விசை-08

 விசை - 08



தனது அறையில் அமர்ந்திருந்த இறைவி, தான் தீட்டிய ஓவியமாய் தன் கரம் குடிகொண்ட தன்னவனை ரசித்துப் பார்த்தாள்.

காவலதிகாரியாய் கம்பீரமாய் நின்றிருந்தவனின் கண்களில் அவள் எப்போதும் காணும் தீட்சண்யம் இன்றி, அவளது கரி எழுதுகோலால் ஆன ஓவியத்திலுள்ள கண்களில் ஒரு கனிவு குடியிருந்தது.

முந்தைய நாள் அவன் தன்னை இரண்டாம் முறையாக ரட்சித்தத் தருணம், மனதைக் கணக்கச் செய்த அதே கணம், இதம் காணவும் செய்தது. இருவேறு முரணான உணர்வுகளும், அவன் ஒருவனால்...

அதனை அவள் ஆசை தீர ரசிக்கும் நேரம், “இரா…” என்று முகில் அழைக்கும் சப்தம் கேட்டது.

நொடியில் அவளுக்கு மூச்சே முட்டுமளவு பதட்டம் சூழ்ந்தது.

“அ... ஆங் மு... முகி…” என்றபடி பதறி எழுந்தவள், அவசர அவசரமாய் அலமாரியைத் திறக்க,

அவனோ கதவினைத் திறந்திருந்தான்.

அவள் 'ஆங் முகி' என்றதில் கதவினைத் திறக்க அனுமதி கோரியதாய் நினைத்து அவன் கதவைத் திறந்திருக்க, அவசரமாய் காகிதத்தை உள்ளே வைத்தவள் சடாரென மூடியதில் அவள் கரத்தில் நச்சென்று அடித்திருந்தது.

“ஸ்ஸ் ஆ…” என்று அவள் கையை உதற, கோடாய் அவள் விரலிலிருந்து ரத்தம் வடிந்தது.

“ஏ இரா…” என்றபடி பதறி அவன் வர,

அவன் குரலில் உள்ள பதட்டத்தில், என்னவோ ஏதோவென, பேத்தியுடன் வீராயியும் அறைக்குள் வந்தார்.

“லூசாடி நீ? பார்த்துப் பூட்ட மாட்டியா?” என்று அவன் கடிந்துகொள்ள,

அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை. வலியைக்காட்டிலும் அத்தனை அத்தனை பதட்டமாய் அவள் முகத்தில் வியர்வை பூப் பூத்தது.

“அ... அது... கவனிக்கலை” என்று அவள் வார்த்தையைக் கோர்க்க முயற்சிக்க, அவளைக் குளியலறைக்குள் இழுத்துச் சென்றவன், அவள் கையை நீரில் காட்டி, ரத்தத்தை சுத்தம் செய்து அழைத்து வந்தான்.

வீராயி மஞ்சள் பொடியைக் கொண்டுவந்து காயத்தில் வைத்து அழுத்த, முகிலின் பார்வை அவளில் அழுத்தமாய் படிந்தது.

அவள் கரம் பற்றி வீராயியிடம் காட்டிக்கொண்டிருந்தவன், அவளை விடுத்து அலமாரி பக்கம் சென்றான்.

அவன் தன் கரத்தை விட்டு நகரவுமே, அவன் புறமாகத் தன் பார்வையைத் திருப்பிய இறைவி, அவன் அலமாரி அருகே செல்வதில் மிகுந்த படபடப்புக்கு ஆளானாள்.

வார்த்தை வரவில்லை... நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள, அவனையே அதிர்வாய்ப் பார்த்து நின்றாள்.

நில் என்று சொல்லவில்லை, செல்லாதே என்றும் சொல்லவில்லை... ஆனால் அவள் மனம் வேண்டாம் என்று அறற்றிக்கொண்டிருந்தது.

