திருப்பம்-107
திருப்பம்-107
நெல்லையப்பர் கோவிலிலுக்கு வந்திறங்கிய சங்கமித்ராவைப் பார்த்த வளவன், “ஓகே தான மித்ரா?” என்று கேட்டான்.
இரண்டு மணிநேர பயணம் என்பதால் அவளுக்கு ஏதும் சௌகரியம் குறைபட்டதோ என்று அறியவே அவ்வாறு கேட்டான்.
“ம்ம்..ஓக்..” என்று பேச முயற்சித்தவளுக்கு அதற்குமேல் வரவில்லை.
இருந்தும் அவனுக்கு புரியாமலுமில்லை.
மென்மையான புன்னகையுடன் அவளை ரசித்தவன் அவளுடன் கோவிலுக்குச் சென்றான்.
உள்ளே கோவிலில் அவிநாஷின் குடும்பமும், சச்சிதானந்தம் மற்றும் தாட்சாயணியும் நின்றிருக்க, அவர்களுடன் இவர்களும் ஐக்கியமாகினர். சங்கவியின் முதல் வருட பிறந்தநாள் விழா முடிந்த ஒரு மாதத்திற்குப் பின்பு கோவிலுக்கு முடியிறக்க வந்திருந்தவர்கள், முதலில் சென்று சந்நிதியில் கொளுவிருக்கும் நெல்லையப்பரைத் தரிசித்து வந்தனர்.
“பாப்பா.. ஏதும் சாப்டியாடா? எதும் ஜூஸ் வாங்கிவரவா?” என்று அவிநாஷ் கேட்க,
“அவ்ர்..” என்றவள், ‘குடுத்தாங்க. குடிச்சுட்டுட்டேன்’ என்று சைகை செய்தாள்.
மூன்று மாத பயிற்சி முழுதாய் முடிவடைந்ததில், ஓரளவு வார்த்தைகள் கோர்க்க அவளால் இயன்றது. அதில் குடும்பத்தார் அனைவருக்கும் மகிழ்ச்சியே.
“சரிடாமா” என்றவன் அவளோடு சென்று முதலில் சங்கவிக்கு மொட்டையடித்துக் கூட்டிக் கொண்டு வந்தான்.
குழந்தைக்கு தாய்மாமன் மடியல்லாது சித்தியின் மடியில் அமர்த்தி மொட்டையிட அவன் யோசித்தது சங்கமித்ராவிற்கு அத்தனை சந்தோஷத்தைக் கொடுத்திருந்தது.
மொட்டைப் போட்டுக் கொண்டு குளித்து புத்தாடை உடுத்திய சங்கவி சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்க,
தன்னவனிடம் “பாப்..” என்றவள், ‘பாவம்’ என்று சைகை செய்தாள்.
“பாவந்தேம் மித்ரா. இப்பத சிரிக்கா, கொஞ்ச நேரமாச்சுனா அழுவதேம்” என்று அவன் கூற,
“அதுக்காக பாத்து விட முடியுமா? காது குத்தினாதான அழகழகா கம்மல் போட முடியும்? என்ன தங்கம்?” என்று பேத்தியைச் செல்லம் கொஞ்சியபடி பாமா கூறினார்.
அதில் தம்பதியர் இருவரும் புன்னகைத்துக் கொள்ள, “பாப்பா” என்று அவிநாஷ் அழைத்தான்.
பெண்ணவள் அவனருகே செல்ல,
“உக்காந்துக்கோடா” என்று கூறினான்.
அவளும் கீழே பலகையில் அமர்ந்துக் கொள்ள, குழந்தையை வாங்கி அவள் மடியில் வைத்து எப்படிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று காண்பித்தான்.
அவளும் அவ்வாறு பிடித்துக் கொள்ள, வளவன் புன்னகையுடன் அருகே வந்து நின்றுகொண்டு அனைத்தையும் வேடிக்கைப் பார்த்தான்.
“வளவா நீயும் உக்காந்துக்கோடா. குட்டிமா கைய கால பிடிச்சுக்க. ஆடி பாப்பா வயித்துல இடிச்சுடப் போறா” என்று அவிநாஷ் கூற,
“சரிண்ணே” என்று கூறி தானும் அமர்ந்துகொண்டான்.
