திருப்பம்-104
திருப்பம்-104
மணித்துளிகள் பல கடந்திருந்தது. அவன் அணைப்பில் அமைதியாய் கிடந்தவள், ‘எப்படிங்க?’ என்பதாய் அவளைப் பார்த்தான்.
“நீயு நீயாவே இல்ல மித்ரா. அதேம் ஒனக்கு எதும் வித்தியாசப்படல. நானுங்கூட நீயு பழயபடிக்கு ஆவலையேனுதேம் ரோசிச்சேனே தவர ஓம்மாத்தம் எனக்கும் வெளங்கல” என்றவன் அவள் தாடை பற்றி, “மாத்தர எடுத்ததுல ஒனக்கு பீரியட்ஸ் நாளு தப்பித்தேம் வந்தது. ஆனா இம்புட்டு நா வாராம போனத நீயும் ரோசிக்கல நானும் ரோசிக்கல. மூனு மாசம் படுத்துக் கெடந்து எழுந்ததுலயே ஒனக்கு எட கூடிடுச்சு. அதால இப்பம் ஏறினதும் நமக்கு வித்தியாசப்படல” என்று கூற,
புரிந்ததாய் மெல்ல தலை கவிழ்ந்தாள்.
‘என்ன சொன்னாங்க டாக்டர்?’ என்று அவள் சைகையில் கேட்க,
“அவியளுக்கே ஆச்சரியந்தேம். எப்புடி இம்புட்டு நா.. ம்ஹும்.. இம்புட்டு மாசந் தெரியாம இருந்தீயன்னாவ. நாந்தேம் ஓங்கண்டீஷனச் சொன்னேம். சரினு டெஸ்டெல்லாம் எடுத்துப் பாத்தாவ. புள்ள நல்லாத்தேம் இருக்காம்” என்று கூறினான்.
அவளுக்கு இன்னுமே ஆச்சரியம் தாங்கவில்லை.
சில நிமிடங்களில், ‘இதுக்கு ஏங்க அவ்ளோ கோபமாவே முகத்தை வச்சுருந்தீங்க கீழ?’ என்று அவள் கேட்க,
“பின்ன அம்மா என்னல்லாம் பேசிருக்காவடி ஒன்னய? சொல்லப்போனா நீயும் தனம் வளபூட்டப்ப முழுகாமத்தேம் இருந்துருக்க. தாங்குதில்லடி எனக்கு. என்ன பேச்சு. அதுவும் திரியக்கா என்னல்லாம் பேசிருக்காவ. மனசே வுட்டுபோச்சுடி” என்று மிகுந்த வருத்தத்துடன் அவன் கூறினான்.
பதிலேதும் கூறாது அவள் அவன் மார்பில் சாய,
அவள் தலைகோதியபடி, “ஒன்னய அம்புட்டு ஆசபட்டு கட்டிகிட்டேம் மித்ரா. ஒனக்கு கடிதாசி போடும்போதெல்லாம் இப்புடி இப்புடி இந்த புள்ளய நாம பாத்துகிடனும்னு எம்புட்டோ கனவு கண்டேம். பொண்ணு பாத்த புதுசுல மாமியா மருமவ சிரிச்சு பேசுறப்போல என்னமாது வீடியோலாம் பாத்தா நீயும் அம்மாவும் இப்புடிலாம் இருப்பீய, பாக்க சந்தோசமாருக்கும்முனுலாம் நெனச்சிருக்கேம்” என்று கூறி அவளை நோக்கினான்.
அவளும் அவனை நோக்க, “இப்ப அப்புடிலாம் ஆசயில்லடி. எங்கம்மா ஒன்னய வசயாது இருந்தாலே போதும். கட்டிகிட்டு வந்த மொத நாவே எங்கம்மா அத ஒனத்திட்டாவ. நா மனசுல கோயிலு கட்டிவச்ச எம்பொண்டாட்டிய என்ன பெத்தவியளே இம்புட்டு நோவடிச்சாட்டவனு நெனக்கவே அம்புட்டு வருத்தமாருக்குதுட்டி” என்று கூறினான்.
பெண்ணவள் முகம் சோகத்தைத் தத்தெடுத்தது.
“ஆனா சத்தியமா அதுக்காவப்போயி எங்கம்மாக்கூட ராசியாவுனு கேக்கம்மாட்டேம் மித்ரா. வேணாம். அவியளே மருமவனு வந்தாகூட நீ ஒதுங்கியே இருந்துகிடுடி. போதும். நீயு பட்டதெல்லாம் போதும்டி. நீயு சுத்தி வந்தப்ப அவியளுக்கு ஓம் அரும புரியலட்டி..” என்று கூறுகையில் அவன் தொண்டைக்குழி ஏறி இறங்க, மீண்டும் கண்கள் கண்ணீர் சிந்த தயாரானது.
