திருப்பம்-106
திருப்பம்-106
அங்கு காலை உணவை முடித்துக் கொண்டு தயாரான சங்கமித்ராவை அழைத்துக் கொண்டு தனது மாமனாரின் வீட்டிற்குச் சென்றான் வளவன்.
பெண்ணவள் அவன் தோள் தட்டி அழைக்க,
அவள் எதற்காக அழைக்கின்றாள் என்று புரிந்தவனாக, “அண்ணேக்கு ஃபோன் போட்டு வரச்சொல்லிட்டேம். மைணியையும் புள்ளையையும் கூட்டிட்டு வாரேனுட்டாவ” என்றான்.
சிறு புன்னகையுடன் அவள் தலையசைக்க,
கண்ணாடி வழியாக அதைப் பார்த்து புன்னகைத்தவன், தன் மாமனார் வீட்டை அடைந்தான்.
அவர்களுக்கு முன்பே அவிநாஷ் தனது மனைவி மற்றும் மகளுடன் வந்திருக்க,
தன் மனையாளுடன் உள்ளே நுழைந்த வளவன், “என்ன அண்ணே எங்களுக்கு முன்னுக்கவே வெரசா வந்துட்டீய?” என்று கேட்டான்.
“நான் காலைலயே இங்க வரத்தான்டா கிளம்பிட்டு இருந்தேன். பாப்பாக்கு ஒரு வயசாகப்போகுதில்ல? அதான் மொட்டை போடுறது பத்திலாம் போசலாம்னு வந்தோம்” என்று அவிநாஷ் கூற,
“அட ஆமால்ல? தங்கபுள்ளைக்கு ஒரு வயசாவப்போவுதுன்ன?” என்றபடி குழந்தையைத் தூக்கி முத்தம் கொஞ்சினான்.
கிளுக்கிச் சிரித்த சங்கவி, “சிச்ஆ..” என்று அவன் கன்னத்தில் கரம் அழுத்தி எடுத்து அவன் மூக்கை கடிக்க,
சங்கமித்ரா இதனை ரசனையோடு பார்த்தாள்.
“என்னம்ணே முடிவாயிருக்கீய?” என்று வளவன் கேட்க,
“நம்ம குலதெய்வக்கோயிலுக்குப் போனும். பாப்பாட்ட பேசிட்டு முடிவாவோமுனுதான் இருக்கோம் டா” என்றான்.
“உங்க பாப்பாட்ட என்னக் கேள்வி?” என்று வளவன் கேட்க,
சங்கமித்ராவும், ‘அதானே?’ என்பதைப் போல் அவனைப் பார்த்தாள்.
“என்னக் கேள்வியா? சித்தி மடில வச்சுத்தான் என் புள்ளைக்குக் காதே குத்தப் போறோம். அவகிட்ட கேட்காம எப்படி?” என்று அவிநாஷ் கூற,
சங்கமித்ரா தன் அத்தானை அதிர்வாகப் பார்த்தாள்.
“என்னடா பாக்குற? மாமான் மடில வச்சுத்தான் குத்தனுமா என்ன? என் புள்ளைக்கு மாமானுக்கு மாமனா சித்தியே இருக்காளே. அப்றம் எதுக்கு குட்டிமாக்கு மாமாவைத் தேடனும்? நெல்லை வரை போகனும். உனக்கு கன்வீனியன்டாகுமா என்ன ஏதுனு பேசனும்னு நானே நினைச்சுட்டு இருந்தேன். அதுக்குள்ள வளவனே கூப்ட்டுவிட்டுட்டான்” என்று அவிநாஷ் கூற,
சங்கமித்ரா இன்னும் அதிர்ச்சி விலகாது தன் அக்காவையும் அத்தானையும் பார்த்தாள்.
அவள் பெற்றோருக்கே இச்செய்தி அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
“என்னடி முழிக்குற?” என்று சங்கீதா கேட்க,
‘நா எப்படி சங்கி?’ என்றாள்.
“இது உன் அத்தான் மனசார யோசித்து எடுத்த முடிவு. நீயாச்சு அவராச்சு” என்று சங்கீதா கூற,
அவளுக்கு என்னக் கூறுவதென்றே தெரியவில்லை.
புன்னகையாய் வளவன் அவள் தோளில் கரமிட,
அவள் தன்னவனைப் பார்த்தாள்.
