திருப்பம்-95
திருப்பம்-95
மாதங்கள் நான்குக்கு மேல் கடந்திருந்தன…
சங்கமித்ரா தனது பேச்சுப் பயிற்சியையும் துவங்கி ஒரு மாதமாகியிருந்தது.
குரலின் நரம்பு மண்டலங்களை வலு பெறச் செய்திடவும், மூச்சு விடுதல், விழுங்குதல் தொண்டையைச் சூழ்ந்திருக்கும் தசைகள் சீர் பெற என்று அவளது பிரச்சினைகளுக்கு ஏற்ப பயிற்சிகள் துவங்கப்பட, புதிதாய் பயிற்சியில் நுழைவதால் வலிகளையும் தாங்க வேண்டியிருந்தது.
ஒருநாள் பயிற்சியின் போதே வலி தாங்க இயலாமல் அவள் அழுதுவிட, “ஒன்னும் வேணாம் மித்ரா. வுடு. போவட்டும். இம்புட்டு அழுது இது தேவையாக்கும்? போடி.. கொரலாவுது மண்ணாவுதுனு வுட்டுத்தொல” என்று கண்கள் கலங்க கூறினான்.
அவனை கண்ணீர் மல்க பார்த்தவள், ‘எனக்கு வேணும்' என்று ஸ்திரமான பார்வையோடு சைகை செய்ய, அதற்கு மேல் அவனால் தடுக்கவும் இயலவில்லை.
போகப் போக ஓரளவு பழகத் துவங்கியவள், மருத்துவர் கூறிய முறைமைகளையும் கடைபிடித்தாள். விபத்தினால் ஏற்பட்ட கை மற்றும் கால் வலிகள், எப்போதாவது ஏற்படும் பின்னந்தலை வலிகூட கடந்த ஒரு மாதத்திற்கு முன்னிருந்து முற்றுமாய் அவளிடமிருந்து விடைபெற்றிருந்தது.
குரலையும் மனதையும் தவிர மற்ற அனைத்திலும் பழைய நிலைக்கு திரும்பியிருந்தாள்.
அதைப்போல் அன்றைய மாலை மருத்துவமனையிலிருந்து சங்கமித்ராவும் வளவனும் வீடு திரும்ப,
“ராசாத்தி நல்ல சேதி சொன்ன புள்ள. எம்மனசே நெரம்பி போச்சுது” என்றபடி தெய்வா கார்த்திகாவிற்கு இனிப்பை ஊட்டிக் கொண்டிருந்தாள்.
'இப்படியெல்லாம் அத்தை அக்காவ என்னிக்கும் கொஞ்சினதில்லையே?’ என்று யோசித்தபடி சங்கமித்ரா வர,
“என்னம்மா? மைணிக்கு கவனிப்பெல்லாம் பலமாருக்குது?” என்று வளவன் கேட்டான்.
“சிச்சா சிச்சா..” என்று அவனிடம் ஓடி வந்த சுடர், “பாப்பாக்கு டம்பி வராம்” என்று தன் மழலை மொழியில் கூற,
தம்பதியர் இருவரும் இன்பமாய் அதிர்ந்துபோய் கார்த்திகாவையும் விக்ரமனையும் பார்த்தனர்.
விக்ரம் பார்வையெல்லாம் அவன் மனைவி மீதுதான். தாய்மையின் பூரிப்பில் முகம் சிவந்து அவள் நிற்க, அவளை அத்தனை ரசனையோடு பார்த்தான்.
“லேய்.. வாழ்த்துக்களுடா” என்று வளவன் தன் இரட்டையனை அணைத்துக் கொள்ள, உள்ளிருந்து பழரசத்துடன் வந்த திரிபுரா, “இந்தாம்லே இதக்குடி” என்று கார்த்திகாவிடம் கொடுத்தாள்.
