திருப்பம்-110

 திருப்பம்-110



நெருங்கிய சொந்தங்கள் மட்டும் அவ்வீட்டில் கூட, சங்கமித்ராவை அமர்த்தி சந்தனம் பூசி ஒவ்வொருத்தராய் வளைபூட்டத் துவங்கினார்கள்.


“பாப்பா அழகாருக்கா கீதாம்மா. சுத்திப் போடனும்” என்று அவிநாஷ் கூற,


“உங்க பாப்பாக்கே ஒரு பாப்பா வரப்போகுது. இன்னும் பாப்பவை விடமாட்றீங்க” என்று சிரித்தாள்.


“என்ன தம்பி.. சங்குக்கு வளபூட்டி அத்தே மாமாவோட அனுப்பலாமுனு ரோசனையா? இல்ல ஒங்களோடவே கூட்டிப்போலாமுனு ரோசனையா?” என்று தீபிகா கேட்க,


“அதேம் புள்ளருக்குனே தெரியாத ரெண்டு வாரம் வச்சு சீராட்டினாவளே..” என்று மகா சிரித்தான்.


அதில் தானும் புன்னகைத்த அவிநாஷ், “என் பாப்பாவைக் கூட்டிட்டுப் போய் வச்சுக்க எனக்கும் ஆசைதான். ஆனா அத்தை மாமா முதல்லயே நோ சொல்லிட்டாங்க” என்று வருத்தமாய் கூற,


அனைவரும் கலகலவென்று சிரித்தனர்.


திரிபுரா ஓரமாய் நின்று வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க, சங்கமித்ரா தன்னவனைப் பார்த்தாள்.


அவளைப் பார்த்துக் கொண்டிருந்த வளவன் அவள் கூற வருவது புரிந்தவனாய் கண்கள் மூடித் திறந்து, “அக்கா.. வா. வந்து வளபூட்டு” என்று அழைத்தான்.


தன் கணவரை ஒரு பார்வை பார்த்துக் கொண்ட திரிபுராவும், “ம்ம்..” என்று தலையசைத்துவிட்டுச் சென்று அவளுக்கு வளையல் அணிவித்தாள்‌.


அனைவரும் வளைபூட்டி முடிக்க, வளவன் தானும் தன் மனையாளுக்கு வளையல் அணிவித்தான்.


“என்னம்லே தங்க வளையெல்லாம் இல்லியாக்கும்?” என்று மகா கேலி செய்ய,


“தங்கமா புருஷன் நாயிருக்கேம்ல? பொறவு என்னத்துக்கு தங்கவளையலு?” என்றவன், “என்ன தங்கம்?” என்று அவளைப் பார்த்து கண்ணடித்தான்.


“ஓஹோ..” என்று அனைவரும் சிரிக்க,


அதில் வெட்கம் கொண்ட சங்கமித்ரா நாணப்பூப் பூத்தபடி தலை குனிந்தாள்.


ஐந்து வகை உணவுகளை கொண்டுவந்து அவளுக்கு உணவாகக் கொடுக்க, வளைபூட்டும் இனிமையாய் முடிந்தது.


“பொறவு என்ன? மைணிகாரி.. கெளம்ப ரெடியா?” என்று தனம் கேட்க,


உற்சாகமாய் தலையசைத்தவள், “ர்..ரெ..ரெடி” என்று கூறினாள்.


அவளைச் செல்லமாய் முறைத்த வளவன், “பேக்கிங்கெல்லாம் ரெண்டு நா(ள்) முன்னவே பண்ணிப்டா தனம்” என்று கூற,


“பாரு மைணி.. எங்கண்ணே எம்புட்டு பீல் பண்றாப்புடினு பாரு” என்று தனம் கூறினாள்.