அவன் கண்கள் மூடித் திறந்து புன்னகைக்க, சென்று தன் அத்தானை அணைத்துக் கொண்டவள், ‘தேங்ஸ் அத்தான்’ என்றாள்.
“என்ன பாப்பா நீ பெரிய வார்த்தையெல்லாம் சொல்ற?” என்றவன் அவள் தலை கோதி,
“பாப்பாக்கு ட்ராவல் ஒத்து வருமா வளவா? நெல்லையப்பர் கோவில் தான்” என்று கேட்க,
“ஒங்க பாப்பாவைச் சொன்ன தேதிக்குக் கூட்டியாரது என் பொறுப்பு அண்ணே” என்றான்.
சச்சிதானந்தம் தனது இரு மருமகன்களின் ஒற்றுமையைக் கண்டு அத்தனை சந்தோஷம் கொண்டார். இரு பிள்ளைகளையும் நல்லயிடத்தில் கொடுத்துவிட்டத் திருப்தி இருந்தபோதும் சங்கமித்ரா உடல்நிலையில் முழுமையாய் சீராகாதது மட்டுமே ஒரு குறையாக இருந்தது.
இன்னும் அவள் வாழ்வில் நான்கு நல்லதுகளைப் பார்த்துவிட்டால் தனக்குத் திருப்தி என்றே நினைத்துக் கொண்டார்.
“ஆமா நீங்க எதுக்கு வரச் சொன்னீங்க?” என்று சங்கீதா கேட்க,
சங்கமித்ரா வளவனைப் பார்த்தாள்.
‘நீங்க சொல்லுங்க’ என்று அவள் விழிகள் கூற,
“உனக்கே நாந்தேம் சொன்னேம். இங்க நீயே சொல்லு” என்று அவள் காதோரமாய் கூறினான்.
முகம் சிவக்க அவனைப் பார்த்தவள், செல்லமாய் முறைக்க,
“என்னங்கடா? என் பொண்டாட்டி ஒரு கேள்வி கேட்டா ரெண்டு பேரும் உங்களுக்குள்ளயே ரகசியம் பேசிக்குறீங்க?” என்று அவிநாஷ் கேட்டான்.
அவனைப் பார்த்த சங்கமித்ரா, தன்னவனை லேசாய் முறைத்துவிட்டு அனைவரையும் பார்த்தாள்.
வாய்விட்டுக் கூறமுடிந்தாலும் சரி, சைகை அல்லவா செய்ய வேண்டும் என்று நினைத்தவளுக்கு வெட்கமாக இருந்தது.
‘இந்த மனுஷன் எப்பப்பாரு இப்படித்தான் நம்மை கோர்த்துவிடுராரு’ என்று மனதோடு தன்னவனைத் திட்டிக் கொண்டவள், தன்னைக் குறிப்பிட்டுக் காட்டி, இதழ் கடித்துக் கொண்டு தன் வயிற்றைத் தட்டிக் காட்ட,
“பசிக்குதா?” என்று சங்கீதா கேட்டாள்.
அக்காவை முறைத்துப் பார்த்தவள், பேருகால வயிற்றைப் போல் அபிநயம் செய்துக் காட்ட,
“பாப்பா?” என்று ஆச்சரியமான கேள்வியோடு அவிநாஷ் ஏறிட்டான்.
“ஏ சங்கு!” என்று சங்கீதாவும்,
“டேய் கண்ணா..” என்று சச்சிதானந்தமும்,
“சங்கு!?” என்று தாட்சாயணியும் ஒவ்வொரு அதிர்ச்சியில் அழைக்க,
முகம் பூரித்து சிவக்க, தலையாட்டினாள்.
“ஏ.. எங்க சங்கு அம்மாவாகப்போறா… வாழ்த்துக்கள்டி சங்கு” என்று சங்கீதா ஆர்ப்பாட்டமாய் தங்கையைக் கட்டிக் கொள்ள,
மனம் நிறைந்த புன்னகையுடன் அக்காவை அணைத்துக் கொண்டாள்.
வேகமாய் சென்று இனிப்பு எடுத்துவந்த தாட்சாயணி, “வாழ்த்துக்கள்டா கண்ணா.. எனக்கு சந்தோஷமா இருக்குடா சங்கு” என்று இனிப்பை ஊட்ட,
சச்சிதானந்தம் மகள் தலைகோதி, “வாழ்த்துக்கள் டா கண்ணா. வாழ்த்துக்கள் மாப்பிள்ளை” என்றார்.
