திருப்பம்-112

 திருப்பம்-112



குழந்தையை வெளியே காத்திருப்பவர்களுக்குக் காட்ட வேண்டி அவன் கொண்டுவர, அவனுக்குத் துணையாய் செவிலியரும் வந்தார்.


தன் மகனுடன் வெளியே வந்து நின்றவன், “சிங்கக்குட்டி பொறந்துருக்கியாம்லே” என்க,


ஆண்கள் அனைவரும் “ஏ..” என்று கோஷம் போட்டனர்.


அதில் குழந்தை சினுங்க, “லேய்.. கத்தாதீயடா” என்று பதட்டமாய் கூறினான்.


“பொறுப்பாயிட்டாவளாம்” என்று மகா கூற,


“ஆவனும்மில்ல அத்தான்” என்று பரிதவிப்பாய் கூறினான்.


சுயம்புலிங்கம் மற்றும் தெய்வநாயகி, மருத்துவமனைக்கு விரைந்தோடி வந்திருந்தனர்.


“எம்மவராசா” என்று தெய்வா மனமார குழந்தையைக் கொஞ்ச,


“புள்ள எப்புடியிருக்காலே?” என்று லிங்கம் பதட்டமாய் கேட்டார்.


“நல்லாருக்காப்பா” என்றவன், தன் மகனைப் பார்த்து, “ஆனா தொற எந்தங்கத்த அழுவவுட்டுப்புட்டாருல்ல?” என்று கூற,


“அழுவாம புள்ள பெற முடியுமா?” என்று புன்னகையாய் தெய்வா கூறினார்.


அனைவரையும் நிமிர்ந்து பார்த்தவன், கண்களில் கண்ணீருடன் முகம் சிவந்து, நுனிமூக்கு நடுங்க உணர்ச்சிப் பிரவாகத்துடன் நிற்கும் அவிநாஷைக் கண்டான்.


சச்சிதானந்தத்திடம் இருக்கும் உணர்வுக்குவியளைவிடவும் அவன் முகத்தில் அதிகமாகவே இருந்தது…


தான் மகளாக பாவித்து.. இல்லை இல்லை.. தன் மகளானவள், இன்று ஒரு மகவை ஈன்றிருப்பது அவனைச் சொல்லொண்ணா உணர்வில் ஆழ்த்தியது.


கைகள் நடுக்கம் பெற, மார்பிற்குக் குறுக்கே அதனை இறுக்கமாகக் கட்டிக் கொண்டான்.


அவிநாஷை ஆழ்ந்து பார்த்த வளவன், அவன் முன் சென்று குழந்தையை நீட்ட,


அவனுக்கு அழுகையே வந்துவிட்டது.


அனைவருக்குமே அவனது உணர்ச்சி ஊற்றைக் கண்டு அத்தனை ஆச்சரியமாகவே இருந்தது.. மனைவியின் தங்கைமீது இத்தனை ஆழ்ந்த பந்தமும் கொண்டுவிட இயலுமா? என்ற ஆச்சரியமே அது…


கண்ணீர் வழிந்தோடு குழந்தையை வாங்கியவனிடம், “உ..உங்க பாப்பாவோட மகேம்” என்க,


“டேய்..” என்றவன் குழந்தையை தன் மாமனாரிடம் கொடுத்துவிட்டு, வளவனை அணைத்துக் கொண்டான்.


அவனிடமிருந்து இன்பமாய் பிறந்த விசும்பல் ஒலி, அனைவரையும் கலங்க வைத்தது.


தெய்வா உட்பட, அவனது ஆத்மார்த்தமான அன்பை ஆச்சரியமாய் பார்த்தார்.