“அடியே சங்கு.. புள்ள அழுவுதுனு நீயும் அழுதுட்டு விட்டுடாதடி” என்று சங்கீதா கூற,
அவளை முறைத்தவள், “அத்லாம்..” எனக் கூறி இடவலமாய் தலையசைத்தாள்.
நிமிடங்கள் இனிமையாய் கடக்க, ஆசாரியும் வந்து சேர்ந்தார்.
குழந்தையைப் பக்குவமாய் பிடித்துக் கொண்டவள், “வல்க்காம.. க்..த்துங்” என்று கோர்வையாகக் கூற முயற்சிக்க, வெற்றிகரமாய் அது அவருக்குப் புரிந்து போனது.
“வலிக்காத குத்த முடியுமா தாயி? குத்தினா வலிக்கத்தேம் செய்யும்” என்று கூறியவர், குழந்தைக்குச் செல்லம் கொஞ்சியபடி ஒரு காதில் குத்த, குழந்தை வீரிட்டு அழத் துவங்கினாள்.
தன் கண்களை இறுக மூடிய சங்கமித்ரா குழந்தையையும் இறுக பிடித்துக் கொள்ள, ஆசாரி ஒரு காதில் குத்தி திருகிட்டு முடித்தார்.
“ஒன்ல்ல..” என்று கூறி இடலமாய் தலையாட்டியவள் குழந்தைக்குத் தட்டிக் கொடுக்க,
வலியில் குழந்தை வேகமெடுத்து அழுதாள்.
அதில் தானும் முகம் வாடியவள் தன்னவனை நோக்க,
குழந்தையைத் தூக்கிக் கொண்டு, செல்லம் கொஞ்சி சுற்றி முற்றி விளையாட்டுக்காட்டி கூட்டி வந்தவன், “அழுவயோட அழவையா குத்தி முடிச்சுபுடுங்கண்ணே. மொத்தமா சமாதானஞ் செஞ்சுப்பம்” என்று கூறினார்.
குழந்தை சங்கமித்ரா மடியில் அமர்ந்ததும் திமிர, அவளோடு சேர்ந்து தானும் குழந்தையைப் பிடித்துக் கொண்டான்.
வெற்றிகரமாய் இரண்டாம் காது குத்தி முடிக்க,
“ஏ.. அவ்ளோ தான்டா குட்டிமா.. ஆச்சு ஆச்சு” என்று சங்கீதா குழந்தையைத் தூக்கிக் கொள்ளவும்,
வளவனும் அவிநாஷும் சங்கமித்ரா எழ உதவினர்.
“யாரு குழந்தைனே தெரியலைப்பா” என்று சங்கீதா கேலி செய்ய,
முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டு அழகுக் காட்டியபடி முறைத்தாள் பெண்.
இப்படியான அழகிய பொன் நிகழ்வுகளுடன் இனிதாய் காது குத்தி முடித்தவர்கள் அனைவரும் புறப்பட,
அழுது அழுது உறங்கிய குழந்தைக்கு ஆசைதீர முத்தம் வைத்துவிட்டுப் புறப்பட்டு வந்தாள்.
வண்டியில் ஏறி அமர்ந்ததும் உற்று நோக்கினால் அறியும் வகையில் மெல்லிய மேடாய் இருந்த தன் வயிற்றை வருடியவள், “பாவ்ம்..” என்றாள்.
“பாவந்தேம்.. அதுக்காவப்பாத்து குத்தாதிருக்க முடியுமா?” என்று வளவன் புன்னகையாய் கேட்க,
‘சரிதான்’ என்று தலையசைத்துக் கொண்டாள்.
மீண்டும் இரண்டு மணிநேரப் பயணம் செய்து அவர்கள் வீட்டை வந்து சேர,
பெரும் சோர்வாய் உணர்ந்தவள் சென்று படுத்துக் கொண்டாள்.
வீட்டில் ஒன்றுக்கு மூன்று பெண்கள் கருவுற்றிருப்பதால், வளவனும் விக்ரமுமாக சேர்ந்து யோசித்து, வீட்டு வேலைகளுக்காக கனகா பெண்மணியை நியமித்திருந்தனர்.
