18.சாராவின் ஜீபூம்பா

 அத்தியாயம்-18



“ஏ சாரா பேபி” என்று ஜீபூம்பா அழைக்க, இல்லத்தில் தனது ஆஸ்தான இடமான மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் ஜீபூம்பாவின் அழைப்புக்கு ‘உம்’ கொட்டினாள்.


“உனக்கு இந்த இல்லம் எவ்வளவு பிடிக்கும்?” என்று ஜீபூம்பா வினவ, 


“இது என்ன கேள்வி ஜீபூம்பா? இது தானே என்னோட வீடு. அப்ப எனக்கிது பிடிக்காம போகுமா?” என்று கேட்டாள். 


“இது பிடிக்குமா? லக்கி வீடு பிடிக்குமா?” என்று ஜீபூம்பா வினவ, மீண்டும் அதை முறைத்த சாரா, 


“என்ன ஜீபூ நீ லூசு மாதிரி கேக்குற? லக்கி வீடு தான் பிடிக்கும்” என்றாள்.


“ஏன்? பிறந்ததுல இருந்து நீ இங்க தானே இருக்க?” என்று ஜீபூம்பா வினவ, 


“ஆமா அதுக்காக இது தான் பிடிச்சு இருக்கனுமா? ல..லக்கி வீடு எனக்கும் வீடு. ஆனா.. இங்க..இங்க..” என்ற குழந்தைக்கு விளக்கம் கொடுக்கத் தெரியவில்லை.


தனக்கு ஒரு வாழ்வாதாரம் சொந்தம் என அனைத்தும் கொடுத்தது இந்த இல்லம் தான். அந்த வகையில் இந்த இல்லம் அவளுக்கு மிகவும் பிடித்தமானது என்பது திண்ணம். ஆனால் மனதுக்கு மிகவும் நெறுக்கமானதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. அதற்கு காரணம் கூறிட அந்த வயதில் அவளுக்கு வரவில்லை என்பதே உண்மை!


அவள் அங்கு வளர்ந்தாள் என்றாலும் அவளுக்கே அவளுக்கென்று பாசம், பரிவு அன்பு, அக்கறை, கண்டிப்பு என எல்லாம் காட்டி அரவணைக்க இங்கே ஆட்கள் ஏது? அவள் யாருமற்ற அநாதை என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டுதானே இருந்தது அந்த இல்லத்தின் சுவர்கள். 


அவளுக்கு மட்டுமல்ல, அங்குள்ள அனைத்து குழந்தைகளுக்குமே அதுதானே?


இன்னார் தாய், இன்னார் தந்தை என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு யாருண்டு? அனைவருமாய் கூடி இருந்தனர் தான். ஆனால் தாய்க்கு தாயாய் தந்தைக்கு தந்தையாய் அவர்களுக்கு பார்த்து பார்த்து செய்ய யார் உண்டு? 


பிரபா அனைத்தையும் செய்தாலும் அத்தனை பெண்களுக்கும் தான் பொருப்பு என்ற ரீதியில் அவர் அன்புடனும் பாசமுடன் இருந்தாலும் அதுவும் ஒரு அளவில் தானே? அவருக்கென்று இருக்கும் பொறுப்பு அவர்கள். அதில் பாசம் வைத்திருப்பது உண்மையென்றாலும் ஒரு தாயாக தந்தையாக அத்தனை பிள்ளைகளையும் அவரால் அரவணைத்தாலும், மற்ற பிள்ளைகளைப் போல் அங்குள்ள பிள்ளைகளுக்கென்ற உறவுகள் கிடையாதே!


அந்த ஏக்கம் ஆசிரமத்தில் வளரும் ஒவ்வொரு குழந்தைகளின் மனதிலும் வேரூன்றி இருக்கத்தானே செய்யும்? அந்த ஏக்கத்தினை வார்த்தைகளில் வடிக்க சாராவுக்கு தெரியாததால் அதைப் பற்றிய சிந்தனையோடு அவள் அமைதிகாத்தாள்.