“ப்ச்” என்றபடி எழுந்தவள், ‘போதும் விடுங்க’ என்க,
“எனக்கு மனசார நாளாவும்டி” என்றான்.
அவனை வருத்தமாய் பார்த்தவளுக்கு என்ன செய்யவென்று புரியவில்லை.
அவனை திசைதிருப்பும் பொருட்டு, ‘கீழ உள்ளவங்கட்ட இந்த ஷாக் நியூஸ சொல்ல வேணாமா?’ என்று கேட்க,
அவளையே அமைதியாய் பார்த்தான்.
‘எப்பவோ ஒரு கவிதை படிச்ச நினைவு. அறுந்துபோகாமலே புறக்கணிக்கப்படுகிறது இரண்டாம் செறுப்புனு. அப்படியொரு வலிய நாம யாருக்கும் குடுக்கக்கூடாதுங்க. உங்க அம்மாவும் மூத்த அக்காவும் மட்டும் தான் என்னைககஷ்டபடுத்தினாங்களே தவிர மித்த அத்தனைப் பேரும் இந்த வீட்ல என்னை அத்தனை சந்தோஷமாதான் வச்சுகிட்டாங்க. நல்லா தாங்கினாங்க. நல்ல உறவுகளா, நண்பர்களா, மனசுவிட்டு பேசவும் சிரிக்கவும் பழகவும் ஏதுவாதான் இருந்தாங்க. நம்ம சந்தோஷத்தில் அவங்க ஆயிரமா சந்தோஷப்படுவாங்க. எதையும் யோசிக்காம வாங்க’ என்று அவள் கூற,
“நீ நெசமாவே சாமி தந்த வரம்டி… நா என்னமோ பெரிய புண்ணியஞ் செஞ்சுருக்கேம் போல. இல்லாட்டா இப்புடியொரு வரத்த அந்த ஆண்டவேம் எங்கிட்டத் தந்திருக்க மாட்டியாம். ஓம் அளவுக்குலாம் என்னால காதலிக்கவே முடியாதுடி. ஒசந்துபுட்ட” என்று நெகிழ்வாய் கூறினான்.
அவனை முறைத்தபடி எழுந்தவள் சென்று டேப் ரெக்கார்டரை எடுத்து வைக்க, அவள் என்ன செய்யப் போகின்றாள் என்று அவனுக்குப் புரிந்தது.
‘உன் மேல் நான் கொண்ட காதல்
என் மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ..ஓ..ஓ..ஓ..
போடா பொல்லாத பையா
நம் மேல் நாம் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா’ என்ற பாடல் அதனில் ஒலிக்க,
நெகிழ்வாய் சிரித்தபடி எழுந்து வந்தவன் அவளை அணைத்துக் கொண்டு உச்சியில் இதழ் பதித்தான்.
“என்ன பாப்பாவா இருக்கும்?” என்று அவன் ஆர்வமாய் கேட்க,
‘நம்ம காதலை சேர்த்து வச்ச அந்த பாலகிருஷ்ணராதான் இருக்கும்’ என்று உறுதியாய் கூறினாள்.
அதில் அழகாய் புன்னகைத்தவன், “அப்பத எனக்கு பொம்பளப் புள்ள பெத்துத் தர மாட்டியா?” என்று கேட்க,
தன் தாடையில் தட்டிக் கொண்டவள், ‘இது கிருஷ்ணரா இருக்கட்டும். அடுத்தது நீங்க கேட்ட மாதிரி கேர்ள் பாப்பா பெத்துக்கலாம்’ என்று கூறினாள்.
அதில் பக்கென்று சிரித்தபடி அவள் மூக்கைப் பிடித்து ஆட்டியவன், “வாயாடி” என்க,
‘நமக்கு டிவின்ஸ் பாப்பா பிறக்குமா?’ என்று ஆர்வமாய் கேட்டாள்.
“இல்லடா. நானும் கேட்டேன். ஒரு பாப்பா தானாம்” என்று அவன் கூற,
‘ஓ.. சரி பரவால்ல. தனித்தனியாவே பெத்துக்கலாம். ரெண்டையும் ஒன்னுபோல சமாளிக்குறது கஷ்டம்’ என்று கூறினாள்.
நிமிடங்கள் நீள, அறைக்கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது.
அப்போதே இன்னும் இருவரும் கீழே செல்லாததை உணர்ந்தனர்.
