திருப்பம்-105
திருப்பம்-105
“வாய்யா வளவா.. என்னம்லே சோலி?” என்று சிவபாதசேகரன் கேட்க,
அவன் முன் அமர்ந்திருந்த வளவன் கண்களை அழுந்த மூடித் திறந்து, “உங்கட்டக் கொஞ்சம் பேசனும் அத்தான்” என்றான்.
“எங்கிட்டயா? என்னம்லே? தொழிலுல எதும் ஒடக்கா?” என்று சிவபாதசேகரன் கேட்க,
“இல்ல அத்தான்” என்றான்.
அவனது அமைதியை உணர்ந்த சிவபாதசேகரன், “என்னாச்சுலே? திரிபுரா ஏதும்?” என்று கேள்வியாய் இழுக்க,
சோகம் ஊரிய விழிகளுடன் அவனை ஏறிட்டான்.
சிவபாதசேகரனுக்குத் தன் மனைவியால் தான் ஏதோ பிசகு என்று புரிந்தது.
“எப்பதுமே நீங்க, நீங்க, ஒங்க சோலினுதேம் இருப்பீய அத்தான். அக்கா வெசயத்துலயுங்கூட. ஒங்க பக்கட்டு வாராத வார, ஒங்க வழியில சரியா போவீய. ஒங்கட்ட எனக்கு ரொம்ப புடிச்சதும் அதேம். ஒங்க வழியில சரியாருப்பீய. வேண்டாதபடிக்கு மத்தவியள திருத்துறேம் வெக்கேம்னும் போவ மாட்டீய. ஆனா இப்பத இத நா ஒங்கட்டக் கூட்டியாரதும், நீயளே சரியான முடிவாயெடுத்து எனக்கு ஒதவுவீயனுதேம்” என்று வளவன் கூற,
பேசி முடி என்பதாய் அவன் பேச்சைக் கேட்கத் தயாரானான்.
“நீங்க அக்காட்ட என்னிக்குமே இப்புடித்தேம் அப்புடித்தேம்னு கண்டீஷன் போட்டதில்ல. அதேபோல அக்கா என்னத்தேம் எகன மொகனயா பேசினாலும், நீங்க ஒன்னு சொன்னா மறுக்காது கேட்டுகிடும். இப்பத எனக்காவ அக்காட்ட நீங்க பேசனும் அத்தான்” என்று தரை பார்த்தபடி கூறியவன்,
சிவபாதசேகரன் முகம் பார்த்து, “அக்காக்கு ஏம்பொஞ்சாதிய புடிக்காதுனு ஒங்களுக்குத் தெரியும். ஆனா அதால எம்பொஞ்சாதி பட்டப்பாடெல்லாம் அறிய மாட்டீய்த்தான்” என்க, அவன் விழிகளிலிருந்து கோடாய் நீர் வழிந்தது.
“லேய்..” என்று பதட்டமாய் அழைத்த சிவபாதன், வளவன் தோள் தொட,
தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவன், “அ..அவோள.. கொ..கொரலுக்கு வழியில்லாதவனுலாம் சொல்லிருக்காவ அத்தான்” என்றான்.
சிவபாதசேகரன் வளவனை அதிர்ந்து நோக்க,
“ஒவ்வொருக்கா அக்கா வீட்டுக்கு வாரயிலயெல்லாம் அம்மாவுக்கும் மித்ராவுக்கும் என்னமாது கலகம் மூண்டுபுடும். என்னமாது சொல்லிபுடும் அக்கா. அக்காவுக்குப் புடிக்குதில்லதேம் அத்தான். வழிய வந்து எம்பொஞ்சாதிய தாங்குங்கலை. அதபோல வழிய வந்து வையாதுருக்கனுமில்ல? என்ன என்னமோலாம் பேச்சு வாங்கிபுட்டாத்தான் அவோ. த..தனம் வளபூட்டப்பப் பி..பிள்ளையில்லனுலாம்” என்று கூற முடியாது அவன் தலைகுனிய,
சிவபாதசேகரனுக்கு நெஞ்சமெல்லாம் அடைத்தது.
‘தான், தனது வேலை என்று மட்டுமாக இல்லாமல், தனது மனைவியின் போக்கையும் கவனித்திருக்க வேண்டுமோ? தனது வீட்டில் நல்ல மனைவியாகவும், மருமகளாகவும் தன் பங்கை வகிப்பவள், அவளது பிறந்த வீட்டில் நல்ல மகளாகவும், நல்ல அக்காவாகவும் இருக்கின்றாளா என்பதைக் கண்டிருக்க வேண்டுமோ?’ என்று அவன் மனம் யோசிக்க,
என்னவோ போலானது.
