திருப்பம்-98
திருப்பம்-98
அன்றைய இரவு அனைவரும் உணவு உண்டு முடிக்க,
சங்கமித்ரா சமையலறையில் அவிநாஷின் தாய் பாமாவுக்கு உதவியபடியே அவருடன் சைகை மொழியில் பேசிக் கொண்டும் இருந்தாள்.
“நீயே ரெஸ்ட் எடுக்கனு வந்திருக்க? எதுக்குடாமா இதெல்லாம் பண்ணிட்டு இருக்க? போய் படுக்கலாம்ல?” என்று அவர் கூற,
'இருக்கட்டும் அத்தை' என்று சைகை செய்தபடி அவருக்கு உதவினாள்.
அவிநாஷ் அலைபேசி சிணுங்க,
'ரைட்டு' என்றபடி அலைபேசியை எடுத்தவன், சமையலறையில் சங்கமித்ரா அவன் தாயுடன் நிற்கும் காட்சியை புகைப்படம் எடுத்து, வளவனுக்கு புலனத்தில் அனுப்பி வைத்து, “சாப்டுட்டு அம்மாக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்காடா” என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.
“ஓகே அண்ணே. மருந்தெல்லாம் போட்டுட்டா தானே?” என்று அவன் செய்தி அனுப்ப,
“எல்லாம் ஆச்சுடா” என்றவன்,
“அவளுக்கு டெக்ஸ் பண்ணலாம்ல டா?” என்று கேட்டான்.
“வேணாம் அண்ணே. அவோளுக்கு பேச தோனுற வார தொந்தரவு செய்ய வேணாம்” என்று அவன் செய்தி அனுப்ப,
“அப்ப லெட்டர் மட்டும் கொடுக்கலாமா?” என்று கேட்டான்.
சிரிக்கும் முகங்களுடன், “அது வேற டீலிங்கு அண்ணே” என்று அவன் அனுப்ப,
“நல்ல டீலிங்குடா” என்றான்.
“அவ தூங்கிட்டா சொல்லுங்க. வரேன்” என்று அவன் அனுப்ப,
“வீட்டுக்கு வரியா?” என்று கேட்டான்.
“ஏம் அண்ணே? ஒங்க பாப்பாவத்தேம் கூட்டுப்பீயளா? நாங்கலாம் வரக்கூடதாக்கும்?” என்று வளவன் அனுப்ப,
“டேய்.. ஏன்டா?” என்றான்.
“படுக்க போறீயளோ? நேரமாச்சுதான வேணாமுன்னே. காலையில வாரேம்” என்று அவன் குறுஞ்செய்தி அனுப்ப,
அறைப்பக்கம் சென்ற சங்கமித்ரா கைதட்டி அவிநாஷை அழைத்து, ‘தூங்கப் போறேன் அத்தான். குட் நைட்' என்று சைகை செய்தாள்.
“குட் நைட் டா பாப்பா” என்று கூற,
தூங்க மறுத்து அடம்பிடிக்கும் சங்கவியை “நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு. காலையிலருந்து என்னை உஸ்ஸுனு உக்காரவிடலைபா. சத்தியமா முடியலை. எனக்குத் தூக்கம் வருது” என்று கொடுத்துவிட்டு சங்கீதா உள்ளே சென்றாள்.
'விதிகூட உனக்குத்தான்டா ஹெல்ப் பண்ணுது' என்று நினைத்த அவிநாஷ் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு தன்னையே தன் முட்டைக் கண்களால் முழித்துப் பார்க்கும் சங்கவியுடன் சுயமி எடுத்து வளவனுக்கு அனுப்பி, ‘ஸ்குவாட் வெயிட்டிங் டா ராசா. ஓம்பொண்டாட்டி தூங்க போயாச்சு. வா' என்று அனுப்பினான்.
சிரிக்கும் பொம்பைகளை அனுப்பிய வளவன் புறப்பட்டு வர,
“ஏன்டா தங்கம்.. ஓஞ்சித்தப்பன் சொல்லிக்குடுத்தானா?” என்று கேட்டு அவள் கன்னத்தைக் கடித்து வைத்தான்.
அதில் குழந்தை கிலுக்கிச் சிரித்து, “ப்பா.. ப்பா” என்க,
ஆசையோடு முத்தமிட்டு தோளில் போட்டுக் கொண்டு தட்டிக் கொடுத்தபடியே நடந்தான்.
சங்கவி போக்கு காட்டுவதெல்லாம் அவள் அம்மாவிடம் தான். அப்பா என்று வந்துவிட்டால் ‘கப்-சிப்’ என்று அடங்கிவிடுவாள். தந்தையின் தாலாட்டுக்கு மெல்ல மெல்ல குழந்தைத் தூங்கத் துவங்க,
வீட்டிற்கு வந்த வளவன் அவிநாஷுக்கு அழைத்தான்.
