விசை-14
விசை-14
அன்று குழந்தையைக் கூப்பிடப் பள்ளிக்கு வந்திருந்த இறைவி, மகளை அழைத்துக்கொண்டு வந்தாள்.
“போலீஸ் சார் வரலையா ம்மா?” என்று சக்தி கேட்க,
“அவங்களுக்கு வேலை இருக்கும் சக்தி. அவங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது. சும்மா அவங்க வரணும் வரணும்னுலாம் கேட்கக்கூடாது. யாரையும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுடா குட்டிம்மா.. புரிஞ்சுதா?” என்று கேட்டாள்.
“ம்ம்.. புரிஞ்சுது” என்று அவளுக்குப் பின்னிருந்து அய்யனாரின் குரல் கேட்க, உள்ளம் அதிர, உறைந்து நின்றாள்.
இறைவியின் கரம் பற்றியிருந்தபடி தலையைத் திருப்பிப் பார்த்துக் கொண்ட சக்தி, “ஐ போலீஸ் அங்கில்” என்று குதூகலமாய் அழைத்து அவனிடம் ஓடினாள்.
மகள் ஓடவும் திரும்பிய இறைவி, உள்ளுக்குள் நொந்துகொண்டாள்.
தன்னிடம் ஓடிவரும் ரோஜா மொட்டை அப்படியே அள்ளிக் கொண்ட அய்யனார், அவளுக்கு முத்தம் வைக்க, தானும் பதில் முத்தம் கொடுத்தவள், “தர்ஷ் கூப்ட வந்தீங்களா?” என்றாள்.
“ம்ஹும்.. குட்டி பாக்கத்தான் வந்தேன். தர்ஷ அவங்க அம்மா கூப்டு போயாச்சே” என்று அவன் கூற,
“நிஜம்மாவா? சக்தி பாக்கத்தான் வந்தீங்களா?” என்று கண்கள் விரித்து மழலை மொழியில் கேட்டாள்.
“நிஜம்மா சக்தி பாக்கத்தான் வந்தேன்” என்று அவன் கூற,
“அம்மா நான் உங்கள டிஸ்டர்ப் பண்றேன்னு சொன்னாங்க. நான் டிஸ்டர்ப் பண்றேனா போலீஸ் சார்” என்று குழந்தை கேட்டாள்.
‘அய்யோ ஓட்ட வாயி’ என்று இறைவி மகளை மனதோடு வறுத்தெடுக்க,
“அப்படியா?” என்று கேட்டவன் இறைவியைப் பார்த்துவிட்டு, “அப்படியெல்லாம் இல்லடா குட்டி” என்றான்.
“அம்மா.. பாரு.. சார் இல்ல சொல்லிட்டாங்க” என்று சக்தி கூற,
இறைவி வலுக்கட்டாயமாகப் புன்னகைத்துக் கொண்டாள்.
அதில் அய்யனார் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
“பாப்பாக்கு காயம் ஆறிடுச்சா?” என்று அவன் கேட்க,
“ம்ம்.. அம்மா பாட்டி மருந்து போட்டு விட்டாங்க வீட்டுக்கு போயி. சரியா போச்சு” என்று, செல்லம் கொஞ்சிப் பேசினாள்.
இருவரும் மாறி மாறிப் பேச, பார்வையாளரைப் போல் இறைவி நின்றிருந்தாள்.
அவளுக்கும் அய்யனாருக்குமான பத்தடி இடைவெளியை அவள் ஓர் அடியும் குறைத்துக் கொள்ளவில்லை…
ஆனால் அவன் குறைத்தான்… குழந்தையோடு அவளை நெருங்கியவன் முன், திடமாக நின்றவள் மனம் கொஞ்சம் மத்தளம் இசைத்ததென்னவோ உண்மையே!
