திருப்பம்-99

 திருப்பம்-99



ஒரு வார காலம் ஓடியிருந்தது. அவிநாஷின் வீட்டில் அவன், அவனது பெற்றோர், மனைவி மக்கள், உடன் அவனது மாமனார் மாமியாரும் கூடியிருந்தனர்.


சச்சிதானந்தம் மற்றும் தாட்சாயணிக்கு சங்கமித்ரா இவர்கள் வீட்டில் இருப்பதே போன வாரம் தான் தெரிந்திருந்தது. சாதாரண வருகையென்று நினைத்திருந்த இருவரும் கடந்த இரண்டு வாரங்களாய் அவள் அங்கேதான் இருக்கின்றாள் என்று தெரிந்ததும் ஏதோ பிரச்சினையோ? என்று அஞ்சி ஓடி வந்துவிட்டனர்.


அமைதியாய் தனக்குக் கொடுக்கப்பட்ட பழச்சாறைக் குடித்துக் கொண்டே குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு சங்கமித்ரா தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க,


“மாப்பிள்ளை.. என்ன இது? நீங்களாது அவளுக்கு சொல்லி அனுப்பி வைக்கக் கூடாதா? அங்க நம்ம வீட்டுக்காது அனுப்பிருக்கலாம்ல?” என்று சச்சிதானந்தம் கேட்டார்.


“எதுக்கு மாமா அனுப்பி வைக்கனும்?” என்று அவிநாஷ் கேட்க,


பெற்றவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவர்களை சங்கடமாய் ஏறிட்டனர்.


“இவ இங்க வந்திருக்கானு சொல்லும்போது நாங்களும் சாதாரணமா தான் எடுத்துகிட்டோம். ஆனா ரெண்டு வாரமா இங்கயே இருக்கா..” என்று தாட்சாயணி இழுக்க,


“அதனால என்ன சம்மந்தி? எம்புள்ள அவள அவன் பெறாத மகளாத்தான் பாக்குறான். அவ பெத்தவங்க வீடுபோல வந்து இருக்கா. இதுல என்ன இருக்கு?” என்று பாமா கேட்டார்.


“அ..அதுக்கில்ல சம்மந்தி” என்றவர் தன் கணவரை ஏறிட,


“அவ புகுந்த வீட்டுல எதும் பிரச்சினையா மாப்பிள்ளை?” என்று பயத்துடன் கேட்டார்.


“என்ன மாமா நீங்க? எதுக்கு என்ன என்னமோ நினைக்குறீங்க? அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. பாப்பா சும்மாதான் வந்து இருக்கா. வளவன் தம்பிதான் கூட்டிட்டு வந்து விட்டதே. இதோ ரெண்டு நாள் முன்ன விக்ரமும் கார்த்தியும்கூட வந்து பார்த்துட்டுப் போனாங்க. ஏன் நீங்களா என்ன என்னமோ நினைக்குறீங்க?” என்று அவிநாஷ் கேட்க,


“ஏம்ப்பா? என் தங்கச்சி என்கூட வந்து ரெண்டு வாரம் இருக்கக்கூடாதா?” என்று சங்கீதா கேட்டாள்.


மேலும் பேசுவதற்கு அவர் தயங்கித் தன் மகளைப் பார்க்க, அவரது சங்கடம் புரிந்த அவிநாஷ், “பாப்பா.. நீ உள்ள போடா” என்றான்.


அவள் தன் அத்தானை ஏறிட, “நான் சொல்றேன்ல? நீ உள்ள போ” என்று சற்றே கண்டிப்பாய் கூறினான்.


சிறு தலையசைப்புடன் குழந்தையையும் தூக்கிக் கொண்டு அவள் எழுந்து செல்ல,


“இப்ப சொல்லுங்க மாமா” என்று அவிநாஷ் கேட்டான்.


மிகுந்த கலக்கத்துடன், “எதும் பிரச்சினையா மாப்பிள்ளை?” என்று அவர் கேட்க,


“இல்ல மாமா. நாந்தான் சொல்றேனே? என்னை நம்ப மாட்டீங்களா?” என்று கேட்டான்.


“இல்ல மாப்பிள்ள..” என்று அவர் தயங்க,


தாட்சாயணி, “அது.. இப்பத்தான் அந்த வீட்டு புள்ள வளைபூட்டு முடிஞ்சு வந்திருக்கு. கையோட இவ இங்க வந்துட்டா…” என்று இழுத்தார்.