“அண்ணே..” என்று வளவன் தோள் தட்டிக் கொடுக்க,


“தேங்ஸ்டா..” என்றபடி நகர்ந்தவன் தனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டு “வாழ்த்துக்கள்டா” என்றான். “இப்பம் ஒங்க புள்ளையோட புள்ளைய என்னனு சொல்லப் போறீய? தாத்தன்னு சொல்லிப்பீயளோ?” என்று வளவன் கேலி செய்ய,


அவனை புன்னகையாய் பார்த்தவன், “என் தம்பி புள்ள எனக்கும் புள்ளடா” என்று கூறி அவனை நெகிழ வைத்திருந்தான்…


ஒவ்வொருவராய் குழந்தையை உச்சிமுகர, மீண்டும் செவிலியர் குழத்தையை உள்ளே கொண்டு சென்றார்.


சங்கமித்ராவிற்கான சிகிச்சைகள் முடியவும், அவளை பொதுவறைக்கு மாற்ற,


அனைவரும் அவளை நலம் விசாரிக்க வந்தனர்.


“சங்குமா..” என்று தாட்சா மகளிடம் வந்து நிற்க,


“ம்..ம்மா..” என்று மெல்லிய குரலில் அழைத்தாள்.


“பாப்பா.. ஓகேவாடா நீ? டாக்டர் எல்லாம் செக் பண்ணிட்டாங்களா? ஓகே தானே?” என்று அவிநாஷ் கேள்விகளை அடுக்க,


“எ..எல்லாம் ஓகே அ..அத்தான்” என்றாள்.


சச்சிதானந்தம் தன் மகளின் தாய்மை அவதாரத்தில் மனம் நிறைந்து அவள் சிகை வருடினார்.


“ஏத்தா தங்கபுள்ள.. எம்புள்ளையோட வெளாட ஒருத்தன தந்துட்டீய போலயே” என்று வடிவேல் உற்சாகமாய் கூற,


“இருடா தம்பி.. ஓம்புள்ளையோட வெளாட வந்த புள்ளையா, அவேம் அழுவுற ராகத்துக்கு தொற எசப்பாட்டுப் பாடப்போறாவியளானு இனித்தேம் தெரியும். ரெண்டேருமா சேந்து அழுவுற புள்ளைய சமாதானஞ் செய்யுறேமுன்னு தெருத்தெருவா தூக்கிட்டு அலையப்போறீய பாரு” என்று மகா கேலி செய்து சிரித்தான்.


விடயம் அறிந்து திரிபுராவும் சிவபாதனும் வந்திருந்தனர்.


குழந்தையை உச்சி முகர்ந்த திரிபுரா, “அழகு ராசா..” என்று கொஞ்சி தீர்த்துவிட்டாள்.


சிவபாதன் மித்ராவின் நலம் விசாரிக்க, திரிபுராவும் அவளிடம் சிலபல அறிவுறைகளைக் கூறிவிட்டுச் சென்றாள்.


சங்கீதா தனது தங்கையுடனே அமர்ந்துகொண்டு, உற்சாகமாய் “ஓம்புள்ள உன்னப் போலயா இல்ல, அவங்க போலயா?” என்று கேட்க,


சங்கமித்ரா வளவனைப் பார்த்து, “அ..அந்த குட்டிக்..குறுவிக் கூடப் பா.. பாத்தாலே தெரியலையா?” என்றாள்.


வளவன் புன்னகை நீண்டு விரிய,


உடன் பிறந்தவன் முடியை சிலுப்பிய விக்ரம், “ஜீனக் கடத்துறீயளோ?” எனக் கேட்டு கேலி செய்தான்.


“சரிலே.. புள்ளயே சோர்ந்து கெடக்கு.. எல்லாம் கூடி பேசாத அவள அயர வுடுங்க” என்று சுயம்புலிங்கம் கூற, மேற்கொண்டு ஆக வேண்டியதை கவனிக்க அனைவரும் நகர்ந்தனர்.


தாயுக்கும் சேயுக்குமான சிகிச்சைகள் முடிந்து, இருவரும் வீட்டிற்கு அனுப்பப்பட, தான், தன்னவன், தன் மகனென வாசலுக்கு வந்து நின்றாள், மித்ரா.


அத்தனை நிறைவாக உணர்ந்தது அவள் மனம்.


