திருப்பம்-113

 திருப்பம்-113



அலைபேசியில் புன்னகை முகமாய் பேசியபடி, கூடத்திற்கு வந்த வளவன், “சாப்பாடுலயெல்லாம் ஒரு கொறயும் இருக்கக்கூடாது அண்ணே. எம்புட்டானாலுஞ் சரி. நல்லபடிக்கா பண்ணித்தந்துருங்க” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.


“யாருயா?” என்று தெய்வா மகனிடம் கேட்க,


“ஆசரமத்துக்கு சாப்பாடு அனுப்பனுமுனு சொல்லிருந்தேமுல்லம்மா? அந்த காண்டிராக்டு அண்ணேன்டதேம் பேசினேம்” என்று கூறினான்.


“நேரமா போயி சேத்துபுட சொல்லுய்யா” என்று சுயம்புலிங்கம் கூற,


“சொல்லிருக்கேம் ஐயா” என்று கூறினான்.


“அப்பறோஓஓம்…” என நீட்டி முழக்கிய தெய்வா, “பேருலாம் ரோசிச்சாச்சா?” என்று கேட்க,


“இதுக்குத்தேம் இம்புட்டு நீட்டி மொழக்குனியாக்கும்?” என்று லிங்கம் கேட்டார்.


லேசாய் புன்னகைத்த வளவன், “ரோசிச்சாச்சு அம்மா” என்க,


“என்ன பேராம்?” என்றார்.


“நவநீதன் ம்மா” என்று அவன் கூற,


“நவனீதனா? ஏம்லே.. நம்ம கொலசாமி முருகேனே பொறந்துருக்கியாமுனு பாத்தேம்.. முருகேம் பேரு வச்சா ஆவாதா?” என்று கேட்டார்.


அவர் கேட்டதும் வளவன் கோபம் கொள்வானோ என்று லிங்கம் நினைக்க, அவனோ அடக்கமாட்டாது வெடித்து சிரித்தான்.


மகன் சிரிப்பதை பெற்றோர் இருவரும் வித்தியாசமாய் நோக்க,


சிலநிமிடங்களுக்குப் பிறகுதான் அவனுக்கு பெற்றோர் முன் காரணமில்லாததைப் போல் சிரிப்பது உரைத்தது.


“சா..சாரி ஐயா..” என்றவனுக்கு அப்போதும் சிரிப்பு அடங்கியதாக இல்லை.


“என்னம்லே? என்னத்துக்கு இம்புட்டு சிரிப்பாம்?” என்று லிங்கம் கேட்க,


“ஒ..ஒன்னுமில்ல ஐயா” என்றவன், அம்மாவைப் பார்த்து, “ஏங்கூட பொறந்தவேம் பேரு என்னம்மா?” என்று கேட்டான்.


அவன் கேட்க வருவது தெய்வாவிற்கு புரிந்ததில் அவர் தலை குனிய,


தற்போது சுயம்புலிங்கம் சிரிக்கத் துவங்கினார்.


தந்தை சிரிப்பதில் தாய் கோபமாய் எழுந்து செல்ல,


சிரித்து முடித்த பெரியவர், “ஓம் ஒடம்பொறந்தவேம் எங்கனலே இருக்கியாம்? ரெண்டு நாளுல விசேஷமிருக்கு.. புள்ளைய கூட்டிகிட்டு முன்னமே வருவியானா?” என்று லிங்கம் கேட்டார்.


“ஆஸ்பத்ரில வுடுறத பொருத்துதேம் ப்பா. மைணிக்கு இப்புடி ஊருக்குக் கெளம்பி வந்த கையோட வலி வாருமுனு எதிரே பாக்கலியே.. அவேம்தேம் ரொம்ப பயந்துட்டியாம்” என்று வளவன் கூற,


“அத நீ சொல்றியாலே?” என்று மகனை கேலி செய்தார்.


ஆம்! ஊருக்குச் சென்றிருந்த கார்த்திகா தன் புகுந்த வீடு திரும்பியிருக்க, வீட்டிற்கு வந்து சேர்ந்த கையோடு அவளுக்கு வலி வந்திருந்தது.


ஊருக்கு அலைந்ததால் தான் சீக்கிரமே வலி வந்துவிட்டதென்று தெய்வாதான் ஒரு ஆடு ஆடி தீர்த்திருந்தார். ஒரு வாரம் ஆன பின்பு தான், மருத்துவர்கள் நாளை அவர்களை வீடு அனுப்பவுதாக இருப்பதைத் தெரிவித்திருந்தார்.