“ச்ச என்ன அத்தை நீங்க? அப்படியெல்லாம் அவளைப் பேசுவாங்களா? அவ ஆறு மாசம் படுத்து எழுந்து வந்தத அத்தனைப் பேரும் பார்த்தோம் தான? இன்னும் சொல்லப்போனா அந்த வீட்டு ஆட்கள் தான் அவளைப் பார்த்துக்கிட்டதும் கூட. அவங்க போய் அவளை எதும் பேசுவாங்களா?” என்று கூறிய அவிநாஷின் மனதிலேயே, ‘ஒருவேள இருக்குமோ?’ என்று தோன்றத்தான் செய்தது.


இருந்தும் தன் மாமனார் மாமியாரிடம் அதைக் காட்டிக் கொள்ளாது அவன் பேச, “அவ ஏன் மாப்பிள்ளை அப்றம் சோகமாவே இருக்கா?” என்று கேட்டனர்.


“அம்மா.. அவகூட ஒருநாள் ஸ்பீச் தெரபி போய் பாருங்க ம்மா. அப்பத்தான் தெரியும். அவளே நூறு ப்ரெஷர்ல இருக்கா. இதுல அவ செய்ற ஒவ்வொன்னுக்கும் நீங்களா ஒரு காரணம் எடுத்து ஏம்மா அவளை இன்னும் ஸ்டிரஸ் பண்றீங்க?” என்று சங்கீதா கேட்க,


பெற்றவர்கள் இருவரும் அமைதியாயினர்.


“ஒவ்வொருத்தரா இப்படி கேட்டா அவளும் தான் என்ன அத்தை பண்ணுவா? அவ என்ன அங்க யார்கிட்டயும் சொல்லாம கொள்ளாமலா இங்க வந்தா? ஏதோ ஒரு கொஞ்ச நாள் இருந்துட்டுப் போலாம்னு வந்துருக்கா. என் பொண்ணு அவ அப்பா வீட்டுக்கு ரெஸ்ட் எடுக்க வந்ததா தான் நான் பாக்குறேன். இதுல எங்க யாருக்கும் எந்த சங்கடமும் இல்ல. உங்களுக்கு..” என்று அவிநாஷ் முடிக்கும் முன்,


“அய்யோ மாப்பிள்ள” என்று சச்சிதானந்தம் பதறினார்.


“இதுக்கு மேல விளக்கம் குடுக்க எதுவுமில்ல மாமா” என்று எழுந்தவன், அவளிருக்கும் அறைக்குள் சென்றுவிட,


உள்ளே உறங்கிய குழந்தையைப் படுக்க வைத்து அவள் முகம் வருடியபடி மௌனமாய் அமர்ந்திருந்தாள் சங்கமித்ரா.


“பாப்பா” என்று அவிநாஷ் அழைக்க,


அவனை நிமிர்ந்து பார்த்தவள், ‘நான் இங்க இருக்கக்கூடாதா அத்தான்?’ என்று சைகை செய்தாள்.


“டேய் என்ன பேசுற நீ?” என்று அவன் கோபமாய் கேட்க,


'சத்தியமா நான் யார்கூடவும் சண்டையெல்லாம் போட்டுட்டு வரலை அத்தான்' என்று சைகை செய்தாள்.


“நீ என்கிட்ட அறை வாங்கப்போற சங்கமித்ரா” என்று கோபமாய் அவிநாஷ் கூற,


கண்ணீரோடு தலைகுனிந்தாள்.


“நான் சொன்னேனா எதாவது? இது உன்வீடுனு நம்பித்தானே இங்க வந்த? உன்னை இங்க நாங்க யாரும் ஜட்ஞ் பண்ணலை தானே? அதே நம்பிக்கை இப்பவும் இருந்தா இரு” என்று அவன் கூற,


அழுகையுடன் வந்து அணைத்துக் கொண்டாள்.


“பாப்பா.. முதல்ல அழுறத நிறுத்து” என்றபடி அவளுக்குத் தட்டிக் கொடுத்தவன், “ஒவ்வொரு முறையும் சொல்லிட்டே இருக்க முடியாது நீ என் பொண்ணுனு. சொல்லி நினைவு படுத்தும் தேவை உறவுகளுக்கு அவசியமில்லை. இதை நாம புரிஞ்சுகிட்டா போதும்” என்று கூற,


அவனை நிமிர்ந்து பார்த்தவள், கண்ணீர் துடைத்து நன்றியாய் புன்னகைத்தாள்.


அவள் தலைகோதியவன், அவளுடன் வெளியே வர,


பெற்றவர்கள் இருவரும் அவளைக் கவலையுடன் பார்த்தனர்.


