7. அந்தமற்ற ஆதரமே

 அத்தியாயம்-07



பாரடைஸ் வாசிகளில் ஜோயலின் குழுவை சேர்ந்த அனைவரும் ஜோயலது மாளிகையில் கூடியிருந்தனர். அனைவரது முகத்திலும் சோகத்தின் சாயல் நிரம்பி வழிய, கண்களை மூடியபடி தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தார் ஜோயல்.


க்ரிஃபின் அவர் அருகே வந்து ஜோயல் முகத்தோடு தன் முகத்தை இழைத்து நிகழ்வுக்குக் கொண்டுவர, கண்களை மெல்ல திறந்து அனைவரையும் ஏறிட்டார். 


தன் தொண்டையைச் செருமிக் கொண்டவர், "இன்னும் ஈரைந்து நாட்கள் கழிச்சு போர் துவங்குது. போருக்கான ஆயுத்தங்கள துவங்குங்க. எல்லாரும் ஜேஸ்புரட்க்குப் புறப்பட்டு உங்க உங்க ஆயுதங்கள எடுத்துட்டு வாங்க" என்று கூற, 


அனைவரும் வலது கையினை இடது மார்பில் குற்றி மண்டியிட்டு வணங்கினர்.


அனைவரையும் புறப்படும்படி அவர் சைகை செய்ய, சோகமே உருவாக அங்கிருந்து புறப்பட்டனர். 

மீண்டும் அவர்களது பயிற்சி பூங்காவை அடைந்தோர் முகத்தில் இன்னமும் சோகத்தின் சாயல்…


'பாரடைஸ்' என்று பெயரிலேயே சொர்க்கத்தினை வைத்துக் கொண்ட அந்த இடம் இன்னும் சில தினங்களில் நரகமாக மாறப்போகும் அவலத்தினை எண்ணி அவர்கள் முகம் வெம்பி வெதும்பியது.


'வீல்' என்று காற்றைக் கிழிக்கும் ஓசையோடு அதிவேகமாக பறந்து வந்தது ஓர் யூனிகார்ன் (பறக்கும் குதிரை). 


"ப்ரிஸா.." என்று ஐலா இதழசைக்க, அவளருகே வந்து தரையிறங்கிய ப்ரிஸா என்ற பறக்கும் குதிரை, "ஏ ஐலா.. எல்லாரும் என்னென்னமோ சொல்றாங்க.. நம்ம ஜேஸ்புரட் போகப் போறோமா?" என்று படபடத்தது. 


அதனுடனே ஆலிஸின் யூனிகார்னும் வந்திட, தடதடவென்ற சத்தத்தோடு இரண்டு ஓநாய்கள் அங்கு வந்தன.


"ல்க்ஸ்.." என்று தோரா இதழசைக்க, அவளிடம் வந்த லக்ஸ் என்ற பெயர்கொண்ட ஓனாய் "ஊ..ஊ.." என்று ஊளையிட்டது. 


ரெய்டனின் ஓநாயும் சேர்ந்து ஊளையிட, எய்றா (அலாஸ்காவின் வெள்ளை சிங்கம்) தனது கர்ஜனையில் இருவரையும் அமைதி படுத்தியது.


"ல்க்ஸ்.."


"எய்றா!"


"ப்ரிஸா.."


என்று ஒரே நேரத்தில் தோரா, அலாஸ்கா மற்றும் ஐலா கத்தி தங்கள் பிராணிகளை அமைதிப்படுத்த, காற்றில் மிதக்கும் நீர்திவளை இரண்டு பறந்து வந்தது. அனைவரின் கவனமும் அங்கு திரும்ப, அவர்களை நெருங்கியதும் அந்த நீர்த்திவளைக்குள்ளிருந்து இரண்டு டால்பின்கள் எழுந்தன.


"மரினா.." என்று கார்டிலியாவும் "ஆக்வா" என்று ஃபோர்டும் கூற அவர்களது பிராணிகள் அவர்களிடம் சென்று அடைக்கலம் புகுந்தன. 


சைராவும் அடாமினாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சுற்றி முற்றி தங்கள் பிராணியைத் தேட, வானில் இரண்டு டிராகன்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நெருப்புக் கங்குகளைக் கக்கி ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்ட வண்ணம் வந்து தரையிறங்கின.


ஆம் அவற்றில் ஒன்று சைராவின் காலிடா மற்றும் அடாமினாவின் ஆர்காடியாவே. அனைவரும் அவரவர் பிராணிகள் மீது ஏறி அமர, தீவிரமான முகத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


"செயின்ட் ஜேஸ்புரட்" என்று அனைவரும் ஒன்று போல அவ்விடத்தின் பெயரைக் கூற, அனைவரது பிராணிகளும் சத்தமெலுப்பின. 