திரிபுராவின் குணம் தெரிந்தது தான் என்றாலும், இத்தனை தூரம் செயல்படுவாள் என்று அவன் நினைத்திருக்கவில்லை.
தன் கைசட்டையில் கண்ணீரை அழுந்தத் துடைத்தவன், “நேத்திக்கு வீட்டுல பெரிய ஒடக்காவிப்போச்சு அத்தான். அம்மா அவோள என்ன என்னமோ பேச, அவளும் தாங்கமாட்டாது வெடிச்சுபுட்டா. வெரதம் வேற இருந்தபடிக்கு கெரங்கி வுழுந்துப்டா” என்க,
“என்னம்லே சொல்லுத? புள்ள இப்பத எப்புடியிருக்கா? ஏம்லே முடியாதவலே அவோ” என்று பதறினான்.
“இருக்காத்தான்..” என்றவன், “அவ முழுகாமருக்கா அத்தான்” என்க,
“லேய்..” என்று அதிர்வாய் அழைத்தான்.
“அஞ்சு மாசமாவிபோச்சு. அதுகூட கவனியாமருந்துருக்கா. அக்காவும் அம்மாவும் என்னென்னவோ பேச, அதெல்லாஞ் சேந்துகிட்டு ரொம்ப படுத்திருக்கு அவள. எங்கிட்டயும் என்னமும் பேசிகிடல. ரொம்ப தாங்கமுடியாதுதேம் தனம் வளபூட்ட முடிச்சக் கையோட அவோ அக்கா வூட்டப்பாத்துப் போயிட்டா. இப்பத வந்து சேந்து கொஞ்ச நாளுல இப்புடி ஆவப்போயிதேம் ஆஸ்பத்ரிக்கு ஓடினேம். பாத்தா அஞ்சுமாச புள்ளயிருக்குங்காவ. சந்தோசப்படவா அஞ்சுமாசமா புள்ள இருந்ததே தெரியாதபடிக்கி இருந்துருக்கோமேனு வருத்தப்படவானு தெரியலத்தான்” என்று அவன் கூற,
சிவன் மிகுந்த வருத்தமுற்றான்.
“அந்தூட்டுக்கு அவள வரவேணாமுனு ஒருநாளுஞ் சொல்லமாட்டேம். அங்க வாரபோக, எனக்கிருக்காப்புலதேம் அவியளுக்கும் உரிமருக்குது. ஆனா எம்பொஞ்சாதி விசயத்துல மட்டும் தலையிட்டுகிட வேணாமுனு பேசுங்க அத்தான். தாங்கவே வேணாம் அத்தான். அம்புட்டுப் பேருக்கும் சேத்து நானே அவளத்தாங்கிப்பேம். அவ மனச ஒடைக்காதபடிக்கு மட்டும் இருத்துகிட சொல்லுவ அத்தான்” என்றவன், சிவபாதனை நோக்கி தன் இருகரம் கூப்பி, “ரெண்டு உசுரா இருக்கா அத்தான். என்னமாது பேசி அவ மறுக்கா மனசொடஞ்சு போயிடுவாளோனு பயந்து வருது” என்று கண்ணீரோடு குரல் உடையக் கூற,
“வேய்” என்று அவன் கரம் பற்றி இறக்கினான்.
சிவபாதசோகரனுக்கு அத்தனை அத்தனை வருத்தமாக இருந்தது. இன்னும் சில நிமிடங்கள் பேசினால் நிச்சயமாக தானும் அழுதுவிடுவோம் என்பதைப் போல் உணர்ந்தான்.
“அக்காவும் அத்தையும் மாமாவும் நெதம் காலையில அம்மங்கோயிலுக்கு வெளக்கப்போடப்போவாவுனுதேம் இந்த நேரமா வந்தேம் அத்தான். அத்தையோ மாமாவோ கேட்டா ரொம்ப சங்கடப்பட்டுப்போவாவ. நீங்க அக்காவத் தனியாகூப்டுப் பேசுங்க அத்தான்” என்று வளவன் கூற,
“நாம்பேசுரேம்லே” என்றான்.
மீண்டும் சில நிமிடங்கள் ஆழ்ந்த அமைதி ஒன்று நிலவியது.
“தப்பா எடுத்துக்கிடாதீய அத்தான்” என்று அவன் கூற,
“ச்ச இல்லலே.. எனக்கு உனக்கு எப்புடி மன்னிப்புக்கேக்கனு தெரியிலலே..” என்று வருத்தமாய் கூறினான்.