“பி..பீலிங்காதான் இருக்கும். இ..இருந்தா வ.வந்து பாத்துட்டுப்போகச் சொல்லு” என்று மித்ரா கூற,


“அதெல்லாம் நடக்காது. தம்பி லெட்டர்தான் போடுவான்” என்று அவிநாஷ் கேலி செய்தான்.


“அண்ணே..” என்று வெட்கம் கொண்டு வளவன் தன் பிடறி முடி கோதிக் கொள்ள,


தன்னவனை காதலாய் பார்த்தாள்.


உணவு பொழுதும் இனிதே கழிய,


“போலாமா சங்கு?” என்று தாட்சாயணி மகளிடம் கேட்டார்.


“ம்ம்” என்றவள் தன்னவனைப் பார்க்க,


‘வா’ என்ற அழைப்போடு மேலே சென்றான்.


தான் தயாராய் வைத்திருந்த துணிமணிகளை எடுத்து வைத்தவள், “வ..வரேன்” என்க,


பதிலேதும் போசாது அவளையே பார்த்தான்.


“எ..என்ன? அ..அய்யோ பாவமேனுலாம் போ..போகாம இருக்க மாட்டேன்” என்று அவள் கூற,


மெல்லிய புன்னகையுடன் அவளை நெருங்கியவன், “வேளா வேளைக்கு ஒழுங்கா உங்கனும். ஒம்பது மாசமாச்சேனு டாக்டரு ஸ்பீச் தெரபிய நிறுத்திகிட்டு வீட்டுல செஞ்சுபாக்க சொல்லிருக்காவன்ன? அதெல்லாம் ஒழுங்கா செய்யனும். எப்பம்னாலும் பேச கூப்பிடனும். டேட் சொல்லிருக்காவ. முன்னுக்கவே வலி வந்துபுடுச்சுன்னு வையு.. எம்புட்டு வலியாருந்தாலும் எங்கிட்ட சேதி சொல்லிபுடனும் சொல்லிட்டேம். நாயிருக்கனும் ஓங்கூட” என்று அவள் கரம் பற்ற,


விரிந்த புன்னகையுடன் அவன் கன்னங்களில் தன் கரம் வைத்தவள், “க்..கண்டிப்பா” எனக் கூறி, அவன் இதழோடு இதழ் பூட்டினாள்.


அதை ஆழ்ந்து ஏற்றவன், அவளை விடுத்து, மேடையிலிருந்து ஒரு கடிதவுரையைக் கொடுத்து, “வூட்டுக்கு போயிட்டு படி” என்க,


சென்று இழுப்பறையிலிருந்து ஒரு கடிதவுரையை எடுத்தவள், “நான் கி..கிளம்பினப் பிறகு படிங்க” என்று கூறினாள்.


தங்களின் ஒத்த மன உணர்வை நினைத்து சிரித்துக் கொண்ட இருவரும் கீழே வர, “நீயெங்கடா வார? உள்ளுக்க போயி இருந்துகிடு” என்று தெய்வா கூறினார்.


சுனங்கும் அவன் முகம் கண்டு வருத்தம் கொண்டவள் அவனைப் பார்த்து கண்கள் மூடி திறக்க, அவனும் அறைக்குத் திரும்பினான்.


அனைவரும் சங்கமித்ராவிற்கு பல பத்திரங்கள் கூற,


அவர்களிடம் புன்னகையாய் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.


தனது தாய் வீட்டை அடைந்த பெண் சென்று முதலில் செய்தது, அவன் கடிதம் படிக்கும் பணியைத் தான்.


‘அன்புள்ள மித்துக்கு,


நீயெல்லாம் மிஸ் பண்ணுவியானு தெரியலட்டி. ஆனா எனக்கு ஒன்னய ரொம்ப தேடும். அம்புட்டுக்கு ஏங்க வுடுத என்னய. போடி.. நாம்போயி ஒஞ் சக்களத்தன் வீட்டுலத்தேம் நெதம் தூங்குவேம்’ என்று வாசித்தவள், ‘நந்தி..’ என்று முனுமுனுத்தபடி சிரித்துக் கொண்டாள்.


