விசை-11

 விசை-11



அவ்விடமே பெரும் பரபரப்பில் இருந்தது. பள்ளி மேலாளர், "சார், எதுவா இருந்தாலும் உள்ள போய் பேசிக்கலாமே?” என்று மன்றாடலாய் வினவ,

“எதையும் மூடி மறைக்க முயற்சி பண்ணாதீங்க சார். எல்லாம் பதினைந்து வயசுப் பசங்க. ஸ்கூல் லோகோ போட்டு அச்சிடப்பட்ட நோட்டில் உள்ள காகிதம் எல்லாம் ஹெராய்ன் பேப்பர்ஸ்” என்று கர்ஜனையாய்க் கூறினான் கற்குவேல் அய்யனார்.

“சார், இதுக்கும் எங்க பள்ளிக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சார்” என்று அவர் கூற,

“ஓ.. அப்ப இது உங்க பள்ளி நோட் இல்லையா சார்?” என்று அதனைத் தூக்கி அவர்முன் காட்டினான்.

அவருக்கு என்ன பதில் கூறவென்றே புரியாத நிலைதான். பதட்டத்தில் எதுவும் பேச இயலாது தவித்தார்.

“சார், நிஜமா இது எப்படின்னு தெரியலை” என்று கூறியவருக்குப் பள்ளியின் பெயர் கெட்டுவிடுமே என்ற அச்சம்.

நடந்தவை இதுதான். முந்தைய நாள் இரவு ரோந்துப் பணியில் இருக்கும்போது, ஆள் அரவமற்ற சாலையொன்றில் பள்ளி மாணவர்கள் ஒன்றுகூடி போதைக் காகிதத்தைச் சுவைத்து அரைமயக்க நிலையில் கிடந்தனர்.

அதில் இருந்த புத்தகங்கள் அனைத்திலும், அந்த மாணவர்கள் படிக்கும் பள்ளியின் பெயரோடு புகைப்படமும் இருக்க, பள்ளிப் புத்தகங்களில் நடக்கும் மோசடியைக்கூட அறிந்துகொள்ள மாட்டார்களா என்று அத்தனை கோபம் கொண்டான்.

காவல் நிலையத்திற்குத் தெரிவித்து, அந்த மாணவர்களை அவன் அள்ளிக்கொண்டு சென்றதோடு, மறுநாள் காலையே பள்ளிக்கு வந்துவிட்டான்.

பள்ளி மேலாளருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதபோதும், அவர்களது கவனமின்மை குறித்தக் கேள்விகள் எழவே செய்தது. அதனைச் சமாளிக்க முடியாத பெரும் தடுமாற்றம் அவரிடம்.

இதில் கூடுதல் சிக்கல் என்னவெனில், காவல் நிலையத்தில் இருந்த மாணவன் ஒருவன், போதையின் வீரியத்தில், மேலும் போதைப்பொருள் கிடைக்காத கோபத்தில் சுவரில் மோதிக் கொண்டு இரத்தம் கொட்ட, மயங்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

அனைத்திலும் அடியாவது அவர்களது பள்ளியின் பெயரென்றே ஆனது.

“சார், இது எப்படின்னு சத்தியமா தெரியலை சார்..” என்று மேலாளர் கூற,

“பள்ளிக்கு விடுமுறைனு (லீவ்) அறிவிங்க. பள்ளியில் சி.சி.டி.வி காணொளிகள் (ஃபுட்டேஜஸ்) இருக்கா? நான் எல்லாமே செக் பண்ணனும். வேலைப் பார்க்குற ஆசிரியர்கள் (டீச்சிங்) மற்றும் ஆசிரியரல்லாத (நான் டீச்சிங்) பணியாளர்கள் அத்தனைப் பேரையும் நான் விசாரிக்கணும். எனக்கு எல்லோர் விவரங்களும் வேணும்” என்று துரித கதியில் ஈடுபட்டான்.

அத்தனை கோபமாக வந்தது அவனுக்கு. இந்த வழக்கு இத்தனை தூரம் தன்னை இழுத்தடிக்கின்றது என்றும் ஆத்திரம் கொண்டான்.

அங்கு பணிபுரியும் அத்தனை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை அவன் முன் பள்ளி மேலாளர் சமர்ப்பிக்க,

ராஜனுக்கு அவற்றை புகைப்படமாய் அனுப்பியவன், சில தகவல்கள் சேகரிக்கும்படி கூறியிருந்தான்.