சமையல் வேலைகளை தெய்வா பிறர் செய்ய அனுமதிக்காத போதும், சுற்றுக் காரியங்கள் பார்ப்பதற்கு அப்பெண்மணி பெரும் உதவியாக இருந்தார்.
கடந்த ஒருமாதமாய் திரிபுராவின் வருகையே நின்றிருந்தது. கணவனின் சொல்லை மீறி, எங்கே சென்றால் தன் வாய் சும்மாயில்லாது ஏதும் பேசிவிடுவோமோ என்பதற்காகவே பிறந்தகம் செல்வதை குறைத்திருந்தாள்.
ஆச்சரியமான விஷயம் ஏதெனில் தெய்வாவும் மகளை அழைத்து ஏதும் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. இன்னும் சங்கமித்ரா மீது அதிருப்தியும் பிடித்தமின்மையும் இருந்தபோதும் கூட, அவள் தன் மகனின் வாரிசை சுமக்கின்றாள் என்பதற்காகவாவது அமைதி காக்க வேண்டும் என்றும், சுயம்புலிங்கம் கடந்த ஒருமாதமாய் தன்னுடன் சரிவர பேசாதிருப்பதை பழையபடி மாற்ற வேண்டும் என்பதற்காகவும் தன்னைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்றுணர்ந்து அமைதியாக இருந்தார்.
சமையத்தில் அவரையும் மீறி வரும் வார்த்தைகளுக்குப் பின் தன்னையே நொந்துக் கொள்வார். ஆடிய காலும் பாடிய வாயும் அமைதியாக இருக்காது என்பதற்கு இனங்க சமீபமாகத்தான் தாயும் மகளும் அலைபேசியில் சில நிமிடங்கள் பேசிக் கொள்கின்றனர். நேரடியாக இல்லாது மறைமுகமாக தங்கள் அதிருப்திகளை அவர்கள் பகிர்ந்துகொண்டபோதும், சங்கமித்ராவிடம் அவர்களது எந்த சண்டைகளையும் வைத்துக் கொள்ளவில்லை.
அந்த சண்டைக்குப் பிறகு வீட்டில் ஒருவித நிம்மதி சூழத் துவங்கியிருக்கும் உண்மையை மிகுந்த கசப்புடன் அவர்களுமே உணரத் துவங்கியிருந்தனர். என்னதான் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் கூட, அவள் கருவுற்றிருக்கும் காரணத்திற்காக அவளுக்குப் பக்குவம் பார்க்க வேண்டும் என்பது தெய்வா எண்ணம்.
முதலில் தயக்கத்துடன் அவளுக்காக களி கிண்டிக் கொண்டு வந்து அவர் கொடுக்க, அவர் நினைத்ததைப் போல் எந்த எதிர்ப்பும் காட்டாமலே அவள் வாங்கிக் கொண்டாள். அதில் அவரையும் மீறி மனதில் சுருக் என்ற உணர்வு எழவும் செய்தது. தன்னைவிட இத்தனைச் சிறிய பெண்ணுக்கு உள்ள மனம் தனக்கில்லையோ என்ற எண்ணம் அவர் மறுத்தும் இப்படியான உணர்வில் எழவே செய்தது. வளவனும் எதுவும் கூறாது இருக்க, குழந்தைக்காக அவளது உடல் நலம் பேன வேண்டும் என்று கற்பகாலத்திற்கு தேவையான சத்துக்களுடன் பெண்கள் மூவருக்கும் உணவுகள் தயாரித்துக் கொடுக்கும் பொறுப்பைத் தனதாக்கியிருந்தார்.
வீடு வந்து சேர்ந்து, நன்கு உறங்கி எழுந்த சங்கமித்ரா கீழே வர,
தனமும் கார்த்திகாவும் உடன் வந்து அமர்ந்தனர். நான்கே மாதத்தில் கார்த்திகாவிற்குக்கூட ஓரளவு வயிறு எழும்பியிருப்பதை உணர முடிந்தது. ஆனால் சங்கமித்ராவிற்கு சிறிதாகவே தெரிந்தது. வீட்டிற்கு வரும் பொதுவான உறவினர்கள் சிலருக்கு அவளது செய்தி தெரிவிக்கப்பட்டால், ‘வயிறே இல்ல.. ஆறுமாசங்கீய? நல்லா கேட்டுக்கிட்டீயளா?’ என்ற கேள்விகள் வந்து விழுந்தன.
