13. சாராவின் ஜீபூம்பா
அத்தியாயம்-13
இருவருமாய் அந்த காஃபி ஷாப்பில் அமர்ந்து, தத்தமது பானத்தை குடித்துக் கொண்டிருந்தனர். தனது குவளையிலிருந்து ஒரு மிடறு அருந்தியவன் கண்களை மட்டும் உயர்த்தி எதிரிலிருப்பவளை நோக்க, தான் வாங்கிய சாக்லேட் மில்க் ஷேக்கை ரசித்துப் பருகிக் கொண்டிருந்தாள் அவள்.
எப்போதும் போல் இப்போதும் அவனது பார்வை அவளது அந்த இளஞ்சிவப்புக் காதுகளைத் தொட்டுச் சென்றது. பாதி குடித்துவிட்டு கோப்பையை மேஜையில் வைத்து அவள் நிமிர்ந்ததிலேயே அவள் பேசப்போவதை உணர்ந்தவன் தானும் கோப்பையை வைத்துவிட்டு அவளை நோக்கினான்.
மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தவள் “ஹாப்பினெஸ் என்ற தன்னார்வலர் தொண்டு நிறுவனம் பற்றி கேள்விபட்டிருக்கீங்களா சார்?” என்று வினவ,
“ம்ம்.. அப்படி ஒரு நிறுவனம் இருக்குனு தெரியும். நியூஸ்லலாம் பார்த்திருக்கேன்” என்றான்.
“ம்ம்.. என்கூட வந்தாளே என் ஃபிரண்ட் ராகவி, அவளோட அத்தை மகன் தான் அந்த நிறுவனத்தை நடத்துறது. அன்னிக்கு பாட்டு கிளாஸ்ல நடந்த பிரச்சினையைப் பற்றி நாம பேசிக்கிட்டபோது எனக்கு ஒரு யோசனை வந்தது. நம்ம பேபி இருக்கும் ஸ்வீட் பிரின்ஸஸ் ஹோமுக்கு ஒரு வன்டே கேம்ப் போடலாம்னு யோசிச்சேன். மெடிகல் செக்கப், பெண்கள் பாதுகாப்புக்கான செஷன், அன்னைக்கான உணவு, அப்றம் சுகாதார வகுப்புகள் போல ஏற்பாடு செய்யலாம்னு தோனுச்சு. உடனே மகி அண்ணா, அந்த நிறுவனம் நடத்தும் மகிந்தன் சார்கிட்ட போய் பேசினேன். அவரும் முழு மனதா ஒத்துகிட்டார். அவரோட ஷெடியூல்ஸ் பார்த்துட்டு நாள் சொல்றதா சொன்னாங்க. நீங்களும் வந்தா ரொம்ப ஹெல்ஃபுல்லா இருக்கும் சார். உங்கிட்ட சொல்லிட்டு கேட்க போகலாம்னு தான் நினைச்சேன். ஆனா நேத்து ஃப்ரீயா இருந்ததால போய் பேசிட்டு வந்துட்டேன்” என்று தனது நீண்ட உரையை முடித்தாள்.
அவளுக்கு தாராளமான ஒரு புன்னகையைக் கொடுத்தவன், “இதில் என்கிட்ட கேட்க என்ன இருக்கு? ரொம்ப நல்ல விஷயம் மா. ஒரு சின்ன கான்வர்சேஷனிலிருந்து ஒரு நல்ல விஷயத்தை எடுத்து செய்ய இருக்க. என்னோட முழு ஒத்துழைப்பு இதுல உண்டு. டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டு சொல்லுங்க நான் பிரபா மேடம் கிட்டயும் பேசிடுறேன்” என்று கூற,
“ரொம்ப நன்றி சார்” என்றாள்.
மாலை பள்ளியிலிருந்து குழந்தைகளை கூட்டிச் செல்ல வந்தபோதே இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போதே பேச வேண்டும் என அவள் முன்வந்த நேரம் அவனுக்கு வேறு வேலை ஒன்று வந்துவிட்டதால் ‘அடுத்தநாள் காலை பேசிக்கொள்ளலாமா?’ என்று கேட்டிருந்தான்.