இலக்கியன் வருவதை உணர்ந்த ஜீபூம்பா ஒரு சிரிப்போடு தன் வேலையைத் துவங்கியது. 


“சரி உன் லக்கி இங்கிருந்து போயிட்டா என்ன பண்ணுவ?” என்று ஜீபூம்பா வினவ, 


சட்டென நிமிர்ந்த சாரா, “லக்கி எங்க போகனும்? அப்படிலாம் லக்கி போக மாட்டாங்க” என்றாள்.


“போயிட்டா? மதிக்கு அம்மா அப்பா இருக்காங்க தானே? அதுபோல லக்கிய யாரும் கல்யாணம் பண்ணி அவங்களுக்குனு பேபிலாம் வந்துட்டா நீ எப்படிப் போக முடியும்?” என்று ஜீபூம்பா வினவ, 


“லக்கி ஆரூவ தானே கல்யாணம் பண்ணிப்பாங்க? அப்ப என்னைக் கூட்டிட்டுப் போயிடுவாங்க தானே?” என்று கண்கள் கலங்க கேட்டாள்.


“சப்போஸ் ஆரூவ பண்ணிக்கலைனா? ரெண்டு பேரும் வேற வேற லைஃப் பார்த்து போயிட்டா நீ என்ன பண்ணுவ?” என்று ஜீபூம்பா வினவுகையில் இலக்கியன் “பேபிடால்” என்றபடி அவ்விடம் வந்தான்.


வேகமாக அவனிடம் ஓடி அவனைக் கட்டிக் கொண்டவள், “லக்கீ..” என்று அழ, 


“பேபிடால் என்னாச்சுடா? பாப்பா என்னமா?” என்று பதைபதைப்போடு கேட்டான். 


அப்போது நிலாவும் அவ்விடம் வர, சாரா அழுவதைக் கண்டு பதறியபடி வந்தவள், “பாப்பா.. அம்முபட்டு.. என்னாச்சுடா? என்னாச்சுங்க? ஏன் அழறா?” என்று வினவினாள்.


மகளைத் தன் மார்போடு அணைத்துப் பிடித்தவன் நிலாவைப் பார்த்து “தெரியலை ஆரா” என்க, குழந்தையின் அழுகை அவன் கண்களையும் கலங்க வைத்திருந்தது. 


சாராவின் முகம் நிமிர்த்தி கண்களைத் துடைத்து “என்னடா பேபி?” என்று இலக்கியன் வினவ, 


“என்னை விட்டுட்டு போயிடுவியா லக்கி?” என்றாள்.


“எங்கடாமா?” என்று அவன் வினவ, 


“என்னை இங்கயே விட்டுட்டு போயிடுவியா லக்கி? நி..நீ மேரேஜ் பண்ணினா என்னை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகமாட்டியா? என்கூட பேசமாட்டியா? என்னைப் பார்க்க வரமாட்டியா?” என்று கேட்டு வீறிட்டு அழுதாள்.


அவளது கேள்வியில் அவன் அசைவற்று விறைத்தபடி பார்க்க, 


“யாருடா பாப்பா அப்படிலாம் சொன்னது?” என்று நிலா தவிப்பாய் கேட்டாள். 


“அவன் தான் சொல்றான். லக்கி மேரேஜ் பண்ணிட்டா என்னைப் பார்க்க வரமாட்டாங்க, பேசமாட்டாங்கனு சொல்றான்” என்றவள் ஆராவைப் பார்த்து, “நீயும் பேசமாட்டியா ஆரு? என்னைப் பார்க்க வரமாட்டியா? என்கூட டூ விட்டுடுவியா?” என்று அழுதாள்.


சாராவை தன் மடிசாய்த்து அணைத்துக் கொண்ட நிலா, “ஏன்டா பாப்பா இப்படி கேட்குற? ஆரு உன்கூட பேசாம எப்படி இருப்பேன்?” என்று கலங்கிய குரலில் வினவ, 


“என்கூட பேசாம இருக்காத ஆரூ. நீயும் லக்கியும் டூ விட்டுட்டா நான் யாருகிட்ட பேசுவேன்” என்று அழுதாள். 


