15. சாராவின் ஜீபூம்பா
அத்தியாயம்-15
அழுதுகொண்டே இருந்த சாராவை எப்படி சரிசெய்யவென்றே தெரியவில்லை ராதாவிற்கு.
“அழாதடா கண்ணா.. அழாதடா பாப்பா” என்றவர், “ஏங்க.. அவனுக்கு மறுபடியும் ஃபோன் அடிங்க. குழந்தை அழுதுட்டே இருக்கா” என்று கூற,
“அவன் எடுக்க மாட்டேங்குறான். நீ பாப்பாவ ரெடி பண்ணு ஹாஸ்பிடல் போயிட்டு வந்திடுவோம்” என்று சக்கரவர்த்தி கூறினார்.
அதன்படி அவளை தயார் செய்துகொண்டு இருவரும் மருத்துவமனை சென்றிருக்க, ராதா கண்கள் கலங்க, “என்னங்க இப்படி திடீர்னு உடம்பு நெருப்பா கொதிக்குது” என்று வினவினார்.
“தெரியலை ராது. என்னனு பார்ப்போம்” என்றவர் தோளில் அழுதுகொண்டிருக்கும் குழந்தைக்கு தட்டிக் கொடுத்தார்.
உள்ளே அனுமதிக்கப்படவும் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், “என்னாச்சு? பாப்பா என்ன சாப்டாங்க?” என்று வினவ,
“காலைல இருந்து எதுவுமே சாப்பிடவே மாட்டேங்குறா டாக்டர்” என்று ராதா கண்ணீரோடு கூறினார்.
அவளை பரிசோதனை செய்த மருத்துவர், “மீன் சாப்பிட்டாங்களா?” என்று வினவ,
சக்கரவர்த்தி, “நேத்து சாப்பிட்டா டாக்டர்” என்றார்.
“பாப்பாக்கு மீன் இனிமே கொடுக்காதீங்க. அவங்களுக்கு அது ஒத்துக்கலை. அதான் வாமிட்டிங் அண்ட் உடம்பு வெப்பநிலையும் அதிகமாயிருக்கு. ட்ரிப்ஸ் போடனும்” என்று மருத்துவர் கூற, ராதாவின் தழும்பிய கண்கள் கலங்கி பொழிந்தேவிட்டது.
“கண்டிப்பா போடனுமா டாக்டர்? சின்னபிள்ளை” என்று அவர் வருந்த,
“ஒன்னுமில்லை. பயப்படாதீங்க. எனர்ஜிகாக தான்” என்று சமாதானம் செய்தார். சக்கரவர்த்தி அவருடன் செல்ல, ஊசியை உள்ளே செழுத்துவதற்குள் அவர்களை தலையால் தண்ணீர் குடிக்க வைத்திட்டாள் சாரா.
அங்கு கடுப்போடு அமர்ந்திருந்த இலக்கியன் தனது அலைபேசியை எடுத்துப் பார்க்க, சக்கரவர்த்தியிடமிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட அழைப்புகளும், நிலாவிடமிருந்து ஒரு அழைப்பும் வந்திருந்தது.
'என்ன மாமா இத்தனை கால் பண்ணிருக்காரு? ஆரா வேற கால் பண்ணிருக்கா’ என்றவன் கரங்கள் தன்னிச்சையாய் நிலாவுக்கே அழைப்பு விடுத்தது.
அழைப்பு ஏற்கப்பட்டதும் படபடப்போடு, “சாராக்கு என்னாச்சு சார்? ஏன் ஸ்கூல் வரலை?” என்று அவள் வினவ,
“சாரா ஸ்கூலுக்கு வரலையா?” என்றான்.
“உங்களுக்குத் தெரியாதா?” என்று அவள் குழம்ப,
“காலைல அவ எழுந்திருக்கும் முன்னமே கிளம்பிட்டேன் ஆரா. ஃபோன் சைலெண்ட்ல இருந்தது. ஒரு கேஸ் விஷயமா வந்திருந்தேன். இப்ப தான் பார்க்குறேன் மாமா ஐந்து கால் பண்ணிருக்காரு” என்று கூறினான்.
“அச்சுச்சோ.. சீக்கிரம் பேசிட்டு சொல்லுங்க சார்” என்று அவள் கூற, சரியென வைத்தவன் சக்கரவர்த்திக்கு அழைத்தான்.
“இலக்கியா.. பாப்பாக்கு ரொம்ப ஃபீவர் அன்ட் வாமிட்டிங்பா. ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்திருக்கோம். டிரிப்ஸ் போட்டிருக்காங்க..” என்று பேசி முடிக்கும் முன் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது, அடுத்த பத்தாவது நிமிடம் அவன் மூச்சிறைக்க அங்கு வந்து நின்றான்.