அலமாரி அருகே சென்றவன் அவளைத் திரும்பிப் பார்க்க, அவள் முகத்தில் தற்போது வியர்வை ஆறாய் வழிந்துகொண்டிருந்தது.

அவளையே ஆழ்ந்து பார்த்தவன், அலமாரியை நன்றாக மூடிவிட்டு அவள் அருகே வந்தான்.

அவளையும் அறியாமல் அவளிடம் ஆசுவாசப் பெருமூச்சு.

“அம்மா... வலிக்குதா?” என்று சக்தி கேட்க,

சட்டென மகள் புறம் திரும்பினாள்.

“அம்மா…” என்று சக்தி மீண்டும் அழைக்க,

“அ... அம்மாக்கு ஒன்னுமில்லடா” என்றாள்.

“கைல உவ்வாம்மா” என்று சக்தி கூற,

“அது சின்னதுதான்டா” என்று சமாளித்தவள், “அ... அப்பத்தா நீங்க பாப்பாக்கு சுட்டு வச்ச பணியாரத்தைக் குடுங்க” என்று அவர்களை அனுப்பினாள்.

அமைதியாய் நின்றிருக்கும் முகிலைப் பார்த்த இறைவி, “அ... அ... முகி நான்…” என்று தடுமாற,

“என்கிட்ட என் இரா எல்லாத்தையுமே சொல்லணும்னு இல்லை. அவளுக்கே அவளுக்கான ரகசியங்களும் இருக்கலாம்” என்று கூறினான்.

நண்பனின் புரிதலில் கலங்கத் துடித்த கண்களைக் கட்டுப்படுத்தியவள், கட்டிலில் அமர, அவள் அருகே வந்து அமர்ந்தான்.

அவள் தோளில் கரம் போட்டு, அவள் மனநிலை மாற்றும் பொருட்டு, “நேத்து போயிட்டு வந்த பங்ஷன் எப்படிப் போச்சு?” என்று கேட்க, அவளையும் அறியாமல் ஒருநொடி அவள் உடல் அதிர்ந்தது.

அதை அவளை அரவணைத்திருந்த முகிலாலும் புரிந்துகொள்ள முடிந்தது.

“இரா... என்னாச்சு?” என்று முகில் கேட்க, அவள் விழியோரம் ஈரம் துளிர்த்தது.

அவள் கண்கள் அலைபாய்ந்தது. அவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்று அவளுக்குள்ளேயே பெரும் போராட்டம்.

சொல்ல நாக்கு எழவும் இல்லை. கூச்சமா? பயமா? கலக்கமா? அவளால் பிரித்தறிய முடியவில்லை.

“இரா…” என்று அமைதியாய் அழைத்தவன் அவள் தலையை மிக பரிவாய் கோதினான்.

அவன் மடியில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டவள், கண்ணிலிருந்து தற்போது மளமளவென்று கண்ணீர்...

“இரா என்னம்மா?” என்று பரிவாய்க் கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எ... என்னை தப்பா நினைச்சுட மாட்ட தானே முகி?” என்றாள்.

அவள் வார்த்தையில் பதறிவிட்டான்.

“என்ன இரா பேசுற?” என்று அவன் கேட்க, எழுந்து அமர்ந்தவள், அவன் தோளில் முகம் மூடி முந்தைய நாள் நடந்ததைச் சொல்லி முடித்தாள்.

அவனுக்கு அதிர்ச்சி, கோபம், கலக்கம் என்று பல உணர்வுகள். தன் அத்தானென்று அறியாதபோதும் அந்தக் காவலனுக்கு மனதிற்குள் நன்றியும் சொல்லிக்கொண்டான்.

“இரா…” என்று அவன் அவள் முகம் தாங்க,

“எனக்கு ஏன்டா இந்தத் தொல்லை? ச்சீ... எரிச்சலா வருதுடா” என்று கதறலாய்க் கூறியவள் அடுத்த கணமே, “அவன் மேல கம்ப்ளைன்ட் தரணும்டா” என்றாள்.

