19.சாராவின் ஜீபூம்பா
அத்தியாயம்-19
கண்களில் அத்தனை கோபத்தோடு தன் முன் கைகள் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருக்கும் சர்வேஷைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் இலக்கியன். அவனுடன் செந்தில், தினேஷ் மற்றும் சுதிர் நின்றுகொண்டிருக்க, அவர்களின் அறையின் கண்ணாடிச் சுவருக்கு அந்தப் பக்கம் கமிஷ்னர் மற்றும் அந்த வழக்கினைப் பார்த்துக் கொண்டிருந்த ராம் இருந்தனர்.
ராமின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்காதது தான் குறை. தன்னுடைய வழக்கை அவன் கைப்பற்றி தற்போது நற்பெயர் எடுத்துக் கொண்டிருக்கின்றானே என்ற கோபமும், முதலிலேயே அவன் பேச்சினைக் கேட்டு ஆதாரங்களை வாங்கி, தானே கண்டுபிடித்தது போல் காட்டியிருக்கலாமே என்று தன்னுடைய முட்டாள்தனமான கோபத்தின் மீதும் கோபம் கொண்டிருந்தான்.
“சொல்லு” என்று ஒரு வார்த்தை தான் இலக்கியன் உதிர்த்தான். ஆனால் அதில் கட்டுக்குள் கொண்டுவரத் துடித்த கோபத்தையும் வெறியையும் சர்வேஷால் உணர முடிந்தது.
லேசாய் இலக்கியனை நிமிர்ந்து பார்த்தவன், “பசி..” என்க,
இலக்கியனின் புருவங்கள் குழப்பமாய் முடிச்சிட்டு நின்றன.
அதைக் கண்டு சத்தமாய் சிரித்த சர்வேஷ் “என்ன எஸ்.ஐ சார்? புரியலை போலயே?” என்க,
கண்ணாடியறைக்கு அருகே கமிஷ்னர் பார்வையிட்டுக் கொண்டிருந்த அறைக்குள் மகிந்தன் நுழைந்தான்.
சர்வேஷ் கட்டப்பட்டு பக்கத்து அறையில் இருப்பதைக் கண்ட மகிந்தன் குழப்பத்தோடு “என்னாச்சு சார்? எதுக்கு சர்வேஷ கட்டி வைத்திருக்கீங்க?” என்று வினவ,
கமிஷ்னர் மெல்ல தலையசைத்து நடப்பதை கவனிக்கும்படி கூறினார்.
இன்னும் புரியாத பார்வையோடு சர்வேஷைப் பார்த்த இலக்கியன், “என்ன சொல்ல வர்ற? எதுக்கு அந்த சின்னப் பொண்ணைக் கடத்தின?” என்று வினவ,
“அதான் சொல்றேனே? பசி! பட்டினினா என்னனு தெரியுமா? பசியில் சாகும் கொடுமை தெரியுமா?” என்று கேட்டான்.
'என்ன உலறுகிறான் இவன்?’ என்று யோசித்த இலக்கியனின் பார்வை கூர்மை பெற,
“இன்னும் எஸ்.ஐ சாருக்கு புரியலை போல. சரி இருக்கட்டும் நானே சொல்றேன்” என்றவன் கைகளை மேஜையில் ஊன்றி நிமிர்ந்து அமர்ந்து, “கெனாபிலஸ் தெரியுமா?” என்று வினவினான்.
இலக்கியனின் விழிகள் ஆச்சரியமாய் விரிய,
“ஹா.. ஹா.. இதுதான்.. இதுதான் எனக்கு வேணும்” என்றான்.
“டேய்..” என்று இலக்கியன் கத்த,
“காதல் புதுசா பூத்திருக்குல உனக்கு?” என்று வினவினான்.
