திருப்பம்-115 (எபிலாக்)
திருப்பம்-115 (எபிலாக்)
“மலரு… ஒரு இடத்துல நிப்பியா மாட்டியா நீ?” என்று கத்திய சங்கமித்ரா, மகள் சொல்பேச்சுக் கேட்காத கோபத்தில் லேசாய் அடித்துவிட, ஓவென்று தன் அழுகையைத் துவங்கினாள் அந்த மூன்று வயது சுட்டி வாண்டு.
மகளின் அழுகுரலில் பதறிக் கொண்டு குளியலறையிலிருந்து, ஈரம் சொட்ட வந்த வளவன், “என்னாச்சு மித்ரா?” என்க,
கோபத்துடன், “தண்ணிய கொட்டாத கொட்டாதங்குறேன் உங்க மக ஒரு இடத்துல நிக்காம தண்ணிய கொட்டிட்டே இருக்கா ரூம் பூரா. அதான் ஒன்னு போட்டேன். லேசா கை பட்டதுக்கே ஆவூனு ஊரைக் கூட்டுரா” என்றவள், “சுப்.. அழறத நிறுத்து” என்று கண்டித்தாள்.
“அப்பா..” என்று அழுதபடி குழந்தை தந்தையிடம் போக,
“அழகுராணி..” என்றபடி மகளை அள்ளிக் கொண்டவன், “அம்மா சொல்றத கேக்கனுமில்ல தங்கம்” என்று கொஞ்சுதலாய் கூறினான்.
குழந்தை அடிகுரலில் அழுதபடியே தந்தையைக் கழுத்தோடு கட்டிக்கொண்டு அன்னை சமாதானம் செய்வாளா? என ஓர விழியாள் பார்க்க, “திகழ்தான் சமத்து. சமத்தா குளிச்சு ட்ரஸ் பண்ணிட்டு கீழ விளையாட போயாச்சு. நீ இன்னும் குளிக்கவும் வர மாட்ற, ரூமெல்லாம் மொழுகிட்டு இருக்க. இதுல உன்னை நான் சமாதானம் வேற செய்யனுமா?” என்று கண்டிப்பாய் கேட்டாள்.
விசும்பி விசும்பி அழும் மகளைப் பார்க்கவே வளவனுக்குப் பாவமாக இருந்தது. விழிகளால் மனைவியை கெஞ்சுதலாய் பார்த்தான்.
குழந்தையைத் தாய் அதட்டும்போது தந்தையோ, இல்லை தந்தை அதட்டும்போது தாயோ வந்து ‘என் பிள்ளையத்திட்டாத. அம்மாவ அடிச்சுடலாம்’ என்றெல்லாம் கூறினாள், பிள்ளைகளுக்கு பெற்றோரின் மீதான மரியாதையும், தாய் அதட்டினால் தந்தையோ, தந்தை அதட்டினால் தாயோ துணைக்கு வருவர் என்ற எண்ணமும் தோன்றிவிடுமென்பதால், வெளிப்படையாக அவளை அமைதியாக இருக்கச் சொல்லாமல் பார்வையாள் கெஞ்சினான்.
“அந்த பாட்டில (bottle) வாங்கினதுலருந்து இந்த வேலையைத் தான் பண்றா உங்க மக” என்று மித்ரா கோபமாய் கூற,
“அம்முகுட்டி.. ஐயாவப் பாருவ.. இப்புடி செய்யலாமா? தண்ணிய வீனாக்குறது தப்பில்லையாக்கும்? ஏம் ராஜாத்திய அம்மா தப்பு செய்யப்போயித்தான வையுறாவ? ஆணாண்டி கண்ணு.. அம்மாட்ட சாரி சொல்லிடுவ. இனிமே இப்புடிச்செய்யலனு சொல்லிடுவ.. குட் கேர்ள் தான எம்மலரு?” என்று மகளின் கன்னம் துடைத்துவிட்டபடி கூறினான்.
விசும்பியபடி அன்னையைப் பார்த்தக் குழந்தை, “சார்ரீ..” என்று இதழ் பிதுக்கிக் கூற, மித்ராவிற்கு புன்னகையில் இதழ் துடித்தது.