மேலும், அந்தப் பணியாளர்கள் அத்தனைப் பேரின் விவரங்களையும் ஆராய்ந்தவன், ஒருவர் விடாது அத்தனைப் பேரையும் அழைத்து விசாரிக்கவும் ஆரம்பித்தான்.

“சார், அவன் நல்லாப் படிக்குற பையன் சார். அவன் போதைப் பொருள் பயன்படுத்தியிருக்கிறான்ங்கிறது எங்களுக்கு ரொம்ப ஷாக்கா இருக்கு” என்று அவன் கைது செய்த மாணவர்களில் ஒருவனைக் குறிப்பிட்ட பேச்சு வர, அவரை அழுத்தமாய் ஒரு பார்வை மட்டும் பார்த்துக் கொண்டான்.

“சார், ஆசிரியரல்லாத (நான் டீச்சிங்) பணியாளர்கள் யாராவது செய்திருக்கத்தான் அதிக வாய்ப்பு இருக்கு” என்று குமார் கூற,

அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான்.

“காவலாளி (வாட்ச்மேன்), ஆயா இப்படி உள்ளவங்க வருமானமும் குறைவாக இருக்கும். ஏழ்மையைப் பயன்படுத்தி சுலபமா அவங்களைச் சரிக்கட்டலாம் சார். அதுக்காகச் சொல்றேன்” என்று குமார் கூற,

“ஏழ்மையைத் தாண்டி தொழில் தர்மம் கடைப்பிடிக்குறவங்களும் இருப்பாங்க குமார். சந்தேகமாகவே இருந்தாலும் பொதுப்படையாகக் குற்றஞ்சாட்டுவது இதுவே கடைசியாக இருக்கட்டும். காவல்துறையிலகூடத்தான் எல்லாருமே நேர்மையா இல்லை” என்று தன் அழுத்தமான வார்த்தைகளால் அவனுக்குக் கொட்டு வைத்தான்.

மதியம் மூன்று மணிவரையும் விசாரணை நீடித்தது.

ஒருபக்கம் புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கும் அறையின் கண்காணிப்புக் கருவியின் காணொளிகளைப் பார்வையிட்ட முருகேசன், “சார், ஐந்தாம் தேதி குறிப்பிட்ட இந்த ஒருமணி நேரத்தோட பதிவு (ரெகார்டிங்) மட்டும் நீக்கப்பட்டிருக்கு (டெலிட் ஆகியிருக்கு) சார்” என்று கூறினார்.

“சோ.. பள்ளிக்குள்ளேயே யாரோ ஒருத்தர் செஞ்சிருக்காங்க. இல்லை செஞ்சவனுக்குத் துணைபோகிறவன் பள்ளிக்குள்ள இருக்கான்” என்று அய்யனார் கூறினான்.

எழுந்து நின்று நெட்டி முறித்தவன், தனது அலைபேசியை எடுத்துப் பார்வையிட்டான். ராஜனிடமிருந்து வந்த தகவல்களைப் பார்வையிட்டவன், “அந்த ஆங்கில ஆசிரியர் கணேஷை வரச்சொல்லுங்க” என்று கூறினான்.

அவரும் சென்று அழைத்து வர, குழப்பமான முக பாவத்துடன் வந்து நின்றார்.

அவரை அமரும்படி சைகை செய்த அய்யனார், “சொல்லுங்க சார்… எதுக்கு போதைப் பொருட்களைப் பள்ளிக்கூடத்துல கொண்டுவந்து வைக்கிறீங்க?” என்று அழுத்தமாய்க் கேட்க,

“சார்?” என்று புரியாது கேட்டார்.

“ம்ம்.. சொல்லுங்க” என்று அவன் மீண்டும் கேட்க,

“சார், நீங்க என்ன சொல்றீங்கன்னு சுத்தமா புரியலை. நான் ஏன் அப்படிச் செய்யப்போறேன்?” என்று தைரியமாகவே கேட்டார்.

“எல்லாம் காசுக்குத்தான்” என்று கூறியவன், “குமார்.. அவரைக் கைது செய்யுங்க. ஸ்டேஷன் கூட்டிட்டுப்போய் விசாரிக்கும் விதத்துல விசாரிச்சா எல்லாம் வெளியவரும்” என்று கூற,

“சார், உங்களால கண்டுபிடிக்க முடியலைனு ஆதாரமே இல்லாம என் மேல பழியைப் போட முயற்சி செய்யாதீங்க. நான் யாருன்னு தெரியாம பேசுறீங்க. எனக்குக் காசு ஒரு விஷயமே இல்ல. எங்க குடும்பம் ரொம்ப மரியாதையான குடும்பம். காசுக்காக இப்படி ஒரு அசிங்கத்தைச் செய்யுற அவசியமே எனக்குக் கிடையாது” என்று கூறினார், அந்த ஆங்கில ஆசிரியர்.