'இப்ப இது எதுக்கு?’ என்பதாய் இலக்கியன் நோக்க, “எனக்கு ரெஸ்பான்ஸ் பண்ணாதான் பேசுவேன். இங்கிருந்து தப்பிச்சு போக எனக்கு பத்து நிமிஷம் ஆகாது. புரியுதா?” என்று சர்வேஷ் குரூரமாய் கத்தவும்,
‘உப்’ என இதழ் குவித்து ஊதியவன், “ஆமா” என்று பல்லைக் கடித்தான்.
“அவ உன் கண் முன்னாடியே பசில துடிதுடிச்சு செத்துப்போனா உனக்கு எப்படி இருக்கும்?” என்று சர்வேஷ் வினவ,
“டேய்..” என்று இலக்கியன் ஆத்திரமடைந்தான்.
“கேட்கவே எவ்வளவு ஆத்திரமா இருக்கு. அப்ப பார்த்த எனக்கு எப்புடி இருக்கும் காட் டேமிட்..” என்று மேஜையில் சட்டென தட்டிய சர்வேஷ் அடக்கமாட்டாத கோபத்தோடு அரற்றினான்.
அவன் கண்களில் வலியும் வேதனையும் வெறியும் இருப்பது நன்கு தெரிந்தது.
“என் காதலி.. என்னோட முதலும் கடைசியுமான காதலி.. என் லலிதா.. அப்படித் தான்டா செத்தா. அவளுக்காகத் தான் இப்படிப் பண்றேன். சிம்பில்.. என் காதலி பசில செத்துப்போன போல யாரும் சாகக்கூடாதுனு தான் இந்த கடத்தல்” என்று சர்வேஷ் தோள்களைக் குலுக்க, இலக்கியனுக்கு ஓரளவு விடயம் புரிந்தது.
அவனது முகபாவம் வைத்தே கண்டுகொண்ட சர்வேஷ், “ஏ எஸ்.ஐ.. சரியா புரிஞ்சுகிட்ட போல? ஆமா! என் காதலி ஒரு கெனாபிலஸ். மாமிச உண்ணிகள் போல மனித உண்ணி. ஆனா பாரு.. அவளைப்பத்தி தெரிஞ்சு பயந்துபோன நான் அவளோட டேட்டிங் போயிருந்தப்போ ஒரு ரூமில் போட்டு அடைச்சு வச்சுட்டேன். வெறிபிடிச்சவ போல கத்தினா. சாப்பாடு கொடுத்தா என் மூஞ்சில தூக்கி வீசினா. என் கால பிடிச்சு கெஞ்சினா. என்மேல் அவ கொண்ட காதல் என்னை அவளுக்கு இறையாக்காம தடுத்துச்சு. ஆனா என்கிட்ட கெஞ்சினா. இளம் குழந்தைகளின் மூளை அத்தனை ருசியா இருக்கும்னு எனக்கு ஆசை காட்டுவதா நினைச்சு அருவருக்க செய்தா. பசில செத்துடுவேன்போல இருக்குனு அவள் எவ்வளவோ கேட்டும் நான் அவளை வெளிய விட பயந்தேன். என்கிட்ட கதறி கதறி பசி தாங்க முடியாம என் கண் முன்னயே செவுத்துல முட்டி செத்துப்போனா. அந்த நொடி.. அந்த நொடிதான் எனக்குள்ள இருந்த மிருகம் முழிச்சது. அவ பசில துடிச்ச துடிப்பு..” என்றவன், “ஆ..” என்று கத்தியபடி மேஜையில் டமார் டமாரென தட்டினான்.
அனைவரும் அவனை பீதியோடு பார்க்க, இலக்கியன் இருந்த இடம் விட்டு அசையாது அவனைக் கூர்ந்து நோக்கினான்.
“அவ பசில செத்த போல வேற யாருமே சாகக் கூடாதுனு வெறி வந்தது. அந்த வெறியோடு இருந்த சமயம் அங்கு டூரிஸ்டுக்கு வந்த ஏதோ ஒரு குழந்தை என் தோட்டத்துக்குள்ள வழிமாறி வந்தது. இளம் குழந்தைகளோட மூளை ருசியா இருக்கும்னு லல்லி சொன்ன வார்த்தைகள் அப்ப எனக்கு இன்னும் வெறிய கொடுத்தது. அந்த குழந்தைய என் கையாலயே வெட்டி துண்டு துண்டா போட்டு..” என்று அவன் ரசித்துக் கூற, இலக்கியன் கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் உருண்டு ஓடியது.
