21.சாராவின் ஜீபூம்பா
அத்தியாயம்-21
'யாரோ..யாரோடி! உன்னோட புருஷன்..
யாரோ? யாரோடி! உன் திமிருக்கு அரசன்..’ என்று ஒலிபெருக்கியில் ஒலித்த பாடல் அந்த மண்டபம் எங்கும் எதிரொலிக்க, பட்டு வேட்டி சட்டையில், முறுக்கிய மீசையும் தாடியல்லாது மலித்து எடுத்ததன் விளைவாய் தெரிந்த அவனது ஒட்டிய திராவிட நிற கன்னங்களும், கூர்மையான கண்களும் என கம்பீரமும் கலைஞனுமாய் அமர்ந்திருந்தான், இலக்கியன்.
“லக்கி என்னைப் பாரு” என அவன் முகம் பிடித்து திருப்பிய சாரா, அவனுக்குத் தன் கைகுட்டையால் துடைத்துவிட்டு “இப்ப ஓகே. நீ வெயிட் பண்ணு நான் ஆரூ ரெடியானு பார்த்துட்டு வரேன்” என பெரிய மனுஷிபோல் கூறிவிட்டு செல்ல, செல்பவளை புன்னகையுடன் பார்த்தவன் மனமெல்லாம் தித்திப்பாய் இனித்தது. ஆம் தற்போது அவள் அவனின் மகளாய் சட்டப்படி தத்தெடுக்கப்பட்டுவிட்டாளே!
தங்கள் திருமணத்தில் தங்களின் மகளாய் சட்டபடி முடிவான திருப்தியோடு முழு சொந்தமாக சாரா வளைய வரவேண்டும் என்று இலக்கியன் விரும்பியிருந்தான்.
அவன் எண்ணங்களும் அவள் எண்ணங்களும் சாரா விடயத்தில் என்று மாறியிருந்தது? அன்றைய இரவே அவனது அலைபேசி ஒலித்தது கார்த்திக்கின் அழைப்பைத் தாங்கியபடி.
“சொல்லுங்க கார்த்தி (அ)ண்ணா” என்று இலக்கியன் அழைக்க, அதில் மனம் குளிர புன்னகைத்த கார்த்தி, “நாளைக்கு ரிஜிஸ்டர் ஆஃபிஸ்கு கிளம்பி வந்துடு இலக்கியா” என்றான்.
“ரிஜிஸ்டர் ஆஃபிஸ்கா எதுக்கு அண்ணா?” என்று அவன் வினவ, அங்கே “மாமா.. எதுக்கு மாமா உலறுனீங்க? நான் சர்பிரைஸா வச்சிருந்தேன்” என்று பல்லை கடித்தபடி தன்னவள் கத்தியது அவனுக்கு இங்கே கேட்டது.
அதில் மெலிதாய் சிரித்தவன், “ஹலோ அண்ணா? சரியா கேட்கலை? ஹலோ?” என்க,
“ஏ பாப்பா பாப்பா.. அவனுக்கு டவர் கிடைக்கலை போல. சரியா கேட்கலை. நீ போ நான் வேற பேசி சமாளிச்சுக்குறேன்” என்று கார்த்தி கூறினான்.
இவர்கள் சேட்டையில் அழைப்பை மியூட்டில் போட்டுக்கொண்டு கண்களில் நீர் வர சிரித்தவன் கார்த்தி நான்கு முறை அழைத்துவிட்ட பின், “ஆ.. கேட்குது அண்ணா” என்றான்.
“ம்ம் ஓகே இலக்கியா. ரெஜிஸ்டர் ஆஃபிஸ்ல என் பிரண்ட் ஒருத்தருக்கு மேரேஜ். உன்னை இன்டர்டியூஸ் பண்ணி வைக்குறதா சொன்னேன். அதான்” என்று கார்த்தி சமாளிக்க,
“ஓ.. ஓகே ஓகே அண்ணா” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
மறுநாள் பட்டுவேட்டி சட்டையில் அழகாய் தனது மாமா அத்தையுடன் பதிவாளர் அலுவல் வந்தவன் அங்கு அடர் நீல நிறத்தில் ஊதா நிற கரையிட்ட பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டு அழகே உருவாய் எவ்வித ஒப்பனையுமின்றி நின்றிருந்த அவனவளைப் பார்த்தான்.
“அண்ணா” என்று இலக்கியன் அழைக்க, கார்த்தியோ “வாங்க மாமா, வாங்க அத்தை” என்று அவர்களை அழைத்துக் கொண்டு நிலாவைப் பார்த்து புன்னகைத்துவிட்டுச் சென்றான்.
