20.சாராவின் ஜீபூம்பா
அத்தியாயம்-20
வழக்கு ஓய்ந்த மறுநாள் “சார் எப்படி சார் சர்வேஷ் தான் கொலையாளினு கண்டுபிடிச்சீங்க?” என்று செந்தில் வினவ,
“என்னை வேவு பார்த்தான் செந்தில். நான் போகுமிடமெல்லாம் மகிந்தனை சர்வேஷோட மீட் பண்ணேன். தற்செயலா இருப்பது போல தான் இருந்தது. ஆனா மூனு தடவைக்கு மேல பார்க்கவும் மகிந்தன் மேல தான் சந்தேகம் வந்தது. அடுத்த முறை மீட் பண்ணும்போது பேச்சு வாக்கில் சர்வேஷ் போட்ட ஷெடியூல்படிதான் அவர் வர்றதா சொல்லவும் சர்வேஷ் மேல சந்தேகம் வந்தது.
சந்தேகத்தை உடனே தீர்க்கத்தான் உங்களுக்கு உடனே கால் பண்ணி ஹெல்மெட் போட்டுகிட்டு வேகமா அவங்கள மோதுற போல வர சொன்னது. நான் ப்ளான் போட்ட மாதிரி சர்வேஷ் கீழ விழ, அவர பிடிக்கும் போது ஹார் ஃபாலிகில எடுத்துட்டேன். தடுக்கிவிட்டு நானே பிடிச்சு சிம்பிலா கூட இதை செய்திருக்கலாம். ஆனா எந்த இடத்திலும் அவன் மேல எனக்கு சந்தேகம் வந்தது தெரிஞ்சுடக்கூடாதுனு ஒரு எண்ணம். என்னோட சந்தேகப் பார்வையக்கூட நான் மகிந்தன் மேல படுற போலதான் வச்சிருந்தேன். அது அவனோட மெத்தனத்தைக் கூட்ட இன்னும் வசதியா போச்சு” என்று பெருமூச்சுவிட்டான்.
“செம்ம சார் நீங்க” என்ற செந்திலின் பாராட்டை ஒரு புன்னகையுடன் ஏற்றவன் கிளம்ப எத்தனிக்க,
“சார் ஒரு சந்தேகம்” என்று செந்தில் நிறுத்தினார். இலக்கியன் அவரைக் கேள்வியாய் நோக்க, “கேனபிலஸ்.. அதான் மனித உண்ணிகள் நிஜமாவே இருக்காங்களா சார்?” என்று செந்தில் கேட்டான்.
“இருக்கு செந்தில். கேனபாலிஸம் ரோமன் அன்ட் ஏன்ஷியன்ட் பீரியட்ல யூரோப்ல ரொம்ப பரவால கடைபிடிக்கப்பட்டிருந்தது. கேனபல்ஸ்னா மனித உண்ணிகள். அந்த கோட்பாடை கேனபாலிஸம்னு சொல்வாங்க. இதை கடைப்பிடிச்ச ஒரு நாடே இருக்கு. அதுக்கு கேனபாலிஸம் ஐலாண்டுனே பெயர் உண்டு. இதுல எக்ஸ்ஸோ, என்டோனு பல வகைகள் வேற இருக்கு.
மெடிகல் கெனபாலிஸம்னே இருக்கு. மனித செல்களயோ, டிஷுவயோ பயன்படுத்தி மருந்துகள் மூலமா மனிதர்களுக்கே கொடுக்குற சில முறைகள். அதுவும் கேனபாலிஸம் தான். இன்னும் சில இடங்களில் மனித கொழுப்பை டயட்டா எடுத்துக்குறாங்க. அதுக்கு கேஸ்டிரோமல் கேனபாலிஸம்னு பெயர். அந்த பொண்ணுக்கு எப்படி இந்த பழக்கம் வந்ததோ அது அவளுக்கே தெரியும். ஆனா ஏதோ போறாத காலம் வந்து அவளால இந்த ஜீவனும் தன் வாழ்க்கையை இழந்து இருக்குது” என்று இலக்கியன் கூறினான்.
