திருப்பம்-96

 திருப்பம்-96



நாட்கள் இரண்டு அமைதியாய் கடக்க, தனலட்சுமியின் வலைகாப்பு வைபவமும் வந்திருந்தது.


அனைவரும் ஆனந்தமே உருவாய் வடிவேல் வீட்டில் கூடியிருக்க,


ஏழுமாத சூழ் தாங்கிய கற்பவதியாய், தாய்மையின் பூரிப்புடன் பட்டுடுத்தி தயாராகியிருந்தாள்.


அறைக்குள் எழிலே உருவாய் தயாராகியிருந்த தன் மனைவியை பின்னிருந்து அணைத்துக் கொண்ட வடிவேல், “அம்புட்டு அழகாருக்கடி” என்று உச்சக்கட்ட ரசனை வழியும் குரலில் கூற,


“எம்புருஷனுக்கு மட்டும் என்ன கொறையாம்? அள்ளி திங்கனும்போல இல்ல இருக்கு” என்றாள்.


“திங்கத்தான?” என்று அவன் சிரிக்க,


“திங்காமயா?” என்று சிரித்தவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.


அதில் புன்னகைத்துக் கொண்டவன், அவள் வயிற்றில் கரம் பதித்து நெற்றியில் இதழ் பதிக்க, உள்ளே குழந்தை விட்டானே ஒரு உதை!


“அம்மாடி..” என்று வயிற்றைப் பிடித்தவள், “கழுத இப்பதயே என்ன ஒத ஒதைக்குது. அப்பன பக்கத்துலயே வுடாதுபோலனுருக்கு” என்று தனம் கூற,


“புள்ளைய கழுதைங்காதடி” என்று வாஞ்சையுடன் கூறினான்.


“ஆஹாங்.. அதுசரி.. நாள பின்ன பொறந்து வளந்து சேட்ட செய்யயில நீய அறுப்பமாட்டீயளோ? (திட்டமாட்டீங்களோ)” என்று அவள் கேட்க,


“அது கண்டிப்புத்தா. அது வேறல்ல?” என்றான்.


தன்னவனின் தந்தை ஸ்தானத்தை ரசனையோடு பார்த்தவள், “இப்பம் வளபூட்டினாவன்னா எங்கைய்யன் வூட்டுக்குக் கூட்டிப்போயிடுவாவ. தெரியும்ல?” என்று கேட்க,


“போவத்தான? நீ இப்பிடிக்கா போ. நா நாளைக்கு வந்துடுதேம்” என்றான்.


அதில் கொள்ளெனச் சிரித்தவள், அவனுடன் சபைக்கு வர,


அனைவரும் அவளை பரபரப்பாய் சூழ்ந்துக்கொண்டனர்.


வைபவம் இனிதே துவங்க, ஆங்காங்கே சில சளசளப்புகளுடன் ஆர்ப்பாட்டமும் அமர்க்களமுமாய் விழா ஓடியது.


“ஏந்த்தே.. பொழுதுக்கும் லச்சு லச்சுனு இந்தூட்டுல ஒருத்தோம் சுத்திட்டிருந்தியாம்ல? அவேம் இனி ஒரு அஞ்சு மாசத்துக்கு என்னச்செய்யப்போறானாம்?” என்று வளவன் கேலி செய்ய,


“ஏம்லே மக்கா.. ஏம்புள்ள ஒன் வூட்டுக்கு அவேம் பொண்டாட்டிய பாக்கேம்னு வந்தா வுடமாட்டியா?” என்று மகனுக்கு ஆதரவாய் பேசினார்.


“ஊருக்குள்ள ஒங்களப்போல நாலு மாமியா இருந்துட்டா போதும் அத்தே. லைஃபு ஸ்மூத்தா போவும்” என்று அவன் சிரிக்க,


“இப்புடியே நாலு டயலாக்கு கூட போட்டு நீயு பேசினா ஓம்பாத ஸ்மூத்தா போவாதுடி மாப்ள. அங்கன ஒங்கம்மையு ஒன்னயத்தேம் லுக்கிடுது” என்று மகா கூறினான்.


அதில் அனைவரும் கலகலவென்று சிரிக்க,


“ஏம் அத்தான் இப்பத என்னய கோத்துடுதீய? நானே நாவுண்டு எம்பொஞ்சாதியுண்டுனு இருக்கேம்” என்று கூறினான்.


“அப்பக்கூட பொஞ்சாதிய வுட்டுக்குடுக்காம புடிச்சுக்குறியாம் பாரு” என்று விக்ரமன் கூற,


“அம்புட்டு லவ்ஸுல?” என்று வளவன் கூறினான்.


