திருப்பம்-114
திருப்பம்-114
நாட்கள் இரண்டு ரம்மியமாய் கடக்க, அன்றைய காலை, அந்த பரபரப்பற்ற கோவிலில், தங்கள் குடும்பத்தாருடன் வந்தனர் அனைவரும்.
அது சின்னக் கோவில் தான் என்பதால், மிக நெருங்கிய உறவினர்களைத் தவிர வேறு யாருக்கும் அழைப்பு விடுத்திருக்கவில்லை. அதனால் பெரிதும் கூட்டமின்றி, உள்ளே வந்தவர்கள், பெயர் சூட்டுவதற்கான ஆயத்தங்களைத் துவங்கினர்.
கோவில் பிரகாரத்தில் கார்த்திகாவும், சங்கமித்ராவும், தத்தமது மடியில், தங்கள் வாரிசுகளுடன் அமர்ந்திருந்தனர்.
“அக்கா.. உங்களுக்கு உடம்பு ஓகேவா க்கா?” என்று சங்கமித்ரா கொஞ்சம் திக்கலோடு கேட்க,
“ஏட்டி சங்கு.. திக்கலுலாம் நல்லா கொறஞ்சுடுச்சே..” என்று உற்சாகமாய் கூறியவள், “எனக்கெல்லாம் ஒன்னுமில்லத்தா. புள்ள கொஞ்சம் முன்னுக்கவே வந்துட்டாரேனுதேம் அவேனுக்காவ ஆஸ்பத்ரில கெடந்தது” என்று கூறினாள்.
“அம்மா.. ஷ்ஷ்.. டூ தம்பு தூங்கி” என்று அன்னையின் சத்தத்திற்கு குழந்தைகள் லேசாய் அசைவதைக் கண்ட சுடர் கூற,
பெண்மணிகள் இருவரும் சிரித்துக் கொண்டனர்.
அவர்களுடன் தனது மகனைத் தோளில் போட்டுத் தட்டிக் கொண்டே வந்தமர்ந்த தனம், “ஏத்தா சுடரு.. ஒனக்கு பாரேம் ரெண்டு தம்பி” என்று கூற,
“த்ரீ தம்பு அத்தே” என்று அவள் கையிலுள்ளவனையும் குறிப்பிட்டுக் கூறினாள்.
“அவேம் ஒனக்குத் தம்பியில்லட்டி. அத்தான்” என்று தனம் சிரிக்க,
“இல்ல.. வீரா தம்பு, நவநீ தம்பு, வேந்தா தம்பு” என்று மிரட்டலாய் கூறிவிட்டு ஓடினாள்.
சிரித்தபடி அங்கு வந்த தீபிகா, “சுடர போல பத்து புள்ள பெத்துகிட்டாலும் பாத்துடலாமுடி. கட்டி சமத்து” என்று கூற,
“பொறவென்ன? அடுத்த புள்ளைய பெத்து சுடர போல வளத்துகிட வேண்டியது தான?” என்று தனம் நக்கலாய் கேட்டாள்.
“ஏட்டிக் கோம்ப.. என்னத்த பேசுறா பாரு” என்று தீபிகா கூற,
பெண்களுக்கு பழச்சாறு வாங்கி சரியாக அவ்விடம் வந்த மகா, “என்னத்த பேசிபுட்டா எம்மச்சினி?” என்றான்.
“பாருங்க அத்தான்.. நாவொன்னும் இல்லாதத பொல்லாதத கேட்டுபுடல. சுடரபோல பத்து புள்ளையானாலும் பெத்து வளக்கலாமுனு சொன்னாவ. அதேம் பொறவென்ன அடுத்த புள்ளைய பெத்து சுடராட்டம் வளக்கத்தானனு கேட்டேம்” என்று தனம் கூற,
பக்கென்று சிரித்த மகா, “அடுத்த புள்ளையாக்கும்?” என மனையாளைப் பார்த்தான்.
விழிகள் விரித்து அவனைப் பார்த்தவள் மிரட்டலாய் நோக்க, “போதுமுத்தா.. இருக்கற ரெண்டையே சமாளிக்க தெம்பில்லாத திரியுறோமாக்கும். கூட ஒன்ன பெத்து சமாளிக்க அவட்டயும் தெம்பில்ல எங்கிட்டயும் தெம்பில்ல” என்று சிரித்தபடியே கூறினான்.