இருக்கையை இறுகப் பற்றிக் கொண்டு தன் சினத்தை அடக்கியபடி அமர்ந்திருப்பவனைப் பார்த்து கண்சிமிட்டி சிரித்த சர்வேஷ், “நான் சாப்பிடதான் நினைச்சேன். ஆனா அவ்வளவு மனசு இறங்கலை. அதான் டார்க் வெப்ல வித்துட்டேன்” என்றான்.
அனைவரும் கால்கள் நடுநடுங்க அவனைப் பார்க்க, மகிந்தன் நொந்து போன பார்வையோடு விழிகள் கலங்கி சிலையாய் நின்றான்.
“பாலுக்கு பூனை காவலா இருந்தா தான் பூனை மாட்டாது. அதான் என் அடையாளத்தையே மாத்திக்கிட்டு இங்க வந்தேன். கல்யாணம் செய்தேன், அந்த புன்னியவான் மகிந்தன் கிட்ட வேலைக்குப் போனேன். நல்ல பணிகள் செய்தேன் கூடவே என் செத்துபோன காதலிக்காக சில மூளை பொறியலுக்கான வேலையையும் செய்தேன்” என்று கண்கள் மூடி அத்தருணங்களை எண்ணி ரசித்தவன், “ஆஹா.. தட்ஸ் டிவைன்” என்றான்.
இன்னுமின்னும் இருக்கையோடு அழுந்தப் புதைந்த இலக்கியன் பற்களை நறநறவெனக் கடித்து தன்னை அமைதிப்படுத்த முயற்சிக்க,
“ஆனா அந்த பொண்ணு தான் என்கிட்ட தப்பிச்சுட்டா” என்று சர்வேஷ் கூறினான்.
“அந்தப் பொண்ணு நல்லா கொழுகொழுனு இருந்தது. ஒரு பள்ளிக்கு விழிப்புணர்வு முகாம் நடத்த போனப்ப தான் பார்த்தேன். அன்னிக்கே அந்த பொண்ணுகூட நல்லா பேசி நைட்டே தூக்கிட்டேன். அவ வீட்டுக்கே போய் சுவரேறி குதிச்சு.. எனக்கு அதுவொன்னும் சிரமமான விஷயமில்லையே! ஐ அங்கில்னு ஆசையா கூப்பிட்டா. அந்த குரல் எனக்குள்ள இன்னும் வெறிய தான் ஏத்திச்சு. கத்தியை எடுத்து என் இஷ்டம் போல கீறினேன். கத்தினா.. அழுதா.. எனக்கு என் லல்லியோட கதறல் தான் நினைவு வந்தது. ப்ச்.. என்ன செய்ய அதுல கொஞ்சம் கவனம் சிதறி அப்படியே கண்மூடி உட்கார்ந்துட்டேன்”
“அந்த ஏழு வயசு பிள்ளை அன்னிக்கு நான் பாதுகாப்புக்கு சொல்லிக் கொடுத்ததை வைச்சே தப்பிச்சுடுச்சு. என்ன நடந்தாலும் அங்கிருந்து தப்பிச்சு போக வழி பார்க்கனும், பயப்படக்கூடாதுனு சொல்லிருந்தேன். ஆனா நிச்சயம் அந்த குழந்தைகிட்ட அப்படியொரு தைரியத்தை நான் எதிர்ப்பார்க்கலை.
