8. அந்தமற்ற ஆதரமே

 அத்தியாயம்-08



தான் காண்பது கனவா இல்லை நினைவா என்று பரிதவித்த நிலையில் அடாமினா தன் முன் நிற்பவனை வெறித்து நிற்க, அவளை நம்பமுடியாதப் பார்வை பார்த்து நின்றான் ஜான் ஃபேர்லே. அவன் நினைத்தது ஒன்றாக இருக்க நடந்தது வேறாகிப்போனதே!


இருவரும் தங்கள் சுற்றம் மறந்த நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, அடாமினாவின் மீது நெருப்புப் பந்து ஒன்று வீசப்பட்டது. 


அதில் பொத்தென அவள் கீழே விழவும் சுயம் பெற்றவன் தனக்குப் பக்கவாட்டில் திருப்பிப் பார்க்க, அடுத்தப் பந்தை வீச தன் கைகளை உயர்த்தினாள் டைஸா.


"நோ டைஸா.." என்று அவளைத் தடுத்து நிறுத்தி பரிதவிப்போடு பார்த்தவன், "எ.. என் ஏஞ்சல்" என்று கண்கள் பனிந்து குரல் கரகரக்கக் கூறினான். 


அதில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற டைஸா, "அ..அடாமினா?" என்று வினவ, 


‘ஆம்’ என்பது போல் தலையசைத்தான்.


இங்கு கீழே விழுந்த அடாமியைக் கண்டு பதைபதைத்து வந்த அலாஸ்கா, "அடாமி.." என்க, 


சோர்ந்த விழிகளோடு அவளை ஏறிட்டாள். 


அப்போது அவர்களை நோக்கி வந்த பனிக்கத்தியைத் தன் நெருப்பால் உருக்கிவிட்டுத் திரும்பிப் பார்த்த சைரா, "என்ன பண்றீங்க? அடாமி என்ன ஆச்சு?" என்றாள்.


பேசும்போது தன் கரத்தைக் கிழித்துச் சென்ற பனிக்கத்தியைக் கண்டு எரிச்சலுற்ற சைரா திரும்பி நெருப்பை வீச, ஆத்திரத்தில் தப்பிய குறி டைஸா மற்றும் ஃபேர்லேவிடம் சென்று தாக்கியது. 


அதில் பதறி எழுந்து அடாமி "சைரா நோ" என்க,


அப்போதுதான் ஃபேர்லேவைக் கண்ட சைரா, "ஓ லார்ட்.." என்றபடி தன் தலையில் கைவைத்துக் கொண்டாள்.


ஒன்றும் புரியாத நிலையில் அடாமி, சைரா மற்றும் ஃபேர்லேவை மாறி மாறி பார்த்த அலாஸ்கா, "அடாமி… சைரா.. போர் முடிய இன்னும் ஒருமணி நேரம் இருக்கு. மாயக்கல் மேல சத்தியம் பண்ணது நினைவு இல்லையா? மத்த சிந்தனையை விட்டுட்டுப் போரை கவனியுங்க" என்று கத்தினாள். 


அலாஸ்காவை அடாமி கலக்கமாக ஏறிட, அதில் மனதால் ரணம் உணர்ந்தபோதும் போர்க்களத்தில் அவையாவையும் புறம் தள்ள வேண்டி அலாஸ்கா தன் கண்களை மூடித் திறந்தாள்.


அதை கண்டு தானும் தன்னை நிலைப்படுத்திய அடாமினா வேங்கையென எழுந்து தன் மனதின் மொத்த கோபத்திற்கும் சேர்த்து “ஆ..” என்று கத்தியபடி தனது கூர் வாள் கொண்டு பூமியில் தட்டினாள். அதில் அவளைச் சுற்றி இருந்த சில அடிகள் பூமி அதிர்ந்து அங்கே நின்றிருந்த தேவதைகள் கீழே விழுந்தனர்.


ஃபேர்லேவின் புறம் தன் பார்வையைச் செழுத்தாது எதிர் திசை நோக்கி விர்ரென்று பறந்தவள், "ஆர்காட்" என்று கத்த, 


அவளிடம் பறந்து வந்தது அவளது டிராகன். 


அதில் ஏறி அமர்ந்து வேறு புறம் சென்று அடாமி தன் போரைத் துவங்க, டைஸா ஃபேர்லேவை அவனது நிலையிலிருந்து மீட்டுச் சென்றாள்.


ஒருவரை ஒருவர் சளைக்காத இரு அணியும் மாறி மாறி போரிட, ஆகாயத்தில் காஸ்மோவிற்கும் ஜோயலுக்கும் பெரும் போர் நடந்துகொண்டிருந்தது. 


