விசை-15
விசை-15
வாரம் ஒன்று கடந்திருந்தது. முன்னாள் எம்.எல்.ஏ நாதனுடன் தொடர்புடைய ஆட்களைப் பற்றிய தகவல் தேடலில் அய்யனார் மற்றும் ராஜ் இறங்கியிருந்தனர். அன்று வீட்டில் அமர்ந்து சேகரித்தக் கோப்புகளை அய்யனார் பார்வையிட்டுக் கொண்டிருக்க,
அவனுக்குத் தேநீருடன் வந்த காமாட்சி, “எய்யா..” என்று அழைத்தார்.
அன்னையை நிமிர்ந்து பார்த்தவன் தேநீரை வாங்கி, சூடோடு அப்படியே பருக, வழமைபோல், “இம்புட்டு சூடா குடிக்கதாய்யா” என்றார்.
“பழகிடுச்சும்மா” என்றவன் வேலையைத் தொடரவும்,
அவர் மகனிடம் பேச வேண்டும் என்பதைப் போல நிற்க,
தன் கையிலுள்ள கோப்பை மூடி வைத்தவனாய் அன்னையைப் பார்த்து, “என்னம்மா?” என்றான்.
“அ..அந்த புள்ளைகிட்ட பேசினியா எதும்?” என்று அவர் கேட்க,
“உங்களுக்கு என்ன சொல்லனுமோ அதை நேரடியாவே சொல்லுங்க ம்மா” என்றவன், “நான் இன்னும் யார்கிட்டயும் சொல்லல” என்றான்.
அவன் முன் வந்தமர்ந்தவர், “அந்தப் புள்ளைய பிடிக்காம இல்லைய்யா.. ஆனா உன் பேரு கெட்டுப்போகுமேனுதான் யோசிச்சேன். இப்ப நீயும் இம்புட்டு எடுத்துச் சொன்னப் பொறகு..” என்றவர், அவன் தலை கோதி, “உங்கப்பாவ பாத்த கணக்காருக்கு சாமி” என்க,
அவனிடம் விரிந்த புன்னகை.
“என்னை கட்டிக்கிட்டபோதும்கூட இம்புட்டு ஏழ்மையான குடும்பத்துலருந்து ஏன் எடுத்தீக? இம்புட்டு கருப்பான புள்ளைய ஏன் கட்டினனு உங்கப்பாட்ட நிறையா கேட்டாக. ஆனா உங்கப்பா ஒன்னுத்தயும் கண்டுக்கல. நான் வெசனப்பட்டு மொகம் சொணங்கினதும் நான் என் விருப்புக்குத்தான் உன்னைக் கட்டிடேன், ஊரு பேச்சுக் கேட்டு இல்லனு ஒத்த வார்த்தையில முடிச்சுட்டாரு.. அவரு மகன் நீனு காட்டிட்ட” என்று அவர் கூற,
“அப்ப.. உங்களுக்கு?” என்று கேள்வியாய் நிறுத்தினான்.
“எம்மகனோட ஆசைக்காகவும், விருப்பத்துக்காகவும் என் கருத்துக்கள விட்டுக் கொடுக்குறதுல நானும் கொறஞ்சுட மாட்டேன்ல?” என்று அவர் கூற,
அவனுக்கு அத்தனை இதமாய் இருந்தது.
அன்னையை அணைத்துக் கொண்டு அவர் மடியில் தலை வைத்துப் படுத்தவன், “நன்றிம்மா” என்க,
“அந்தப் புள்ளைட்ட எப்ப சொல்லப்போற?” என்று கேட்டார்.
“சொல்லுவோம்மா..” என்றவனுக்குள் பல யோசனை.
அவள் தன் வாழ்வில் முன்னேற வேண்டிய வயதில், தான் காதல், திருமணம் என்று அவளைத் திசைதிருப்ப வேண்டாம் என்றே அவன் நினைத்தான். அவளைக் காதலித்தும், திருமணம் செய்தும் அவளை நிச்சயம் அவன் முடக்கப்போவதில்லை.. ஆனால் அன்று தான்யா கூறிய, ‘சிண்ட்ரெல்லா கதையில ராஜகுமாரன் வந்து அவ வாழ்க்கையைச் சரிசெய்த போல எந்த ராஜ்குமாரனும் எனக்கு வரவேண்டாம். நானே சீர் செய்வேன்னு சொன்னவ’ என்ற வரி அவன் மனமெங்கும் ஓடியது.
‘அவ அவளோட வாழ்க்கையைச் சீர் செய்து, அவ மனதிருப்தியோடு முன்னேறட்டுமே? பெயரளவில் கூட தன்னால்தான் அவ வாழ்க்கை சீராச்சுனு ஒரு பெயர் வேண்டாம். அவ முயற்சியை நான் களவாடி பெயர் வாங்க விரும்பல. அவ ஜெயிக்கிறதை நின்னு பார்த்து கைதட்டி என்னவள்னு பெருமைப்பட்டுக்கும் அந்த பொன்னான நாள் வரும்வரை நான் காத்திருக்கேன். அதுவுமில்லாம அவளுக்குக் கல்யாணத்துல இணையும் வயசுகூட இல்ல. வன்கொடுமையில் ஒரு குழந்தைக்குத் தாயாகிட்டாங்குறதுக்காகச் சீக்கிரம் கல்யாணம் செய்துகட்டும்னு ஏன் நினைக்கனும்.. அவ அவ பாதையில் போகட்டும்.. நான் காத்திருக்கேன்’ என்று மனதோடு நினைத்துக் கொண்டான் அய்யனார்.
