திருப்பம்-109

 திருப்பம்-109



“ஏட்டி ஒன்னய ஆரு இதெல்லாம் எடுத்தார சொன்னாவ? எங்க ஓம் புருஷேம்? லேய் மக்கா.. விக்ரமா.. எங்கனலே இருக்க?” என்று கார்த்திகாவிடமிருந்து தாம்பூலத் தட்டை வாங்கிய தெய்வா, மகனை அழைக்க,


“அய்ய வாரேம்மா” என்றபடி தனது வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவ்விடம் வந்தான்.


“அப்பா தூக்கு அப்பா தூக்கு” என்று சுடர் கைகளை நீட்டி தந்தையை நிறுத்த,


“வந்துபுடுவா அப்புடியே.. எனக்கு நீங்க ஒன்னு செஞ்சுடக்கூடாது. பொருக்காத ஓடி வந்துபுடுவா” என்று கார்த்திகா கோபமாய் முனகினாள்.


“புள்ளைய அறுப்பாதடி” என்றவன், சுடரைத் தூக்கிக் கொண்டு வந்து, தட்டையும் வாங்கிக் கொள்ள,


“லேய் தட்டு கணமாருக்குதுலே. புள்ளைய எறக்கிட்டு வாங்கிக்க” என்று தெய்வா கூறினார்.


“பாத்தீ.. அப்பா ஸ்டிராங். அம்மாவே தூக்கியா” என்று மழலை மொழியில் குழந்தை கூறிய செய்தியில் தம்பதியர் இருவரும் அரண்டு போய் தெய்வாவைப் பார்க்க,


“புள்ளைய வச்சுக்கிட்டாலே செய்வீய இதெல்லாம்?” என்று தலையில் அடித்துக் கொண்டு சென்றார்.


“ஏட்டி.. இதுலாமா பேசுவாவ?” என்று கார்த்திகா மகளைக் கடிந்து கொள்ள, அவள் தந்தையைக் கழுத்தோடு கட்டிக் கொண்டாள்.


“புள்ளைய அறுப்பாதடி.. அவோளுக்கு என்ன தெரியும்?” என்று விக்ரம் கூற,


“மவளையே தூக்கி வச்சுகிட்டு ஆடுங்க” என்று கூறினான்.


“அவோள தூக்கினதுல இல்லட்டி.. ஒன்னய தூக்கினேம்ல? அதுலதேம் இப்பத பிரச்சினையே” என்று அவன் சிரிக்க,


“நாலு பேரு முன்னுக்க சொல்லி மானத்த வாங்கப்போறா.. அப்பத என்னயவிட நீங்கதேம் வெக்கப்பட போறீய” என்று நொடித்துக் கொண்டு சென்றாள்.


அவ்விடம் வந்து “எட்டி.. இந்த தனத்த என்ன இன்னும் ஆளக்காங்கல?” என்று தீபிகா கேட்க,


“அய்யோ பாவம் மைணி. நைட்டெல்லாம் அவ புள்ள மகேந்தரன் அழுது அழுதே தூங்கவுடல. புள்ளயும் அழுவாத கொறையா போட்டு தட்டி தட்டி ரெண்டேரும் இப்பத்தேம் படுத்துருக்காவ” என்று கார்த்திகா கூறினாள்.


பிறந்து பத்து நாட்களில், சுற்றத்தாரையெல்லாம் அழைத்து வீட்டிலேயே தனலட்சுமி மற்றும் வடிவேலுவின் மகனுக்கு, வீர மகேந்திரன் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர் அனைவரும். குழந்தைக்கு மூன்று மாதம் முடிந்த பின்பாக புகுந்தவீடு அனுப்பிவைப்பதாக தனத்தின் பெற்றோர் கூற, தனலட்சுமியும் கேட்டுக் கொண்டதால் இன்னும் மூன்று மாதங்கள் மனைவியுடனான தற்காலிகப் பிரிவிற்கு ஒப்புக் கொண்டிருந்தான்.


இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் நேரம், சோம்பல் முறித்தபடி தனத்தின் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தான், வடிவேல்.


அவனை பெண்கள் இருவரும் ஆச்சரியமாய் பார்க்க,


“லேய் நீ எப்படா வந்த?” என்று கேட்டபடி விக்ரம் அவ்விடம் வந்தான்.