“குமார்…” என்று அய்யனார் அழுத்தமாய் அழைக்க,

புரியாத குழப்பமான பார்வையுடன், குமார் அவரது கையில் விலங்கிட்டார்.

“சார்…” என்று அவன் கத்த, ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்த அய்யனார், “இழுத்துட்டுப் போங்க குமார்” என்றான்.

யாருக்குமே ஒன்றும் புரியாத நிலை. எப்படி அந்த ஆங்கில ஆசிரியர் என்ற முடிவுடன் கைது செய்தான் என்று யாருக்குமே புரியவில்லை.

“சார்?” என்று முருகேசன் குழப்பமாய் ஏறிட,

“கண்டுபிடித்தது ராஜ் முருகேசன் சார்” என்று கூறினான்.

விவரங்களை ராஜுக்கு அனுப்பி தகவல் சேகரிக்க அய்யனார் கூறியபோது, முதலில் அவர்களின் வங்கிக் கணக்கைத் தான் ராஜ் ஆராய்ந்திருந்தான்.

சரியாக ஐந்தாம் தேதி மாலை, அந்த ஆங்கில ஆசிரியருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பணம் வந்து சேர்ந்திருந்தது. யாரிடமிருந்து அப்பணம் வரப்பெற்றதென்று அவன் ஆராய்ந்திட, கிட்டத்தட்ட ஐந்து நபரிடமிருந்து கைமாறி இறுதியாக அந்த ஆங்கில ஆசிரியரின் வங்கிக் கணக்கிற்கு அது வந்து சேர்ந்திருந்தது.

சற்று முன்னர் முருகேசனிடம் அழைத்து ஐந்தாம் தேதி காலை ஆசிரியர்கள் உள்ளே நுழையும்போது பதிவான காணொளிகளைக் கேட்டு வாங்கிப் பார்வையிட்டவருக்கு, அவரது தடித்த பை மேலும் உண்மையை உணர்த்தப் போதுமானதாக இருந்தது.

அய்யனாரிடம் தனது சந்தேகங்களை அவன் கூறிட, மீண்டும் அவரைக் கூப்பிட்டு விசாரிக்கும்பொழுது, நீதான் குற்றவாளியா எனக் கேட்டதற்குத் துளியும் பதட்டமே இன்றி, அக்கேள்விகளுக்குத் தயாராக மனனம் செய்திருப்பதுபோல் அவன் பேசியது, சந்தேகம் வலுப்பெறப் போதுமானதாக அமைந்தது.

விசாரணை அறையில் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த ஆங்கில ஆசிரியர் கணேஷின் முன் வந்து நின்ற அய்யனார், “உன் மச்சான் முன்னாள் எம்.எல்.ஏ‌ தான?” என்று கேட்க,

“சார், அவன் சொல்லித்தான் எல்லாம் செய்றீங்களா? இங்க பாருங்க.. எனக்கும் அவனுக்கும் பகையாகி நாங்க பேசிக்கிறதில்ல” என்று கணேஷ் கத்தினான்.

“அப்புறம் என்னத்துக்குடா அவன்கிட்டருந்து காசு மட்டும் வாங்கிருக்க?” என்று அய்யனார் கத்திக் கேட்டபடி முன்னிருந்த மேஜையில் ஓங்கித் தட்ட, கணேஷின் முகம் அத்தனை நேரம் இல்லாமல் தற்போது வெளுத்துப் போனது.

“நாலு பேரிடம் கைமாறி உன் கைக்குப் பணம் வந்தா.. கண்டுபிடிக்க முடியாதா எங்களால்? போலீஸ்னா அவ்வளவு முட்டாள்னு நெனப்பாடா உங்களுக்கு? அவன் வீட்டு வேலையாள் கிட்டருந்து நாலு பேருக்குக் கைமாறி கடைசியா உனக்கு வந்துருக்கு. இதைக்கூட கண்டுபிடிக்க முடியாத அளவு நாங்க முட்டாளா இருப்போமா?” என்று அய்யனார் கேட்க,

அவன் முற்றிலும் வெலவெலத்துப் போனான். கணேஷின் மச்சானும் அப்பகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நாதன் மூலமாகவே போதைப் பொருட்கள், பள்ளிக்குக் கொண்டுவரப்பட்டது தெரிய வந்தது.

