11. சாராவின் ஜீபூம்பா

 அத்தியாயம்-11



ஒருவாரம் மெல்ல மெல்ல ஊர்ந்து கடந்திருந்த நிலையில் இலக்கியன் தனது வேலையில் வெகுவாக சுற்றிக் கொண்டிருந்தான். இந்த ஒருவாரம் அவனால் சாராவைக்கூட பள்ளிக்கு அழைத்துச் செல்லவோ கூட்டி வரவோ இயலாது போயிருக்க, ஞாயிற்றுக்கிழமை எப்பாடுபட்டாவது விடுப்பு எடுத்தேனும் சாராவுடன் தன் நேரத்தினை செலவளித்திட வேண்டும் என்று நினைத்தான்.


அதற்கு சாரா மட்டுமே காரணம் என்று சொல்லிவிட இயலாது. ஆரண்யாவை சந்திக்க ஏதும் வாய்ப்பு கிடைத்தால், கார்த்திக்கின் அலைபேசி எண்ணைப் பெற்றிடவும் வசதியாக இருக்குமென நினைத்தான்.


அவனது எண்ணத்தின்படியே அன்றைய ஞாயிறு விடுப்பு எடுத்துக் கொண்டவன், காலை விரைவே எழுந்து குளித்து ஆசிரமத்திற்குச் சென்றிருந்தான்.


இலக்கியன் வந்ததைக் கேட்டதும் உண்டு கொண்டிருந்த சாரா எழுந்து தடதடவென ஓடிவர, ஒருவாரம் அவனைக் காணாத ஏக்கம் அவள் கண்களில் பொங்கி வழிந்தது.


“லக்கீ..” என்று கத்தியபடி வந்த சாராவைக் கண்டு சிரித்தபடி அவளைத் தூக்கிக் கொண்டவன் கன்னத்தில் முத்தமிட்டு “பேபிடால்” என்க, 


“ஏன் லக்கி வன் வீக் என்னைப் பார்க்கவே வரலை நீ?” என்று அதிகாரமும் ஏக்கமும் கலந்த தோரணையில் கேட்டாள். மகளதிகாரத்தின் திப்பை அவன் மனமார உணர்ந்தான்…


தன் காதைப் பிடித்துக் கொண்டு கண்களைச் சுருக்கி, “சாரி பேபிடால். லக்கிக்கு நிறைய வர்க் வந்துடுச்சு. அதான் வரவே முடியலை. இன்னிக்கு ஃபுல்டே உன்கூடதான்” என்று கூற, 


“ஏ ஜாலி ஜாலி” என்றாள்.


“போதும் போதும். உன் லக்கிய பார்த்ததும் ஆடி புடிச்சுகிட்டு வந்தாச்சு. சாப்பிட்டுட்டு போ” என்று பிரபா கூற, 


அதில் சிரித்தபடி அவளை இறக்கிவிட்டவன், “சாப்பிட்டுட்டு வா பேபிடால்” என்றான்.


சரியென தலையாட்டிச் சென்றவளும் சில நிமிடங்களிலேயே வந்துவிட, அவளைத் தூக்கித் தன் வண்டியில் அமர்த்திக் கொண்டவன், “நாளைக்கு ஈவ்னிங் கொண்டு விடுறேன் மேம்” என்று பிரபாவிடம் கூறிச் சென்றான்.


வண்டி ஓட்டியபடி தன் கைகடிகாரத்தில் மணி பார்த்தவன், “பாட்டு கிளாஸுக்கு இன்னும் டைம் இருக்கே பேபிடால். எங்கேயும் போகலாமா?” என்று வினவ, குழந்தையிடம் சிறு திடுக்கிடல்.


காவலனவன் கண்ணில் அது தவறுமா? புருவம் சுருங்க, “என்னாச்சு பாப்பா?” என்று இலக்கியன் கேட்க, 


“எனக்கு பாட்டு வேணாம் லக்கி” என்று சுரத்தையே இன்றி கூறினாள்.


அதில் அதிர்ந்து வண்டியை ஓரம் கட்டியவன் அவளைத் தன்னை நோக்கி திருப்பி, “ஏன்டா?” என்று வினவ, குழந்தை மலங்க மலங்க விழித்தது. அவளது கருவிழிகள் இங்கும் அங்குமாய் சுழல, எதையோ கண்டுபிடித்தார் போல் அவளது புருவங்கள் மேலேறி நின்றன.


அவனை நேருக்கு நேராய் பார்த்தவள், “அங்க கார்டன் பாத்துக்க ஒரு அங்கிள் இருப்பாருல?” என்று வினவ, 


“ஆமா. அந்த அங்கிளுக்கு என்ன?” என்று கேட்டான்.