மற்றொரு அறையிலிருந்து சுந்தராம்பாளும் முழுதாய் விங்சேஷத்திற்குத் தயாரான நிலையில் வந்து, “லேய் மக்கா இன்னும் கெளம்பலியாக்கும்? போய் தயாராயி சோலி பாருலே” என்றுவிட்டு சென்றார்.


“எப்பம்லே வந்தீய நீயும் அத்தையும்?” என்று தீபிகா கேட்க,


“அத ஏம்மைணி கேக்கீய. எம்புள்ள அழுதாம்னு எம்பொண்டாட்டி அர்த்த சாமத்துக்கு அழச்சு கரிச்சுக்கிட்டே தூக்கமாவருதுனுட்டா. விசேஷமுனு அத்தையும் அவகூட நேத்து படுத்திடலையில்ல? இவேம் அனத்திகிட்டே இருந்துருக்கியாம். சரினுட்டு கெளம்பிட்டேம். பொறவு அம்மாவ மட்டும் என்னத்துக்கு தனியாவுட்டுகிட்டூனு அவியளயும் பொட்டிய கட்டச்சொல்லி ரெண்டர மூனு போல வந்தோம்” என்று கூறினான்.


“ஏ காத்தீ.. நீயு ஏந்தங்கச்சியோட ரொம்ப ஒட்டிகிடாதட்டி.. கெட்டுப்போயிடுவ. ஏம்மச்சான போலயெல்லாம் வார தூரத்துலயும் ஓம் அம்மா வூடு இல்ல” என்று விக்ரமன் கூற,


“மொத ஒங்கம்மா என்னைய ரெண்டா பிரசவத்துக்கு எங்கம்மை வீட்டுக்கு அனுப்புறாவளானு பாப்போம்” என்று நொடித்துக் கொண்டபடி சென்றாள்.


அதில் வாய்விட்டு சிரித்த தீபிகா, “திரியக்கா வாராவதான?” என்று கேட்க,


“வளவேம் நேருல போயி வந்தே ஆவனுமுனு அண்ணேட்ட ரொம்ப கேட்டுருக்கியாம். ஆதுலாம் கண்டிப்பா வருவமுனு சொல்லிருக்காவ” என்று வடிவேல் கூறினான்.


“ஆள காங்கலயே.. நேரத்துக்கு சரியா வந்துட்டுப் போவப்போறா போல” என்று தீபிகா கூற,


“இருக்கும் போலக்கா. சரி ஓம் வூட்டுக்கார காங்கலயே. அத்தான எங்க?” என்று கேட்டான்.


“புள்ளையல பத்திட்டு வரவேணாமாக்கும்? வருவாவ வருவாவ” என்று தீபிகா கூற,


சங்கமித்ராவின் பெற்றோரும் அவிநாஷின் குடும்பமும் அவ்விடம் வந்தனர்.


“ஏ கவி கண்ணு” என்று உற்சாகமாய் அழைத்தபடி வந்த தீபிகா, சங்கவியைத் தூக்கி முத்தம் கொஞ்சி, “ஏம் சர்விசுலயே ஆரு தூக்கினாலும் சிரிச்சாப்புல போற புள்ளைய இப்பத்தேம் பாக்கேம் சங்கி” என்று கூறி, “வாங்க அத்தே வாங்க மாமா. அம்மா ஐயா.. எல்லாம் உள்ள வாங்க” என்று அனைவரையும் வரவேற்றாள்.


கொண்டு வந்த சீருடன் அவர்கள் அனைவரும் உள்ளே வர, வீடே விழா கோலம் பூண்டது. ஆம்! சங்கமித்ராவின் வளைகாப்பு வைபோகமே அது…


மாடியில் சங்குப்பூ செடிக்கு நீர் ஊற்றி அதனை வருடியவள் இதழ்கள் அழகாய் புன்னகைக்க, 


“ஏட்டி மித்ரா.. நேரமாவுதுல? வா” என்று அழைத்தான் வளவன்.


“வ..வ..வரேன் மி.. மிஸ்டர் திருமால்” என்றபடி அவள் உள்ளே வர,


தேர்போல் நடந்துவருபவள் நடையை புன்னகையுடன் பார்த்தான்.


