே மக்கா டாக்டர கூட்டிவாயா” என்று சுயம்புலிங்கம் கூறினார்.
“நாம்போயி கூட்டியாரேம் மாமா” என்ற வடிவேல் உடனே புறப்பட,
“ஏட்டி என்னய பாரு.. என்ன பண்ணுது?” என்று வளவன் கேட்டான்.
“போஞ்சு கலக்கியாரவாலே?” என்று விக்ரமன் கேட்க,
இடவலமாய் தலையசைத்த சங்கமித்ரா, ‘ஒன்னுமில்ல அத்தான். ஓகேதான்' என்று சோர்வாய் சைகை செய்தாள்.
தெய்வாவிற்கு அத்தனை ஆத்திரமாக வந்தது. 'நாயிருக்கேம் நாயிருக்கேம்முனுட்டு இப்புடியா அச்சாணியமா வெரதத்தப் பாதியோட வுடுவா?’ என்று உள்ளே நெருப்புக் கனன்று எரிய,
“ஒன்னுத்துக்கும் லாயிக்கில்ல” என்று கத்தினார்.
அனைவரும் அவரை நிமிர்ந்து பார்க்க,
சங்கமித்ரா சோர்வாய் ஏறிட்டாள்.
“ஒத்த வெரதமிருக்க துப்பிருக்காட்டி? இப்புடி அச்சாணியமா பாதியோட நிறுத்திட்டியே” என்று ஆற்றாமையுடன் அவர் கூற,
“அம்மா.. என்னமாது பேசி என்னயும் பேச வச்சுப்புடாதீய. நானு நேத்தே அம்புட்டுச் சொன்னேம். இது முடியாதா அது முடியாதானு தூண்டிவிட்டுப்புட்டு இப்பத இப்புடி பேசுறீய” என்று வளவன் கத்தினான்.
தம்பியின் கோபம் புரிந்து அவனை அடக்கிய விக்ரமன், “அம்மா என்னமாது அறுப்பாத போங்கம்மா. லேய் நீயு புள்ளய கூட்டிகிட்டு அறைக்குப்போ. டாக்டரு வந்தா அறைக்கே கூட்டியாரேம்” என்று கூற,
“ஆமாலே.. எல்லாம் அவோளயே தாங்குங்க.. எனக்குத்தேம் வேண்டுதலு அவளச் சொல்லனும்மினு. எம்புள்ள வளபூட்டுக்கும் கண்ண வச்சுப்டா, இப்பத வெரதத்தயும் கெடுத்தாச்சு.. இன்னும் என்ன..” என்று முடிக்கும் முன், “ஆ..” என்று பல்லைக் கடித்தபடி உச்சகட்ட ஆத்திரத்தில் கத்தினாள், சங்கமித்ரா.
தன் தாய் பேசிய வார்த்தைகளில் வளவன் ஸ்தம்பித்து நிற்க,
சங்கமித்ராவின் ஆத்திரக் குரலில் மற்றவர்கள் மிரண்டு நின்றனர்.
கோபச் சிவப்புப் பூசிய விழிகளுடன் அவரை ஏறிட்டபடி எழுந்தவள், ‘என்னதாம்மா உங்க பிரச்சினை?’ என்று சைகை செய்ய,
தெய்வாவே அரண்டுதான் போனார்.
'ச்சை' என்ற பாவத்துடன் தன் தலையில் அடித்துக் கொண்டவள் அங்குள்ள மேஜைக்குத் தட்டுத் தடுமாறி சென்று காகிதம் மற்றும் பேனா ஒன்றை எடுத்த ஆத்திரத்துடன் ஏதோ எழுத, அவள் கண்ணீர் கன்னம் தாண்டி கழுத்தில் தஞ்சம் புகுந்தது.
தன் இதழ் உணரும் உவர்ப்பில் தானும் கண்ணீர் சிந்துவதை உணர்ந்த வளவன், உடைந்து நொருங்கிய மனதுடன் அவளை நெருங்கி,
“எழுதாதடி.. என்னமானாலும் எங்கிட்டயே சொல்லு.. எனக்கு ஒன்னய புரியாதா?” என்று முற்றுமாய் உடைந்த குரலில் கேட்டான்.