“என்ன அண்ணே.. பத்து பன்னெண்டு வயசுல புள்ளைய வச்சுட்டு ஏதோ பேரம்பேத்தி எடுத்த கணக்கால்ல பேசுதீய?” என்று கார்த்திகா கேட்க,
“வயசாயிட்டுல்ல?” என்றான்.
“ஆருக்கு இப்பத வயசாச்சாம்?” என்று தீபிகா வேகமாய் கேட்க,
“எனக்குத்தேம்டி. நீயு கொமரிதேம்” என்று கண்ணடித்தான்.
“ம்க்கும்.. அதுலாம் ஒன்னும் ஆனாபோல இல்ல. சும்மா ஒன்னு ரெண்டு நர மொழச்சா வயசானதா கணக்கா? எகன மொகனயா பேசாதீய” என்றா தீபி கூற,
“பொறவு என்ன? அக்காவே சொல்லுது. அடுத்து பொம்பள புள்ளையா ஆம்பள புள்ளையா?” என்று தனம் கேலி செய்தாள்.
அதில் வாய்விட்டு சிரித்த மகா, “நீயாதாம்டி மாட்டிகிடுறவ அவோட்ட” என்றுவிட்டுச் செல்ல,
முகம் சிவந்த தீபிகா, “எனத்தயாது பெய்யாத கெடடி. வந்துட்டா எனக்கு வழி சொல்ல” என்றுவிட்டு தானும் சென்றாள்.
கோவில் பந்தலின் கீழ் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துமுடித்ததும் பெண்களை குழந்தைகளுடன் அழைத்துவரும்படி ஐயர் கூறவும்,
விக்ரமனும் வளவனும் அவ்விடம் வர,
விக்ரம் தன் குழந்தையை லாவகமாய் தூக்கிக் கொண்டு மனையாளுக்குக் கரம் கொடுத்தான்.
“என்னம்லே புள்ளைய ஒரு கையால புடிச்சுகிட்ட?” என்று வளவன் பயமும் ஆச்சரியமுமாய் கேட்க,
“தொரை சார்.. எனக்கு இது ரெண்டாது புள்ள. அனுபவம் சாஸ்தி. புள்ளய தூக்கியாங்க” என்று கேலியாய் கூறியவன் தன் மனையாளையும் அழைத்துக் கொண்டு சென்றான்.
சங்கமித்ரா கிளுக்கென்று சிரிக்க,
“ஏட்டி மைணி.. என்ன அகமா? எங்கண்ணேண பாத்து சிரிக்கவ?” என்று தனம் சண்டை பிடைப்பதைப் போல் கேட்க,
“ஆமா.. அப்படித்தான் சி..சிரிப்பேன். போடி” என்று பதில் கொடுத்தாள்.
“அண்ணே.. பாத்தியா? நீயும் தூக்குண்ணே. போவம்” என்று தனம் எழ,
அவனோ மிக மிக மெதுவாய், பதமாய் குழந்தையை ஏந்திக் கொண்டு ஒரு முழு நிமிடம் நகராமல் அப்படியே குழந்தையை இரண்டு கைகளிலும் சரியாக பிடித்திருக்கின்றோமா என சரி பார்த்துவிட்டு, “வாரியா?” என்றான்.
‘பாத்தியா?’ என்பதாய் தனத்தைப் பார்த்த சங்கமித்ரா, “எனக்குக் கை கு..குடுக்க மாட்..டீங்களா?” என்க,
“புள்ளைய புடிச்சுருக்கேம்டி” என்றவன், சுற்றி முற்றி பார்த்தான்.
சிவபாதன் சற்று தொலைவில் நிற்க, “அத்தான்..” என்று அழைத்தான்.
அவரும் அருகே வர,
“புள்ளைய புடிச்சுக்குறியளா?” என்று நீட்டினான்.