அவளை தேடி சுத்தி முத்தி ஓடினேன். அந்த வயல்வெளியிலயும் தேடினேன். என் கண்ணுல பட்டா... கைல இருந்த சுத்தியலை தூக்கி அவ தலையை குறிபார்த்து வீசினேன். ஷாட்..! அவ தலையில போய் அடிச்சுது. நிச்சயம் அப்பவே மூச்சு நின்றுருக்கும். பக்கத்துல போய் சுத்தியலை எடுத்துட்டு அவளைப் பார்த்தேன். அப்பதான் யாரோ வர்ற சத்தம் கேட்டது. பார்த்தா உன் அருமை காதலியோட மாமன். அந்த நேரத்துக்கு என்னத்துக்கு வந்தானோ? அவசரமா ஓடும்போது என் பிரேஸ்லெட்ட மிஸ் பண்ணிட்டேன். கடைசியா அந்த நாதாரி வயலோடு சேர்த்து வானத்துல உள்ள நிலாவை படமெடுக்க சொல்லி கேட்டு அவன் பொண்ணு ஆசைப்பட்டதுக்காக கூட ஒரு ஃபோட்டோ கிராஃபரான அவனோட ஃபிரண்டோட வந்திருக்கு. சில்லி ஃபெல்லோ” என்று சிரித்தான்.
அனைத்தையும் அமைதியாகவே கேட்ட இலக்கியனுக்கு தன் மகளின் ஆசைக்காக இத்தனை சிரத்தையோடு நடந்த தந்தையின் பாசத்தை அவன் கேலி பேசுவது இன்னும் சினமேற்றியது. அவனும் சாராவுக்காக தலையால் தண்ணீர் குடிக்கக் கூட துணிந்தவன் தானே?
இலக்கியனின் சிவந்த கண்களின் கூர்மையான பார்வையில், “எனக்கு வருத்தமாவே இல்லைனு சொல்லமாட்டேன். சில சமயம் கத்தியைப் பார்த்தாளே கைகள் நடுங்கும். எனக்கும் ஒரு மகள் இருக்காளே? எங்கே அவளோட மூளை யாருக்கோ பொறியலா தட்டில் கிடக்கும் நிலைய நானே உருவாக்கிடுவேனோனு பயந்தேன். இதையெல்லாம் விட்டுடலாம்னு நான் நினைச்சா கூட தூக்கத்தில் என் காதலி லல்லி கதறுற சத்தம் என்னைத் துரத்தும். பசிக்குது சர்வா! பசிக்குது சர்வானு அவ கத்தின சத்தம் இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு. அவள போல யாரும் சாகக் கூடாது. அதான் சில சமயம் காசே வாங்காம கூட வித்துடுவேன்” என்று பெருமையாகக் கூறினான்.
கண்களை அழுந்த மூடி ஒரு பெருமூச்சு விட்டவன், அங்குள்ள மைக்கை அணைத்து தனது இரு விரல்களை மட்டும் உயர்த்தி வெட்டுவதுபோல் சமிக்ஞை செய்ய, அவன் கூற வருவது புரிந்துகொண்டு செந்தில் காமிராக்களை அணைத்தார்.
சட்டென இருக்கையை விட்டு எழுந்து சர்வேஷிடம் வந்தவன் தன் ஆத்திரம் தீரும்வரை அவனது வாயில் குத்தி குபீரென ரத்தம் பெருக்கெடுக்கச் செய்தான்.
“ரொம்ப பேசிட்டட. ரொம்ப பேசிட்ட. இனி நீ பேசவே கூடாது” என்று அடித்தவன் சிரிக்கும் அவன் கண்கள் கண்டு அவனை விட்டு விலகி நின்றான்.
'இது முத்தின கேஸ்' என்று நினைத்துக் கொண்டவன் கமிஷ்னர் இருக்கும் அறைக்கு வந்து “செந்தில் சார்” என்று கர்ஜனையாய் அழைத்தான்.