“அய்யோ அத்தான்” என்று பதறியவன், “வேணாந்த்தான்.. அப்புடி ஏதுஞ்செஞ்சு என்னய சங்கடப்படுத்திடாதீய” என்று கூற,
“இந்த வயசுல இம்புட்டு பெருந்தன்ம ஆவாதுலே” என்றான்.
வலியுடன் கூடிய புன்னகையைக் கொடுத்த வளவன், “நா வாரேம் அத்தான். அக்கா அத்தே மாமாட்டலாஞ் சொல்லிடுவ” என்க,
“சரிலே” என்றான்.
தன் அத்தானிடம் பேசிவிட்டத் திருப்தியுடன் வளவன் புறப்பட,
சிலநேரங்களில் வீடு திரும்பியத் தன் மனையாளைப் பார்த்த சிவபாதன், “திரி…” என்று அழைத்துவிட்டு அறைக்குள் சென்றான்.
“என்ன கூப்டுட்டு அவியளாட்டுக்குப் போறாவ?” என்று கேட்டுக் கொண்டவளாய் அவள் உள்ளே செல்ல,
இருக்கையில் சாய்ந்தபடி சிவபாதசேகரன் அமர்ந்திருந்தான்.
“என்னங்க? என்னத்துக்குக் கூப்டீய?” என்று அவள் கேட்க,
“ஓந்தம்பி பொண்டாட்டி முழுகாமருக்காளாம்” என்றான்.
“ஆமா கார்த்தித்தான? அதேம் தெரியுமே. நாந்தான ஒங்களுக்கே சொன்னேம்” என்று அவள் கூற,
“விக்ரமச் சொல்லல” என்றான்.
சற்றே யோசித்தவள் ஆச்சரியமாய், “வளவேம் பொஞ்சாதியா?” என்க,
விழிகள் திறந்து அவளை நோக்கியவன் மெல்ல தலையசைத்தான்.
“ஆத்தே.. நல்ல செய்திதான? அதுக்கேம் உள்ளக்கக் கூப்டீய? எம்புட்டு மாசமாம்? ஆரு சொன்னாவ ஒங்களுக்கு?” என்று அவள் கேள்விகளை அடுக்க,
“ஓந்தம்பிதேம் வந்து சொல்லிட்டுப் போனியாம்” என்றவர், “அஞ்சு மாசமாச்சாம்” என்றான்.
“ஏதே.. அஞ்சு மாசமா?” என்று முற்றுமாய் அதிர்ந்து போய் கேட்டவள், “அம்புட்டு மாசம் எப்புடிங்க தெரியாமருந்தாவ?” என்க,
“அப்புடிக்கு அந்த புள்ள மனசு வேறு என்னத்துலயோ பாதிச்சுருக்குது” என்றான்.
கணவனின் பேச்சு மாறுபடுவதில் அவள் புருவம் சுருக்க, வளவன் வந்ததையும், பேசியதையும் கூறி முடித்தான்.
திரிபுரா அதிர்ந்துபோய், “ஏந்தம்பியா இப்புடிச்சொன்னியாம்? பாவி அம்புட்டுக்கு அவேன மாத்திட்டாளா? இம்புட்டு ஒடக்காவிருக்கு இந்த அம்மா ஒருவாத்த சொல்லலியே” என்க,
அவள் முன் எழுந்து வந்து நின்றவன், “நானும் அதேம் சொல்லுதேம். இனி அந்த புள்ள சேதி எதுலயுமே ஓந்தலையீடு இருக்கவே கூடாது. எம்மேல சத்தியமா சொல்லுதேம் கேட்டுக்க” என்றான்.
“என்னங்க நீங்க? என்ன பேசுதீய?” என்று அவள் பதற,
“ஒனக்கு புள்ளையில்லனுதேம் அந்த புள்ளயோட வயித்த காலிசெய்ய பாத்துட்டனு ஆரும் சொல்லிப்டா ஒன்னால தாங்க முடியுமா திரிபுரா?” என்று கேட்டான்.
கணவன் உதிர்த்த வார்த்தைகளில் முற்றுமாய் அரண்டு போனவள் விழிகளில் சட்டென்று நீர் கோர்த்துக் கொண்டது.
“எ..ஏங்க..” என்று அவள் வலியோடு தடுமாற,
“ஒன்னால முடியுமோ என்னமோ? என்னால முடியாதுத்தா. பாத்து இருந்துகிடுவனு நம்புதேம். இப்பம்னு இல்ல இனி எப்பமுமே அந்த புள்ளைக்கு ஒன்னால ஒரு வெசனம் வரக்கூடாதுத்தா. என்ன பாவஞ்செஞ்சோமோ நமக்குனு ஒரு உசுரில்ல.. மேலும்படிக்கா ஒரு பாவத்த செஞ்சதா நமக்கு வேணாம்” என்றவர், “புரிஞ்சுப்பனு நம்புதேம்” என்று அழுத்தமாய் கூறிவிட்டுச் சென்றார்.
