திருப்பம்-111
திருப்பம்-111
மாட்டுக் கொட்டாவில் தன் தம்பிகளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் தீவனம் போட்டுக் கொண்டிருந்த வளவனுடன், தண்ணீர் தொட்டிகளில் நீர் நிறப்பிக் கொண்டிருந்தான், வளவன்.
“என்னம்லே ஆளே ஒருபடியாருக்க?” என்று வடிவேல் கேட்க,
“வீடே வெறிச்சுனு இருக்குதுலே..” என்று கூறினான்.
அதில் லேசாய் சிரித்தவன், “அதுக்காவல்லாம் ஓந்தங்கச்சிய கொண்டாந்து வுட முடியாது” என்று கூற,
கரைத்துக் கொண்டிருந்த தீவனத்திலிருந்த கட்டி ஒன்றைத் தூக்கி அவன் மீது எறிந்தவன், “கோம்ப..” என சிரித்து, “அவோளும் அவோ அம்மாவூட்டுக்குப் போயிட்டா. மைணியையும் அவிய அம்மாவந்து ஒரு மாசமாது வச்சுகிட்டு அனுப்புறேம்முனுட்டாவ. மைணியோடவே சுடரும் கெளம்பிடுச்சு. வூட்டுக்குப் போனாலே அம்புட்டு அனக்கமில்லாதுருக்குடா. சரி தீபியக்கா வூட்டுக்குப் போவமானு பாத்தா, அவோளும் புள்ளையல கூட்டிகிட்டு மகா அத்தானோட அண்ணே வூட்டுக்குப் போயிருக்கா” என்று சளிப்பாய் கூறினான்.
“ஏன்.. நம்மூட்டுக்கு வாரத்தான?” என்று வடிவேல் கேட்க,
“போலே.. ஓம் பொஞ்சாதி ஓம் புள்ளைய எங்கையில குடுத்துட்டு படுக்க போயிடும். அவேன் அம்மே அம்மேனு அவளயே கேட்டு அழுவியாம். அம்புட்டு பேரும் அவள பாத்துத்தேம் பயந்தோமுனு பாத்தா, அவ புள்ளையுமில்ல பயங்காட்டுதாம்” என்று பயம் நிறைந்த குரலில் கூறினான்.
அதில் வாய்விட்டு சிரித்த வடிவேல், “பாத்துகிடுலே.. ஏந்தங்கப்புள்ளைய ரெண்டேரும் நெசத்துக்குமே தங்கம்.. அதேம் நீயும் ஓம் அண்ணேனும் சந்தோசமாருக்கீய” என்று கூற,
“அப்ப எந்தங்கச்சிக்கூட நீயு சந்தோசமால்லயாக்கும்?” என்று வளவன் கேட்டான்.
“இல்லனு எங்கலே சொல்லுவியேம்? அது ஏஞ்சக்கரக்கட்டிலே.. எம்புட்டு அடிச்சாலும் அம்மாவ புள்ள வேணாங்குமா? அப்புடித்தாம்லே அவ. எகனயாதேம் பேசுவா. அதிகாரம் பண்ணுவா.. என்னைய ஆளுவா.. எங்கம்மைக்கே மாமியாவாயிடுவா செல நேரம்.. ஆனா அத்தனயுலயும் அவ பாசத்தத்தாம்லே பாக்க முடியும்.. பாசக்காரிலே ஏம் லச்சு. அவகூட சந்தோசமாயில்லனு நாஞ்சொன்னா அத வுட ஒரு பொய்யு ஒலகத்துலயே இருக்காது” என்று வடிவேல் கூற,
நண்பனை புன்னகையாய் பார்த்தான்.
“சொல்லுதோம் பொஞ்சாதிய.. அதச்செய்றாவ இதச்செய்றாவ, அவிய வூட்டுல இல்லனா எம்பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டானு சந்தோசமாருப்போமுனுலாம்.. ஆனா பாரு அவிய இல்லாம நமக்குத்தேம் நேரமோட மாட்டிக்கி” என்று வளவன் கூற,
அங்கு வந்த விக்ரம், “சரியா சொன்னலே.. வூட்டுக்குள்ள நொழஞ்சாலே அப்பா அப்பானு கால சுத்தி சுத்தி வருவா ஏம்மவராசி.. அப்பன எப்பதுமே புடிச்சுடுதானு முனுமுனுத்துட்டே காத்தி மொவத்த வெட்டிக்கும். அறைக்கு போயி ஒறங்கவே வரமாட்டுதுலே.. முன்ன சங்கு அவிநாஷ் அண்ணே வீட்டுக்குப் போனப்ப, நீயு கொட்டாவுலயே ஒறங்கினதுக்கு வூட்டுக்கு வந்து ஒறங்க என்ன இவேனுக்குனுதேம் நெனச்சேம்.. இப்பத அவோ ஊருக்குப் போவவும் அங்கன அறயே காலியானாப்புல இருக்குது” என்று தனது நெஞ்சை நீவியபடி கூறினான்.
