14. சாராவின் ஜீபூம்பா

 அத்தியாயம்-14



தனது குழுவினரை அனுப்பிய மகிந்தன் ராகவி, நிலா, இலக்கியன் மற்றும் சாராவிடம் வந்தான். என்ன நினைத்தானோ ராகவியைப் பார்த்தவன், “கவி” என மென்மையாக அழைக்க, இலக்கியனுடன் பேசிக் கொண்டிருந்தவளோ திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். 


அத்தனை நேரம் இருந்த கலகலப்பு மொத்தமும் சடுதியில் மறைந்து படபடப்பாக காணப்பட்டவளை இலக்கியன் ஆச்சரியமாக நோக்க, நிலா இதழ் மடித்து சிரிப்பை அடக்கியபடி பார்த்தாள்.


ஏதோ விடலைப் பருவத்திலுள்ள இளைஞனைப் போல் தயங்கித் தயங்கி, “நான் உன்னை வீட்டுல விடவா?” என்று அவன் வினவ, இவளுக்கு மூச்சே நின்றுவிட்டது.


“கவி..” என மீண்டும் மென்மையாக அவன் அழைக்க, 


“ஆங்..” என்று தூக்கத்திலிருந்து விழித்ததுப் போல் கேட்டாள். 


“மாமாவ பார்க்கனும். வீட்டுக்குத் தான் வருவேன். நானே கூட்டிட்டுப் போகவா?” என்று சற்றே திடமாய் அவன் வினவ, 


“இ..இல்ல இருக்கட்டும். நான் நிலாகூட போயிக்குறேன்” என்று கூறினாள்.


சற்றே ஏமாற்றமாய் உணர்ந்தபோதும் விருப்பமே இன்றி அவள் வெறும் பேச்சுக்குக் கூறியது அவனுக்கு நன்கு புரிந்தது. 


'சரி ஓகே' எனக் கூறவந்தவன் இன்னும் ஒருமுறை கேட்டுப் பார்ப்போமே என்ற உந்துதலில், “அல்ரெடி ரொம்ப லேட்டாச்சுடா. அவ உன்னையும் விட்டுட்டு போக ரொம்ப லேட் ஆயிடும். நான் அங்க தானே போறேன்?” என்று வினவ, அவள் இமைகள் யோசனையாய் படபடத்தது.


ராகவி நிலாவை நோக்க, “நீ அண்ணாகூட போ ராகி” என்று நிலா கூறினாள். 


மகிந்தனைப் பார்த்து அவள் மெல்ல தலையசைக்க, அவனிடம் உலகையே வென்ற சாதனைப் புன்னகை. 


அவளைக் கூட்டிக் கொண்டு தனது வண்டியை கிளப்பியவன் இலக்கியனுக்கு தலையசைத்து நிலாவைப் பார்த்து புன்னகைத்துவிட்டுச் செல்ல, அத்தனை நேரம் கடினப்பட்ட அடக்கிய சிரிப்பை வெளியேற்றினாள் நிலா.


அவளது கிங்கிணி நாதமான சிரிப்பை இலக்கியன் ரசித்து நோக்க, “எதுக்கு ஆரூ சிரிக்குற?” என்று சாரா கேட்டாள். 


அதில் முடிந்தமட்டும் தன் சிரிப்பை அடக்கியவள், “ஒன்னுமில்லைடா பட்டு” என்றுவிட்டு இலக்கியனைப் பார்த்து, “ராகி மாமாவோட பையன் அவங்க” என்று கூற அவனுக்கு விடயம் புரிந்து போனது. 


சிரித்தபடி அவனும் தலையசைக்க, “ஓகே சார். நான் வரேன்” என்றவள் சாராவைத் தூக்கி முத்தமிட்டு பதில் முத்தம் பெற்று தன் வண்டியிடம் சென்றாள்.


அந்தோ பரிதாபம் அந்த வண்டிதான் தற்போது ஜீபூம்பாவின் கட்டுப்பாட்டில் உள்ளதே! அவள் கிட்டத்தட்ட பத்து நிமிடங்களாக தனது வண்டியை இயக்க போராடிக் கொண்டிருக்க, உள்ளே பிரபாவிடம் கூறிக் கொண்டு சாராவின் உடைமைகளுடன் வந்த இலக்கியன், “ஏ நீ இன்னும் கிளம்பலையா?” என்றான்.


சட்டெனக் கேட்டவன் குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவள் அவனைக் கண்டு ஒரு ஆசுவாச மூச்சை இழுத்துவிட்டு, “வண்டி ஸ்டார்ட் ஆகமாட்டேங்குது சார்” என்று கலவரமான முகத்துடன் கூறினாள்.