“அ..அந்த அங்கிள் பேட் டச் பண்றாங்க லக்கி. எனக்கு ஸ்கூல்ல சொல்லி குடுத்துருக்காங்க. செஸ்ட், பேக் அன்ட் பிட்வீன் தி லெக்ஸ்ல டச் பண்ணா அது பேட் டச்னு சொல்லி தந்திருக்காங்க. அந்த அங்கிள்..” என்றவள் அவனையே பார்த்தபடி, “எனக்கு பாட்டு கிளாஸ் வேணாம் லக்கி” என்றாள்.


ஆடவன் கண்கள் கோபத்தில் சிவப்பேறித் துடிக்க, கை முஷ்டியை இறுக மூடிக் கொண்டு தன்னை நிலைப்படுத்த முயற்சித்தான். ஒன்றும் அறியாத போதும் பள்ளியில் கற்பித்ததை வைத்து அது தவறு என்று புரிந்து கொண்ட சாராவின் கண்களில் இருந்த பயம் அவனை நோகடிக்க, அந்த பயத்திற்கு காரணமானவனை அடித்து மிதிக்கும் ஆத்திரம் எழுந்தது.


வண்டியில் பின்னே இலக்கியன் முதுகில் சாய்ந்து கால் மேல் காலிட்டு அமர்ந்தபடி விசிலடித்துக் கொண்டிருந்த ஜீபூம்பா லேசாய் சாராவைத் திரும்பிப் பார்த்துக் கொண்டு “ஆண்டவன் படைச்சான்.. என்கிட்ட கொடுத்தான்.. அனுபவி ராஜானு அனுப்பி வைச்சான். என்னை அனுபவி ராஜானு அனுப்பி வைச்சான்” என்று பாட்டு பாடியது.


அந்த தோட்டக்காரர் சாராவை தொடுகையில் ஜீபூம்பாவே ஏதேனும் செய்திருக்க முடியும். அவரது தொடுகையின் தவறே புரியாத இருந்த சாராவிடம் வந்த ஜீபூம்பா, “ஏ சாரா. அந்த அங்கிள தள்ளிவிட்டுடு வா” என்று கத்த, 


'ஏன் ஜீபு?' என்று மனதோடு கேட்டாள்.


“உனக்கு ஸ்கூல்ல குட் டச் பேட் டச் சொல்லி தந்தாங்கள்ல? இவங்க பேட் டச் பண்றாங்க. இது ரொம்ப தப்பு. நீ அவங்க கிட்ட இருக்கக் கூடாது” என்று ஜீபூம்பா கூற, சாரா அதன் சொற்களில் பயந்து பதறி அந்த மனிதரிடமிருந்து விலகினாள்.


'ஜுபு. அது பெரிய தப்பு தானே? நீ அவரை பனிஷ் பண்ணு' என்று சாரா மனதோடு கூற, 


“நீ லக்கி கிட்ட தான் இதை சொல்லனும் சாரா. இப்பவே லக்கி கூப்பிட வந்ததும் சொல்லிடு” என்று ஜீபூம்பா கூறியது.


அதன் கணக்கெல்லாம் ஆரண்யாவும் மதியை அழைக்க வரும் நேரம் இலக்கியனை ஹீரோ போல் காட்சிப்படுத்துவது தான். ஆனால் அன்றிலிருந்து இதோ ஒருவாரமாக அவன் வேலையில் சுற்றுகிறான்.


எப்படியோ அவனுக்கு கிடைக்காமல் போகவிருந்த விடுப்பையும் தனது மாயாஜாலம் மூலம் சரி செய்த ஜீபூம்பா, அவனை பாட்டு வகுப்பு பற்றி பேச வைத்திட இதோ சாரா அனைத்தையும் கூறி முடித்தாள்.


“லக்கி நான் குட் கேர்ள். நான் பிரமிஸா எதுவும் தப்பு பண்ணலை” என்று எங்கே தவறான ஒரு செயலுக்கு தன்னை திட்டுவானோ என்ற பயத்தில் குழந்தை கூற, அதில் திடுக்கிட்டுப் போனவன், “ஹே பேபிடால்” என்றான்.


இமை சிமிட்டி சாரா அவனை நோக்க, மெல்ல சிரிப்பை வரவழைத்து அவளை பனிக்கூழ் கடைக்குக் கூட்டிச் சென்று ஒரு பனிக்கூழ் வாங்கிக் கொடுத்து பாட்டு வகுப்பு கூட்டி வந்திருந்தான்.