சரியென ஏற்றுக்கொண்டவள் வந்தது என்னவோ ராகவியுடன் தான். 'இவளுக்கு வேற வேலைவெட்டி இல்லை. சும்மா இந்தபுள்ளய கூடயே இழுத்துகிட்டு வந்திடுவா. இந்த பாரு ராகி. இவகூட சுத்துனா உன்னையும் லவ் பண்ண விடமாட்டா அவளும் லவ் பண்ண மாட்டா' என்று புலம்பிய ஜீபூம்பா தனது மாயாஜால வித்தையை இறக்கியது.
உடனடியாக அவள் தாய் அஞ்சலியிடமிருந்து அழைப்பு வரப்பெற்ற ராகவி, “சாரி சார், சாரி மூன். அம்மா உடனே வரசொல்றாங்க. என்னனு சரியா தெரியலை. நீங்க பேசுங்க” என்று கூறி அவர்கள் அனுமதியோடு புறப்பட, ‘ஹப்பா.. நீங்க தனியா பேசிக்க ஏற்பாடு செய்ய நான் எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கு' என்று இல்லாத வியர்வையைத் துடைத்துக் கொண்டது ஜீபூம்பா.
ஜீபூம்பா உழைப்பின் உபயமாய் இருவரும் தனித்து பேசிக் கொள்கின்றனர். 'ஆமா அப்படியே காதல் வார்த்தைல தேன் சொட்ட சொட்ட பேசிட்டானுங்க ரெண்டு பேரும்' என்று நீங்கள் கேட்பது ஜீபூம்பா காதுகளில் நன்றாகத்தான் விழும். ஆனால் இவர்களை இந்தளவு நெருங்க வைத்ததே பெரியது.
பேசிச்சென்ற அன்றே மகிந்தனிடமிருந்து தகவல் பெற்ற நிலா அவனிடம் பெற்றிருந்த அலைபேசி எண்ணுக்கு அழைத்து வரும் ஞாயிறு வருவதாகக் கூறினாள். அவனும் சரியென்று பிரபாவிடம் அதை தெரிவித்து அனுமதி வாங்கியிருந்தான்.
பரபரப்போடே அந்த ஞாயிறும் வந்திட, அனைவரும் ஸ்வீட் பிரின்ஸஸ் இல்லத்தில் கூடியிருந்தனர். மகிந்தன், அவனது பி.ஏ சர்வேஷ் மற்றும் குழுவினருடன் அங்கு வந்து சேர, ஆரண்ய நிலா மற்றும் ராகவியும் வந்தனர்.
அவர்களுக்கெல்லாம் முன்பே அங்கு வந்திருந்த இலக்கியன் முறையாக பிரபாவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க, நிலாவும் மகிந்தனையும் அவனது பி.ஏ சர்வேஷையும் அறிமுகம் செய்தாள்.
“ஆரூ..” என்று கூச்சலிட்டபடி அங்கு ஓடி வந்த சாரா, நிலாவைக் கட்டிக் கொள்ள,
அவளை அப்படியே தூக்கிக் கொண்டு முத்தமிட்ட நிலா, “அம்முபட்டு” என்று கொஞ்சினாள்.
“ஆரூ நீ வருவனு சொல்லவே இல்லை” என்று சாரா வினவ,
“ஆரூ உனக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கலாம்னு வந்தேன்டா தங்கம்” என்றாள்.
“ஐ.. சூப்பர் ஆரூ” என்ற சாரா அவளுக்கு முத்தங்களை வழங்க, புன்னகையாய் பதில் முத்தமிட்டாள்.
இருவரையும் புன்னகையுடன் பார்த்த இலக்கியனின் விழிகள் எப்போதும் போல் அவளது அந்த இளஞ்சிவப்புக் காதுகளை ரசித்துவிட்டு பின் சாராவிடம் சென்றது.
