9. சாராவின் ஜீபூம்பா
அத்தியாயம்-09
தனது அலைபேசியில் உள்ள கழுகுத் தலை பொருந்திய பிரேஸ்லெடின் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்த இலக்கியனுக்கு அதை எங்கோ பார்த்த நினைவு. ஆனால் அது யாரென்று நினைவில்லாது தவித்தான்.
அவனிடம் ஓடி வந்த அவனது செல்ல வாண்டு, "என்ன பண்ற லக்கி?" என்க, தன் அலைபேசியை வைத்துவிட்டு சாராவைப் பார்த்தவன், "ஒன்னுமில்ல பேபிடால். பாப்பா சாப்டாச்சா? ஹோமுக்குக் கிளம்பலாமா?" என்று கேட்டான்.
சட்டென சாராவின் முகம் சுருங்கிவிட, அவனையே பார்த்தாளே தவிர ஒருவார்த்தை பேசவில்லை. "என்ன பேபிடால்?" என்று அவள் முகம் மாறியதில் குழப்பமாய் புன்னகைத்தவன் வினவ,
"லக்கி போன வாரம் மாதிரி இன்னிக்கும் உன்கூட படுத்துக்கவா?" என்று குழந்தை வினவினாள்.
அவள் குரலில் ஏகத்துக்கும் கொட்டிக் கிடந்த ஏக்கத்தில் அவன் தான் நிலைகுழைந்து போனான். அதிர்ச்சியும் கலக்கமுமாய் அவன் அவளை ஏறிட, அவன் அமைதியில் மேலும் முகம் வாடியவள், வரும்போது தான் கொண்டு வந்த தனது பையை மாட்டிக் கொண்டு, "போலாம் லக்கி" என்றாள்.
சட்டென குழந்தையவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் கண்களிலிருந்து கண்ணீர் சொறிய, "வெ..வேணாம் பேபிடால். நீ லக்கி கூடவே தூங்கு. லக்கிக்கு ஹேப்பி தான்" என்று கூற,
அவனிலிருந்து பிரிந்தவள், "நிஜமாவா லக்கி?" என்று கேட்டாள்.
கலங்கிய விழிகளுடன் புன்னகைத்தவன் ஆம் என்பது போல் தலையசைக்க,
"ஏன் லக்கி அழற?" என்று அவன் கன்னத்தில் உருண்டு ஓடும் கண்ணீர்த் துளிகள் கண்டு பதைபதைத்த குட்டி அம்மையவள் அதை தன் பிஞ்சு விரல்களால் துடைத்துவிட்டாள்.
அதில் மேலும் ஒரு சென்டிமீட்டர் இதழ் விரித்து அவன் புன்னகைக்க, அவனை மீண்டும் கட்டிக் கொண்டவள், "எனக்கு உன்கூட தூங்க பிடிச்சிருக்கு லக்கி" என்றாள்.
அவன் உடலெல்லாம் சிலிர்த்து மேலும் கண்களில் கண்ணீர் மழை பொழிய, அவள் உச்சியில் அழுந்த முத்தமிட்டவன், "பாப்பா.." என்று கரகரத்த குரலில் இயம்பினான்.
என்ன மாதிரியான உணர்வென்று அவனால் அதை வார்த்தைகளில் வடித்திட முடியவில்லை. ஆனால் உள்ளமெல்லாம் வலியும் இன்பமும் சேர்ந்து ஊசியாய் தாக்கியது. குழந்தையின் பாசம் இன்பமாய் தாக்க, அவளது ஏக்கம் அவனை வலியோடு தாக்கியது.
'இத்தனை வருடங்களில் ஞாயிறு தோறும் மட்டுமாவது அவளைத் தன்னுடன் படுக்க வைத்துக் கொள்ள தனக்கு ஏன் தோன்றவில்லை? தானே தன் பேபிடாலுக்கு.. தன் ஏஞ்சலுக்கு.. தன் இளவரசிக்கு இந்த ஏக்கத்தைக் கொடுத்துவிட்டோமே' என்று உள்ளம் மருகி அவளை அணைத்திருந்தவனுக்கு மேலும் கண்ணீர் வழிந்தது.
அவனை உணவுண்ண அழைக்க வந்த சக்கரவர்த்தி கதவை தட்டிவிட்டு திறக்க, இவன் கண்ணீரோடு தன் இளவரசியை அணைத்திருந்தான். சரியாக அவன் அலைபேசியும் ஒலிக்க, கண் திறந்தவன் கண்டது நெக்குருகி நிற்கும் சக்கரவர்த்தியை தான்.