தந்தையிடமிருந்து இறங்கி தாய் முன் வந்தவள், “அம்மா சார்ரீஈஈ” என்று கரம் கூப்பி பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க,
‘குட்டி மித்ராதேம்டி’ என்று எண்ணி புன்னகைத்துக் கொண்டான் வளவன்.
மித்ரா வளவனை நோக்க, அவனோ, ‘பாவம் தூக்கிக்கடி’ என்று கண்களால் ஜாடை காட்டினான்.
மெல்லிய புன்னகையோடு மகளைத் தூக்கியவள், “இனிமே தண்ணியக் கொட்டுவியா?” என்று கேட்க,
“மாத்தேம்மா.. சார்ரீஈ” என்று கூறினாள்.
மகள் கன்னத்தில் முத்தம் வைத்தவள், “அம்மாவும் அப்ப திட்ட மாட்டேன்” எனக் கூறி, “குளிப்போமா?” என்க,
வளவன், “ஓ..” என்றான்.
அவனை விழிகள் அகலப் பார்த்தவள், ‘அடிதான்..’ என்று விரலில் பத்திரம் காட்டி, “நான் குழந்தையைக் கேட்டேன்” எனக் கூறிவிட்டுச் செல்ல, ஆடவன் இடையில் கரம் ஊன்றி புன்னகையாய் செல்பவளைப் பார்த்து, “மீனம்மா” என்றான்.
முகத்தைத் திருப்பி அவனைப் பார்த்தவள் மீன் விழிகள் சுருங்கி விரிய, “பண்ணையிலருந்து மீன எடுத்து கண்ணுல வச்சுகுட்டீயளோ?” என்று கேட்டான்.
‘புள்ளையவச்சுட்டுத்தான் கவிதையெல்லாம் பேசுவாரு.. போயா’ என்று இதழசைத்தவள், சென்று குழந்தையைக் குளிக்கவைத்து அனுப்பிவிட, வளவன் அழகிய பட்டுப்பாவாடையை அவளுக்கு அணிவித்தான்.
குண்டு கன்னங்கள், கோதுமை நிறம், கருமையான கோலி குண்டு விழிகள், களுக் களுக்கென்று சிரிக்கும் பொக்கை வாய், அவனைப் போன்ற சுருள் கேசம்… அத்தனை அழகாக, தெய்வீகமாக இருந்த தன் மகளை திருஷ்டி எடுத்தவன், முத்தமிட்டு, “அழகுராணிடி பட்டு” என்றான்.
தந்தையின் முடிக்குள் கைநுழைத்துப் பிடித்துக் கொண்ட குழந்தை, அவன் மூக்குடன் மூக்குரசிவிட்டு, “ப்பா..விய்யாத..” என்க,
“ஐயா துணி மாத்தலியேடா இன்னும்.. இரு” என்றவன், உள்சட்டையை போட்டுக் கொண்டு, அவளைத் தூக்கியபடி பக்கத்து அறைக்குச் சென்றான்.
“வேந்தா..” என்று வளவன் குரல் கொடுக்க,
“ஐயா..” என உள்ளிருந்தே குரல் கொடுத்தான், ஒளி வேந்தன்.
“செத்த வாம்லே” என்று வளவன் அழைக்க,
ஆறு வயது பாலகனான ஒளிவேந்தன் வெளியே வந்தான்.
மலரைக் கண்டதும் கூடுதலாய் புன்னகைத்த வேந்தன், “மலரு..” என்று அவளை கொஞ்ச,
புன்னகையாய் மகளை அவனிடம் ஒப்படைத்தவன், “ஐயா உடுப்பு மாத்த போறேம்லே.. நீயு மலர கீழ கூட்டிப்போயிடுதியா?” என்று கேட்டான்.
“சரி ஐயா. நாங்கூட்டிப்போறேம் பாப்பாவ” என்று குழந்தையின் கரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
“அண்ணேங்கூட போ மலரு. படியில அண்ணேங்கைய விட்டுபுட்டு ஓடக்கூடாது” என்று கூற,
“சரிப்பா” என்று உச்சியிலிட்டக் குடுமி அசைந்தாட, தலையசைத்தாள்.
புன்னகையாய் அவன் அறை செல்ல, குழந்தைகள் கீழே சென்றனர்.