அவன் வந்து வண்டியை நிறுத்திய நேரம் ஆரண்ய நிலாவும் வந்துவிட, 


“லெட்ஸ் ஸ்டார் தி மியூஸிக்” என்றபடி குத்தாட்டம் போட்டது ஜீபூம்பா. நிலா சாராவைப் பார்த்து புன்னகைக்க, சாராவின் முகத்தில் அதே கலவரம் குடியிருந்தது.


அதை புருவம் சுருங்க பார்த்த நிலா அருகே வர, “பேபிடால். ரெண்டு கார்டனர் இருக்காங்களே. அதுல யாரு?” என்று இலக்கியன் கேட்டான். 


மதியும் ஒன்றும் புரியாமல் தன் சித்தியின் கரத்தைப் பற்றிக் கொண்டு நிற்க, அந்த இருவரில் ஒருவரை கைகாட்டிய சாரா, “அந்த அங்கிள் லக்கி” என்றாள்.


உடல் விறைப்புற்று, கண்கள் சிவக்க, அவரிடம் சென்றவன் விட்ட அறையில், இங்கு ஆரண்ய நிலா தன் கன்னத்தில் கைவைத்து விழிகள் விரிய நின்றாள்.


“லக்கி..” என்று குழந்தை அவனைக் கட்டிக் கொள்ள, 


“நோ பேபிமா.. ச்சில்” என்றவன், “குழந்தைங்க கிட்ட தப்பாவா நடந்துக்குற?” என்று அவன் கையை பிடித்து முறுக்க, வகுப்பு நடத்தும் பெண்மணியும் சத்தம் கேட்டு வெளியே வந்தார்.


நிலாவும் கலவரமான முகத்துடன் மதியைத் தூக்கிக் கொண்டு அருகே செல்ல, சாராவை ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடியே மற்றைய கரத்தால் அந்த தோட்டக்காரனின் கையை முறுக்கிக் கொண்டிருந்தவன், “உன் பொண்ணா இருந்தா தொடுவியாடா?” என்று கர்ஜித்தான்.


“லக்கி வேணாம் லக்கி. பயமா இருக்கு” என்று சாரா கலங்க, 


“பேபிடால். லக்கி சொல்றேன் கேட்டுக்கோ. யாருக்கும் பயப்படக் கூடாது. கேர்ள் பேபீஸ் ஆர் சோ ஸ்ட்ராங். யார் பேட் டச் பண்ணாலும் நீங்க பேட் டச் பண்றீங்கனு சத்தமா சொல்லனும். எதிர்த்து கேட்கனும். முக்கியமா லக்கி கிட்ட வந்து சொல்லனும்” என்று தன் கணீர் குரலில் இயம்பினான்.


இலக்கியனைப் பார்த்து பயத்தோடு சரியென்பதாய் சாரா தலையசைக்க, மீண்டும் அந்தத் தோட்டக்காரனை மிதித்து கீழே விழச் செய்தான். பாட்டு வகுப்பு எடுக்கும் பெண்மணியிடம் வந்தவன்,


“மேம் உங்களை நம்பி தானே பிள்ளைங்கள அனுப்புறோம். கண்ட கண்ட நாயெல்லாம் எதுக்கு வேலைக்கு விடுறீங்க? சின்ன பசங்ககிட்ட போய்.. ச்ச” என்று பொரிந்தான்.


படபடப்போடு, “சாரி சார். இப்படியான ஆட்கள்னு தெரிந்தா வேலைக்கு சேர்ப்போமா? வேலையே இல்லைனு ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி கேட்டாங்களேனு சேர்த்தேன். உடனே விலக்கிடுறேன். சாரி சார்” என்று அவர் மன்னிப்பு வேண்ட, சுற்றி ஒரு பார்வை பார்த்தவன் அவர் இறைஞ்சுவதை அசௌகரியமாய் உணர்ந்து, 


“ஓகே மேடம். இனியாவது பார்த்து வேலைக்கு எடுங்க” என்றான்.


சரியென்றவர் தன் உதவியாளருடன் அந்த தோட்டகாரனை வேலை நிறுத்தம் செய்யச் செல்ல, ஆரண்ய நிலா ஆச்சரியமான புன்னகையுடன் அவனைப் பார்த்தாள். 


சாரவை இறக்கிவிட்டு தானும் ஒற்றைக் காலை மடக்கி அமர்ந்தவன், “லக்கியோட பேபி என்னிக்குமே பயப்படவே கூடாது. பேபி போல்டா இருக்கனும். சரியா?” என்று அவள் தலைகோதி கேட்க, 


“ஓகே லக்கி” என்றபடி அவனைக் கட்டிக் கொண்டாள்.


