விசை-07

 விசை - 07



மதியம் உணவை முடித்த இறைவி, தனது அறையிலிருந்து தலைமுடியைச் சீராய் பின்னலிட்டு வெளியே வர,

“ஏத்தா என்னத்தா இது உடுப்பு?” என்று வீராயி கேட்டார்.

தான் போட்டிருக்கும் சாதாரண பருத்தி சுடிதாரைப் பார்த்துக் கொண்டவள், “இதுக்கு என்ன அப்பத்தா?” என்று கேட்க,

“அந்தப் புள்ள மருதாணி வைக்கமட்டுமில்லாது, உன்னைய வீடு தேடி வந்து பத்திரிகையோடு அழைச்சுதுல? ஏதோ மருதாணி வைக்கிறதுக்குன்னே புதுசா விசேஷமாப் பண்ணுதாங்கன்னுதானே சொன்னா? அது பேரு என்னது?” என்று யோசித்தார்.

மெல்ல சிரித்த இறைவி, “சங்கீத் அப்பத்தா” என்க,

“என்ன கீத்தோ... விசேஷ வீட்டுக்குப் போடுறாப்புலயா போட்டுருக்க நீ?” என்று கேட்டார்.

அவள் “ப்ச்... நான் என்ன விசேஷத்துக்கா அப்பத்தா போறேன்?” என்க,

“அந்தப் புள்ள அப்படித் தானே உன்னைய அழைச்சுது நேத்து வந்து?” என்றாள்.

இறைவி தன் அப்பத்தாவை ஆயாசமாய்ப் பார்க்க, “சீல கட்டிக்கத் தானே ஆத்தா?” என்று கேட்டார்.

“அப்பத்தா” என்று இறைவி பல்லைக் கடிக்க,

“ஏந்த்தா தாயி?” என்று பாவம் போல் கேட்டார்.

“நீங்க என்னத்துக்கு சேலை கட்டிக்கச் சொல்லுறீங்கன்னு புரியாம இல்ல அப்பத்தா” என்று அவள் கூற, வீராயி முகம் வாடியது.

இப்படி நான்கு இடம் நன்றாய் உடுத்திச் சென்றால், யாரேனும் தன் பேத்தியைப் பெண் கேட்டு வருவரா? அதில் அவள் வாழ்வு சிறக்குமா என்பதே அவர் எண்ணம்.

அதைப் புரிந்துகொண்டவள் முகத்தில் அப்படியொரு கடுமை.

“நான் முன்னமே சொல்லிருக்கேன் அப்பத்தா. மறுக்கா இதப்பத்தி மறைமுகமாக்கூடப் பேசப்பாக்காதீங்க” என்று அவள் கூற,

“சரி தாயி... அப்பத்தாவை மன்னிச்சுக்கிடு” என்றார்.

“ப்ச்... அப்பத்தா” என்றவளுக்கு அவரது மன்னிப்பு மனதை உண்மையில் அதிகம் வருத்தியது.

“உனக்கு ஆத்தாவும் அப்பனுமா இருக்கேன் தாயி... எனக்கு நாலு ஆசைனு இருந்திடக் கூடாதா?” என்று அவர் கேட்க, அவள் மனதில் வருத்தத்தை மீறி அந்த முகம் வந்துபோனது.

“சீலை கூட வேணாம் தாயி... தாவணியானும் உடுத்திட்டுப் போயேன். சத்தியத்துக்கும் உனக்காகத்தான் சொல்லுறேன். நாலு எடம் போறவ, கொஞ்சம் பந்தோஸ்தா போனாதானே மரியாதை?” என்று கேட்க,

மெல்லிய புன்னகை கொடுத்தவள், மேலும் அவர் மனம் நோகடிக்க விரும்பாது பாவாடை தாவணி உடுத்தி வந்தாள்.

“பாவாடை தாவணி உடுத்துற வயசா அப்பத்தா எனக்கு?” என்று அவள் கேட்க,

“நீ மறுத்தாலும் அந்த வயசுதான் தாயி உனக்கு. புள்ளை இருக்குங்குறதுக்காக உம் வயசையே மறந்துட்டியாக்கும்?” என்று கேட்டார்.

