திருப்பம்-97
திருப்பம்-97
அவிநாஷ் வீட்டு மொட்டை மாடியில் அந்தி வானை வெறித்தபடியே நின்றுகொண்டிருந்தாள் சங்கமித்ரா.
இத்தோடு அவள் இங்கு வந்து மூன்று நாட்கள் ஆகிறது. மூன்று நாட்கள் முன்பு காலை உடைமாற்றி வந்த வளவன் முன் சென்று பெண்ணவள் நிற்க,
அழகிய புன்னகையுடன் அவளைப் பார்த்தவன், “குளிக்கப் போதியா மித்ரா? காபி குடிச்சுட்டுப் போறியா?” என்று கேட்டான்.
சிறு தயக்கத்துடன் அவனை அணைத்துக் கொண்டவள், தன்னைப் புரியாத பார்வை பார்ப்பவனைப் பார்த்து, மேஜையைக் கண் காட்டினாள்.
மேஜையை நோக்கியவன், அவள் கடிதம் வைத்திருப்பதைக் கண்டு புருவம் சுருக்கி அதை எடுத்துக் கொள்ள, பெரும் தயக்கத்துடன் நின்று கொண்டாள்.
'அன்புள்ள திருமாலுக்கு,
உங்க மித்ராவை நீங்க புரிஞ்சுப்பீங்க தானே?’ என்று வாசித்தவன் அவளைக் குழப்பமாய் நோக்க, அவள் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
'எனக்கு என்னவோ போல இருக்கு. கொஞ்ச நாளாவே.. எப்படி சொல்லனு தெரியலை. ரெஸ்ட்லெஸ்ஸா … ஒருமாதிரியா இருக்கு. என்னால இந்த உணர்வுலருந்து வெளிய வர முடியலை. முயற்சி செய்றேன்… ஆனா முடியல.. எ..எனக்கு இடம் மாற்றம் வேணும்' என்று வாசித்தவன் புருவங்கள் முடிச்சிட்டது.
'நான் கொஞ்ச நாள் அத்தான் வீட்டுக்குப் போயிட்டு வரவா ப்ளீஸ்? நீங்க சரி சொன்னா அத்தான்கிட்ட பேசுவேன். ஈவ்னிங் நீங்க வேலைக்குப் போயிட்டு வந்த பிறகுகூட கூட்டிட்டுப் போய் விடுங்க. ப்ளீஸ்' என்று வாசித்தவன் அவளை நோக்க,
அவன் கண் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள்.
'இளைப்பாற வேண்டும், ஓய்வெடுக்க வேண்டும் என்றாலும் கூட அவள் தன் பெற்றோர் வீட்டிற்குற்குத்தான் சென்றிருப்பாள். அவிநாஷ் வீட்டிற்கு செல்ல நினைக்கின்றாள் எனில், அவள் எதிர்ப்பார்ப்பது மன நிம்மதியை! எனில் தன்னுடன், தன் வீட்டில் அவளுக்கு அம்மனநிம்மதி கிடைக்கவில்லை… நொடியில் அவள் கடிதம் தாங்கிய சொற்களில் அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டவன், அவளை நெருங்க, மெல்ல தயங்கித் தயங்கி நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் விழிகளில் அப்பட்டமான வலி.
அவ்வலி தாக்கி அவள் தடுமாறி நிற்க,
அவள் கன்னங்களைத் தன் கரங்களில் பொத்திக் கொண்டவன் அவள் இதழோடு இதழ் பதிக்க, அமைதியாய் அதை ஏற்றவள் கண்ணோரம் கண்ணீர் வழிந்தது.
அவளை விடுவித்தவன், “அண்ணேன்ட பேசிட்டு சொல்லு. கொண்டோயி விடுதேம்” எனக் கூறிக் கீழே சென்றுவிட, அப்படியே மடிந்தமர்ந்திட்டவளுக்கு அப்படியொரு வலி. ஆனாலும் அதையெல்லாம் மீறி சில நினைவுகள் அவளைச் செல்லத் தூண்டிட, தன் அத்தானுக்கு அழைத்துவிட்டாள்.
விடயத்தை அவள் குறுஞ்செய்தியில் கூற, “வளவன்ட்ட பேசினியா பாப்பா?” என்று தான் முதலில் அவிநாஷ் கேட்டான்.
“அவங்கட்ட பேசாம கேட்க மாட்டேன் அத்தான். நான் அங்க வரலாம் தான?” என்று அவள் குறுஞ்செய்தி அனுப்ப,
“இது உன் வீடுடா. நீ இங்க வர பர்மிஷன் கேட்பியா?” எனக் கூறி வரவேற்றான்.