தன்னவன் முன் வந்து நின்ற நிலா, “நமக்கு கல்யாணம்” என்று கூற,
ஒற்றைப் புருவம் உயர்த்தி இதழ் பிரித்து சிரித்தவன், “ஓஹோ.. அதுக்கு இன்னும் நாள் இருக்கே?” என்றான்.
“அது சம்பிரதாயப்படி. இது சட்டப்படி” என்றவள், “நம்ம கல்யாணத்துல நம்ம பொண்ணு முழு உரிமையோட வலம் வரனும். நாங்க தத்து எடுக்கப் போற பொண்ணுனு அவளை அறிமுகம் செய்யக் கூடாது. எங்க பொண்ணுனு வரவங்க கிட்ட பெருமையா சொல்லனும்” என்று கூற,
கண்களில் மெல்லிய நீர்த்துளியின் கோர்வையாய் கண்ணீரும், இதழில் சந்தோஷங்களின் கோர்வையாய் புன்னகையும் ததும்ப நின்றான்.
“போதும்யா உங்க காதல் படம்.. ரீலு அந்து தொங்குது வாங்க” என்று ராகவி கத்த, அங்கே மகிந்தனின் மனைவியாய் அவனது முழுமுதற் காதலின் உருவாய் நின்றுகொண்டிருந்த மகிந்தனின் கவியையும் மகிந்தனையும் கண்டு புன்னகைத்தனர்.
“படிச்சு முடிச்சுட்டு கல்யாணம்னு சொன்ன?” என்று அவள் பத்திரிகை நீட்டியதில் சிரிப்போடு நிலா வினவியபோது, “அவர் இயந்திரத்தன்மையை விட்டு உயிர்ப்போடு தன் வேலையைத் தொடர, அவரவளா அவர்கூடவே நான் வேணும். அவருடைய உயிர்ப்பை மீட்டு அவருக்கே தர என் காதல் அவருக்கு வேணும். அதுக்காக கல்யாணம் செய்துட்டு படிப்பது எனக்கு ஒன்னும் கஷ்டமெல்லாம் இல்லை” என்று காதலின் நிமிர்வோடு கூறியிருந்தாள், ராகவி.
அந்த நினைவில் சிரித்துக் கொண்டவள், இலக்கியனின் கரம் பற்றிக் கொள்ள, இருவர் உடலில் அன்று பூங்காவில் அடைந்த அதே மின்சார உணர்வு.
ஒருவரை ஒருவர் கண்ணோடு கண் பார்த்து புன்னகைத்தவர்கள் உள்ளே செல்ல சக்கரவர்த்தி மற்றும் கார்த்திகேயன் சாட்சி கையெழுத்திட தாங்களும் தங்கள் கையெழுத்தை இட்டு தலையெழுத்தின் பக்கத்தை இணைத்துக் கொண்டனர்.
அந்த அழகிய தருணத்திற்கான சாட்சி ஆவணங்கள் அடுத்த பத்து நாட்களில் வந்து சேர்ந்திட, அவனைக் கூட்டிக் கொண்டு ஆசிரமத்தை அடைந்தாள்.
திருமண சான்றிதழ் வந்தது அறியாதவனோ அவள் அங்கு கூட்டி வந்ததன் காரணம் அறியாது, “ஆராமா.. இப்ப பாப்பா ஸ்கூல்ல இருப்பாடா” என்று கூற,
“அது எங்களுக்குத் தெரியாதாக்கும்?” என்றபடி அவன் புஜத்தினை தன் இரு கரம் கொண்டு கட்டிக்கொண்டாள்.
அதில் இன்பமாய் அதிர்ந்தவன், அவளை ஆச்சரியமாய் நோக்க, நாணத்தில் இமைகள் பட்டாம்பூச்சியாய் படபடக்க, “அப்டி பாக்காதீங்க. கைய தானே பிடிச்சேன்” என்றாள்.
“ஹ்ம்.. கையவா பிடிச்ச? கட்டியே பிடிச்ச மாதிரி இருக்கு” என்று அவன் கிரக்கமான குரலில் கூற,
“ப்ச்.. இப்படிப் பேசாதீங்க” என்றாள்.
அதில் சிரித்துக் கொண்டவன் அவள் தலைமுடியை கோதி “வா” என்க,
இருவரும் உள்ளே சென்றனர்.
பிரபாவின் அறைக்குள் செல்லவும், “வா இலக்கியா.. வாடா” என்று பிரபா வரவேற்றார்.
இருவரும் அவர் முன் அமர, “சொல்லுங்கடா” என பிரபா கேட்டார்.