அவள் கன்னத்தில் முத்தமிட்டவன், “சூப்பர்டா பேபி. உள்ள போ. கிளாஸ் முடியவும் லக்கி வந்து கூட்டிட்டுப் போறேன்” என்றான். 


சரியென தலையாட்டியவள் நிலாவைக் கட்டிக் கொண்டு “ஆரூ பாய்” என்க, 


அவள் தலைகோதி நெற்றி முட்டியவள் “பாய்டா” என்றாள்.


மதியின் கரம் பற்றி உள்ளே ஓடியவளைக் கண்டு இருவரும் சிரித்துக் கொள்ள, இவர்களைக் கண்ட ஜீபூம்பாவும் சிரித்தது. 


ஆரண்யாவைத் திரும்பிப் பார்த்தவன் ஒரு நொடி உள்ளுக்குள் ஒரு மென்சாரலை உணர்ந்தானோ?! தானும் அவனைத் திரும்பிப் பார்த்து, மென்மையாய் சிரித்தவள் “தேங்க்ஸ்” என்றாள்.


ஒற்றை புருவம் உயர்த்தி அவன் புரியாமல் பார்க்க, “அந்தாளை அடிச்சதுக்கு” என்றாள். 


“ராஸ்கல் அவனையெல்லாம் மிதிச்சே கொன்றுக்கனும். குழந்தைங்க கிட்ட போய்..” என்று அவன் கூற, 


“ம்ம்.. குழந்தைங்களுக்குக் கூட பாதுகாப்பில்லாம தான் இருக்கு. நம்ம தான் அவங்களுக்கு பாதுகாப்பா இருக்க கத்துத்தரனும். நீங்க இப்ப சொல்லிகொடுத்த மாதிரி” என்று நிலா கூறினாள்.


அதில் லேசாய் சிரித்தவன், “இக்கட்டான சூழல் வரும்வரை நம்ம பலம் நமக்கே தெரியாது. நமக்குள்ள ஒரு பலம் இருக்குனு சொல்லி கொடுத்தா போதும். அவங்களே புரிஞ்சு தைரியமா இருப்பாங்க” என்று கூற, 


அவள் மனம் ‘இம்ப்ரஸிவ்’ என்று எண்ணியது.


அழகான அந்தத் தருணத்தை குழைக்கவென்றே நிலாவின் அலைபேசி ஒலிக்க, அதை எடுத்தவள் “மாமா” என்றாள். 


அதில் விறைப்புற்ற இலக்கியனின் மனம் படபடவென அலைபாய்ந்தது. 'கார்த்திக்.. இவர் நம்பர வாங்க இருந்தோமே? இதுதான் நேரம். எதாவது சாக்கு சொல்லி வாங்கனும்' என்று அவன் மனம் எண்ண, சிரித்தபடி அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பவளைப் பார்த்தான்.


எப்போதும் போல் அவளது ஸ்லீவ்லெஸ் தொடை வரை நீளம் கொண்ட குர்த்தியும் நீண்ட பாவாடையும் ஒரு துப்பட்டாவும் அணிந்து கொண்டு இளஞ்சிவப்பு காதுகளில் அவளது கிங்கிணி நாதமான சிரிப்புக்கு நடனமாடும் ஜிமிக்கியும் என அவன் கண்களுக்கு அழகியாய் தெரிந்தாள். அதுவும் அந்த காதுகள் தான் அவனின் பார்வையில் சற்று கூடுதல் ரசனையை மூட்டியதென்று கூறவேண்டும். 


அவளைப் பார்க்கும் தன் பார்வையில் திடுக்கிட்டவன் திரும்பி நின்று தன் தலைகோத, ‘டேய் இலக்கியா..’ என்று அவன் மனம் இயம்பியது.


அவள் பேசி முடித்துவிட்டு திரும்ப, அவளது சத்தம் அடங்கியதில் தானும் திரும்பியவன், “அன்னிக்கு ஹாஸ்பிடல்ல உன்னை கூப்பிட வந்தாங்களே மிஸ்டர். கார்த்திக்?” என்று வினவினான்.


“ஆமா.. என் மாமா தான்” என்று புன்னகையாய் அவள் கூற, 


“அவங்க பேங்க்ல தானே வர்க் பண்றாங்க?” என சாரா கூறியதை வைத்துக் கேட்டான்.


“ம்ம் ஆமா சார்” என்று அவள் கூற, 


“அவங்க நம்பர் கிடைக்குமா? லோன் விஷயமா கொஞ்சம் பேசணும்” என்று வாய்க்கு வந்த பொய்யை அள்ளிவிட்டான். 