கசந்த புன்னகையுடன் அவரைப் பார்த்தவள், “வாரேன் அப்பத்தா. வர லேட்டாகும். ஆனாலும் வந்துடுவேன். முகில் சக்தியைக் கூட்டிட்டு வந்து விட்டுடுவான் சாயந்தரம். புள்ளைய என்னமாது பேசித் தூங்க மட்டும் வச்சுடுங்க” என்று கூறிப் புறப்பட்டாள்...

மதியின் தோழியான தாராவின் சங்கீத் வைபோகமே அது.

மருதாணி வைத்துக் கொடுப்பதற்கென்றே, அவளது தோழிகள், சகோதரிகள் மற்றும் அத்தைப்பெண்கள் எனப் பத்துப்பேர் வரிசையாகக் காத்திருக்க, அவளும் பணியைத் துவங்கினாள்.

மேலும் இன்னொரு ஆளையும் அவர்கள் அழைத்திருப்பதால், இரண்டு கலைஞர்களும் ஆளுக்குப் பாதியாகப் பெண்களை ஏற்று, மருதாணி போடத் துவங்கினர்.

அனைத்துப் பெண்களுக்கும் போட்டு முடிக்கவே இரவு வெகு தாமதமாகியிருக்க, இரவு உணவையும் அப்பெண்கள் இருவருக்கும் அவர்களே வழங்கியிருந்தனர்...

அடர் இருள் சூழ்ந்த இரவு வேளை, தனியே செல்வதற்குப் பெரும் அச்சமாகத்தான் இருந்தது இறைவிக்கு. இந்தப் பயத்திற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தால் தங்கள் வாழ்வில் முன்னோக்கிச் செல்ல இயலாது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வேக எட்டுக்களை எடுத்து வைத்தாள்.

கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் தொடர்ந்து மணப்பெண் மற்றும் அவளது தோழிகளுக்கு மருதாணி போட்டுவிட்டதன் உபயம் அவள் உடலை அப்படி அசத்தியது. அவர்கள் அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் காலை செல்லக் கேட்டுக்கொண்டபோதும் மகளைவிட்டு இருக்க இயலாமல் கிளம்பிவிட்டாள்.

இன்னும் கொஞ்சம் தூரம்தான் என்று தன்னைத்தானே வெகுநேரமாக ஊக்கப்படுத்திக்கொண்டு, பேருந்து நிலையத்திலிருந்து தன் வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தாள்.

ஆள் அரவமற்ற, வீடுகளற்ற அந்தச் சாலையில், இரவின் இருளை நீக்கிக் கொஞ்சம் மஞ்சள் ஒளியைப் பரப்பியது, தெருவின் சோடியம் விளக்குகள்.

தனது கைப்பையை இறுகப் பற்றிக்கொண்டு வேக வேகமாக நடந்துகொண்டிருந்தவளின் நடுமுதுகு சில்லிட்டுப் போகும் வகையில் அந்நிகழ்வு நிகழ்ந்தது.

வேகமாய் நடந்து கொண்டிருந்தவள் கரத்தை, ஒரு பழைய மகிழுந்தைக் கடக்கும் நேரம், சட்டென இரும்புப் பிடிக்குள் நிறுத்தினான், நாற்பதுகளைக் கடந்த ஒருவன்.

அரண்டுபோய்த் திரும்பியவள், இருளில் பிரகாசித்த அவன் விழிகளைக் கண்டு, முன் அனுபவம் கொடுத்த கிலியில் அரண்டு போனாள்.

அவனிடமிருந்து வந்த வாடையே, அவன் மது அருந்தியிருப்பதைத் தெரியப்படுத்தியது.

அரண்டுபோய் மூச்சடைக்க அவள் நின்றதெல்லாம் ஒரே நிமிடம் தான்.

அவனைத் தன் பலம் மொத்தம் கொண்டு தள்ளிவிட்டவள் தனது பையில் வேக வேகமாகப் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் பெப்பர் ஸ்ப்ரேவைத் தேட, அவன் கரம் அவள் இடையில் ஊர்ந்து அவளை அதிர்ந்து துள்ளச் செய்தது.

எந்த உணர்விற்குத் தற்போது முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ, அதற்கான முக்கியத்துவத்தைக் கொடுத்தால் தான் தப்ப இயலும் என்று மனதில் ஜபம் போல் கூறிக்கொண்டவள் வேகமாய் தேடி அதைக் கண்டுகொண்ட நொடி, அவள் பையைப் பிடுங்கி வீசியெறிந்தான்.