தன் கைகளைத் தட்டிய மித்ரா, தன் நெஞ்சில் கரம் வைத்து புன்னகைத்து தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தி, கைகுலுக்க கரம் நீட்ட,
“தேங்ஸுத்தா” என்று விக்ரமன் அவள் கரம் பற்றிக் குலுக்கினான்.
கார்த்திகாவை அணைத்துக் கொண்ட மித்ரா தன் சந்தோஷத்தைத் தெரியப்படுத்த,
“ரொம்ப சந்தோஷம் தாயி. நல்லாருங்கு” என்று சுயம்புலிங்கமும் வாழ்த்தினார்.
“தனத்துக்கு இந்த மாசம் வளபூட்டுரம்ன? வாரவியட்ட உண்டாயிருக்கனுலாம் சொல்லி வெக்காத. நாலு மாசத்துக்கு மேல சொல்லிக்கலாம்” என்று திரிபுரா கூற,
“அதேம் நானுஞ்சொல்ல வந்தேம்டி” என்று தெய்வா மகளுக்கு ஒத்து ஊதினார்.
அதையெல்லாம் மீறி அவர்கள் அனைவரிடமும் பெரும் உற்சாகம் சூழ்ந்திருந்தது.
தெய்வா தனது இரண்டு மகள்களுக்கும் செய்தியனுப்பிட, தீபிகா தன்னவனுடன் உடனே வந்துவிட்டாள்.
“ஏத்தா கார்த்தீ.. ரொம்ப சந்தோஷமுத்தா. அம்மையு சொல்லவும் ரொம்ப சந்தோஷமா போச்சுது போ” என்று தீபிகா கூற,
“வாழ்த்துக்களுலே” என்று மகா விக்ரமனை அணைத்துக் கொண்டான்.
தன் கரம் தட்டிய மித்ரா, ‘விக்ரம் அத்தான் இந்த உலகத்துலயே இல்ல' என்று சைகை செய்ய,
“அத சொல்லுத்தா. பய கண்ணு எல்லாம் பொண்டாட்டி மேலத்தேம். இவேனுக்குள்ளயும் லவ்வரு பாயெல்லாம் இருக்குதுதேம் போல?” என்று மகா கூறினான்.
சட்டெனத் தன் கணவனை விட்டுக்கொடுக்கக் கூடாதென்ற ஆர்வத்தில், “ஏன் இல்லாம? அவிய எம்புட்டு பாசக்காரவனு எனக்குத்தேம் தெரியும்” என்று கார்த்திகா கூறிவிட,
“ஓஹோ…” என்று இளையோர்கள் கோஷம் போட்டனர்.
அதில் வெட்கம் கொண்டு சிவந்த விக்ரம், “எம்லே ஓட்டுதீய. போங்கலே அங்கிட்டு” என்று எழ,
கார்த்திகா இதழ் கடித்து கெஞ்சுதலாய் அவனைப் பார்த்தாள்.
அவளை செல்லமாய் முறைத்தவன் அதற்குமேல் அவர்கள் கேலியில் சிக்கி சிவக்க இயலாதென்று உள்ளே ஓடிவிட,
தெய்வா மற்றும் திரிபுரா அவளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
“ஏம்மா அவ என்ன மொத மொறயா முழுகாமருக்கா? போட்டு படுத்தாதீய” என்று தீபிகா கூற,
“எம்புட்டு மொற முழுகாமருந்தா என்னட்டி? உள்ளக்க இருக்குறது ஏம் பேரந்தான? நாஞ்சொல்ல வேணாமா அம்புட்டும்” என்று தெய்வா கூறினார்.
“பேரன்னு இப்பதயே சொன்னா எப்புடி. பேத்தியாருந்தா என்னச் செய்வீய அத்தே?” என்று மகா கேட்க,
“பேத்தியாருந்தா என்னய்யா? அதுவும் ஏம்பேத்தி தான? ஆனா மோளே ஒன்னு ஆச்சுல்ல? ஆம்பள புள்ளயா பெக்கட்டும்” என்று வாயெல்லாம் பல்லாய் கூறினார்.
