1.அந்தமற்ற ஆதரமே

 அத்தியாயம்-01



சுற்றிலும் யுத்தம் நடந்ததற்கான அடையாளமாய், குறுதிகறை படிந்து, ஆங்காங்கே பூமி பிளந்து, மழை பொழிய மனமற்றபோதும் வானம் கருத்து காட்சியளித்தது. எங்கும் சோக ஓலங்களின் ஒலிகள் மட்டுமே பிரதிபலிக்க, அனைத்தையும் கண்களில் வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர், அவ்விருவர்.


வழிமாறிப் போன தன் செயலில் இப்பேற்பட்ட பலி நடந்துவிட்டதை சற்றும் ஜீரணிக்க இயலவில்லை அந்த ஒருவரால்! தான் இத்தனை பெரிய பேரழிவுக்கு காரணியாகுமளவு வசியப்படுத்தப்பட்டதை சற்றும் ஏற்க மனமின்றி கண்களில் கண்ணீரோடு நின்றிருந்தார். 


அவர் தோளில் கைபோட்ட மற்றயவர், "நீ அழறது ஒரு அண்ணனா பார்க்கக் கஷ்டமா இருந்தாலும் உனக்கு ஆறுதல் சொல்லத் துளியும் எனக்கு மனசில்லை. சொல்ல வருத்தமா இருந்தாலும் இந்த பேரழிவுக்கு நீ ஒருத்தன் தான் காரணம்" என்று ஜோயல் கூற, 


கண்ணீரோட மண்டியிட்டு அமர்ந்து அவர் கால்களைப் பற்றிக்கொண்டு கதறினார் காஸ்மோ.


அந்த மொத்த கூட்டமும் கதறியழும் காஸ்மோவை கண்களில் கணல் வெறியோட பார்க்க, 


அவரால் மன்னிப்பைக் கூட கேட்க இயலவில்லை. 


தன்னால் நடந்த இழப்பினை மன்னிப்பால் ஈடுகட்ட இயலாது என்று தெரிந்தும் அதை கேட்க இயலுமா என்ன? 


சுற்றி சிதைந்து கிடந்த பூமியையும் சிதைவுகளோடு சிதைவுகளாக கிடந்த உடல்களையும் கண்டவருக்கு, தத்தமது இணையை, உயிரை பறிகொடுத்து கதறித் துடிக்கும் உயிர்களுக்கு ஆறுதல் கூட கூற இயலவில்லை.


"இ..இதுக்கு நீங்க எனக்கு என்ன தண்டனைக் கொடுத்தாலும் ஏத்துக்குறேன்" என்று காஸ்மோ கூற, 


"தண்டனையா? என்ன தண்டனை கொடுத்து என்ன செய்ய முடியும்? போன உயிரை உங்களால மீட்டுக் கொடுக்க முடியுமா?" என்று கர்ஜித்தாள், சைரா.


அவளை வேதனையோடு பார்த்த காஸ்மோ, "என்னால எதையும் செய்ய முடியாது சைரா. நான் செஞ்சது தப்பு தான். அதை மாற்றியமைக்கக் கூட முடியாத நிலையில இருக்கேன்" என்று கூறி தலைகுனிய, 


"அவ்வளவு கெஞ்சினானே அவன்.. ஒரு வார்த்தை எங்க பேச்சை நீங்க கேட்டிருந்தா இப்படியொரு பேரழிவு நிகழ்ந்திருக்குமா? இத்தனை மாவீரர்களையும், வீராங்கனைகளையும், அப்பாவி ஜீவன்களையும் இழந்திருப்போமா? சொல்புத்தியும் இல்லாம சுயபுத்தியும் இல்லாம நீங்க செஞ்ச ஒரு செயல், இன்னிக்கு எப்படியொரு சர்வநாசத்தை ஏற்படுத்திருக்குப் பாருங்க" என்று கர்ஜித்தாள், லூமி.