'உங்களுக்குப் புரியும். உங்க ஒருத்தருக்கு மட்டும்தான் புரியும். ஆனா உங்கம்மாக்கு புரியனும்ல?’ என்று கோபமாய் சைகை செய்தவள் விறுவிறுவென எழுத,
வளவன் அழுகையுடன், ‘அய்யோ..’ என்றபடி தன் நெற்றியில் அறைந்துக் கொண்டான்.
நிமிடங்கள் கடக்க, அவள் தாளில் போனாவைக் கொண்டு கிறுக்கும் ஓசை மட்டுமே அவ்விடமெங்கும்…
எழுதி முடித்தத் தாளை அவனிடம் நீட்டியவள், ‘எனக்கு எல்லாமுவா இருந்தீங்க தானே? இப்ப எனக்குக் குரலாவும் இருங்க. என் குரலா நீங்க இதை படிங்க. உங்கம்மாட்ட போய் படிங்க' என்று உச்சகட்ட கோபத்துடன் சைகை செய்தாள்.
அந்தத் தாளைத் தன் கைகள் நடுங்க வாங்கியவன் அவளைப் பார்க்க,
'வாசிங்க' என்று கண் காட்டினாள்.
தன் அன்னையை மிக அதிருப்தியாய் ஒரு பார்வைப் பார்த்தவன், “உங்களுக்கு என்னதான் பிரச்சினை? எனக்கு சத்தியமா புரியல. நான் என்ன பண்ணிட்டேன் உங்களுக்கு? என்னால இந்த வீட்டுல என்ன மாறி போச்சு, என்ன இல்லாம போச்சுனு இப்படி அடிச்சுக்குறீங்க? நானும் ஆரம்பத்துலருந்து ஏதோ சின்ன பிடித்தமின்மைனு பார்த்தா, அது வொறுப்பாகி இன்னிக்கு வெறியான நிலையில வந்து நிக்குது. என் நிலைமையில நீங்க இருந்தா தான் புரியும் உங்களுக்கு. எதுக்கெடுத்தாலும் மூத்த பொண்ணு. முதல்ல பிறந்துட்டாங்க, அதிஷ்டத்தைக் குடுத்துட்டாங்கனு நீங்க தலையில் ஏத்தின கனம் தான் இன்னிக்கு அவங்களோட தலகனமா மாறி சரியெது தப்பெதுன்னுகூட யோசிக்க விடாம நடத்துது. என்ன பேச்சு? அன்னிக்கு குரலுக்கே வழியில்லாதவனு சொல்லிட்டுப் போறாங்க என்னை” என்று வாசித்தவன் அதிர்ந்து போய் அவளை நோக்க,
மற்ற அனைவருமே அந்த வார்த்தையில் முற்றுமாய் அதிர்ந்து போயினர்.
தெய்வாவிடமும் கூட இரு முறை திரிபுரா இதைக் கூறியதுண்டு. மகளை தடுக்கவெல்லாம் இல்லை அவர். உண்மை தானே என்ற எண்ணமே அவருக்கு. தற்போது மகன் வாய் வழியாய் கேட்க, மகள் கூறியது தவறோ என்ற உணர்வு அவர் அனுமதியின்றி உள்ளே நுழையப்பெற்றது.
'படிங்க' என்பதாய் மித்ரா பார்க்க,
அவன் கைகள் வெளிப்படையாய் நடுங்கின.
“ஒருத்தி மேல காரணமே இல்லாம பிடித்தமின்மை வர்ற வரகூட, சரிபோங்கனு விடலாம். அது ஏன் அப்படியொரு வன்மம் உங்க ரெண்டு பேருக்கும் என்மேல? தனத்தை என்கூட பிறக்காதவ குறையாதான் பாக்குறேன்.. அவ வளைகாப்புல நீங்க எதையோ அறையும் குறையுமா கேட்டுட்டு நான் அவளைப் பார்த்து ஏக்கப் படுறேன் கண்ணு வைக்குறேன்னு.. ச்சி” என்று வாசித்தவன் தற்போது தன் அன்னையை அதிர்ந்துபோய் பார்த்தான்.
