திருப்பம்-108

 திருப்பம்-108



மாதம் ஒன்று கடந்திருந்தது…


சங்கமித்ராவும், வளவனும் மீன் பண்ணையை வெற்றிகரமாய் துவங்கி ஒரு மாத காலம் ஓடியிருந்தது. சங்கமித்ரா கருவுற்றதில் ஒரு மாதம் வேலையை வளவன் நிறுத்தி வைத்திருக்க, சங்கமித்ரா முன் வந்து தன்னால் பார்த்துக்கொள்ள இயலும் என்று கூறி வேலையைத் தொடர வைத்திருந்தாள்.


அதன்படி வேலையைத் தொடர்ந்து, மீன் பண்ணையைத் துவங்கி அவர்கள் எடுத்து நடத்தி ஒருமாத காலம் ஓடியிருந்தது. பண்ணையைப் பார்த்துக்கொள்ள ஆட்கள் நியமிக்கப்படிருந்தனர். அதனில் தன்னுடைய பங்கினையும் சங்கமித்ரா கொடுத்துக் கொண்டிருந்தாள்.


‘மாசமாருக்குற நேரம் இதுலாம் தேவையா? மீனு வாடா ஆவுமா இப்பத?’ என்று தெய்வா தனது அதிருப்தியை வெளிப்படுத்த,


‘என்னால முடியும்னு தான் துவங்கிருக்கேன்’ என்பதோடு முடித்துக் கொண்டாள்.


கணவரின் பார்வையில் அவளை மேலும் ஏதும் கேட்கவும் முடியாமல் தெய்வா தனது மகளுக்கு அழைத்துப் புலம்ப, அவளும் அன்னைக்கு ஆறுதலாய் பேசி வைத்துவிட்டாள். இரண்டு பெண்மணிகளுக்கும் ஒருவர் மாற்றி மற்றவர் புலம்பிக் கொள்வதில் அவர்களின் பிறவி குணத்திற்கு ஒரு ஆறுதல் கிட்டியதாய் எண்ணம்…


மீன் பண்ணையில் கணக்கு வழக்கு, விற்பனை, உற்பத்தி, மீன் பராமரிப்பு போன்றவற்றை சரிபார்த்த சங்கமித்ரா, தனது வேலைகளை முடித்துக் கொண்டு, அங்கு வேலை செய்யும் பெண்மணிகளையும் அழைத்து வேலை குறித்து பேசினாள்.


அவர்களின் நிறைகுறைகளையும் கேட்டு குறித்துக் கொண்டவள், அதையும் சீர் செய்வதற்கான ஆயத்தங்களைச் செய்தாள்.


மாலை நேரம் நெருங்கவும் அவள் வெளியே வர,


“என்னத்தா பண்ணக்காரி.. சோலியெல்லாம் எப்புடிப் போவுது?” என்று கேட்டபடி மகா வந்தான்.


“வாங்..க அண்..அ” என்று அவள் புன்னகையாய் கூற,


“புள்ளைய பள்ளிகூடத்துல கூட படிக்குறவியட்ட நெத்திலி வாங்கி தின்றுக்கானுவ. ருசி புடிச்சுப் போயிடுச்சுனு தீபிய கேட்டுகிட்டேருந்தானுவ. அவதேம் மீனு செஞ்சே பழக்கப்படலைனு சொன்னா. சரி மறுக்கா மறுக்கா கேக்கானுவளேனுதேம் வாங்கியாங்க யூடியூபப் பாத்து செஞ்சுடுவம்முன்னா.. இப்பத்தேம் நம்மட்டயே மீன் பண்ண இருக்குல்ல? அதேம் இங்கனயே வந்துப்டேம். எம்புட்டுத்தா?” என்று மகா கேட்க,


புன்னகையாய் தொகையைக் கூறி பெற்றுக் கொண்டு மீனையும் வழங்கினாள்.


“நீயு இன்னும் வூட்டுக்குப் போவலியா சங்கு?” என்று மகா கேட்க,


“இனித்தா..ன் அவ்.ங்..ளுக்கு கூப்..னும்” என்றாள்.