“என்ன சார் சப்போர்ட் பண்ற போல பேசுறீங்க. என்ன நடந்திருந்தாலும் அவன் செய்தது தப்பு தானே?” என்று செந்தில் வினவ,
“கண்டிப்பா தப்பு தான் செந்தில். அதை இல்லைனே சொல்ல மாட்டேன். ஆனா ஒரு தவறுக்கான சூழலை உருவாக்குவது அமைதியாக இருக்கும் நல்லவர்கள் தானே? அந்த பொண்ணைப் பத்தி தெரிஞ்சுகிட்ட விஷயத்தை சொல்றேன். கூட்டு குடும்பம். வெளி ஊரு நாடுனு கலப்பு திருமணத்திற்கு தடைவிதிக்காததால எல்லா வகையான கலாச்சாரமும் அறிஞ்ச பாசமிகுந்த குடும்பம். ஆனா பாருங்க அவங்க குடும்பத்துப் பொண்ணு இப்படியான வழி தவறிய செயல்களை செய்வதைக் கூட கவனிக்காமல் இருந்திருக்காங்க.
சர்வேஷும் அந்த பொண்ணும் டேடிங் போனப்ப எவ்வளவு வயசுனு நினைக்குறீங்க? வெறும் பத்தொன்பது வயது. பெண்களை வீட்டுக்குள்ள பூட்டி வைக்கனும் காதலிக்கக் கூடாதுனும் நான் பேசலை. ஆனா அதுக்காக நம்ம வீட்டுப் பிள்ளைங்க என்ன செய்றாங்கனு கூடவா தெரிஞ்சுக்காம இருப்பாங்க? ரெண்டு பேரும் ஒன்னா படிச்சு காதலில் விழுந்தவங்க. அப்ப இருந்த பக்குவத்துக்கு அது தப்புனு மட்டுமே தான் சர்வேஷுக்குப் புரிஞ்சது. யார்கிட்ட சொல்ல என்ன சொல்லனு தெரியலை அவனுக்கு. அவள் தன் கண்முன்னவே செத்துட்டான்ற வெறி. எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வேற ஊர் வந்தவன் தன் வெறிக்கு இந்த கொலைகளை தீனியாக்கிட்டான்” என்றான்.
“ம்ம்.. புரியுது சார்” என்று செந்தில் கூற,
ஒரு பெருமூச்சு விட்டவன், “என்னால இந்த வழக்கை எடுத்து முடிக்க முடியலை செந்தில். அந்த குழந்தைய பார்த்த தருணம் இன்னும் கண்ணுக்குள்ள நிக்கிது. தெரியாத்தனமா என் பிள்ளைய அந்த இடத்தில் ஒப்பிட்டு பார்த்துட்டு இன்னவரை துடிக்கிறேன்” என்றான்.
“யாரு சார் உங்க பொண்ணு?” என்று செந்தில் திடுக்கிட அதில் இலக்கியன் மனம் லேசாய் இளகியது. (அவன் ஆசிரமத்திற்கு உதவுவதைத் தவிர அவனது தனிப்பட்ட வாழ்வு பற்றி யாரும் பெரிதாக அறிந்தது கிடையாது. சாராவைப் பற்றி சுதிர் தவிர யாரும் அறிந்ததில்லை)
“எம்பொண்ணு செந்தில்.. எனக்காக கடவுள் கொடுத்த என் பேபிடால்” என்றான்.
அவனுக்கு பாவம் ஒன்றும் புரியவில்லை. அதில் மீண்டும் சத்தமாய் சிரித்தவன், “சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுவேன். அப்ப என் பொண்ணையும் பொண்டாட்டியையும் காட்டுறேன்” என்று கூறிச் சென்றான்.
நேரே அவன் சென்றது பள்ளிக்கு தான். ஜீபூம்பா தான் பள்ளி வாசலில் நின்று கொண்டு “ஏ சாரா பேபி. உன் மம்மியும் உன் டாடியும் வருவாங்க இப்ப” என்று கூற,
‘என் மம்மி டாடியா? என்ன உளறுர? எனக்கேது மம்மி டாடி?’ என்று சாரா மனதோடு கேட்டாள்.