அவர் ஒரு கோப்பைக் கொண்டு வந்து கொடுக்க அதை கமிஷ்னரிடம் நீட்டியவன், “குழந்தையோட பாடி கிடந்த இடத்தில் இருந்த பிரேஸ்லெட் சர்வேஷோடது தான் என்பதற்கான டி.என்.ஏ எவிடென்ஸ் அன்ட் சர்வேஷோட ஃபோன் அன்னிக்கு அந்த ஏரியால இருந்ததுக்கான ட்ரேஸ் ஹிஸ்டரி, சர்வேஷ் தனக்காக அந்த வயல் வெளிக்கு நூறு மீட்டர் தொலைவுல வாங்கி வச்சிருக்கும் வீட்டில் கிடைத்த, கொலை செய்ததுக்கு ஆதாரமான சில காணொளிகள் எல்லாம் இருக்கு சார். எல்லாம் அவரோட ஃபோன் டிரேஸ் ஹிஸ்டரி வைத்து கண்டுபிடிச்சது. டி.என்.ஏ முறைபடி எடுக்க அப்ப என்கிட்ட போதிய ஆதாரம் இல்லாததால அவருக்கே தெரியாம அவரோட ஹேர் ஃபாலிக்கில பிக் பண்ணி எடுக்க வேண்டியதா போயிடுச்சு சார்” என்று கூறி முடித்தான்.
அவனது வேகம் அவரையே ஆச்சரியப்பட வைத்தது. பெருமை பொங்க அவர் ஒரு பார்வை பார்க்க அடுத்த நொடி அவன் பேசியவை அவருக்கு அதிருப்தியாய் இருந்தது.
“இந்த கேஸ்கான மொத்த ஆதாரமும் இப்ப இங்க இருக்கு சார். நீங்களோ இல்லை ராஜ் சாரோ கோர்ட்ல ஒப்படைச்சுடுங்க. நான் இந்த கேஸ்ல இருந்து ரிலீவ் ஆயிக்குறேன்” என்று அவன் கூற,
“ஏன் இலக்கியா? உனக்கு ப்ரமோஷன் கிடைக்க நிறையா வாய்ப்பு இருக்கு” என்று கமிஷ்னர் கூறினார்.
“நான் அதுக்காக இதை எடுக்கலை சார். அன்னிக்கு அந்த குழந்தையோட உருவத்துல என் பொண்ணை நிறுத்தி யோசிச்ச நொடி எ.. எனக்குள்ள உண்டான துடிப்பை வார்த்தையில் சொல்லிட முடியாது. அதுக்குத்தான் அந்த சாவுக்கான நியாயத்தை ஆராயனும்னு நினைச்சேன். எனக்கிருந்த ஒரு சந்தேகத்தை ராஜ் சார்கிட்ட சொல்லி உதவ முயற்சி செய்தேன். அவர் என் பேச்சை கேட்க தயாரா இல்லாததால் நானே தேடி கண்டறிய வேண்டியதா போச்சு. எனக்கான நிம்மதி இதை கண்டுபிடிப்பதில் தான். அதை செய்துட்டேன். எனக்கு ப்ரமோஷனேதும் தேவை கிடையாது சார். ப்ளீஸ் டேக் ஓவர் திஸ்” என்றவன் கண்களில் கண்ணீர் மினுமினுத்தது.
அவனது உணர்வுக்குவியல் அங்குள்ள அனைவருக்கும் புதிது. அதை யாவரும் ஆச்சரியமாக நோக்க,
“அது யாரு சார் உங்க பொண்ணு?” என்று சுதிர் நிலைமையை சீர் செய்யக் குறும்பு செய்தான்.
சுதிரைக் கண்டு லேசாய் புன்னகைத்தவன் “தேங்ஸ் சுதிர். நிலைமையை இலகுவாக்கியதற்கு” என்றுவிட்டு, கமிஷ்னரை நோக்க, “ஓகே இலக்கியா” என்றார்.
அடுத்த ஒருவாரம் வழக்கு, நீதிமன்ற தீர்ப்பு என பரபரப்பாக செல்ல, சர்வேஷுக்கு மனநல சிகிச்சையும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
Comments
Post a Comment