அவள் வார்த்தைகளின் தீ, அவரைச் சுட்டதில் துடிதுடித்து போனவர், "லார்ட் ஜோயல்.. என்னைக் கொன்னுடுங்க. இந்த வேதனையை என்னால தாங்க முடியலை. நா.. நான் இப்பேர்பட்ட பேரழிவுக்கு காரணமானவன்.. இதை பார்க்கப் பார்க்க என் உடல் எரியுது" என்று கதறினார்.


"அவ்வளவு சீக்கிரம் உங்களை சாகவிட முடியாது. இத்தனை உயிர்களை துடிக்கவிட்ட நீங்க எப்படி அவ்வளவு சீக்கிரம் இறந்து போகலாம்?" என்று ஈடன் கர்ஜீக்க, 


தன் காதுகளை பொத்திக் கொண்டு காஸ்மோ மேலும் கதறி அழுதார். 


தனது பேராசை நடத்திய போராட்டத்தின் பேரழிவு அவர் கண்முன் வந்து காட்சியாக, அங்கு சிதைந்திருந்த உயிர்களிலிருந்து, சாம்பல் நிற கங்குகள் எழுந்தன.


யாவரும் அந்த சத்தத்தில் திரும்பிப் பார்க்க, அந்த கங்குகள் ஒன்று சேர்ந்து இறந்து போனோரின் ஆன்மாவாக மாறியது. அந்த ஆன்மாக்களின் முகங்களில் அத்தனை சோகம் தாண்டவமாடியது. 


அத்தனை ஆன்மாக்களும் காஸ்மோவைப் பார்க்க, 


அதில் மனதால் மறித்துப் போனவர், "ஆ…" என்று கத்தினார்.


அதிகப்படியான வலியால் அவரது சக்திகள் வடிந்து போக, அதில் மேலும் வலியெடுத்து முற்றிலும் சோர்ந்து மயங்கினார். அனைவரும் சுற்றி இருந்த ஆன்மாக்களை நோக்க, யாவரது மனமும் சில காலங்களுக்கு முன்னே சென்றது…


             *********


அழகியதோர் காலை பொழுதது! குயில்கள் தன் இனிமையான குரலில் கூவ, கிளிகளின் கீச்சிடும் சத்தமும் அதற்கு இணையாகக் கேட்டது. 


ஸ்லீவ்லெஸ் டீ-ஷர்டும், ஸ்போர்ட்ஸ் பேன்டும் அணிந்துக் கொண்டு காதொலிப்பான் வழி கேட்ட பாடலை முனுமுனுத்தபடியே தனது ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டிருந்தாள், அவள்.


தனது பயிற்சியை முடித்துக் கொண்டு வீடு திரும்பியவள், இரண்டு ரொட்டியை வாட்டிக் கொண்டு, உடன் ஒரு பெரிய டம்பிளரில் 'ஹெல்த் மிக்ஸ்' பொடி கலந்த பாலையும் எடுத்து வைத்துவிட்டு குளித்து வந்து உண்டாள். 


உணவை முடித்துக் கொண்டு தயாராகியவள், தனது புத்தகங்களை எடுத்துக் கொண்டு அந்த அழகிய ஆரஞ்சு வர்ண மிதிவண்டியில் புறப்பட, அவளது செல்லப்பிரணியான 'குவாட்செல்' என்று அழைக்கப்படும் மத்திய அமேரிக்க இனத்தைச் சேர்ந்த பச்சை நிறப் பறவை 'கிரீச்' என்று கத்தியது. 


அதில் வண்டியைச் சட்டென நிறுத்திவிட்டு திரும்பியவள், தன் பச்சை நிற விழிகள் பளபளக்க அதைக் கண்டு "ஸ்ஸ்.. சாரி ஆர்காட்" என்க, 


தன் சிறகுகளை அடித்து பறந்து வந்த 'ஆர்காடியா' என்று அவளால் பெயர் சூட்டப்பட்டப் பறவை அவள் தோளில் அமர்ந்துகொண்டது.