முகிலின் இதழ் பூவாய் மலர்ந்தது.

இதுதான்... இந்தத் தைரியம் தான் அவனது இராவிடம் தனித்துவமானது என்று எண்ணி உவகைக் கொண்டான்.

“கொடுத்துடலாம்” என்று அவன் கூற,

“இப்பவே... போலாமா?” என்று கேட்டாள்.

கண்களில் கண்ணீர். அதில் பாதி கோபம், மீதி வலி.

“எனக்கும் ஒரு பொண்ணு இருக்காடா... நா... நாளைக்கு அவளுக்கும்...” என்று கூறும்போதே அவள் உடல் நடுங்கியது...

“ஷ்ஷ்... இரா... ச்சில்... ஒண்ணுமில்லமா…” என்று அவன் தட்டிக்கொடுக்க, தன் கண்ணீர் துடைத்து எழுந்தவள், “வா... போலாம்…” என்றாள்.

மெல்லிய புன்னகையுடன் எழுந்தவன், அவளை உண்மையில் அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றுவிட்டான்.

அதுவும் அய்யனார் வேலை பார்க்கும் காவல் நிலையம்.

“எதுக்குடா இங்க? நம்ம ஏரியாக்கே போயிருக்கலாமே?” என்று அவள் கேட்க,

“என் வேலு அத்தான் தெரியும்ல? அவங்க நம்ம முருகேசண்ணா ஸ்டேஷன்ல தான் இப்ப மாத்தலாகி வந்திருக்காங்க. அவங்கட்டயே சொல்லலாம்” என்றவனாய், அவளோடு உள்ளே சென்றான்.

அங்கு அவன் அத்தானுடன் பணிபுரியும் காவலாளி, முகிலைக் கண்டதும், அவனைக் கண்டுகொண்டோராய், “முகில் தம்பி. வாப்பா. வாம்மா” என்றார்.

“முருகேசண்ணே... அத்தான் இல்லையா?” என்று அவன் கேட்கும் நேரம் ஆச்சரியமான பாவத்துடன் அவனது தோளைச் சுரண்டிய இறைவி, சிறையில் அமர்ந்திருந்த ஒருவனைக் கை காட்டினாள்.

அவள் கை காட்டிய திசை பக்கம், “என்ன இரா?” என்றபடி பார்த்தவன், சிறையிலிருப்பவனைப் பார்த்துவிட்டு அவளைக் கேள்வியாய் நோக்க,

“இ... இவன்தான்டா” என்றாள்.

“முருகேசு அண்ணே... இவனை யாரு புடிச்சு உள்ள போட்டது? என்ன காரணம்?” என்று முகில் கேட்க,

“ஏதோ நைட்டு தண்ணியப்போட்டுப் பொம்பளப் புள்ளைட்ட தகராறு பண்ணியிருக்கான்னு குமார் சாருதான் காலையில கொண்டாந்து அடைச்சாங்க” என்று அவர் கூறினார்.

அந்தக் குமார் சாரிடம் கூறியது அய்யனார் தான் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

மெல்லிய புன்னகையுடன், “அப்ப நாங்க வந்த வேலையும் முடிஞ்சுதுன்னு சொல்லுங்க” என்றவன், அவரது புரியா முகம் கண்டு புன்னகைத்து, “அத்தானைப் பாக்கத்தான் வந்தேன். நான் பிறகு வீட்டுக்கே போய்ப் பாத்துக்குறேன்” என்றவனாய் இறைவியுடன் கொண்டுவந்த புகார் கடிதத்தை மட்டும் கொடுத்துவிட்டு, விடயத்தைக் கூறிச் சென்றான்.

இறைவிக்கு அவள் மனதால் மணம் கொண்டவனின் செயல் தான் இதுவென்று நன்கு புரிந்தது.