மயில் கழுத்து நிறத்தில், அடர் ஊதா நிற கரையும், தங்க ஜரிகைகளும் கொண்ட புடவையை அவள் உடுத்தியிருக்க, மண்டியிட்டு அமர்ந்து அவள் மடிப்புகளை சீர் செய்தான்.


“தி..திருமால மித்..து கால்ல விழ வ.. வச்சுட்டேனா?” என்று அவள் சிரிக்க,


“மித்து காலுல விழ திருமாலுக்கு என்னவாம்? கால புடிக்குறதும் காலுல விழுறதும் கட்டிப்புடிக்குறதும், கடிச்சுவெக்குறதும் நமக்குள்ள புதுசாக்கும்?” என்று கேட்டான்.


அதில் அவள் கலுக்கென்று சிரிக்க, சென்று நகைகளை எடுத்துவந்து அணிவித்தான்.


தெய்வா நிறைய நகைகளைக் கொண்டு வந்து கொடுத்திருக்க, ‘மாசம் ஒம்பதாச்சு. அவளுக்கு இம்புட்டும் போட முடியாதும்மா. அளவாதேம் போடுவேம். வேணுமின்னே செய்யுறோமுனு வெசனப்பட்டுக்காதீய’ என்று அவரிடமே கூறியிருந்தான்.


மனைவிக்கு அளவான நகைகளைப் பூட்டி, அவள் பின்னலிட்டிருந்த தலையில் முந்தையநாள், தங்கள் வீட்டில் பூத்த கனகாம்பரங்களையெல்லாம் கொண்டு தொடுத்த ஒரு முலம் பூவைச் சூட்டினான்.


அவளது சின்ன பின்னலுக்கு அதுவே போதுமானதாய் இருந்தது.


பெண்ணவள் தயாராகி முடிக்க, ரசனையோடு பார்த்தவன், அவளை அணைத்துக் கொண்டு கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான்.


நாணத்தின் சிகப்பு இரண்டு கன்னங்களிலும் அப்பிக் கொள்ள,


“ம்ம்.‌. என்னமோ கொரையாவுதேனு பாத்தேம். இப்பததேம் சரியாருக்கு” என்று அவள் கன்னங்களைக் கில்லி கூறினான்.


“க்..கொழுப்புத்தான?” என்று அவள் கேட்க,


“ஒனக்குத்தான?” என்று தன் கைகளைத் தேய்த்தபடி கூறி அவளை மேலும் கீழுமாய் பார்த்தான்.


அந்த பார்வை சொல்லிய கதைகளில் இன்னும் நாணியவள், “ப்ச்” என்க,


வாய்விட்டு சிரித்தவன், “அள்ளுறடி தங்கம்” என்று கூறி, சென்று தானும் தயாராகினான்.


அவளைத் தயார் செய்கின்றேன் என்று வந்த தீபிகாவை கீழே உள்ள வேலையைப் பார்க்கும்படி கூறி அனுப்பிவிட்டுத் தன் ஆசைதீர, தானே தயார் செய்தவன், தங்கத் தேர்போல நடந்தவளைப் பாந்தமாய் பிடித்துக் கொண்டு கீழே கூட்டிவந்தான்.


“அடடே.. சங்கு ரெடியா?” என்று தீபிகா கேட்க,


அவள் உற்சாகமாய் தலையசைத்தாள்.


“அ..அப்பா..அம்..மா வாங்க” என்றவள், “அத்..தான்” என்று அவனிடம் செல்ல,


“பாப்பா” என்று அவள் தலைகோதியவன், “அழகாருக்கடா பாப்பா” என்றான்.


தாய்மையின் எழில் அவள் முகத்தில் அத்தனை பிரகாசமாய் எதிரொலித்தது.


உடல் பூசி, கொஞ்சம் போல் சோர்வின் சாயலுடன், லேசாய் மேடுதட்டித் தெரிந்த சூழ் தாங்கிய வயிற்றைப் பிடித்துக் கொண்டு, கால்களை வலைத்தபடி தத்தை நடையிட்டு கற்பகாலத்திற்கே உரிய அம்சங்களில் அத்தனை அம்சமாய் இருந்தாள்.