இருவரும் சென்று கதவைத் திறக்க,
“என்னம்லே.. என்னச்சொன்னாவ? ஏம் கீழயே வரக்காணும்?” என்று பதட்டமாய் விக்ரம் கேட்டான்.
“ஒன்னுமில்லலே. பதறாத” என்ற வளவன் சங்கமித்ராவைப் பார்க்க, அவள் நாணம் கொண்டு புன்னகைத்தாள்.
“கீழ வா. சொல்லுதேம்” என்று வளவன் கூற,
மூவரும் கீழே வந்து சேர்ந்தனர்.
தெய்வாவின் பதட்டம் தான் நொடிக்கு நொடி கூடிக் கொண்டே இருந்தது. சுற்றி அத்தனைப் பேர் இருந்தும் ஒருவரும் அவரை ஏனென்று கேட்கவில்லை. அவரிடம் யாரும் பேசவுமில்லை. தங்கள் ஒதுக்கத்தை ஒதுங்கியிருந்தே காட்டினர்.
அத்தனை ஆண்டுகள் அவ்வீட்டில் ஸ்திரமாய் தைரியமாய் திரிந்து வந்த பெண்மணிக்கு இன்று எப்போது யார் என்ன கூறுவரோ? என்று அச்சமாக இருந்தது.
இதில் பிரச்சினை இத்தனை தூரம் வெடித்ததில் எங்கே சங்கமித்ரா தனிக்குடுத்தனம் சென்றுவிடுவாளோ? என்று இன்னும் அச்சமாக இருந்தது.
இன்னும் சொல்லப்போனால் இந்த பிரச்சினையால் அவர்கள் இருவரும் தனியே சென்றுவிடுவரோ? என்ற பயம் அவ்வீட்டில் அணைவருக்குமே இருக்கத்தான் செய்தது.
மூவருமாக கீழே வர,
விக்ரமனை ‘என்ன’ என்பதைப் போல் கார்த்திகா பார்த்தாள்.
‘தெரியலை’ என்று தோள்களை குலுக்கியவன், “லேய் வளவா.. என்னம்லே ஆச்சுது? டாக்டரு என்ன சொன்னாவ?” என்று கேட்க,
அனைவரையும் ஒரு பார்வைப் பார்த்தவன், “மித்ரா முழுகாமருக்கா” என்றான்.
அத்தனைப் பேரும் அச்செய்தியில் இன்பமாய் அதிர்ந்து போக,
“ஏத்தா.. ராசாத்தி” என்றபடி அவளிடம் வந்த கார்த்திகா, அவளை அணைத்துக் கொண்டு, “தங்கபுள்ள.. வாழ்த்துக்களுடி” என்று அத்தனை சந்தோஷமாய் கூறினாள்.
“ஏட்டி மைணி..” என்று தானும் உற்சாகமான தனம், ஆர்ப்பாட்டமாய் அவளை நெருங்கி, “வாழ்த்துக்களுடி மைணி” என்க,
“வேய்.. வளவா” என்று வடிலேலும் அவனை அணைத்துக் வாழ்த்தைத் தெரிவித்தான்.
சங்கமித்ரா இருவருக்கும் நன்றியாய் ஒரு பார்வைக் கொடுத்துத் தன் மாமனாரிடம் செல்ல, அவள் தலையில் கரம் வைத்தவர், “நீயு நல்லா இருப்ப தாயி” என்று வாழ்த்தினார்.
“இதுக்கேம்லே அம்புட்டு முறுக்கிட்டு போன? என்னமோ ஏதோனு பதறியே போயிட்டம்லே நாங்களாம்” என்று அவனை ஆரத்தழுவிய விக்ரம், “ரொம்ப சந்தோஷம்லே” என்று கூற,
“இதுக்கு ஏம்லே டாக்டரு ஆஸ்பத்ரி வரச்சொன்னாவ?” என்று வடிவேல் கேட்டான்.
“ம்ம்.. முழுகாமருக்கா. ஆனா எத்தன மாசமுனு பாக்கனுமில்ல?” என்று வளவன் கேட்க,
“எத்தன மாசம் அண்ணே?” என்று தனம் கேட்டாள்.
தன்னவளைப் பார்த்து சிரித்தவன், “அஞ்சு மாசமாச்சுத்தா” என்க,
“ஏதே” என்று அனைவருமே அதிர்ந்தே போயினர்.
“என்னலே சொல்லுத?” என்று விக்ரமனும் வடிவேலும் கேட்க,
“ஏட்டி மைணி.. என்ன சொல்லுதாவ அண்ணே? அஞ்சு மாசமா?” என்று தனமும் அதிர்ச்சியாய் கேட்டாள்.