“உன் ஆரூகூட தான் பேசுவியா? என்கூடயும் ஃபிரண்ட்ஷிப் வச்சுக்கோயேன்” என்று ராகவி வினவ,
சாரா லக்கியைப் பார்த்தாள்.
அவன் மலர்ந்த சிரிப்புடன் தலையசைக்க, “ஓகே.. உங்க பெயர் என்ன?” என்று கேட்டாள்.
“என் பெயர் ராகவி. ஏன் இலக்கியன் சார் பர்மிஷன் கொடுத்தா தான் பேசுவியா?” என்று ராகவி வினவ,
“ஆமா. என்னோட லக்கி சொன்னா தான் செய்வேன்” என்று குழந்தைக் கூறினாள்.
அதில் இலக்கியன் முகத்தில் கர்வமாய் ஒரு புன்னகை குடிகொள்ள, தன்னிச்சையாய் பார்வையை உயர்த்தி அவனது கர்வத்தைக் கண்டு நிலா மகிழ்ச்சி அடைந்தாள்.
“ஓ.. சரி சரி. சார் சொல்லிட்டாங்கள்ல? என்கூட ஃபிரண்டா இருப்ப தானே?” என்று ராகவி வினவ,
“இருப்பேன். உங்கள நான் எப்படி கூப்பிட?” என்று கேட்டாள்.
“உனக்கு எப்படி கூப்பிட தோனுதோ அப்படிக் கூப்பிடு” என்று ராகவி கூற,
“ராகினு கூப்பிடு” என்று நிலா கிசுகிசுத்தாள்.
“ஆங்.. நானும் ராகினு கூப்பிடவா?” என்று சாரா வினவ,
“பேபிடால்..” என்று இலக்கியன் சற்றே கண்டிப்பாக அழைத்தான்.
'என்னைத் தவிர யாரையும் பெயர் சொல்லியெல்லாம் கூப்பிடக்கூடாது. பெரியவர்களுக்கு மரியாதை தரனும்' என்று அவன் கூறியது நினைவு பெற்ற சாரா, “அச்சுச்சோ சாரி. நான் அக்கானு சொல்லுறேன்” என்றாள்.
அதில் கலகலவென சிரித்த ராகவி, “நீயும் என்னை ராகினே கூப்பிடுடா. உன் ஆரூவ மட்டும் பெயர் சொல்லி கூப்பிடுறல? நானும் அவளும் ஃபிரண்ட்ஸ் தான்” என்று கூற,
‘அட இவளையும் பேபி பெயர் சொல்லி தானே கூப்பிடுவா? நான் இதை எப்படி கவனிக்காம விட்டேன்?’ என்று அவன் நினைத்துக் கொண்டான்.
அவனது யோசனையான முகத்தையே சாரா பார்த்துக் கொண்டிருக்க, “சார் நீங்க பர்மிட் பண்ணா தான் இந்த பேபிடால் என்னைப் பெயர் சொல்லி கூப்பிடுவா. சொல்லுங்க சார்” என்று ராகவி கூறினாள்.
தன் நினைவிலிருந்து மீண்டவன் சாராவைப் பார்த்து லேசான சிரிப்போடு தலையசைக்க, முகமெல்லாம் புன்னகையுடன் “ஓகே ராகி” என்றாள்.
சிரிப்பொலி எங்கும் பரவ பெண்கள் இருவரும் சிரிக்க, இலக்கியனும் மகிந்தனும் அதை புன்னகையுடன் பார்த்தனர்.
மகிந்தனிடம் வந்து கைகுலுக்கிய இலக்கியன், “ஐம் எஸ்.ஐ. இலக்கியன்” என்று அறிமுகமாக,
“ஐம் மகிந்தன். ஹாப்பினெஸ் தன்னார்வலர் தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர். நிலா சொல்லி தான் இங்க வந்தோம். இடம் ரொம்ப பீஸ் ஃபுல்லா இருக்கு. எங்கும் குழந்தைகளோட இந்த சிரிப்பு சத்தம்.. நீங்க தான் இந்த ஹோமுக்கு ஒரு நல்ல சப்போட்டர்னு கேள்விப்பட்டோம்” என்று மகிந்தன் கூறினான்.