“வெயிட் அன்ட் வாட்ச்” என்று ஜீபூ கூற, எதிரெதிர் திசையிலிருத்து இலக்கியனும் ஆரண்ய நிலாவும் வந்தனர்.
இருவரையும் பார்த்த சாரா ஜீபூவை பூரிப்பாய் நோக்க, அது சிரித்தபடி கண் சிமிட்டியது.
“எங்க பறாக்கு பார்த்துகிட்டு இருக்க நீ?” என்று மதி அவளை சுரண்ட, அதில் மதியை நோக்கி அசடு வழிந்தவள் ஆரண்யா வந்ததும் அவளிடம் “ஆரூ..” என ஓடினாள்.
இலக்கியனும் அருகே வந்து மதியைத் தூக்கிக் கொண்டு அவளுடன் பேச, “இன்னிக்கு யாரு என்னைக் கூட்டிட்டுப் போகப் போறீங்க?” என்று சாரா கேட்டாள்.
“இலக்கியா (அ)ப்பா.. சாரா பேபிய இன்னிக்கும் நாங்களே கூட்டிட்டுப் போகலா0மா?” என்று மதி வினவ,
இதழ் பிதுக்கி பாவம் போல பார்த்தவன், “இல்லடா பட்டு.. பிரபா மேமுக்கு அவ மிந்தாநேத்து உங்க வீட்டுல தங்கினதே தெரியாது. எனக்கே வீக்லி வன்ஸ் தான் பெர்மிஷன் உண்டு. பாப்பாவ இல்லத்துல விடனும்டா” என்று கூறினான்.
மதியின் முகம் வாடிவிட, “அச்சோ.. அம்மு சேட் ஆகாதீங்க. நம்ம வேணும்னா கொஞ்ச நேரம் பார்க் போகலாம்” என்று இலக்கியன் சமாதானம் செய்ய,
“பார்க்கா? இப்பவா?” என்று நிலா கேட்டாள்.
“போவோம்டா. பாவம் பாப்பா” என்று அவன் கெஞ்சலாய் கண்கள் சுருங்கி சிறுபிள்ளை போல் வேண்ட, அவள் மறுப்பாளா?
அடுத்த பத்தாவது நிமிடம் குழந்தைகள் பூங்காவில் விளையாட, அவர்களை பார்வையிட்டபடி அந்த பூங்காவிலுள்ள நடைபாதையில் இருவரும் நடந்தனர்.
“நியூஸ் பார்த்தேன். ரொம்ப ஆச்சரியமா இருந்ததுங்க. கமிஷ்னர் பேட்டி கொடுத்தது பார்த்து செம்ம ஷாக். நல்லவேளை இந்தமாதிரி ஆட்களை சீக்கிரம் கண்டுபிடிச்சீங்க” என்று அவள் கூற, அவனிடம் மௌனமே.
“ராகவி ஒரே அழுகை” என்று அவள் கூற,
“என்னாச்சுடா?” என்றான்.
“மகிந்தன் அண்ணா ரொம்ப மனசுடைஞ்சு போயிட்டாரு. ஒரு உயிர்கொல்லி பாம்பை வைத்து முகாமை நடத்தி வந்திருக்கோமேனு அழுகை. அவள மீட் பண்ணி ரொம்ப வருத்தப்பட்டு அழுதிருக்கார். அங்க வீராப்பா பேசிட்டு என்கிட்ட வந்து அழுதுட்டா” என்றாள்.
“பாவம்.. அவருக்கு நடந்ததெல்லாம் நம்பிக்கை துரோகம் ஆராமா. அவர் சர்வேஷைப் பத்தி அறிமுகம் செய்து வைத்தப்போ என்னோட வலது கை, இடது கைனு எல்லாமே இவன் தான்னு சொல்லிகிட்டார். இட் வில் டேக் சம் டைம்” என்று அவன் கூற,
“ஹ்ம்..” என பெருமூச்சுவிட்டாள்.