“நல்லா சத்தா உங்கி நல்லபடிக்கா இருந்துகிடு. அம்ம ஆசைக்கு புள்ளையாவே இருந்துட்டுப் போவட்டுமே” என்று திரிபுரா கூற,
அனைத்தையும் புன்னகையுடனே கார்த்திகா கடந்தாள்.
இரவு சமையலுடன் இன்னும் இரு தினங்களில் வரவுள்ள தனத்தின் வலைகாப்பிற்கான பணிகளையும் பார்த்துக் கொடுக்க திரிபுரா உதவிக் கொடுக்க, தாயும் மகளுமாய் அடுப்படியில் பலகாரம் செய்தபடியே வம்பு பேசவும் செய்தனர்.
சங்கமித்ரா தண்ணீர் எடுப்பதற்காக சமையலறை பக்கம் செல்ல,
“ஏம்மா ஓம் ரெண்டா மருமவளுக்கு என்னத்தேம் சொல்றாவலாம் டாக்டருக? கொரலு என்னாவுமாம்?” என்று திரிபுரா கேட்டாள்.
அக்கேள்வியில் மித்ரா அப்படியே நின்றுவிட,
“வருமுனு சொல்றாவனுதேம் இவேம் சொல்றான்டி. வந்தா சந்தோஷந்தேம். மாரியாத்தாக்கு காணிக்க முடிஞ்சு வச்சுருக்கேம். எம்புள்ள வாழ்க்க செறப்பாவனும். அவேனும் வேல சோலினு அழையுறது போதாதுனு இவகூட ஆஸ்பத்ரிக்கும் அழையுறாம். சீக்கிரம் மவராசி சரியானா சரிதேம். முந்தாநாளு கரிச்சுட்டே வீடு வந்தா. என்னமோனு பதறிபோச்சுது. அப்றம் அந்த ஏதோ தரபியாம்ல? அது எடுத்தா வலிக்குமாம். அதுக்குத்தேம் அழுதுறுக்கா. பாவமாத்தேம் இருந்துது” என்று தெய்வா கூறினார்.
“ம்ம்.. சீக்கிரம் கொரலு வந்தா சரிதேம்” என்றவள், கொஞ்சம் குரலை குறைத்துக் கொண்டு, “இதால மத்ததுக்குலாம் ஒன்னுமில்லதான?” என்க,
“மத்ததுக்குனா?” என்று புரியாமல் கேட்டார்.
“ப்ச்.. அதேம்மா.. புள்ள உண்டாவுறதுக்கு” என்று திரிபுரா கேட்க,
“எனக்கு தெரியிலடி. இவ அம்புட்டு அடியில படுத்தப்பவே எனக்கு அப்புடி எதும் சொல்லிடுவாவளோனு பதக்குனுதேம் இருந்துது. இவேம் பொண்டாட்டிக்கு இல்ல கொடி பிடிப்பாம்? கொரலு சமாச்சாரமே எம்புட்டு உண்மையச் சொல்லுதானோ எம்புட்டுப் பொய்யச் சொல்லுதானோ? கட்டி ஆறுமாசத்துல இம்புட்டு பெரிய தடமா வாரனும்முனு ரொம்ப வெசனமா போச்சுது திரி. நாம வோணாமுனு சொல்லி தட போட்டதுக்குத்தேம் இப்புடி அச்சாணியமா ஆவிப்போச்சோ?” என்று கேட்டார்.