இதைச் செய்வதற்கு கடந்த ஒரு வருடமாகவே நாதனுக்குக் கணேசன் தான் உதவி வருகிறான். இருவரும் குடும்ப ரீதியில் பிரிந்துதான் உள்ளனர். ஆனால் பணம் என்று வந்துவிட்டால்? மனிதன் பணத்துக்கு அடிமையாக்கப்பட்டபின் பிரிவென்ன, பகையென்ன? மேலும் பகையாளியான அவனைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே சந்தேகம் எழாது என்றும் நாதன் கருதியிருந்தான்.

அதன்படி கடந்த ஒரு வருடமாக இந்த போதைக் காகித நோட்டுகளைத்தான் விநியோகம் செய்துகொண்டு இருக்கின்றான். பள்ளி மாணவர்களிடம் இதனை எளிமையாகக் கொண்டு சேர்க்க, பள்ளி அடையாளம் கொண்ட நோட்டுகளை அவர்கள் உருவாக்கியதுதான் தற்போது விபரீதமாக முடிந்திருந்தது.

அன்றைய நாள் முழுக்க அனைத்து ஊடகங்களிலும் நாதனின் குற்றமும், கைதும்தான் பெரும் பேசுபொருளாக இருந்தது.

ஊடகத்தாரின் பேட்டியில் ராஜன் கண்டுபிடித்த தகவல்களையும், அதன்மூலம் விசாரித்தபோது கணேஷன் ஒப்புக்கொண்ட வாக்குமூலத்தையும் வைத்து வழக்கைக் கண்டுகொண்டதைப் பற்றிய தகவல்களைக் கொடுத்துவிட்டு உள்ளே வந்து அய்யனார் அமர்ந்தான்.

“சூப்பர் சார்.. இந்த வழக்க இம்புட்டு ஈசியா முடிப்பீங்கனு எதிர்பார்க்கவே இல்லை. ராஜ் சார்.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்” என்று முருகேசன் கூற,

அய்யனார் அமைதியாய் அமர்ந்திருந்தான்.

“சார்…” என்று ராஜ் அழைக்க,

அவனை நிமிர்ந்து பார்த்தான்.

“இது முழுசா முடிஞ்சுட்டதா உங்களுக்குத் தோணலை. அதுதானே சார்?” என்று ராஜ் கேட்க,

மெல்லிய புன்னகை அவன் இதழில்.

அவன் கோபத்தைவிட, சூழலுக்குச் சம்பந்தமில்லாத இந்தப் புன்னகை அல்லவா ஆபத்து? அதை உணர்ந்த ராஜ் அவனை நோக்க, தலையசைத்தபடி, “வந்த வெற்றியைக் கொண்டாடுறதும் வரப்போற வழக்கை ஆராய்வதும் நமக்குப் புதுசா என்ன?” என்றுவிட்டுச் சென்றான்.

நாட்கள் சில அமைதியாகக் கடந்தது…

அன்றைய ஞாயிறு பொழுது இறைவிக்கு எந்த வேலையும் இல்லாதிருக்க, முகில் அவளை, சக்தீஸ்வரியை மற்றும் வீராயியை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.

“ரொம்ப நாளாச்சு இரா. வேலை வேலைன்னு ஓடிக்கிட்டு நீ ஞாயித்துக்கிழமை அங்க வந்து நேரம் டைம் ஸ்பென்ட் செய்தே” என்று முகில் கூற,

மெல்லிய புன்னகை மட்டுமே அவளிடம்.

அனைவரும் வீட்டை அடைந்து சந்தோஷமாய்ச் சிரித்துப் பேசி நாளை அழகாய்க் கடக்க, மாலை நேரம், மதியும் அவளது தந்தை செந்திலும் வந்தனர்.

திருமணம் தள்ளிப் போட்டதில் மனம் வருந்திப் பேசியிருந்தபோது, குலதெய்வம் கோவிலில் பொங்கல் வைத்து வழிபடலாம் என்று தான்யா கூறிய யோசனையை இன்றுவரை அமல்படுத்த முடியவில்லை.

அவருக்கு நாள் கூடி வந்தால் மதிக்குத் தோதுபடவில்லை. அவளுக்குத் தக்கவாறு வந்தால் முகிலுக்குச் சரி வரவில்லை என்று பெரும் இடையூறாகவே இருந்தது.

ஒரு வழியாய் நாளைக் குறித்துவிட வேண்டும் என்ற முனைப்போடு வந்திருந்தார்.