ஒலியணைப்பில் இருந்த அவனது அலைபேசி அதிர,
அதை எடுத்துப் பார்த்தவன் நேரே வாசல் கதவை வந்து திறந்து விட்டான்.
வெளியே காத்திருந்த வளவன், “அண்ணே மன்னிச்சுகிடுவ. வேல சோலினு அலஞ்சுட்டு வந்துருப்பீய.. சாரி அண்ணே” என்று உண்மையான வருத்தத்துடன் கூற,
“டேய்.. என்னடா? ரொம்ப பெரிய மறுஷனாயிட்டியோ?” என்று கண்டிப்பாய் கேட்டான்.
அவனிடமிருந்து குழந்தையை வாங்கித் தன் தோளில் போட்டுக் கொண்டவன், ரகசியக் குரலில், “இல்லையா பின்ன? இம்புட்டூண்டு புள்ளைக்கு அப்பனுல்ல?” என்று கூற,
அவனைத் திட்டக்கூட வரவில்லை அவிநாஷுக்கு.
அழகாய் புன்னகைத்தவன், “பாப்பா அப்பவே படுக்க போயாச்சு. தூங்கிருப்பா. போய் பாரு” என்று குழந்தையை அவிநாஷ் வாங்கிக் கொள்ள,
“ஒடம்பு வலிக்கப்போவுது புள்ளைக்கு. விரிப்புல படுக்கப்போடுவ” என்று கூறிவிட்டு அவள் அறைக்குள் சென்றான்.
பெண்ணவள் கட்டிலில் தலையணையை அணைத்தபடி படுத்திருக்க,
‘ஏம் எடத்தத் தலையணைக்குக் கொடுத்துட்டீயாக்கும்?’ என்றபடி அவள் காலடியிலேயே அமர்ந்துக் கொண்டான்.
அவள் பாதங்களைத் தன் மடியில் போட்டுக் கொண்டு இதமாய் அழுத்திக் கொடுத்தவன், ‘திருமாலுக்கு மித்துவப் புரியும்ல? சீக்கிரம் மனச தேத்திகிட்டு வாடி. நீயில்லாது அந்த அறையில தூக்கமும் வரல ஒரு மண்ணும் வரல' என்று மனதோடு பேசிக் கொண்டான்.
குனிந்து அவள் பாதத்தில் முத்தமிட்டவன், மெல்ல கட்டிலில் இறக்கிவிட்டு, தான் எழுதிக் கொண்டுவந்த கடிதத்தை மேஜையில் வைத்துவிட்டு வெளியே வந்தான்.
“அவ முழிச்சிருக்கும்போது வர என்னடா?” என்று அவிநாஷ் கேட்க,
“அவ தூங்குறானு நினைக்குறீயளா அண்ணே?” என்று கேட்டான்.
அவனை அதிர்வாய் பார்த்தவன், “தூங்கலையா?” என்க,
இடவலமாய் தலையசைத்தான்.
“அவ முழிச்சிருக்கயில வந்தா என்னைய பாத்ததும் பொட்டிய தூக்கிடுவாண்ணே.. ஏம்மித்துக்கு என்னய நோவடிக்க வராது. புருஷன தனியா அல்லாட விடுதோமோனு எங்கூட கெளம்பிடுவா. ஆனா எனக்கு அது வோணாமுன்னே.. அவளே அழச்சுக்கூட்டிப்போவச் சொல்லனும். இங்கன வரனும்முனு எங்கிட்டக்கக் கேட்டாதான? அதேபோல கூட்டிப்போவ வாரியளானு கேக்கனும். அப்பத வருவேம் அவோ முழிச்சிருக்கயில” என்று கூறியவன், “வாரேம் அண்ணே” என்று கூறிவிட்டுச் செல்ல,
செல்பவனை வருத்தமாய் பார்த்து நின்றான் அவிநாஷ்.
உள்ளே அறையில் படுத்துக் கொண்டிருந்த சங்கமித்ரா மெல்ல கண் திறக்க,
அவள் விழியிலிருந்து ஒற்றைத்துளிக் கண்ணீர் வழிந்தோடியது.
அங்கு நேரே மாட்டு கொட்டகைக்கு வந்தவன், “லேய் நந்தி..” என்று அழைக்க,
உள்ளிருந்து நந்தி வெளியே வந்தான்.
அவனைத் தட்டிக் கொடுத்த வளவன், “படுப்பமாலே?” என்று கொட்டாவின் திண்டில் அமர,
மாடும் அவன் தலைமாட்டின் அருகே சென்று படுத்தது.
அதனைத் தடவிக் கொடுத்தவன், “ஓம்மைணிகாரி வுட்டுப்புட்டு போயிட்டா பாரு. அவோ வார வர நீதேம்லே எனக்குத் தொண” என்க,
மாடு மூச்சுவிட்டு தலையசைத்தது.