எதிர்பாராத விதமாய் கார்த்திகாவிற்குக் குழந்தை பிறந்திட்டதால், விக்ரம் சற்றே.. இல்லை இல்லை அதிகம் பதறி விட்டான்.


அழகிய ஆண் குழந்தையை அவள் ஈன்றெடுத்திருக்கவும், செய்தி அறிந்த சங்கமித்ரா, “அப்ப ரெண்டு குழந்தைகளுக்கும் சேர்த்தே பெயர் வச்சுடலாங்க” என்று ஆசையாகக் கேட்டிருக்க, வளவனால் மறுத்திடத்தான் இயலுமா?


நாளை குழந்தையுடன், கார்த்திகா வீடு வந்ததும் அதற்கு மறுநாள், விழாவை வைத்துக் கொள்ள முடிவு செய்திருந்தனர்.


இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து பெயர் சூட்டுவதால், வீட்டில் இடம் போதாதென, அருகிலுள்ள சிறிய கோவில் ஒன்றில் வைத்துக் கொள்ள முடிவு செய்தனர். 


“நீயு ஒருக்கா ஆஸ்பத்ரிக்கு போயி அவேன பாத்துபோட்டு சோலிய பாக்கப் போலே.. பயந்துட்டு இருப்பியான்” என்று லிங்கம் கூற,


“நீங்க வேற.. தீபியக்கா எந்நேரமும் அவேனோடதேம் இருக்காவ. நாம்போகையில எல்லாம் இருக்காவ ஐயா” என்று கூறினான்.


“எல்லாம் இப்புடி தோளு கொடுத்து ஒத்துமயா இருக்கத்தாம்லே அஞ்சு புள்ளைய பெத்துகிடுறது. ரொம்ப சந்தோசமா இருக்குது. எதுக்கும் நீயு போயி பாத்துபோட்டு போ” என்று அவர் கூற,


“சரி ஐயா” என எழுந்து சென்றான்.


வண்டியில் அமர்ந்ததும், சட்டைப் பையிலிருந்த அவளது கடிதத்தை எடுத்து மீண்டும் பார்வையிட்டான்..


சிரிப்பாக வந்தது அவனுக்கு.


‘அன்புள்ள திருமாலுக்கு,


நாம பேரு யோசிச்சுட்டோமா இல்லையானு உங்க அம்மா கண்டிப்பா கேப்பாங்க. அப்ப நவநீதன்னு நீங்க பெயரைச் சொன்னதும், முருகன் பேரு வைக்கலையானு தான் பேச்சு வரும். நல்லா பாத்துக்கோங்க எனக்கு கிருஷ்ணரு ஒசத்தி, முருகரு கீழனுலாம் கிடையவே கிடையாது. எல்லாருமே சாமி தான். நம்ம காதலை சேத்து வச்ச கிருஷ்ணருனு முதல்லருந்து சொன்னதால கிருஷ்ணர் பெயரா யோசிக்கச் சொன்னேனே தவிர வேற எந்த எண்ணமும் இல்லை. இது உங்களுக்கு புரியும்.. ஆனா அவங்களுக்கு சத்தியமா புரியாது. புரிய வைக்கவும் முடியாது.. டூ லேட்.. ஹ்ம்.. சரி கிடக்கட்டும்.. வந்து முருகன் பேரு வைக்கலையானு கேட்டா, அவங்க புள்ளை.. அதான் உங்க டிவின் பிரதர்ர்ர்.. அவரோட பெயரென்னனு யோசிக்கச் சொல்லுங்க. ஒன்னுக்கு அஞ்சு புள்ள பெத்தாங்கள்ல? வைச்சுருக்க வேண்டியது தான முருகன் பெயரா பாத்து? முக்கி முனங்கி நான் பெத்தெடுத்தேன்னா என் புள்ளைக்கு வைக்குற பேரை முடிவு பண்ண உங்களுக்கு உரிமை இருக்கலாம். ஏன்னா பிள்ளைக்கு நீங்க அப்பா. நான்தான பெத்தேன், எனக்குத்தான் உரிமைனு சண்டை போடுமளவு பகுத்தறிவு இல்லாம இல்லை எனக்கு. நீங்க சொல்றீங்களா.. சரின்னு யோசிப்பேன். அதுக்காக அந்த உரிமையை எல்லாருக்கிட்டயும்லாம் விட்டுத்தர முடியாது ஆமா. அவ்வளவு ஆசைனா அடுத்து ஆறாவதா பெத்து வச்சுக்க சொல்லுங்க சொல்லிட்டேன்’ என்றதோடு அவள் கடிதம் முடிந்திருக்க, மீண்டும் அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.