மகளுக்கும், மருமகனுக்கும், பேரனுக்கும் ஆலம் சுற்றி தாட்சாயணி வரவேற்க, பரிபூரண மனநிலையோடு உள்ளே நுழைந்தனர்.


தாட்சா மற்றும் சச்சிதானந்தத்தின் நெருங்கிய சொந்தங்கள் சிலர் வந்திருக்க, சில நிமிடங்கள் அவர்களுடன் பேசிவிட்டு பெண்ணவள் தன் குழந்தையுடன் உள்ளே சென்றாள்.


குழந்தை சிணுங்கும் சப்தம் கேட்டு தாட்சாயணி அறை நோக்கிச் செல்ல,


அவருக்கு முன்பாய் ஓடியவன், “நாம்பாக்குறேம் அத்தே..” என்றான்.


“இருக்கட்டும் மாப்பிள்ளை. நான் போய் பாக்குறேன்” என்று அவர் கூற,


“இந்தா கெளம்பிடுவேம்.. நீங்கதான ஒங்க மவள பாத்துக்கப்போறீய? இப்பத நாயிருக்கையில நாம்பாக்கேனே” என்று சிறுபிள்ளை போல் கூறினான்.


அதில் புன்னகைத்த தாட்சா சரியெனச் சென்றுவிட,


உள்ளே நுழைந்தவன், “மித்ரா மவனே.. என்னம்லே” என்றபடி வந்தான்.


குளியலறையிலிருந்து வெளியே வந்த மித்ரா, கணவனின் வாக்கியத்தில் முகம் மலர்ந்து சிரிக்க, 


குழந்தையைத் தன் கரத்தில் ஏந்தியவன், கைகால்களை ஆட்டி அவன் சிணுங்கும் அழகை ரசித்தான்.


“வடிவேலு சொல்லுவியாம்டி.. எம்புள்ள அழுதாகூட அழுகுதாம்லேனு.. இப்பத்தேம் புரியுது” என்று ஆழ்ந்த குரலில் வளவன் கூற,


“போகப் போக தெரியும்.. அ..அந்த அழகு படுத்துற ப்..பாடு” எனச் சிரித்தாள்.


அதில் சிரித்துக் கொண்டவன், “முடிதான் தங்கம் என்னையப் போல.. அவேம் புருவ நெழிவுலாம் பாரேம்.. ஒன்னயப்போலத்தேம் தெரியுது” என்று கூற,


தன்னவன் குழந்தையை ரசிக்கும் பாங்கை ரசித்துப் பார்த்தாள்.


சிணுக்கிய குழந்தை மெல்ல அழத் தயாராக,


பதட்டமாய் அவளைப் பார்த்தான்.


அதில் களுக்கென்று சிரித்தவள் கரம் நீட்ட, குழந்தையை அவளிடம் கொடுத்தவன், அவள் முதுகிற்குப் பின் அணைவாக தலையணைகளை வைத்துக் கொடுத்தான்.


தன் மகனின் பசியுணர்ந்து, தன் தனங்கள் சுரந்த அமுதை, அவ்வினியவனுக்கு ஊட்டியவள் முகம், அத்தனை திருப்தியை வெளிப்படுத்தியது…


சொல்லில் வடிக்க இயலாத, தாய்மை கொடுத்த பூரிப்பு, அதில் பொங்குவதாய் பூரித்தது அவள் முகம்.


அவள் மார்பை முட்டி, கால்களை எட்டி உதைத்து, தன் வயிற்றை நிறைத்தக் குழந்தை, பாலுண்ணும்போதே உண்ட மயக்கத்தில் உறங்கிவிட, அதில் கிளுக்கெனச் சிரித்தாள்.


வேகமாய் வந்து குழந்தையை அவளிடமிருந்து பாந்தமாய் வாங்கியவன், அருகே விரித்திருந்த விரிப்பில் படுக்க வைத்து, சுற்றி தலையணைகளை மதில்களாக்கினான்.


கணவன் செயல்கள் ஒவ்வொன்றையும் ரசித்துத் தன்னுள் பாவை சேமிக்க, அவளருகே வந்தமர்ந்தவன், அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டான்.