அடர் நீல நிறத்தில் சட்டையும், அதற்குத் தோதாய் வெள்ளை வேட்டியும் கட்டியவன், தனது சுருள் கேசத்தைத் துவட்டி, சிலுப்பிக் கொண்டிருக்க,
பெண்ணவளும் குளித்து முடித்து வந்தாள்.
அவன் சட்டைக்குத் தோதாக, நீள நிறத்தில் புடவையை அவள் உடுத்த, “கல்யாணமாவி எட்டு வருசம் மேல ஆச்சுது..” என்று கேலியாய் கூறினான்.
கண்ணாடியில் தெரியும் அவன் பிம்பத்தை ஒற்றைப் புருவம் உயர்த்திப் பாத்தாவள், “எட்டு வருஷமானா ஒரே கலர்ல டிரஸ் போடக்கூடாதுனு இருக்கா என்ன? நான் அடிச்சு சொல்றேம் பாருங்க, அத்தனை ஜோடியும் கலர் கோட் ஃபாலோ பண்ணித்தான் இன்னிக்கு ஃபங்ஷனுக்கு வருவாங்க” என்று கூற,
அதில் இடவலமாய் தலையாட்டி சிரித்துக் கொண்டான்.
“அய்யோடா.. சிரிச்சது போதும். வந்து மடிப்பை வச்சுவிடுங்க. உங்க மகளோட ஓடி ஓடி எனக்கு முதுகெல்லாம் வலிக்குது” என்று மித்ரா கூற,
வந்து அவள் மடிப்புகளை சீர் செய்து பிடித்துக் கொண்டான்.
தயாராகி முடித்துத் தனது சிகையை பின்னலிட்டவள், “ஊருலருந்து நேத்து வந்தாங்களே உங்க சித்தி.. என்னமா பிள்ளை பெறந்ததுல நல்லா வெயிட் போட்டுட்டனு கேட்டாங்க” என்று கூற,
அதில் சிரித்துக் கொண்டவன், தனது சட்டையின் கைப்பகுதியை மடித்துவிட்டபடி, “நீயு என்னச் சொன்ன?” என்று கேட்டான்.
“ஏம் புருஷனுக்கு இதேம் வசதியாருக்காம் அணச்சுகிட.. அதான் குறைக்கத் தோனலைனு சொல்லத்தான் ஆசை… ஆனா அவங்கட்ட சொல்லவா முடியும்? ஆமா போட்டுடுச்சுனு வந்துட்டேன்” என்று அவள் நக்கலாய் கூற,
அதில் வாய்விட்டு சிரித்தவன், “ராங்கி ராங்கி” என்றபடி அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.
“நீங்க மட்டும் எப்படி மெயின்டெயின் பண்றீங்க?” என்று அவள் கண்ணாடியில் அவன் கண் பார்த்தபடி கேட்க,
“எட்டி.. சாப்பிட்டு ஒன்னும் போடல ஒனக்கு. நவநீ பிறந்து ஒருவருஷம் பிறகு நீ பழையபடி தன்னால குறைஞ்ச தான? மறுக்கா புள்ளைய பொறந்தது.. அதுவும் ஆபரேஷன் வேற.. நீயு பாக்குற சோலிக்கு பிள்ளைய பொறந்ததுலருத்து இப்பைக்கு நல்லாவே கொறஞ்சுட்ட. அதுலாம் தன்னால கொறையுங்கூடும். நா எந்த புள்ளைய பெத்தேம் எட போட?” என்று கேட்டான்.
அதில் களுக்கென்று சிரித்தவள், அவன் புறமாய் திரும்பி இறுக அணைத்துக் கொண்டு, “நீங்க காதலை பிரசவிச்சு பெத்தெடுத்ததாலதான் இந்த எட்டு வருஷ வாழ்க்கையே ஓடிருக்கு” என்க,
“அப்பம் ஹார்டோட வெயிட்டு மட்டும் கூடிருக்கும் போல” என்று சிரித்தான்.
இப்படியே பேச்சும் சிரிப்புமாய் இவர்கள் கீழே செல்ல,
வாசலில் “மலரு ஓடு ஓடு” என்ற வீரா (தனம் வடிவேலின் மகன்) அவள் கீழே விழாமலிருக்க அவள் உடன் சேர்ந்து அரண் போல் ஓடிக் கொண்டிருந்தான்.