“நேத்துவர எம்புள்ள எங்கையிலருந்த போலருந்துது. இன்னிக்கு அவ கைக்கே ஒரு புள்ளை வரப்போகுது” என்று சச்சிதானந்தம் மனம் பூரிக்கக் கூற, சங்கமித்ரா அழகாய் புன்னகை பூத்தாள்.
பெண்ணவள் அவிநாஷை நோக்க, அவன் சந்தோஷத்திற்கும் தான் அளவு உண்டோ?
அவளைத் தன் தோள் வளைவில் நிறுத்தியவன், “வாழ்த்துக்கள்டா பாப்பா. ரொம்ப சந்தோஷமா இருக்குபோ. நல்லா சாப்பிட்டு ஹெல்தியா இருக்கனும் சரியா?” என்று கூற,
‘சரி’ என்பதாய் தலையசைத்தாள்.
“எத்தனை நாளாகுது சங்கு?” என்று ஆர்வத்துடன் சங்கீதா கேட்க,
அந்த கேள்வியே அவளுக்கு சங்கடமாகத்தான் இருந்தது. அடுத்து வரவிருக்கும் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டுமே என்று ஆயாசமாகவும் இருந்தது.
மெல்ல ஐந்து என அவள் விரல் பிடித்துக் காட்ட, “அஞ்சு வாரமா? ஒன்ற மாசமாடி?” என்று தாட்சாயணி கேட்க,
இல்லையெனத் தலையசைத்தாள்.
“அப்பறம்?” என்று பெண்கள் இருவரும் ஒன்றாய் கேட்க,
“அஞ்சு மாசமாச்சு அத்தே” என்று வளவன் கூறினான்.
அனைவருக்குமே அது அத்தனை அதிர்ச்சியாக இருந்தது.
“என்ன மாப்ள சொல்றீங்க?” என்று சச்சிதானந்தம் கேட்க,
“அஞ்சு மாசமா? வயருகூட தனியா தெரியலையே மாப்ள” என்று தாட்சாயணி கேட்டார்.
சங்கமித்ரா முகமே அதில் வாடிவிட, “அத்தை எல்லாருக்கும் அப்படியெல்லாம் தெரியாது தானே. பாப்பாக்கும் அப்படித்தான் போல. என் சித்தப்பா பொண்ணு ஒருத்திக்கும் கடைசி மாசம் வரை பெருசா வயிறு தெரியவேயில்லை” என்று அவிநாஷ் கூறினான்.
அவனை நன்றியாய் பார்த்த வளவன், “டாக்டருட்ட எல்லாம் விசாரிச்சுட்டேம் அத்தே. புள்ளயும் அவோளும் நல்லாத்தேம் இருக்காவ” என்று கூற,
அவன் கூறியதற்காக மற்றவர்கள் அமைதியாகினர்.
“எது எப்புடியோ.. ரொம்ப சந்தோசமான விஷயம் தான? நல்ல தடபுடலான சாப்பாடா செய்யு தாட்சா” என்று சச்சிதானந்தம் கூற,
“ஆமாங்க. வடை பாயாசத்தோட செஞ்சுடுவோம்” என்றபடி தாட்சா எழுந்தார்.
நேரம் ஒருவித இதத்துடனே செல்ல,
சங்கமித்ரா அன்னைக்கு உதவுவதாய் உள்ளே சென்றாள்.
“நீ ஒன்னும் பண்ண வேணாம் சங்கு. அம்மா பாத்துகுறேன். மாப்பிள்ளைக்கும் காரம் போட்டுத் தனியா எடுத்து வச்சுருக்கேன்” என்று தாட்சாயணி கூற,
அதில் புன்னகைத்துக் கொண்டாள்.
மகளின் முகம் வருடியவர், “எப்படி சங்கு அஞ்சு மாசமா கவனிக்காம விட்ட? டாக்டர் கிட்ட நல்லா கேட்டுக்கிட்டீங்க தானேடா? அம்மா என்னடா இப்படிலாம் கேட்குறாளேனு நினைக்காத கண்ணம்மா” என்றார்.
என்ன பதிலாற்ற என்றே புரியாது அவள் விழிக்க,
“அஞ்சு மாசம் தலைக்கூத்தலைனு கூட கவனிக்கலையா நீ?” என்று கேட்டார்.