“லச்சு இல்லாது எனக்கும் அப்புடித்தேம் இருந்துச்சு.. அம்மாகூட கூடத்துல வந்துதேம் படுப்பேம்.. பச்ச புள்ளையாடா நீயுனு சிரிப்பாவ.. நம்ம அறைக்கே வந்து அதோட உயிர்ப்பயே கலவாடிபுடுறாவ பாரு” என்று வடிவேல் கூற,
“அதச்சொல்லுலே” என்று இரட்டையர்கள் ஒப்புக் கொண்டனர்.
“என்னம்லே நடக்குது இங்கன?” என்று கேட்டபடி மகா வர,
“வாங்க அண்ணே.. நீங்கதேம் பாக்கி.. ஆண்கள் மாநாடு நடத்திட்டு இருக்கோம். வூட்டுல பொண்டாட்டி இல்லாம எப்புடியிருக்குதாம்?” என்று வடிவேல் கேட்டான்.
அதில் வாய்விட்டு சிரித்த மகா, “என்னம்லே.. ரொம்ப தேடுறீயளோ?” என்று கேட்க,
இரட்டையர்கள் ஒன்றுபோல் தலையசைத்தனர்.
“ஒங்கக்கா போனவ போனு கூட போட மாட்டிக்காலே.. நானா போட்டாகூட ஓரகத்திக்கூட கோயிலு போயிருக்கேம், கடைக்கு போயிருக்கேமுங்கா. ராவுக்கு அடிச்சாக்கூட புள்ளைய வெளாடிகிட்டு இருக்காவ. சமையலாக்கனுமுங்கா. போடி போ இனிமே கூப்புடவே மாட்டேமுனு கத்திபுட்டு வச்சுட்டேம்” என்று சோகம் போல் மகா கூற,
“இந்த அக்காவுக்கு கொழுப்புதேம்” என்று விக்ரமன் கூறினான்.
“ப்ச்.. அது அப்புடியில்லலே.. இங்கனருந்து அங்க போனதே அவியகூட நேரஞ் செலவு செய்யத்தேம்.. அப்ப அங்கனத்தான பாத்துகிடனும்? என்ன நம்மட்ட நாலு வாத்த பேசலியேனு கொஞ்சம் வருத்தம். அதுலாம் வந்தா நம்மகூடத்தான இருக்கப் போறா?” என்று மனைவியை விட்டுக் கொடுக்காது பேசினான்.
ஒவ்வொருவரின் காதல் ஒவ்வொரு விதம்…
விக்ரமினது அமைதியான காதல்,
வடிவேலுவினது அடாவடி காதல்…
மகாவினுடையது முதிர்ச்சியான காதல்,
வளவனுடையது அமைதியும் அடவாடியும் கலந்த காதல்…
காதலுக்கென்று வரையறைப் படுத்தும் விளக்கம் இல்லாததால், ஒவ்வொருவரிடமும் ஒரு விளக்கத்தைப் பெறுகிறது…
ஆண்கள் நால்வரும் பேசி சிரித்தபடி கொட்டாவிலிருந்து வெளியே வர, வளவனின் அலைபேசி ஒலித்தது.
“எம்மாடி.. சங்கத்துல ஒருத்தர விட்டுபுட்டம்ல? அவிநாசு அண்ணே அழைக்காவ” என்று சிரித்தவன், அழைப்பை ஏற்று, “சொல்லுவண்ணே” என்க,
“டேய் தம்பி.. பாப்பாக்கு வலி வந்துடுச்சுடா.. ஹாஸ்பிடல் போயிட்டுருக்கோம். சீக்கிரமா வா” என்று பரபரப்பாய் அவிநாஷ் கூறினான்.
“அண்ணே.. எங்க போறீய? அவ ஒங்களோடத்தேம் இருக்காளா?” என்றவன் குரல் தடுமாற,
“இருடா தரேன்” என்றவன் அலைபேசியை தன் மனையாளிடம் கொடுக்கவும் அதை சங்கமித்ராவின் காதில் அவள் வைத்தாள்.