அவ்விடத்திலேயே அப்படியே மடிந்தமர்ந்த திரிபுராவிற்கு உலகமே நின்றுபோனதைப் போலிருந்தது.
தனக்கு இத்தனை வருடங்களாய் குழந்தையில்லை என்றபோதும், தன் மாமனார் மாமியாரிடம் கூட விட்டுக் கொடுக்காமல், தன்னிடமும் மனம் நோக நடந்துக்கொள்ளாமல் இருந்த, தனது கணவனா இப்படியான வார்த்தைகளைத் தற்போது கூறியது? என்று எண்ணியவளுக்கு இதையத்தை உயிரோடு யாரோ பிடுங்கி எறிவதைப் போலிருந்தது.
என்ன மாதிரியான வார்த்தைகள் அவை? வார்த்தைகள் அத்தனை வலி கொடுக்குமா? வாலும் இல்லை, தேளுமில்லை.. ஆனால் அதனில் இத்தனை வலி இருக்கின்றதா? என்று எண்ணியவளுக்கு விழியிலிருந்து அவளையும் அறியாமல், மடமடவென்று கண்ணீர் வழிந்தது.
‘ஒனக்கு புள்ளையில்லனுதேம் அந்த புள்ளயோட வயித்த காலிசெய்ய பாத்துட்டனு ஆரும் சொல்லிப்டா’ என்ற அவளவனின் வார்த்தைகள் உயிருடன் சிதையிலேறினால் கூட இத்தகு வலியைக் கொடுக்காதென்றே உணர்த்தியது.
சொல்லக்கூடும் தானே? எதாவது ஒன்று நடந்து, யாரும் அப்படியேதும் கூறிவிட்டால்? என்று நினைத்ததற்கே அவள் உடலும் உள்ளமும் வெளிப்படையாய் நடுங்கியது.
தான் இத்தனை காலம் செய்தவைத் தவறென்று அவள் யோசிக்கவில்லை. அப்படியொரு எண்ணமும் அவளுக்கில்லை… தான் எப்போதுமே சரியென்று பிறவியிலிருந்து உள்ள குணம், அத்தனை எளிதில் போய்விடுமா என்ன?
ஆனால் இனியும் தான் அதை செய்தால், நிச்சயம் அது தவறு என்பதையெல்லாம் தாண்டிய பாவம் என்று நினைத்தாள். நினைத்தாள் என்பதைவிட, அவளவன் நினைக்கச் செய்தான் என்றால் தகும்.
இத்தனை நாட்கள் பேசி அவளுக்குக் கொடுத்த வலிக்கு, கூர்மையான சொற்பச் சொற்களே அவளைக் கொன்று குவித்திருந்தது. வெளியே சென்ற சிவபாதன் நிமிடங்கள் கடந்து உள்ளே வர அவள் அப்படியே அதே நிலையில் அமர்ந்திருந்தாள்.
எண்ணம் முழுதும் அவன் பேசிவிட்டுச் சென்ற சொற்களைச் சுற்றிவர, கண்கள் கண்ணீர் ஊற்றைத் திறந்ததாய் பொழிந்தது.
அவள் முன் வந்து அமர்ந்த சிவபாதன் அவள் தாடை பற்றி, “திரிபுரா” என்க,
“இதுக்கு அப்பறமும் அவள போயி பேசினேம்னா என்னய என்னனு கேளுங்க” என்று குரல் உடையக் கூறியவள், தன் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டு விருட்டென்று எழுந்து சென்றாள்.
மனைவி சென்ற திசையை வருத்தத்துடன் பார்த்து நின்றவனுக்கு, அவளிடம் அவ்வாறு பேசியதற்கு பெரும் வருத்தமாக இருந்தது.
ஆனால் சில தவறுகளுக்கான தண்டனைகள் அதிக வலியைக் கொடுத்தாலன்றி, மீண்டும் நிகழப்பெறாது என்று எண்ணியவன், கண்களை மூடி ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்றான்.
இனி திரிபுரா மொத்தமாய் மாறிவிடுவாள் என்று அவன் எண்ணவில்லை. அதற்கு வாய்ப்புமில்லை. ஆனால் நிச்சயம் அவள் சங்கமித்ரா விஷயங்களில் தலையீடு செய்து, முகத்திற்கு நேராக மனம் நோக பேசுவதை முற்றுமாய் தவிர்த்து விடுவாள், என்று மனமார நம்பினான்.
Comments
Post a Comment