தெருவோரம் சென்று விழுந்தப் பையைக் கண்டு எச்சில் கூட்டி விழுங்கியவள், படபடவென்று தன் கையோடு வந்துவிட்ட ஸ்ப்ரேவின் மூடியைத் திறந்து அவன் முகத்தில் அளவில்லாமல் அடித்துவிட, கண், மூக்கு, வாயென்று இடம்பொருளற்று உள்ளே சென்ற திரவம் அவன் குடித்த மதுவைத் தாண்டி அவனை எரிச்சல் படுத்தியது.

ஆத்திரத்தின் உச்சியில் தனது கரடுமுரடான கையால் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டவன், அவள் சுதாரிக்கும் முன், அவள் தாவணியை இழுத்து உருவிட, அணிச்சை செயலாய் தன் கரம்கொண்டு தன்னை மறைத்துக்கொண்டு அவனை அதிர்ந்து பார்த்தாள்.

"இப்ப ஓடித் தப்பிச்சுடுவியா?" என்று தெளிவாய் அவன் கேட்ட கேள்வியில் தண்டுவடம் அதிர, ‘தப்பிக்கணும். இந்த நைட்டு யாரு வந்து என்னைப் பார்த்துடப் போறாங்க? கண்டிப்பா இவன்கிட்ட மாட்டக் கூடாது’ என்று மனதோடு கூறிக்கொண்டு ஒட்டமெடுக்கத் தயாராகினாள்.

அவள் சிகையைக் கொத்தாய்ப் பிடித்துக்கொண்டவன் கையை இறுகப் பிடித்துக்கொண்டு ஆழமாய்க் கடித்துவிட்டு, அவள் செல்லப்பார்க்க, மறுகையால் அவள் இடை வளைத்து, அணைத்துக்கொண்டு அவள் வாசம் முகர்ந்தான்.

அறுவறுப்பின் உச்சத்திலும் அவனிடம் மாட்டிவிடவே கூடாது என்ற மனவுறுதி அவளிடம் அதிகம் இருந்தது.

அவன் தீண்டல் தீயாய்த் தகிக்க, வாய்விட்டுக் கத்தித் தப்ப முயற்சி செய்தாள். அந்தத் துரிதமான செயலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. மானம் இழந்த நிலையில் அவள் தனக்கு அடங்கிப் போவாள் என்று அவன் எதிர்பார்க்க, அவள் அடங்காத் திமிருடன் கத்தி உதவிக்கு ஆள் சேர்க்க முயற்சி செய்தாள்.

அவள் வாயைப் பொத்திக்கொண்டு அவளை அப்படியே தூக்கிக்கொண்டு அவன் திரும்ப, அவன் முன் ஆறரை அடி உயரத்திலும், ஓங்குதாங்கான உடற்கட்டிலும், மின்விளக்கின் மஞ்சள் ஒளி, ஒளிவட்டம் போல் பின்னே பிரகாசிக்க, கண்களில் ரத்தநிறப் பளபளப்புடன் கோபமே உருவாய் அய்யனாரைப் போல் நின்றிருந்தவன், சாட்சாத் கற்குவேல் அய்யனாரேதான்.

அவ்வூரில் தவறு செய்யும் தீயவர்களில் அவனை அறியாதார் யாருமில்லையே! அந்தக் காமுகனுக்கும் அய்யனாரைப் பார்த்ததும் தெரிந்திருந்தது.

தன்னை ஒரே கையில் தூக்கி வைத்திருப்பவனை முடிந்தமட்டும் காலால் எட்டி உதைத்து, அவன் பிடியிலிருந்து அவள் விடுபட முயற்சித்துக் கொண்டிருக்க, அய்யனாரின் பார்வைத் தீயில், அந்தக் கயவன் தன்னையறியாமல் பொசுங்கிக் கொண்டிருந்தான்.

அதில் இறைவியை அப்படியே கீழே போட்டுவிட்டு அவன் ஓட, அவன் தெருமுனையைத் தாண்டும் வரையிலும் அமைதியாய்ப் பார்த்து நின்றான்.

அவன் முகத்தை மனனம் செய்துகொண்ட அய்யனாருக்குக் காலைச் சென்று அவனை கைது செய்வதொன்றும் பலத்த காரியம் அல்லவே? தற்போது இந்தப் பெண்ணின் நிலையே முக்கியம் என்பது புரிய, அவளை நெருங்கினான்.