ஏனோ அவனிடம் ஆராய்ந்து கேட்கவெல்லாம் அவளுக்கும் தோன்றவே இல்லை. ஒரு நம்பிக்கையான புன்னகையுடன் “கண்டிப்பா சார். நோட் பண்ணிக்கோங்க” என்று அவள் கூற, அவளது நம்பிக்கை அவனை சுள்ளென்று வலியை உணர வைத்தது.


காவலனாக வழக்குகளை விசாரிக்க பொய்களைக் கையாலாதவன் இல்லை அவன். ஆனால் இவளிடம் பொய்யுரைத்து நம்பிக்கை பெற அவனுக்கு வலித்தது. 


அதை அப்படியே புறம் தள்ளியவன், அவள் கொடுத்த இலக்கங்களை வாங்கிக் கொண்டான்.


'ஆஹா.. வர்க்கவுட் ஆகுது போலயே. இப்ப நம்ம எதாவது வேலையைக் காட்டனுமே' என்று எண்ணிய ஜீபூம்பா, தன் கைகளை நீட்டி “ஜீ…பூம்..பா” என்று உச்சரித்தது.


மழை மேகம் போல் திரண்டு, காற்று வேகமெடுத்து வீச, அவளது துப்பட்டா வேகமாய் அவளிடமிருந்து பறக்க துடித்தது. அவள் கண்களில் வந்து விழுந்த மணல் துகள்களில் கண்களை மூடிக் கொண்டவள் முகம் சுருங்க கண்ணை கசக்க, துப்பட்டா காற்றில் ஆடி அவன் முகம் வந்து மோதியது.


பெண்ணவளின் பிரத்யேக வாசத்துடன் அவன் முகத்தில் வந்து மோதி முத்தமிட்ட துப்பட்டாவின் ஸ்பரிசம் அந்த ஆறடி ஆண்மகனை அசைத்துத் தான் பார்த்தது.


கண்களை மூடி அந்த வாசத்தை ஸ்வாசித்தவன் இதழில் மெல்லிய புன்னகை எழ, மூளை அவன் செயலை படீரென எடுத்துரைத்தது. 


‘ச்சை.. இவனுக்கு ஃபீல்ட் செட்டப் செய்ய நான் வர்ண பகவானையெல்லாம் கண்வின்ஸ் பண்ணி பழைய சீரியல் சீன்ஸ் எல்லாம் ரீகிரியேட் பண்ணா, அநியாயத்துக்கு நல்லவனாகி சட்டு சட்டுனு மோட் மாறிடுறான்.. ரொம்ப கஸ்டமப்பா’ என்று ஜீபூம்பா புலம்பலாய் கூறிக் கொண்டது.


தன் செயலில் திடுக்கிட்டு நகர்ந்த இலக்கியன் அவளைப் பார்க்க, இன்னும் துப்பட்டாவை ஒரு கையில் பிடிக்க முயன்றபடி கண்களை கசக்கிக் கொண்டிருந்தாள்.


பெருமூச்சில் தன் வெப்பக் காற்றை வெளியேற்றியவன் ஓரடி பின்னே நகர்ந்து, “ஆர் யூ ஓகே?” என்றபடி அவனது கைக்குட்டையைக் கொடுக்க, 


ஒற்றைக் கண் திறந்து பார்த்தவளும் அதை வாங்கி தன் கண்ணில் உறுத்தல் குறைக்க துடைத்துக் கொண்டாள்.


விளைவாய் அவளது கருமையான அஞ்சனம் அவனது வெண்மையான கைக்குட்டையில் ஒட்டிக் கொண்டது.


கண்கள் உறுத்தலில் லேசாய் கலங்கி பளபளத்து நிற்க, விழியை நன்கு திறந்தவள், “மழை பெய்யும் போலயே. காத்து பயங்கரமா இருக்கு” என்றுவிட்டு “ஓகே சார். பார்ப்போம்” என்றாள்.


“ஓகேமா” என்று அவன் கூற, அவன் கைக்குட்டையைப் பார்த்தவள் விழிகள் மேலும் அகல விரிய, “அய்யயோ.. ச..சாரி சார்” என்றாள்.


அப்போதே தானும் அதை கவனித்தவனுக்கு அதைக் கண்டு மெல்லிய புன்னகை அரும்பியது. அதில் லேசாய் சத்தம் வர சிரித்தவன், “பேபிடாலுக்கு கண்ணைத் துடைச்சா இப்படி தான் ஆகும். இட்ஸ் ஓகே. நோ ப்ராப்ளம்” என்றபடி அதை வாங்கிக் கொண்டு புறப்பட்டான்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02