“ம்மா..” என்றுவிட்டு அவளவனைப் பார்த்த நிலா தன் பையிலிருந்து தேவையான ஆவணங்களின் பிரதிகளை எடுத்து வைத்து, “எங்க குழந்தை எங்களுக்கு வேணும். சட்டப்படி” என்க, அவன் உடலின் மின்சார சிலிர்ப்பு அவளுள் பாய்ந்தது.
இலக்கியனின் கண்கள் கலங்கியே யவிட்டன.. இப்பவோ அப்பவோ என்று துடித்த கண்ணீரும் கன்னம் இறங்கிவிட, நீர் துளிர்த்த விழியோடு அதை கண்டு புன்னகைத்தவள் பிரபாவை நோக்கினாள்.
“ரொம்ப சந்தோஷம்டா. இதுதான் நடக்கும்னு நான் எதிர்ப்பார்த்தேன். ஆனா இவ்வளவு சீக்கிரம் வரும்னு எதிர்ப்பார்க்கலை” என்று அவர் கூற,
“எங்க கல்யாணத்துல எங்கக் குழந்தையா அவ கூட இருக்கனும் ம்மா” என்று நிலா கூறினாள்.
அவன் ஏதும் பேசவில்லை. அவனது கண்கள் அவளை மட்டுமே நோக்கி உறைந்து உருகி நின்றது.
பிரபா கேட்ட கையெழுத்துக்களை எல்லாம் இயந்திர கதியில் அவன் செய்து முடிக்க, சாராவின் அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு வந்த நிலா, “வரோம் ம்மா” என்றபடி அவனோடு வெளியேறினாள்.
இருவரும் நேரே சென்றது அவன் வீட்டுக்குத்தான். சக்கரவர்த்தி தன் தோழரைக் காண வெளியே சென்றிருக்க ராதா மட்டுமே இருந்தார். அவரிடம் சந்தோஷமாய் அனைத்தையும் நிலா கூற, கண்கள் கலங்க அவளை அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தவர், “எங்க அவனுக்குனு வர்றவ அந்த பிஞ்சு மனச நோகடிச்சுடுவாளோனு நான் பயம் கொள்ளாத நாளில்லைடாமா” என்றார்.
“அவ எங்க குழந்தை ராதாம்மா” என்றவள், “பாப்பா பொருள மேல வச்சுட்டு வரேன்” என்றுவிட்டு சென்றாள்.
ராதா இலக்கியனின் உறை நிலை கண்டு புன்னகையாய் அவன் கன்னம் தட்ட, அப்போதே நிலைக்கு வந்தவன் மேலே படிகளை நோக்கிவிட்டு விறுவிறுவென அவன் அறைக்கு சென்றான்.
சாராவின் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தவள் அவன் அரவத்தில் திடுக்கிட்டுத் திரும்ப, வேகமாய் வந்தவன் காற்றுக்கும் வழியின்றி அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
ஆயிரமாயிரம் மின்னழுத்தம் பாய்ந்தது போன்ற உணர்வு இருவரையும் அசைவின்றி வைத்திருக்க, அவனிடம் மெல்லிய விசும்பல் ஒலி கேட்டது.
அதில் அதிர்ந்து அவன் முகம் நிமிர்த்தியவள், “ஏங்க?!” என்க, “தேங்ஸ் ஆரா” என்று அழுகையோடு கூறினான்.
“ஏங்க என்னதிது?” என்று அவள் பதற, அவளை மேலும் இறுக அணைத்தவன், “உன் காதலால கொன்னு அதே காதலால எனக்கு உயிர்ப்பிச்ச கொடுக்குறடி” என்றான்.
“ஏங்க என்னாச்சுனு இப்படியெல்லாம் பேசுறீங்க?” என்று கண்கள் கலங்க அவள் வினவ,
“ந..நம்ம பாப்பாடி” என்று கதறினான்.
அந்நொடி சாராவின் மீதான அவனது நேசத்தின் இல்லாத எல்லையைப் பற்றி அறிந்துக் கொண்டதுபோல உணர்ந்தாள்.
“நம்ம பாப்பாங்க.. நம்ம கல்யாணத்துல அவ இல்லாமலா? நம்ம பாப்பாவா முழு உரிமையோட அவ வலம் வரனும். அதுதான் நம்ம பாப்பாக்கு கௌரவம்” என்று அவள் கூற,
“நான் நினைச்சதை நீ செஞ்சுட்ட ஆரா” என்றான்.