மகளை அருகே அமர்த்திக் கொண்ட தாட்சாயணி, “சாரிடா கண்ணா.. நீ இங்க வரக்கூடாதானு பேசலை நாங்க” என்க,


“ஆமாடாமா.. மன்னிச்சுடுடா பாப்பா” என்று சச்சிதானந்தம் கூறினார்.


ஆயிரம் தான் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என்றாலும் பெண் பிள்ளைகளுக்குத் தந்தை மன்னிப்பு வேண்டினால் தாங்க இயலுமா? வேகமாய் இடவலமாய் தலையசைத்த சங்கமித்ரா அவர்கள் கரம் பற்றி அழுத்திக் கொடுத்து, புன்னகைக்க,


அவர்களும் வலி மறைத்துப் புன்னகைத்துக் கொண்டனர்.


மாலை நேரம், சங்கமித்ராவைத் தேடி கடிதம் வந்து சேர்ந்தது.


மென்மையான புன்னகையுடன் சென்றவள் கடிதத்தைப் பிரிக்க,


“இந்த காலத்துல இத்தனை டெக்னாலஜி வந்த பிறகும் தம்பி கடிதத்துலயே பேசுறதைப் பாக்க ஆச்சரியமாத்தான்மா இருக்கு” என்று பாமா கூறினார்.


அதில் மெல்ல புன்னகைத்தவள், ‘எனக்காகத்தான் அவர் லெட்டர்ல பேச ஆரமிச்சாரு.. இப்ப எங்களுக்காக தொடருது' என்று அலைபேசியில் தட்டச்சு செய்து காட்டினாள்.


அவள் முகம் காட்டும் வர்ண ஜாலங்களைப் பார்த்தபடி அதை படித்தவர், புன்னகையுடன் அவள் கன்னம் தட்டிவிட்டு, “படிமா” என்று கூறி செல்ல,


ஆர்வத்துடன் அதை பிரித்தாள்.


'அன்புள்ள மித்துக்கு,


ஆனாலும் எனக்குத்தாம்டி ஓம்மேல அதிக காதலு. இத்தன லெட்டரு போடுதேனே ஒரு பதில் கடிதாசி போட தோனுதா ஒனக்கு? அதெல்லாம் ஓந்திருமால போலயெல்லாம் ஒனக்கு லவ்வு பண்ண வாராது மித்ரா' என்று வாசித்தவள் இதழ்கள் மந்தகாசமாய் விரிய, கண்களில் மெல்லிய செல்லக் கோபம் தோன்றியது.


‘சரியிருக்கட்டும். ஓம் அக்கௌண்டுலருந்து பணம் அனுப்பியுடு எனக்கு. என்னத்துக்குனு ரோசிக்கியாக்கும்? மண்டைல போட்டதுல ஒனக்கு பழசு மறந்துருக்கும். நெனவு படுத்துதேம். அந்தா மீன் பண்ண ஆரமிக்கோனுமுன்னு சொன்னேம்ல? எடமெல்லாம் பாத்து போட்டாச்சு. நீயு பணத்த அனுப்பினா சோலியத் தொவங்கலாம். நம்ம பூந்தோட்டம் போற வழியிருக்குல்ல? அங்கோட்டுத்தேம் எடம் பாத்திருக்கியேம். ரெண்டு மூனு நா முன்னுக்கத்தேம் எடம்பாத்துபோட்டு பேசி முடிச்சுட்டு வந்தேம். நீயு பணத்த அனுப்பிச்சனா சோலியெல்லாம் தொவங்கிடுவேம். எடத்தோட போட்டோ அனுப்பி வெக்கேம். இப்பத சோலியெல்லாம் பாத்து ஆரமிச்சா பத்து பதினஞ்சு நா குள்ளர எல்லாஞ் செட்டாயிடும். மீனுக்கு, மீனு முட்டைக்குலாம் சொல்லி வச்சுருக்கேம். நீதேம்டி மொதளாலியம்மா. பாத்துகிடு சொல்லிட்டேம்' என்று வாசித்தவள் இதழ் இன்னும் பூவாய் மலர்ந்தது.


‘பொறவு என்ன பண்ணுத?’ என்று அதில் இருக்க,


'உங்க லெட்டர் தான் படிச்சு ப்ளஷ் ஆயிட்டு இருக்கேன்' என்று நினைத்துக் கொண்டாள்.