காரணம் தெரியாத போதும் அவர் அந்த காட்சியை ஒருவித ஆனந்தக் கண்ணீரோடு பார்க்க, குழந்தையை விட்டுவிட்டு தன் கண்ணீரை துடைத்தவன், "கீழ பாட்டிகூட இருடா பேபிடால். லக்கி சாப்பிட்டதும் தூங்கலாம்" என்க,
"ஓகே லக்கி" என்று குதூகலாமாய் கூறியவள், "தாத்தா.. நான் இங்க தான் தூங்க போறேன் லக்கி கூட" என்று கூறிவிட்டு கீழே ஓடினாள்.
சக்கரவர்த்தி இலக்கியனை நோக்க, அவன் மீண்டும் சிவப்பேறிய விழிகளைப் புறங்கையில் துடைத்தான்.
அவனருகே வந்து அமர்ந்தவர், "என்னபா?" என்க,
"அ..அவளுக்கு என்கூட தூங்கனுமாம் மாமா. போ..போன வாரம் மாதிரி இன்னிக்கும் உன்கூட தூங்கவா? உன்கூட தூங்க பிடிச்சிருக்கு லக்கினு சொல்றா" என்று உணர்வுப்பூர்வமாய் கூறினான்.
அதில் லேசாய் புன்னகைத்தவர், "அதுக்கேன்டா அழற?" என்க,
இடவலமாய் தலையாட்டி, "அதுல ஏகத்துக்கும் ஏக்கம் இருந்தது மாமா. என் ஏஞ்சலுக்கு.. என் இளவரசிக்கு நானே அந்த ஏக்கத்தைக் கொடுத்திருக்கேனே மாமா. இத்தனை வருஷம் எனக்கு இது தோனவே இல்லையே" என்று அவர் மடியில் முகம் புதைத்துப் படுத்தான்.
அவன் முதுகை வருடியவர், "இலக்கியா.." என்க,
"செத்துட்டேன் மாமா.." என்றான்.
வேலையில் விரைப்பாய் சுற்றுபவனை பார்த்துப் பழகியவர்கள் இந்த இலக்கியனைப் பார்த்தால் நிச்சயம் இது இலக்கியனே இல்லை என்றுதான் கூறுவர். அப்படியான தோற்றத்தில் தான் இருந்தான்.
அழுது களைத்த முகம், சிவப்பேறிய கண்கள் என குழந்தையாய் அவர் மடியில் கரைந்தவனைத் தட்டிக் கொடுத்தவருக்கு அவனது தந்தை சரணின் நினைவு தான் அழையாமல் வந்து போனது.
"இலக்கியா.. என்னப்பா இது? கண்ணைத் துடை" என்று அவர் கூற,
எழுந்து அமர்ந்து மீண்டும் புறங்கையால் கண்ணீர் துடைத்தவன், சுவற்றில் மாட்டியிருந்த அவனும் சாராவும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையெல்லாம் தன் கண்ணில் நிரப்பிக் கொண்டு "அவ என் இளவரசி மாமா" என்றான், ஆழ்ந்து அனுபவித்தக் குரலில்.
கீழே வந்து உணவுண்டவன் பிரபாவுக்கும் அழைத்து விடயத்தைக் கூறிவிட, அவரும் மறுக்காது சம்மதம் கூறினார். உண்டு முடித்து அவளோடு மேலே வந்தவன் அவளைத் தன் மார்பில் இட்டுக் கொள்ள, அவனை அணைத்துக் கொண்டு, "லவ் யூ லக்கி" என்றாள்.
அவள் தலைகோதியபடி புன்னகைத்தவன், "லவ் யூ டூ பேபிடால்" என்க,
அவனுடன் வழவழவென்று கதை பேசிக் கொண்டே மெல்ல மெல்ல உறக்கம் கொண்டாள். உறங்கும் குழந்தையின் முகத்தை இமைக்காது ரசித்தவன், இனி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு உறக்கம் அவளுடன் தான் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
மறுநாள் காலை மிகவும் உற்சாகமாக பள்ளிக்குள் நுழைந்தவள் அருகே "என்ன சாரா பேபி.. தௌ.." என ஜீபூம்பா முடிக்கும் முன்,
"ஆமா.. தௌசன்ட் வாட்ஸ் பல்ப் தான். நேத்து என் லக்கி கூட தூங்கினேன்ல" என்று எதையோ சாதனை செய்து பதக்கம் வென்ற தோரணையில் கூறினாள்.