அதில் லேசாய் சிரித்தவள், “மத்த விஷயத்துல எப்படியோ? ஆனா பாப்பா விஷயத்துல நீங்களும் நானும் வேற வேற இல்லைங்க. அவ தான் நம்மள சேர்த்து வைச்ச ஏஞ்சல். அவ நம்ம தேவதை, நம்ம பரிசு” என்று கூற,
“தேங்ஸ்டி” என்றான்.
அந்த முத்தான தருணத்தின் நினைவிலிருந்தவனைக் கலைத்தது ஐயர் பெண்ணை அழைத்த குரல். அந்த ஆழமான உணர்வோடு அவள் வரும் திசை ஏறிட்டவன், மாம்பழ நிறத்தில் அடர் சிவப்பு கரை வைத்த பட்டுப் புடவை உடுத்தி, அதற்கு தோதாய் தாமரையில் மகாலட்சுமி அமர்ந்திருப்பதைப் போன்ற வடிவம் கொண்ட அணிகலன்களும் கையில் தடியான தங்க வலைகளுக்கு நடுவே அரக்கு நிற கண்ணாடி வலைகள் குழுங்க அன்னநடையிட்டு வந்தாள்.
“ஆரூ.. ரொம்ப அழகா இருக்க?” என்று சாரா அவளுடன் துள்ளி குதித்தபடி வர,
“ஏ சாரா.. உன் ஆரூக்கும் லக்கிக்கு டும்டும்டும் என்னால தான் நடக்குது. என்னை நீ கண்டுக்கவே மாட்டேங்குற?” என்று ஜீபூம்பா கேட்டது.
‘உனக்கு இல்லாததா.. நீ என்ன வேணும் கேளு ஜீபூ நான் தரேன். நான் செம்ம ஹேப்பியா இருக்கேன். லவ் யூ ஜீபூ’ என்று சாரா மனதோடு கூறிக் கொள்ள,
“ம்ம் கல்யாணம் முடியட்டும் நம்ம பேசிப்போம்” என்றது.
இருவரும் அருகருகே அமர, சாராவை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஐயர் கூறும் மந்திரங்களை மகளோடு சேர்ந்தே கூறிக் கொண்டிருந்தனர். சுற்றியுள்ளோரின் கற்பனை குதிரை ஏறி பிரயாணம் செய்வதெல்லாம் அவர்களுக்கு பொருட்டாகவே இல்லை.
“சாரா அங்க நம்ம ஃபிரண்ட்ஸ் வந்திருக்காங்க வா பார்த்துட்டு வருவோம்” என்று மதி சாராவை அழைத்துச் செல்ல, சுற்றியும் சிரிப்பொலியே பரவியது.
“சந்தோஷமா இருக்கீங்களா?” என்று நிலா வினவ, அவளை கண்ணோடு கண் பார்த்தவன், “ரொம்ப” என்றான்.
ஐயர் அந்த பொன் தாலியை அவன் கையில் கொடுத்து “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்க,
“பாப்பா” என சத்தமாய் இருவரும் அழைத்தனர்.
மேடையின் கீழே இருந்தவள் தாய் தந்தையின் குரலுக்கு மதியையும் இழுத்துக் கொண்டு மேலே வந்தாள். தம்பதியர் இருவரும் அவளை நோக்க, சாரா புரியாது விழித்தாள்.
“நாங்க யாரு?” என இருவரும் வினவ,
“ஆரூ லக்கி” என்றாள்.
அதில் அழகாய் புன்னகைத்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “அம்மா அப்பா.. லக்கியும் ஆரூவும் தான் உனக்கு எல்லாமே.. அன்ட் கூடவே இனி ஆரூ உனக்கு அம்மா லக்கி உனக்கு அப்பா” என கூற, குழந்தைக்கு சொல்லொன்னா உணர்வு.
“சாரா பேபி.. இவங்க தான் கடவுள் உனக்கு உருவாக்கின அம்மா அப்பா. நீ தான் உன் அம்மா அப்பாவை தேடி சேர்த்து வைத்து உன்னை அடைய வச்சுகிட்ட. இவங்க தான் உனக்கான அம்மா அப்பா” என்று ஜீபூம்பா கூற,
புரியாத உணர்வுக்குவியலில் தத்திளித்த குழந்தை “ஆரூம்மா.. லக்கிப்பா” என்று தடுமாற அந்த தம்பதியர் முகத்தில் தான் எத்தனை பூரிப்பு!
அதே மகிழ்ச்சியோடு அந்த பொன் தாலியை இலக்கியன் ஆரண்ய நிலாவின் கழுத்தில் கட்ட, தன்னவனையும், அவனுடனான வாழ்வையும் மனமார ஏற்றாள், ஆரண்ய நிலா.
Comments
Post a Comment