அதை தடவிக் கொடுத்தவள், "சாரி ஆர்காட். இன்னிக்கு அந்த ஹேன்சம்ம லைப்ரேரிலப் பார்க்க முடியும் இல்லையா? அதான் எக்ஸைட்மென்ட்ல உன்னை மறந்துட்டேன்" என்று உண்மையை ஒப்புக்கொள்ள, 


தன் முடிகளை சிலிர்த்துக் கொண்டு தன் கோபத்தினை வெளிப்படுத்தியது.


அதில் சிரித்துக் கொண்டவள் தன் மிதிவண்டியை அழுத்தி மதித்துக் கொண்டு புறப்பட, சில நிமிடங்களில் அந்த பெரிய பல்கலைக்கழகத்தினை அடைந்தாள். 


தன் மிதிவண்டியை நிறுத்திவிட்டுப் பையை ஒருபக்கமாக மாட்டிக் கொண்டு நூலகம் நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்தவளை நூலக வாசலிலேயே நிறுத்திவிட்டார் நூலகக் காவலாளி.


அந்த முதிய காவளாலி, "ஏம்மா.. எத்தனை தடவ சொல்றது உனக்கு? இந்தப் பறவையை வெளிய விட்டுட்டு உள்ள போம்மா" என்று ஆங்கிலத்தில் கூற, 


"என் ஆர்காட்ட எப்பப்பாரு எதாவது சொல்லிகிட்டே இருக்கீங்க ஓல்ட் மேன்" என்றபடி அதை தடவிக் கொடுத்து பறக்கவிட்டாள். 


பின் தடதடவென படிகள் ஏறி மேலே சென்றவளது எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காத வண்ணம் அங்கு அமர்ந்து ஓர் ஆங்கில காதல் கதையைப் படித்துக் கொண்டிருந்தான், அவன்.


அவனை பார்ப்பதற்கு வசதியாகவும் சற்று தொலைவாகவும் இடம் பிடித்தவள், ஒரு புத்தகத்தினை விரித்து வைத்துக் கொண்டு அவனை சைட்டடிக்க, பொழுது போனதே தெரியவில்லை! 


சில நிமிடங்களில் அவள் முன் ஓர் உருவம் வந்து நிற்க, 'ப்ச் யாரு இந்த டிஸ்டபென்ஸ்' என்றபடி நிமிர்ந்தவள் திடுக்கிட்டுப் போனாள்‌‌.


"ச..சைரா" என்று அவள் தடுமாற, 


"என்ன பண்ற அடாமினா?" என்று சைரா பல்லைக் கடித்தாள். 


அதில் முதலில் பயந்தாலும், அவளை மெல்ல விலக்கிவிட்டு அவனை ஓர் பார்வை பார்த்துக் கொண்டவள், "வா போகலாம்" என்றபடி அவளை இழுத்துக் கொண்டு கீழே வர, 


"ஏன் அடாமினா இப்படிப் பண்ற?" என்று சைரா கர்ஜித்தாள்.


"ஏ கேர்ள்.. கால் மீ ஃப்ளோரா" என்று ஃப்ளோரா அடாமினா கூற, 


"அது நீயா வச்சுகிட்டப் பெயர். லார்ட் உனக்கு வச்சது அடாமினா தானே" என்று குறைந்த சத்தத்தில் சைரா கூறினாள். 


"சரி இருந்துட்டுப் போகட்டும். இப்ப எதுக்கு இவ்வளவு கோபம் உனக்கு?” என ஃப்ளோரா அடாமினா வினவ, 


"நீ செஞ்சது உனக்குப் புரியுதா இல்லையா?" என்று சைரா வினவினாள்.


"ஓ கம்மான் சைரா. ஐம் ஜஸ்ட் சைட்டிங்" என்று ஃப்ளோரா அடாமினா கூற, 


"விளையாட்டுத்தனமா பண்ணாத அடாமினா. உன் பார்வைய சமீப காலமா அவர் நோட் பண்ணிட்டு இருக்கார். தேவையில்லாம ஒரு மனிதரோட மனசுல சலனத்தை ஏற்படுத்திடாத. நம்ம மிஞ்சிபோன ஒரு பத்து பன்னிரண்டு மாசம் தான் இங்க இருப்போம்" என்று சைரா அறிவுறுத்தினாள்.