‘வாயாடி.. எம்புட்டு பேசுதா பாரு’ என்று எண்ணிக் கொண்டவன், மருத்துவமனை நோக்கிச் சென்றான்.


அங்கு மருத்துவமனையில், தனது மனையாளை அமர்த்தி அவளுக்கு பழச்சாறு வழங்கிய விக்ரம், “ஓகேதானம்லே? எதும் செய்யுதா ஒனக்கு?” என்று கேட்க,


“வந்த ஒரு வாரத்துல இந்த கேள்விய மட்டும் விடவே மாட்டுறீயலே? எனக்கு ஒன்னுமில்லேங்க. என்னமோ முன்னுக்கயே பொறந்துட்டியாம். டாக்டரு புள்ளையும் நல்லாருக்கான்னு சொல்லிட்டாவத்தான? ஏம் பயப்படுதீய?” என்று கார்த்திகா கேட்டாள்.


அவள் கரத்தில் தன் கரம் வைத்து, மென்மையாய் அவள் விரல்களோடு தன் விரல் கோர்த்துக் கொண்டவன், “போடி.. என்னமோ நீயுதேம் சாதாரணமா சொல்லிபுடுத. எனக்கு அச்சந்தாங்கல தெரியுமா? சுடருக்குக்கூட நீயு இம்புட்டு தவிக்கல. இவேனுக்கு..” என்றவனுக்கு இன்றும், அவள் மருத்துவமனையில் தவித்தது பதட்டத்தைக் கொடுத்தது.


கணவனை காதலோடு பார்த்தவள், “புள்ள பெத்தெடுக்குறதுனா சும்மாவா? வலிக்கத்தேம் செய்யும். இந்தா ஆச்சு.. பெத்துட்டேம்ல? அம்புட்டுத்தேம். வுடுங்கங்க” என்று கூறி, “எனக்கு வெசனமெல்லாம் சுடர நெனச்சிதேம்.. தீபியக்கா வீட்டுல புள்ளையளோட இருந்திகிடுவாதேம். ஆனா ஒரேபுடியா விட்டுபுட்டு படுத்து கெடக்க என்னமோ போலனு வருது” என்று கூறினாள்.


அத்தனை நேரமில்லாத சோகம் அவள் முகத்தில்.


“புள்ளைக்கு மூனு வயசாச்சுட்டி. புரிஞ்சுகிடுதா. தீபி வாரயிலலேம் கூட்டியாரா. அவோ அம்மாக்கு ஒம்பு நோவுது தம்புக்கு காச்சலுனு சொல்லி, என்னயத்தேம் நல்லா பாத்துகிட சொல்லுதா. நீயேம் தவிக்க?” என்று கனிவாய் விக்ரம் கேட்க,


“என்னவும் இருக்கட்டும்.. எம்புள்ள ஏங்கிபோவாதா? பகலுல எப்புடியோ? ராவுல என்னத்தேம் தேடுவா” என்கையில் அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.


இரண்டாம் மகவை ஈன்றெடுக்கும் அனைத்துத் தாய்மார்களும் கடக்கும் போராட்டமே அது… அது விக்ரமிற்கும் புரிந்தது.


“அம்மா தம்பி வந்ததும் என்னைய வுட்டுபுடுச்சுனு சொல்லிடுவாளோனு எனக்கு மனசெல்லாம் அடிச்சுகிடுது தெரியுமா? நா..நா அப்புடிலாம் இருக்க மாட்டேம் தான?” என்று கார்த்திகா கேட்க,


“ஏட்டிக் கோம்ப” என்று அவள் கன்னம் ஒட்டிய ஈரத்தைத் துடைத்தவன், “இஞ்சாருடி.. இப்புடிலாம் ஒக்காந்து கரிக்காத. ஒடம்புக்கு ஆவாது. புள்ள பச்ச புள்ளதேம்.. வெவரம் பத்தாதுதேம். ஆனா நாம எதுக்கிருக்கோம்? சொல்லித்தரத்தேம் பெத்தவிய இருக்கோம். இந்த புள்ளைய நீ பாத்துகிடயில, நாஞ் சுடர பாத்துக்கேம். கொஞ்ச நேரத்துக்கு நா இவேன பாத்துகிடயில நீ சுடர வச்சுகிடு. இங்கன முடியாதபோயிதேம் இம்பிட்டு நா இருந்தது. இதயே ஏம்புள்ள புரிஞ்சுகிட்டாடி. பொறவு வீட்டுல மவேன சீராட்டுறத புரிஞ்சுகிட மாட்டாளா? அதுலாம் ஒன்னுமில்லட்டி” என்றபடி அவள் கன்னம் வருடினான்.