“மாமா.. பாப்பாக்கு என்னாச்சு?” என்று அவன் பதற்றமாக வினவ,
“பாப்பாக்கு மீன்ல அலர்ஜி இருக்காம்பா. அது ஒத்துக்காம தான் ஃபீவர் அண்ட் வாமிடிங்காயிருக்காம்” என்று சக்கரவர்த்தி கூறினார்.
“பாப்பா எங்க மாமா?” என்று அவன் வினவ, அங்குள்ள அறையை கைகாட்டி, கூட்டிச் சென்றார்.
உள்ளே ராதா சோகமாய் அமர்ந்திருக்க, உறங்கிய நிலையில் கையில் குலுகோஸ் ஏற படுத்திருந்தாள், சாரா.
சிறுமி அருகே வந்தவனுக்கு அவளது அழுது களைத்த முகம் கண்டு மனம் துடிக்க, “ஏன்பா ஃபோனே எடுக்கலை? சாப்பிட மாட்டேன் ஹாஸ்பிடல் வரலை எனக்கு லக்கி தான் வேணும்னு ஒரே அடம். பாவம் ரொம்ப சோர்ந்துட்டா” என்று ராதா கலக்கமாகக் கூறினார்.
தன் தொண்டையை செறுமிக் கொண்டவன், “வேலையா போயிருந்தேன் அத்தை. பா..பாப்பா நல்லா தான் இருந்தாளா..” என்று தடுமாற,
அவன் தோளில் கரம் வைத்து அழுத்தம் கொடுத்த சக்கரவர்த்தி “ஒன்னுமில்லைடா” என்றார்.
சிறுமி அருகே அமர்ந்துகொண்டவன் அவள் கரத்தை மெல்ல வருடிக் கொடுக்க, “ல..லக்கி.. லக்கி வேணும் பாட்டி” என்று தூக்கத்தோடு கூறினாள்.
அந்த குரலில் தந்தையாய் கலங்கி போனவன், “ரொம்ப அழுதாளா அத்தை?” என அவளது கன்னங்களை வருடியபடி கேட்டான்.
'ஆம்' எனக் கூறவந்தவர் அவனது நிலை கண்டு அமைதியாகிட, “உடம்பு முடியலைனா குழந்தைங்க அழத்தான் செய்வாங்க இலக்கியா. நீ எதுவும் யோசிக்காத. டிரிப்ஸ் முடிஞ்சதும் பாப்பாவ கூட்டிட்டுப் போகலாம்னு சொல்லிட்டாங்க. நான் போய் மருந்தெல்லாம் வாங்கிட்டு வந்துடுறேன்” என்றபடி தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு சக்கரவர்த்தி சென்றார்.
அவன் கண்கள் சிவந்து துடிக்க, “சாரிடா பேபிடால். லக்கி வேலையா இருந்ததால தான் ஃபோன சைலெண்ட்ல போட்டேன். பேபிடாலுக்கு உடம்புக்கு முடியாம போகும்னு தெரிஞ்சிருந்தா லக்கி கூடவே இருந்திருப்பேன். சாரி பாப்பா” என்று கூறியவனுக்கு சட்டென நிலாவின் முகம் மனதில் வந்து போனது.
'அவளும் இப்படி தானே தவிச்சுட்டு இருப்பா?’ என்ற எண்ணத்தோடு அவளுக்கு அழைத்தவன், ஒரு ரிங்கில் அவள் அழைப்பை ஏற்றதில் தனது அழைப்புக்குக் காத்துக் கொண்டிருந்திருக்கின்றாள் என்பதைக் கண்டுகொண்டான்.
“சார்” என்று அவள் அழைக்க,
“ஹலோ ஆ..ஆரா” என்றான்.
“என்னாச்சு சார்? ப..பட்டு.. நல்லா தானே இருக்கா?” என்று அவள் தொண்டை அடைக்க வினவ,
இவனுக்கும் தொண்டையை யாரோ இறுக்குவது போன்ற உணர்வு வந்தது.
'எல்லாத்தையும் தைரியமா எதிர்கொள்ளும் நான் சாரா விஷயத்துல ஏன் இவ்வளவு தடுமாறுறேன்' என்று அவனும்,
'யாருக்கு என்ன பிரச்சினைனாலும் முதல் ஆளா நம்பிக்கை சொல்லும் நான் சாரா விஷயத்துல ஏன் இவ்வளவு தடுமாறுறேன்' என்று அவளும் நினைத்துக் கொண்டனர்.
“சார்..” என மீண்டும் அவள் அழைக்க,
“பாப்பாக்கு ஃபிஷ் (மீன்) அலர்ஜியாம் ஆரா. அது சாப்பிட்டது ஒத்துக்காம வாமிட்டிங் அண்ட் ஃபீவர் வந்திருக்கு” என்று கரகரத்தக் குரலில் கூறினான்.