அழகில்லை என்று கூறப்படும் அனைத்தும் கூட, அற்புதங்களாய் மாறிப்போகும் விந்தையல்லவா இந்தத் தாய்மை?!


“சங்குமா‌.. அம்சமா இருக்க போ” என்று தனது தங்கைக்கு திருஷ்டி எடுத்த சங்கீதா, அவளை மற்ற பெண்மணிகளுடன் சேர்ந்து அழைத்துச் சென்றாள்.


நிமிடங்கள் அழகாய் நகர, “அப்றம் மாப்ளா.. நீயும் என்னயபோல கூடியச் சீக்குரத்துல புள்ளையுங் கையுமாருக்குறத பாக்கத்தாம்லே ஆர்வமாருக்கேம்” என்று வடிவேல் தன் மகனைத் தோளில் போட்டுத் தட்டியபடியே கூற,


“ஒன்னய பாத்துதாம்லே எங்க எல்லாத்துக்குமே பயமாருக்குது. எங்க பொண்டாட்டியல எல்லாம் ஓம்பொண்டாட்டிகூட சேரவே வுடக்கூடாது போலாருக்கு” என்று மகா கூறினான்.


“அண்ணே.. சும்மாலாம் சொல்லாதீய.. நா வெளிப்படயா தூக்கிட்டு சுத்துதேம்.. நீங்கள்லாம் வூட்டுக்குள்ளக்க புள்ளைக்கும் பொஞ்சாதிக்கும் பணிவிட செஞ்சு பட்டுச்சேல தொவச்சுப்போட்டுட்டு இங்கன எங்கிட்ட வந்து பந்தோஸ்தா நிக்கீய. இல்லனுதேம் சொல்லுவ பாப்பம்” என்று வடிவேல் கூற,


“மானத்த வாங்காதலே” என்று மகா கூறினான்.


அனைவரும் கலகலவென்று சிரிக்க,


“பத்துத் தேச்சு போடுறதெல்லாம் பொஞ்சாதிய. புள்ளைய பாத்துகிட மட்டும் கசக்கோ?” என்றபடி தனம் அவ்விடம் வர,


“இஞ்சாருடி.. இங்கனருக்க வேற பொம்பளய ஆருவேனா அத சொல்லட்டும். நீயு மட்டுஞ் சொல்லாத. கட்டிகிட்டு வந்து மூனு மாசம் ஆக்கிப்போட்ட. பொறவு முழுகாமருக்கேம்னு எஸ்ஸாயிபுட்ட. ஒனக்கு மேல எங்கம்மையு. மருமவள நோவ வைக்காதடானு சொல்லியே என்னியுஞ் சோலி பாக்க வச்சுட்டாவ. ஏழு மாசம் பொறவு அம்மைவீட்டுக்கூனு வந்துட்ட. இன்னும் வூட்டுப் பக்கம் வார காணும். இதுல புள்ள அழுவுதுனு அர்த்த ராத்திரிக்கு அழப்பு வேற” என்று கூறினான்.


“மச்சான் ரொம்ப அடிவாங்கிருக்கியான் போலலே. ஆதங்கம் அருவியா கொட்டுது” என்று விக்ரம் வளவன் காதில் கிசுகிசுக்க,


“என்ன செய்ய? கட்டிக்குடுத்தது நம்ம தங்கச்சியவாச்சே.. அவேனுக்கு சப்போர்ட் பண்ணி இந்த ராங்கிய ஆரு பாத்துகிடுறது?” என்று வளவன் கூறினான்.


இவர்கள் பேச்சை கேட்டு மகா சிரிக்க,


“ஏம்பொழப்பு சிரிப்பா சிரிக்கி” என்று வடிவேல் கூறினான்.


“அம்புட்டு செரமமினா ஏம் வாரீய? அழுவுறியான்னு தானச் சொன்னேம்? வானு கூப்பிட்டேனா?” என்று தனம் கோபம் போல் கேட்க,


“என்னடி செய்ய? எம்பொஞ்சாதிய அம்புட்டு காதலிச்சுபுட்டேம்.. அன்பு அம்புட்டு மாணங்கெட்டதால்ல இருக்குது” என்று கூறினான்.