“அச்சுச்சோ.. என்னாச்சு ஆரூ?” என்று சாரா வினவ, தன் இதழ் பிதுக்கி, ‘தெரியவில்லை’ என்பது போல் சைகை செய்தவள் இலக்கியனைப் பார்த்தாள். 


“இப்படி வாம்மா” என்றவன் சாராவை இறக்கிவிட்டு வண்டியை உயிர்ப்பிக்க முயற்சிக்க, ‘ நீ என்ன மிதிச்சாலும் தேராது லக்கி. ஒழுங்க உன் பைக்ல கூட்டிட்டு போ' என்று வண்டி மீது அமர்த்தபடி காது குடைந்துக் கொண்டிருந்த ஜீபூம்பா கூறி சிரித்தது.


சிறிது நேரம் முயற்சித்துவிட்டு “என்ன பிரச்சினைனு தெரியலைமா. நாளைக்கு மெக்கானிக் வரசொல்லி பார்த்து அனுப்புறேன்” என்று அவன் கூற, 


“ஓகே சார்” என்றாள். 


“இப்ப எப்படிப் போவ ஆரூ?” என்று சாரா வினவ, 


“ஆட்டோல போயிக்குறேன்டா பட்டு” என்றாள். 


“இந்த டைம் ஆட்டோ கிடைக்குமா?” என்று அவன் வினவ, 


அதே கேள்வி தான் அவள் மனதிலும் ஓடியது. 


“பார்த்துக்குறேன் சார்” என்று அவள் கூற, 


“ஆரூ நீ வா நம்ம வண்டில போலாம்” என்று சாரா கூற, இலக்கியன் நிலாவையே பார்த்தான்.


“இ..இல்லைடா இருக்கட்டும்” என்று அவள் கூற, 


“இந்த நேரம் ஆட்டோ கிடைக்காதுமா. அதுவும் தனியா வேற போகனும். வா நானே கூட்டிட்டுப் போறேன்” என்று கூறினான்.


“எதுக்கு சார் உங்களுக்கு சிரமம்?” என்று அவள் தயங்க, 


“ஆரூ வா ஆரூ.. நம்ம வண்டில போகலாம்” என்று சாரா அழைத்தாள். அதற்குமேல் அவனிடம் எப்படி மறுப்பதெனப் புரியாது அவள் விழிக்க, சாரா மீண்டும் அழைத்ததால், சரியென ஒப்புக் கொண்டாள். 


“ஏ.. வா போலாம்” என்று சாரா குதூகலிக்க, இலக்கியனோ எப்போதும் தனக்கு முன்னே அமர்த்திக் கொள்ளும் சாராவை தனக்கும் நிலாவுக்கும் இடையில் அமர்த்திக் கொண்டு நிலாவுக்கு சங்கடத்தைக் குறைத்தான்.


அவளது விலாசம் கேட்டுக் கொண்டவன் வண்டியை இயக்க, அந்தத் தருணம் கவிதையாய் அவர்கள் மனப்பெட்டகத்தில் அனுமதியின்றி பதிந்தது. சாராவுடன் நிலா பேசியபடியே வர, ‘’உங்களுக்குலாம் சீரியல் எபெக்ட்டு தான்டா ஒத்துவரும்’’ என்று ஜீபூம்பா மந்திரம் போட்டது.


அடுத்து வந்த வேகத்தடையில் வண்டி ஏறி இறங்க, பிடிமானத்திற்கு அவள் கரங்கள் அவன் தோளை இறுகப் பற்றிக் கொண்டது. 


அதில் இருவருக்குள்ளும் மின்சாரம் பாய்ந்த உணர்வு. 'அய்யோ.. இதேதடா கொடுமை’ என்ற எண்ணத்தோடு அவள் சங்கடமாய் கரம் எடுக்க ‘போடுடா அடுத்த ஸ்பீட் பிரேக்கர' என்று ஜீபூம்பா கூறியதைத் தொடர்ந்து அடுத்த வேகத்தடையில் வண்டி ஏறி இறங்கியது.


மீண்டும் அவன் தோள் பற்றியவளுக்கு வியர்த்து விறுவிறுத்துப் போக, அவளது கைகளின் ஈரம் அவன் சட்டையைத் தாண்டி தோள்வரை ஊடுருவியது. அதில் அவனுக்கே உடலெல்லாம் சில்லிட்டு சிலிர்க்க, மீண்டும் கரத்தினை எடுக்க அவள் பிரயத்தனப்படும்படியாக இல்லாது சாலை சதி செய்தது.


அவனும் பள்ளம் இல்லாத பகுதியாகப் பார்த்து வண்டியை செலுத்த, ஒரு வழியாக அவள் வீடு உள்ள தெரு வந்தது. அவள் வீட்டைக் கேட்டு அறிந்து கொண்டவன் அங்கு வண்டியை நிறுத்த, பதற்றமாக தனது வண்டி சாவியை எடுத்துக் கொண்டு கார்த்திக் வெளியே வந்திருந்தான். 