பேரொளி ஒன்று அவர்கள் அனைவரையும் சூழ்ந்துக்கொள்ள, கண்ணிமைக்கும் நேரத்தில் யாவரும் ஜேஸ்புரட்டை அடைந்தனர்.


முற்றும் முழுதும் பனியால் சூழப்பட்டு கிட்டத்தட்ட உறைநிலையில் இருக்குமிடமது! 


அலாஸ்காவுக்குத்தான் அந்த இடம் குதூகலிப்பாக இருந்ததே தவிர மற்ற யாவருக்கும் அது ஒப்பவில்லை. 


அதிலும் கார்டிலியாவும் ஃபோர்டும், "இன்னும் கொஞ்ச நேரம் இங்கு இருந்தா நாங்க அவ்ளோதான்" என்று கூற, 


சைரா "ப்ளேஸ் (blaze)" என்றபடி தன் கையசைத்து மந்திரமிட்டாள். 


கார்டிலியா மற்றும் ஃபோர்டை சுற்றி ஓர் நெருப்புத் திரை சூழ்ந்துக் கொள்ள, "இது கொஞ்ச நேரம் தான் தாக்குப்பிடிக்கும். அதுக்குள்ள நம்ம ஜெம் ஸ்டோன் இருக்குமிடத்தை அடையனும். சீக்கிரம் வாங்க" என்று சைரா கூறினாள்.


"நல்லா பார்த்திருக்காங்கப்பா இடம்" என்று ஐலா புலம்ப, 


"நல்லா தானே இருக்கு" என்று கூறி அனைவரின் முறைப்பையும் சம்பாதித்துக் கொண்டாள் அலாஸ்கா. 


சிறிது நேர பயணத்தில் தூரத்தில் ஆறு வர்ண ஒளிகள் ஆகாயத்தை நோக்கி தங்கள் ஒளியைப் பரப்பியிருந்தது தெரிந்தது.


அந்த இடத்தை நெருங்க நெருங்க, ஆறு இணத்தைச் சேர்ந்த தேவதைகளுக்கும் ஏற்றார் போல அவரவர்களைச் சுற்றிய வெப்பநிலை உருவானது. எல்லோரும் அந்த ஆறு ஒளியினை நெருங்க, ஆறு வகையான ரத்தினங்கள் ஜொலித்தன.


நீலம், வெள்ளை, இளநீலம், சிகப்பு, பச்சை, மற்றும் ஊதா என வரிசையாக வானவில்லைப் போல் வண்ணங்கள் மின்ன யாவரும் கண்கள் மின்ன அதைக் கண்டனர்.


"அலக்ஸான்டிரைட் (alaxandrite).. காயங்களை குணப்படுத்தவும், சூழலுக்கு ஏற்றமாதிரி எங்களை மாற்றிக் கொள்ளவும் உதவும். நீரின் சக்திகளைத் தனக்குள்ள கொண்ட இந்த மந்திரக்கல் தான் நீர் தேவதைகளின் 'பவர் ஸ்டோன்' அப்படினு சொல்லப்படுது" என்று ஃபோர்ட் கூற, 


"இதை பார்க்க நான் வருவேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை ஃபோர்ட். போர் நடந்தா மட்டுமே தான் இங்க வந்து ஆயுதத்தை எடுத்துப்போம். இப்படி போரிடும் அவசியம் வரும்னு நான் கனவிலும் நினைச்சுப் பார்க்கலை" என்று கார்டிலியா கூறினாள்.


வெள்ளை வெளேர் என்று ஒளியை வீசும் கல்லினை வெறித்த அலாஸ்கா, "க்ரிஸ்டல் டைமென்ட் (வைரம்).. பனியின் மொத்த சக்தியையும் கொண்ட வைரம்" என்று பெருமூச்சுவிட, 


இளநீல ஒளியை வீசும் ஏஞ்சலைட் (angelite) என்ற கல்லினைப் பார்த்தபடி, "ஏஞ்சலைட்.. காற்றின் சக்தியைக் கொண்டது. அமைதியை நிலைநாட்டும் கல்" என்று ஆலிஸ் மற்றும் ஐலா கூறினர்.