‘மாத்திரை எடுத்ததுல அது ஒழுங்கா வரலைம்மா. அதனால நான் கவனிக்கலை’ என்று அவள் சைகை செய்து புரியவைக்க,
“இப்படிலாம் விடக்கூடாதுடா கண்ணம்மா. பிள்ளை பிறந்து அடுத்துக்கு மறுபடி ஒழுங்கா வரனும்ல? ஒத்த பிள்ளையோட முடியுற சமாச்சாரமா இது? ஒழுங்கா கவனிச்சுக்கனும். கருப்பையெல்லாம் புள்ளைக்காக மட்டுமில்லடா, நம்ம உடம்புக்கும் ரொம்ப முக்கியம்” என்று கூறினார்.
சரியென்பதாய் அவள் தலையசைக்க,
“இப்ப தொண்டைக்கு நீ ட்ரீட்மென்ட் பாக்கலாமா தொடர்ந்து?” என்று கேட்டார்.
‘பாக்கலாம்னு தான் சொன்னாங்கம்மா. ஒன்னும் பிரச்சினை இல்லையாம்’ என்று அவள் கூற,
“சரி சங்கு. உடம்பை நல்லா பாத்துக்கோ. ஒழுங்கா நிறையா சாப்பிடு சரியா?” என்று கூறினார்.
சரியென்று மீண்டும் அவள் தலையசைக்க, “சரிசரி நீ போய் உட்காரு போ” என்று கூறி அனுப்பி வைத்தார்.
மதிய உணவு வேளை சந்தோஷமாய் கழிய, “இப்ப பாப்பா ட்ராவல் பண்ணலாமாடா?” என்று அவிநாஷ் கேட்டான்.
“அஞ்சு மாசமாச்சுல அண்ணே? புள்ள இருக்குனு தெரியுமுன்னவே அவ அங்க இங்கனு அலஞ்சுட்டுத்தேம் கெடந்தா. இந்தாருக்குற நெல்லைக்கு என்னாவப் போவுது? நாங்காருல வச்சுக்கூட்டியாரேம்” என்று வளவன் கூற,
“நீ எதுக்கும் டாக்டர் கிட்ட கேட்டுகிட்டு எனக்குச் சொல்லுடா” என்று கூறினான்.
பேச்சுக்கள் முடிந்து அனைவரும் வீடு திரும்ப, வீட்டை அவர்கள் அடையும் நேரம், தனத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்த சிலர் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.
வண்டியிலிருந்து இறங்கிய சங்கமித்ரா அவர்களைப் பார்த்து வணக்கம் வைத்து புன்னகைக்க, “வளவேம் பொஞ்சாதியாத்தா?” என்ற பெண்மணி, “நல்லாருக்கியா?” என்றார்.
அவள் ஆமென்று தலையசைக்கவும் தான் அவளது குரலைப் பற்றிய நினைவே வந்தது அவருக்கு. ஏற இறங்க அவர் ஒரு பார்வை பார்க்க, அவரைக் கோபமாய் ஒற்றைப் புருவம் உயர்த்தி ஒரு பார்வை பார்த்தாள்.
அதில் தன் குரலை செறுமிக் கொண்டவர், “ஆளு கொஞ்சம் பூசிணாப்புல தெரியுறியே? மருந்து எடுத்துகிடுறதாலயோ? நாலு நட எதும் கொடுக்கத்தான? இப்புடியே வுட்டா புள்ள உண்டாவுறதுக்கு மருந்து உங்குறதாவும். ஏம் அண்ணே பொண்ணுக்கு இப்புடித்தேம் ஆச்சு. அதேம் ஒனக்கு சொல்லுதேம் தாயி” என்று கூற,
“எம்பொஞ்சாதி மேல ரொம்ப அக்கற போலயே அத்தே” என்றபடி வளவன் அவ்விடம் வந்தான்.
“இல்லியாலே மக்கா. இல்லனா தேவையில்லாது மிண்டுவாவலா? நாம்பாத்துருக்கேம்யா. அதேம் சொல்லுதேம்” என்று அவர் கூற,
“எல்லாந் தெரியுது அத்தே. நாங்க பாத்துகிடுதோம். தனத்த பாத்துட்டீய தான?” என்று மறைமுகமாய் ‘கிளம்புங்க’ என்று கூறுவதாய் கேட்டான்.
“ம்ம் பாத்துட்டேம் சாமி. நான் வாரேம்” என்று அவர் கூற,
விருட்டென்று மித்ரா வீட்டிற்குள் சென்றாள்.