இலக்கியனுக்கு நன்றி சொல்ல எத்தனித்தவள் தன் மாமனைக் கண்டு “மாமா” என்க, 


“பாப்பா..” என்றபடி விரைந்தவன், “ஏன்டா ஃபோனே எடுக்கலை” என்றான்.


அவன் கண்களெல்லாம் சிவந்து பதட்டத்தில் துடித்துக் கொண்டிருக்க, அதை சற்றே அதிசயித்து தான் பார்த்தான் இலக்கியன். தனது தோளில் தூங்கிய சாராவை வைத்தபடி தன் மாமனைப் பார்த்துத் திரும்பியவள் “என்ன மாமா?” என்று சத்தமாக கேட்டதில் சாரா “ம்ம்..” என்று அசைய, 


“அச்சோ.. ச்சோ..ச்சோ” என்று தட்டிக் கொடுத்து, “என்ன மாமா? ஏன் பதட்டமா இருக்கீங்க?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.


அதில் தானும் குரல் தழைத்து, “ஏன்டா பாப்பா ஃபோன் எடுக்கலை. எத்தனை முறை போட்டேன் தெரியுமா? பயந்தே போயிட்டேன். லேட்டாச்சுனா எப்பவும் சொல்லுவியே. இன்னிக்கு ஏதும் சொல்லவும் இல்லை. நான் கால் பண்ணியும் எடுக்கலை” என்று அவன் கேட்க, 


“அச்சோ மறந்தே போயிட்டேன் மாமா. ஃபோன்ல சார்ஜே இல்லை. சைலெண்ட்ல வேற போட்டு வச்சுட்டேன்” என்றாள்.


“பயந்துட்டேன் நிலா” என்று அவன் பெருமூச்சுவிட, 


அங்கு மதியைத் தோளில் போட்டபடி வெளியே வந்த ஆதி, “அம்மாடி.. வந்துட்டியாமா? உன் மாமா எங்க நிலாவக் காணும் நிலாவக் காணும்னு படுத்தி எடுத்துட்டாங்க. வானத்துல இருக்கும் தேடிபாருயானு சொல்லிட்டு போனா வண்டி சாவியை எடுத்துட்டு விறுவிறுனு போறாரு. நான் கூட வண்டில விட்டத்த பார்த்துட்டே போகப்போறாரோனு பதறிட்டேன்” என்று கூறி கேலி செய்தாள்.


அதில் சிரித்துக் கொண்டவள், “சரி போங்க வரேன்” என்க, 


அவர்கள் இருவரும் உள்ளே சென்றனர். 


இலக்கியனிடம் திரும்பி, “தேங்கியூ சார்” என்று அவள் கூற, “எல்லாருக்கும் ரொம்ப செல்லம் போலயே” என்று கேட்டான்.


அதே புன்னகையுடன் “ஆமா சார். அம்மா அத்தைய விட அக்கா மாமாக்கு தான் நான் செல்லம். அதுவும் மாமா” என்று சிரிக்க, 


தானும் புன்னகைத்தவன், “ம்ம் தெரியுது. டேக் கேர்மா. வண்டிய நாளைக்கு சர்விஸ் பார்க்க சொல்றேன்” என்றான்.


“ஓகே சார். தேங்க்யூ” என்று அவள் திரும்ப, “ஆரா..” என்றான். 


என்ன என்பது போல் அவள் திரும்ப, சிரித்தபடி, “என் பேபிடால்” என்று கை நீட்டினான். அப்போதுதான் சாராவை வைத்திருப்பது உணர்ந்தவள், “அச்சோ..” என்றபடி வர, அவளிடமிருந்து சாராவை வாங்க முற்பட்டான்.


நிலாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு “ம்மா..” என்று குழந்தை தூக்கத்தில் பிதற்ற, நிலாவின் உடல் சிலிர்த்துப் போனது. 


குழந்தையை சட்டெனத் தன்னோடு அணைத்துப் பிடித்தவள் அவளைப் பார்க்க, அவள் பால் முகம் தூக்கத்தில் ஆழ்ந்து இருந்தது. 


'பாப்பா' என்று மனதோடு அழைத்துக் கொண்டு மெல்லிய புன்னகையுடன் முத்தமிட்டவள் குனிந்து அவனிடம் குழந்தையைக் கொடுக்க, குழந்தையை வாங்கி முன்னே போட்டுக் கொண்டான்.


“பார்த்து போங்க சார். தூங்கிட்டா வேற” என்று அவள் கூற, 


“ஓகேமா” என்று புறப்பட்டான். 