சங்கமித்ரா அங்கே வந்ததும், “அம்மா” என்று அவளிடம் ஓடிவந்து அவளைக் கட்டிக் கொண்ட நவநீதன், “அம்மா அழகா இருக்கீய” என்று கூற,
அத்தனை சந்தோஷத்துடன், “தேங்ஸ் நவநி குட்டி” என்று கூறினாள்.
தன் தொண்டையை செருமிக் கொண்ட வளவன், “அய்யா நல்லாயில்லியாலே?” என்க,
“நீங்களும் சூப்பர் ப்பா. அம்மா ரொம்ப சூப்பர்” எனக் கூறி அன்னைக்கு முத்தம் வைத்துவிட்டு அவன் ஓட,
“ஓம் புள்ளைக்கு ரொம்பத்தாம் குசும்புடி” என்றான்.
“இப்பமட்டும் என் பிள்ளையாக்கும்? உங்களுக்கு பொறாமைனு சொல்லுங்க” என்று சங்கமித்ரா கூற,
“அப்பா.. நந்தி நந்தி” என்று திகழ் அழைத்தாள்.
நந்திக்கு வயதான காரணத்தினால், வீட்டு வாசலில் இருந்த தோட்டத்தை அப்புறப்படுத்தி நந்தி மற்றும் அம்சாவை மட்டும் இங்கு குடியமர்த்தியிருந்தான் வளவன்.
புன்னகையாய் சென்று நந்தியைத் தடவிக் கொடுத்த வளவன், திகழைத் தூக்கி நந்தியின் மீது அமர்ந்த,
“அப்பா நானு நானு” என்று மலர் கைகளைத் தூக்கினாள்.
“நந்தி பாவம்லே.. வயசாயிட்டுல்ல? கொஞ்ச நேரம் பொறவு திகழு எறங்கவும் ஐயா ஒன்னய ஒக்காத்துதேம்” என்று மகளுக்கு எடுத்துக் கூறி அவன் சமாதானம் செய்ய,
“ஹப்பா.. ரொம்பத்தான்” என்று மித்ரா கூறினாள்.
‘என் சக்காளத்தனை பயங்கரமா தாங்குறீங்க’ என்று அவள் அடிக்கடி கூறும் வாக்கியம் அவள் விழிகளிலேயே தெரிந்தது.
அதை கண்டு வளவன் சிரித்துக் கொள்ள,
“ஏட்டி மைணிகாரி.. சீலை அம்சமாருக்குது” என்றபடி தனம் வந்தாள்.
அவள் பின்னோடே, அவளது புடவை நிறத்திற்கு இணையாய், அதே மஞ்சள் நிறத்தில் சட்டையணிந்தபடி வடிவேல் வர,
“தேங்ஸ் தனம். உன்னோடதும் சூப்பரா இருக்கு” என்று கூறிவிட்டு வளவனைப் பார்த்தாள்.
அவள் பார்வைக்கான காரணம் புரிந்து உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டவன், “மகா அத்தான் இன்னும் வரலியாலே?” என்க,
“வந்தாச்சு வந்தாச்சு” என்று வாசலில் குரல் கொடுத்தான் மகா.
மாகா சிவப்பு நிறத்தில் சட்டையணிந்திருக்க, தீபிகா சிவப்பு நிறப் புடவை அணிந்திருந்தாள். மகிழ்நனும் தந்தையைப் போல் சிவப்பு சட்டையும் வேட்டியும் அணிந்திருக்க, தேவிகா சிவப்பு நிற பாவாடைச் சட்டை உடுத்தியிருந்தாள். இருவரும் பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்களாக வளர்ந்திருந்தனர்.
சங்கமித்ரா மீண்டும் வளவனை நோக்க,
அவன், இதழ் மடித்த சிரிப்போடு அவளைப் பார்த்துவிட்டு, “லேய் மகிழா.. ஒன்னயத்தாம்லே காணவே முடியல” என்று மருமகனின் தோள் சுற்றிக் கரமிட்டான்.
“பத்தாப்புனு போட்டு புழியுறாவளோ?” என்று தனம் கேட்க,
“அட ஆமா சித்தி.. தாங்கல” என்று சோர்வாய் கூறினான்.