‘ஆமா ஆமா.. நந்திதேம். அடுத்து ரெண்டு மூனு மாசத்துக்கு கொட்டாதேம் எனக்கு வூடு. இஞ்சாருடி நெதம் லெட்டரு போடுவேம். சலிச்சுகிடாது பதிலு லெட்டரு போட்டே ஆவனும் நீயு. என்னிக்காச்சு ரொம்ப தேடிச்சுனா வூட்டுக்கே வந்துபுடுவேம்.. அச்சோ அம்மானு வெக்கமெல்லாம் பட்டு மொறைச்சுகிட்டு கிடக்கக்கூடாது’ என்று வாசித்தவள் வெட்கம் கொண்டு ஒற்றைக் கையால் தன் முகம் மூடி புன்னகைத்தாள்.


‘எம்புள்ளையும் நீயும் ஒன்னாருப்பீய. நாந்தேம் தனியாருக்கேம். அதால தோனுறப்பலாம் பாத்துப்போவ வந்துபுடுவேம். அப்றம் நம்ம மீனு பண்ண கணக்கு வழக்கயெல்லாம் நாம்பாத்துகிடுதேம். தேவையில்லாது அலையாத. கம்பெனி உன்னுதுதேம். ஆரும் இல்லைங்கல. அதுக்காவ புள்ளைய வச்சுகிட்டே நீயு செய்யனும்முனு அவசியமில்ல. மொத ஒன்னயும் புள்ளையையும் பாத்துகிட்டு நல்லபடிக்கா பெத்து திரும்ப எங்கிட்டு வந்து சேரு. வூட்டுல எல்லாத்தையும் விசாரிச்சேம்னு சொல்லு. உரிமையா சொல்லலாம். ஏன்னா இப்பத நா அந்தூட்டு மருமவேம்’ என்றதோடு அவன் கடிதம் முடிந்திருக்க ‘ரொம்ப பிடிக்குதே’ என்ற நினைவோடு தனது அலைபேசியை எடுத்தாள்.


சில நிமிடங்களில் ‘பிடிக்குதே… திரும்ப திரும்ப உன்னை.. பிடிக்குதே..’ என்ற பாடல் அவளது புலன நிலைபாட்டில் ஒலிக்க,


அதைப் பார்த்து மனம் நிறைந்த புன்னகை பூத்தவன், அவள் தனது கடிதம் படித்துவிட்டதை புரிந்துகொண்டவனாய், அவளது கடிதத்தை பிரித்தான்.


சங்குப்பூ…


அதை எடுத்து நெஞ்சோடு பொத்திக் கொண்டவன் கடிதத்தில் தனது பார்வையை ஓட விட்டான்.


‘அன்புள்ள திருமாலுக்கு,


ரொம்ப தேடுவீங்கதான்.. ஆனாலும் போனுமே. எங்கப்பா அம்மா பாவம்ல? பிள்ளையை வச்சு சீராட்டனும்னு நினைப்பாங்க இல்ல? எனக்கும் அம்மா அப்பாகூட இருக்க ஆசையாருக்குப்பா..’ என்று வாசித்தவன் இதழ்கள் மெல்ல மலர்ந்தது, செல்ல உடைமையோடு.


‘ஒழுங்கா மீன் பண்ணையை நான் வரும்வரை பார்த்துக்கோங்க. டீடைல்ஸ் எல்லாம் கரெக்டா கேட்பேன். அது வெறும் பண்ணையில்ல.. என்னோட எமோஷன்’ என்று வாசித்தவன் பக்கென்று சிரித்துவிட்டுத் தொடர்ந்தான்.


