விசை-09

 
விசை-09

“அத்தான்.. அவசரமா வேலை வந்துடுச்சு எனக்கு ஒரு ஒதவி செய்றீங்களா?” என்று முகில், அய்யனார் அழைப்பை ஏற்றதும் கூறியிருக்க,

“சொல்லுடா. என்னாச்சு?” என்றான்.

“அத்தான்.. அங்க மில்லுல ஏதோ வர்கர்ஸ் குள்ள சண்டை” என்று அவன் முடிக்கும் முன், “நா வரவா?” என்று அய்யனார் கேட்க,

“இல்ல இல்ல அத்தான். அத நானே பாத்துப்பேன். பள்ளிக்கூடத்துக்குப் போய் புள்ளைகல கூட்டிவரனும்” என்றான்.

“அவ்ளோ தானா? எப்படா போகனும்?” என்று அய்யனார் கேட்க,

“நாலு மணிக்கு விட்ருவாக. இப்ப நீங்க கிளம்பினா சரியாருக்கும். நம்ம தர்ஷனயும் பாப்பாவையும் கூட்டி வரனும். இராவும் வேலையா போயிருக்கா. புள்ளைய கூட்டிட்டு வர சொல்லிருந்தா” என்று முகில் கூறினான்.

“பாப்பா யாருடா?” என்று அய்யனார் புரியாது கேட்க,

“ஸ்ஸ்..” என்று தலையில் தட்டிக் கொண்டவன், “என் பிரெண்டு சொல்வேன்ல அத்தான்? இறைவி. அவளோட பொண்ணு சக்தி” என்று கூறினான்.

“சரிடா. எப்படியிருப்பா? தர்ஷ் கிட்ட கேட்டா சொல்லுவான்ல?” என்று அவன் கேட்க,

“ரெண்டும் ஒன்னாத்தான் வருமுங்க அத்தான்” என்றான்.

“சரி நீ பாத்து போ. எதாதுனா கூப்பிடு” என்று அய்யனார் அவனுக்கு ஆயிரம் பத்திரம் கூற,

புன்னகையாய், “சரி அத்தான்” என்று வைத்தான்.

தனது கை கடிகாரத்தைப் பார்த்த கற்குவேல் அய்யனார், முருகேசன் அண்ணனிடம் சொல்லிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு தர்ஷன் பயிலும் பள்ளிக்குச் சென்றான்.

சரியாய் அவன் சென்ற நேரம் குழந்தைகளை விட்டிருக்க, உள்ளே சென்றவன், ஒன்றாம் வகுப்பு மாணவர்களை பெற்றோருடன் ஆசிரியர் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கும் இடத்தில் தர்ஷைக் கண்டான்.

“ஐ சிச்சா..” என்று தர்ஷ் குதூகலமாக ஓடிவர,

“ஏ தர்ஷன்..” என்று ஆசிரியர் அவனைக் கண்டித்து நிறுத்தினார்.

அங்கே கற்குவேல் வந்து நிற்கவும், அவனது காவல் உடையைக் கண்டு மற்ற ஆசிரியர்கள் பரபரப்பாயினர்.

“சார்?” என்று அவர் கேள்வியாய் அழைக்க,

“நான் தர்ஷன் சித்தப்பா” என்று கூறி தாங்கள் குடும்பமாய் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை அடையாளத்திற்காகக் காட்டினான்.

முன்பே முகில் அழைத்து ஆசிரியரிடமும் விடயத்தைக் கூறிதான் இருந்தான்.‌ அதனால் அவரும் வேறு விசாரிப்புகள் இன்றி, “சக்தி” என்று அழைக்க, தூக்க முடியாமல் தனது தோள் பையையும், உணவுப் பையையும் தூக்கிக் கொண்டு வந்தாள், சக்தி.

பார்த்ததும் அய்யனாரின் முகம் தன்னைப் போல் மலர்ந்தது.

‘ஐ மம்மியோட வெல் விஷ்ஷர்’ என்று மனதோடு நினைத்தவள் அவனிடம் குதூகலமாய் ஓடிவர,

“சக்தி.. இவங்க என் சிச்சா” என்று தர்ஷன் கூறினான்.

“அப்புடியா தர்ஷ்?” என்று தன் கோலிக் குண்டு கண்களை விரித்துக் கொண்டு அவள் கேட்க,

அவள் பாவனையில் அய்யனாரின் புன்னகை விரிந்தது.