"ம்ம்.. அது இருக்கட்டும். டாடியையும் மம்மியையும் நீ இம்பிரெஸ் பண்ணிட்ட. டாடியும் மம்மியும் ஒருத்தர ஒருத்தர் இம்பிரெஸ் ஆக வேண்டாமா?" என்று ஜீபூம்பா வினவ,
"அதான் நீ இருக்கியே ஜீபூம்பா. நீ எதாச்சும் மேஜிக் பண்ணிட மாட்ட?" என்றாள்.
"சரியா போச்சு.. குழந்தை பிள்ளைல? இப்படி தான் யோசிப்ப. உனக்கு புரியாது சாரா பேபி. இதுலாம் நடத்தும் வாய்ப்பை தான் நம்ம கொடுக்க முடியும். உணர்வுகள் அதுவா வரனும்" என்று ஜீபூம்பா கூறியது.
அது கூறியது போலவே ஒன்றும் புரியாமல் தலையை சொறிந்தவளிடம் ஓடிவந்த மதி, "ஏ சாரா.." என்று கை கோர்த்துக் கொண்டாள்.
'ஏ சாரா இந்த பொண்ணை யாரு கூட்டிட்டு வந்தது?" என்று ஜீபூம்பா கேட்க, அதையே சாராவும் மதியிடும் கேட்டாள்.
"சித்தி கூடதான் சாரா" என்றதும் ஜீபூம்பா மறைந்துவிட, சாராவுக்குப் புரிந்து போனது.
அங்கு பள்ளியின் வாசலில், "ஜீ..பூம்..பா" என்று ஜீபூம்பா மந்திரமிட, தனது வண்டியில் சாவியை பொறுத்திய ஆரண்யா தனக்கு பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தாள்.
தனது காக்கி உடையில் ஒரு கையை கால்சாராயின் பையில் நுழைத்து, தோள்பட்டையை தூக்கி அலைபேசியை காதோடு அழுத்திப் பிடித்தவன், தனது வெள்ளை முழுக்கை சட்டையை மடித்துவிட்டுக் கொண்டிருந்தான்.
அதில் அவளையும் அறியாமல் ரசனையாய் பார்த்தவள், சட்டென தன்னை சுதாரித்துக் கொண்டு தலையில் இருவிரல் கொண்டு தட்டி சிரித்துக் கொள்ள, ஆடவனும் தற்செய்லாய் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
கையில்லாத அடர் நீலநிற பருத்தி சுடிதாரும், வெள்ளைநிற பட்டியாலா கால்சட்டையும், அதே வெள்ளை நிறத்தில் துப்பட்டாவும் அணிந்திருந்தவள் கண்களில் அடர்த்தியாய் அஞ்சனம் தீட்டி, கோபுர பொட்டுக்கு மேல் மின்னல் கீற்றாய் சந்தனம் பூசி, அவளது சிவப்பு நிறக் காதில் சிறிய வெள்ளை நிற ஜிமிக்கியும் கழுத்தில் மெல்லிய வெள்ளிச் சங்கிலியும் அணிந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வளையலற்ற அவளது வலது கையை கருப்பு நிற கைகடிகாரம் மட்டும் அலங்கரித்திருக்க, அதில் நேரத்தைப் பார்த்துக் கொண்டவள் இறங்கி அவனிடம் வந்தாள். அவள் வருவதைக் கண்டு அலைபேசியில் பிறகு அழைப்பதாய் கூறியவன் அழைப்பைத் துண்டிக்க,
"டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போலயே" என்றாள்.
லேசாய் சிரித்தவன் "அப்படிலாம் இல்லைமா" என்க,
"ம்ம்.. சாராவை விட வந்தீங்களா?" என்று தெரிந்துகொண்டே கேட்டாள்.
"ம்ம்.. ஆமா" என்று அவன் கூற,
"அவளைப் பார்க்கவே இல்ல. காலைல பார்த்துடலாம்னு நான் மதிய சீக்கிரம் கிளப்பி கூட்டிட்டு வந்தா போலீஸ் என்னைவிட சீக்கிரம் அவளை கிளப்பிட்டு வந்துட்டீங்க போலயே" என்று உண்மையான வருத்தத்துடன் கூறினாள்.
"அச்சோ இப்பதான் நானும் கூட்டிட்டு வந்தேன்" என்று அவன் கூற,
"இட்ஸ் ஓகே சார். ஈவ்னிங் பார்த்துக்குறேன்" என்றாள்.
அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்து சிரித்தவன், "என் பேபிடால் உங்களையும் ரொம்ப சீக்கிரம் கவிழ்த்துட்டா போலயே" என்க,
"நிஜம்தான். எனக்குப் பொதுவாவே குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும். என் பல வருட கனவு குழந்தைகள் நல மருத்துவர் ஆகனும்னு தான். இதோ வெற்றிகரமா படிச்சுட்டும் இருக்கேன். ஆனா சாரா அளவு என்கூட யாரும் இவ்வளவு அட்ராக்ஷனா இருந்தது இல்லை. மதி என் அக்கா பொண்ணு. எனக்குமே பொண்ணு மாதிரி தான். ஆனா சாரா.. புதுசா பார்த்து பேசின முதல் நாளே ரொம்ப க்ளோஸ் ஃபீல்" என்று உணர்ந்து கூறினாள்.
"ஓ பீடியாட்ரீஷனா?" என்று அவளைப் பற்றிக் கேட்டவன், "என் பேபிடால் எல்லார் கூடவும் ரொம்ப ஈசியா ஒட்டிடுவா" என்று தான் பெற்று வளர்த்த பிள்ளையின் பெருமை பேசும் தந்தையாக கர்வத்தோடு கூற,
அதை ரசித்துப் பார்த்தவள், "சீரியஸ்லி நீங்க சாராவோட கார்டியன்னு நம்பவே முடியலை. உங்க பாண்டிங் அவ்ளோ டீப்பா இருக்கு" என்றாள்.
அவள் கூறியதென்னவோ பாராட்டு தான். ஆனால் 'கார்டியன்' என்ற வார்த்தையில் அவன்தான் மனம் நோக தேங்கி நின்றான்.
'என் பேபிடாலுக்கு நான் கார்டியனா?' என்று அவன் மனம் கேட்க, மூளையோ, 'ஆமா அப்படித்தானே ஸ்கூல்ல சைன் போடுற?' என்று கூறியது.
பொதுவாக ஆசிரமத்திற்கென்று அவன் பணம் கொடுத்தாலும் ஏனோ சாராவின் படிப்பு செலவையும் தன் கையிலேயே எடுத்திருந்தான்.
'முழுசா நான் ஒரு பிள்ளையைப் படிக்க வச்சதா இருக்கட்டும்' என்று தான் கூறினான். ஆனால் சாரா மீது கொண்ட அதீத அன்பின் வெளிப்பாடு அது என்று பிரபாவுக்குப் புரிந்தது.
அமைதியாய் நிற்பவன் முன் தன் கையை அசைத்தவள், "சார்..?" என்க,
சட்டென நினைவு மீண்டவன், "சாரி.. என்ன?" என்றான்.
"சாராவுக்கு நீங்க கார்டியன் போலவே இல்லைனு சொன்னேன்" என மீண்டும் அவள் சின்ன சிரிப்போடு கூற,
"ஆரண்யா ப்ளீஸ் டோன்ட் சே கார்டியன் (கார்டியன்னு சொல்லாத)" என தன் அடர்த்தியானக் குரலில் கூறினான்.
அவனை புரியாது பார்த்தவள் திருதிருவென விழிக்க,
"சாரி.. என்னால கார்டியன்னு ஏத்துக்க முடியலை. ம்ம்.. அப்படி தான் அவளுக்கு ஸ்கூல்ல சைன் பண்றேன். ஆனா.. ப்ச்.. எனக்கு சொல்லத் தெரியலை. நான் சாராக்கு வெறும் கார்டியன் இல்லை" என்றான்.
அப்பேற்பட்ட காவலன் அந்த சுட்டிக் குழந்தையின் விடயத்தில் மட்டும் குழந்தையாகவே மாறி விடுகின்றான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
"ஓ சாரி சார். நிஜமா உங்க பாண்டிங் ரொம்ப அழகா இருக்குனு தான் சொல்ல வந்தேன்" என்று அவள் கூற,
"புரியுதுமா. சாரிலாம் வேண்டாம்" என்றான்.
சில நிமிடங்களில் ராகவியிடமிருந்து அழைப்பு வரவே அவனிடம் அனுமதி கோரிவிட்டு அழைப்பெடுத்து பேசியவள், "ஓகே சார். ஃப்ரண்ட் வெயிட் பண்றா. நான் வரேன்" என்க,
"ஓகேமா பை" என்றான்.
இருவரும் அவரவர் வண்டியில் ஏறி அமர, என்ன உணர்ந்தனரோ ஒரே நேரம் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டனர்.
அதில் சினேகமாய் புன்னகைத்து அவர்கள் தலையசைத்துக் கொள்ள, "ம்ம்.. வர்க்கவுட் ஆவுது" என்று கூறி சிரித்துக் கொண்டது, நம் ஜீபூம்பா.
Comments
Post a Comment