“என்னத்துக்குத்தா கூப்டுகிட்டு. வா நாந்தேம் போறேம்ல? ஒரு சோலியா வெளியூரு போயி வந்ததால காருலதேம் வந்தேம். நானே கூட்டிப்போறேம் வா” என்று மகா அழைக்க,


புன்னகையாய் அவனுடனே புறப்பட்டாள்.


பாடல்களும் பேச்சுமாய் பயணம் முடிந்து அவர்கள் வீட்டை அடையவும், மகா வீட்டின் உள்வரை அவளைக் கூட்டிவர, அவ்வீட்டில் ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருந்தது.


“ஏழாம் மாசமே வளபூட்டு வச்சுகிடுவமே ஐயா. ஒம்பதுலாம் ஆச்சுனா அவோளுக்கு செரமமா இருக்கும்ல?” என்று வளவன் கூற,


தன் மனைவியை ஒரு பார்வை பார்த்துக் கொண்ட சுயம்புலிங்கம், “நீ சொல்லுறதுஞ் சரிதாம்லே.. ஆனா புள்ளைக்கு இன்னுமே வயிரே வெக்கல. ஏழுமாசமாச்சே வயிறேக்காணுமுனு வீட்டுக்கு வாரவோ போரவோளே கேக்காவ. வளைபூட்டுல வாரவிய எல்லாம் கேப்பாவ. அச்சாணியமாருக்குமுனு யோசிக்கேம்” என்று கூறினார்.


அவர் சொல்லும்போதே அது தனது அன்னையின் கருத்துதான் என்று வளவனால் புரிந்துகொள்ள முடிந்தது.


“ஐயா இதுலாம் நம்புதீயளா? ஆரும் தப்பா நெனச்சாவன்னா அது அவியளுக்குத்தேம் விடியும் ஐயா” என்று வளவன் கூற,


“இல்லய்யா.. எனக்குமே வெசனமாத்தேம் படுது இது. புள்ளயே பட்டு தடுக்கி வந்துருச்சு. இன்னும் ஓஞ்ச பாடு இல்ல. ஆரு கண்ணும் படாதபடிக்கு வச்சுகிடுவம்னுதேம் படுது எனக்கும்” என்று சுயம்புலிங்கம் கூறினார்.


உள்ளே வந்த மகா வளவன் அருகே அமர்ந்துகொள்ள, பெண்ணவள் சென்று கொள்ளையில் முகம் கை கால் கழுவி, மாமியார் தயார் நிலையில் வைத்திருந்த பழச்சாறுடன் வந்து வாதத்தை வேடிக்கைப் பார்த்தாள்.


“ஏட்டி ஒன்னயவச்சுத்தேம் அங்கன பேச்சு ஓடுது. நீயு என்னத்த உறிஞ்சுகிட்டு இருக்கவ?” என்று கேட்டபடி தனம் வந்து அமர,


“உன் ப்..ள்ள (பிள்ளை) தூங்..டானா?” என்று கேட்டாள்.


ஆம்! தனத்திற்கு கடந்த வாரம் தான் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்திருந்தது. பிரசவ அறையில் தனம் பதறி அழுதாளோ இல்லையோ? வடிவேல் அழுது ஆர்ப்பாட்டம் செய்து இல்லாத கலாட்டாவெல்லாம் செய்தது தனி கதை. 


“ஆத்தாடி.. ஏம்டி மைணி அவேன நெனவு செய்யுத? நானு உஸ்ஸுனு ஒக்காருரது ஒனக்கு பொருக்கலயா?” என்று தனம் பதறினாள்.


அதில் கிளுக்கென்று அவள் சிரிக்க, இங்கு விவாதித்துக் கொண்டிருந்தோர் அவளைப் பார்த்தனர்.