ஆனால் அவளை வளவன் விட்டுச் சென்ற போது பேசிக்கொள்ளாத இருவரின் விழிகள் காட்டிய வேதனையே அவிநாஷுக்கு ஏதோ பிசகு என்பதை உணர்த்தியது.
உடனே வளவனுக்கு அவன் அழைத்துவிட, “என்னனு கேக்காதீயண்ணே. சாமி சத்தியத்துக்கும் எனக்குத் தெரியாது. எம்பொண்டாட்டி நிம்மதியத்தேடி வந்துருக்கா. நல்லா பாத்துகிடுவ” என்றதோடு முடித்துக் கொண்டான்.
அனைத்து நினைவுகளையும் ஓட்டிப் பார்த்தவள் செவிகளில் அன்று தெய்வாவும் திரிபுராவும் பேசிக் கொண்டவை ஒலித்தது.
வளைகாப்பு முடிந்து வீட்டிற்கு வந்த அனைவரும் இளைப்பாற அறைக்கு சென்றிருக்க, தானும் சென்று உறங்கியெழுந்த சங்கமித்ரா, பசியாக உணர்ந்ததில் கீழே சென்றாள்.
அவள் நேரமோ என்னவோ? அவளைப் பற்றி பிறர் பேசும் தவரான கருத்துக்களை அவளே கேட்கும்படியாகத்தான் கடவுள் சூழலை படைக்கின்றார்.
“ஏம்மா கரிக்குத இப்போ?” என்று திரிபுரா கேட்க,
“வேற என்னம்லே என்னால செய்ய முடியும்? எம்புள்ள வளகாப்பு செறப்பா நடத்தி கண்ணுங்கருத்துமா கூட்டியாரப்பாத்தா இப்புடி ஏக்கப்பார்வ பாத்து ஏம் வைத்துலதேம் இவோ நெறப்பள்ளி கொட்டுத்தாளே?” என்று தெய்வா கூறினார்.
“என்னம்மா சொல்லுத? யாரு அப்புடி பாத்தாவ?” என்று திரிபுரா அதிர்வாய் கேட்க,
“எல்லாம் ஓந்தம்பி கட்டிவந்தவதேம்டி” என்று முந்தானையில் தன் கண்ணீர் துடைத்தார்.
“யாரு சங்கா?” என்று இவள் கேட்க,
“ஆமாடியம்மா.. அவோதேம். எனக்கு நல்ல கதகதனுதேம் வருது. அந்த பக்கட்டுப் போறேம், ஓந்தங்கச்சி தீபியா அவள மடில போட்டு சீராட்டிகிட்டு இருக்கா. அவளுக்குந்தேம் கூறு வேணாம்?” என்று தெய்வா கேட்டார்.
“என்னம்மா எகன மொகனயா பேசுத? தெளுவா சொல்லு” என்று திரிபுரா கூற,
“என்னத்தட்டி சொல்ல? ஓந்தம்பி பொஞ்சாதி ஓந்தங்கச்சிய ஏக்கமா பாத்துருக்குதா. இந்த தீபி அதெல்லாம் ஆண்டவனுக்குத் தெரியும், ஒனக்கும் புள்ள உண்டாவும் வெசனப்படாதனு ஆறுதலு சொல்லி அனுப்பிருக்கா. எங்காதால நானுந்தேம் கேட்டுத் தொலச்சுட்டனே? வயிறெல்லாம் காந்துதுடி எனக்கு” என்று தெய்வா கண்ணீரோடு கூறினார்.
இங்கே அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளிலும் உள்ளுக்குள் நூறாய் ஆயிரமாய் உடைந்த சங்கமித்ரா கண்களிலிருந்து மொனமாய் கண்ணீர் வழிந்தது.
“என்னம்மா சொல்லுத நீயு? சும்மாவா விட்ட அவோள? எங்கிட்ட சொல்லுறதுக்கென்னங்கேம்?” என்று திரிபுரா கோபமாய் கூற,
“என்னத்தடி சொல்லச் சொல்லுற? விசேஷத்தக் களவரப்பட்டுப்போவ வைக்கவா?” என்று கேட்டார்.
தானும் திருமணம் முடிந்து பல வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்து, பலரிடம் பேச்சு வாங்கியுள்ளோம் என்பதையும், அப்படியான பேச்சுக்கள் எத்தனை வலி மிகுந்தது என்பதையும் திரிபுரா வசதியாய் மறந்துபோனாள் போலும்.