தன் ஈட்டி கொண்டு தோரா இடியை உருவாக்கி எதிராளி மீது ஏறிய, பதிலாய் வந்த சுழல் காற்றில் சிக்கி தரையில் பிரட்டி எறியப்பட்டாள்.


தன்னவள் படும் துன்பத்தைக் கண்டு பதைபதைத்து ஓடி வந்த ரெய்டன், அந்த காற்று தேவதையைத் தன் மின்னல் தாக்குதலால் தூர வீசிவிட்டு அவளைத் தூக்கிவிட, வலியோடு ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு எழுந்து மீண்டும் போரிட்டாள்.


அங்கு ஆலிஸின் மீது பெரிய கல் ஒன்று வந்து விழுக, கீழே விழுந்தவன் அந்த கல்லை சிரமப்பட்டு தன்மீதிருந்து நகர்த்திவிட்டு எழுந்தான். அடுத்து அவன்மீது பனிக்கத்திகள் வீசப்பட வேகமாக அவன் முன் வந்து அவற்றைத் தான் வாங்கிக் கொண்ட ஐலா, காற்றால் அவர்களை பிரட்டி வீசி எறிந்தாள்.


"ஐலா.." என்றபடி தன்னவளைத் தாங்கியவன் அந்த பனிக்கத்திகளைப் பிடுங்கி எறிய, 


"ஜாக்கிரதை ஆலிஸ்" என்றுவிட்டு விருட்டென பறந்து சென்று சண்டையைத் தொடர்ந்தாள். 


இங்கு கார்டிலியாவும் ஃபோர்டும் சேர்ந்து போரிட்டு அடிகள் பல வாங்கிக் கொள்ள, உச்சபட்ச கோபத்தின் வெளிப்பாட்டில் வெறி பிடித்தவள் போல சுற்றினாள் அடாமினா.


தன்னைத் தாக்க வந்தவர்கள் கைகளை முற்செடிகளால் கட்டிப்போட்டவள் முன் மீண்டும் ஃபேர்லே! 


தங்கள் இணத்தைச் சேர்ந்த யாரோ அவன் மீது பனி கத்திகளை வீசிக் கொண்டிருப்பதையும் அதில் பல கீறல்கள் பெற்று சளைக்காமல் அவன் பதிலடி கொடுப்பதையும் வேதனையோடு பார்த்தாள்.


அப்போதே அவளை நோக்கி வேகமாக ஒரு கூர்மையான பாறை பறந்து வர, 


அதைக் கண்டவன் "ஃப்ளோரா" என்று கத்திய நொடி அந்த பாறை கரைந்து மறைந்து போனது. அதுமட்டுமல்ல அங்கு மந்திரத்திற்கு கட்டுப்பட்ட அணைத்தும் அதன் இயக்கத்தை நிறுத்தியது! 


ஆம்.. மணி மாலை ஆறாகிவிட்டதால் அந்த இடம் மந்திரசக்திக்கு ஏற்புடையதாக இயங்கவில்லை!


முதல் நாள் யுத்தம் முடிவடைந்தது! ஃபேர்லேவை வைத்த கண் எடுக்காமல் பார்த்தவள் தோய்ந்து அப்படியே மடங்கி அமர, சைரா தான் அவளைத் தேடிக் கொண்டு பறந்தோடி வந்தாள். 


அடாமினா மற்றும் ஃபேர்லேவின் விழிகள் ஒன்றை ஒன்று கண்ணீரோடு தழுவி நிற்க, "மு..முன்னயே த்..தெரியுமா?" என்று வேதனையோடு கரகரத்த குரலில் வினவினாள்.


அதில் அவளை நெருங்கி வந்து தானும் மண்டியிட்டவன், "சத்தியமா நீயும் ஃபேரி தான் என்பதைத் தவிர எதுவுமே தெரியாது ஃப்ளோரா" என்றான். 


கண்களை அழுந்த மூடியவள் விழியிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, அடாமியின் தோழர்கள் மற்றும் ஃபேர்லேவின் தோழர்களான டைஸா, லூமி மற்றும் ஈடன் வந்து நின்றனர்.


சைரா, அடாமி, ஃபேர்லே மற்றும் டைஸாவைத் தவிர யாருக்கும் ஏதும் புரியவில்லை! கண்ணீரோடு தன் கரத்தினை மெல்ல நிமிர்த்தி அவன் முகத்தினைத் தொட்டுப் பார்த்தவள் ஒரு விரக்தியான சிரிப்போடு, "இதுக்கு நான் நினைச்ச போல நீங்க மனிதராவே இருந்திருக்கலாம்" என்க, 


அவள் கரம் பற்றி அதில் முகம் புதைத்தவன் வீரிட்டு அழுதான்.


"அடாமி.. என்ன நடக்குது?" என்று அலாஸ்கா வினவ, 


ஃபேர்லேவிடமிருந்து தன் கரத்தினை உருவிக் கொண்டவள், "ஆர்காட்.." என்று கத்தினாள். 