“கொடுலே கொடுலே” என்றவரும் குழந்தையை ஆசையோடு வாங்கி பாந்தமாய் பிடித்துக் கொள்ள,
வளவன், தன் மனையாள் எழ உதவி செய்தான்.
“இங்குட்டுருந்து நீ எந்திக்க மாட்டியோ?” என்று தனம் புருவம் உயர்த்தி கேட்க,
“எ..ஏன் நீ எங்கண்ணன வேலையே வா.. வாங்க மாட்டியாக்கும்?” என்று கேட்டாள்.
“சாமியளா.. போதும் பொறவு வச்சுகிடுவ. புள்ள எழுங்குள்ள பேர வச்சுட்டு வூடு போயி சேரனும்” என்று வளவன் கூற,
“ஆனாலும் ரொம்பத்தேம் பொறுப்பாவுற அண்ணே” என்று கூறியபடி தனம் சென்றாள்.
தன் மனையாளை அழைத்து வந்தவன், கார்த்திகா விக்ரம் அமிர்ந்திருக்கும் பலகைக்கு பக்கத்துப் பகலையில் அமர, சிவபாதன் குழந்தையை அவர்களிடம் கொடுத்தான்.
மந்திரங்கள் ஓதி, முன்னே பரப்பப் பட்டிருக்கும் நெல்லில், இரண்டு பெற்றோரும் பிள்ளைகளின் பெயரை எழுதி முடிக்க, குழந்தைகளுக்கு அத்தையாகப் பெற்றவர்கள் வரிசையாக வந்து, பெயரைக் காதில் கூறினர்.
இனிதாய் பெயர் வைக்கும் வைபோகம் முடிந்திட, குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வாசல் வந்தனர்.
மகாவும் வடிவேலும் நந்தி அன்ட் கோ குடும்பத்தைக் கோவில் வாசலுக்கு ஓட்டி வந்திருக்க, குழந்தைகளோடு சேர்ந்து மாடுகளிடம் ஆசிர்வாதம் வாங்கினர்.
“லேய் நந்தி.. இஞ்சாருடா. அண்ணே மவேம்” என்று நந்தியின் முன் நவநீதனைக் காட்டி வளவன் கூற,
நந்தி “ம்மா..” என்று சப்தமிட்டான்.
“ச்சூ.. கத்தாதடா.. புள்ள முழிச்சுக்கப் போறியாம்” என்று வளவன் கூற,
அவன் இடையோடு தன் முகம் உரசி தலையாட்டினான்.
“நந்தி மனுஷனா இல்ல ஓம் புருஷேம் மாடானு தெரியிலத்தா” என்று மகா சிரித்தபடி சங்கமித்ராவிடம் கூற,
“எ..எனக்கும் தான் அண்ணா” என்றாள்.
இப்படியே பேச்சும் கலகலப்புமாய் பொழுது ஓட, குழந்தை மெல்ல சிணுங்கத் துவங்கினான்.
அனைவரும் வருவதும் பேசுவதுமாகவே இருக்க, சங்கமித்ரா தன்னவனை விழிகளால் தேடிக் கொண்டிருந்தாள்.
அவளைச் சுற்றி அத்தனைப் பேர் இருந்தும், அவள் தேடியதென்னவோ அவனைத் தான்.
“பாப்பா.. என்னடா?” என்று அவிநாஷ் வினவ,
“அவங்க எ..எங்கத்தான்?” என்றாள்.
“இருடா பாத்துட்டு வரேன்” எனச் சென்ற அவிநாஷ், வளவனை அனுப்பி வைக்க,
அவளிடம் வந்தவன், “சொல்லு மித்ரா” என்றான்.
“த..தம்பி சிணுங்க ஆரமிச்சுட்டான்… பால் குடுக்கனும்பா. பொ..பொடவை நனையுர போல இருக்கு” என்று சங்கடமாய் முகத்தை சுருக்கி அவள் கூற,
“இஞ்சாருடி.. அதேம் அண்ணே அத்தேலாம் இருக்காவல்ல? அவியட்ட சொல்லிட்டுப் போவலாமுல்ல?” என்று சிரிப்பாய் கேட்டான்.
“உங்கட்ட சொல்ற போல எ..எல்லார்டயும் சொல்ல முடியுமா?” என்று அவள் முனுமுனுக்க,
அவன் புன்னகை நீண்டது.