மகனின் வாய்வழி வரும் வார்த்தைகளில் கூனிக் குறுகி போய் தெய்வா நிற்க,
“ஏட்டி நாயகி.. என்னடி இது? அந்த புள்ளைய அப்புடி சொன்னியா?” என்று சுயம்புலிங்கம் கேட்டார்.
தெய்வா அமைதியாய் தலை கவிழ,
“நாங்கேக்கேம்ல..” என்ற மாமனாரை நிறுத்தியவள் தன்னவனைப் பார்த்தாள்.
‘என்னால முடியலடி..’ என்ற பார்வையோடு அவன் நோக்க,
'எனக்காக' என்பதாய் அவள் பார்த்தாள்.
தன் கண்களை அழுந்த மூடித் திறந்தவன்,
“நீங்களும் உங்கப் பொண்ணும் மாறி மாறி திணிச்ச வார்த்தையாலதான் நாலு மாசம் பைத்தியமா இருந்தேன். இன்னும் இங்கயே இருந்து நீங்க எதாவது பேசிப் பேசி முழுசா பைத்தியமாயிடுவேனோனு பயத்துலத்தான் எம்புருஷனயும்கூட விட்டுட்டு எங்கத்தான் வீட்டுக்குப் போனேன். எங்கத்தான் மாதிரி மனுஷனெல்லாம் கோடில ஒருத்தர் தான் இருப்பாங்க. அப்படிப்பட்ட மனுஷங்கிட்டப் போய் எத்தன ஒப்பீடு? எத்தனைக் காழ்ப்பு? அவர் இந்த குடும்பத்தைத் தாங்குறதுக்கு கால்தூசுகூட நீங்க செஞ்சுடலை. எங்கம்மா அப்பாகூட தனம் வளைகாப்போட கிளம்பி போகவும் எதாவது பேச்சு வாங்கிட்டேனோனுதான் கேட்டாங்க. ஆனா எங்கத்தான் இந்த குடும்பத்துல உள்ளவங்க என்னை தங்கமா தாங்குறதாவும், ஆயிரம்தான் உங்களுக்கு என்னை பிடிக்காட்டிகூட மூனு பொம்பளப் புள்ளைங்க வச்சுருக்குறவங்க அப்படியெல்லாம் சொல்ல மாட்டாங்கனும் சொன்னாங்க. அந்த நல்ல மனுஷனேட குணமெல்லாம் புரிஞ்சுருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்கவேமாட்டீங்க” என்று வாசிக்க,
தெய்வா இன்னும் குறுகி போனார்.
“ச்சை” என்று தன் தலையில் அடித்துக் கொண்ட தனம், “ஏம்மா ஓம்புத்தி இப்புடி போயிருக்குது” என்க,
தன் கைகளைத் தட்டி தனத்தை நிறுத்தியவள், ‘நா பலகாலம் கேக்காம விட்டுட்டேன் தனம். இது நான் கேட்க வேண்டிய நேரம்' என்று சைகை செய்தாள்.
அதில் தனம் கண்கள் கலங்கி அமைதியாக,
வளவன் மரத்துப்போன உணர்வோடு வாசிக்கத் துவங்கினான்.
“உங்க புள்ளைய நான் நல்லா பாத்துக்கணும். அதுபோதும்னு சொல்றீங்களே, அதுக்கு நீங்களே தடையாருக்கீங்கனு ஒருநாளும் புரிஞ்சுக்கலையா? உங்களோட அடக்குமுறையாலத்தான் உங்க புள்ளைக்கும் எனக்கும் சண்டை வரும்னு தோனலையா? ஏதோ நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கப்போய் சரியாபோச்சு. இல்லைனா என்னாகிருக்கும் தெரியுமா?” என்று வாசித்தவன் தன் அன்னையின் கண்களை ஏறிட்டு, “உங்க புள்ளையோட சண்டை போட்டுட்டு வாழ்க்கையே வேணாம்னு போயிருந்துப்பா. உங்க புள்ள வாழ்க்கை மொத்தமும் உங்களாலயே கெட்டு ஒழிஞ்சுருக்கும்” என்று கூற,
தெய்வா பதறிப் போய் தன் காதுகளைப் பொத்திக் கொண்டார்.
சுயம்புலிங்கம் முற்றுமாய் உடைந்துபோய் நீள்விருக்கையில் பொத்தொன்று அமர,
அத்தனை பேர் முன்பும் அவமானப்பட்டு, கலங்கிப் போய் நின்றார் தெய்வா.