“உன்னைக் காப்பாத்தின போலீஸே வேலையை முடிச்சுட்டாங்க போல இரா” என்று அவன் கூற,

“ம்ம்…” என்றவள் ரகசியமாய்ச் சிரித்துக் கொண்டாள்.

அங்கு தனது தடையவியல் துறையைச் சேர்ந்த பணியாளனான ரிஷியுடன் பேசிக்கொண்டிருந்தான், கற்குவேல் அய்யனார்.

“நீ கெஸ் பண்ணது சரிதான் வேலு. போதைப்பொருள் கைமாறல் பவுடராவோ, மாத்திரையாவோ இல்லை. காகிதத்தாள் போலச் செய்து விக்குறாங்க. அதனாலதான் ஸ்கூல் பசங்ககிட்ட விற்பனையாகவும், அவங்க பெத்தவங்க கண்டுபிடிக்காம இருக்கவும் ஈசியா இருக்கு. இந்த நோட் ஷீட்லாம் எங்க தயாரிக்குறாங்கன்னு கண்டுபிடிச்சா பெட்டரா இருக்கும் உனக்கு” என்று ரிஷி கூற,

“ம்ம்... அவங்க வீட்டைச் சோதனை போட்டப்ப போதை மருந்தே கிடைக்கலை. அப்புறம் எப்படிச் சாப்பிடுறாங்கன்னு சந்தேகமா இருந்தது. அந்த ஒரு பையனோட பேக் மட்டும் சந்தேகத்தின் அடிப்படையில எடுத்துட்டு வந்தேன். ரெண்டு நாள் முன்ன பார்க்கும் போது இது மட்டும் வித்தியாசமாத் தெரிஞ்சது. அதான் உன்கிட்ட கொண்டு வந்தேன்... என்ன காம்பினேஷன்?” என்று கேட்டான்.

“ப்யூர் ஹெராயின் தான் வேலு. இப்படி காகிதமா ஆக்கச் சில கெமிக்கல்ஸ் சேர்த்திருக்காங்க” என்று ரிஷி கூற,

“ஸ்கூல் பசங்களே இப்படி அடிக்ட் ஆனா நாடு என்னத்துக்கு ஆகுறது?” என்று முணுமுணுத்துக்கொண்டான்.

“ரொம்பக் கஷ்டம்டா... எவ்வளவு படம் எடுக்குறானுங்க. ஆனா இப்பெல்லாம் படத்தைப் பார்த்தே புதுசு புதுசா ஐடியாவத்தான் புடிச்சுக்கிடுறானுங்க தப்பு செய்ய” என்று ரிஷி கூற,

அமோதிப்பாய்த் தலையசைத்தவன், “சரிடா. நான் ஸ்டேஷன் கிளம்புறேன்” என்று புறப்பட்டான்.

அங்கு காவல் நிலையம் வந்தவன், சிறைச்சாலையில் சற்றே போதை தெளிந்து அமர்ந்திருந்த அந்த ஆடவனைக் கண்டான்.

முந்தைய நாள் நினைவுகள் அவனுள் நொடியில் வந்து சென்றது.

சிறைச்சாலைக்குள் நுழைந்தவன், “அம்புட்டுக்குச் சுகம் கேக்குது என்ன? ஒரு பத்து வயசு கூடவா இருந்தா அது உன் பிள்ளை வயசுக்கு இருக்கும்” என்று கூறி, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

சற்றே நிசப்தமாய் இருந்த காவல் நிலையமே, அவன் அறைந்த சப்தத்தில் ஒரு நொடி உதறல் கண்டது.

“அம்புட்டுக்கு போதையோடப் புடி” என்றவன் ஓங்கி மீண்டும் அறைய, நிலைதடுமாறி விழுந்தவன் கால்சட்டைப் பையிலிருந்து குட்டி டப்பா விழுந்தது. விழுந்த விசைக்குத் திறந்துகொண்டு அதிலிருந்து குட்டிக் குட்டி சதுர வடிவக் காகிதங்கள் சிதற, அதைக் கூர்ந்து பார்த்தவன் மெல்ல அதனை நெருங்கினான்.