“இஞ்சாருலே.. நீயு ரொம்ப ஓட்டுத. அடுத்த அஞ்சு மாசத்துக்கு வூட்டுப்பக்கமே ஒன்னயே சேத்துகிட மாட்டேம் ஓடு” என்று வளவன் கூற,


“அய்யோ மாப்ள.. நாம்போயி ஒன்னய ஓட்டவனா? லேய் சும்மாருலே. அண்ணே மிண்டாதிருவ. பய பாவம்ல?” என்று அப்படியே அவன் பக்கமாய் வடிவேல் தாவினான்.


இங்கே தனத்தை சூழ்ந்திருந்த பெண்களும் அவளை வெட்கப்பட வைக்கின்றேன் என்று கேலி செய்ய, ‘வெட்கமா? எனக்கா? நெவர்!’ என்றபடி சிரித்துக் கொண்டிருந்தாள்.


“ஓம் ஆளவுட்டுபுட்டு வந்திருப்பியா புள்ள?” என்று கார்த்திகா கேட்க,


“என்ன மைணி? வராதங்கீயளோ? என்னய வச்சு பத்தியம் செய்ய மாட்டீயளாக்கும்?” என்று தனம் கேட்டாள்.


“ஆத்தே அனக்கத்தக்காட்டாதட்டி. ஒங்கம்மையு காதுல வுழுந்தா எம்புள்ளைய நீயென்னட்டி வரவேண்டாமுங்குறதுனு ஆஞ்சுடுவாவ” என்று கார்த்தி பதற,


“அதெல்லாம் இல்ல மைணி. அடுத்த எட்டு மாசத்துக்கு அந்தூட்டுல நீங்க ராணிதேம்” என்று சிரித்த தனம், “ஏட்டி மைணி.. நீயென்னத்தக் கல்லுபோல ஒக்காந்திருக்கவ? நீயும் ராணிதேம்.. என்ன எங்கம்மைக்கு தெரியில” என்று கூறினாள்.


அதில் மித்ரா மெல்ல புன்னகைக்க, ரகசியம் போல் அவளை நெருங்கி, “பேசாட்டு நீயும் ப்ரமோஷன் வாங்கிக்கிடு. எங்கம்மையு ராணியாட்டம் பாத்துபுடும்” என்று கேலியாய் கூற,


“தனம்..” என்று தீபிகா அதட்டினாள்.


தனம் விளையாட்டாய் ஏதும் பேசி அது சங்கமித்ராவை வருத்தி விடுமோ என்றே தீபிகா கண்டித்தது. அது புரிந்து அவள் கரம் பற்றி இடவலமாய் தலையசைத்து புன்னகைத்த மித்ரா, ‘தனமா என்னை ஹர்ட் பண்ணி பேசப்போறா? அதெல்லாம் ஒன்னுமில்ல' என்று சைகை செய்ய,


ஓரளவு அதை புரிந்துக் கொண்ட தீபிகா, அவள் கன்னம் தட்டி, “எல்லாம் அது அது நடக்கும்போது ஒனக்கும் நடக்குந்த்தா. நீயு இவிய பேச்சவுடு. வா. நம்ம வளையத்தட்டத் தூக்கிட்டு வருவம்” என்று அவளை அழைத்துச் சென்றாள்.


சரியாய் இவ்வாக்கியம் மட்டும் தெய்வா காதில் விழுந்துவிட, ‘எல்லாம் அது அது நடக்குந்த்தா’ என்று தீபிகா கூறியதன் நோக்கத்தைத் தவராக புரிந்து கொண்டார்.


சங்கமித்ரா தன் மகள் கருவுற்றிருப்பதைக் கண்டு ஏக்கம் கொண்டதாகவும், அதற்காக தீபிகா ஆறுதல் கூறியதாகவும் தவராய் நினைத்துக் கொண்டவரால் அந்த ஆற்றாமையைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. நல்லதொரு நிகழ்வு நடக்கயில் சண்டையேதும் போட்டுவிடவும் கூடதென்று தன்னைக் கட்டுப்படுத்தியவர், ‘ஆத்தா மகமாயி, அப்பனே முருகா.. இந்த புள்ள ஏக்கம் ஏம்புள்ளைய பாதிச்சுடக்கூடாதுய்யா' என்று வேண்டிக் கொண்டு வேலையைத் தொடர்ந்தார்.


வளைபூட்டு இனிதே துவங்கிட, அனைவரும் வந்து அவளுக்கு சந்தனம் பூசி, வளைபூட்டி மகிழ்ந்தனர். வடிவேலும் வந்து தன்னவளுக்கு சந்தனம் பூசி, வளைகள் அடுக்கி அவள் கரம் பற்றி குளுக்க,


“அடடே.. மச்சான் காதல் மோடுக்குப் போயிட்டியாம்லே” என்று விக்ரம் கத்தி கோஷமெழுப்பினான்.