அதனாலேயே யாரிடமும் கூறிக் கொள்ள வேண்டாம் என்று தெய்வா கூறியிருந்தார்.
“ஏட்டி மைணி எப்புடி போச்சு ஓம்புள்ள மொட்ட?” என்று தனம் கேட்க,
“சூப்பரா போச்சு தனம். பாவம் பாப்பா தான் ரொம்ப அழுதுட்டா” என்று பாதி மொழி, பாதி சைகையில் கூறினாள்.
“சரியாபோச்சுட்டி. இந்தா தடுக்கி வுழுந்தா நாலு மாசமோடிரும். பொறவு ஒரு வருசம் கிடுகிடுனு போயிடும். அழுவுதுனு புள்ளைக்குக் காது குத்தாமவுடுவியா?” என்று கார்த்திகா சிரிக்க,
“இல்ல தான்” என்று தலையசைத்தாள்.
அங்கு சென்று வந்த அனுபவங்கள் பற்றிய பேச்சு வார்த்தை மூவரிடமும் ஓட,
திடீரென சங்கமித்ரா வயிற்றில் வலிப்பதைப் போல் உணர்ந்தாள்.
ஏதோ சின்ன வலியாக இருக்கும் என்று அவளும் பொருத்துப் பார்க்க, வலி சற்றே அதிகம் பெறத் துவங்கியது.
லேசாய் தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவள் முகம் சுருக்க,
“ஏட்டி என்ன பண்ணுது?” என்று கார்த்திகா பதட்டமாய் கேட்டாள்.
“லேஸ்..அ..” என்று அவள் முகம் சுருக்க,
“ஏட்டி மைணி.. என்னாச்சுட்டி?” என்று தனமும் பதறினாள்.
“இந்தாயிரு அத்தையக் கூப்பிடுதேம்” என்ற கார்த்தி, “அத்தே” என்று அழைத்தபடி சமையலறைச் செல்ல,
“ஏட்டி வாயும் வயிறுமாருக்கவ என்னத்துக்கு இப்புடி அனக்கத்தக்கூடுறவ?” என்று அவளைக் கடிந்து கொண்டார், தெய்வா.
“அத்தே.. சங்கு வயித்த வலிக்கினு மொகத்தச் சுருக்குறா” என்று கார்த்திகா பதட்டமாய் கூற,
அதற்குள் அங்கு வலி பெருகி, “பெண்ணவளுக்குக் கண்கள் கலங்கிப் போனது.
விரைந்தோடிவந்த தெய்வா, “ஆத்தே.. ஏட்டி என்னத்தப் பண்ணுது?” என்று பதற,
“வலிக்குங்காவ ம்மா” என்று தனம் கூறினாள்.
“ஏ காத்தீ.. மேலுக்கு போயி எவனயும் வாரச்சொல்லிக் கொரலு குடு” என்றவர், “ஏத்தா மெல்ல எழு” என்றார்.
“ஆ.. வ்..வல்க்குத்” என்று அவள் வயிற்றைப் பற்றிக் கொண்டு அழுதுவிட,
“ஒன்னுமில்லத்தா.. மெல்ல எந்தி” என்றபடி அவளைக் கீழே உள்ள அறைக்கு அழைத்துச் சென்றார்.
மேலே வந்த கார்த்திகா, “கொழுந்தரே” என்று அறைக்கதவைத் தட்ட,
உறக்கம் கலைந்து எழுந்த வளவன், “என்னாச்சு மைணி?” என்று கேட்டபடி கதவைத் திறந்தான்.
“கொழுந்தரே.. சங்கு வயித்த வலிக்கினு கரிக்குது கீழ. செத்த வாங்க” என்று கார்த்திகா கூற,
“அச்சுச்சோ.. என்னாச்சு மைணி?” என்று பதட்டமடைந்தவன் கீழே வந்தான்.