இவர்கள் பேச்சை வேடிக்கை பார்த்த ஜீபூம்பா போய் மரத்தில் நங்கு நங்கென்று முட்டிக் கொண்டு, “காதல் வருவதற்கு முன்னதான் கண்டதையும் பேசின. இப்பவும் கண்றாவி இதையா பேசனும்?” என்று நொந்து கொண்டது.
“அப்றம்?” என்று அவன் கூற,
“அப்றம்?” என்று அவளும் பதிலாய் கேள்வியைக் கேட்டாள்.
“ம்ம்.. பாயிண்ட புடிச்சுட்டானுங்க. அப்றம் அப்றம்?” என்று ஜீபூம்பா குதூகலமாய் வினவ,
“கிளம்பலாமா? நேரமாகுது” என்று கூறி ஜீபூவை புஸ்ஸாக்கினான்.
“ம்ம்..” என அவள் தலையசைக்க,
“ஏ உன் மாம்ஸ்..” என்று ஏதோ கூற வந்தவன், “கார்த்தி அண்ணாகிட்ட சொல்லிட்டியா?” என்று கேட்டான்.
அதில் விழிகள் அகல விரிய இதழ் பிரித்து புன்னகைத்தவள், “அவர்கிட்ட சொல்லாம இருப்பேனா? என் மாமா தான் எனக்கு அப்பாக்கு அப்பாவா அண்ணாக்கு அண்ணாவா தோழனுக்கு தோழனா இருந்தவர்” என்று அன்று நடந்தவற்றைக் கூறினாள்.
“ம்ம்.. எல்லார்கிட்டயும் சொல்லியாச்சு. எப்ப என்கிட்ட சொல்லப் போற?” என்றவன் அவள் கரத்தை சுண்டி தன்னை நோக்கி இழுக்க, அதில் தடுமாறி அவன் புஜங்களைப் பற்றிக் கொண்டு நின்றவள் உடல் சிலிர்த்தது. அவளுக்கு மட்டுமா?
அந்த சிறு ஸ்பரிசம் இருவரின் உயிர் வரை பாய்ந்து பரவியது. ‘இவள் மீது எத்தனை காதல் இருந்தால் இந்த சின்னஞ்சிறு ஸ்பரிசம் தனக்குள் மின்சாரம் பாய்ச்சியிருக்கும்?’ என்று அவனும் ‘இவர்மீது எப்படி திடீரென எனக்கு இப்படியொரு கொள்ளைக் காதல்? சிறு தொடுகையில் உடல் சிலிர்த்து உள்ளம் குளிருமளவு?’ என்று அவளும் மயங்கி நின்றனர்.
“ம்ம்.. இந்த இயல்பாய் உருவாகும் காதல் தான் நிலைக்கும். நானே மேஜிக் போட்டு காதலை வரவழைக்கலாம். ஆனா இந்த இயல்பும் அன்பும் அங்க இயந்திரத்தன்மையாகிடும். இதெல்லாம் உனக்கு இப்ப புரியாது” என்று ஜீபூம்பா நினைத்து சிரித்துக் கொண்டது.
அங்கு தங்கள் மயக்க நிலையிலிருந்து மீண்டவர்கள் ஒருவர் முகம் மற்றவர் நோக்காது திரும்பிக் கொள்ள, இருவர் இதழிலும் அழகாய், ஆழமாய் ஒரு புன்னகை.
தன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டவன் அவள் தோளில் தன் தோள் கொண்டு இடித்து “வா” என்றபடி முன்னே சென்றான்.
சிறுமிகளைக் கூட்டிக் கொண்டு இருவரும் அவரவர் இருப்பிடம் சென்றிட, அவர்கள் திருமணத்திற்கான ஏற்பாட்டை திருப்தியோடு துவக்கி வைத்தது நம் ஜீபூம்பா. “இனி என்ன டும் டும் தான்” (என்றது கண்கள் சிமிட்டி).
Comments
Post a Comment