தனது டிரேட் மார்க் புன்னகையுடன், “நீங்க இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி சார். உங்களுக்கு வேண்டிய சப்போர்ட் நாங்க தரோம்” என்று இலக்கியன் கூற,
“ஓகே சார்” என்றவனும் தனது குழுவுடன் பணியைத் துவங்கினான்.
நிலாவும் ராகவியும் குழந்தைகளின் மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதாரம் சார்ந்த வேலைகளைச் செய்ய, மகிந்தனின் பி.ஏ சர்வேஷ் அங்கு தற்காப்புக் கலைகள் சிலவற்றை அறிவுருத்தினார். மிகிந்தன் மற்றும் அவனது குழு பாலியல் சார்ந்த அறிவுறைகளை அந்ததந்த வயது குழந்தைக்கு ஏற்ப கற்பித்தும், அங்கு தேவையான மற்ற உதவிகளை செய்து கொண்டும் இருந்தனர்.
இலக்கியனும் அவர்களுடன் சேர்ந்து தன்னாலான உதவிகளைச் செய்ய, அன்றைய பொழுது மிகவும் அழகாய் ஓடியது. காலை மதியம் மற்றும் இரவு உணவுகளும் இவர்கள் குழுவினரே ஏற்பாடு செய்திருக்க, அன்று குழந்தைகளுக்கு ஏதோ விஷேச நாள் போன்று இருந்தது.
அங்குள்ள குழந்தைகளின் அளவுகளைக் கேட்டுக் கொண்டு அனைவருக்கும் புத்தாடைகளும் தருவித்திருந்தனர்.
அன்று நாள் முழுதும் சாரா, “ஆரூ இதான் எங்க ரூம், ஆரூ இவ தான் சாய்ஷு. என் ஃபிரண்டு, ஆரூ இங்க பாத்தியா இதெல்லாம் என் டிரஸஸ்’’ என்று தனது சின்னச் சின்ன சந்தோஷங்களையும் அவளிடம் கூப்பிட்டு கூப்பிட்டு சொல்லிக் கொண்டிருந்தாள்.
அன்று மூன்று வேளை உணவும் அவளுக்கு அவளின் ஆரூ கையில் தான் ஊட்டப்பட்டது. அனைத்தையும் மனதில் இனம் புரியா இதத்துடன் பார்த்துக் கொண்டிருந்த இலக்கியன், சாரா ஆரண்ய நிலாவுடன் ஒன்றிப் பழகுவதை வெகுவாக ரசித்தான்.
இரவு நேரம் வந்திடவே ஆரூ கிளம்புவதாகக் கூறியதும் “ஆரூ அப்ப நீ எங்க கூட இருக்கமாட்டியா?” என்று சாரா கேட்க, நிலாவுக்கு அதில் இழையோடிய ஏக்கம் மனதை தைத்தது.
“ஆரூ அடிக்கடி உன்னைப் பார்க்க வருவேன்டா குட்டிமா” என்று அவள் கன்னம் கிள்ளி நிலா கூற,
“நீ லக்கி வீட்டுக்கு வரியா? நான் இன்னிக்கு அங்க தான் போவேன். நீயும் வரியா? நாமலாம் ஒன்னா தூங்கலாம்” என்று கூறினாள் குழந்தை.
அவள் அருகே நின்றிருந்த இலக்கியன் மற்றும் நிலா இருவரின் விழிகளும் அதிர்வாய் விரிந்துக் கொள்ள, இருவருக்கும் அந்த தருணம் என்ன பதில் சொல்வதென்று தெரியாத சங்கடத்தைக் கொடுத்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் தயக்கத்தோடு ஏறிட்டுக் கொள்ள, அவர்களைப் பார்த்த சாரா, ‘ஏ ஜீபூம்பா.. நீ கேட்க சொன்னனு நம்பி கேட்டேன். எதுக்கு இவங்க இப்படி முழிக்குறாங்க?’ என்று மனதோடு கேட்க, ஜீபூம்பா உருண்டு உருண்டு சிரித்ததே ஒழிய ஒன்றும் பேசவில்லை.