படபடப்பாய் அந்த மனிதன் அவற்றை எடுக்க, ஒற்றைக் காலை மடக்கி அமர்ந்தவன் அதிலிருந்து ஒன்றை எடுத்துப் பார்த்தான்.

ஆம்! அது போதைக் காகிதமே! அந்தத் தீயவனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தவன், “இத எங்க வாங்கின?” என்று கேட்க,

அவன் அச்சத்தில் மருண்டு விழித்தான்.

அய்யனார் கொடுத்த அடியில் கலங்கி உதட்டில் ரத்தம் வழிய, கன்னம் அசைக்கக் கூட முடியாதளவு வலியை உணர்ந்தான்.

அதில் அரண்டுபோனவன் எச்சிலைக் கூட்டி விழுங்க, அவனைச் சுவரோடு சாய்த்தவன், “கேக்குறேன்ல?” என்று கர்ஜித்தான்.

உருமலாய்க் கேட்ட அவனது குரலில் இருந்த கோபத்தில், முருகேசன் பதறிக்கொண்டு வந்தார்.

“ச... சார்... இ... இது... எ... என் ஃபிரெண்டுக்குத் தெ... தெரிஞ்ச இ... இடத்துல செய்றாங்கன்னு... அ... அவன்தான் வாங்கித் தந்தான்” என்று அவன் பயத்தில் குரல் தந்தியடிக்கக் கூற,

“யாருடே உன் ஃபிரெண்டு?” எனக் கத்தினான்.

அவன் தனது நண்பனின் விலாசம் கூற, “முருகேஸ் அண்ணா” என்று கத்தி அழைத்தான்.

வேகமாக உள்ளே வந்தவர், “புரிஞ்சுது சார்” என்றவராய், அந்த முகமறியாதவனின் விலாசத்தைக் குறித்துக்கொண்டு சென்றார்.

சென்று தன் இருக்கையில் பொத்தென்று அமர்ந்தவன், தலையைத் தாங்கிக்கொள்ள, காற்றுக்குச் சிறகடித்துத் திறந்துகொண்ட காகிதத்தைப் பார்த்தான்.

அழகிய கையெழுத்தில் ஒரு புகார் கடிதம். எடுத்து வாசித்தவனுக்கு அது இறைவி என்பது புரிந்தது. “குமார்” என்று அவன் அழைக்கவும், குமார் அங்கே வர, “இந்த லெட்டர்?” என்று இரு விரலால் அதைக் காட்டியபடி கேட்டான்.

“எஸ் சார்... நானே சொல்ல இருந்தேன். அவன் நேத்து ஹராஸ் பண்ண அந்தப் பொண்ணே வந்து கம்ப்ளைன்ட் லெட்டர் தந்திருக்காங்க. முருகேசன் சார் தந்தாரு. அதான் உங்க டேபிள்ல வச்சேன்” என்று குமார் கூற,

சரியென்ற தலையசைப்பைக் கொடுத்தான்.

அவனை ஒருநாள் உள்ளே வைத்து விடுவதாக நினைத்திருந்தவனுக்குப் பாதிக்கப்பட்டவளிடமிருந்தே புகார் கடிதம் வந்ததால் சட்டப்படி உள்ளே வைக்க அது போதுமானதாக இருந்தது.

வேலையைத் துரித கதியில் செய்தபோதும், அப் பெண்ணின் தைரியம் மிக்கச் செயலில் அவன் மனம் அவளை மெச்சிக்கொள்ளவும் செய்தது. அம்மெச்சுதல் தான் அவள் மீது அவன் தலை குப்புற விழப்போவதற்கான அறிகுறியோ?


Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02