அவர்கள் பார்வைத் தன் புறம் திரும்பவும் அவள் திருதிருவென விழிக்க, 


‘சிரிடி.. நாதேம் ஒனக்காவ வாதம் செஞ்சே ஓடா தேயுறேம்’ என்று செல்லமாய் அவளை மனதோடு திட்டிக் கொண்டு தந்தை புறம் திரும்பினான், வளவன்.


“ஆட்டும்யா சாமி. ஒம்பதாது மாசத்துலயே பண்ணிகிடுவம். வூட்டுலத்தான செய்யப் போறியோம்? புள்ளைக்கு சங்கடமில்லாதபடிக்கு செஞ்சுடலாம்” என்று சுயம்புலிங்கம் கூற,


“மாமா சொல்லுறதும் நாயமாதாம்லே படுது. கல்லடி பட்டாலும் தகும். கண்ணடி பட்டா செரமமுல்லே. என்னத்துக்கு வீணா வம்பு வாங்கிகிட்டு. நீ என்னமும் சலம்பாம ஒம்பதாது மாசமே வையு” என்று மகா கூறினான்.


“சரி அத்தான்” என்று வளவனும் ஒருமனதாய் ஒப்புக்கொள்ள,


“ஏழா மாசமே வச்சு அனுப்பிவுட்டுபுடலாம்னு பாக்கியோ?” என்று மகா கேலியில் இறங்கினான்.


“அட ஏம் அத்தான் நீங்க?” என்று பதறியவன் மனையாளைப் பார்க்க,


கோபம் போல் முகத்தை வைத்துக் கொண்டு, ‘அப்படியா?’ என்று பார்த்தாள்.


‘அய்யோ இல்ல தங்கம்’ என்பதாய் அவன் தலையசைக்க,


“ஏட்டி மைணி இதேம் கண்பாஷையாக்கும்? எங்கண்ணேன மெரட்டுத?” என்று தனம் அவள் காதருகே கேட்டாள்.


அதில் லேசாய் சிரித்தபடி அவள் கண்ணடிக்க,


‘ஆத்தா’ என்று வாயில் கை வைத்து ஆச்சரியம் கொண்டவள், “தேரிட்டடி மைணி” என்று கூறினாள்.


பேச்சுக்கள் ஓய்ந்து மாலை நேரம் தேநீர் அருந்திவிட்டு அனைவரும் இளைப்பாற,


சங்கமித்ரா வளவனது அலைபேசிக்கு, ‘வாக்கிங் போலாமா?’ என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.


அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவன் அக்குறுஞ்செய்தி வரவும் இதழ் கடையோரம் வளைய, குறும்பாய் சிரித்துக் கொண்டு, அவளை நோக்கினான்.


சிறு புன்னகையுடன் எழுந்தவன், “ஏட்டி மித்ரா.. வா கொஞ்சம் நடந்துட்டு வருவம்” என்று அழைக்க,


அவளும் அவனோடு உற்சாகமாய் எழுந்து சென்றாள்.


அமைதியான தார் சாலையில் நடந்தபடி வயல் வரப்பிற்கு அவர்கள் செல்ல,


பயணம் கொட்டகையில் நின்றது.


“ம்..ம..ர்..து” என்று அவள் திக்கித் திணறி மருதுவை அழைத்து விட, உள்ளிருந்து துள்ளிக் கொண்டு வந்தான், மருது.


உடன் முனியன், கருப்பன், சுடலை, நந்தி, அம்சா, லச்சு, திலகா என்று ஒவ்வொருவராய் வர,


திண்டில் அமர்ந்துகொண்டு, மருதை தடவிக் கொடுத்தபடி சுற்றத்தை ரசித்தாள்.


“மேடம் காரணமில்லாது அழைக்க மாட்டீயளே? என்னவாம்?” என்று வளவன் கேட்க,


“இர்.க்கி கட்டிக்னும் போல..ருக்கு” என்று வார்த்தைகளை எழுத்துக்களாய் கோர்த்துக் கூறினாள்.


அவளை நெருங்கி அமர்ந்து அணைத்துக் கொண்டு உச்சியில் இதழ் பதித்தவன், “ஆச வந்தா ஒடனே செஞ்சுடனும்” என்று கூற,


குறும்பு பார்வையுடன் கிளுக்கிச் சிரித்தாள்.