கனகா அறைக்குள் எண்ணைக் கின்னத்துடன் செல்ல,
தானும் பதட்டமாய் உள் சென்றான்.
“வண்டியில அம்புட்டுத்தூரம் போய்வாராம என்னங்கேம்?” என்று முனகியபடி எண்ணையை அவளது சூழ் தாங்கிய வயிற்றில் அவர் தேய்த்துவிட,
சங்கமித்ரா அருகே வந்த வளவன், “ஏட்டி என்ன பண்ணுது?” என்று பதட்டமாய் கேட்டான்.
“என்னத்த என்னப் பண்ணுது? ஏம்லே அம்புட்டு தொலவு கூட்டிப்போய் வரனுமாக்கும்? மாசமாருக்கானு அவியத்தேம் ரோசிக்கல. ஒனக்கெங்க போச்சு கூறு?” என்று தெய்வா கத்த,
“ஏம்மா..” என்று ஏதோ கூற வந்தவன் கரத்தை சங்கமித்ரா அழுந்த பிடித்துக் கொண்டாள்.
தன் மனையாளை அவன் நோக்க, கண்களை இறுக்கமாய் மூடியிருந்தவள் மெல்ல இடவலமாய் தலையசைத்தாள்.
அவளது செயலைப் பார்த்த தெய்வா, பின்பு, ‘தனது வாயைக் கட்டுப்படுத்தாமல் பேசிவிட்டோமோ?’ என்று உணர்ந்து தன்னை நொந்துக் கொண்டார்.
“சரி.. கூட்டியோனது போன. எழநி கிழநி வாங்கிக் கொடுத்துக்கூட்டியார என்னம்லே ஒனக்கு? அம்புட்டு நேரம் வண்டில ஒக்காந்து போய் வந்ததுக்கு நல்லா சூடு பிடிச்சுருக்கு” என்று அவர் கடிந்து கொள்ள,
என்ன பதில் கூறுவதென்று புரியாது அவளைப் பார்த்தான்.
நாசி விடைத்து, இதழ் துடிக்க மெல்ல மெல்ல அவள் அழுகையிலிருந்து திரும்பிக் கொண்டிருக்க,
“இப்புடிலாம் ஆவுமுனு தெரியலம்மா” என்றான்.
“என்னத்தவோ போ” என்றவர் எழுந்துகொண்டு, “செத்த அப்புடியே முதுக சாச்சுகிடட்டும். எண்ணை இழுத்ததும் எந்திச்சுக்க சொல்லு” என்று செல்ல,
தன்னவளைப் பார்த்தான்.
பெருமூச்சு இழுத்துவிட்டவள் லேசாய் நகர்ந்து படுக்க,
“என்ன வேணும் மித்ரா?” என்று கேட்டான்.
தன் அருகேயுள்ள இடத்தை அவள் தட்டிக் காட்ட,
அவள் செயல் புரிந்தோனாய் அருகே சரிந்து படுத்தான்.
“வ்விடுங்(விடுங்க)” என்று அவள் கூற,
அவளையே பார்த்தவன் எதுவும் பேசவில்லை.
மெல்ல கண்கள் மலர்ந்து அவனைப் பார்த்தாள்.
கலங்கி மீண்டிருந்த விழிகளில் இன்னும் ஈரம் ஒட்டியிருந்தது.
“ரொம்ப வலிச்சுடுச்சாடி?” என்று மென்மையாய் அவன் கேட்க,
இதழில் மெல்லிய புன்னகையுடன் ஆமென்று தலையசைத்தாள்.
“சத்தியமா இப்புடிலாம் வலிக்குமுனு தெரியாதுடி” என்று அவன் கூற,
இன்னும் புன்னகை நீள, “எக்ஸ்.ரி..ன்ஸ் வே.ம்ல (எக்ஸ்பீரியன்ஸ் வேணும்ல?)” என்று கூறினாள்.
அதில் தானும் சிரித்துவிட்டவன், “குசும்புடி ஒனக்கு” என்று கூற,
லோசாய் திரும்பிப் படுக்க முற்பட்டாள்.