அவளது முக அமைப்பு ஐம்பது சதவீதம் இறைவியைப் போலத்தான் இருக்கும். அதனால் அவளுடைய முகம் அவனுக்கு எங்கோ பார்த்த உணர்வையும் கொடுத்திருந்தது. முந்தைய நாள் இறைவியைச் சந்திக்காமல் இருந்திருந்தால் அதுவும் தோன்றியிருக்காது.

“அப்ப நாம அவங்களோடத்தான் போகப்போறோமா? முகி மாமா வல்லயா?” என்று சக்தி கேட்க,

“உன் முகி மாமானுக்கு வேலையிருக்காம்” என்று அய்யனார் கூறினான்.

“ஓ..ஓகே ஓகே” என்றவள் அவனுடன் வெளியே நகர்ந்தபடி, “நீங்க போலீஸ் தான?” என்று கேட்க,

அட்டகாசமாய் சிரித்தவன், “கண்டுபிடிச்சுட்டியே?” என்றான்.

“எனக்கு உங்கள முன்னவே தெரியும். மம்மி பேப்பர்ல காத்திருக்காங்க” என்று மழலையாய் அவள் கூறியது என்னவோ, அவளது அன்னை வரைந்த தாளைத்தான். ஆனால் அவன் செய்தித்தாளில் என்று நினைத்துக் கொண்டான்.

“ஓ.. அப்புடியா?” என்றபடி அவர்களில் தர்ஷைத் தனக்குப் பின்னரும், அவளைத் தனக்கு முன்னரும் அமர்த்தி வண்டியை இயக்கியபடி, “வேறென்ன தெரியும்?” என்றான்.

“நீங்க நிறையா நல்லது செய்வீங்க. குட் குட் மேன்னு மம்மி சொல்வாங்க. நீங்க வெல்விஷர்” என்று அவள் கூற, அவனுக்கு அது வித்தியாசமாக தெரியவில்லை. சாதாரணமாக தனது செயல்களைச் செய்தித்தாளில் பார்த்து அப்பெண்மணி கூறியிருப்பார் என்றே கருதினான்.

“சிச்சா பெரிய போலீஸ் இப்ப. ஒரிஜினல் டுப்பாக்கிலாம் இக்கு சக்கி” என்று தர்ஷன் கூற,

“அப்புடியா தர்ஷ். நீ வச்சுப்பியே.. அதுபோல சுதுமா?” என்று கேட்டாள்.

“அது பொம்ம சக்கி. இது ரெஜம்மா சுதும்” என்று அவன் கூற, மீண்டும் தன் மழலை மொழியில் அவளும் பேசினாள்.

இருவரின் பேச்சையும் ரசித்தபடி அவன் முகிலின் வீட்டை அடைய, “அதுக்குள்ள வந்துட்டோமா? உங்க டுப் டுப் ரொம்ப ஃபாஸ்டா?” என்று சக்தி கேட்டாள்.

தர்ஷனையும் அவளையும் இறக்கிவிட்டபடி, “ஆமா ஆமா. என் டுப் டுப் ஃபாஸ்ட் தான்” என்றவன், பிள்ளைகளோடு உள்ளே நுழைந்தான்.

“எய்யா வேலா.. வாப்பா” என்று வள்ளி அழைக்க,

“வரேன் அத்தே..” என்றான்.

பிள்ளைகள் இருவரும், “பாட்டீ..” என்ற கூவலோடு அவரை சென்று அணைத்துக் கொள்ள,

குழந்தைகளின் உச்சியில் முத்தம் வைத்த வள்ளி, “போயி கைய கால கழுவிட்டு வாங்க புள்ளைகளா..” என்று கூறினார்.

அவர் சொல்படி குழந்தைகள் சென்று கைகால் கழுவி வர,

அதற்குள் அய்யனாரை அமர்த்தி நல விசாரிப்புகளை முடித்திருந்தார்.

“பாட்டி..” என்றபடி மீண்டும் பிள்ளைகள் வர,

“சக்தி தங்கம்.. உங்கம்மா உடுப்பு குடுக்கலையேடி.. ஓன் உடுப்பு ஒன்னு கொடியிலதான் காயிதுனு நெனக்கேன்..” என்று வள்ளி கூறினார்.

“பாட்டி எனக்கு பசிக்குது” என்று சக்தி உரிமையுடன் தன் குட்டித் தொப்பையைத் தேய்தபடி கூற,

“எனக்கும் பாட்டி” என்று தர்ஷனும் அதேபோல் தன் வயிற்றை தேய்த்துக் கொண்டான்.