“ஏட்டி.. ஓஞ்சிரிப்பே சரியில்ல. அதுக்குனு கூடத்துல அம்பூட்டு பேரு முன்னுக்கக் குடுத்துபுடாத. எனக்கு வெக்கமா போயிடும்” என்று பாவம் போல் அவன் கூற,


அதில் வாய்விட்டு சிரித்தாள்.


அவள் சிரிப்பை அவன் ரசித்து நோக்க, நந்தி வந்து அவனை முட்டிக் கொண்டு கீழே அமர்ந்தான்.


“பயலுக்கு பொறாமைய பாத்தியாடி?” என்றபடி நந்தியை அவன் தட்டிக் கொடுக்க,


“என்..கு மீன் கொ-ழபு வேண்உம்” என்று கூறினாள்.


“அதான பாத்தேம். நீயு வாக்கிங்குனு கூப்புட்டாளே, ஆத்தாளும் புள்ளையும் என்னமோ உங்கக் கேக்கப் போறீயனுதேம் அர்த்தம்” என்று கூறி சிரித்தவன், “நாள செஞ்சு தரலாமா இல்ல இன்னிக்கேதேம் வேணுமா?” என்று கேட்டான்.


‘நாளைக்கு’ என்று அவள் கண்ஜாடையில் கூற,


புன்னகையாய் ஒப்புக் கொண்டான்.


மறுநாள் காலை துண்டினால் தலைபாகையைக் கட்டிக் கொண்டு சமையலறையை அவன் உருட்டிக் கொண்டிருக்க,


“லேய்.. சாவடிக்காதடா. நாயெல்லாம் ரெண்டு பழம்பொறிச்சிய வாங்கியாந்து தந்து முடிச்சுபுடுவேம். என்னய கூப்டுவச்சு மீன் கொழம்பு ஆக்க படுத்துறியேடா” என்று விக்ரம் புலம்பிக் கொண்டிருந்தான்.


“சும்மா சலம்பாதடா.. எம்பொஞ்சாதியும் புள்ளையும் ஆசப்பட்டுட்டாவல்ல?” என்று வளவன் கூற,


“அதுக்கு நீயு செய்யுலே. ஏம் என்னைய படுத்துற?” என்று கேட்டான்.


“அய்யோ.. சும்மா அறுப்பாத அந்த மசாலாவ அறைச்சு கொண்டா” என்று வளவன் கூற,


காலை சமையலை முடித்து கோவிலுக்குச் சென்று திரும்பியிருந்த தெய்வா, “என்னம்லே பண்றீய மக்கா ரெண்டேரும்?” என்று கேட்டார்.


“வாசத்தப் பாத்தா தெரியிலியாம்மா? மீன் கொழம்புதேம்” என்று விக்ரம் கூற,


‘மீன் குழம்பு’ என்றதுமே அது யாருக்கானதென்று புரிந்துபோனது அவருக்கு.


“கொழம்பாக்க ரெண்டேரும் வந்துட்டீயளாக்கும்?” என்ற தெய்வா, “போங்க நானே ஆக்கிக் கொண்டாரேம்” என்க,


“வேணாம்மா” என்று வளவன் உடனே மறுத்துவிட்டான்.


“ஐயா சாமி.. மீன் கொழம்பு ஆக்காதவதேம். அதுக்காவ செய்யத் தெரியாமயில்ல” என்று அவர் கூற,


“வேணாம்மா. பொறவு ஓம்பொண்டாடிட்டு காலாட்டிகிட்டு ஒக்காந்து திங்க நா ஆக்கிப்போட்டனுல்லம்பீய? என்னத்துக்கு? அவோ எங்கிட்டத்தேம் கேட்டா. நானே செஞ்சுகிடுதேம்” என்று பட்டென்றே கூறியிருந்தான்.