எப்போதும்போல் அவரது அதிருப்தியான பார்வை இறைவியிடம். அவர் தொடையில் தட்டி, “அப்பா, வந்ததைப் பத்தி மட்டும் பேசுங்க” என்று கிசுகிசுப்பாய் மதி கூற,

மகளை முறைத்து விட்டு விஷயத்தைக் கூறினார்.

“நானும் உங்க கிட்ட பேசணும்னு இருந்தேன் மாமா. ரொம்ப நாளாச்சு. வரும் வெள்ளி வச்சுக்கலாமா? மதிமா, உனக்கு லீவ் போட முடியுமா?” முகில் வண்ணன் வினவ,

“ம்ம் போட்டுக்குவேன் மாமா” என்றாள்.

“அக்கா உனக்கு, மாமாக்கு?” என்று முகில் கேட்க,

“எங்களுக்கு ஓகேதான்டா” என்று தர்வின் கூறினான்.

“சரி, இரா, அன்னிக்கு உனக்கு எந்த ஆர்டரும் இல்லைதானே? இருந்தாலும் கேன்ஸல் பண்ணிக்கோ. உனக்கு நான் ஆர்டர் தறேன். மதிக்கும் அக்காவுக்கும் போட்டுவிடு” என்று முகில் கூற,

“மாப்பிள்ளை.. இது நம்ம குடும்பத்து விசேஷம்” என்று அழுத்தமாய் செந்தில் கூறினார்.

“அதனாலதான் மாமா அவளையும் கூப்பிடுறேன்” என்று அவன் கூற,

அவர் முகத்தில் அப்பட்டமான அதிருப்தி.

“இல்ல முகில், எனக்கு..” என்று இறைவி முடிக்கும் முன்,

“வர்ற” என்று அழுத்தமாய் கூறினான்.

‘இவன் வேற அந்த மனுஷனோட வம்பு இழுத்துட்டே இருக்கான்யா’ என்றுதான் அவளுக்குத் தோன்றியது.

நல்லவேளையாக வீராயி அவரின் முறைப்பைச் சந்திக்க அங்கில்லாமல் பிள்ளைகளுடன் தோட்டம் சென்றுவிட்டதில் நிம்மதிப் பெருமூச்சும் விட்டுக் கொண்டாள்.

“மாப்பிள்ளை…” என்று அவர் மறுப்பு தெரிவிக்க வர, அவர் கரம் பற்றிய மதி, “ப்ளீஸ் ப்பா…” என்றாள்.

மகளை முறைத்துக் கொண்டவர் இதற்கு உடன்படுவதாகவே இல்லை போலும். “குடும்பத்து ஆட்கள் மட்டும்தான் போய்ப் பொங்கல் வைக்கணும் மதிமா” என்று அவர் கூற,

“அதான் சொன்னேனே மாமா. அவளும் இந்தக் குடும்பத்துல ஒருத்திதான்” என்று கூறினான்.

“அப்பா, ப்ளீஸ் அப்பா. இறைவி வர்றதுல என்னப்பா?” என்று மதி கெஞ்சுதலாய்த் தந்தையிடம் மன்றாட, இறைவிக்கு அய்யோ என்றானது.

தோளில் உள்ள துண்டை உதறிக்கொண்டு எழுந்தவர், “வெள்ளிக்கிழமை கிளம்புறதுக்கு ஆக வேண்டியதைப் பார்க்கிறேன் மாப்பிள்ளை” என்று கூறிச் சென்றார்.

செல்லும் தந்தையையே மதி சோகத்துடன் பார்த்திருந்தாள்.

“ஏன்டா அவங்க கிட்ட வம்பு பண்ற?” என்று இறைவி முகிலிடம் கேட்க,

“நீயும் வரணும்னு கேட்டதே நான் தான் இறைவி” என்று மதி கூறினாள்.

இறைவி மதியை நோக்க, “அப்பாக்கு பிடிக்காதுதான். ஆனா என் முகில் மாமா உன்னை எந்த இடத்தில் பாக்குறார்னு எனக்குத் தெரியும். அவரோட வாழ்க்கையில ஒவ்வொரு சந்தோஷத்துலயும் நீ இருக்கணும்னு ஆசைப்படுறார்” என்று கூறிய மதி, முகிலைப் பார்த்து, “அவரையும் எனக்குத் தெரியும், உன்னையும் எனக்குத் தெரியும். ஊர் என்ன வேணா பேசட்டுமே. என் முகில் மாமா சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்” என்று கூறிவிட்டுத் தந்தையைத் தொடர்ந்து சென்றாள்.


Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02