“ஏத்தா சங்கு.. அஞ்சு மாசம் எப்புடித்தா தெரியாமருந்த?” என்று கார்த்தி கேட்க,
“ஏ மக்கா.. அத்தோடவாயா வெரதமிருந்துச்சு புள்ள? அவோளுக்கும் புள்ளைக்கும் ஒன்னுமில்லத்தான?” என்று சுயம்புலிங்கம் கேட்டார்.
தனது சந்தோஷத்தையும் அதிர்ச்சியையும் வெளிகாட்டிக் கொள்ள இயலாது தெய்வா தவியாய் தவித்தார்.
சட்டென்று சங்கமித்ராவிடமும் அவரால் ஒட்டிக்கொள்ள இயலவில்லை, வளவனிடமும் பேச முடியவில்லை. ஒரே நாள் சண்டையில் ஒரு வருட பிடித்தமின்மையை எப்படி அவராலும் தூக்கி எறிய இயலும்? அவள் கற்பம் தரித்திருப்பதில் சந்தோஷம் தான். ஆனால் அதை வெளிகாட்டிக் கொள்ள இயலவில்லை. தனது சந்தோஷத்தை தெரிவிக்க முடியாததுகூட எத்தனைக் கொடூரம் என்பதை அப்போதே உணரப்பெற்றார் அவர்.
“விபத்துல மருந்தெடுத்தால்ல மைணி? அதுலயே மித்ததுலேம் சரியால்ல. அவோளும் இதெல்லாம் கவனிச்சுக்குற நெலயில இல்ல” என்று அவன் முடித்துக் கொள்ள,
அதை பற்றி மேலும் கேட்பது நாகரீகமாய் இருக்காதென்று மற்றவர்கள் அமைதியாயினர்.
சென்று வீபூதியை எடுத்து வந்து அவளுக்கு வைத்துவிட்ட சுயம்புலிங்கம், “நல்லாருத்தா. நல்லபடிக்கா புள்ளைய பெத்தெடு” என்க,
“ஏட்டி மைணி.. ஏம் வளபூட்டு அப்பத நீயும் முழுகாமத்தாம்டி இருந்துருக்க. கார்த்தி மைணி புள்ளைக்கே ஓம்புள்ள சீனியரு” என்று தனது அன்னையை கோபமாய் பார்த்துபடி தனம் கூறினாள்.
மற்றவர்களும் அவரை ஏறிட, அவமானம் தாங்காது முகம் கன்றி சிவக்க நின்றுகொண்டிருந்தார்.
தன் மகனை ஏறிட்ட தெய்வா, “வளவா..” என்க,
“ஒங்க புள்ளையா ஒங்களுக்கான ஏங்கடமைய தவரமாட்டேம்மா. ஏம்பொண்டாட்டிய நீங்க தாங்கவும் வேணாம், தாக்கவும் வேணாம்” என்பதோடு முடித்துக் கொண்டான்.
யாரும் அவன் கூற்றை எதிர்க்கவில்லை.
அதில் தெய்வா இன்னும் உடைந்தே போனார். ‘உங்க மகனை விட்டு என்னை ஒதுக்குறதா நினைச்சு நீங்கத்தான் ஒதுங்கிக்குறீங்க’ என்ற சங்கமித்ராவின் வார்த்தைகள் எத்தனை உண்மை என்பது முகத்தில் அறைந்ததைப் போல் உணர்த்தியது.
“ஏம்லே மக்கா.. அம்மா..” என்று அவர் பேச வர,
கையெடுத்துக் கும்பிட்டவன், “வேணாம்மா.. இன்னும் என்னமாது பேசிடுவேம். போதும். நீங்க பேசின வார போதும். எனக்காகத்தேம் எல்லாஞ் செஞ்சதா சொல்லி, அவள பாடையிலத்தள்ள நானும் ஒதவினதா சொல்லிடாதீய. ஏற்கனவே போதுங்குற அளவு நொந்து போயிட்டேம். இன்னும் நோவ உள்ளக்க உசுரு இல்ல. விட்டுப்புடுவ” என்றான்.
‘அய்யோ..’ என்று அவர் மனம் அடித்துக் கொண்டது.
“ஏங்க.. இவேம் என்னங்க இப்புடி பேசுறியாம்?” என்று அழுதபடி அவர் சுயம்புலிங்கத்திடம் கூற,
“நீயு நெறயா பேசிபுட்டயில்ல? அதேம் இப்ப கேக்க வேண்டிய நெலயில இருக்க. வெதச்சத அறுக்காத விடமுடியாதுட்டி. நீயு வெதச்ச வெசம் மரமாயி ஒன்னயே விழுங்குது. வாங்கித்தேம் ஆவனும்” என்று இறுகிபோனக் குரலில் கூறினார்.