“வீட்டுக்கு போற வார சமாளிக்க முடியுமாடி?” என்று வளவன் குழந்தையைத் தாங்கிக் கொண்டு எழுந்தபடி கேட்க,
“தெ..தெரியல” என்றாள்.
“சரி இரு வாரேம்” என்றவன், “ஏ மவனே.. இர்ரா ராசா” என்று குழந்தைக்குத் தட்டிக் கொடுத்தபடி சென்றான்.
சில நிமிடங்களில் அவன் வந்து, “போவமா?” என்க,
“எங்க?” என்றாள்.
“வூட்டுக்குத்தேம். எல்லாருட்டயுஞ் சொல்லிடேம். அத்தேட்ட வூட்டு சாவியும் வாங்கிட்டேம். நம்மல முன்னுக்கப் போவச் சொன்னாவ. ஒன்னய காருல கொண்டோயி விட்டுட்டு நா வந்துகிடுதேம். மித்தவியள கூட்டியார வண்டி வோணுமில்ல?” என்று விளக்கம் கொடுத்தபடி அவளோடு வாகனம் அருகே சென்றான்.
“நா.. நான் அத்தை மாமாட்டச் சொல்லலையே” என்று அவள் கேட்க,
“நாஞ்சொல்லிட்டேம். நீயு வந்து சொல்ல சங்கடப்படுவனு நானே அம்புட்டு பேருட்டயுஞ் சொல்லிட்டேம்” என்றான்.
மெல்லிய புன்னகையுடன் அவள் உள்ளே அமர,
குழந்தையை அவளிடம் கொடுத்தவன், வண்டியைக் கிளப்பினான்.
“அந்தா பையில துண்டிருக்குடி.. நீயு புள்ளைக்கு பாலுகுடுக்கனுனா குடு. நா வண்டிய மெதுவாத்தேம் ஓட்டுறேம்” என்று அவன் கூற,
சரியெனக் கூறி தன் மகனுக்கு அமுதூட்டத் துவங்கினாள்.
அமுதுண்டபடி குழந்தை தூங்கிவிட, குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தவளுக்கும் சோர்வில் கண்கள் சொருகியது.
கால்களை மடித்தமர்ந்து குழந்தையை மடியில் போட்டுக் கொண்டவளும் அப்படியே கண்ணயர்ந்தாள்.
உறங்கும் தன் இரண்டு உயிர்களையும் பார்த்தவனுக்கு உலகமே அவன் வசம் வந்துவிட்ட நிறைவு.
மெல்ல பொறுமையாக அப்பயணத்தை நிறைவு செய்தவன், வீட்டை அடைய,
இருவரும் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தனர்.
சிறு புன்னகையுடன் சென்று வீட்டுக் கதவுகளைத் திறந்துவிட்டு வந்தவன், அவளிடமிருந்து குழந்தையைத் தூக்கிச் சென்று பாந்தமாய் படுக்க வைத்து வந்தான்.
அவளையும் தூக்கிச் செல்ல ஆசைதான். ஆனால் தற்போது தூக்கிச் செல்லும் எடையில் அவள் இல்லையே. புன்னைத்தபடி அவளது குண்டு கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தான்.
இருந்த சோர்விற்கு அவள் அசைந்துகொடுத்தாள் இல்லை.
“ஏட்டி மித்ரா.. வூடு வந்துட்டு” என்று அவன் எழுப்ப,
உறக்கம் கலையாது கண் விழித்தவள் மடியில் குழந்தை இல்லாததைக் கண்டு திடுக்கிட்டாள்.
“ஏட்டி பதறாத” என்றவன், “புள்ளைய உள்ள படுக்க வச்சுட்டேம். வா” என்று அழைக்க, ஆசுவாச பெருமூச்சுடன் எழுந்தாள்.
“உங்க புள்ளையமட்டும் உள்ளத் தூக்கிட்டுப் போயிட்டீங்க?” என்று சிறு கோபம் போல் அவள் கேட்க,
“ஒன்னயகூட தூக்கிட்டுப் போவத்தேம் ஆச..” என்றபடி நமட்டு சிரிப்பு சிரித்தான்.