“உள்ள வராலாமா?” என்று வளவன் வெளியிருந்து குரல் கொடுக்க,


தன் மனையாளின் உடை திருத்தி, அமரச் செய்தவன், “வாம்லே” என்பதற்குள், “உள்ள வல்லாமா?” என்று சுடரின் குரலும் கேட்டது.


சித்தப்பாவும் மகளும் உள்ளே வர,


“அம்மா..” என்று உற்சாகமாய் அழைத்தாள்.


“என்ன மைணி.. கண்ணுலாம் கலங்கிகெடக்கு. ஒடம்பு நோவுதா?” என்று வளவன் கேட்க,


தன் மகளை வாங்கி முத்தமிட்ட விக்ரம், மனைவியின் அருகே மகளை அமர்த்தி, “சுடருக்காவத்தேம் அழுவ. நீயே கூட்டியாந்துட்ட” எனக் கூறி, “பாரு சுடரு.. அம்மா கரிக்கா” என்று கூறினான்.


தன் பிஞ்சு விரல்களால் அன்னையின் கண் துடைத்து, “தம்பிக்கு உவ்வாம்மா.. அம்மாக்கும் உவ்வா.. நாளைக்கு வர்வீயனு அத்தே சொல்லி” என்று மழலை மொழியில் கூறியவள், “உவ்வா சரியாயிடும்மா. க்ரை (அழுகை)” எனக் கூறி இடவலமாய் விரலாட்டி மறுத்தாள்.


மகளின் மழலை மொழி ஆறுதலில் கண்ணீரோடு புன்னகைத்த கார்த்திகா, அவளை முத்தம் கொஞ்சிட, குழந்தை கிளுக்கிச் சிரித்தாள்.


“தீபியக்கா இருக்காவளானு கேட்டேம். வீட்லத்தாம் இருக்காவன்னு சொன்னா. அதேம் சுடரயும் தூக்கியாருவமேனு போயி கூட்டியாந்துட்டேம்” என்று வளவன் கூற,


“சிப்பாக்கூட டுப்பு டுப்பு வந்தேம்” என்று குழந்தை அபிநயங்கள், மற்றும் சைகைகளோடு கூறினாள். கார்த்தியிடம் விரிந்த புன்னகை.


“ம்மா தம்பு நாளைக்கு வர்வீங்க. அழாதம்மா” என்று தத்தித் தடவி கூறியவள், அப்பாவின் மீது பாய்ந்து அவன் மீசையை முறுக்கி, சிரித்து விளையாட,


“பாத்தியாட்டி? என்னமோ சொன்னியே. எம்மவளப் பாத்தியா?” என்று பெருமை பொங்கக் கேட்டான்.


“அதென்னம்லே ஓம் மவ? மைணிக்கு யாராம்?” என்று வளவன் கேட்க,


“அவளையுஞ் சேத்து, மூனும் ஏம்புள்ளையதாம்லே மொத. பொறவுதேம் அவளுக்கு” என்று கூறினான்.


அதில் பெண்ணவள் இதழ்கள் பூவாய் மலர,


“ம்ம் ம்ம்.. ஸ்கோர் பண்ணுதலே” என வளவன் கேலி செய்தான்.


“புதுசா பண்ணனுமாக்கும்?” என்று கேட்டவன், “என்ன சுடரு?” என்க,


அவன் தொடையில் அடித்த கார்த்திகா, “சும்மாருவ” என்றாள்.


அதில் வாய்விட்டு சிரித்த வளவன், “புள்ளைக்கு பேரு ரோசிச்சீயளா மைணி?” என்று கேட்க,


“அதுலாம் முடிவு செஞ்சாச்சு கொழுந்தரே” என்றாள்.


“என்ன பேராம்?” என்று அவன் கேட்க,


“ஒளிவேந்தன்” என்றாள்.


“இஞ்சார்ரா.. ஒளிசுடரு, ஒளிவேந்தனா. அம்சமாருக்குது மைணி” என்று வளவன் கூற,


“அங்கனயும் பேரு கேள்வி பட்டேம். என்ன சொல்றாவ மவேம்” என்று கேட்டாள்.


“புதுசா என்னத்த சொல்றியாம்? அழுவ தூங்க சாப்டத்தேம்” என்று சிரித்தவன், விக்ரமுடன் சேர்ந்து பெயர் சூட்டும் விழாவைப் பற்றி சில நிமிடங்கள் பேசி முடிக்கவும், சுடருடன் புறப்பட்டான்.


Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02