12. சாராவின் ஜீபூம்பா

 அத்தியாயம்-12



தனதறை மேஜையில் அமர்ந்திருந்தவனுக்கு தன் கையில் இருக்கும் கைகுட்டையில் தான் கவனம் பதிந்திருந்தது. அதையே பார்த்தபடி அவன் புன்னகையுடன் அமர்ந்திருக்க, அவனது விரல்கள் தன்னிச்சையாய் அதிலிருக்கும் மைக்கரையை வருடின. 


கண்களை மூடி அவளது வாசத்தை அவன் உணர நினைத்த நொடி அலைபேசியின் ஒலி அவன் சிந்தையைக் கலைத்தது.


அலைபேசியை எடுத்துப் பார்த்தவன் முகம் மீண்டும் தீவிரமாகிவிட, “சொல்லு சுதிர். எடுத்தாச்சா?” என்று வினவினான். 


“எல்லாமே உனக்கு அனுப்பிட்டேன் இலக்கியா” என்று அவனால் சுதிரென அழைக்கப்பட்ட சைபர் கிரைம் பிரிவிலிருக்கும் அவனது தோழன் கூற, 


“தேங்ஸ்டா” என்றான்.


“டேய்.. என்னடா புதுசா நன்றியெல்லாம்? போய் வேலையைப் பாரு” என்று கூறியபடி சுதிர் அழைப்பைத் துண்டிக்க இலக்கியனின் முகத்தில் அழகாய் ஒரு புன்னகை. 


தாய் தந்தையை தான் அவன் இழந்தான். ஆனால் தனது நல்ல குணத்தாலும் நேர்மையான பண்பாலும் பல நல்லுள்ளங்களின் நட்பை சம்பாதித்திருந்தான். 


அனைத்து பிரிவுகளிலும் அவனைத் தெரிந்த தோழரென்று யாரேனும் ஒருவராவது இருந்துவிடுவர் என்னும் அளவில் அவனது நட்பு வட்டம் இருந்தது. ஒட்டி உறவாடி எப்போதும் உடன் திரியும் நண்பர்கள் இல்லைதான் என்றாலும் அவன்மீது மரியாதையோடு நடந்துகொள்ளும் நண்பர்கள் இருந்தனர். அதற்காக அவனைப் பிடிக்காதவர்களே இல்லையென்றும் கூறிவிட இயலாது. 


தனது எண்ணத்திலிருந்து விடுபட்டவன் சுதிர் அனுப்பியதைத் திறந்து பார்த்தான். கார்த்திக்கின் அலைபேசி எண்ணை சுதிரிடம் கொடுத்தவன் அந்த குழந்தை காணாமல் போன இரவு கார்த்திக்கின் அலைபேசி இருந்த இடத்தினை கண்காணித்துக் கொடுக்கும்படி கேட்டிருந்தான்.


சுதிர் அனுப்பிய விபரங்களைக் கண்டவன் கண்களிலில் ஆச்சரியமான முகபாவம் எழ, அன்று இரவு பண்ணிரெண்டு மணியிலிருந்து ஒரு மணி வரை அவனது அலைபேசி அந்த விவசாய நிலமிருந்த பகுதியைச் சுற்றி இருந்தது தெரிய வந்தது.


'அவரா? அவரைப் பார்த்தா அப்படி தெரியலையே?’ என்று அவனது ஒரு மனம் கூற, ‘பச்சைப்பிள்ளைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு படுகொலை செய்யும் எத்தனையோ ஆட்கள் இருக்காங்க. அதில் இவரும் அடக்கமா இருக்கலாம். யாரையும் சந்தேக லிஸ்ட்ல வைத்திருக்கும் வரை தான் நமக்கு நல்லது’ என்று நினைத்துக் கொண்டான்.


'இதுபத்தி யாருகிட்ட பேசுறது? இப்ப இந்த கேஸை நடத்தும் ராஜுக்கும் நமக்கும் ஆகாது. நான் போய் நின்றால் இது என்னோட கேஸ்னு குதிப்பார்’ என்று அவன் எண்ண, ‘நாமளே அவரை க்ளோஸா வாட்ச் பண்ணி தான் தெரிஞ்சுக்கனும் போல’ என்று தீர்மானித்துக் கொண்டான்.