குழந்தைகளின் செயலில் அய்யனார் கன்னம் குழைய புன்னகைத்தான். ஏனோ பார்த்த மாத்திரத்தில், தன் படபட பேச்சாலும் களுக் களுக்கென்ற சிரிப்பாலும், சக்தி அவனை கவர்ந்திருந்தாள்.

“அய்யோ ராசாத்தி.. இத மறந்தே போனேன் பாரு..” என்றவர், “இருய்யா.. பிள்ளைகளுக்கு ஜுஸ் போட்டேன். எடுத்துட்டு வரேன்” என்று கூறிச் சென்றார்.

அய்யனாருக்கு இருபுறமும் குழந்தைகள் அமர்ந்துகொள்ள, “நீங்க ரெண்டு பேரும் எப்போருந்து ஃபிரெண்ட்ஸ்?” என்று கேட்டான்.

“நானும் சக்கியும் டூ இயர்ஸா ஃப்ரெண்ட்ஸ்” என்று தர்ஷனும்,

“நானும் தர்ஷும் ஃபிரெண்ட்ஸ், அதால அம்மாவும் முகி மாமாவும் ஃபிரெண்ட்ஸ்” என்று சக்தியும் கூற,

“ஆமா ஆமா.. யாராது ஆள் கிடைச்சுட்டா வம்பளக்க ஆரமிச்சுடுவா” என்று சிரித்தபடி வள்ளி வந்தார்.

மூவருக்கும் ஆளுக்கொரு குவளை பழச்சாறை அவர் கொடுக்க, “பாட்டி தர்வி அப்பா எப்ப வருவாங்க?” என்று சக்தி கேட்டாள்.

“இப்ப உன் தர்வி அப்பாக்கு என்னடி?” என்று அவர் கேட்க,

“நான் லாஸ்ட் டைம் தர்விப்பாக்கு ஃபாதர்ஸ் டே கீட்டிங் கார்ட் குடுத்தேன்ல? அதுல நான் ஒட்டின குட்டி முயலோட ஸ்டோரி புக் வாங்கி தரேன் சொன்னாங்க. தர்விப்பா தான் பெஸ்ட் அப்பால்ல?” என்று கூறினாள்.

அவளை வாஞ்சையுடன் பார்த்த வள்ளி, “ஆமாடி கண்ணு” என்று கூற,

“அப்ப உங்கப்பா பெஸ்ட் இல்லையா?” என்று அவளைப் பற்றிக் காமாட்சி கூறிய ஏதும் நினைவில்லாது அய்யனார் கேட்டிருந்தான்.

அவன் கேள்வியில் வள்ளி பதறிப்போக, “எனக்கு தர்விப்பாதான் அப்பா. நீங்க தர்ஷ் சிச்சால்லா? அப்ப நீங்களும் எனக்கு அப்பா” என்று பெரிய மனுஷிபோல் அவள் கூற,

அவன் வள்ளியைப் புரியாது பார்த்தான்.

வள்ளி முகத்தில் பெரும் சோகம் இழையோடியது.

“என்னோட ரிலேடிவ்ஸ் எல்லாம் சக்கிக்கும் ரிலேடிவ்ஸ். நானும் சக்கியும் ஃபிரெண்ட்ஸ் அன்ட் சிம்பில்ங்ஸ்” என்று தர்ஷன் கூற,

அய்யனாரைப் பார்த்து, “உங்களுக்கு தெரியுமா? எங்க மம்மி லக்கி சைல்ட். கடவுளுக்கு எங்க மம்மியத்தான் அதிகமா பிடிக்குமாம்” என்று கூறினாள்.

ஓரளவு அவளுக்குத் தந்தை இல்லை என்று கிரகித்தவன், அவள் பேச்சுக்கு பதில் கொடுக்கும் நோக்கத்துடன், “ஏன்?” என்க,

“ஏன்னா எல்லாருக்கும் ஹஸ்பென்ட் கிடைச்சாதான் காட் என்னைபோல பிரின்ஸஸ் தருவாங்க. மம்மிக்கு அப்படி யாருமே தேடுற வேலை குடுக்காம காட் என்னை குடுத்துட்டாரு. பிகாஸ் மம்மி இஸ் அ கிஃப்டட் சைல்ட்” என்று தன் மழலை மாறாமல், தனக்கு தந்தை என்றால் யார் என்று கேட்டபோது இறைவி கூறியவற்றைக் கூறினாள்.

அய்யனாருக்கு அத்தனை சங்கடமாகவும் வருத்தமாகவும் இருந்தது.