“அச்சுச்சோ.. முன்னமே தெரியாதா சார்?” என்று அவள் வினவ,
“அவ ஃபிஷ் சாப்பிடமாட்டா ஆரா. நேத்து தான் ஏதோ ஆசைபட்டு சாப்பிட்டிருக்கா” என்றான்.
“இப்ப எப்படி இருக்கா சார்?” என்று அவள் வினவ,
“ட்..டிரிப்ஸ் ஏறுதுமா. ஹை ஃபீவர். ட்ரிப்ஸ் முடிஞ்சதும் வீட்டுக்கு விடுறதா சொன்னாங்க” என்று கூறினான்.
இங்கு இவள் கண்கள் கலங்கிவிட, “ஹே மூன் யாரு லைன்ல? எதுக்கு அழற?” என்று ராகவி வினவினாள்.
“ஷ்..” என நிலா சைகை செய்ய, “ஆரா..” என்று அழைத்தான்.
“மதி லன்ச் வீட்டிலேயே வச்சுட்டு போயிட்டானு திரும்ப கொடுக்கப் போனேன். சாரா வரலை அவளுக்கு உடம்பு முடியலையாம். மிஸ்கு தாத்தா சொன்னாங்கனு சொன்னா. அதான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன். ஒன்னுமில்லை சார். ஜஸ்ட் வீக்காகிருப்பாள்ல அதுக்கு ட்ரிப்ஸ் போட்டிருப்பாங்க. மருந்தெல்லாம் கரெக்டா கொடுங்க. சீக்கிரம் சரியாகிடும்” என்று நிலா கூற,
“ஹ்ம்.. அதைதான் வேண்டுறேன்” என்றான்.
சில நிமிடங்கள் மௌனமாய் ஒருவர் மூச்சுக் காற்றை மற்றவர் கேட்டவண்ணம் இருக்க, “அழாதமா” என்று ஆழ்ந்த குரலில் இலக்கியன் கூறினான்.
அவன் கூறியதில் தன்னை கண்டுகொண்டானே என்ற அதிர்வெல்லாம் இல்லாமல், “நி..நீங்களும். ஃபீல் பண்ணாம பாப்பாவை பார்த்துக்கோங்க” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
இங்கு கண்களை இறுக மூடிக் கொண்டு சாய்ந்தவன் காலை நடந்தவற்றை நினைக்கலானான்.
கார்த்திக் கொலை நடந்த பகுதியில் இருந்தது தெரிய வந்ததால் அவனுக்கு எதிராக தன்னிடம் உள்ளவற்றை அவ்வழக்கை எடுத்து நடத்தும் அதிகாரியிடம் கொடுத்து கார்த்திக்கை விசாரணை செய்யும்படி கூறிப்பார்க்கவே சென்றான்.
ஆனால் அந்த காவலனோ இலக்கியன் பேச்சைக் கூட கேட்காமல், ‘இது என் கேஸ். யாரை சந்தேகப்படனும்னு எனக்குத் தெரியும். நீங்க ஒன்னும் எனக்கு அறிவுரை கூற வேண்டாம்’ என்று கூறி அவனை அனுப்பியிருந்தான். அதில் சற்றே கடுப்பாக உணர்ந்தவன் தனது நண்பன் சுதிரிடம் சென்றான்.
உள்ளே வந்தவன் “சுதிர்.. அன்னிக்கு ஒரு நம்பர் கொடுத்து லொகேஷன் ட்ரேஸ் பண்ண சொல்லி கேட்டேன்ல. அந்த நம்பரோட கால் ஹிஸ்டரி எனக்கு வேண்டும்” என்று கேட்க,
“என்னாச்சுடா ஏன் இவ்வளவு கோபமா இருக்க?” என சுதிர் கேட்டான்.
“அந்த ராஜ் சரியான லூசா இருப்பான் போலடா. அவன் நடத்துற கேஸ்ல இப்பவரை ஒரு லீட் கூட சிக்கலை. நான் கண்டுபிடிச்சதை வச்சு அவனுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு பார்த்தா அப்படி கோவமா பேசிட்டு போறான் இடியட்” என்று இலக்கியன் பொறிய,
“அவனுக்குத்தான் உன்னை பிடிக்காதே. என்னமும் பண்றான்னு விடவேண்டியது தானே?” என்று சுதிர் கேட்டான்.
