17.சாராவின் ஜீபூம்பா
அத்தியாயம்-17
முன்பு சந்தித்த அதே கெபிடேரியாவில் அவளுக்காகக் காத்திருந்த இலக்கியனின் மனதில் வலம் வந்து கொண்டிருந்ததென்னவோ, முந்தைய இரவு பார்த்த பரிசோதனையின் முடிவு தான்.
‘இத்தனை நாள் கார்த்திக் கார்த்திக் என அவன் பின்னோடேயே சென்றோமே? ஆனால் அந்த கை அணிகலனில் உள்ள மரபணுவும் கார்த்திக்கின் மரபணுவும் ஒத்துப் போகவில்லை என்றல்லவா வருகின்றது? எனில் யார் இதை செய்தது? அந்த குழந்தையின் இறப்புக்கு யார் காரணம்?’ என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க,
‘இப்ப இது ரொம்ப முக்கியமா? லவ் பண்றதுக்கு பொண்ணை கூப்பிட்டுட்டுப் பொணத்தைப் பத்தி யோசிக்குறானே? ஸப்பா.. இவனுங்கள சேர்த்து வைக்குறதுக்குள்ள' என்று அவன் அருகே அமர்ந்திருந்த ஜீபூம்பா நொந்து கொண்டது.
“ஹாய் சார்” என்ற ஆர்ப்பாட்டமான குரலில் மகிந்தன் சர்வேஷுடன் வந்து நிற்க,
தன் நினைவிலிருந்து மீண்ட இலக்கியன் அவனை நிமிர்ந்து பார்த்து “ஹாய் மகிந்தன்” என்றான்.
“நம்ம அடிக்கடி சந்திச்சிக்குறோம்ல?” என்று மகி கூற,
“ஆமா மகிந்தன். என்ன இந்த பக்கம்?” என்று இலக்கியன் கேட்டான்.
“இந்த ஏரியால சின்ன வேலையா வந்தோம். அப்படியே காஃபி குடிச்சுட்டு போலாமானு சர்வேஷ் கேட்டான். அதான் வந்தோம். அண்ட் ஹேட் அ ப்ளஸென்ட் சர்பிரைஸ்” என்று மகிந்தன் கூற,
“சூப்பர். உட்காருங்க மகிந்தன்” என்றான்.
அவனும் சர்வேஷுடன் அமர, “அப்றம் லைஃப் எப்படி போகுது சார். உங்க பேபிடால் எப்படி இருக்கா?” என்று அவன் பொதுவான கேள்விகளைக் கேட்க,
“நல்லா போகுது மகிந்தன். என் பேபிடாலும் நல்லா இருக்கா” என்று கூறினான்.
சர்வேஷ் அமைதியாய் இவர்கள் பேச்சை வேடிக்கைப் பார்க்க, “இவர் உங்க பி.ஏ தானே?” என்று இலக்கியன் கேட்டான்.
“ஆமா சார். ஆனா முதல்ல என்னுடைய நல்ல தோழர்” என்ற மகிந்தன் தனக்கும் சர்வேஷுக்குமான குளம்பி வந்ததும், “நீங்க எதும் சொல்லலையா சார்?” என்று கேட்டான்.
“இல்லை நான் ஒரு முக்கியமான பர்ஸனுக்கு காத்திருக்கேன். அவங்க வந்ததும் சொல்லிக்குறேன்” என்று இலக்கியன் கூறிவிட, சரியென்று இருவரும் தங்களுக்கானதைக் குடித்து முடித்தனர்.
“ஓகே சார் வரோம்” என்று மகிந்தன் கூற, இருவருக்கும் கை குலுக்கி தனது பிரியாவிடையைத் தெரிவித்தான்.
இருவரும் வெளியே சென்றபோது உள்ளே வந்த நிலா இலக்கியனிடம் செல்ல, அதைத் திரும்பிப் பார்த்தவனோ இதழை லேசாய் சுழித்து சிரித்தபடி ‘இவ தான் அந்த முக்கியமான பர்ஸனா?’ என்று நினைத்துக் கொண்டான்.
“சாரி சார். டிராஃபிக்ல மாட்டிகிட்டேன்” என்று அவள் கூற,
“பரவாயில்லை ஆரா” என்றான்.