“அதுக்காவ சும்மாடுறதாம்மா?” என்று திரிபுரா கேட்க,
“என்னத்தட்டி பண்ண சொல்றா? இவள எதயாது பேசினா கரிச்சுபுடுவா. அப்றம் எம்புள்ள நாந்தேம் அவள கொடுமபடுத்துறேம் கொல்லப்பாக்கேம்பான். இந்தூட்டுல அவள பேச நாயாரு? போடிபோ” என்று அழுதபடி அவர் கண்ணீர் துடைத்தார்.
அதற்குமேல் தாள இயலாது சங்கமித்ரா விறுவிறுவென மேலே செல்ல,
அவள் பாத சுவடின் ஓசை கேட்டு எட்டிப் பார்த்தவர்கள் பார்வை, அவர்கள் கண்ணிலிருந்து மறையும் நொடி அவளைக் காட்சிப் படுத்தியது.
“ஆத்தே.. அவளாடி? கேட்டிருப்பாளோ?” என்று தெய்வா பதற,
“அதெல்லாங் கேட்டுருந்தா இந்நேரத்துக்கு வந்து அழுது ஆடிருப்பாமா. நீ வுடு” என்று அன்னையை சமாதானம் செய்திருந்தாள்.
“பாப்பா..” என்ற குரல் கேட்க,
நினைவுகளிலிருந்து மீண்டவள், மெல்ல திரும்பினாள்.
அவள் அருகே வந்து நின்ற அவிநாஷ், “தம்பி பேசினானா?” என்று கேட்க,
அவள் அமைதியாய் வானத்தை நோக்கினாள்.
அவளை ஆழ்ந்து பார்த்த அவிநாஷ், தனது சட்டை பையிலிருந்து ஒரு கடித உறையை நீட்ட,
சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
முருகனும் வள்ளியும் மாலை மாற்றிக் கொள்ளும் வரைபடம் அதில் இருக்க, அவிநாஷை ஆச்சரியமாய் பார்த்தாள்.
மூன்று நாட்களாய் அவனும் அழைக்கவில்லை, அவளும் அழைக்கவில்லை.
அவனிடம் பேசவேண்டாம் என்று அவள் புறக்கணிக்கவில்லை, ஆனால் அவனை காயப்படுத்திவிட்ட வலியில் இருப்பதால், அவனிடம் பேசிடும் சில நிமிடங்களில் மீண்டும் அவ்வீட்டிற்கு சென்று விடுவோமோ என்றும் அஞ்சினாள்.
இனி செல்லவே போகப்போவதில்லை என்று இல்லை. ஆனால் தற்போது சென்றால் தனது மனநிலை முற்றுமாய் கெட்டுப் போகுமென்று அஞ்சினாள். தெய்வா கூறியதைப்போல் தன்னால் தனத்திற்கோ, கார்த்திகாவிற்கோ ஏதும் ஆகிவிடுமோ என்ற பைத்தியக்கார எண்ணமெல்லாம் அவளுக்குத் துளியுமில்லை. தான், தனது மனநிலை, தன்னால் நிம்மதி பெறும் தன்னவன், தன்னால் வதைபட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் மட்டுமே அவளிடம்.
தன்னை தேற்றுவதாய் கூறிக் கொண்டு அவனிடமிருந்து வந்து இன்னும் தன்னைத்தானே வதைபடுத்திக் கொள்வதை அவள் அறியாது போனதே இங்கு பரிதாபம்…
கண்களில் நீர் திரண்டு, கைகள் நடுங்க அவள் அதை வாங்க, அவள் முகம் பார்த்தபடி மார்பிற்குக் குறுக்கே தன் கரங்களைக் கட்டிக் கொண்டு அவிநாஷ் நின்றான்.
'அன்புள்ள மித்துக்கு,
எப்புடி மித்ரா இருக்க? மூனு நாளா கூப்பிடலுனு நெனக்கியோ? காரணஞ்சொல்ல மாட்டேம். ஒனக்கே தெரியும்' என்று படித்தவள் இதழ் வேதனையாய் ஒரு புன்னகை சிந்தியது.
அவன் தன் வலியிலிருந்து மீள அவனுக்கும் அவகாசம் வேண்டுமே!