'ஒழுங்கா சாப்புடுதியா நீயு? போன மொற ஆஸ்பத்ரி போயிட்டு வந்தியே என்ன சொல்றாவ? ஆபரேஷனெல்லாம் எதும் வேணாம் தான? அப்புடித்தேம் சொன்னாவ மொத. நடுல பாத்துகிட்டு சொல்லுதோம்முன்னாவ. மறுக்கா ஆபரேஷனானு ஆவிபோச்சுது எனக்கு. இப்பம் வேணாமுனு சொல்லிட்டாவனுதேம் அண்ணே சொன்னாவ. நல்லா சாப்டு அவிய சொல்லுறதுலாம் ஒழுங்கா செய்யு. அப்பைக்கு அப்ப பேசிப் பாருன்ன? இல்லாட்டி நீயு பேச ட்ரை பண்ணயில எனக்கு அத வாய்ஸ் மெசேஜா அனுப்புதியா? நீயு பொறந்து பேச ஆரமிக்கயில ஒங்கம்மையும் ஐயாவும் ரசிச்சிருப்பாவல்ல? நானும் அது எப்புடியிருக்கும்முனு இப்புடி ரசிச்சுப் பாக்குதேம். நல்லா சாப்டு நல்லா தூங்கி சீக்கிரம் வான்ன’ என்று வாசித்தவள் முற்றுமாய் நெகிழ்தே போனாள்.


'ச்ச எப்படி எல்லாம் லவ் பண்றாங்க' என்று எண்ணி உளமார மகிழ்ந்தவள் முகம், செம்மையுற்றது. முத்தமிட்டும் அணைத்தும் மட்டுமா ஒரு பெண்ணை சிவக்க வைத்திட இயலும்? காதலின் காதலாகிய சொற்கள் போதாதா?


அவனை எண்ணி எண்ணிச் சிவந்தவள், கடிதத்தை மூடி வைத்து அப்படியே கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்தாள்.


தொண்டைக்குழி ஏறி இறங்கியது…

கண்ணோரம் கண்ணீர் துளி வழிந்தது…

இதழ் நிறைவாய் புன்னகைத்து…


இவன் ஒருவன் போதாதா தான் சந்தோஷமாய் நிறைவாய் வாழ? எத்தனை இன்னல்கள் வந்தாலும் இவன் ஒருவன் தன்னைத் தேற்றிட மாட்டானா? இந்த காதல் போதாதா தன்னை முற்றுமாய் தேற்ற? என்றெல்லாம் எண்ணியவள், அவனுக்கு அழைப்பு விடுத்து விட்டாள்.


பல நாட்கள் கழித்து அவளிடமிருந்து, அவள் பக்கமிருந்து அவனுக்குச் செல்லும் உணர்வு…


ஒலிக்கும் அலைபேசியை ஒரு வினாடி ரசித்துப் பார்த்த வளவன் அழைப்பை ஏற்க,


அப்போதுதான் தனக்குப் பேச வராது என்றே அவளுக்கு உரைத்தது.


'கூட்டிட்டுப் போங்க' என்று கூறத்தானே அழைத்தாள்! எப்படிக் கூறிடுவது? என்று யோசித்தவள் கருமணிகள் இங்குமங்குமாய் ஓட, தொண்டைக்குழி ஏறி இறங்கியது.


“ஏங்…” என்று பேச முயற்சித்தவளுக்கு அதற்குமேல் வரவில்லை..


நிமிடத்தில் குடுகுடுவென்று பயம் அவளை நோக்கி ஓடிவர,


“திருமாலுக்கு மித்துவைத் தெரியும்லடி. வாரேம் ரெடியாரு” என்றவன், அவள் பயத்தை தன் ஒற்றை வரியில் பந்தாடிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.


அழைப்புத் துண்டிக்கப்பட்ட அலைபேசியை ஆச்சரியமாய் பார்த்திருந்தவள் மனமெங்கும், அவன் ஒருவனின் ஸ்வாசம் மட்டுமே, ஜீவத்து இருப்பதாய் இருக்க, ‘ஐ லவ் யூபா' என்று கூறிக் கொண்டவள், தனது புலன நிலைபாட்டில், ‘சுடிதார் அணிந்து வந்த சுவர்க்கமே' பாடலை வைத்து, கீழே, ‘நம்மில் நாம் கொண்ட காதல், அதை நீ ரெண்டாக பார்ப்பாயா?’ என்ற வரிகளையும் வைத்திருந்தாள்.


அடுத்த நொடி அவனுக்கு இதயம் குறுஞ்செய்தியாய் போக, அவள் செயல் புரிந்து அவள் நிலைபாடைப் பார்த்தவன், அட்டகாசமாய் சிரித்துக் கொண்டு, ‘அள்ளித்திங்க வைக்குறடி' என்று அனுப்பி அவளை இன்னும் அழகாய் புன்னகைக்கு வைத்தான்.



Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02