“என்னம்மா நீயு? என்ன பேச்சு பேசுத? இப்புடியெல்லாம் விழுந்து, கொரல காவுகொடுக்கனும்முனு அவோ தலையில எழுதியிருந்தா நீயு என்னத்தச் செய்வ?” என்று திரிபுரா கூற,
“வாஸ்தவந்தேம்” என்று பெருமூச்சு விட்டவர், “என்னமோடி.. எம்புள்ளைக்கூட ஒத்து வாழ்ந்து என்னையும் மதிச்சா நா ஏன்டி அவோள வஞ்சு, ஒடக்கிழுக்கப் போறேம்? நானும் மூனு பொம்பளப்புள்ள வச்சுருக்கேம். அப்புடியாடி பண்ணுவேம் நானு? இந்தா கார்த்தியுந்தேம் இருக்கா. இம்புட்டு வருசத்துல அவளுக்கும் எனக்குந்தேம் ஒரு சண்ட வந்துருக்குமா? இவளுக்கும் எனக்கும் எகன மொகனயாத்தேம் இருக்குது. இவ மிண்டாதிருந்தா நாயேம்டி ஒடக்கிழுக்கப் போறேம்? என்னத்தயாது சொன்னா அவேம்ட இல்ல வத்தில்ல வெக்கா? அதேம் சண்டையாவுது. என்னமும் பேசவே அச்சமாதேம் இருக்குது. அதேம் அவ பக்கட்டே போறதில்ல. என்னமாதுனாலும் கார்த்திட்டயே கேட்டுகிடுறது” என்று தெய்வா கூறினார். தன்மீது தவரில்லை என்பதைக் காட்ட, கார்த்திகா தற்போது அவர்களது பிரியமுடையவளாய் மாறிப்போனதில் ஆச்சரியம் ஒன்றும் இருக்கவில்லையே!
“வுடுமா.. ஒத்த மருமவளாது ஒத்து இருக்கானு நெனச்சுக்க. இவ இல்லாட்டிப் போறா.. கார்த்தி நல்ல புள்ள. ஒன்னய கடசி காலத்துல இவதேம் நல்லா வச்சுப்பா பாரு” என்று திரிபுரா கூற,
அவர் பெருமூச்சுடன் தலையசைத்தார்.
“நம்ம தேனி ராசு மாமா இருக்காவல்லம்மா? அவிய அம்மா கோமதி அப்பத்தா பேசினாவ. அவிய பேத்திக்கு வயசேரிட்டாம்ல? மாப்ள பாக்கனும் இருந்தா சொல்லுன்னாவ. சரின்னேம். நம்ம வளவன கேட்டுப்புட்டாவ” என்று அதிர்ச்சியாய் திரிபுரா கூற,
“ஆத்தீ.. என்னவாம்டி அந்த கெழவிக்கு. கட்டிகிட்டு அவேம் ஒத்த புள்ளையோட வாழுதாம். என்ன கேக்குது” என்று தெய்வா பதறினார்.
“அதேம் சொன்னேம். அந்த புள்ளைக்கு என்னவோவாமேனு இழுத்தாவ. சங்கதி புரிஞ்சுது. நல்லா வஞ்சுபுட்டேம்மா. ஆயிரந்தேம் அவோளோட ஆவாட்டியும் எந்தம்பி அவளத்தேம் கட்டிருக்கியாம். இப்புடி பேசினா பல்ல காட்டுறதா? அதேம் நல்லா ஆஞ்சுபுட்டேம்” என்று திரிபுரா கடுகடுப்பாய் கூற,
“நல்லா கேட்டின்ன? எங்கிட்ட கேக்கும்போதே போனடிக்கத்தான? நானும் போட்டு நாலு கிழிச்சுருப்பேம்ல?” என்று கேட்டார்.
“ஒனக்கு இருக்குற நச போதாதுனு இது வேற தேவையானுதேம் கூப்பிடலம்மா. வுடு அதேம் நாங்கேட்டுட்டேம்ல?” என்று திரிபுரா கூற,
“சரிதேம்டி” என்றார்.
மீண்டும் பேச்சு அவள் பற்றித் தாவ, அதற்குமேல் அங்கு நிற்க இயலாமல், கலங்கத் துடிக்கும் கண்களுடன் கூடத்திற்கும் செல்ல இயலாது அறைக்கு சென்றுவிட்டாள்.
ஏறும்போதே கண்ணை முட்டிக் கொண்டு கண்ணீர் பொங்கி வழிய, தாங்க முடியாத வலி அவளைத் தாக்கியது.