“நீ ஈவென்ட் மேனேஜிங் பண்ற யோசனைல இருக்கன்னு தானு சொன்னா. என் ஃப்ரெண்ட் வைஃப் டெய்லரிங் இப்பதான் பெரியளவுல நடத்திட்டு வராங்க. ஃப்ரெண்ட் இப்ப உயிரோடு இல்ல. அவங்க மட்டும் தான் செய்துட்டு இருக்காங்க. அதான் உனக்கு ரெகமென்ட் பண்ணலாம்னு யோசித்திருந்தேன்” என்று கூறி, அந்தப் பெண்ணின் தொழில் சார் அடையாள அட்டையை நீட்டினான்.
அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டவள், “நன்றி சார்” என்க,
“மம்மி சூப்பரா மெஹந்தி போடுவாங்க” என்று சக்தி கூறினாள்.
விட்டால் மீண்டும் தன் புராணத்தை அவள் பாடத் துவங்கிடுவாள் என்று சங்கோஜப்பட்ட இறைவி, “சார்.. கிளம்பறோம்.. லேட் ஆயிடுச்சு” என்க,
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், “டாட்டா குட்டி” என்றான்.
“டாட்டா போலீஸ் சார்.. அடிக்கடி மீட் பண்ணலாம் நாம” என்று சக்தி கைகுலுக்க, அவனும் புன்னகையாய் அவள் கன்னம் தட்டிச் சென்றான்.
செல்பவனையே பார்த்து நின்ற இறைவி, அவன் நடை நிற்கவும், சட்டென குழந்தையைக் கூட்டிக்கொண்டு சென்றிருந்தாள்.
திரும்பியும் பாராமலே அதை உணர்ந்தானோ? மெல்லிய புன்னகையுடன் புறப்பட்டான்.
அங்கிருந்து புறப்பட்டவன் நேரே சென்ற, அந்த ஆளரவமற்ற பகுதியில் இருக்கும், அச்சுப் பதிப்பகத்திற்குத்தான்.
அமைதியான எட்டுக்களுடன் அவன் உள்ளே நுழைய, அங்கு ஒருவனை நாற்காலியோடு கட்டிப்போட்டு அருகே அமர்ந்திருந்தான் ராஜ்.
உள்ளே நுழைந்த அய்யனார், தன் பெயருக்கேற்ற தோரணையில் வந்து நின்று,
தனது வெள்ளிக் காப்பை ஏற்றிவிட்டுக் கொண்டு, நாற்காலியோடு கட்டப்பட்டிருந்தவனைக் கண்டு புன்னகைத்தான்… சூழலுக்கு மாறான அவன் புன்னகை…
ராஜ் எழுந்து நின்று விரைப்பாக சல்யூட் அடிக்க, சிறு தலையசைப்பை பதிலாகக் கொடுத்தவன், கட்டப்பட்டிருந்தவன் வாயிலிருந்த டேப்பை சடாரென உருவினான்.
அது அவன் மீசை முடிகளை வேரோடு பிடுங்கிக் கொண்டு வந்ததில், “ஆ..” என்று அவன் அலற,
காது கேட்காதது போல் அதைத் துளியும் கண்டுகொள்ளாது, அங்கிருந்த மற்றொரு நாற்காலியை இழுத்துப் போட்டு, அதனில் பின் திரும்பி அமர்ந்து, முதுகு சாய்க்கும் பகுதியில் தாடை ஊன்றி அமர்ந்தான்.
ராஜை விழி உயர்த்திப் பார்த்த, அய்யனார், “ம்ம்..” என்று கண்காட்ட, ராஜும் அமர்ந்து கொண்டான்.
“சோ.. அச்சுப் பதிப்பகத்தில் போதைப் பதிப்பகம்.. இல்லையா?” என்று மிக அழுத்தமான வார்த்தைகளோடு அய்யனார் கேட்க,
“ச..சார்..” என்று அவனுக்குக் குரல் தந்தியடித்தது.