மறுநாள் காலை கொட்டாவிலிருந்து விரைந்து எழுந்த வளவன் வீட்டை அடையவும்,
“என்னம்லே.. நைட்டு கொட்டாவுல படுத்துட்டியாம்?” என்று தெய்வா கேட்க,
“இங்கன தூக்கம் வரலயில்லம்மா? அதேம் கொட்டுக்குப் போயிட்டேம்” என்றான்.
“ஏம்லே தூக்கம் வரல ஒனக்கு? ராவும் பொழுதுமா அங்கன இரட்டுல போயி படுத்து பூச்சிவுட்டு இருந்தா என்னம்லே பண்ண?” என்று தெய்வா அதட்ட,
“அம்மோவ்.. சுத்த வெவரங்கெட்டவமோ நீயு” என்றபடி வந்த தனம், “அண்ணே.. நீயி மேல போண்ணே.. அம்மையோட கேள்விக்கெல்லாம் வெளக்க முடியாது” என்று அண்ணனை அனுப்பி வைத்தாள்.
“என்னத்தட்டி கேட்டுபுட்டேம்?” என்று தெய்வா அதட்ட,
“ஐயா இல்லாத ஒனக்கு வெரசா தூக்கவம் வந்துபுடுமா?” என்று கேட்டாள்.
அப்போதே அவருக்கு விடயம் புரிந்தது.
மகனை நோக்க, அவன் விடுவிடுவென்று படிகளில் ஏறிச் சென்றிருந்தான்.
அவன் முகம் கலையிழந்திருப்பதில் அவருக்கு ஏதோ நெருட, ‘ஒருவேள அன்னிக்கு பேசினது கேட்டுப்புட்டுத்தேம் ஒடக்கிழுத்துட்டுப் போனாளோ?’ என்று மனதோடு நினைத்துக் கொண்டு அஞ்சினார்.
அதுவே அவருக்கொரு பயத்தைக் கொடுத்துவிட, அன்றே திரிபுராவிற்கு அழைத்துவிட்டார்.
கொள்ளைப்புறம் சென்று அமர்ந்தவர், மகள் அழைப்பை ஏற்றதும், “ஏட்டி திரி.. ஓந்தம்பி பொண்டாட்டி அவோ அம்ம வீட்டப்பாத்து போயிட்டானு தெரியும்ல?” என்று பேச்சை எடுக்க,
“அதேம் அன்னிக்கே சொன்னியேம்மா. நல்லதுதேம் புள்ளைய இருக்கயில அவளும் வேறு எங்குட்டாது இருக்கட்டும்னு பேசினோம் தான?” என்று திரிபுரா கேட்டாள்.
“ஆமாண்டி.. பேசிகிட்டோம்தேம். இவேம் மோவத்த பாத்தாக்கா எனக்கு எதும் சரியா பிடிபடலடி” என்று தெய்வா அச்சத்துடன் கூற,
“என்னம்மா சொல்லுத?” என்று கேட்டாள்.
“எனக்கென்னவோ நாம அன்னிக்கு பேசிகிட்டத கேட்டுபுட்டு அவேங்கூட ஒடக்கிழுத்துட்டுப் போயிருப்பாளோனுதேம் படுதுடி. இவேம் மூனு நாளா கொட்டாவுக்குப் போயித்தேம் ஒறங்குதீயாம். பசியாறக்கூட பெருசா வீட்டு பக்கம் வாரதில்ல. ஒன்னு ஓந்தங்கச்சி வீட்டுக்குப் போயிடுதியாம், இல்லாட்டி வேலன் வீட்டுக்குப் போயிடுதியாம். இன்னிக்கு ஏன்டா கொட்டாவுக்குப் போயி படுக்கனு கேட்டா, ஓந்தங்கச்சி, மைணி இல்லாம இங்கன அவேனுக்கு ஒறக்கம் வரலியாக்குங்குறா. என்னடி இது? எனக்கு என்னமோ அச்சமாத்தேம் படுதுடி. பேசினத எதும் கேட்டிருப்பாளோ?” என்று தெய்வா அச்சத்துடன் கேட்க,
“நாம என்னத்தம்மா தப்பா பேசிபுட்டம்? அப்புடியே கேட்டிருந்தாலும் மனசுகுத்தி அவளே புரிஞ்சு ஒதுங்கிருக்கனும். ஓம்புள்ளத்தேம் அவேம் பொண்டாட்டி இல்லனு ரொம்ப தவிக்குதாம். அவோளாம் அங்கன நல்லாத்தேம் இருப்பா” என்றாள்.