பொத்தென்று தார் சாலையில் போடப்பட்டதில் இடுப்பில் வலி பெற்றுத் துடித்தவளால் சட்டென்று எழுந்திட இயலவில்லை. சுளுக்கிடவில்லை என்றாலும் விழுந்த விசைக்கு வலி பயங்கரமாகவே இருந்தது.

"அம்மா" என்று வாய்விட்டுக் கதறியவள் கடினப்பட்டு எழுந்து அமர்ந்திட, ஒற்றைக் கால்மடக்கி அமர்ந்து அவள் தோள்பற்றி எழ உதவி செய்ய முயற்சித்தான்.

அவன் வருகையையே உணர்ந்திடாத இறைவி, அவன் கைபட்டதும் அச்சத்தில் துள்ளி அவனைத் தள்ளிவிட, அதை எதிர்பாராத அய்யனார் அவளையும் இழுத்துக்கொண்டே சாய்ந்தான்.

அதில் பதறிப்போனவள் கண்ணீர் அவன் கன்னத்தில் முத்து முத்தாய்ப் பொழிந்தது.

அவனிடமிருந்து விலக அவசர அவசரமாய் அவள் முயற்சிக்க, "ஷ்ஷ்... நீ பாதுகாப்பாதான் இருக்க" என்றவன் குரலில் ஆணி அடித்தாற்போல் விறைத்தவள் பட்டென விழி திறந்து அவனைக் கண்டாள்.

அத்தனை நேரமில்லாத ஒரு பாதுகாப்பு வளையம் அவளைச் சூழ்ந்துகொண்ட உணர்வைக் கொடுக்க, அவள் மூச்சு மெல்ல சீரானது.

"ஒண்ணுமில்லமா. ச்சில்" என்றவன் குரல் தீண்டியதில் முழுதாய் சுயம் மீண்டவள் தன்னிலை உணர்ந்து பதறி எழுந்தாள்.

தன்னை மறைத்துக்கொண்டு மண்டியிட்டு அமர்ந்தவள் சுற்றும் முற்றும் அவசர அவசரமாய்த் திரும்பிப் பார்த்துத் தன் தாவணியைத் தேட, அப்போதுதான் அவனும் அவள் கோலத்தைக் கவனித்தான்.

அவளை நினைத்துக் கொஞ்சம் சங்கடம் உருவாக, அவசரமாய் தானும் தேடியவன் சாலையோரம் தெரிந்த அவளது துணியைக் கண்டு அதை எடுத்து வந்து கொடுத்தான்.

கண்ணீர் பெருகி ஓடியது. மனத்தால் மணம்கொண்ட ஒருவனின் முன்னால் சந்திக்கும் ஒரு சந்திப்பில் கூடத் தான் நல்ல நிலையில் இல்லையே என்று தீயாய்ச் சுட்ட இதயத்தை சமன் செய்யத் தெரியாமல் பொங்கிவந்த கேவலை இதழ் கடித்து அடக்கியபடி அதை வாங்கிக் கொண்டாள். அதையும் மீறி அவ்வப்போது அவள் கேவல் ஒலி வெளிப்பட, மனம் கொள்ளும் இனம் புரியா ரணத்தை அவளால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை.

எழுவதற்கு கடினப்பட்டபோதும் அவன் உதவியை அவள் நாடவில்லை. அவள் நாடாதபோதும் அவளுக்கான உதவியைச் செய்ய அவன் தயங்கவில்லை.

அவன் தூக்கிவிட்டத் துணையில் எழுந்தவள் வேக வேகமாகத் தன் ஆடையைத் திருத்திக்கொண்டாள்.

அவளது இளமையே சொன்னது மிஞ்சிப்போனால் இருபது வயதுப் பெண்ணாகத்தான் அவள் இருப்பாள் என்பதை.

உடையைத் திருத்திக்கொண்டவள் தனது கைப்பையைத் தேடியபடி சாலையோரம் வந்தாள். கைகால்கள் அத்தனை நடுங்கியபோதும், அவள் துரிதமாகவே செயல்பட்டாள்.