“இந்த இடத்துக்கு உள்ள மரியாதை தெரியுமா?” என்று கேட்டவன், “யார் சொல்லி இதெல்லாம் செய்ற?” என்று கேட்டான்.
அந்தப் பதிப்பகத்தின் உரிமையாளரான பூமி, கண்களில் அப்பட்டமான பயத்துடன் எச்சிலைக் கூட்டி விழுங்கினான்.
“சொல்லு..” என்று மீண்டும் அழுத்தமாய் கேட்ட அய்யனார், இன்னும் ஓர் இன்ச் கூடுதலாய்ப் புன்னகைக்க, எமதூதன் வந்து சிரிப்பதைப் போன்ற உணர்வை அவனுக்குக் கொடுத்தது.
ஒருவரின் சிரிப்பு பயம் கொடுக்குமா? இங்கு அய்யனாரின் சிரிப்பு, அவனை அத்தனை நடுங்கச் செய்தது. சற்று முன் காலை இதே சிரிப்போடு பேசித்தானே தன்னைக் கொத்தாய்த் தூக்கி அடித்து வெளுத்து நாற்காலியில் கட்டிப் போட்டான்? அந்த முன் அனுபவம் கொடுத்த பயத்தில், “இ.. இந்த ஏரியா மு.. முன்னால் எம்.எல்.ஏ சொல்லிதான் செய்தேன் சார்… விற்பனைக்குப் பஞ்சமே இருக்காது. அ..அவர் மூலமாவே ஆளுங்க வந்து எடுத்துப்பாங்க” என்றான்.
தன் புருவங்களை கட்டை விரல் கொண்டு தேய்த்துக் கொண்டான்.
“அந்த ராஸ்கலை ஒன்னுமே பண்ண முடியலை சார்” என்று ராஜ் ஆத்திரமாய்க் கூற,
மெல்ல தலையசைத்தான்.
ஆம்! நாதன் அவ்வழக்குக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லாததைப் போல் தனது அரசியல் பலம் வைத்துச் சித்தரித்து, வெளியில் வந்திருந்தான். பாவம் அவனை நம்பி வந்த பள்ளி ஆசிரியர் கணேசின் நிலைதான் களி உண்ணும் நிலையானது.
தற்போது இவனை வைத்து மீண்டும் அவனைப் பிடித்தாலும், அவன் தப்பித்துவிடுவான் என்பது புரிந்தது.
“ஆனா அவருக்கும் மேல யாரோ இருக்காங்க சார்.. பேப்பரெல்லாம் அங்கிருந்துதான் இவருக்கு சப்ளையாகும். அதைதான் என்கிட்ட குடுப்பார்” என்று பூமி கூற,
ராஜும் அய்யனாரும், இது தாங்கள் எதிர்பார்த்ததுதான் என்பதைப்போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“சத்தியமா எனக்கு வேற எதுமே தெரியாது சார். கா..காசுக்காகத்தான் செஞ்சேன்.. ஆனா அரசியல்வாதியைப் பகைச்சுக்க வேணாமேனு உயிர் பயமும் இருந்தது” என்று பூமி கூற,
முறுல்களின் ஒளி தெரிக்க புன்னகைத்தபடி எழுந்த அய்யனார், அவன் கன்னத்திலேயே ஓங்கி அறைந்தான்.
இதழோரமாய் வடியும் அவனது குறுதியைப் பார்த்தபடி, அவன் கட்டை அவிழ்த்தவன், ராஜை நோக்க, சிறு தலையசைப்புடன் வெளியேறினான்.
“சார்.. இவன் அந்த எம்.எல்.ஏ கிட்ட எதும் சொல்வானா?” என்று ராஜ் கேட்க,
“வாய்ப்பு கம்மி.. ஆனா சொன்னாலும் அவனுக்குப் பிரச்சினை இல்லைனுதான் நினைப்பான்… அவன்தான் வெளியவர ஏகப்பட்ட ஓட்டைகள் வச்சிருக்கானே?” என்று அய்யனார் கூறினான்.