அவள் கூப்பிட்ட குரலுக்கு ஆர்காட் வந்து நிற்க, விருட்டென்று அதன் மேல் ஏறி அமர்ந்தவள் பறந்திருந்தாள்.


சென்றவளை வேதனையோடு பார்த்த சைரா, "நி..நீங்க எப்டி?" என்க, 


"ஜ்.. ஜான் ஃபேர்லே. லார்ட் காஸ்மோ பிரிவைச் சேர்ந்த லேன்ட் ஃபேர்ரி" என்றான். 


அவளுக்கு ஆச்சரியம் தாளவில்லை…


ஜான் ஃபேர்லேவும் பாரடைஸைச் சேர்ந்த தேவதையே! ஆரம்பத்திலேயே அடாமினாவை தேவதை என்று ஜான் கண்டுகொண்டான். ஆனால் அப்போதும் அவள் ஜோயலின் பிரிவைச் சேர்த்தவளாக இருக்கக்கூடும் என்று அவன் சற்றும் யோசிக்கவில்லை! 


அவள் தன்மீது காட்டும் ஆர்வத்தில் தன்னை கண்டுகொண்டாள் என்று எண்ணியவன் சைரா அடாமியைக் கடிந்து கொள்வதைக் கேட்டு அவர்கள் தன்னை மனிதனாக எண்ணுவதைப் புரிந்து கொண்டான்.


காதல் பயிர் வளர்த்துவிட்டு பாரடைஸில் வைத்து இன்ப அதிர்ச்சி கொடுப்பதாக நினைத்து கனா கண்டிருந்தவனுக்கு வாழ்விலேயே மறக்க முடியாதபடி அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது அந்த விதி!


சில நிமிடங்களில் அடாமியின் நட்பு வட்டம் பயிற்சி பூங்காவில் கூடியிருக்க, அவரவர் கழுத்தில் அணிந்திருக்கும் மாயக்கல்லின் சிறு பகுதியை டாலராகக் கொண்ட சங்கிலியைத் தங்கள் உள்ளங்கையில் அழுந்த பிடித்து கண்களை மூடிக் கொண்டு அமர்ந்தனர்.


அனைத்து மாயக்கல்லுக்கும் காயங்களை ஆற்றும் சக்தி உள்ளதால் போர் முடிந்தவுடன் தங்கள் காயங்களுக்கு மருந்திடவே அவ்வாறு அமர்ந்திருந்தனர். சில நிமிடங்களில் அனைவரும் கண் திறக்க சுற்றி முற்றி பார்த்த அலாஸ்கா, "அடாமி எங்க?" என்றாள்.


"தெரியலை" என சைரா பெருமூச்சு விட, 


"யாரு சைரா அது? காஸ்மோ பிரிவைச் சேர்ந்த ஃபேரி கூட உங்களுக்கு எப்படி தொடர்பு?" என்று தோரா வினவினாள்.


"அவர் பேரு ஃபேர்லே. லார்ட் ஜோயல் படிக்க அனுப்பிருந்தப்போ நான் அடாமி அன்ட் ஐலா படிச்ச இடத்துல தான் அவரும் படிச்சார். அ.. அடாமினா தினம் லைப்ரேரிக்கு இவர பாக்குறதுக்குனே‌ போவா. நாங்க அவர ஒரு மனிதராக தான் நினைச்சோம். ஒரு கட்டம் மேல அவளோட ஆர்வமான பார்வை புரிஞ்சு நான் கண்டிச்சேன். வெறும் சைட்டிங் தான்னு சமாளிச்சா. ஆனா அவ அவர காதலிக்குறாளோனு எனக்கு தோன்றிச்சு. எதுவானாலும் இனி அவளா சொல்லட்டும்னு விட்டுட்டேன். ஆனா அவரும் ஃபேரியா அதுவும் காஸ்மோ பக்கம்.. நினைச்சும் பார்க்கலை" என கூறிய சைரா பெருமூச்சு விட்டாள்.


ஐலாவைக் கூட்டிச் செல்ல வந்தபோது அடாமி அழுததும், 'உன்கிட்ட பாரடைஸ் வந்ததும் சொல்றேன்' என்று கூறியதும் அலாஸ்காவுக்கு நினைவு வர, 


எழுந்து நின்று "எய்றா" என்று கத்தினாள். 


வேகமாக ஓடிவந்த வெள்ளை சிங்கம் கர்ஜித்தபடி வந்து நிற்க, அதன் மேல் ஏறி அமர்ந்து அதை கிளப்பினாள்.