குழந்தையை மேலும் பேச விடாது, “சக்தி.. ஜுஸ் குடி. குடிச்சுட்டு போய் ரெண்டுபேரும் ஹோம் வர்க் பண்ணுங்க. தான்யாம்மா வரும்போது செக் பண்ணுவேன்னு சொன்னாங்க” என்று வள்ளி கூற,

“ஓகே பாட்டி” என்று குடித்து முடித்தாள்.

“வா சக்கி நம்ம ஹோம் வர்க் பண்ணுவோம்” என்று அவளைக்கூட்டிக் கொண்டு தர்ஷன் அறைக்குச் சென்றிட,

செல்பவரையே வாஞ்சையாய் பார்த்த வள்ளி, “வேலா.. நீ தப்பா ஏதும் நினைச்சுடாத்தப்பா.. அந்த பொண்ணு..” என முடிக்கும் முன், “எதுவும் தெரியாமலே ஒருத்தரை தப்பான கண்ணோட்டத்தில் நிருத்தும் ஆள் நானில்ல அத்தை” என்றான்.

அவர் மேலும் பேச வரும் முன் அவனது அலைபேசி ஒலித்திட, “ஸ்டேஷன்லருந்து தான் அத்தை. இருங்க பேசிட்டு வரேன்” என வெளியில் சென்றான்.

ஒழுங்காக அலைவரிசை கிடைக்காததால் அவன் தோட்டப்பக்கம் சென்றுவிட, அப்போதே பொடி நடையாய் வீட்டை அடைந்திருந்தாள், இறைவி.

அன்று இரண்டு ஆர்டர்கள் காலை மற்றும் மதியமென்று கிடைத்திருக்க, அதனைச் செய்தவளுக்குக் கையில் அத்தனை அத்தனை வலி ஏற்பட்டிருந்தது. இதில் அவளது போதாத காலம், அவளது நீண்ட பாவாடை தடுக்கி, விழுந்து, கை இரும்புக் கட்டிலில் நன்கு இடித்துவிட, வலது கை முழுவதும் அத்தனை வலியில் துடித்தது. அவளது முழங்கைக்கு மேல் பகுதியில் கட்டில் இடித்த இடம் சற்றே வீங்கியும் தெரிந்தது.

அத்தோடு வேறு வழியின்றி வேலையையும் முடித்துக் கொண்டு பேருந்தில் தள்ளுமுள்ளுக்கு நடுவில் நின்றுகொண்டே வந்து, முகிலின் வீட்டை அடைந்தவளுக்கு, சில நிமிடங்கள் படுத்தால் போதுமென்று இருந்தது.

சக்தியை அழைத்துக் கொண்டு வீடு சென்று, கையில் ஒத்தடம் வைத்துக் கொண்டு உறங்க வேண்டும் என்று எண்ணியபடி உள் நுழைந்தவள், தன் காலணிகளைக் களைந்தபடி தற்செயலாய் தோட்டப்பக்கம் பார்க்க, அவளின் அய்யனார் அலைபேசியில் பேசியபடி நின்றுகொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும், அதிர்ந்து தன்னிச்சையாய் நெஞ்சைப் பிடித்துக் கொண்டவளுக்கு, மனதுக்குள் ஆர்ப்பரித்து எழுந்த உணர்வில் ஒரு நிமிடம் மூச்செல்லாம் முட்டியது.. கனவோ? எனக் கண்களை அழுந்த தேய்த்துக் கொண்டு அவள் கண் திறக்க, அவன் அவ்விடம் இல்லை. சற்று உள்ளே தள்ளி அவன், அவள் பார்வையில் விழாத இடத்திற்கு சென்றிருக்க, இறைவி தனது பித்து நிலையால் எழுந்த பிரம்மை என்றே நம்பிவிட்டாள்.

உள்ளே வெகு சோர்வாய் வந்தவளைப் பார்த்த வள்ளி, “கண்ணு.. என்னடா இவ்ளோ சோர்வாருக்க?” என்று அக்கறையாய் கேட்க,

“ரொம்ப டய்ரடா இருக்கும்மா” என்றாள்.

“உன் முகமே சொல்லுதுடா” என்று அவர் கூற,

“சக்தி எங்கம்மா?” என்றாள்.

“உள்ள ஹோம்வர்க் பண்றா” என்று அவர் முடிக்கும் முன் வானில் பெரும் இடி முழங்கிட, “அய்யயோ.. கொடில துணி காயுதே.. டேய் கண்ணு நீ உள்ள ஜுஸ் வச்சுருக்கேன். அதை குடி. நான் போய் துணி எடுத்துட்டு வரேன்” எனச் சென்றார்.