“அவ குரலு என்னாச்சோ? அவளுக்கு குரலு வருமோ வராதோ? என் புள்ள வாழ்க்கைக்கு ஊ..ஊமச்சித்தான்னு விதிச்சிருக்கோ? புள்ள வருமோ வராதோ? எத்தனை பேச்சு?” என்று வாசித்தவன், “ச்சை” என்று அறுவத்துப் போய் கூற,
தெய்வா உடைந்தே போனார்.
“ஒன்னு புரிஞ்சுகோங்க.. உங்க புள்ள உங்க புள்ளனு நீங்க நல்லது செய்யுறதா நினைச்சு என்னை ஒதுக்குறது மூலமா, நீங்கதான் உங்க பிள்ளையோட அதிருப்திய சம்பாதிச்சு அவருட்டருந்து ஒதுங்கிட்டே போறீங்க. அவர் வாழ்க்கைக்கு உங்களுக்குப் புடிச்ச மாதிரி ஆள்.. இல்ல இல்ல.. உங்க பொண்ணுக்கு பிடிச்ச மாதிரி ஆள் அமையலைனு நினைச்சுட்டு, அமைஞ்ச சந்தோஷமான வாழ்க்கைய நீங்களே சூனியமாக்கிட்டு இருக்கீங்க. நல்லாக்குறதா சொல்லி நரகமாக்கிட்டு இருக்கீங்க. என்னை வேதனைப் படுத்தி எனக்கெதாவது ஒன்னுனா முதல்ல துடிக்குறது உங்க புள்ளையாத்தான் இருப்பார். அத்தன மாசம் அம்போனு நான் படுத்துகிடந்ததையும் அவர் தவிச்சதையும் பாத்தப்பக்கூட உங்களுக்கு புரியலைனா எப்படி பேசி புரிய வைக்கனும்னு எனக்கும் தெரியலை. நீங்க என்னைத் திட்டுற வார்த்தைய திரி மைணிய அவங்க மாமியார் சொல்றதா நினைச்சுப் பாருங்க.. எவ்வளவு அபத்தமா பேசுறீங்கனு புரியும். இதுவே கடைசியாருக்கட்டும். எனக்கு புள்ளையே பொறக்காதுனு ஆண்டவன் சொல்லிடலை.. அநாவசியமா என் மனசை நோகடிக்குற மாதிரி பேசினா இனியும் அமைதியா அழுதுட்டு, அத்தை அது பண்ணவா இது பண்ணவானு சமாதானம் செய்ய வந்துட்டு இருக்க மாட்டேன். அந்த சங்கமித்ரா எப்பவோ போய் சே..ந்.” என்று வார்த்தையை முடிக்காது காகிதத்தை தூர வீசியிருந்தான்.
அவனால் அவன் அன்னைத் தன்னவளுக்குக் கொடுத்திருந்த வலிகளைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.
கண்ணீர் கரைபுரண்டு ஓட,
ரத்தமாய் சிவந்த முகத்துடன் கோபமும் கண்ணீருமாய் நின்றிருந்த மனையாளைப் பார்த்தான்.
“ஏம்மா ஒனக்கெல்லாம் மனசாச்சி இருக்குதாம்மா?” என்று தனம் கேட்க,
“ஒரு புள்ளய இம்புட்டாமா பேசுவீய? அது மனசு எம்புட்டு நொந்துபோயிருக்கும். ஒன்னுக்கு மூனு பொம்பள புள்ளைய ஒங்களுக்குந்தேம் இருக்கு. ஆரும் அவியள பேசினா சும்மாருப்பீயளாம்மா? என்னமாதிரி வார்த்தயெல்லாம் பேசிருக்கீய?” என்று உச்சகட்ட கோபத்துடன் விக்ரமன் கேட்டான்.