அங்கு தனது தோழி ராகவியைக் கூட்டிக் கொண்டு நிலா தனது வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்க, பின்னே அமர்ந்திருந்த ராகவி, “எங்கதான் மூனு (நிலா) போறோம்?” என்று கேட்டாள்.


இத்தோடு பத்தாவது முறை அவள் கேட்கவும் சற்றே கடுப்பான நிலா, “ப்ச்.. மகிந்தன் அண்ணாவ பார்க்கப் போறோம்” என்க, 


“ஏதே..” என்று கத்தினாள்.


அவள் தந்த சத்தத்தில் திடுக்கிட்டு சடன் பிரேக் அடித்து நின்றவள், “எதுக்கு பைத்தியமே இப்படிக் கத்துற” என்க, 


“அ..அவர எதுக்கு பார்க்க போகனும்?” என்றாள்.


அவளது தடுமாற்றத்தில் லேசாய் சிரித்தவள், “ஒரு வேலை விஷயமா?” என்று கூற, 


“தன்னார்வலர் தொண்டு எதுவும் பண்ணப் போறியா என்ன?” என்று கேட்டாள். 


“உனக்கு கற்பூர புத்திடா ராகி. ஆனா ஒரு சின்ன திருத்தம். பண்ணப் போறேனில்லை, பண்ண போறோம்” என்று கூறியவள் மீண்டும் வண்டியை இயக்கி சிரித்துக் கொண்டாள்.


“போறோமா? நானுமா? அவர் கூடயா?” என்று ராகவி கேள்விகளை அடுக்க, 


“ஹப்பா.. எவ்வளவு கேள்வி ராகி?” என்றாள். 


“நீ முதல்ல வண்டிய நிறுத்து. நான் இப்படியே ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போயிடுறேன்” என்று ராகவி கூற, 


“லொட லொட வாயாடியா இருந்த ராகியா இது?” என்று கூறி நிலா வாய்விட்டுச் சிரித்தாள்.


மகிந்தன்.. ராகவியின் தூரத்து சொந்தம், மாமன் முறை. தன்னார்வலர் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்தி வருபவன். ராகவியை சிறுவயது முதல் ஒருதலையாய் காதலித்து வருபவன். அவளது தந்தை வரன் பார்க்கத் துவங்கிய செய்தியைக் கேட்டு, தனது காதலை நேரே சென்று அவரிடம் கூறியவன், 


“என்னை நம்பி உங்க பொண்ணைக் கொடுங்க மாமா. நல்லா பார்த்துப்பேன்' என்று வசனமெல்லாம் பேசி மாமனாரை கரெக்ட் செய்திருந்தான்.


அதன் பிறகு ராகவிக்கு இந்த விடயம் தெரியவர, அவனைப் பார்த்து சிரிப்பதோடு கடந்திருந்தவளுக்கு அதன் பிறகான சந்திப்பு ‘பே பே பெப்பெப்பே’ என்றாகியிருந்தது. 


அவனைப் பிடித்திருக்கிறதா? கல்யாணத்திற்கு சம்மதமா? என்று அவன் சார்ந்த கேள்வி அனைத்திற்குமே அவளிடம் உள்ள பதில் என்னவோ ‘தெரியாது’ என்பது தான். ஆனால் அவள் தந்தையை மீறி வேறு திருமணம் என்று யோசிக்கும் பெண்ணும் இல்லை என்பதால் உறவுகளுக்குள் திருமணம் வாய் வார்த்தையாய் பேசி முடிவானது.


'அவ படிச்சு முடிச்ச பிறகு வேலை பார்க்கனும்னு நினைக்கும்வரை நான் காத்திருக்கேன் மாமா. அவளை யாரும் வற்புறுத்த வேண்டாம்’ என்று மகிந்தன் கூறியிருக்க அதனால் யாரும் அவளிடம் வந்து திருமணம் குறித்து ஏதும் பேசிக்கொள்ளவில்லை.