தெரு முனையில் அவர்கள் திரும்பும் வரை நிலா அவர்களையே பார்த்தபடி நிற்க, அவள் பார்ப்பதை தானும் கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டான்.


வீடு வந்து சேர்ந்தவன் சாராவை படுக்கையில் கிடத்திவிட்டு களைப்புத் தீர குளித்து வந்து படுத்தான். அவன் வந்தவுடன் அவனைக் கட்டிக் கொண்ட சாரா, “ம்மா..” என்று முனக, அவனுள் ஒரு இன்பப் படபடப்பு. 


சற்றுமுன் சாராவின் அம்மாவென்ற அழைப்பில் நிலாவின் வதனம் காட்டிய மாற்றங்களை நினைத்துப் பார்த்தவனுக்கு அவளது உணர்வுகள் நன்கு புரிந்தது. சாரா தன் வீட்டிற்கு அவளை அழைத்ததும் செங்காந்தளாய் சிவந்த அவளது முகமும், அடர் சிவப்பேறிய அவளது இளஞ்சிவப்பு காதுகளும் அவன் கண்முன் வந்துபோக, அவன் இதழில் அழகாய் ஒரு புன்னகை குடிகொண்டது.


'அந்த சிவப்பின் காரணம் என்ன? வெட்கமா?’ என்று கேட்ட அவனது மனசாட்சியின் குரலில் திடுக்கிட்டவன் தனது எண்ணம் போகும் போக்கில் அதிர்ந்து தான் போனான். 


'என்னடா இது? இலக்கியா? ஆரா மேல லவ்வா?’ என்று அவனது மனசாட்சி கேலி செய்ய, ‘ஏன் இருக்கக் கூடாதா?’ என்று தான் அவனுக்குக் கேட்கத் தோன்றியது.


அவனது எண்ணங்களின் பயணத்தை தடை செய்யும் விதமாய் அவனது அலைப்பேசி அலற, “ம்ம்..” என்று சாரா சிணுங்கினாள். 


“ஓகே ஓகேடா பேபி..” என்றபடி அலைபேசியை எடுத்தவன் சைலெண்ட் செய்து எழ முற்பட, அவன் பேபிடால் அதற்கு விடுவதாக இல்லை.


அந்த கோழிக்குஞ்சை நன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், அழைப்பை ஏற்று, “ஹலோ..” என்று மென்மையாய் அழைக்க, அந்த குரலின் மென்மையில் பேசுவது வேறு யாரோவென்று எண்ணியவர், “ஹலோ இலக்கியன் சார் இருக்காங்களா?” என்றார்.


'அட கொடுமையே’ என்றெண்ணியவன், “மிஸ்டர் ராம். நான் இலக்கியன் தான் பேசுறேன்” என்று அதே மென்மையான குரலில் கூறவும், 


“ஓ..ஓகே சார். குரல் வேற மாதிரி இருந்தது” என்று அவர் கூற, 


தன் நெஞ்சோடு ஒன்றியவளைப் பார்த்து பாசமாய் புன்னகை செய்தவன், “சொல்லுங்க ராம்” என்றான்.


“சார்.. நீங்க இன்னிக்கு ஒருத்தர ஃபாலோ பண்ண சொன்னீங்கள்ல? அவர் இன்னிக்கு காலைல பூராவும் வீட்ல தான் இருந்தார். சாயந்தரம் அவரோட வேலை செய்யும் தோழர சந்திச்சுட்டு *** பகுதில உள்ள வயலுக்கு போயிட்டு வீட்டுக்கு திரும்பிட்டார்” என்று ராம் கூற, 


“எ..எந்த வயல் சொன்னீங்க ராம்?” என்று மீண்டும் கேட்டான். 


ராம் அந்த பகுதியைக் கூற, 


“ஓகே ராம். ரொம்ப நன்றி” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.


அவனது ஆழ்மனம் படபடவென துடித்தது. அந்த இறந்துகிடந்த குழந்தையின் முகமும், பதைபதைப்போடு ஆரண்யாவிடம் பேசிய கார்த்திக்கின் முகமும் மாறி மாறி அவன் மனதில் வந்து போக, தலை விண்ணென்று தெரித்தது.


அங்கு தனது அறை பால்கனியில் வானைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தவன், “போன தடவை போல எந்த தப்பும் நடந்திடவே கூடாது. நல்லவேளை நம்ம பக்கமிருந்து எந்த ஆதாரங்களும் இல்லாததால தப்பிச்சுட்டோம். ஜாக்கிரதை” என்றுவிட்டு திரும்பி படுக்கையில் படுத்திருக்கும் தனது மனைவி மற்றும் மகளைப் பார்த்துக் கொண்டே பெருமூச்சு விட்டான்.


Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02