அறைக்கு சென்றவள் கதவை பூட்டிக் கொண்டு அதிலேயே சாய்ந்து தன் வாயை இறுக பொத்திக் கொண்டாள்.
அழுகையை அடக்குவதில் தொண்டையில் வலி எடுக்க, வேகமாய் குளியலறை சென்றவள், தண்ணீரை திறந்துவிட்டுக் கொண்டு அழத் துவங்கினாள்.
‘கொரலு என்னாவுமாம்?’
‘அவேனும் வேல சோலினு அழையுறது போதாதுனு இவகூட ஆஸ்பத்ரிக்கும் அழையுறாம்’
‘இவேம் பொண்டாட்டிக்கு இல்ல கொடி பிடிப்பாம்? கொரலு சமாச்சாரமே எம்புட்டு உண்மைய சொல்லுதானோ எம்புட்டுப் பொய்யச் சொல்லுதானோ?’
‘இப்புடியெல்லாம் விழுந்து, கொரலு காவுகொடுக்கனும்முனு அவோ தலையில எழுதியிருந்தா நீயு என்னத்தச் செய்வ?’
‘இவ மிண்டாதிருந்தா நாயேம்டி ஒடக்கிழுக்கப் போறேம்? என்னத்தயாது சொன்னா அவேம்ட இல்ல வத்தி வெக்கா?’
‘அவிய பேத்திக்கு வயசேரிட்டாம்ல? மாப்ள பாக்கனும் இருந்தா சொல்லுன்னாவ. சரின்னேம். நம்ம வளவன கேட்டுப்புட்டாவ’
‘அதேம் சொன்னேம். அந்த புள்ளைக்கு என்னவோவாமேனு இழுத்தாவ. சங்கதி புரிஞ்சுது’ போன்ற வாக்கியங்கள் அவள் காதில் மாறி மாறி ஒலிக்க, அதன் ஓசையிலிருந்து விடுபட முடியாமல் தன் காதுகளை பொத்திக் கொண்டு அழுதாள்.
நெஞ்சை நெடும் பாரம் ஒன்று சூழ்ந்தது. மீள இயலாத துயர் தன்னை அழைப்பதில் பதறி அதனிடமிருந்து ஓடியவளுக்கு, தன்னை ஆக்கிரமிக்கும் எதிர்மறை எண்ணங்களிடமிருந்து எப்படித் தப்புவதென்றே புரியவில்லை. அவளவன் ஒருவன் போதும் அவளை ஆக்கிரமித்து, அவள் துயர் கலைய என்று புரிந்தாலும், அவனிடம் சென்று பேச ஏனோ மனம் வரமால் தவித்தாள்.
‘என்னத்தயாது சொன்னா அவேம்ட இல்ல வத்தி வெக்கா?’ என்ற தெய்வாவின் வரி அவளை முற்றுமாய் ஆக்கிரமித்திருக்க, அது போடும் தடையை உடைத்திடுமளவு அவளிடம் தெம்பிருக்கவில்லை.
கண்ணீரில் கரைந்தொழுகியவளுக்கு அந்த பெரும் கனம், இன்னும் தன்னை என்னவெல்லாம் செய்ய உள்ளதோ? என்று அச்சம் வந்தது.
வாலி நிறைந்து நீர் சிந்தி வழிந்தோட, அதனுடன் அவள் கண்ணீரும் வழிந்தோடியது. நிமிடங்கள் கடக்க, அழுகை ஓய்ந்து உடல் அயர்ந்து போனதை உணர்ந்தவள், குழாயை அடைத்துவிட்டு முகத்தை நன்கு கழுவிக் கொண்டு வந்தாள். கதவின் தாழை திறந்துவிட்டுக் கொண்டு சென்று உடைமாற்றிவிட்டுப் படுத்துக் கொண்டவள் அப்படியே உறங்கிப் போனாள்…
Comments
Post a Comment