அவள் குரலில் மேலும் சாராவை இறுக அணைத்த நிலா, “இல்லடா பாப்பா.. ஆரு உன்கூட பேசாம இருப்பேனா? அம்முகூட பேசாம இருக்க முடியுமா? என் பேபிடா நீ. என் பாப்பா” என்று அழ, 


“லக்கி?” என்றபடி ஆராவை நிமிர்ந்து பார்த்தாள்.


நிலா இலக்கியனைக் கலங்கிய கண்களோடு ஏறிட, அவனோ கண்களில் பெருக்கெடுத்த நீரில் நாசி சிவக்க அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். நிலா தன்னை ஏறிட்டதும் வரவழைத்த புன்னகையுடன் “லக்கி நீ இல்லாம இருப்பேனாடா பாப்பா? நீ என் பேபிடா. என் இளவரசி, எங்கம்மாடா” என்றான்‌. 


அவனது உடைந்துருகும் குரலில் நிலா உடல் குலுங்க கலங்க, இருவரையுமாய் சேர்த்து அணைத்தவன், “என் உலகம்டா நீங்க” என்க, நிலாவின் உடல் சிலிர்த்தது. 


சாரா நிலாவின் மார்பில் முகம் புதைத்து ஒரு கையில் அவளது துப்பட்டாவையும் மறுகையில் இலக்கியனின் சட்டையையும் இறுக பற்றியிருக்க, தனது ஒரு கையை சாராவின் தலையிலும் மறு கரத்தை நிலாவின் இடையிலும் கொடுத்து அணைத்தபடி அமர்ந்திருந்தான்.


சற்றே ஆசுவாசம் அடைந்த பின்பே அவனது கரம் தன் இடையில் தவழ்வது உணர்ந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்க, கலங்கிய விழிகளோடு அவளைப் பார்த்தான். அந்த பார்வையில் அவள் எதை கண்டாளோ? தானும் விழி கலங்கியவள் சாராவின் நெற்றியில் முத்தமிட்டாள். இருவரையும் தன்னோடு சேர்த்து அணைத்தவன் ஆராவின் நெற்றியில் முத்தமிட, அவனது கண்ணீர் அவள் கன்னத்திலும், அவளது கண்ணீர் குழந்தையின் கன்னத்திலும் வடிந்தது‌.


கவிதையாய் இருந்த அக்காட்சியைப் பார்த்து திருப்தியாக புன்னகைத்த ஜீபூம்பா, “ஹப்பா.. முக்கால்வாசி வேலை முடிஞ்சது. இனி டும்டும்டும் தான்” என்று கூறிக் கொள்ள, 


வானத்தில் ஒரு இடி திடுமென இடித்து அவர்களது மோன நிலையைக் களைத்தது.


அந்த சத்தத்தில் கண் திறந்தவள் அவளவன் முத்தம் தாங்கியிருப்பது உணர்ந்து சட்டென விலக எத்தனிக்க, அவள் மார்பில் துயின்று கொண்டிருந்த சாராவின் பாரம் அவளைத் தடுமாற வைத்தது. 


அவளை இறுகப் பற்றி நிறுத்தியவன் எழுந்து அவளுக்கு எழ உதவ, சாராவைத் தூக்கியபடி எழுந்து நின்றவள் தன் கன்னத்தில் எஞ்சியிருந்த நீர் மணிகளைத் துடைத்துக் கொண்டாள்.


தனது புறங்கையால் தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்ட இலக்கியன் சாராவைத் தரும்படி கை நீட்ட, அவளைக் கொடுக்க எத்தனித்தவளது உடையை குழந்தை இறுக பற்றியிருந்த கை தடுத்தது. சாரதாவின் முகத்தைக் குனிந்து பார்த்தவள் அழுது களைத்த பால்முகம் கண்டு மெல்லப் புன்னகைத்தபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.