“என்னங்க நீங்களும் இப்புடிச் சொல்லுதீய?” என்றவர், “அம்மாவ மன்னிச்சுடு சாமி. ஏதும் தப்பாகிப்பா முடிவாயிபுடாதய்யா” என்க,
“அய்யோ கவலையெல்லாம் வேணாம். வூட்டவிட்டு போவமாட்டம்” என்றவன், “ஆனா ஒன்னு சொல்லட்டா? நானாருந்துருந்தா அதத்தேம் செஞ்சுருப்பேம். ஆனா இங்கனத்தேம் நாம வாழனும்முனு சொன்னதே ஏம்பொஞ்சாதிதேம். அவ காரணம் ஆயிரஞ் சொன்னாலும், இந்தூட்டுலருந்து என்னைய பிரிச்சுக்கூட்டிட்டுப் போவ வேணாமுன்னுதேம் இப்பவும் யோசிக்கா. அவ மனசு ஒங்களுக்கு புரியாதும்மா” என்று கூறினான்.
தெய்வா அழுது ஏதேதோ புலம்ப, அவரை ஆற்றுப்படுத்த அங்கு யாருமே இல்லை.
நிமிடங்கள் நீண்டதோடு அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்க கலைந்து செல்ல,
அநாதரவாய் உணர்ந்த தெய்வா அப்படியே ஓரமாய் அமர்ந்துவிட்டார்.
இரவு உணவை செய்து அனைவரும் உண்டனர். அவரை யாரும் அழைத்துக்கொள்ளவில்லை.
உணவை முடித்துக் கொண்டு அனைவரும் உறங்கவென்று செல்ல, வடிவேலும் அன்று தன் மனைவியுடனே தங்கிக் கொண்டான்.
மாடியில் உப்பரிகைக்கு வந்த இரு தம்பதியர்களில், அறைக்குள் செல்லவிருந்த சங்கமித்ராவை, “சங்கு” என்று அழைத்தான் விக்ரமன்.
பெண்ணவள் அவனைத் திரும்பிப் பார்த்து, ‘என்ன அத்தான்?’ என்க,
கார்த்திகாவும் வளவனும் அவர்களை வேடிக்கைப் பார்த்தனர்.
அவள் கரம் பற்றிய விக்ரம் கண்கள் சிவந்து, “நன்றித்தா” என்க,
அவனை புரியாத பார்வை பார்த்தாள்.
“ஒம்பக்கட்டு தப்பேயில்ல, ஒன்னய அம்மா பேசினது அம்புட்டும் தப்புனு எல்லாம் புரிஞ்சுதுத்தா. ஓம்பக்கந்தேம் சரினுயெல்லாம் வெளங்கிச்சுத்தேம். ஆனா நானும் சுயநலமுள்ள மனுஷந்தேம் பாரு. எங்க வளவனும் நீயும் தனியா போயிடுவியளோனு ரொம்ப பயந்தேம் சங்கு” எனும்போது அவன் கண்ணீர் கன்னத்தில் மெல்லிய கோடாய் இறங்கியது.
“அ..அவேம்.. கூடவே பொறந்துட்டியாம்.. வ.வயித்துலருந்தே ஒன்னாருந்துட்டம். எ..எங்க த..தனியா போயிடுவானோனு..” என்று விக்ரம் தடுமாற,
வளவன் வந்து அவனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.
கார்த்திகாவும் சங்கமித்ராவும் நெகிழ்வாய் கண்ணீரோடு அவர்களைப் பார்த்து நின்றனர்.
உடன் பிறந்தவன் தோளைத் தட்டிக் கொடுத்ததுத் தன் கண்ணீரை அழுந்தத் துடைத்த விக்ரம், “நன்றித்தா” என்று காற்றான குரலில் கூற,
‘அழக்கூடாது’ என்று சைகை செய்தவள், அவனைப் பார்த்து, ‘நாம ஃபிரெண்ட்ஸ் தானே? பிரெண்டுக்கு யாரும் நன்றி சொல்வாங்களா?’ என்று புன்னகையாம் கூறினாள்.
அவள் கன்னம் தட்டிப் புன்னகைத்தவன், வளவன் தோள் தட்டிவிட்டு உள்ளே செல்ல,
சங்கமித்ராவை அணைத்துக் கொண்ட கார்த்திகாவும், புன்னகையாய் அவள் கன்னம் தட்டித் தன் கண்ணீர் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
Comments
Post a Comment