‘வீட்டுக்கு லேட்டா வராம சீக்கிரமே வந்து சேரப் பாருங்க தினமும். உங்களுக்காக மட்டுமில்ல, கார்த்தி அக்காவுக்காகவும் சேர்த்து சொல்றேன். அக்காக்கும் எட்டு மாசமாச்சுல? நல்லா ரெஸ்ட் எடுக்கனும்ல அவங்க? அத்தையும் தனத்தைப் பார்த்துக்குறதால நீங்க வரும்வரை காத்திருக்க முடியாது. அதனால எந்த வேலையாருந்தாலும் காலைல சீக்கிரம் போய் கூட பாருங்க. ஆனா நைட் சீக்கிரம் வந்துடுங்க. அடிக்கடி லெட்டர் போடணும். உங்கப்பன் எனக்கு லெட்டர் டார்ச்சர் தராரு பாருனு நம்ம புள்ளைகிட்ட நான் சொல்ற மாதிரி இருக்கனும்’ என்று வாசித்தவன் முகம் காதல் காற்றில் கனிவு கொண்ட மலராய் பூத்தது.


‘அப்ப அப்ப பாக்க வாங்க. வலி வந்துடுச்சுனா உடனே என்ன வேலையாருந்தாலும் ஆஸ்பிடலுக்கு ஓடி வந்துடனும். நாங்க இங்க ரெண்டு பேர் ஒன்னாருந்தாலும்கூட எங்களுக்கு நீங்க வேணுமே?! அதனால ஓடோடி வந்துடனும். நிறைய லவ் பண்ணிட்டோம் போல.. வீட்ல எல்லாரையும் மிஸஸ் திருமால் விசாரிச்சதா சொல்லுங்க’ என்று அவள் கடிதம் முடிய,


தங்களின் ஒத்த கருத்துக்களில் மீண்டும் பூரித்தவன், அழகாய் புன்னகை பூத்தான்.


பெண் பார்க்கச் சென்று, பார்த்து பேசி பத்து நிமிடத்தில் மொட்டாய் உருவாகி, மலர்ந்து வாழ்வின் முழுதிற்கும் வாசம் வீசிடும் இந்தக் காதல் தான் எத்தனை விந்தையான ஒன்று? என எண்ணி பூரித்தவன், தனது அலைபேசியை எடுத்தான்.


சில நிமிடங்களில் அவளது புலனத்தில் குறுஞ்செய்தி வந்ததாய் ஓசை வர, சங்கமித்ரா அவனிடமிருந்து தான் வந்திருக்கும் என்று அறிந்தவளாய் உள்ளே சென்றாள்.


அழகிய காணொளி ஒன்று… பெண்ணவள் அதை இயக்க,


‘நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்

ஆறாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்

நானாகத் தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய்

நீயாகத் தொட்டாலோ பூவாக ஆகின்றாய்

என் கண்ணீர் என் தண்ணீர் எல்லாமே நீயன்பே

என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே

என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணில் அசைவிலே’ என்ற பாடல் ஒலித்தது.


அவள் கண்கள் பூவாய் விரிந்து, அதில் காதல் தேன் தித்திப்பினும் தித்திப்பாய் கசிந்தது.


அடுத்து வந்த நாட்கள் எல்லாம், கடிதத்தில் பறக்கும் காதலாகவே இருந்தது.


நாள் தவறாது எப்படியேனும் தினமும் ஒரு கடிதம் அவளை வந்தடையும்.


ஒருநாள் விக்ரம், ஒருநாள் அவினாஷ், ஒரு நாள் வடிவேல், ஒரு நாள் மகா என்று அவர்களுக்கு பல தூதுவர்கள் உருவாகியிருந்தனர்.


‘இவனுங்க இம்ச தாங்க முடியலடா’ என்று நால்வரும் மாறி மாறி புலம்பிக் கொண்டாலும் கூட அந்த தூதுவர் வேலையை விரும்பியே செய்தனர்.


இதில் மற்றொரு பரிமாற்றம், கனகாம்பரப்பூ.