“மாமா நா எப்புடியிருக்கேம்” என்று தனது பாவாடையின் நுனியைப் பிடித்து ஆடியபடி தேவிகா கேட்க,
அவள் கன்னம் கிள்ளி, “ஒனக்கென்னத்தா ராசாத்தி.. ஜோரா இருக்க” என்றான்.
அப்போது தயாரான நிலையில் கார்த்திகாவும், விக்ரமும் கீழே வர,
அவர்கள் ஒன்றுபோல் இளநீளத்தில் உடை அணிந்திருப்பதைக் கண்டு மீண்டும் சங்கமித்ரா வளவனைப் பார்த்துக் கொண்டாள்.
முன்பே பெரிதாய் இருக்கும் அக்குடும்பம் தற்போது குழந்தை செல்வங்களால் இன்னும் பெருகியிருந்தது.
திருவிக்ரம், கார்த்திகா, அவர்களது மகள் ஒளிசுடர், மற்றும் மகன் ஒளி வேந்தன்.
தனலட்சுமி, வடிவேல், அவர்களது மூத்த மகன் வீர மகேந்திரன், அவனையடுத்து இரண்டு வருடங்கள் கழித்துப் பிறந்த, அமிர்தவேணி.
தீபிகா, மகாதேவன், மகிழ்நன், தேவிகா நாம் முன்போ அறிந்தோரே!
திருமாவளவன், சங்கமித்ரா, அவர்களது ஆறு வயது மூத்த மகன் நவநீதன், மற்றும் மூன்று வயது இரட்டை செல்வங்கள், திகழ்விழி மற்றும் மலர்விழி.
ஆம்! இரண்டாவதாய் கருத்தரித்திருந்த மித்ரா, இரட்டை செல்வங்களை ஈன்றிருந்தாள்.
மேலும் நவநீதன் பிறந்த ஒரே வருடத்தில் அவளது குரலும் பரிபூரணமாய் திரும்பியிருக்க, வடிவேலும் தனது கடன்களையெல்லாம் அடைத்து முடித்து, மனையாளையும் தன் சம்பாத்தியத்திலேயே முனைவர் பட்டமும் படிக்க வைத்திருந்தான். கடந்து சென்ற வருடங்களை அழகிய பல் நன்நிகழ்வுகளோடு நகர்த்தியிருந்தனர்.
“அம்மா நாம்போயி முனியன பாத்துட்டு வரவா? கோயிலுக்குப் போறோமுல? அவேன்ட சொல்லிட்டு வாரம்” என்று சுடர் கேட்க,
“ஏட்டி இப்பத நீயு போனன்னா அம்புட்டு புள்ளையலும் வாரேமுனு நிப்பாவ. கோயிலுக்குப் போயி வந்ததும் போவோம்” என்று கார்த்திகா கூறினாள்.
சுடர் முகம் சுறுக்கி பாவம் போல் தந்தையை நோக்க,
“மோந்திக்கு அப்பாவே கூட்டியாரேம் தங்கம்.. இப்பத கோயிலுக்குப் போவனுமில்ல?” என்று மகள் கன்னம் கொஞ்சி சாமாதானம் செய்து உள்ளே அழைத்துச் சென்றான்.
கூடத்தில் நிறைந்திருக்கும் குழந்தைகளைக் கண்டு பூரித்தபடி தெய்வநாயகி வர, அறையிலிருந்து, தெய்வநாயகி புடவையின் பச்சை நிறத்திற்கேற்ப தானும் பச்சை நிற சட்டையணிந்து வந்தார், சுயம்புலிங்கம்.
விழிகள் விரிய, இன்ப ஆச்சரியத்தோடு அதை பார்த்த மித்ரா வளவனை நோக்க, அவன் இதழ் கடையோரம் புன்னகையில் வளைந்தது.
“பேரம் பேத்தியளோட பாக்கயிலயே வீடு நெறவா தெரியுது. ஆத்தா நாயகி.. போய் வாரவும் புள்ளைய அம்புட்டு பேருக்கும் சுத்தி போட்டுடுத்தா” என்று லிங்கம் கூற,
“அதேம் இப்பத நானும் நெனச்சேம்” என்றார்.