“சுதிர் சைல்டிஷா பேசாத. அவனுக்கு என்னைப் பிடிக்குது பிடிக்காததெல்லாம் அவசியமில்லாத விஷயம். ஒரு பச்சக் குழந்தையோட உயிர் போயிருக்கு. நம்ம வீட்டு பிள்ளையா இருந்தா விடுவோமா? ரெண்டு வாரமா ஒரு லீடும் கிடைக்காம சுத்திட்டு இருக்கான். இது எதும் சைகோ கில்லிங்கா இருந்து அடுத்து ஒரு கொலை நடந்தா என்ன செய்றது?” என்று இலக்கியன் கத்த, அவனது நியாயமான விளக்கம் புரிந்து சுதிர் அமைதியானான்.
சற்று நேரத்தில், “சரி நீ அதை பார்த்து எடுத்து வை நான் வரேன்” என்றவன் வெளியே வந்து நின்றான்.
'கார்த்திக் அங்க நைட் போனதை வைத்துப் பார்த்தா அந்த பிரேஸ்லெட் அவரோடதா தான் இருக்கும். இருந்தாலும் டி.என்.ஏ டெஸ்ட் பண்ணா இன்னும் கன்பார்மா தெரிஞ்சுக்கலாம். பட் அதுக்கு அவர் டி.என்.ஏ சாம்பில் கிடைக்கனுமே?’ என்றபடி வெளியே வந்தவன் யார் மீதோ மோதிக் கொண்டான்.
“சாரி..” என்றபடி நிமிர்ந்தவன் தன்முன் நிற்கும் மகிந்தனைப் பார்த்து, “ஹாய் மகிந்தன்” என்க,
“ஹாய் சார்” என்றான்.
“என்ன இந்த பக்கம்?” என்று இலக்கியன் வினவ,
“இங்க தெரிஞ்ச ஒரு தாத்தா பாட்டி இருக்காங்க சார். அவங்களைப் பார்க்க வந்தேன்” என்றான்.
அப்போது அவனது பி.ஏ சர்வேஷும் அந்த வீட்டிலிருந்து வர, “ஹாய் சர்வேஷ். நீங்களும் வந்திருக்கீங்களா?” என்று வினவினான்.
சில நிமிடம் பரஸ்பரம் அவர்கள் பேசிக் கொள்ள, மகிந்தன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டதும் அந்த வயல்வெளிக்குச் சென்ற இலக்கியன் வயலுக்குச் சொந்தமானவரை சந்தித்தான்.
“சார்” என்றபடி அவனைக் கண்டதும் அவர் வயலிலிருந்து விரைந்து வர, “வணக்கம் ஐயா” என்றான்.
“வணக்கம் தம்பி” என்றவர் யோசனையான அவன் முகம் கண்டு, “எதும் வேணுங்களா?” என்று கேட்க,
“ஆமா ஐயா. ஒரு உதவி வேணும்” என்றவன் தனது அலைபேசியில் கார்த்திக்கை அவனுக்கே தெரியாமல் எடுத்த புகைப்படத்தைக் காட்டி, “இவர பார்த்திருக்கீங்களா?” என்று கேட்டான்.
“அட நம்ம கார்த்தி தம்பி” என்று அவர் கூற, அவரைத் திடுக்கிட்டுப் பார்த்தவன், “இவர தெரியுமா?” என்று கேட்டான். “அந்தா இருக்கே.. அந்த வயல் அவரோடது தான் சார். அவர் பாட்டன் காலத்து சொத்து. வித்துபோட மனசில்லாம வேலைக்கு ஆள் போட்டு வெள்ளாமை பண்ணிகிட்டு இருக்காரு. நானும் அப்பப்ப ஒத்தாசைக்கு அங்க வேலை செய்வேன். தங்கமான பையன்பா” என்று அவர் கூற,
இவனது புருவங்கள் முடிச்சிட்டது.
“இங்க வருவாரா?” என்று அவன் வினவ,
“ம்ம்.. அப்பப்ப வருவாருபா. என்ன பேங்கு உத்யோகத்துல இருக்குறதால தம்பி சாயிந்திரம் போலதான் வருவாரு” என்றார்.
'அப்ப சும்மா இங்க வந்தபோது தான் அந்த பிரேஸ்லெட்ட மிஸ் பண்ணிருப்பாரோ?’ என்று இலக்கியன் எண்ண,
“தம்பி எதும் பிரச்சினையா?” என்றார், பெரியவர்.
“இல்லை இல்லை ஐயா. நான் கேட்டுகிட்டதா நீங்க அவர்கிட்ட காட்டிக்க வேண்டாம்” என்று கூறிக் கொண்டு வந்தவன் அதன் பிறகே தனது அலைபேசியை எடுத்துப் பார்த்து மருத்துவமனைக்கு வந்தது. நினைவிலிருந்து மீண்டவன் மருத்துவரிடம் பேசிவிட்டு சாராவை வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
Comments
Post a Comment