சோர்வின் சோம்பலுடன் சில நொடிகள் அமர்ந்தவள், பழச்சாறைக் குடித்து இதம் பெற எண்ணி சமையலறைக்குள் சென்று, ஒரு குவளையில் சாறை ஊற்றிக் கொண்டாள்.

சரியாய் பேசிவிட்டு வந்த அய்யனார், வள்ளியைத் தேடிக் கொண்டு சமையலறைக்குள் நுழைய, பழச்சாறுடன் வெளிவரவிருந்தவள், அவன் மீது மோதிக் கொண்டாள்.

பழச்சாறு அவள்மீதே சிந்த, தன் பாவாடை தடுக்கி பின்னோக்கி சரியப்போனவளின் கரம் பற்றி நிறுத்தினான்.

முன்பே கையில் ஏற்பட்ட அடியால் நொந்திருந்தவள், அவன் இரும்புக் கரம் பற்றிய அழுத்தத்தில் உயிர் போகும் வலியிலும், கண்களை இறுக மூடி முகம் சுருக்கி, லேசாய் உடல் குறுக்கி, “ஸ்ஸ்..” என்றிடி,

தன் பிடியைப் பட்டென விட்டிருந்தான்.

அடுத்த நொடி நிலைதடுமாறி அவள் மீண்டும் பின்னோக்கிச் சாய, அனிச்சை செயலாய் அவள் இடை பற்றி விழாது பிடித்துக் கொண்டான்.

உடல் தூக்கிப்போட அதிர்ந்து போனவள், கண்களை இன்னும் இறுக பூட்டிக்கொள்ளவும், தன்னிச்சையாய் அவள் உடல் நடுங்க,

“ஷ்ஷ்.. நீ பாதுகாப்பாதான்‌ இருக்க” என்று தனது ஆழ்ந்த குரலில் அழைத்தான்.

பட்டெனக் கண் திறந்தவளின் சிவந்து கலங்கிய விழிகளுக்கு வெகு அருகே, அவனின் முகம்.

சற்றும் எதிர்பாராத செயல்…

சற்றும் எதிர்பாராதவனின் செயல்…

அவளது ஆழி போன்ற அஞ்சனம் தீட்டாத சிவந்த விழிகள், அவனை என்னவோ செய்தது. எதையோ கடத்த முயற்சி செய்ததோ?

விட்டால் மயங்கியே விழுந்துவிடுமளவு அவளுக்கு அதிர்ச்சி.

இங்கு எப்படி அவன்? என்று யோசிக்கும்போது தான் அவன் பிடியில் இருப்பதையே உணர்ந்தாள். அப்படியொரு கூச்சம் அப்பிக் கொண்டது.

அவள் முன்னுடல், அவன் மேனி உரசிடும் நிலையில் இருக்க, பதறிக் கொண்டு நகர்ந்தவள் பின் மேடையைப் பற்றிக் கொள்ள, கையில் சரீரென்ற வலி.

முகத்தை சுருக்கியவள் முகம், அப்பட்டமாய் அதை பிரதிபலித்தது.

அப்போதே அவளை அவனால் அடையாளம் காண இயன்றது.

‘இவ அன்னிக்கு நைட் பார்த்த பொண்ணுல்ல?’ என்று எண்ணிக் கொண்டவன், “என்னாச்சுமா?” என்க,

விழி திறந்தவள் இதழ் பசை போட்டு ஒட்டப்பட்டதாய் பேச மறுத்தது.

இடவலமாய் தலையாட்டியவள் மெல்லச் சென்று நீர் கொண்டு தன் உடையில் சிந்தியதைத் துடைத்துக் கொண்டாள்.

“அ..அம் சாரி.. நீங்க வர்றத பார்க்கலைமா” என்று அவன் கூற,

பதட்டம் விலகாத நிலையில் அவனைப் பார்க்க இயலாது தலையை மட்டும் ஆட்டினாள்.

“நீங்க அன்னிக்கு நைட் பார்த்த பொண்ணு தானே?” என்று அவன் கேட்க,

தன்னை பெருமூச்சுக்களுடன் ஆசுவாசப்படுத்தியவள், “ஆமா சார்” என்றாள்.

“இங்க எப்படி?” என்று அவன் கேட்க,

“முகி ஃபிரெண்ட்” என்றாள்.

முகிலின் தோழியா? எனில்… என்று எண்ணியவன் விழிகள் வியப்பில் மேடேற,

“அம்மா..” என்றபடி அவளை நோக்கி ஓடி வந்து அணைத்துக் கொண்டாள், சக்தி…

Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02