அன்று வந்துசேர்ந்த பூவை மகளுக்கு சூட்டி, பழங்களைக் கொடுத்த தாட்சாயணி, “கல்யாணத்துக்கு முன்ன அவங்க வீட்லருந்து பூ வந்ததுனு நீ சொல்லுவியே.. அது எப்படினு இப்பத்தான் புரியுது” என்று நீட்டி முழக்க,


பெண்ணவள் நாணம் கொண்டு சிரித்துக் கொண்டாள்.


மாலை சச்சிதானந்தம் வேலை முடித்து வீடுவந்து, “பாப்பா” என்று அழைக்க,


அறைக்குள் படுத்திருந்தவள், மெல்ல எழுந்து வெளியே வந்தாள்.


அவளுக்குப் பிடிக்குமென்று தான் வாங்கிவந்த ரசகுல்லா டின்னை அவர் கொடுக்க,


“அப்பா..” என்று பூரித்துப்போய் அதை வாங்கிக் கொண்டாள்.


அதில் புன்னகைத்தவர், தனது சட்டைப் பையிலிருந்து ஒரு கடித உரையை நீட்ட, அவள் விழிகள் அதிர்வில் முழு நிலவாய் நீண்டது.


“அ..அப்பா..” என்று ஏகத்திற்கும் அவள் தடுமாற,


“மாப்பிள்ள குடுத்துவிட்டாரும்மா” என்று புன்னகையாய் கூறினார்.


அவள் முகம் செஞ்சாந்தாய் சிவந்தது. ‘அய்யோ.. அப்பாகிட்டலாமா குடுத்துவிடுவாரு?’ என்று நாணம் கொண்டவளாய் அதை வாங்கியவள் வெட்கம் தாளாது அறைக்குள் ஓடிவிட, அதில் சிரித்துக் கொண்ட சச்சிதானந்தம், “எம்மக சந்தோஷமாருக்குறத பாக்க நிறைவாருக்குடி தாட்சா” என்று மனமார கூறினார்.


“ஆமாங்க.. அவசரப்பட்டு அன்னிக்கு தப்பான முடிவ எடுத்திருந்தா நம்ம மக சந்தோசத்தைத்தான் இழந்திருப்போம்” என்று தாட்சாயணி கூற,


அது எத்தனை உண்மை என்பதை உணர்ந்தவராய் தலையசைத்தார்.


‘ஆர்வக்கோலாறு திருமாலுக்கு,


யாருகிட்டலாம் குடுத்து விடுறதுனு ஒரு விவரமே இல்லையா உங்களுக்கு. அப்பாட்ட போய்.. அய்யோ எனக்கு எவ்ளோ கூச்சமா போச்சு தெரியுமா? லூசு புருஷா.. அப்பா சிரிக்குறாங்க.. அச்சோ அச்சோ.. வெக்கங்கெட்ட மனுஷன்யா நீங்க’ என்று அவள் எழுதி அனுப்பியதைத் தன் கரத்தில் வைத்துப் படித்துக் கொண்டிருந்த வளவன், நடு கூடத்தில் இருப்பதை மறந்தவனாய் வாய்விட்டு சிரித்திட, பின்பே கூடத்திலிருப்பது புரிந்தது.


சுயம்புலிங்கமும் அமர்ந்திருப்பதைக் கண்டவனுக்கே வெட்கமாகிவிட,


முகம் சிவக்கத் தலைகவிழ்ந்தபடி எழுந்து மாடிக்கு ஓடியவனை அனைவரின் சிரிப்பொலியும் தொடர்ந்தது.


‘அய்யோ வளவா..’ என்று தன் பிடறி முடியைக் கோதிக் கொண்டவன், வெட்கத்துடன் சுவரில் நெற்றி முட்டி சிரித்துக் கொண்டான்.


இனிமையாய் வாழும் அவர்கள் காதல் வாழ்வைப் பார்த்து, வாழ்க்கையே பொறாமை கொண்டும், அவர்களை வாழ்த்தியது…



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02