அங்கே அவளது கைப்பையும் உடைந்த மருதாணிக் கலவை கொண்ட நெகிழிப் பையும் இருந்தது. விசேஷம் இல்லாத பட்சத்தில் தன் மகள் ஆசையாகக் கேட்டால் கூட, வீண் செய்திடக் கூடாதென்று பார்த்துப் பார்த்து அவள் செலவிடுவது மருதாணிதான். தற்போது இப்படி முழுதாய் ஒரு பையே உடைந்து வீணாய்ப் போனதைக் காண அவளுக்கு நெஞ்சம் அடைத்தது.

தான் தப்பித்ததே பெரிது என்பது புரிந்தாலும் கூட ஏனோ அது உடைந்துபோனதற்கான வருத்தத்தை வெளிகாட்டாது இருக்க முடியவில்லை.

புரியாப் பார்வையோடு அய்யனார் வரவும், தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பையை மட்டும் எடுத்துக் கொண்டாள்.

அதில் தனது முக்கியப் பொருட்கள் வெளியே சிதறாமல் பத்திரமாக இருப்பதை உறுதிசெய்து கொண்டு திரும்பியவள், சற்றும் யோசிக்காது அவன் காலில் விழுந்து விட்டாள். அவள் உடல் அழுகையில் குலுங்கியது.

தெரிந்தோ தெரியாமலோ இரண்டாம் முறையாகத் தன் மானத்தையும், தன் உயிரையும் காப்பாற்றிக் கொடுத்தவனுக்காக அவள் கொடுப்பது தன் சுயமரியாதையைத் தாண்டிய ஒரு நன்றிதான் என்றே தோன்றியது. அவன் பாதம் பணிவதில் தன் சுயமரியாதைக்குப் பெரிதாக எந்த இழுக்கும் வந்திடுவதாய் அவள் நினைக்கவுமில்லை.

அவள் செயலில் பதறி விலகியவன், "ஹே என்னமா நீ?" என்க, உடல் குலுங்க அழுதபடி, "நன்றி சார்" என்று கூறினாள். அந்த அமைதியான சாலையில் அவள் அழுகையின் ஒலி மட்டுமே... அவனை என்னவோ செய்தது.

அவளை நிமிர்த்தி நிற்கச் செய்தவன், "யாரு நீ? இந்த நேரம் என்னப் பண்ற இங்க?" என்க,

எங்கே தன்னைத் தவறாக எதுவும் புரிந்துகொள்வானோ என்ற பயத்தில், "ஊர் சுத்தவெல்லாம் வரலைங்க சார். நா... நான் மெஹந்தி ஆர்டிஸ்ட். ஒரு விசேஷத்துக்குக் கல்யாணப் பொண்ணுக்கு மருதாணி போட்டுட்டு வரேன்" என்று படபடப்பாய்க் கூறினாள்.

"அர்த்த ராத்திரியில பொண்ணுங்க ஊர் சுத்தக்கூடாதுன்னு முட்டாள்தனமாப் பேசுறவனும் நானில்ல. அதே நேரம் தப்பிக்கும் துணிவோ, துணையோ இல்லாம வந்து மாட்டிக்கிட்டவங்களுக்குச் சப்போர்ட் பண்றவேனும் நான் இல்லமா. நீயும் அவன்ட்டருந்து தப்பிக்கப் போராடினதுலயே உன் தைரியமும் தன்னம்பிக்கையும் தெரிஞ்சுது" என்று அவன் கூற,

அவள் மனதில் அப்படியொரு நிம்மதி. மனதால் மணம்கொண்ட ஒருவனிடம் வாங்கும் பாராட்டு கசந்திடுமா?

"யாரு நீ? எங்க போகணும்? வா நானே கொண்டுவிட்டுறேன்" என்று அவன் கூற,

அவனுக்குத் தன்னைத் தெரியவில்லையே என்ற கவலை சற்றும் அவளுக்கில்லை. அவன் பார்த்துவரும் நூற்றுக்கணக்கான மனிதர்களில் அவளும் ஒருத்தி. அவ்வளவே என்பதில் உறுதியாக இருந்தாள். அவன் தன்னை நினைவு வைத்திருக்க வேண்டும் என்ற ஆசையும் அவளுக்கிருக்கவில்லை என்பது வேறு கதை.

"நான் இறைவி சார். இங்கன பக்கத்துலதான் வீடு. ஒரு விசேஷத்துக்கு மருதாணி போட்டுட்டு வந்தேன். லேட்டாப்போச்சு" என்றவள் அந்தக் கயவன் ஓடிச்சென்ற திசையை ஒருமுறை அச்சத்துடன் பார்த்துக் கொண்டாள்.