“எல்லாம் ரெடியா? வண்டில ஏறுவ. சங்கு அந்த சீறு தட்டுயொல்லாம் ஏத்தியாச்சானு பாத்தியா?” என்று தெய்வா கேட்க,
“பாத்தேன் அத்த” என்றாள்.
“ஏட்டி கார்த்தி.. அந்த சீலையொடுத்து வெக்கச் சொன்னேம்ல? வச்சியா?” என்று அவர் கேட்க,
“எல்லாம் வச்சாச்சு அத்தே. நீங்க வாங்க கொளம்புவோம்” என்று கூறினாள்.
அனைவரும் வெளியே வர, அவர்கள் தேர்வு செய்து அழைத்திருந்த கட்டணச் சிற்றூர்ந்து காத்திருந்தது.
அதில் அனைவரும் சென்று ஏறிக் கொள்ள,
“ஏங்க.. போவயில மெயின் ரோடுல எங்கண்ணேன ஏத்திகிடனும். அடுத்த முக்குட்ட அவிநாஷ் அத்தான ஏத்திகிடனும். ட்ரைவருட்ட சொல்லிருவ” என்று கார்த்திகா கூறினாள்.
கார்த்திகாவின் அண்ணன் குடும்பத்தாரையும், அவிநாஷ், சங்கீதா, அவர்களது ஒரே மகளான சங்கவியையும் அழைத்துக் கொண்டு, வாகனம், திருநெல்வேலியில், மேலவீரராகவபுரத்திலிருக்கும் சொக்கலிங்கர் கோவிலை நோக்கிச் சென்றது.
வண்டியில் பாட்டும், குழந்தைகளின் ஆட்டமும், பெரியோரின் ஆர்ப்பாட்டமும் என்று சென்றது.
அவிநாஷைப் போலவே முக அபிநயங்கள் கொண்டிருந்த சங்கவி குனத்திலும் அவிநாஷைப் போலவே இருந்தாள்.
சங்கமித்ரா என்றால் அவளுக்கு அத்தனை பிரியம்.
“பாப்புமா பாப்புமா” என்று சதா அவளையே சுற்றி வருபவளைக் கண்டு,
“உங்க பொண்ணு என் தங்கச்சி விஷயத்துல அப்படியே உங்களப்போலத்தான்” என்று சங்கீதா கூற,
அவிநாஷும் சங்கமித்ராவும் புன்னகைத்துக் கொண்டனர்.
அனைவரும் கோவிலை வந்தடைய,
அங்கு சிவபாதசேகரன், திரிபுரா, அவர்களது மாமியார் மாமனார் மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை கந்தனுடன் காத்திருக்க,
“வாங்கலே வாங்கலே” என்று அவர்களை வரவேற்றனர்.
அது கந்தனின் இரண்டாம் வயது பிறந்தநாள். சொக்கலிங்கம் கோவில் திரிபுரா மாமியாரின் குலதெய்வக் கோவிலாக இருக்க, குழந்தைக்கு இரண்டாம் மொட்டையை அங்கே போடுவதாக அவர் வேண்டியதற்கு இனங்க, அனைவரும் கோவிலில் கூடியுள்ளனர்.
திருமணம் முடிந்து இத்தனை வருடங்கள் கடந்தபின்பு, இனி அவர்களுக்கு குழந்தை செல்வமே இல்லை என்று மருத்துவர்கள் திட்டவட்டமாய் கூறிவிட, மனைவி வெளிப்படுத்தாத அவளது மறைமுக ஏக்கம் புரிந்த சிவபாதன், குழந்தை ஒன்றை தத்தெடுக்கும் யோசனையை முன் வைத்தான்.
முதலில் யோசித்த திரிபுராவும் பின் அதற்குச் சம்மதம் கூறிவிட, இருவருமாக சென்று குழந்தையைத் தத்தெடுத்து வந்து, கந்தன் என பெயரிட்டு மகிழ்ந்தனர்.
குழந்தை வந்த பிறகிருந்தே திரிபுராவின் குணத்தில் பல மாற்றங்களைக் கண்ட சிவபாதனுக்கு இன்னும் சந்தோஷமாக இருந்தது. குழந்தையுடனான நேரம் அவளை மற்றது பற்றி சிந்திக்க விடவில்லை என்பதும் காரணம்..