எதிலிருந்த நிலைப்பேழையிலிருக்கும் கண்ணாடியில் தெரிந்த அவள் பிம்பத்தை பார்த்தவன், மூச்சை இழுத்து விட்டான்.


பால் மணம், அவன் நுரையீரலெங்கும் நிறைந்தது.


சுகந்தமான மனநிலைத் தன்னைப்போல் உருவானது.


இரவு உடையில், முருக்கிக் கட்டி, கலைந்தாடும் கொண்டை, காதில், காதைக் கட்டியணைத்த சின்ன தோடு, கழுத்தில் அவன் அணிவித்த மாங்கல்யம், வளைகளற்ற கைகள், சோர்ந்த முகம், சோபையான புன்னகை…


அவளை அடிமுதல் நுனிவரைப் அணு அணுவாய் அவன் பார்வை ரசிக்க,


அதை உணர்ந்தவள், “எ..என்னங்க” என்றாள்.


“சாமி மாறி இருக்கடி” என்று கண்ணாடியில் அவள் பிம்பத்தைப் பார்த்தபடியே அவன் கூற,


தானும் தன்னைப் பார்த்தவள், சின்ன சிரிப்போடு, “எ..எந்தூரு சாமி ந்..நைட்டியோடவும் கொண்டயோடவும் இ.இருக்காங்க?” என்று கேட்டாள்.


“போடி போ.. தோற்றத்துலயாடி தெய்வீகம் இருக்குது? உணர்வு மித்ரா.. ஓங்கிட்ட இப்ப இருக்குற இந்த உணர்வு, சோர்வுல இருக்குற சொரூபம், தாய்மையில இருக்க வாசம், புள்ளைக்கு பாலூட்டயில ஓம் மொவத்துல வந்துபோச்சே ஒரு பாவம்..” என்று ரசனையோடு கூறி மூச்சை இழுத்து விட்டவன், “எங்கண்ணுக்கு சாமியாத்தாம்டி தெரியுற” என்றான்.


மெல்லிய புன்னகையுடன், “ஏன் சா..சாமியா தெரியுறேன் தெரியுமா?” என்க,


“ஏவாம்?” என்று கேட்டான்.


“எ..எம்புருஷன் எ..என்ன நடத்துற விதம் அப்டி.. அந்த ஆண்டவன்.. த..தன் பொண்டாட்டிகிட்ட ஈ..ஈகோ பாக்கல.. கௌரவம் பாக்கல.. வ.வள்ளி சாதாரண பெண் தான். அ.. அந்த முருகனோட அன்பால முருகனோட எணஞ்சு சாமியா பா..பாக்க படுறாங்கள்ல. அப்டித்தான்” என்று அவள் கூற,


அவள் தலையை இதமாய் கோதி புன்னகைத்தான்.


மௌனமும் தனிமையும் மோகத்தைக் கொடுத்த எண்ணற்ற காலங்களைத் தாண்டி, இன்று வித்தியாசமான ஒரு உணர்வைக் கொடுத்தது…


இருவருக்குமே.. 


தாய்மைதான்.. 


பாலினம் அற்ற உறவல்லவா தாய்மை? தங்களுடைய மகனும் தங்களுடன் இருக்கின்றான், அவனைத் தாங்க வேண்டும், ஆராதிக்க வேண்டும், அரவனைக்க வேண்டும், கண்ணின் மணிபோல் காக்க வேண்டும் என்று இருவர் உள்ளமும் போட்டி போட்டுக்கொண்டு யோசித்த எதிர் காலக் கனவுகள், இருவரையும் அந்தத் தாய்மையை உணரச் செய்தது.


தனது சட்டைப் பையிலிருந்து கடித உரை ஒன்றை நீட்டினான் வளவன்.


புன்னகையாய், “ட்ராயர த்..திறங்க” என்று அவள் கூற,


சிரித்தபடி திறந்து அதிலிருந்த உரையை எடுத்துக் கொண்டான்.