அனைத்தையும் மனதில் அசைபோட்டு எச்சில் கூட்டி விழுங்கியவள், அவனது தொண்டு நிறுவனம் வந்தவுடன் சற்றே வெடவெடத்துத் தான் பார்த்தாள். ஏனோ அவனிடம் பேச அவளுக்கு அப்படியொரு தடுமாற்றம். முன்பு கூட ஒருமுறை எம்.பி.பி.எஸ் முடித்த சமயம் அவனது நிறுவனத்தோடு சேர்ந்து ஒரு முகாமில் தோழிகள் இருவருமாய் மருத்துவம் பார்த்தது உண்டு. 


பெரிதாக பேசிக்கொள்ளவில்லை என்றாலும் மரியாதை நிமித்தமாய் நான்கு வார்த்தை மற்றும் புன்னகையுடன் இயல்பாய் அவள் பழகியதுண்டு. இப்போது எங்கே சென்றது அந்த இயல்பு என்று தவித்தாள்.


தனது அறையுள் டக்கின் செய்த இள நீலத்தில் கருப்பில் கோடு போட்ட சட்டையும், கருப்பு நிற பேண்டும் என ஃபார்மல் உடையில் அமர்ந்திருந்த மகிந்தன் கதவு தட்டும் சத்தத்தில் நிமிர்ந்து பாராமல் “எஸ்” என்றான்.


பெண்கள் இருவரும் அவனது பி.ஏ.சர்வேஷுடன் உள்ளே வர, 


தனது பார்வையை உயர்த்திப் பார்த்தவன், “ஹே டாக்டர்ஸ். வாங்க வாங்க” என்று இயல்பாய் இருவரையும் வரவேற்றான்.


இருவரும் அவன் முன் வந்து அமர, சர்வேஷைப் பார்த்து “முக்கியமான விஷயமா சர்வேஷ்?” என்று வினவினான். 


“போன முறை போன முதியோர் இல்லத்து கேம்போட ரெகார்ட்ஸ் தான் சார் எடுத்து வந்தேன்” என்று அதைக் கொடுத்துவிட்டுச் சென்றான்.


அதை வாங்கி வைத்துவிட்டு, சர்வேஷ் சென்றதும் “சொல்லுங்க நான் என்ன உதவி செய்யனும்?” என்று மகிந்தன் வினவ, 


“ஒரு ஆசிரமத்திற்கு ஒருநாள் கேம்ப் போகனும் சார்” என்றாள், நிலா.


“இன்டிரஸ்டிங். எந்த ஆசிரமம் டாக்டர்?” என்று மகி வினவ, 


“ஸ்வீட் பிரின்ஸஸ் ஹோம் சார். பெண் குழந்தைகள் உள்ள ஹோம். ஒரு நார்மல் மெடிகல் செக்கப், அன்ட் வன் டே ஃபூட் அப்றம் பாதுகாப்பு கலைகள் பற்றி ஒரு செஷன் கிளாஸ் எடுக்கலாம்னு யோசிச்சேன். அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம்னு வந்தேன்” என்று கூறினாள்.


“தாராளமா செய்யலாம் டாக்டர். நல்ல யோசனை தான். நான் என் ஷெடியூல்ஸ் பார்த்துட்டு டேட் பிக்ஸ் பண்ணி சொல்றேன்” என்று மகி கூற, 


“தேங்கியூ அண்ணா..” என்று உற்சாகமாய் கூறிவிட்டு “ஊப்ஸ்.. தேங்கியூ சார்” என்றாள்.


அதில் சத்தமாய் சிரித்தவன், “நம்ம மட்டும் இருக்கும் நேரத்தில் அண்ணானு கூப்பிடலாமேடா. நோ ப்ராப்ளம்” என்க, 


தானும் சிரித்தவள், “எப்படி இருக்கீங்க அண்ணா?” என்றாள்.