சின்னச் செல்ல ஆர்ப்பாட்டங்களுடன் வளைப்பூட்டு முடிய, தனலட்சுமியைப் பிறந்தகம் கூட்டிச் சென்றனர்.


“இஞ்சாருய்யா.. எம்பொஞ்சாதி ஊருக்குப்போயிட்டானு திரியாத. இந்ததேம் வூடு. நெதம் ஒருமொறயாது வந்தனாதேம் ஓம்புள்ளைக்கு சோறு போடுவேம் ஆமா” என்று செல்லமாய் அவனை மிரட்டிவிட்டே சென்றாள்.


அனைவரும் வீட்டை வந்து அடைய, அவரவர் அறைக்கு சென்று இளைப்பாற உறங்கினர்.


மாலை நேரம்... பால்கனி ஊஞ்சலில் அமர்ந்துகொண்டிருந்த சங்கமித்ரா கையில் அந்த டேப் ரெகார்டர்… அதனை மிக பத்திரமாய், பாதுகாப்பாய் பற்றியிருந்த சங்கமித்ராவின் விழிகளில் நீர் தளும்பி நின்றுகொண்டிருந்தது.


அந்த கருவியைத் தன் நுனிவிரலில் வருடியவள் கண்களில் தளும்பி நின்ற நீர்மணிகள் கன்னம் தீண்டி கழுத்தடியில் தஞ்சம் புகுந்தது.


மெல்ல அதிலுள்ள ஒரு பொத்தானை அவள் அழுத்த, அவளது சொந்தக் குரலில், 'சித்திரமே செந்தேன் மழையே' என்ற பாடல் ஓடியது.


பாடலில் கேட்கப்பட்ட அவள் குரல் இன்னும் இன்னும் அவளைக் கலங்க வைத்தது. தொண்டையை முட்டிக் கொண்டு வந்த ஏதோ ஒன்று தடைபட்டு தவிப்பதாய் உணர்ந்தாள்.


அருகிலிருக்கும் மேஜையில் அந்த கருவியை வைத்தவள் ஊஞ்சலில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.


அவள் அசைவின் இசைவிக்கு ஆடிக் கொண்டிருந்த ஊஞ்சல், அதன் அசைவை நிறுத்த, அவன் வாசம் அவள் நுரையீரல் எங்கும் நிறைந்தது.


கண்களை ஒருமுறை இறுக மூடிக் கொண்டு மீண்டும் விழி மலர்ந்தாள்.


அவள் முன் உணர்வுகளை வெளிகாட்டாத அவன் முகம்.


அவளை சுண்டி இழுத்து எழச் செய்தவன் தான் அந்த ஊஞ்சலில் அமர்ந்து அவளைத் தன் மடியில் அமர்த்திக் கொள்ள, எந்த எதிர்ப்புமின்றி அவன் மார்பில் தலைசாய்ந்தாள்.


சில நிமிடங்களில் அவளது விசும்பல் ஒலியை கேட்க இயன்றது அவனால். சமீபமாய் அவளிடமிருந்து ஒலி என்று வருவது அதுவொன்று தானே?


"மித்ரா" என்று அழுத்தமாய் அழைத்தவன், “என்னத்துக்குட்டி இப்பத சொல்லாம கொள்ளாம வந்து ஒக்காந்து அழுதுட்டு இருக்க?” என்று கேட்ட நொடி அவனை வெகு இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.


அவள் பின்னந்தலையில் தன் உள்ளங்கை வைத்து அழுத்தம் கொடுத்தவன், "அழுவாதடி. என்னதும்னா சொல்லுட்டி எங்கிட்ட. என்னம்னு கேக்கேம்ல?" என்க,


அவனை வேதனையோடு பார்த்தாள்.


எப்போதும் போல் அவள் முகத்தை தன் கரங்களில் பொத்திக் கொண்டவன், அவள் இதழ்களில் ஆழப் புதைந்தான்.


கண்ணீரோடு அவன் இதழ் சஞ்சரம் ஏற்றவள், அவன் விடுவித்த நொடி, அவன் கழுத்தடியில் தன் முகம் புதைத்துக் கொண்டாள்.


"மித்ரா" என்று தற்போது கண்டனமாய் அவன் குரல் ஒலிக்க,

அவனை நிமிர்ந்து பார்த்தவள் தன் தொண்டையை வருடிக் கொள்ள, அவள் கரத்தோடு தன் கரம் கோர்த்துக் கொண்டு, இடவலமாய் தலையசைத்தான்.


அவள் வேதனை அவன் கண்களில் கண்ணாடி காட்டும் பிம்பமாய் ஒளிர்வதை உணர்ந்து நூறாய் சிதைந்து நொருங்கித்தான் போனாள். அதில் பெரும் விசும்பலுடன் அவன் நெஞ்சில் புதைத்தவள் அவன் பனியனை இறுக்கிக் கொண்டு வெதும்பினாள்.