கொஞ்ச நேரம் உத்துப் பார்த்தாள் பார்வையையே பிடுங்கிக் கொள்ளும்படியான பளீர் சிகப்பு நிற கதிர்களை, தனது சிகப்பு விழி பிரகாசிக்கப் பார்த்த சைரா, "ரூபி கல். நெருப்பைக் குறிக்கும் கல். ஆற்றல் மற்றும் காதலை குறிப்பா கொண்ட கல்" என்று கூற, 


அதேபோல் பார்போறின் கண்ணைப் பிடுங்கி எறியும் உணர்வை கொடுக்கும் பச்சை நிற மரகதக் கல்லினை கண்கள் மின்ன பார்த்த அடாமினா, "எமர்லான்ட்.. வளர்ச்சி, ஊக்கம் மற்றும் காதலை உணர்த்தும் கல். செடிகொடிகள் மற்றும் பூமியோட சக்தியைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்ட மரகதக்கல்" என்று கூறினாள்.


இறுதியாக ஊதா நிற ஒளியை வெளியிடும் பளிங்கு கல்லினைப் பார்த்த தோரா மற்றும் ரெய்டன், "ஏமிதெஸ்ட் (Amethyst).. எதிர்மறை ஆற்றலை அழிக்கவும், மனதை தெளிவுபடுத்தும் ஆற்றலும் கொண்ட இந்த கல் இடி மற்றும் மின்னலின் சக்தியைக் கொண்டது" என்றனர்.


கார்டிலியா மற்றும் போர்ட் அந்த கல்லின் அருகே செல்ல நீல நிற வில்கள் கல்லின் கீழே இருந்தன. ஆளுக்கொரு வில்லை எடுத்துக் கொண்ட இருவரும் அலாக்ஸான்டிரைட் கல்லில் தங்கள் கரம் வைத்து "பாராடைஸ் வார்.. லார்ட் ஜோயலுக்காகத்தான் எங்க அற்பனிப்பு அத்தனையும்" என்றனர்.


அதேபோல் க்ரிஸ்டலில் கரம் வைத்து கூறிய அலாஸ்கா, பனிகட்டியால் உருவாகிய கூர்மையான பிளேடுகளை எடுத்துக் கொண்டாள். 


அங்கு ஏஞ்சலைட் கல்லின் மேல் தன் கரம் வைத்த ஐலா மற்றும் ஆலிஸ் மற்ற கரத்தினை கோர்த்துக் கொண்டு, "எங்கள் உயிர் லார்ட் ஜோயலுக்காகவே.. பாரடைஸ் வார்" என்றுவிட்டு வெளீர் நிற கண்ணாடிப் போன்ற கோடாரியை எடுத்துக் கொண்டனர்.


ரூபி கல்லில் கைவைத்த சைரா "நான் முற்றும் முழுதும் லார்ட் ஜோயலுக்கு என்னோட உயிர அர்ப்பனிக்கிறேன். பாரடைஸ் வார்" என்று கூறி சிகப்பு நிறத்தில் கோபம் கொப்பளிக்கும் விழிகளைக் கொண்ட டிராகன் சுற்றப்பட்ட கூர் வாளினை எடுத்துக் கொண்டாள்.


மரகத கல்லின் மேல் கைவைத்த அடாமினாவின் மனதில் இனம் புரியாத சலனம் ஏற்பட்டது. "என் உயிரை பாரடைஸுக்காக அர்ப்பனிக்க நான் தயார். பாரடைஸ் வார்" என்றபடி பச்சை நிற விழிகளைக் கொண்ட டிராகன் சுற்றப்பட்டக் கூர் வாளினை எடுத்துக் கொண்டாள்.


அதேபோல் ஏமிதெஸ்ட் கல்லில் கரம் வைத்த தோரா மற்றும் ரெய்டன் தங்கள் சபதத்தினை எடுத்துக் கொண்டு ஊதா நிற ஈட்டியினை எடுத்துக் கொண்டனர்.


அவரவர் பிராணிகளும் தங்களது கவசங்களை சென்று அணிந்து வர, வந்தது போலவே மீண்டும் பாரடைஸ் திரும்பினர். ஆயுதங்களுடனான பயிற்சி துவங்கிட, மனமே இல்லாதபோதும் யாவரும் தங்களைப் போருக்காக தயார் செய்தனர்.