“யாரா இருக்கும் சார்?” என்று ராஜ் கேட்க,
“நீங்க என்ன நினைக்கிறீங்க ராஜ்?” என்றான்.
“அவனுக்கு அரசியல் கையூடுகள் நிறைய சார். அப்படி எதும் டீலரா இருக்கலாம்… இல்ல டார்க் வெப் மாதிரி கள்ளச்சந்தைகள் மூலம் வெளிநாட்டு வர்த்தகமாகவும் இருக்கலாம்” என்று ராஜ் கூற,
மெல்ல தலையசைத்தான்.
“அந்த எம்.எல்.ஏ கூட யாரெல்லாம் ரொம்ப க்ளோஸ் இல்லை, அன்ட் யார் கூடவெல்லாம் அவனுக்குப் பகைனு விசாரிக்கலாம் ராஜ்” என்று அய்யனார் கூற,
ராஜ் புரியாது பார்த்தான்.
“அவன் ரிவர்ஸ் சைக்காலஜிதானே ஃபாலோ பண்றான்.. நாமளும் அப்படியே போகலாம்” என்று அய்யனார் கூற,
“சார்.. ரெண்டு பேரும் தகவல் திரட்டும் போது ஆளுக்கொரு தகவலா தேடலாமே? நான் நெருங்கின ஆட்களைப் பற்றி விசாரிக்கிறேன். நீங்க தூரத்துச் சொந்தம் அன்ட் பகையாளிகளைத் தேடினா, ஏதாது ஒரு இடத்தில் க்ளிக் ஆகும் இல்லையா?” என்று சற்றே தயங்கியபடி ராஜ் கூறினான்.
“நல்ல யோசனைதான் ராஜ்.. தயக்கம் எதுக்கு? பதவிகள் பல இருந்தாலும் குற்றவாளியைப் பிடிப்பதுதான் நம்ம எல்லாருக்குமான வேலை. அறிவுரைகள் கூற பதவிகள் அவசியமில்ல” என்று அய்யனார் கூற,
ராஜிற்கு அவன்மீது தனி மரியாதை உருவானது.
“சரி ராஜ்.. நீங்க கிளம்புங்க.. நாளைக்குப் பார்க்கலாம்” என்ற அய்யனார் தன் வீட்டை அடைந்தான்.
வீட்டிற்கு வந்த மகனைக் கண்டு, “சீக்கிரம் வந்துருக்கியேப்பா.. நைட்டு ரோந்துக்குப் போறியா?” என்று காமாட்சி கேட்க,
“இல்லம்மா.. வீட்லதான் இருப்பேன்” என்றான்.
சென்று புத்துணர்ச்சி பெற்று வந்தவன், அன்னைக்கும் தனக்குமான தேநீரைப் போட்டான்.
வந்து அவரோடு அமர்ந்தபடி அமைதியாய்க் குடித்து முடித்தவன் “உங்கக்கிட்ட பேசணும்மா” என்க,
“சொல்லுய்யா” என்றார்.
“நான் ஒரு பொண்ணை விரும்புறேன். கல்யாணம் செய்துக்கனும்னு ஆசைப்படுறேன்” என்று அவன் கூற, அவருக்கு மனம் குளிர்ந்து போனது.
“எய்யா.. நெஜமாவா? வயசு முப்பதாகப்போது இன்னும் இவன் பிடி கொடுக்க மாட்டிக்கானேனு இப்பதான் கோவிலுக்கு போன சமயம்கூட அந்த ஆத்தாட்ட வேண்டினேன்.. அவதான் கண் திறந்துட்டா போ. பொண்ணு யாரு சாமி?” என்று வாஞ்சையாய் அவர் கேட்க,
புன்னகையாய், “உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணுதான்” என்றான்.