பலமுறை அவர் கூறிய வார்த்தைகள் தான். ஆனால் மகன் கூறிக் கேட்க அத்தனை கசப்பாக இருந்தது. அதனை ஏற்கவும் முடியாமல், பதிலும் பேச இயலாமல் அவர் சென்றுவிட, “ஏம்லே?” என்று விக்ரம் கேட்டான்.


“செலதயெல்லாம் மறக்க வரலலே எனக்கு. அம்மாதேம்.. அதுக்காவ என்னமும் பேசுங்க கேக்கேம்னு சொல்ல முடியுமா? வெசனமாதேம் இருக்குது. ஆனா செஞ்சுட்டு இப்புடியும் சொல்லுவாவதான? என்னத்துக்கு அந்த பேருங்கேம்? நானே செஞ்சு குடுத்துப்பேம்” என்று அதுவரை தீவிரமாக பேசியவன், “அதேம் நீயும் செய்யுதயில்ல? பொறவு என்ன?” என்று சிரிக்க,


‘பாவி மக்கா’ என்று நொந்துக் கொண்ட போதும் தம்பிக்கு உதவி செய்தான்.


இருவரும் ஒருவழியாய் மீன் குழம்பை செய்து முடித்திட,


சுடசுட சோற்றில் குழம்பையும் நல்லெண்ணையும் ஊற்றி எடுத்துக் கொண்டு ஆர்வமாய் அவர்கள் அறைக்குச் சென்றான்.


தினமெல்லாம் சமைத்துக் கொடுப்பதற்கில்லை. ஆனால் அறிதாய் இப்படி ஆசையோடு கேட்ட உணவை, காதலோடு செய்து கொண்டுவந்து ஊட்டுவதில் தான் எத்தனை சுகம்?


அறைக்குள் வந்தவன், அவள் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை ஓரம் வைத்துவிட்டு, சோற்றை ஊதி பிசைந்து எடுத்து ஊட்ட,


ஒரு வாய் உணவு வாயில் போனதும், கண்கள் மூடி, “ம்ம்..” என்று அதன் ருசியை உணர்ந்து சுவைத்தாள்.


அவள் ருசித்து உண்பதை ரசித்துப் பார்ப்பதில் அவனுக்கு அப்படியொரு நிறைவு.


பிள்ளை ஆசையாய் கேட்டதை செய்து கொடுத்து மகிழ்ந்த தாயின் அன்பு அவன் கண்களில்.


‘சூப்பர்’ என்பதைப் போல் அபிநயம் பிடித்தவள், அவன் மொத்த உணவையும் ஊட்டி முடிக்கும் வரை, உண்ணும் ஒவ்வொரு வாயிற்கும் ருசித்து ருசித்து அபிநயம் காட்டிக் கொண்டிருந்தாள்.


“சந்தோசமா?” என்று அவன் கேட்க,


“ர்..ரொ..ம்..ப” என்று கூறி அவனை கட்டிக் கொண்டவள், அவனைக் கண்டாள்.


‘நீ போதாதா என் வாழ்வு சிறக்க?’ என்ற வாக்கியம் அதில் தொக்கி நின்றது.


அவள் உச்சியில் இதழ் பதித்தவன், “திருமாலுக்கும் மித்ரா போதும். மித்ராக்கும் திருமாலு போதும்” என்க,


குழந்தை அவள் வயிற்றில் எட்டி உதைத்தான்.


“ஆ..” என்றவள் கணவனை ‘உதைக்குறான்’ என்ற கண்ஜாடையோடு பார்க்க,


“சரி சரி கோச்சுக்காதீய பெரியவரே.. திருமாலுக்கு மித்ராவும், மித்ராவுக்கு திருமாலும் போதுந்தேம். ஆனா திருமால்-மித்ராக்கு புள்ள குட்டிக வேணும்” என்று கூறினான்.


தன்னவனை காதலாய் பார்த்தவள், அகமும் வயிறும் நிறைந்திருக்க, குழந்தையும் வளவன் கூறியதை ஒப்புக்கொண்டதாய் அசைந்து அவர்கள் இருவரையும் மகிழ்வித்தது.





Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02