“அதுயெப்புடிடி எம்புள்ளைய மட்டும் தவிக்கவுட்டுப்டு அவோ அங்கன நல்லாருக்குறது? மண்டைக்கு வழியில்லாதவள எடுத்துப்புட்டு இப்ப ஏம்மவேம் அலும்புறதயில்ல பாக்க வேண்டிகெடக்கு?” என்று தெய்வா ஆற்றாமையுடன் கூற,
“அம்மா.. நீயா என்னமாது ரோசிக்காத. அவோளா வாராளானு பாரு. இல்லாட்டி பத்துநா கழிச்சு நம்ம முருவனுக்கு வேண்டுதலு வச்சதா சொன்னயில்ல? அதுக்கு வரனும்முனு கூப்டு வுடு. வேண்டுதலுன்னதுக்குப் பொறவு வாராம இருப்பம்லாமா?” என்று திரிபுரா கேட்டாள்.
“ம்ம்.. சரிடி” என்று அவர் கூற,
“என்னத்தயாது மிண்டாம போயி சோலியப்பாரும்மா. அவரும் பசியாற வந்துட்டாரு. நா வெக்கேம்” என்று திரிபுரா அழைப்பைத் துண்டித்தாள்.
ஏனோ தெய்வாவின் மனதிற்குத்தான் குடைச்சலகாவே இருந்தது. அவர் செய்யும் முற்றும் தவறான செயலை அவர் மனமே உணர்த்தியது போலும்…
அங்கு தங்களது வேலையை செவ்வனே வளவனும் வடிவேலும் செய்து கொண்டிருந்தனர்.
ஏற்றுமதிக்கான சரக்குகளைக் கட்டிக் கொண்டும் சரிபார்த்துக் கொண்டும் இருவருமிருக்க, முகத்தில் அதீத இறுக்கத்துடன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நண்பனையே அவ்வப்போது பார்த்துக் கொண்டபடி வேலையைத் தொடர்ந்தான்.
பெட்டிகளில் டேப்பை ஓட்டியவன் அலைபேசி ஒலிக்க, கைகளைத் தட்டிக் கொண்டு அதை எடுத்தவன், “ஆஞ்சொல்லுவண்ணே” என்றான்.
எதிரில் பேசப்பட்டதைக் கேட்டவன், “அப்புடியா? நாவந்து பாக்குதேம் அண்ணே. சரிண்ணே சரிண்ணே.. ரொம்ப நன்றிண்ணே” என்று அழைப்பைத் துண்டித்து, “லேய் வேலா” என்றான்.
“சொல்லுலே” என்று வேலன் கூறவும்,
“மோந்திக்கு ஏதும் சோலியிருக்குதா?” என்று வளவன் கேட்க,
“இல்லம்லே” என்றான்.
“சரிலே.. எங்கூட எடம் ஒன்னு பாக்க வரியா?” என்று வளவன் கேட்க,
“என்ன எடம்லே?” என்றான்.
“மீன் பண்ணைக்கு எடம் பாத்து வச்சுருந்தேம்லே. அந்த அண்ணே நேருல பாக்க வாரியலாங்குறாவ. மோந்திக்குப் போயி பாத்துப்போட்டு வருவமா?” என்று வளவன் கேட்க,
சங்கமித்ராவிற்காக அவன் மீன் பண்ணைத் துவங்க இருப்பதாய் அவளது விபத்திற்கு முன்பே பேசிக் கொண்டவை நினைவு வந்தது.
“ம்ம் போவம்லே” என்ற வடிவேல், “தங்கபுள்ள வரலியாக்கும் பாக்க?” என்று கேட்க,
“வரல” என்று உடனே கூறியிருந்தான்.
“லேய்.. ஏதும் ஒடக்கா? ஏம்லே அவோ அண்ணே வூட்டுக்குப் போயி இருக்கா. ஒரு வாரமாச்சு” என்று வடிவேல் சற்றேத் தயக்கமாய் கேட்க,
“ஒடக்கெல்லாம் ஒன்னுமில்லலே.. நாந்தேம் அனுப்பிச்சேம். கொஞ்ச நாளாவே ஆளு சரியால்ல. அண்ணேங்கூட இருந்துட்டு வந்தா கொஞ்சம் நல்லாருக்குமுன்னு நாந்தேம் அனுப்பிச்சேம்” என்று இயல்பாய் கூறினான்.
“பொறவு ஏம் நீயும் வீட்டுப்பக்கும் போவமாட்டுத?” என்று வடிவேல் கேட்க,
“போவத்தோனலலே..” என்றான்.
“அத்தேகூட ஏதும் ஒடக்கா?” என்று வடிவேல் கேட்க,
கடைசி பெட்டிக்கு ஒட்டி முடித்து எழுந்தவன், “ஒடக்காவிப்போவக்கூடாதுனுதேம் போவமாட்டுதேம்” என்றோனாய் வெளியேறினான்.
Comments
Post a Comment