“எனக்குத் தெரிஞ்ச பொண்ணா? இந்தூரலயா?” என்று அவர் புரியாது கேட்க,
“ஆமா ம்மா” என்று அவர் கேட்ட இரண்டு கேள்விக்கும் ஒரே பதிலைக் கொடுத்தான்.
“என்னய்யா குழப்புற. இந்தூருல கல்யாணம் ஆகாத வயசு பொண்ணுனு எனக்கு யாரைத் தெரியும்?” என்று அவர் கேட்க,
“கல்யாணம் ஆகாத வயசு பொண்ணுதான். ஆனா குழந்தை மட்டும் இருக்கும்” என்று கூறினான்.
நொடி நேரம் கூடத் தேவையிருக்கவில்லை அவருக்கு இறைவியை நினைவு கூற.
அதிர்ந்துபோய் மகனைப் பார்த்தவர், “முகில் சினேகிதியா?” என்று கேட்க,
ஆமென்று தலையசைத்தான்.
“அந்தப் பொண்ணு ஏன்யா?” என்றவருக்கு இறைவியைத் தன் மகனுக்கு மணம் முடித்து வைப்பதில் மகிழ்ச்சி இல்லை.
அவருக்குச் சாதி மதமெல்லாம் ஒரு பொருட்டில்லை.. அவர் கணவர் கொடுத்துச் சென்ற பகுத்தறிவு அது.. ஆதலால் மகன் காதல் திருமணம் புரிந்தால்கூடச் சரி, திருமணம் செய்தால் போதுமென்றே கருதினார். ஆனால் ஊரே தவறாகச் சித்தரித்துக் கூறும் பெண்ணுடன் ஒரு வாழ்வெனில் மகனுக்கும் அவப்பெயர் வந்துவிடுமே என்று நினைத்தார்.
“நேத்து செந்தில் பெரிப்பாக்கு நீங்க அறிவுரை சொன்னீகளே?” என்று அமைதியான முகத்துடன் அய்யனார் கேட்க,
“ஆமா சாமி.. ஆனா முகிலப்போல நீயும் சினேகிதியா பாக்கலையே.. கூட பழகுறவர சேரி.. கட்டிக்கிட்டா உன் பேரு கெட்டுப்போவாதா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்.
கடந்த ஒருவருடம் மகன் வளர்க்கும் தாயாகத்தான் இருக்கின்றார். மகன் பேச்சுக்கு மறுப்பேச்சில்லை.. இன்று அவனுக்கு மறுத்துப் பேச வாய் வரவில்லை. அவருக்கு இறைவியைப் நிறையப் பிடிக்கும். அதில் சந்தேகமேயில்லை. ஆனால் தன் மருமகளாய் என்று யோசிக்கத்தான் சங்கடமாய் இருந்தது… அது தவறென்று புரிந்து எழும் தடுமாற்றமே அவரிடம்…
“என்னைய யாரு என்ன சொல்லிட முடியும் ம்மா? சொன்னாலும் தான் என்ன? பெரிய வீட்டுப் பையனை ஏமாத்திக் காசு அடிச்சு, ஈவ் டீசிங்னு பொய் கேஸ் கொடுத்த பொண்ணை ஜெயில்ல போட்டதுக்கு அந்த ஏரியால அத்தனைபேரும் அந்தப் பையன்கிட்ட லஞ்சம் வாங்கினேன்னுதான் பேசினாங்க.. அது எனக்கு இழுக்கு இல்லையா? அதுக்கு முன்ன இருந்த ஊர்ல, ஆக்ஸிடென்ட் கேஸ்ல இறந்துபோன தாத்தாதான் வழியவந்து வண்டியில விழுந்தார்னு நிரூபிச்சும், பொய் சொல்லி கேஸை மூடினேன்னு அவங்க குடும்பமே ரெண்டு நாள் ஸ்டேஷன்ல வந்து தகராறு செய்தாங்களே.. அது எனக்கு இழுக்கு இல்லையா? என் மேலதிகாரியே ஒரு கொலை வழக்கை நான் சீக்கிரம் முடிச்சு வச்சப்போ, வழக்குகளை சீக்கிரம் முடிச்சேன்னு நற்பெயர் வாங்குறதுக்காகப் பொய்யா முடிக்குறேன்னு பேசினாரே.. அது எனக்கு இழுக்கு இல்லையா?