"அவர் என்னை நிமிர்ந்து கூட பார்த்தது கிடையாது சைரா. நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காத" என்றபடி அவள் தோழியுடன் நடக்க, "எக்ஸ்கியூஸ்மி லேடீஸ். ப்ளீஸ் மூவ் (தயகூர்ந்து நகர்ந்துகொள்ளூங்கள்)" என்றான், ஜான் ஃபேர்லே. 


அதில் இருவரும் சட்டென விலக, இருவரையும் தாண்டிச் சென்றவனை ஆர்வம் ததும்பும் விழிகளுடன் அடாமினா நோக்கினாள்.


அதில் அருகில் இருந்தவளது கருவிழிகள் தன் இயல்பு நிறமான சிவப்பிற்கு மாற, 


அவளைத் திரும்பிப் பார்த்த அடாமினா, "சைரா சில்.. உன் கருவிழி சிகப்பா மாறுது" என்று பதறினாள். 


தன் கண்களை மூடித்திறந்து தன்னை சமன் செய்த சைரா, "காலைல இவர பார்க்க வரும் ஆர்வத்துல ஆர்காட்டக் கூட மறந்துட்டு போற. உன்னோட ஆவலான பார்வை வேற எந்த எண்ணத்தையும் உன் மனசுல பதியவிடாம பார்த்துக்கோ" என்று கூறி விருட்டென்று சென்றாள்.


செல்லும் தோழியை வேதனையுடன் பார்த்த அடாமினா, 'நீ பயப்படுறது ஏற்கனவே நடந்துடுச்சு சைரா. நான் என் மனசை அவர்கிட்ட தொலைச்சுட்டேன். அவர் எனக்கு கிடையாதுன்னு எனக்கு புரியுது. நம்ம விதிமுறைகளை மீறி என்னால அவரை அடையவே முடியாது. ஆனா இங்க இருக்கப் போகும் கொஞ்ச நாட்கள் அவரை கண்ணார பார்த்துட்டுப் போயிடலாம்னு ஆசைப்படுறேன்' என்று மனதோடு கூறிக் கொண்டு தன் கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலியில் உள்ள டாலரை வருடிக் கொண்டு, "சாரி லார்ட் ஜோயல்" என்று முனுமுனுத்துக் கொண்டாள்.


அவள் ஃப்ளோரா அடாமினா! 'பாரடைஸ்' உலகத்தின் 'லேன்ட் ஃபேரீஸ்' வம்சத்தினை சேர்ந்தவள். 


அவளுடன் இருக்கும் அவளது உற்ற தோழியான சைரா 'பாரடைஸ்' உலகத்தின் 'ஃபயர் ஃபேரீஸ்' வம்சத்தினை சேர்ந்தவள். 


'லேன்ட் ஃபேரீஸ்' இனத்தை சேர்ந்தோரின் பிராணியாக இருப்பதே, ரேகல் டிராகன்ஸ். தங்கள் உலகை விட்டு வெளியேரும்போது 'குவாட்சல்' இணப்பறவையாக உருமாறிவிடும்.


'ஃபயர் ஃபேரீஸ்' இனத்தை சேர்ந்தோரின் பிராணியாக இருப்பது, 'ஸ்மாக்' இன டிராகன்கள். இவ்வகை டிராகன்கள் தங்கள் உலகை விட்டு வெளியேரும்போது, 'கார்டினாலிடே' என்ற பறவைகளாக உருமாறிவிடும்.


தன்னை கடந்து சென்றவனை மனதோடு எண்ணி மருகிய அடாமினா, ஒருபெருமூச்சை இழுத்து விட்டுக்கொண்டு செல்ல, அங்கு அடாமினா மீது தனது அபார காதலை சுமந்துகொண்டு துள்ளலுடன் அவன் தன் நேரத்தினை கடத்தினான்.

Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02