மெல்லிய புன்னகையுடன் தனக்கு சாக்லேட் மில்க் ஷேக் அவள் கூறிக் கொள்ள தனக்கும் ஒரு குளம்பியைச் சொல்லிக் கொண்டான்.
“சொல்லுங்க சார்” என்று கூறியவள் அவன் பேசப்போவது என்னவாக இருக்குமென்ற ஆர்வத்தோடு அவன் முகம் பார்க்க, அவன் முகத்திலிருந்து எதையும் அவளால் கண்டுகொள்ள இயலவில்லை.
“எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு ஆரா. உன்னைக் காதலிக்குறேன். கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் அவன் சாதாரணமாகக் கேட்டுவிட,
அவனை விழிகள் அகல, அதிர்ந்து நோக்கியவள், “ச.. சார்?” என்று திணறினாள்.
'பாத்தியா? உனக்கு மட்டுமில்லை. அவருக்கும் உன்மேல ல்தகா சைஆ இருந்திருக்கு’ என்று அவள் மனசாட்சி குத்தாட்டம் போட, இமைகள் படபடக்க அவனைப் பார்த்து மலங்க மலங்க விழித்தாள்.
அவள் முகபாவம் கண்டு ஒற்றைப் புருவம் உயர்த்தி “தப்பா ஏதும் கேட்டுட்டேனா?” என்று அவன் வினவ, அவளது இளஞ்சிவப்புக் காதுகள் மேலும் சிவந்தன.
அந்தக் காதுகளைக் கண்டு லேசாய் புன்னகைத்தவன், “ஐ லைக் யுவர் இயர்ஸ் (எனக்கு உன் காதுகள் பிடிக்கும்). அந்த பிங்கிஷ் காதுகள் பார்க்க அழகா இருக்கும்” என்று கூற, “சார்..” என்றாள்.
“யாரையும் லவ் எதும் பண்றியா?” என்று அவன் கேட்ட தோரணையே சொல்லியது அந்த கேள்விக்கான பதில் அவன் அறிந்ததே என்று.
வேகமாய் அவனறிந்த இல்லையென்ற பதிலை தலையாட்டலில் கொடுத்தவள், “எனக்கு என்ன சொல்லனு தெரியலை” என்று தலைகுனிய,
“புடிச்சிருந்தா ஓகே சொல்லு. இல்லைனா நோ சொல்லு. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு அதை மறைக்காம அப்படியே சொல்லிட்டேன். நானும் கொஞ்சம் நாளா யோசித்தேன் தான். சாராவை உனக்கு பிடிச்சதால உன்னை கல்யாணம் செய்ய விரும்புறேனோனு கூட தோனிச்சு. உன்னை நான் விரும்ப சாராவும் ஒரு காரணமா இருப்பாளே தவிர, சாரா தான் காரணம்னு சொல்லமாட்டேன். விருப்பு வெறுப்பு என் மனசு சார்ந்தது. அதனால உன்னை எனக்கு பிடிச்சிருக்கு” என்றான்.
பேசத் தெரியாத குழந்தையாய் விழித்தவள் தனது தோள் பையின் வார் பகுதியைத் தேய்த்துக் கொண்டே இருந்தாள்.
“இப்பவே பதில் சொன்னா தான் விடுவேன்னுலாம் சொல்லமாட்டேன். வீட்டுல போய் சொல்லி அவங்ககிட்ட கேட்டுட்டு கூட சொல்லு” என்று அவன் கூறியதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
“உன் மாமாக்கு தெரியாம ஏதும் செய்யமாட்ட தானே? அதனால சொன்னேன். நீ உன் மனசுக்கு முழுசா பிடிச்சு லவ் பண்ணி தான் என்னை ஏத்துக்கனும், காதலர்களா வாழ்க்கைய துவங்கனும்னுலாம் நான் கேட்கமாட்டேன். இன்ஃபாக்ட் எனக்கு உன்மேல உருவான உணர்வு தான் காதலானு கூட தெரியாது. ஆனா அது வெறும் இனக்கவர்ச்சி இல்லை. இனக்கவர்ச்சில பிடிச்சு போய் மூடி மூடி வச்சு சைட் அடிச்சு, பிறகு பார்த்து பார்த்து சொல்ல நானும் நீயும் விடலைப் பருவத்திலும் இல்லை. நம்ம ரெண்டு பேருமே மெசூர்ட் பர்சன்ஸ். அதனால என்னோட பிடித்தத்தை உன்கிட்ட சொல்றேன். உனக்கு ஓகேனா சொல்லு. ஜஸ்ட் இது ஒரு பெண் பார்க்கும் படலம்னு நினைச்சுக்கோ” என்று அவன் கூற, இருவருக்குமான பானங்கள் வந்தது.