தெய்வாவும் திரிபுராவும், சங்கமித்ராவிடம் இயல்பாய் பேசத் துவங்கிவிட, அவ்வப்போது இடக்கான பேச்சுகளும் வரவே செய்தது. அப்படியே மொத்தமாக ஏற்கவும் இல்லை, முன்பைபோல் சுத்தமாக விலகவும் இல்லை. குடும்பம் என்றால் பூசல்களும் இருப்பது தானே? என்று சங்கமித்ராவும் அவர்கள் அவ்வப்போது போடும் சண்டைகளுக்கு பதிலடி கொடுத்த வண்ணம் கடந்திடுவாள்.
இப்போதும் கூட அவள்மீது பிடித்தமென்று ஏதுமில்லை என்றாலும், நவநீதனால் தான் தெய்வா சங்கமித்ராவிடம் பேசத் துவங்கியதே. சங்கமித்ராவை அவர் வெளிப்படையாகவே தவிர்த்து வருவதை கண்டே வளர்ந்த நவநீதன், அதிகம் அன்னையின் செல்லமாக இருந்ததாலோ என்னவோ? பாட்டியை ஒதுக்கத் துவங்கினான்.
அவர் வைத்துக் கொஞ்சினால் கூட, அழுது அடம் செய்து அவரிடமிருந்து எழுந்து அவன் அன்னையிடம் ஓடிவிட, நாட்கள் செல்லச் செல்லத்தான், அவர் சங்கமித்ராவை விலக்குவதால் தான் பேரன் தன்னிடமிருந்து விலகிச் செல்கின்றான் என்பதைப் புரிந்து கொண்டார்.
புரிந்துகொண்ட விஷயம் அதிகம் வலி கொடுத்தது. மகன் மற்றும் கணவன் கண்டிப்பாய், அதட்டலாய், கெஞ்சலாய் கூறியபோதெல்லாம் விட, பேரனின் ஒதுக்கம் அதிகம் உரைத்தது, வலித்தது. அவனுக்காகவே கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் பேசத் துவங்கி, தற்போது இயல்பான பேச்சுவார்த்தைகளை அவளிடம் ஏற்படுத்தியிருந்தார்.
இப்படியான அழகிய ஓட்டை உடைசல்களும், பாசப் பினைப்புகளுமாய் இருக்கும் அந்த குடும்பம், சென்று சொக்கனை தரிசித்து வர, வளவன் மடியில் வைத்து, கந்தனுக்கு மொட்டியிட்டனர்.
“கோயிலே நம்ம குடுமத்தத்தேம் பாக்குறாவ. வூட்டுக்குப் போயி நல்லா சுத்திப்போடனும்” என்று தெய்வா கூற,
மற்றவர்களும் அதை ஆமோதிப்பதாய் தலையசைத்தனர்.
மொட்டைப் போட்டு இறைவனை தரிசித்து அன்னதான ஏற்பாடுகளை முடித்து, தாங்களும் பிரசாதம் உண்டு அனைவரும் வொளியே வர, மீண்டும் வீடு நோக்கிப் பயணமாயினர்.
வீடு வந்து சேர மாலையாகவும், “எல்லாம் பேசாம கொட்டாவுக்குப் போவலாமில்ல? பம்பு செட்டுல புள்ளைய வெளாடனுமுனு கேட்டுகிட்டே இருக்காவ” என்று வடிவேல் கேட்க,
“ஓ போலாமே” என்று அனைவரும் கோரஸ் போட்டனர்.
சென்று பம்பு செட்டை விக்ரமன் திறந்துவிட,
அனைவருமாக குழந்தைகளுடன் அதில் ஆட்டம் போட்டனர்.
தன் மருமள் திகழை பிடித்துக் கொண்டு நீரில் விளையாடிய மகா நீரை அள்ளி தீபிகா மீது தெளிக்க,
“மாமா நீங்களும் அப்பா மாறியே வெளாதுயீய” என்று திகழ் கூறினாள்.
“என்னதுத்தா வெளாடுதேம்?” என்று மகா கேட்க,
“இதோ இப்பி தண்ணி தெச்சு.. அப்பாவு அம்மாமேல இப்பி தெச்சு வெளாதுவாவ” என்று மழலையாய் திகழ் கூறினாள்.