உள்ளே நுழைந்தவள் நேராக மேலே சென்றுவிட,
‘உஃப் என்னா வேகம்.. அநேகமா ஏம்புள்ளையாலத்தேம் எம்பொஞ்சாதி ரோசம் வந்து கோவமெல்லாம் படுதா போல?’ என்று நினைத்து சிரித்துக் கொண்டவனாய் தானும் மேலே சென்றான்.
அறைக்குள் சென்று கோபமே உருவாய் அமர்ந்திருந்தவளைப் பார்த்து சிரித்தபடி வந்தவன், “ஏன்டி பொஞ்சாதி.. என்னவாச்சாம்?” என்று செல்லம் கொஞ்ச,
‘நான் எப்படி இருந்தா அவங்களுக்கு என்னவாம்?’ என்று கோபமாய் சைகை செய்தாள்.
அவளை ரசனையோடு பார்த்தபடி அணைத்துக் கொண்டவன், “இப்பத்தாம்லே நீயு வசதியாருக்க. கட்டிபுடிச்சுக்கிட எம்புட்டு நல்லாருக்குது தெரியுமா? நல்லா புஸ்கு புஸ்குனு இருக்குடி. அவிய வீட்டுக்காரு அப்புடி புடிச்சுக்கலியோ என்னமோ? அதேம் இத என்னமோ எவேம் வூட்டுலயும் நடக்காத சோலியாட்டம் பேசுறாவ” என்று லஜ்ஜையே இன்றி கூறினான்.
வெட்கம் பாதி கோபம் மீதியாய் முறைத்தவள், அவன் கையில் அடிக்க,
அதில் சிரித்துக் கொண்டவன், “ஆரும் என்னமும் சொல்றாவ விடு மித்ரா. புள்ளயிருந்தா அப்புடித்தேம் இருக்கும். இதுலாம் ஒடல் வாகுடி. அது அது மாறுறதுதேம். இன்னும் அஞ்சு வருஷம் போனா எனக்கும் தொப்ப வச்சுப்புடும். முடி நறச்சுப்புடும். ஆரும் வந்து என்னய்யானு கேக்கத்தேம் செய்வாவ. என்ன சொல்ல முடியும்? வயசாயிட்டு அம்புட்டுத்தேம்னு போவ வேண்டியதுதேம்” என்று கூறினான்.
அதில் லேசாய் மனம் இழகியவள், மென்மையாய் இதழ் விரித்து, ‘பெரிய விஷயத்தைக் கூட எப்படி இவ்ளோதானனு ஊதிடுறீங்க? என்னால சத்தியமா அது முடியலை. எனக்கு அதைப்பத்தி புலம்பலைனா ம்ஹும்.. அப்படி எடுத்துக்கவே முடியலை’ என்க,
“இஞ்சாருடி கையில அஞ்சு வெரலே ஒன்னாருக்குறதில்ல. இந்தா அஞ்சு புள்ளைய இருக்கோம் இந்தூட்டுல. அஞ்சு பேரும் ஒன்னாவா இருக்கோம்? ஒவ்வொருத்தரு ஒவ்வொரு மாதிரிக்கு இல்லியா? அப்பத நீயும் நானும் மட்டும் எப்புடி ஒன்னுபோலருப்போம்? ஒனக்கு அதபத்தி கொஞ்ச நேரமாது பொலம்பி இது சிறுசுதேம்னு சொல்லினாதேம் மனசு ஏத்துகிடுது. பொலம்ப நீயிருக்க, கேக்க நாயிருக்கேம். பொறவு என்ன ஒனக்கு? வுடு” என்று கூறினான்.
அவனை அணைத்துக் கொண்டு மீசையை முறுக்கிவிட்டவள், நன்றியாய் நோக்க,
அவள் மூக்கில் முத்தம் வைத்து அவளைக் காதலாய் நோக்கினான்.
ஆழ்ந்த அமைதியான அறை, இருவருக்கும் அவர்களின் அருகாமையை மற்றவர் உணரச் செய்தது. ஒருவருக்கு மற்றவர் கொடுக்கும் இந்த அலாதியான அன்பு இருந்திடும் வரை, வாழ்வில் காதல் என்றுமே ஜீவித்திருக்கும் என்ற உணர்வை அந்த அறையின் நிசப்தம் அழகாய் உணர்த்தியது…
Comments
Post a Comment