தெய்வா கண்ணீர் உடைப்பெடுத்து பேச இயலாத நிலையில் தவித்து நிற்க,
“பொம்பளயக் கைநீட்டாதவந்தேம் ஆம்பளனு நெனச்சுட்டு இருந்தேம்டி.. புத்திகெட்டுப்போயி நடந்துகிட்டா ஆம்பள பொம்பளனு பாக்காம சவட்டிப் புத்திமதி சொல்லிருக்கனுமுடா மடயானு பொறத்தால அடிச்சமாணிக்கு செஞ்சுட்ட” என்ற சுயம்புலிங்கம் சங்கமித்ராவைப் பார்த்து, “என்ன மன்னிச்சுடு தாயி” என்று கரம் கூப்பினார்.
பதறிப்போய் அவர் கரம் இறக்கியவள், ‘நீங்க எனக்கு சாமி மாமா. பெரிய வார்த்தை சொல்லி வருத்தப்படுத்திடாதீங்க. நீங்க என்னிக்கும் எனக்கான மரியாதைலயும் அன்புலயும் குறையே வச்சதில்ல.. ப்ளீஸ் நீங்க அழுது என்னை வருத்தப்படுத்திடாதீங்க' சைகை செய்ய,
'இப்புடிபட்ட மோளேய மனசால கொன்னுருக்கியேடி?’ என்று எண்ணி மித்ரா முகத்தை வாஞ்சியைடயுடன் தடவிக் கொடுத்தார்.
தன்னால் தன்னவர், தன் வீட்டிலுள்ள இளவயது பெண்ணிடம் மன்னிப்பு வேண்டுகிறார் என்பதைக் கண்ட தெய்வாவிற்கு குற்ற உணர்ச்சி மென்று தின்றது.
அவர் முன் வந்து நின்ற வளவன், “ஏம்மா?” என்று உயிரே வலியில் உருகிக் கரையும் குரலில் கேட்டான்.
“எ..எய்யா..” என்று அவர் ஏதோ பேச வர,
“ஏம் அம்மா எனக்கு நல்ல அம்மாதேம்.. ஆனா எம்பொண்டாட்டிக்குத்தேம் நல்ல மாமியா இல்லபோலனு நெனச்சேம்.. இல்லடா கிறுக்கா நானு ஒனக்கு நல்ல அம்மாவுங்கூட இல்லனு செருப்பால அடிச்சாப்புல காட்டித்தந்துட்டீயம்மா.. காட்டித்தந்துட்டீய” என்று உடைந்துபோன குரலில் கூறினான்.
“அய்யா சாமி” என்று அழுதபடி அவர் அவன் கரம் பற்ற,
தீ பட்டதைப் போல் விலகிக் கொண்டான்.
நடப்பவையெல்லாம் பார்த்து நின்ற சங்கமித்ரா, அவரிடம் வந்து, ‘எனக்கு உங்களையும் ரொம்ப பிடிச்சிருந்துது.. என்னை ஏத்துப்பீங்கனு நம்பினேன். ஆனா இனி அப்படி நம்ப மாட்டேன். ஏன்னா இன்னுமும்கூட நான் அதே பைத்தியம் இல்லப்பாருங்க' என்றபடி நகர, மீண்டும் தலையை சுற்றியது.
அதிகபடியாக உணர்ச்சிவசப்பட்டதும் உடலில் சுத்தமாக திராணி இல்லாததும் அவளைத் தள்ளாடச் செய்ய,
“ஏப்பா” என்றபடி விக்ரம் வந்துத் தாங்கினான்.
“ஆத்தா”
“மைணி”
“சங்கு”
“மித்ரா” என்று பல குரல்கள் அவளை அழைக்க,
அதைக் கேட்க இயலாத மயக்கத்தில் ஆழ்ந்தாள் பெண்.
“ஏத்தா தனம் வடிவேலுக்கு அழச்சு சீக்கிரம் வரச்சொல்லு” என்ற விக்ரமன் அவளை நீள்விருக்கையில் கிடத்தி, “ஐயா காத்தாடியக்கூட்டி வைங்க, காத்தீ போஞ்சு கலக்கியெடுத்தா” என்க,
வளவன் பதட்டமாய் அவளருகே சென்று அமர்ந்தான்.
வடிவேலும் மருத்துவர் ஒருவரைக் கூட்டிக் கொண்டு வர, அவளைப் பரிசோதித்தவர் பெரும் அதிர்ச்சி ஒன்றை வளவன் தலையில் இறக்கி வைத்தார்.
Comments
Post a Comment