நாட்கள் சடுதியில் ஓடி, போருக்கு முந்தைய நாளும் வந்தது. தனது கம்பீர குரலை கனைத்துக்கொண்ட லார்ட் ஜோயல், "போரின் விதிமுறைகள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இருந்தாலும் போர் துவங்கும் முன்ன சொல்வது என் கடமை. போர் சரியா காலை ஒன்பது மணிக்கு நம்ம பகுதி எல்லையில் இருக்கும் போர்க்களத்தில் தான் துவங்கும். மாலை ஆறுமணி வரைதான் போர். போர்களத்தில் ஆறுமணிக்கு மேல் உபயோகிக்கப்படும் எந்த மந்திரத்திற்கும் சக்தி கிடையாது. ஒரு ஆற்றலை சார்ந்த தேவதை அதே ஆற்றலைச் சேர்ந்த தேவதைகூட தான் போர் புரியனும்னு எந்த சட்டமும் கிடையாது" என்று கூறியவர் தன் தொண்டையைச் சரிசெய்துகொண்டு, "பாரடைஸ் நிம்மதி கெடுவதில் எனக்கு உடன்பாடே இல்லைனாலும் இந்த போர் அவசியம். நிச்சயம் இதில் நம்ம வெற்றி பெறனும். அதுவும் நியாயமான வெற்றியா இருக்கனும்" என்றார்.


அனைவரும் மண்டியிட்டு ஜோயலுக்கு தங்கள் மரியாதையைச் செலுத்த, மறுநாள் காலை எல்லோரும் போர்க்களத்தில் கூடி இருந்தனர். 


எதிர்புரத்தில் இருப்போருக்குக் காஸ்மோ தான் தலைவன் என்றாலும் அவர்களுக்குமே போரில் பெரிதாக உடன்பாடில்லை.


போரினால் பாரடைஸின் நிம்மதி கெட்டுவிடும் என்ற எண்ணம் இருந்தபோதும், அவர்களது லார்ட் காஸ்மோவிற்கான அங்கீகாரம் வேண்டும் என்பதில் திண்ணமாக இருந்தனர்.


காஸ்மோ மற்றும் ஜோயல் போர்களத்தின் மையப்பகுதியில் தத்தமது க்ரிபின் மேல் அமர்ந்த வண்ணம் ஒருவரை ஒருவர் எதிர்நோக்கினர். 


"அவசியம் போர் வேணுமா?" என்று ஜோயல் வினவ, 


"க்ரிஸ்டோ எங்கனு சொல்லிட்டா விட்டுடலாம்" என்று காஸ்மோ கூறினார்.


"முடியாது" என்று ஜோயல் கூற, 


"அப்போ போரைத் துவங்களாம்" என்று கூறிய காஸ்மோ தனது கிரிபினைத் தட்டி "ஜோஸ்" என்றார். 


லார்ட் தனது கிரிபினைத் தட்டி "ஸ்மித்" என்க, இரண்டும் பெரும் கர்ஜனையோடு முட்டிக் கொண்டன. 


போரின் துவக்கத்தினை அது எடுத்துக் காட்ட, இரண்டு பிரிவினரும் பெரும் கூவலோடு மோதிக்கொள்ளத் துவங்கினர்.


கார்டிலியா, "ஆக்வா.." என்றபடி தன் வில்லிலிருந்து அம்பை எய்ய, அது நீர்திவளைகளாய் மாறி எதிராலியின் மேனியில் சுளீரென விழுந்து பதறச் செய்தது.


அங்கு "ப்ரீஸ்" என்றபடி தன் பனிக் கத்திகளைத் தூக்கி எறிந்த அலாஸ்கா மந்திர வார்த்தைகள் மூலம் சிலரை பனியில் உரையவைத்துக் கொண்டே முன்னேற, இடி தேவதைகள் ஒருவர் இடி கொண்டு மற்றவர் இடியைச் சமாளித்துக் கொண்டிருந்தனர்.


அங்கு "இக்னியஸ்" என்றபடி தீ ஜ்வாளைகளை எதிராளியின் மீது சைரா எறிந்து கொண்டிருக்க, 


"ஸ்டார்ம்" என்றபடி பெருங்காற்றால் எதிராளிகளைப் பறக்க வைத்தாள் ஐலா.


தனது கூர் வாளை பூமியில் தட்டி அதிரச் செய்த அடாமினா, மந்திர சொற்களால் எதிராளியின் கரங்களைச் செடி கொடிகள் கொண்டு கட்டிப்போட, இரண்டு பிரிவும் ஒருவருக்கு மற்றவர் சளைக்காது போர் புரிந்தனர்.


"ஸ்மாஷ் (smash)" என்றபடி பாறைகளை துகள்களாக உடைத்து எதிராளி மீது எறிந்த அடாமினாவை பின்னிருந்து யாரோ தாக்கிட, முதுகில் வந்து உடைந்த பாறைகள் அவளுடலில் ரணங்களை ஏற்படுத்தியது.


அதில் கோபக் கணல் கொப்பளிக்கத் திரும்பியப் பெண் உறைந்து நின்றட, அவளைக் கண்டு தானும் அதிர்ந்து நின்றான், ஜான் ஃபேர்லே!

Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02