அவனது உறையைப் பிரித்தாள், பெண்.


அவளது உரையைப் பிரித்தான், ஆடவன்.


‘அன்புள்ள திருமாலுக்கு,


அப்பாவாயிட்டீங்க இல்லையா? வாழ்த்துக்கள் கணவரே.. இனிமே ரெஸ்பான்ஸிபிலிடீஸ் அதிகமாயிடுச்சுல நமக்கு.. டோன்ட் வொர்ரி.. ஷேர் செய்துக்கலாம். ஷிப்ட் போட்டு பேபியைப் பார்த்துக்கலாம். நம்ம பாப்பாக்கு நிறைய கதை சொல்லி வளர்க்கலாம். ஒழுக்கத்தைக் கத்துக்குடுத்து வளர்க்கலாம். அத்தனை பேரையும் மதிக்கச் சொல்லிக் குடுத்து வளர்க்கலாம். அப்பா போல அனுசரணையா, தைரியமா இருக்கவும், அம்மா போல பொறுப்பா, பண்பா இருக்கவும் நம்ம குழந்தைக்கு சொல்லிக் குடுக்கலாம். அவன் நமக்கு பேரென்டிங் சொல்லித் தருவான்.. ஆமா! நம்ம குழந்தைதான் நமக்கு பேரென்டிங் சொல்லித் தருவாங்க. அவங்கட்டருந்து நம்ம கத்துக்கலாம். நம்ம காதலை அவனுக்கும் குடுக்கலாம். கனவுகளை நிஜமாக்கி சந்தோஷத்தை குடுக்கும் நம்ம குழந்தைக்கு எல்லாமே செய்யலாம். அப்பாவாயிட்டீங்கள்ல? ஆல் தி பெஸ்ட் மிஸ்டர் திருமால்.. ரெண்டு குழந்தையை சமாளிக்க ரெடியாகிக்கோங்க’


‘அன்புள்ள மித்துக்கு,


அம்மாவாயிட்டீயல்ல? வாழ்த்துக்களு பொஞ்சாதி. பொறவென்ன? ஒன்னும் பயப்படாத. நாயிருக்கேம். புள்ளைய ரெண்டேரும் சேந்து பாத்துகிடலாம். அப்பாவுக்கும் புள்ளைய வளக்குறதுல சம பங்கு இருக்குல்ல? சேந்து நம்ம புள்ளைய சந்தோசமா வளப்பம். அவேனுக்குப் பாரு, ராஜாகுமாரிக் கதையில, நானு ஒன்னய வந்து சேந்த கதையத்தேம் சொல்லப் போறேம். சிரிக்காதட்டி.. நெசமாவே சொல்லுவேம் பாரு. நானு நீயுனு இருந்து, நம்ம காதலோட சேந்து, அத படம்போட்டு காட்ட வந்துபுட்டாவல்ல நம்ம புள்ள. தெகுரியத்தச் சொல்லித்தந்து வளப்பம். எதுக்கும் வெசனப்படாத. ரெண்டு புள்ளைய வளக்கனுமேனு கவலயெல்லாம் படாத. ஓம் மூத்த புள்ள.. அதேம் நாந்தேம்.. ரெண்டாது புள்ளய நல்லா பாத்துகிடுவேம்’


என்று இருவரின் கடிதங்களும் அவர்கள் இணைகளால் ஓசையின்றி வாசிக்கப்பெற்றது.


ஒத்த கருத்துக்கள்…


புன்னகையாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 


கரங்கள் கோர்த்துக் கொண்டது;

நெற்றி ஒன்றோடு ஒன்று ஒன்றியது;

புன்னகை இணைக்கு இணையாய் மலர்ந்தது;

ஒருவர் சுவாசம் மற்றவரின் ஆசுவாசக் கீதமாய் ஒலித்தது…


அறையின் நிசப்தம், அவர்கள் வாழ்வின் பரிபூரணத்தை உணர்த்தி, நிறைவைக் கொடுத்தது, நிறைவாய்!



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02