‘அய்யோ மானத்த வாங்குறா’ என்று சங்கமித்ரா தலையில் தட்டிக் கொள்ள,
வளனுக்கும் மகளின் பேச்சில் வெட்கம் வந்து தொலைத்தது.
“ஏம்லே.. அப்புடியாக்கும்?” என்று மகா சிரிக்க,
“தண்ணிய தெளிச்சு வெளாடுவீயளாமுல்ல?” என்று வடிவேல் கேலி செய்தான்.
“லேய்.. சும்மாருலே” என்று தனது பிடறி முடியைக் கோதியபடி வளவன் கூற,
“மாமா.. அம்மாவும் அப்பாவும் நானும் மலதும் முடி பிச்சிழுத்து சண்த போத்தா வைவாவ. ஆனா அம்மா அப்பா முதிய பிச்சு இழுத்துப்பாவ” என்று திகழ் மேலும் போட்டுக் கொடுத்தாள்.
“இதுவேறயாத்தா?” என்று விக்ரம் சிரிக்க,
“ஆமா.. புறா கூடு சொல்வாவ” என்று மேலும் அவள் ஏதோ கூற வரவும், “ஆத்தா மவராசி” என்று மகளை அப்படியே அலேக்காக தூக்கினான்.
‘முழுசா வாங்கிட்டா’ என்று மித்ரா வளவனை முறைக்க,
‘நா என்னட்டி பண்ணேம்’ என்று பாவமாய் பார்த்தான்.
“என்னடா தம்பி.. பொண்ணு எல்லாத்தையும் போட்டுகுடுக்குறா போல?” என்று அவிநாஷ் சிரிக்க,
“கண்ணெல்லாம் எங்கமேலதான் இருக்கும். வாலு வாலு” என்று மித்ரா முனகினாள்.
“என்னடா பாப்பா? சரியா கேட்கலையே?” என்று அவிநாஷ் கேலியாய் கேட்க,
“அத்தான்.. யூ டூ?” என்று சிணுங்கினாள்.
அதில் அனைவரும் சிரிக்க,
“ஏட்டி நம்மல நளியடிக்காவ.. அங்கெல்லாம் என்ன வாழுதுனு புள்ளையல கேட்டுவிட்டாத்தேம் வெளுங்கும். வேணிய கூப்டுவுடு. வூட்ல எங்கூட்டுக்காரன் பாத்திரம் கழுவுறதுலருந்து, வீடு கூட்டுறது வார ஒப்பிக்கும்” என்று வளவன் கூறினான்.
“அடப்பாவி” என்ற வடிவேல், தன் மகளைப் பார்க்க, அவள் தன் பற்களைக் காட்டி ஈ என சிரித்தாள்.
“ஆவமொத்தம் அம்புட்டு பேரு புள்ளையலும் எமனாத்தேம் இருக்காவ போ” என்று தீபிகா சிரிக்க,
“அப்பனுகளுக்குக் குரியா எமனாருக்காவ” என்று ஆண்கள் ஒன்றுபோல் கூறினார்.
அதில் சிரிப்பும் கலகலப்புமாய் நேரம் ஓட,
விக்ரம் முனியன், கருப்பன், மருது, திலகா, அம்சா ஆகியோரையும் ஓட்டி வந்தான்.
குழந்தைகள் மாடுகளின் மீது ஏறி அமர்ந்து விளையாடுவதும் சிரிப்புமாய் பொழுது சாய,
“அம்மா அப்பா மாமா அத்தே சித்தி சித்தப்பா குட்டீஸ்.. எல்லாரும் இங்க பாருங்க” என்று மகிழ்நன் அலைபேசியை சுயமி எடுப்பதற்கு ஏதுவாய் தூக்கிப் பிடித்தான்.
அனைவரும் அலைபேசியைப் பார்க்க,
“ஈ… சொல்லுங்க ஈ சொல்லுங்க” என்று வேணி கூறினாள்.
அதில் சிரித்த அனைவரும் “ஈ…” என்க,
அதை அப்படியே புகைப்படமாய் சேமித்தான்.
புகைப்படத்தில் உறைந்த அவர்கள் புன்னகை, நிஜத்தில் நீண்டு தொடர வாழ்த்தி, நாமும் இவ் ராஜ குடும்பத்திடமிருந்து விடைபெறுவோம்.
-சுபம்…
Comments
Post a Comment