“தங்கம்.. மித்ரா..” என்று அவன் பதட்டமாய் அழைத்து,
“லேய்.. வண்டிய எடுங்கலே.. அவோளுக்கு வலி வந்துட்டாம்” என்று பதட்டமாய் கூறியபடி ஓட்டமும் நடையுமாய் வண்டியை நோக்கிச் செல்ல,
“ஷ்ஷ்.. ப..ப..பதறாதீங்க” என்றாள்.
அவள் குரலைக் கேட்டவன் தன்னைப் போல் தன் நெஞ்சை நீவிக் கொண்டான்.
அவன் நிலை புரிந்த ஆண்கள் வண்டியை கிளப்ப, தானும் பின்னே ஏறி அமர்ந்தவன், “மித்ரா” என்று அழைத்தான்.
“ஒ..ஹ்ஒ..ஒன்னுமில்ல.. ப..பதறாம வாங்க” என்று அவள் கூற,
“ஏம்லே நீதாம்லே அவளோக்கு ஆறுதலு சொல்லனும்” என்று வடிவேல் கூறினான்.
“மி..மித்ரா.. வந்துடுவேம்டி.. இந்தா வந்துட்டுத்தேம் இருக்கேம்” என்று கூற,
“ம்ம்..” என்றவளால் பேச இயலவில்லை.
நிமிடங்களில் அனைவருமே மருத்துவமனை வந்து சேர,
ஓட்டமாய் உள்ளே சென்றான்.
அறை வாசலில் அவிநாஷ் பதட்டமாய் அமர்ந்திருக்க, உள்ளே வலியில் மித்ரா அவ்வப்போது கத்திக் கொண்டிருந்தாள்.
“கீதாம்மா..” என்று அவள் கத்தும்போதெல்லாம் அவிநாஷ் பதறிக் கொண்டிருக்க, சச்சிதானந்தம் அதற்குமேல் பதறினார்.
“நானுந்தான் ரெண்டு புள்ள பெத்தேன். வந்ததும் புள்ளையத்தான் வாரி அணைச்சீங்க. இப்ப உங்க புள்ள கத்தவும் பதறுதாக்கும்?” என்றவர், “பதறாதீங்கங்க..” என்று கூற,
“ஆனாலும் உன் பொறாமைக்கு ஒரு நேரம் காலம் வேணாமாம்மா?” என்று சங்கீதா கேட்டாள்.
அங்கு வந்த வளவன், “அண்ணே.. மைணி.. மித்ரா?” என்க,
பதட்டமாய் பேச வந்த தன் கணவரைத் தடுத்து, “நீங்களும் பதறி அவரையும் பதற வைக்காதீங்க. அதெல்லாம் சங்குக்கு ஒன்னுமில்லை. பாப்பா தலையும் திரும்பிடுச்சு. கொஞ்ச நேரத்துல பேபி வந்துடும்னு சொல்லிட்டாங்க” என்று சங்கீதா கூறினாள்.
வளவன் பதட்டமாய் நிற்க,
“வேய்.. நீயு டாக்டருட்ட பேசிட்டு உள்ளப்போடா” என்று மகா கூறினான்.
சிறு தலையசைப்புடன் சென்று மருத்துவரிடம் பேசியவன் உள்ளே செல்ல, கட்டிலில் வலியுடன் படுத்திருந்தவளுக்கு செவிலியர் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அவன் உள்ளே வரவும், “ஒன்னும் பிரச்சனையில்ல சார்.. பயப்படாதீங்க” என்று கூறிய செவிலியர் வெளியே செல்ல,
அவள் அருகே வந்து அவள் கரம் பற்றிக் கொண்டவன், என்ன பேசவென்று தெரியாது பரிதவிப்பாய் அவளைப் பார்த்தான்.
“ஷ்ஷ்..” என்று முறைத்தவள்.. இல்லை இல்லை.. முறைக்க முயற்சித்தவள், “ஒ..ஒன்னுமில்ல” என்க,
“ம்ம்..” என்றவன் எதுவும் பேசாமல் அவள் கரத்தை மிக இருக்கமாய் பற்றிக் கொண்டான்.
நேரம் செல்லச் செல்ல பெண்ணவளுக்கு வலி அதிகம் பெற,
தன் பல்லைக் கடித்துக் கொண்டு, அவன் கரத்தினையும் இறுக பற்றிக் கொண்டு வலி பொருக்க முயன்றாள்.
பெரிதும் அலறல் சத்தங்கள் இல்லாதபோதும், அவள் எத்தனை வலியை உணர்கின்றாள் என்று அவனால் உணர முடிந்தது.
அவளுக்கும் சேர்த்து அவன் கண்களில் கண்ணீர் வெள்ளம் ஊற்றெடுத்தது.