அவனைக் கோபம் போல் பார்த்தவள், “வெயிட் போட்டுட்டேன்னு கேலி பண்றீங்கள்ல?” என்று திக்கித் திக்கிக் கேட்க,
“நளியடிப்பேம்தாம். ஆனா நியு நெனக்காப்புல இல்ல” என்றபடி அவளைக் கட்டிக் கொண்டு, “புஸ்கு புஸ்குனு நல்லாருக்க தெரியுமா?” என்றான்.
முகம் செவ்வரளியாய் சிவக்க நாணம் கொண்டவள், “ப்ச்.. வுடுங்க. கசகசனு இருக்கு” எனக் கூறிச் சென்று உடை மாற்றி வந்தாள்.
“ரொம்ப தெனயாருக்காடி? அசந்துருக்கியே” என்று வாஞ்ஞையுடன் அவன் கேட்க,
கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள், தன் அருகேயுள்ள இடத்தைத் தட்டிக் காட்டினாள்.
புன்னகையாய் அவள் அருகே அவளைப் பார்த்தபடி அவனும் ஒருக்களித்துப் படுக்க,
“டயர்டா இருக்கு” என்றாள்.
அவள்மேல் கையிட்டு அணைத்துக் கொண்டவன், “மொவத்தப் பாத்தாளே தெரியுதுடி. பேசாத புள்ள தூங்கயிலேயே நீயும் தூங்கு” என்று கூற,
“ம்ம்..” என்றாள்.
சில நிமிடங்களுக்கு இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
“ந்..நி..நிறைவாருக்கு” என்று அவள் ஆழ்ந்த குரலில் கூற,
பளிச்சென்ற புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
“நா..நான்லாம் எப்புடி இ..இருந்தேன் ஒரு மூனு வருஷம் ம்..முன்ன. இப்ப என் வ்..வா..வாழ்க்கையப் பாருங்க?” என்று கூரையைப் பார்த்தபடி கூறியவள், “இதுலாம் நி..நினைச்சே பாக்கலத் த்..தெரியுமா?” என்று கேட்க,
‘அப்படியா?’ என்பதைப் போல் தலையசைத்துக் கேட்டான்.
“நம்ம மு..முதல் ச..சந்திப்பு.. முதல் ஃபோன் கால். நான் பேச ப..பயந்ததால உருவான கக்..கடிதம். நீங்க அனுப்..பின மு..முதல் லெட்டர். நம்ம நைட் ரைட். அ..அதெல்லாம் ம்..ம்..மறக்கவே முடியாது. வா..வாடிக்கையா மாறின ட்..டீ கடை, நம்ம கி.. கிருஷ்ணன் கோவில்லாம்..” என்று கண்களில் நீர் மின்னக் கூறிக் கொண்டிருந்தாள்.
“க.. கல்யாணத்துக்குப் பிறகு வ்..வீட்டில வந்த சண்..டைகள். அ..அதுக்கு என்ன சமாதானப்..படுத்த வந்துட்டு நா.. நான் உங்கள சமாதானம் பண்றது” எனக் குறும்புக் குரலில் கூறியவளைச் செல்ல கோபத்துடன் பார்த்தபடி பக்கென்று சிரித்தான்.