“நல்லா இருக்கேன்டா” என்றவன், “ஹாய் கவி. எப்படி இருக்க? அத்தை மாமா எப்படி இருக்காங்க?” என்று வினவ, 


அவனது இயல்பான பேச்சில் ஒன்ற முடியாது படபடப்போடு பார்த்தவள், “நல்லா இருக்காங்க” என்றாள்.


“ம்ம். ஸ்டடீஸ் எப்படி போகுதுமா?” என்று மீண்டும் அவன் வினவ, “நல்லா போகுது” என்று அவனைப் பார்த்து அதே தடுமாற்றத்தோடு கூறினாள். 


அதில் நகைத்துக் கொண்டவன் நிலாவைப் பார்க்க, “சரிண்ணா. நாங்க கிளம்புறோம். நீங்க டேட் பார்த்துட்டு சொல்லுங்க” என்றபடி எழுந்தாள்.


தானும் எழுந்தவன், “ஓகே மா. நான் சொல்றேன்” என்க, 


இருவரும் அவனிடம் விடைபெற்றுச் சென்றனர். 


கதவு வரை சென்ற ராகவி அவனை லேசாய் திரும்பிப் பார்க்க, கண் சிமிட்டி குறும்பாய் சிரித்தவன் கையசைத்து வழியனுப்பியதில் திடுக்கிட்டு ஓடியேவிட்டாள்.


வெளியே விரைந்து வந்தவள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மூச்சு வாங்க நிற்க, கலகலவென சிரித்த நிலா, 


“ஏ ராகி.. எதுக்குடா இவ்வளவு பயம்? அண்ணா என்ன உன்னைக் கடிச்சா திங்கப் போறாரு?” என்று தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி குறும்பாய் வினவினாள்.


அவளைப் பார்த்து வேகமாக மூச்சை இழுத்து விட்டவள், “உனக்கு என்னோட உணர்வுகளை சொன்னா புரியாது நிலா. இ..இது.. அம்மாடீ, என்னமோ அப்படி படபடனு வருது. ஆனாடமி கிளாஸ்ல கூட எனக்கு இப்படி இருந்தது இல்லை. இ..இவரை பார்க்க என்னமோ பண்ணுது. இது சொல்லி உனக்கு புரியவைக்க முடியாது. நீயும் யாருகிட்டயாவது மாட்டுவல்ல? அப்போ தான் புரியும் உனக்கு” என்று கூற, நிலா அவளது கடைசி வரியில் ஒருநொடி சிலிர்த்துப் போனாள்.


அவள் மனதில் இலக்கியனின் சாயல் வந்து போக, அதில் அதிர்வெல்லாம் அடையாமல் “அட இதை எப்படி மறந்தேன். இலக்கியன் சார்கிட்ட பேசனுமே” என்று தான் மறந்த ஒன்றை மனம் நினைவு கூர்ந்ததாய் அதை நினைத்துக் கொண்டாள்.


“யாரு அந்த குட்டிபாப்பாவோட கார்டியன் சார் தானே?” என்று ராகி வினவ, 


“ஏ ராகி. கார்டியன்னு சொல்லாதடா. நான் ஒருமுறை அப்படி சொன்னது அவருக்கு ஹர்டிங்கா ஃபீல் ஆயிருக்கு. உண்மையான அப்பாவா தான் அவர் சாராக்கு இருக்கார். அந்த கார்டியன் என்ற வார்த்தை அவர் உறவை விலக்கி நிறுத்துறதா உணருறார்” என்றாள்.


“நிஜமா சர்ப்பிரைஸிங்கா இருக்கு மூனு. யாருமில்லாத ஒரு குழந்தை மேல இப்படி எந்த சம்பந்தமும் இல்லாத ஒருத்தரால பாசம் காட்ட முடியுமா? ஹ்ம்.. இன்னும் நம்ம மண்ணுல ஈரம் இருக்குனு காட்ட மக்கள் இருக்கத்தான் செய்யுறாங்க” என்று ராகி கூற, தாராளமாய் புன்னகைத்த நிலா ஆமென்று தலையசைத்தாள்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02