“இதோ காஃபியே வந்துடுச்சு” என்று அவன் கூற, அமைதியாய் அவனையே பார்த்தாள்.
'பார்த்தியா காதல் இல்லையாம்? காதல் இல்லாம தான் என் காதுகளை ரசிக்க தோனுச்சா? என்கிட்ட கல்யாணம் பத்தி பேச தோனுச்சா?’ என்று அவள் யோசனையில் இருக்க,
“என் பெயர் இலக்கியன். எனக்கு அம்மா அப்பா கிடையாது” என்றவன் அவளது திடுக்கிட்ட முகம் கண்டு, “ம்ம்.. அத்தையும் மாமாவும் தான் என்னை வளர்த்தது. என்னோட உலகம் சாரா. அந்த உலகத்துக்குள்ள நீயும் வரனும்னு ஆசை படுறேன்” என்று முடித்தான்.
ஒரு பெருமூச்சு விட்டவள், “நான் வீட்ல பேசிட்டு சொல்றேன்” என்று கூற,
“ஓகே” என்றான்.
அவள் அமைதியாய் அமர்ந்திருக்க, “கூலிங் போயிடப்போகுது” என்று கூறி அவளது கவனத்தை அந்தப் பானத்தின் புறம் திருப்பினான்.
அவளும் சிறு தலையசைப்போடு அதைக் குடித்து முடித்துவிட்டு, “நா..நான் முடியாதுனு சொன்னா..” என்று இழுக்க,
இதழ் மடித்த குறும்பு சிரிப்போடு “ஆசிட்லாம் அடிச்சுட மாட்டேன்” என்றான்.
அவன் கூறியதில் தன்னை மறந்து லேசாய் சிரித்தவள், “நீங்க அப்படியெல்லாம் பண்ண மாட்டீங்கனு தெரியும்” என்று கூற,
“ஹ்ம்.. கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். மறக்கவே முடியாது நீ தான் வேணும்னுலாம் கேட்க மாட்டேன். லவ் பெயிலியர்னு சொல்ல எனக்கும் ஒரு பாஸ்ட் கதை உருவாகும்” என்று தன் தோள்களை உலுக்கினான்.
அவனை ஆச்சரியமாய் பார்த்தவள் சில நிமிடங்களில் கிளம்பிச் செல்ல, சிணுங்கிய தன் அலைபேசியை எடுத்தவன், “பார்த்துட்டியா சுதிர்?” என்று கேட்டான்.
“ம்ம் பார்த்துட்டேன் மச்சி. இருக்கு” என்று சுதிர் கூற,
“நினைச்சேன். கால் ஹிஸ்டரி பாரு. இனி வரும் கால்ஸ் கொஞ்சம் மானிடர் பண்ணி ரெகார்ட் பண்ணு” என்று தீவிரமான குரலில் கூறினான்.
“ஓகேடா” என்ற சுதிர் அழைப்பை வைக்க, தினேஷுக்கு அழைத்தவன்,
“தினேஷ். இன்னும் ஒரு ரெண்டு நாள்ல வேற ஒரு டி.என்.ஏ தரேன். அதுகூட அந்த டி.என்.ஏ மேட்ச் ஆகுதானு பார்த்து சொல்லு” என்றான்.
மேலும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தவன் எழுந்து வெளியே வந்து நின்றான்.
அன்று முழுதும் வேலையே இல்லாமல் பல இடங்களுக்கு அலைந்து கொண்டிருந்தவன், இரண்டாம் முறையாக மகிந்தனை சந்தித்து ஒரு புன்னகையுடன் கடந்து சென்றான்.