'நல்லா உங்குதியா நீயு? டாக்டரு சொன்னதெல்லாஞ் சரியா செய்யுறதான? என்னமாது போட்டு மண்டக்குள்ளார உருட்டிகிட்டு இருக்காது உங்கி ஒறங்கு. நிம்மதியாக்குறேம்முனு போயிட்டு என்னமாது ரோசிச்சு கூட இம்முட்டு இழுத்து வச்சுகிடாத மித்ரா. நல்லா தூங்கி எழு. ஓம்மனச என்ன படுத்துதுனு தெரியிலத்தா. என்னமாதுனா சொல்லு. முடியாட்டினா எங்கனயாது அத தூக்கி வீசிட்டு ஓம் வேலையைப்பாரு. ஓந்திருமாலு ஒனக்காவ எப்பமும் இருப்பேம்ன?’ என்பதோடு அக்கடிதம் முடிந்திருக்க, விசும்பியபடி அப்படியே அமர்ந்து கொண்டாள்.
“ஏ பாப்பா” என்று தானும் அவள் அருகே அவிநாஷ் அமர,
அவன் புஜத்தைக் கட்டிக் கொண்டு தோளில் சாய்ந்தவள் தேம்பி அழுதாள்.
“ஏன்டா பாப்பா? என்னமா கண்ணா? ஏதுக்குடா இந்த அழுகை?” என்று அவன் கேட்க, அவளிடம் பதிலில்லை.
“தம்பிக்கூட சண்டையா?” என்று அவன் கேட்க,
பதறி நிமிர்ந்தவள் வேகமாய் இல்லையென்று தலையசைத்தாள்.
“பிறகு என்னடா?” என்று அவன் கேட்க,
'எனக்கும் அவருக்கும் சண்டையெல்லாம் இல்லை அத்தான். எனக்கு மனசே சரியில்லை. ரொம்ப பாரமா இருக்கு' என்று நடுநடுங்கும் கரத்துடன் சைகை செய்தாள்.
“ஏதோ பாரமா இருக்குன்னா அங்க எதோ வேண்டாததை நீ ஏத்தி வச்சிருக்கனு அர்த்தம்” என்று அவிநாஷ் கூற,
அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
மறுக்க இயலவில்லை.. பகிரவும் முடியவில்லை. ஏதோ அவளைத் தடுத்தது. முரண்டியது என்றாலும் மிகையில்லை.
“உன்னால சொல்ல முடியலைனு புரியுதுடா பாப்பா. மனசுக்குள்ள போட்டு அழுத்துறதை வெளிய கொட்டிட்டா பாரம் தீரும். அதை புரிஞ்சுக்கோ. வளவன்கிட்ட பேசினா நீ சரியாயிடுவனுதான் எனக்குப் படுது. இப்ப உன்னால உன் நெறுடலை மீறி பேச முடியலைனா விஷயத்தை ஆரப்போடு. அதையே யோசிச்சு யோசிச்சு மனசை போட்டு உலட்டிக்காத” என்று அவிநாஷ் கூற,
அமைதியாய் அவன் தோளில் கரைத்தாள்.
கண்ணீர் தீரவில்லை, ஆனால் ஏனோ அவிநாஷ் பேசியது கொஞ்சம் இதமாக இருந்தது.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் ஏதோ சைகை செய்ய அது அவிநாஷுக்குப் புரியவில்லை.
தனது அலைபேசியை எடுத்தவள் அதில், ‘இப்படியே என்னமாது பேசுங்க அத்தான். இதமா இருக்கு' என்று தட்டச்சு செய்து காட்ட, அவிநாஷுக்கே என்னவோ போலானது.
சோகத்தை மறைத்துக் கொண்டு அவளைத் தோளில் சாய்ந்துக் கொண்டவன் தட்டிக் கொடுத்தபடியே ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தான்.
“குட்டிமா செம்ம வாலுடா. அன்னிக்கு உங்கக்காவை கொஞ்சிட்டேனாம். பாத்துட்டு என்ன கத்து கத்துறாங்குற?” என்று அவிநாஷ் பேச, அதில் தன்னை மறந்து சிரித்தாள்.
அங்கு வந்த சங்கீதா தன் தங்கையின் சிரிப்பை வாஞ்சையுடன் பார்த்தாள். அவள் இங்கு வரும்போது இருந்த சோகத்திற்கும் தற்போது சிரிதளவேனும் தெரியும் சிரிப்பிற்கும் ஒப்புமைப்படுத்தி உவகைக் கொண்டது அக்காள் மனம்.
அதை எண்ணி மகிழ்ந்தவளாய் அங்கே வந்தவள், “அடியே.. எந்திரிடி. விட்டா அவர் மடில ஏறி உக்காந்துப்ப போல?” என்று கோபம் போல் கூற,
அக்காவை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள் அவிநாஷ் கரத்தை இன்னும் கட்டிக் கொண்டாள்.