“எஸ் கம்மான் சங்கமித்ரா.. புஷ் யுவர் பேபி” என்று மருத்துவர் கூற,
“ஆ..” என்று பல்லைக் கடித்தபடி தன் குழந்தையைத் தள்ள முயற்சித்தாள்.
“மித்ரா.. மித்ரா..” என்று அவள் நாமத்தை மட்டுமே ஜபித்துக் கொண்டிருந்தவன், ஒரு கையால் அவள் கரத்தையும், மற்றைய கரத்தை அவள் தலையைச் சுற்றிப் பிடித்து, கன்னம் தட்டியும் தன் இருப்பை உணர்த்த, பெரிதும் அவர்களை படுத்தி எடுக்காமல், அவர்களது செல்வக் குமரன் இப்புவியை அடைந்தான்.
‘ஹப்பா..’ என்றபடி ஓய்ந்து தன் சிரம் அரவணைத்திருப்பவன் கரத்தில் தன் தலைமுட்டி முகம் புதைத்தவள் கண்ணிலிருந்து மடமடவென நீர் வடிந்தது.
“மித்துமா..” என்றபடி அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன் கண்ணீர், அவள் கண்ணீரோடு சங்கமித்து கன்னம் கடந்தது…
இருவரும் பேசவில்லை, கத்தியழவில்லை.. கண்ணீரும் மௌன விசும்பலும், அந்த தருணத்தின் வலியையும், உணர்வையும் அவர்களுக்கிடையே கடத்த போதுமானதாக இருந்தது…
“ஆண் குழந்தை பிறந்திருக்காங்க” என்று மருத்துவர் சந்தோஷமாய் கூற,
தன்னவளைப் பார்த்து புன்னகைத்தவன், “நம்ம சேத்துவச்ச கண்ணேம்டி” என்று மெல்லிய கரகரத்தக் குரலில் கூற,
அவள் இதழ் பூவாய் மலர்ந்து, தலை மெல்ல அசைந்தது.
குழந்தையைப் பெண்ணவளின் நெஞ்சில் மருத்துவர் படுக்க வைக்க,
வீரிட்டு அழும் மகனை இருவரும் நடுநடுங்கும் விரல்களுடன் மெல்ல மயிலறகாய் வருடினர்.
அவனது அழுகையில் அவர்கள் இருவரின் முகமும் பூரித்து புன்னகைத்தது.
செவிலியர் குழந்தையை எடுத்துச் சென்று, சுத்தம் செய்து கொண்டுவந்து நீட்ட,
வளவன் கைகள் நடுங்கின.
“வேணாம் சிஸ்டர்.. கையெல்லாம் நடுங்குது” என்று அவன் கூற,
“ப்ச்..” என்று மித்ரா கோபமாய் சப்தம் எழுப்பினாள்.
அவளைப் பார்த்தவன் பயம் நிறைந்த பார்வையில், “பயமாருக்குடி” என்க,
“நான் கீழ பிடிச்சுக்குறேன் சார். வாங்குங்க” என்று செவிலியர் கூறினார்.
தன் கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்டவன், கை நடுக்கத்தை தாங்கியபடி குழந்தையை வாங்கிக் கொள்ள,
எட்டி அவன் மார்பில் உதைத்தான், குழந்தை.
“உள்ளருந்தவார எம்பொஞ்சாதிய ஒதச்ச, இப்பத என்னய ஒதக்கியோ?” என்று குரல் கமர கூறியவன், மித்ராவை நோக்க, அவள் சோபையாய் புன்னகைத்தாள்.
அந்த உணர்ச்சிகரமான தருணத்தைப் படம் பிடிக்க, அவர்களுக்கு கருவிகள் தேவையாகப்படவில்லை.. ஆழ்ந்த அந்த உணர்வின் நினைவுகள் போதாதா அதனை சேகரித்துக் கொள்ள?
அனைத்தையும் படம் பிடித்திட, கருவி தான் வேண்டுமெனில், நினைவுகளுக்கென்ன மதிப்பு? அப்படியான மதிப்பு மிக்க நினைவுகளிடமே அந்நிகழ்வை சேமிக்கும் பொறுப்பை இருவரும் ஒப்படைத்தனர்…
தான், தனது கையில் தனது மகன்… நெஞ்சில் சுமப்பவளின் நேசத்திற்கு சாட்சியாய் கையில் சுமப்பவனை, இனி தன் காலத்திற்கும் அன்பால் சுமந்து ஆராதிக்கும் பாக்கியம் பெற்றதாய் உள்ளம் மகிழ்ந்தான், அந்த ஆறடி ஆண் மகன்…
Comments
Post a Comment