“அம்புட்டு லவ்விருக்குதுன்ன? அப்பப் புள்ளையச் சொமக்கத்தேம் வேணும். சீக்கிரமே அடுத்த புள்ளகூட வரும். அதையும் சொமக்கத்தேம் வேணும்” எனக் கூறி கண்ணடித்துவிட்டு அவள் செல்ல,


“மச்சான்.. சொல்லவே இல்ல” என்று வளவன் கேலி செய்தான்.


“இவேனுவ வேற.. ஏம்லே படுத்துறீய?” என்று நொந்துக் கொண்டான்.


பேச்சும் கலகலப்புமாய் அவ்விடம் விளங்க, திரிபுராவும், சிவபாதசேகரனும் வந்து சேர்ந்தனர்.


“லேய்.. அக்கா வந்துட்டாவ” என்று விக்ரம் உடன் பிறந்தவனின் தோளிடித்துக் கூற,


சென்று, “வாக்கா. வாங்க அத்தான்” என்று அவர்களை வரவேற்றான்.


“வந்துட்டோம் வந்துட்டோம்லே..” என்று சிவபாதன் கூற,


“வாரம்லே” என்று கூறியவள் நேரே உள்ளே சென்றிருந்தாள்.


“அக்காக்கு இன்னுங் கோவம் போலியாட்டுருக்கு” என்று மெல்லிய குரலில் வளவன் சிவபாதனிடம் கேட்க,


“வாரயிலயே சொல்லித்தாம் கூட்டியாந்தேம். போனமா விழாவுல புள்ளையல மனசார வாழ்த்துனமா வந்தமானு இருக்கனுமின்னு. அதேம் சிடுசிடுனு இருக்கா. அம்மைகூட ஒருநாளு இருந்து வாரேம். அதேம் அந்த புள்ள அவிய வீட்டுக்குப் போவுதுல்லனு கேட்டா. வேணாம்னு சொல்லிட்டேம்” என்று சிவபாதன் கூறினார்.


“ஏன் அத்தான். அக்கா வரகூடாதுனுலாம் நா நெனக்கல அத்தான். அவோள ஏதும் பேசாதுருக்கனுமுனுதேம் ஏம் எண்ணம்” என்று வளவன் வருத்தமாய் கூற,


அவன் தோள் தட்டியவர், “அவோள அனுப்பக்கூடாதுனு எனக்கும் எண்ணமில்லலே.. ஒங்கம்மையும் எம்பொஞ்சாதியும் ஒன்னா சேந்துகிட்டாதேம் என்னமாது பேசி ஒடக்க வளப்பாவ. நாம்பேசி ஒரு ரெண்டு மாசம் இந்த பக்கட்டும் வரல, அத்தேட்ட பேசவுமில்ல. ஆடின காலும் பாடின வாயுஞ் சும்மாருக்குமாலே? போனுல பேசிகிட்டாவ. ரெண்டு நா பாத்தேம். மூனாது நா போயி, உங்கம்மைட்ட பேசாதனு ஒன்னய சொல்லமாட்டேம். ஆனா அதுல ஏதும் ஒடக்காவாம இருந்துகிடுனு சொன்னேம். இங்கன வந்தா ஏதும் பேசத்தேம் செய்யுவோமுனு அவளுக்கே புரியப்போயிதேம் வராமருந்தா. அதுக்குமேல அடக்க எனக்குமே மனசில்லலே. பொறப்புலருந்தே அவளும் அப்புடித்தேம். தெரிஞ்சு ஏத்துதான கட்டினேம்.. எனக்கு என்னிக்குமே பிரச்சினையா இருந்ததில்லனு வுட்டுபுட்டேம். ஆனா எம்பொஞ்சாதியால மத்தவியளுக்கும் வரக்கூடாதுன்ன? கஸ்டமாத்தேம் இருக்கும். ஆனா புரிஞ்சுப்பா. நீயேதும் நெனக்காத” என்றுக் கூறினான்.


அத்தானை பெருமிதமாய் ஒரு பார்வை பார்த்தவன், “தேங்ஸ் அத்தான்” என்க,


“இஞ்சார்ரா.. புள்ள வரப்போதுனு பெரியமனுசத் தனத்தக் காட்டுதீயலோ?” என்று கேலி செய்தபடி அவனோடு உள்ளே சென்றார்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02