ஏதோ ஓர் மலைமுகட்டில் இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்த அடாமினா பின்னே கேட்ட எய்றாவின் கர்ஜனையில் திரும்ப, பறந்து வந்து அவளை அணைத்துக் கொண்டாள் அலாஸ்கா. 


தோழியின் அரவணைப்பில் முற்றும் முழுதும் உடைந்து போனவள், "இ.. இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை அலாஸ்கா.. மனசே நொருங்கி போன மாதிரி இருக்கு" என்று கதற, 


அவள் முதுகை வருடிக் கொடுத்தவள் ஒரு வார்த்தையும் பேசவில்லை.


அங்கு கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த ஜானின் தோள் மீது கரம் வைத்த பனி தேவதையான ஈடன், "ஜான்.." என்க, 


"நான் இத கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவே இல்ல ஈடன்.. மனசே நொருங்கி போன மாதிரி இருக்கு" என்று அங்கு அவனவள் கூறிய வார்த்தைகளையே தானும் மொழிந்தான்.


ஜான் தோளில் அழுந்த கை வைத்த காற்று தேவதையான லூமிக்குமே என்ன கூறி அவனை சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.


இங்கே அலாஸ்காவைக் கட்டிக் கொண்டு கதறி அழுத அடாமினா, "இ..இதை.. இதுக்கு அவர் மனிதராவே இருந்திருக்கலாம் அலாஸ்கா. கிடைக்கவே கிடைக்காது என்ற தூரத்திலாவது வைத்திருப்பேன். இப்ப கைக்கெட்டும் தூரத்திலும் தொடமுடியாத நிலை. கொல்லுது அலாஸ்" என்று கூற, 


அவள் முதுகை வருடிக் கொடுத்தவள், "எனக்கு உன் நிலைமை புரியிது அடாமி. ஆனால் இதில் நம்ம செய்ய ஒன்னும் இல்ல. உனக்கு கவலை தீரும்வரை கதறி அழுதுடு.. இதைத்தவிர உனக்கு சொல்ல என்கிட்ட எதுவும் இல்ல" என்றாள்.


அதில் தோழியை மேலும் இறுக அணைத்துக் கொண்டவள் அழுது கரைய, 


“கீச்” என்று கழுகின் சத்தம் கேட்டது. இருவரும் தங்கள் அணைப்பிலிருத்து விலக, ஜோயல் தனது க்ரிஃபின் மீதிருந்து இறங்கி வந்தார்.


வந்தவர் அலாஸ்காவை ஓர் அர்த்தமுள்ள பார்வை பார்க்க, கண்களை அழுந்த மூடித் திறந்தவள், எய்றாவின் மீது ஏறி அமர்ந்துகொண்டு புறப்பட்டாள்.


அவள் சென்றதும் அடாமினா புறம் திரும்பியவர், தனது கரகரத்த குரலில் "அடாமி" என்க, கண்களை அழுந்த மூடித் திறந்தாள்.


"எனக்கு முன்னமே.." என்று அவர் முடிப்பதற்குள் "தெரியும்" என்றாள். 


ஜோயலை நேருக்கு நேர் நோக்கியவள், "அவர் காஸ்மோ பிரிவைச் சேர்ந்த தேவதைனு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு எனக்குத் தெரியும். அதேபோல பொய்யான ஒரு நம்பிக்கையை எனக்குக் கொடுக்க வேண்டாம்னு தான் நீங்க அதை சொல்லலைனும் எனக்குத் தெரியும் லார்ட். எனக்கு உங்க மேல எந்த வருத்தமும் இல்லை" என்றாள்.


"தெரியும்.." என்றவர் அவளருகே அப்படியே அமர, நா(க்கு) தழுதழுக்க "அவசியம் போர் வேணுமா லார்ட்" என்று கேட்டுவிட்டு சட்டென தன் வாயை மூடிக்கொண்டாள். 


அவள் நிலை கண்டு பரிதவித்துப் போனவர், "நீ பயப்பட வேண்டாம் அடாமினா.. நான் இப்ப லார்ட் ஜோயலா வரலை. உன்னோட வெல்விஷரா, கார்டியனா வந்திருக்கேன்" என்க, 


அவர் தோள் சாய்ந்து அழுதவள் சில நிமிடங்களில் எழுந்து நின்றாள்.


தன் கண்ணீரை அழுந்த துடைத்தவள் தனது சங்கிலியின் டாலரை பிடித்துக் கொண்டு தனது காயங்களை அப்போதுதான் ஆற்றினாள். 


"நான் மாயக்கல் மேல சத்தியம் பண்ணிருக்கேன் லார்ட். அவரும் பண்ணிருப்பார்.. எங்க த..தனிப்பட்ட விடயத்தை போருக்குள்ள கொண்டுவர மாட்டோம்" என்றுவிட்டு அங்கிருந்து பறந்தாள்…


Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02