தானும் புன்னகைத்தவள், “எ..என்னை புரிஞ்சுகிட்டு நீ..நீங்க பாத்துப் பாத்துப் பண்ணின எல்லாமே.. எ..எங்க தமிழ் மிஸ் சொ.. சொல்லிருக்காங்க. ப்..புருஷனோட குணம் பொ..பொண்டாட்டி முடியாம படுத்துக் கிக்..கிடக்கும்போது தெரியுமாம். எ..எம்புருஷன் தங்கமுனு எனக்கு எ..எப்பவோ தெரியும்தான்.. ஆ..ஆனா அந்த ஆறு மாசம்.. எ.. எனக்காக நீ..நீங்க தவிச்ச தவிப்பு.. இ..இன்னவர ஆஸ்பிடல்ல உள்ள நர்ஸ்லாம் ந..நம்ம லவ் பாத்து பூரிக்கும்போது க்கக்.. கர்வமாருக்கும். எ..என் புருஷனுக்கு ந்..நான் உயிருனு கத்தி ஊரைக்கூட்டி சொல்லத்தோனும். கொடுத்துக் க்கொடுத்து போதையூட்டிட்டீங்க காதலால.. அ..ஐ லவ்யூலாம் எ.. எண்ணிப்பாத்தா பத்துதடவக்கூட சொல்லிருக்க ம்.. மாட்டோம். ஆ..ஆனா அ..அந்த லவ்.. நம்மட்ட நிறையா இருக்கு… இருக்கும். அ..அதுவும் தம்பி உருவான வ்..விஷயம் தெரிஞ்சதுலாம்.. எ..எல்லார் வ்வீட்லயும் வைஃப் சொல்வாங்க. இ..இங்க நீ..நீங்க எனக்கு சொன்னீங்க. எ..எனக்காக எனக்காகனு நீங்க எவ்ளோ செஞ்சுருக்கீங்க.. இது..இதுக்காவே இ..இன்னும் உ.. உங்களுக்காக நிறைய விட்டுக் குடுக்கத் தோ..தோன்றுது. அ.. அப்றம் உ..உங்க காதல் எ..என்னோடதவிட உ..உயர்ந்துடும்ல?” என்க,
அவள் கன்னம் கண்ணீரின் ஈரத்தில் பளபளத்தது.
அவளை புன்னகையுடனே பார்த்திருந்தவன், அலைபேசியை எடுத்து ஒலியை நன்கு குறைத்துக் கொண்டு, ஒரு பாடலைப் போட்டு குறிப்பிட்ட வரியை வைத்து, அவள் காதருகே வைத்தான்.
‘உன்னில் நான் கொண்ட காதல்.. என்னில் நீ கொண்ட காதல்.. எதை நீ உயர்வாக சொல்வாயோ?? போடா.. பொல்லாத பையா.. நம்மில் நாம் கொண்ட காதல்.. அதை நீ ரெண்டாக பார்ப்பாய?’ என்ற வரிகள் ஒலிக்க,
கண்ணீரோடு சிரித்தபடி அவனை அணைத்துக் கொண்டாள்.
புன்னகையாய் அவளுக்குத் தட்டிக் கொடுத்து, நெற்றியில் முத்தமிட்டவன், “நீயு குட்டி பூகமுடி” என்க,
அவனைப் புரியாது நிமிர்ந்து பார்த்தாள்.
“இம்புட்டு சொன்னியே.. எனக்கு எப்புடியிருக்குத் தெரியுமா? வாழ்க்கையவே ஜெயிச்சுட்டேம்டி. ஓம் மனச ஜெயிச்சு, ஒன்னய சந்தோசமா வச்சுகிடுதேமுனு நெனக்கயில.. சொல்லவே முடியலடி.. அம்புட்டு சந்தோசமாருக்குது..” என்று அவன் கூற,
புன்னகையாய் அவன் கன்னம் பற்றினாள்.
அவளைப் பார்த்து புன்னகைத்தவன், அவள் கன்னங்களைத் தன் கரங்களில் பொத்திக் கொண்டு, “ஏம் வாழ்க்கையில திடீருனு வந்த, தித்திக்குற பூகம்பம்டி நீயு.. அம்புட்டுக்கு காதலிக்க வச்சு, உருக்கிபுட்டடி.. நீயு ஏம் சாமிடி” எனக் கூறி அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.
மெல்லிய புன்னகை பூத்தவள், “சாதாரண பொ..பொண்ணாருந்தாலும் முருகனக் கட்டின வள்ளியும் சா..சாமியானாங்கத்..தான? இ..இந்த திருமாலோட காதலாலதான் மி..மித்ரா சாமியானதே” என்று கூற,
கண்கள் கலங்கி இதழ்கள் சிரிக்க, மனம் நிறைந்து ஆத்மார்த்தமான தேசத்தில் திழைத்தத் திருப்தியோடு, அவளை அணைத்துக் கொண்டான், சங்கமித்ராவின் திருமாவளவன்….
Comments
Post a Comment