இரவு உணவு வேளையில் தட்டில் கோலம் போட்டபடி சிந்தனையில் மூழ்கியிருந்த நிலாவைப் பார்த்த ஆதி, “ஏ இன்னொரு இட்லி வைக்கவா? எதுக்கு தட்டுல கோலம் போட்டுகிட்டு இருக்க?” என்று கேட்க,
அவளது குரலில் சட்டென நிமிர்ந்தவள் மதி உண்டு கொண்டிருப்பதை பார்த்துவிட்டு “ம்ம்” என்ற தலையாட்டலுடன் குனிந்து கொள்ள, ஆதி அவளை ஏற இறங்கப் பார்த்தபடி ஒரு இட்லியை வைத்தாள்.
வெகு நேரமாக அவளை கவனித்துக் கொண்டிருந்த கார்த்திக் ‘அவளாக சொல்கின்றாளா என்று பார்ப்போம்’ என்று அமைதி காத்தான். மதியை அவள் திரும்பிப் பார்த்துக் கொண்டதால், மதியழகி செல்லக் காத்திருப்பது புரிந்து கொண்டவன் மகள் உண்டு முடித்ததும்,
“பாப்பா நீங்க இன்னும் ஹோம் வர்க் முடிக்கலைல? போய் அதை செய்யுங்க அப்பா வந்து செக் பண்ணுவேன்” என்று மகளை அனுப்பினான்.
அதில் சட்டென அவள் கார்த்திக்கை நோக்க, மகள் சென்றவுடன் நிலாவை நோக்கியவன் “சொல்லுடா” என்றான்.
லேசான புன்னகையுடன் “நான் லவ் பண்ணா நீங்க என்ன பண்ணுவீங்க?” என்று நிலா வினவ,
ஆதியும் லட்சுமியும் வாய்விட்டு சிரித்தபடியே “காமெடி பண்ணாத நிலா” என்றனர்.
ஆனால் கார்த்திக் மட்டும் அமைதியான குரலில் “யாருடா?” என்று வினவ,
“இலக்கியன் சார் என்கிட்ட மேரேஜ் ப்ரபோசல் வைச்சிருக்காரு” என்று சிரித்தவர்களையும், கலவரமாக இருந்த தன் அன்னையையும் அமைதிப்படுத்தினாள்.
“என்னடா சொன்னாங்க?” என்று கார்த்திக் கேட்க, நடந்தவற்றைக் கூறி முடித்தாள்.
“நீ என்ன யோசிக்குற?” என்று கார்த்திக் வினவ,
“தெரியலை மாமா. நீங்க என்ன நினைக்குறீங்க?” என்று கேட்டாள்.
“வாழ போறது நீதானடி?” என்று ஆதிசந்திரா வினவ,
“மாமா சொல்லட்டும் க்கா” என்றாள்.
அதில் முகவாயைத் தன் தோளில் இடித்துக் கொண்ட ஆதி திரும்பிக் கொள்ள, மனைவியைக் கண்டு கண்சிமிட்டி சிரித்துக் கொண்டவன் நிலாவை நோக்கி, “காதலிக்கலாமானு கேட்குறியா? காதலிச்சா அக்செப்ட் பண்ணுவியானு கேட்குறியா?” என்றான்.
அதில் திகைத்து விழித்தாள், தனக்குள்ளாகவே யோசிக்க, “நாளைக்கு பேசலாம்டா” என்றபடி எழுந்து கொண்டான்.
அவள் யோசிக்க அவளுக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க விரும்பியே அவன் அவ்வாறு எழுந்து செல்ல, சென்றவனையே அனைவரும் பார்த்தனர்.
இரவு வேலைகள் முடித்து தங்கள் அறைக்கு வந்த ஆதி, உறங்கிய குழந்தையுடன் படுத்திருந்த கணவனைப் பார்த்து, “ஏன் நீங்க ஏதும் பேசாம வந்துட்டீங்க?” என்று வினவ,
“நிலா அவர லவ் பண்றாடா” என்றான்.
அதில் விழிகள் அகல விரித்தவள், “எப்படி சொல்றீங்க?” என்று வினவ,
“காதலிக்கலைனா நேரா எனக்கு அவர் ப்ரபோஸ் பண்ணாருனு தான் சொல்லிருப்பா. நான் லவ் பண்ணா என்ன பண்ணுவீங்கனு கேட்டிருக்க மாட்டா” என்றான், அமைதியான புன்னகையுடன்.
Comments
Post a Comment