மீண்டும் அவர்களைப் பார்த்த சாரா, “வரமாட்டியா ஆரூ?” என்று வினவ,
சங்கடமாய் புன்னகைத்த நிலா, “வரேன் வரேன்டா தங்கபட்டு. நீங்க போய் சமத்தா தூங்குங்க” என்று சமாளிப்பாய் கூறினாள்.
சரியென்று தலையசைத்த சாரா ராகவியிடம் ஓட, இதழ் குவித்து பெரும் மூச்சை இழுத்துவிட்ட இலக்கியன், “சா..சாரி ஆரண்யா” என்றான்.
லேசான புன்னகையோடு “இருக்கட்டும் சார். குழந்தை தானே” என்று அவள் கூற, தானும் தலையசைத்துக் கொண்டு சாராவைப் பார்த்தான்.
அவன் முகம் மீண்டும் மலர்ந்திட, “என் பேபிடால் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தா” என்று கூறியபடி நிலாவை நோக்கி, “அவமட்டுமில்லை. எல்லா குழந்தைகளும் ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. ரொம்ப நன்றி ஆரண்யா” என்று கூற,
தானும் மலர்ந்து சிரித்தவள் மறுப்பின்றி அவன் நன்றியை ஏற்கும் விதமாய் தலையசைத்தாள்.
பிரபா நெகிழ்ச்சியோடு தனது நன்றியைக் கூறி, “இந்த ஆசிரமம் என்னோட பெயரில் இருந்தாலும் இதுக்கு முழு பாதுகாப்பும் உதவியும் செய்யுறது இலக்கியன் தம்பிதான். உங்க எல்லாருக்கும் மனசார நன்றி சொல்லிக்குறேன்” என்று கூற, அனைவரும் தலையசைத்து அவர் நன்றியை ஏற்றனர்.
அங்கு மகிந்தன் குழுவிடம் சென்ற இலக்கியன் மகிந்தனுடன் கைகுலுக்கி தன் நன்றியைத் தெரிவிக்க, அவன் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம் உருவானது.
“இந்த இல்லம் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானது. இங்க உள்ள ஒவ்வொரு குழந்தையோட சந்தோஷத்துலயும் என்னோட வாழ்வை நான் பார்க்குறேன். இன்னிக்கு ஏதோ திருவிழா போல அவங்க எல்லாரும் ரொம்ப நல்லா என்ஜாய் பண்ணாங்க. தேங்ஸ் மிஸ்டர் மகிந்தன். உங்க சேவை மேலும் பல இடங்களில் தொடரனும். என்னாலான உதவிகளையும் நான் உங்களுக்கு செய்வேன்” என்று இலக்கியன் கூற,
“ரொம்ப நன்றி சார். எங்களுக்கும் ரொம்ப மன நிறைவா இருந்தது” என்று மகி கூறினான்.
அனைத்து நன்றியுரைகளும் முடிந்து யாவரும் புறப்பட இருக்க,
‘ம்ம்.. இன்றைய நாளோட கடைசி டச் நம்ம கொடுக்கனுமே?’ என்ற ஜீபூம்பா, “என்ன சாரா உன் ஆரூ அண்ட் லக்கியோட வண்டில டிராவல் பண்றியா?” என்று கேட்டது.
சாரா ‘ஏ ஜீபூம்பா.. என்ன பண்ணப் போற?’ என்று மனதோடு வினவ,
“வெயிட் அன்ட் வாட்ச்” என்ற ஜீபூம்பா, “ஜீ…பூம்…பா” என்று மந்திரமிட்டது.
Comments
Post a Comment