கோபமும் ஆற்றமையும் அவளிடம்... ஆனால் வெளிப்படுத்த இயலவில்லையே? அது இன்னும் கோபத்தைக் கொடுக்க, அவையாவும் கண்ணீராய் உருமாறி அவன் இதயத்தில் தடம்மாறி அக்னிக் கங்குகளாய் விழுந்தது. அவளிட்ட பாசனம் அவனை பொசுக்கியது…


எதற்கு இந்த அழுகை என்று காரணம் புரியாதவன், “ஆரும் என்னமும் சொன்னாவளாடி?” என்று பயம் கலந்தக் குரலில் கேட்க,


இடவலமாய் தலையசைத்தாள்.


தன் தொண்டையை வருடிக் காட்டி, 'இல்லயா?' என்று அவள் சைகை செய்ய,


"சரியாயிடும்டா. இப்பத்தான சிகிச்ச எடுக்க ஆரமிச்சுருக்கம்?" என்று அவள் தலைகோதியபடி கூறினான்.


'எப்ப?' என்பதைப்போல் அவனைப் பார்த்தாள்.


"சீக்கிரமே" என்று அவன் கூற,


'பயமாருக்கு' என்ற சொல்லை எந்த சைகையில் அவனிடம் விளக்கிடவென்று தெரியவில்லை அவளுக்கு.


கண்ணீர் கண்களிலிருந்து கொப்பளித்துக் கொண்டு வர, 'பேசவே முடியாதா?' என்று சைகை செய்தாள்.


"முடியும்டா. டாக்டர் சொல்றாவ தானே?" என்று அவன் கேட்க,


வேதனையோடு அவனைப் பார்த்தாள்.


நிமிடங்கள் கரைய, அவள் அவன் உள் சட்டையை இறுக்கிப் பிடித்துக் கசக்குவதும் விடுவதுமாய் இருந்தாள்.


அவள் நிலைபுரிந்து, திசை திருப்ப எண்ணியவன், அவளை அப்படியே அள்ளிக் கொண்டு அறைக்குள் சென்று, மஞ்சத்திலிட்டு அவளோடு தானும் படுத்தான்.


தொன்றுதொட்டத் தீண்டலின் துளிகள் பெருவெள்ளமாய் உருமாறி, இருவரையும் ஆர்பரித்த மோகத்தின் கடலுக்குள் சிரத்தையுடன் இழுத்துக் கொள்ள, அவள் வேதனைகளுக்குத் தன் ஆலாபனைகளால் மருந்தளித்தான்.


துவக்கம் அவனானபோதும் தொடர்கதை அவளால் நிகழ்த்தப்பட, கண்களில் கண்ணீர் பெருகியோட, அவனை இருக அணைத்துக் கொண்டு முத்தங்களை கணக்கற்று வழங்கினாள். 


சோர்வை மீறிய வேகத்தை அவளிடம் உணர்ந்தவனுக்கு அப்படியொரு வேதனை பிறப்பெடுத்தது. 'வுட்டுட்டு ஓடவாடி போறேம்?’ என்று வேதனையோடு நினைத்துக் கொண்டான்.


அவள் தன் சோர்வை மீறி, வேதனையின் வேகத்துக்கு இணையாய் பயணிக்கவும், அவளைத் தன்னிடமிருந்து பிரித்து முகம் பார்த்தவன், "ஏன்டி?" என்க, அவளுக்கு பதில் சொல்ல இயலவில்லை.


"சரியாபோவுமுனு சொல்லுதேம்ல? எம்மேல நம்பிக்கையில்லியா?" என்று அவன் கேட்க,


வழியும் கண்ணீரைத் துடைத்தபடியே, 'சரியாகலைனா?' என்று கைகள் நடுநடுங்க சைகை செய்தாள்.


"ஆவாட்டினா என்ன? குடியா போச்சு? கொரலு தான? எம்மித்ராக்கும் எனக்குமான தொடர்ப இந்தக் கொரலுதேம் அமைச்சு கொடுக்கோனுமுனு இல்ல. கொரலுக்கு மயங்குறதுக்கு முன்னுக்கவே ஓங் கடிதத்துக்கு மயங்கினவேம்டி. அது சொல்லாத ஓன் உணர்வயா நீயு பேசி எனக்கு வெளக்கிடப் போத? நீயும் வெசனப்பட்டு என்னையும் நோவடிக்காதடி" என்றபடி அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, அவளுக்குப் போர்த்திவிட்டு எழுந்து குளியலறை சென்றான்.


எப்படி உணரவேண்டும் என்றுகூட புரியாத நிலையில் அப்படியே படுத்திருந்தவள், சோர்வின் மிகுதியில் ஒரு முடிவை எடுத்தவளாய் கண்ணயர்ந்தாள்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02