“ஏய்.. என்ன நான் சொல்றேன் நீ இன்னும் அவர கட்டிக்குற? தள்ளிபோடி” என்று கூறியவளாய் அவள் தங்கையை இழுக்க,
அக்காவை இன்னும் முறைத்தவள் சிணுங்களாய் தன் அத்தானைப் பார்த்தாள்.
“கீதாம்மா… விடுடா.. நம்ம பாப்பா தானே?” என்று அவிநாஷ் கூற,
“நம்ம பாப்பானா? விட்டுக்குடுக்கனுமா? அதெல்லாம் முடியாது” என்று சங்கீதா கூற,
முறைத்தபடியே தனது அலைபேசியில், ‘என் அத்தான்.. எப்பவுமே நான் அவரோட பாப்பா தான். நீ முறைச்சாலும் சரி அடிச்சாலும் சரி' என்று தட்டச்சு செய்தாள்.
அதை பார்த்தவள், “எல்லாம் நீங்க குடுக்குற செல்லம். என்ன பேச்சு பேசுறா பாருங்க” என்று கீதா அலைபேசியைக் காட்டினாள்.
அதைப் பார்த்து சிரித்தவன், “பாப்பாடி அவ. விளையாடாத” என்க,
கீழே அவளது மாமியார், “சங்கிமா.. பாப்பா தேடுறா” என்று அழைத்தார்.
“ம்க்கும்.. தேட மட்டும் அம்மா வேணும் உங்க பொண்ணுக்கு. ஆனா அம்மா சொல்லுனு சொன்னா ப்பா ப்பாங்க வேண்டியது” என்று சங்கீதா அழுத்துக் கொள்ள அதில் சிரித்த சங்கமித்ரா, ‘இரு நான் போய் பாக்குறேன்’ எனச் சென்றாள்.
தானும் எழுந்து நின்ற அவிநாஷ், செல்லும் தன் தங்கையையே பார்த்து நிற்கும் மனைவியை இழுத்துத் தன் கரங்களுக்குள் சிறை வைக்க, “தேங்ஸ்” என்றாள்.
அவளைத் தீயாய் முறைத்தவன், “எம்புள்ளையா நெனக்குறேன்டி.. தேங்ஸ் எல்லாம் சொல்லி எனக்கும் அவளுக்குமான உறவ இல்லனு ஆக்கிடாத” என்று கண்டிப்பாய் கூறினான்.
“உண்மைய சொல்லட்டுமா? நீங்க அவளுக்கு அப்பாக்கும் மேல. எங்கப்பாகூட அவளை இந்த அளவுக்கு புரிஞ்சு நடந்துகிட்டதில்லை. ஆனா நீங்க அப்படியில்லை. கூட பிறந்தவ என்னாலகூட கண்டுபிடிக்க முடியாத அவ உணர்வ நீங்க புரிஞ்சுப்பீங்க. என் புள்ள என் புள்ளனு சும்மா சொல்லலை. அதை உணர்த்துறீங்க. அவ பேருக்குதான் கோ-எட்ல படிச்சா. பசங்கட்ட ஆனா ஆவன்னா கூட பேசி பழக்கப்படலை. ஏன்டி யாருட்டயும் பேச மாட்டேங்குறனு கேட்டாகூட அவங்களை குறை சொல்லலை சங்கி, எனக்கு கம்ஃபோர்டா இல்லைனு சொல்றவ அவ. ஆனா அவளோட கம்ஃபோர்ட் ஜோன் குள்ள நுழைஞ்சு, அவளை அவ கம்ஃபோர்ட் ஜோனுக்கு வெளியவும் எப்படி வாழனும்னு கத்துக்கொடுத்தவர் நீங்க. எனக்கு ரொம்ப பெருமையா இருக்குங்க. என் பிள்ளை.. ம்ஹும்.. என் பிள்ளைங்க ரெண்டும் ரொம்ப நல்ல அப்பாகிட்ட வளரும்” என்று மனமார, நெகிழ்வாய் சங்கீதா கூற, இதைவிட வேறென்ன வேண்டுமென்று தோன்றிவிடும் அவனுக்கு?
அவளை இறுக அணைத்துக் கொண்டு நெற்றியில் இதழ் பதித்தவன், “லவ் யூடி கீதா. எல்லாம் நீ எனக்குக் கொண்டுவந்த உறவுதான்டி. நீ இல்லாமலா?” என்று கூற,
“யூ டிசர்வ் இட் பா” என்றபடி தானும் அவனை அணைத்துக் கொண்டாள்.
Comments
Post a Comment