"அவன் வரமாட்டான். நீ வா" என்று அவளை அழைக்க, சற்றும் தயக்கமும் யோசனையுமில்லாது அவனோடு சென்று அவன் மகிழுந்தில் ஏறிக் கொண்டாள்.

அவளுக்கு முதலில் தண்ணீரை எடுத்துக்கொடுத்தவன், "அடி எதுவும் பட்டிருக்காமா?" என்க,

"இல்லை சார்" என்று தண்ணீரை வாங்கிப் பருகினாள்.

அவள் அலைபேசி 'வாராயோ தோழி வாராயோ தோழி' என்று பாட்டிசைக்க, அவனது இதழ்கள் மெல்ல அந்தப் பாடலில் புன்னகைத்துக் கொண்டது.

வேகமாய்த் தனது அலைபேசியை எடுத்தவள், "அப்பத்தா" என்க,

"தாயி என்ன கண்ணு ஒரு நிமிஷத்துல பயம் காட்டிபுட்ட? நீ போன் எடுக்கலங்கவும் நெஞ்சுகூடே பதறிப்போச்சு. எங்கனத்தா இருக்க?" என்று அதீத பதட்டத்துடன் அவர் கேட்டது, ஒளிபெருக்கியில்லாமலே அவனுக்கும் கேட்டது.

"இந்தா பஸ்ஸுலருந்து இறங்கிட்டுருந்தேன் அப்பத்தா. அதான் எடுக்கலை. நாலு எட்டுதான். வந்துடுவேன். நீ உறங்கத் தானே? என்னத்துக்கு இவ்வளவு நேரம் கண்ணு நோக முழிக்குற? உன்னைய வந்து வச்சுக்குறேன்" என்று திட்டியவள் அழைப்பைத் துண்டிக்க, அவளது படபடப்பான வெடிப்பிலும், கள்ளமில்லாப் பாசத்திலும் அவன் இதழ்கள் இன்னும் விரிந்தது.

தன் வீட்டு விலாசத்தை இறைவி கூற, வண்டியை இயக்கி அடுத்த ஐந்து நிமிடத்தில் அவளை அங்கு இறக்கிவிட்டான்.

"ரொம்ப நன்றி சார். நீங்க மட்டும் வரலைன்னா நான் அம்புட்டுதான்" என்று இறைவி கூற,

"இல்லமா. உன் தைரியத்துக்கு நீ எப்படியும் தப்பிச்சிருப்ப. எதுவும் யோசிக்காத. நல்லாப்படி" என்று கூறினான்.

அவள் வயதைக் கொண்டு, அவள் படிக்கும் பெண் என்றும், பகுதி நேரத்தில் இந்த வேலைப் பார்க்கின்றாள் போலும் என்றும் அவனாக நினைத்துக்கொண்டான். அது புரிந்தும் கூட, எதையும் கூறி அவள் விளக்கவில்லை.

சின்னப் புன்னகையுடன் சரியென்று அவள் தலையாட்ட, வெளியே அவசரமாய் வந்த அவளது அப்பத்தா, "தாயி என்னாச்சு?" என்று பதறினார்.

அவருக்கு இறைவி பதில் கூறும் முன், "உங்க பேத்தி பஸ் ஸ்டாண்டுல தனியா நின்னுட்டுருந்தா ஆச்சி. நேரங்கெட்ட நேரமாருக்கேன்னு கொண்டு வந்து விட்டேன். நான் இங்க போலீஸா இருக்கேன்" என்று அய்யனார் கூறினான்.

"அய்யா ராசா. ரொம்ப நன்றிய்யா. நீ நல்லா இருப்ப" என்று வாழ்த்தியவர், "பிள்ளையச் சரிகட்டித் தூங்க வச்சுப்புட்டேன். எப்ப வருவியோன்னு எனக்குத் தான் நெஞ்சு நடுங்கிச்சு. உள்ள வா தாயி" என்று பேத்தியிடம் கூறினார்.

சிறு புன்சிரிப்புடன் தலையசைத்தவள், அவனைக் கண்டு "நன்றி சார்" என்க, "இட்ஸ் மை டியூட்டிமா" என்றுவிட்டுப் புறப்பட்டான்.


Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02