அதில் தானும் புன்னகைத்தவன் அவளுடையிலிருந்து சாராவின் கரத்தை எடுக்க வந்து நிலாவின் விரிந்த விழிகளில் தடைப்பட்டு நின்றான். தன் தலையை இடவலமாய் ஆட்டி சிரித்தவன் குழந்தையைப் பிடித்துக் கொள்ள, தன் உடையின் கழுத்துப் பகுதியை பற்றி இருந்த அவள் கரத்தை மெல்ல எடுத்துவிட்டு உடையை சீர் செய்து கொண்டாள்.


இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அந்த மௌன நிலையும் கலங்கிய விழிகளின் சம்பாஷணையும் ஆயிரம் வார்த்தைகள் பேசிக் கொண்டன. சாராவைத் தன் தோளில் போட்டுக் கொண்டு தட்டிக் கொடுத்தவன் தன் கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்துக் கொண்டு அவளை நோக்கி தலையசைக்க, தானும் மெல்லத் தலையசைத்தாள்.


அவன் முன்னே நடக்க, “ஒரு நிமிஷம்..” என்று அவனை நிறுத்தினாள். அதில் திரும்பி அவளை நோக்கியவன் ஒற்றைப் புருவம் உயர்த்தி என்ன என்பதுபோல் கேட்க, 


“பேபி வேணும்” என்றாள். 


விழிகள் விரிய குறும்பான புன்னகையுடன் அவன் நோக்க, 


அதில் திடுக்கிட்டு விழித்தவள், “இ..இல்ல இல்ல.. சாரா பேபி வேணும்” என்றாள்.


மீண்டும் தலையை ஆட்டி சிரித்தவன், “தூங்கிட்டாடா. வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகனும்” என்று கூற, 


“எப்பவும் நீங்க தானே கூட்டிட்டுப் போறீங்க? இன்னிக்கு நான் கூட்டிட்டு போறேனே” என்றாள். 


செல்லமான கோபத்தோடு முறைத்தவன் “எனக்கே வாரம் ஒருநாள் தான் பிரபா மேம் பர்மிஷன் தந்திருக்காங்க. அதையும் வாங்க பார்க்குறியே?” என்க, 


“வாரம் ஒருமுறையாவது கூட்டிட்டுப் போறீங்க தானே? எம்பொண்ணை கூட்டிட்டுப் போய் வச்சுக்க எனக்கும் ஆசை இருக்காதா?” என்றாள்.


'எம்பொண்ணு' என்ற அவளது வார்த்தையில் இன்பமாய் குளிர்ந்தவன் புன்னகையுடன் குழந்தையை அவளிடமே தர, குதூகலமாய் வாங்கிக் கொண்டவள் அவனோடு கீழே வந்தாள். 


அவர்களை மூவராய் சேர்த்து பார்த்தவுடன் பிரபாவின் கண்கள் சந்தோஷமாய் விரிய, தம்பதியர், குழந்தை என குடும்பமாய் அவர்கள் வருவது போன்றொரு காட்சியாய் தோன்றி புன்னகையுடன் பார்த்தார்.


அவரிடம் வந்து தான் கூட்டிச் செல்வதாகக் கூறியவன் குழந்தையை நிலாவுடன் ஆட்டோவில் அனுப்பி வைக்க, அவனது அலைபேசி குறுஞ்செய்தி வந்ததாய் சிணுங்கியது. 


அதை எடுத்துப் பார்த்தவன், ‘பேபி வேணும் தான்.. ஆனா இப்ப சாரா பேபி போதும்' என்ற அவளது குறுஞ்செய்தி கண்டு கண்கள் பிரகாசிக்க புன்னகையாய் நிமிரவும் ஆட்டோவிலிருந்து தலையை வெளியே நீட்டி அவள் பார்க்கவும் சரியாய் இருந்தது.


இருவர் முகத்திலும் அழகிய புன்னகை குடிகொள்ள, அவனது அலைபேசி அவசரமாய் அலறியது, அடுத்த கடமையைத் தாங்கியபடி.


Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02