ஒரு காவலனா நான் இப்படி ஏகப்பட்டது சந்திச்சுட்டுத்தானம்மா இருக்கேன்? அதையெல்லாம் தலைமேல தூக்கி வச்சுட்டு ஒக்காந்திருந்தா இன்னிக்கு இந்த நிலையிலயும், பதவிலயும் என்னால இருந்திருக்க முடியாதும்மா.. அந்தப் பொண்ணு யாரு என்னன்னு எதுமே தெரியாது. முதல் சந்திப்புல எதுவுமே தோனலை.. ஆனா அதுக்கடுத்த சந்திப்புகள்ல அவளைச் சாதாரணமா கடக்க முடியலை. இனக்கவர்ச்சினு சொல்றதுக்கோ, சும்மா அழகை ரசிச்சேன்னு கடக்குறதுக்கோ நான் வெடலப்பையனும் இல்ல.
எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. யோசிச்சேன்.. இதுல எதும் எனக்குத் தப்பா தோன்றலை. அதான் முதல்ல உங்கக்கிட்டப் பேச வந்தேன்… நான் மரியாதையும் அன்பும் வச்சது அப்பாட்ட.. ஆனா முழுக்க முழுக்க கண்மூடித்தனமான பாசம் உங்கக்கிட்டத்தான். இந்தப் பொண்ணுனு சொன்னதும் இதைதான் நீங்க யோசிப்பீங்கனு எனக்குத் தெரிஞ்சது. என் ஆசைதான்னு அவகிட்ட பேசி முடிவாகி, கடைசியில் உங்க அதிருப்தியால அவளுக்குச் சங்கடமோ, உங்களுக்கு வருத்தமோ உருவாக்கிடக் கூடாதுனுதான் முதல்ல உங்கக்கிட்ட பேசி ஒரு தெளிவு கொண்டு வருவோம்னு வந்துட்டேன்.
அறியாத வயசுல யாரோ அவளுக்குச் செய்த கொடுமைக்கு, இன்னிக்கு ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்கும் குழந்தையாதான் தெரியுறா. நல்லாப் பார்த்தா அதிக வயது வித்தியாசத்தில் பிறக்கும் அக்கா தங்கை போல இருக்கும் அம்மா பொண்ணு. அத்தனைக்கும் பிறகு, இவ்ளோ வார்த்தைக்கும் பிறகு அவ சொந்தக்கால்ல நிக்குறா(ள்). ஒருவேளை கஞ்சிக்கு யாருகிட்டயும் கை ஏந்தலை. எனக்கு அவ குணம் பிடிச்சிருக்குமா… அவளுக்கு வாழ்க்கை குடுக்குறதா நான் என்னை நினைக்கலை… என் வாழ்க்கையில அவ எனக்குச் சந்தோஷமும் நிறைவும் தருவான்னு தோன்றுது. என்னைவிட கிட்டத்தட்ட எட்டு ஒன்பது வயசு சின்னவ அவ. அவமேல காதல் வந்தபிறகுதான், இந்த வயசுகூட எனக்கு நினைவு வந்தது. காரணம் அவ பக்குவம் போர்த்திய முதிர்ச்சிதான்.. நான் சொல்றதை சொல்லிட்டேம்மா.. நீங்க யோசித்துச் சொல்லுங்க” என்று நீளமாகப் பேசியவன், அன்னைக்கு யோசிக்க நேரம் கொடுத்தவனாய் எழுந்து சென்றான்.

Comments
Post a Comment