“ஏ..” என்று அவளைத் தடுத்தவன், “எண்ணை வச்சிருக்காவடி. படுக்கயெல்லாம் ஒட்டிக்கிடப் போவுது” என்று கூற,
அதில் அவனை லேசாய் முறைத்தவள், அவனிடம் ஏதோ கூற வந்தாள்.
அவளைக் கரம் நீட்டி தடுத்தவன், “போனா போவுது. உங்கம்மா ஏதோ நாம்பதறவும் பயந்துபோயிதேம் பொலம்பினாவ. அதுக்கெல்லாம் எதும் நா நெனக்கல. அதேம் ஒங்க கையப் புடுச்சுத் தடுத்தேம். அதான சொல்லப்போற?” என்று கூற,
கண்கள் சிமிட்டி புன்னகைத்தான்.
“முன்னயெல்லாம் எங்கம்மா வஞ்சா அஞ்சுவடி. என்னயும் ஏதும் பேசவுட மாட்ட, நீயும் எதும் பேசமாட்ட. ஆனா மனசொடுஞ்சு போயி கரிச்சுட்டு இருப்ப. வெசனமாருக்கும். ஆனா இப்பத நீயு அப்புடியில்லடி. எங்கம்மா எதும் பேசினா நீயு இப்பத கரிக்குறதில்ல. அதுக்கு பதிலு பேசுத. எனக்கு வேறென்ன வேணும்? ஒனக்காவ நீயும் பேசிக்கலயேனுதேம் நாம்பேச வருவேம். ஆனா இப்பத எம்பொஞ்சாதி அப்புடியில்லல? அவளுக்காவ அவ பேசிகிடுதா. அதனால கோவமெல்லாம் படமாட்டேம்” என்று கூறியபடி அவள் சிகை கோதியவன், அவள் ஈர விழிகளில் முத்தமிட்டான்.
அதில் மென்மையாய் அவள் புன்னகைத்துக் கொள்ள, மெல்ல உள்ளே குழந்தை அசைந்தது.
அதில் சிலிர்த்தவள் அவனை நோக்க,
“என்னாச்சுடி? மறுக்கா வலிக்கா?” என்று கேட்டான்.
இடவலமாய் தலையாட்டியவள் தன் வயிற்றை உற்சாகமாய் நோக்க, குழந்தையின் அசைவை அவர்கள் இருவராலும் கண்கூடாய் பார்க்க முடிந்தது.
“ஏ..” என்று துள்ளி எழுந்தவன், “ஏட்டி.. புள்ள உருளுதுடி” என்று உற்சாகமாய் கூற,
தானும் சந்தோஷமாய் ஆமொன்று தலையசைத்தாள்.
அவள் வயிற்றில் தன் கரம் வைத்தவன், அதன் அசைவை கைகளில் உணர, அவன் கைவைத்தப் பகுதியை எட்டி உதைத்தது உள்ளிருந்த குழந்தை.
“பாரேம்.. எட்டி ஒதைக்கியோ?” என்று கேட்டவன் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம்? அதை ரசனையோடு பார்த்தவள் பார்வையெல்லாம் அவன் மீதே.
அவன் குழந்தையின் அசைவை ரசிக்க, அவள் அவன் ரசிக்கும் பாவத்தை ரசித்தாள்.
அசைவு மெல்ல நிற்கவும், “அவ்ளோதானாடி?” என்று அவன் கேட்க,
வாய்விட்டு சிரித்தவள், “அவ்ளோத்ன்” என்றாள்.
முகத்தை அவன் பாவம் போல் வைத்துக் கொள்ள, அவனை ரசனையோடு பார்த்தபடி எழுந்தவள், கைகள் நீட்டி அழைக்க,
குழந்தையை ரசித்துக் கொண்டிருந்தவன் அவள் குழந்தையாய் மாறி அணைத்துக் கொண்டான்.
அவன் கன்னம் வருடி மூக்குடன் மூக்கரசியவள், அவன் விழிகளை ஆழ்ந்து நோக்கியபடி இதழோடு இதழ் பூட்ட, மனையாளின் அணைப்பை ரசித்தபடி, அவள் தொடக்கத்தைத் தன் தொடர்கதையாக்கிக் கொண்டான்…
Comments
Post a Comment