ஆனால் அவளைக் காதலிக்கவெல்லாம் அவன் தட்டிக் கழிக்கப்போவதில்லை என்றும் நினைத்துக் கொண்டான். அவனுக்கே சிரிப்பாக இருந்தது. விரைப்பாய் சுற்றிக் கொண்டிருந்தவனை இளக வைத்திருந்தாள்… தனது காவல் பணியில் ஒன்றியபின் விட்டுப்போன, கல்லூரி காலங்களில் நண்பர்களுடன் பெண்களை ‘சைட்’ என்ற அளவில் பார்த்துவிட்டுக் கடந்ததை, அவள் தூசி தட்டியிருந்தாள்.. சிறு மாற்றமாய் அவளை மட்டுமே ரசிக்கும்படி…
மனதோடு சிரித்துக் கொண்டவன், தன்னுடைய எண்ணங்களில் வெட்கம் கொண்டான்.
அங்கு தனது வீட்டில் அமர்ந்து, ஒரு திருமணத்திற்குச் சென்று, நேரில் மணமேடையில் இருக்கும் தம்பதியரை ஓவியமாய் வரைந்துகொடுக்கவிருக்கும் முறைமை பற்றி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள் இறைவி.
“மேம்.. மெஹந்திக்கு உங்ககிட்டயே சொல்லிட்டோம். நாங்க வேற ஈவென்ட் மேனேஜிங் புக் பண்ணலை. எங்களுக்கு நம்பகமான கேட்ரிங் அன்ட் டெய்லரிங் சர்வீஸ் சஜஸ்ட் பண்ண முடியுமா? திடீர்னு பிக்ஸ் பண்ண மேரேஜ். அதனாலப் பத்து நாளுக்குள்ள எனக்கு ப்ளௌஸ்லாம் டிசைன் பண்ணனும்” என்று அலைபேசியில் இறைவியுடன் பேசும் மணப்பெண் கேட்க,
சட்டென இறைவிக்கு அய்யனார் கூறிய பெண் தான் நினைவு வந்தது.
அய்யனார் கூறிச்சென்ற அன்றே, இறைவி அவரைத் தொடர்பு கொண்டு பேசியிருந்தாள். தானாக நிகழ்ச்சி ஏற்பாடுகள் அமைப்பதற்கான ஆட்களைத்தான் அவளும் தேடித் தேடித் தகவல் சேர்த்துக் கொண்டிருக்க, அய்யனார் கூறியதும், அவரிடம் பேசி, அவரது ஆடை வடிவமைப்புகளைப் பார்வையிட்டு, சாதாரண ஒரு சுடிதாரும் தைத்து வாங்கி அவரது தையல் தன்னை எத்தனை தூரம் திருப்தி படுத்துகின்றது என்பது வரை ஆராய்ந்து இருந்தாள்.
மேலும் அவளிடம் வாடகைக்காகத் துணி தைத்துக் கொள்பவரைக் கூட கேட்டறிந்து தகவல்கள் கேட்டிருந்தாள். இருக்கும் வேலையோடு வேலையாக இதனையெல்லாம் சேகரித்து இருந்தவளுக்கு, அப் பெண்மணியின் வேலையில் திருப்தியே!
தற்போது அவரைப் பற்றிக் கூறி, அவரது அலைபேசி இலக்கங்களைப் பகிர்ந்துகொண்டு, “என்கிட்ட மேக்கப் ஆர்டிஸ்டும் இருக்காங்க. அவங்க டீடைல்ஸும் அனுப்பிருக்கேன். தேவைனா சொல்லுங்க மொத்தமா பேசிக்கலாம்” என்று கூற,
“ரொம்ப நன்றி மேடம்” என்று வைத்துவிட்டாள்.
சமையல், அலங்காரம், உடை வடிவமைப்பு, மருதாணி கலை, ஒப்பனைக் கலைஞர் ஆகியவைதான் ஒரு நிகழ்வை நடத்துவதற்கான் அடிப்படைத் தேவைகள். இதுபோக, அணிச்சல், நேரடி வரைபடம், பாட்டு மற்றும் நடன ஏற்பாடுகள் எல்லாம் மணமக்களின் ஆடம்பரம் மற்றும் ஆசைக்குத் தகுந்த தேவைகள்.
முன்பே இறைவிக்குத் தெரிந்த ஒரு சமையல் குழு ஒன்று உள்ளது. தற்போது ஆடை வடிவமைப்பாளர் கிடைத்திருக்க, மருதாணி கலைஞராகவும், ஓவியக் கலைஞராகவும் அவளே இருக்கின்றாள். மேலும் ஒரு அரங்கத்தை எப்படியெல்லாம் அலங்காரப்படுத்தலாம் என்று கற்பனையில் அவள் பல மேடை வடிவமைப்புகள் செய்தும் வைத்திருக்க, அவற்றைச் செயல்படுத்துவதற்கு வேண்டிய ஆட்கள்தான் அவளிடம் இல்லை. மொத்தமாக அலங்காரப் பூக்கள் வினியோகம் செய்யும் இடமாகப் பிடித்தால் தான் பூ அலங்காரம் செய்வதற்கு வசதியாக இருக்கும். இல்லையெனில் பூவல்லாது பிற அலங்காரப் பொருட்களுக்கு இடம் விசாரிக்க வேண்டும். ஒப்பனை கலைஞர்களை மதியின் கல்லூரி தோழிகள் மூலம் விசாரித்து இரண்டு மூன்று கலைஞர்களைப் பிடித்திருந்தாள்.
தனக்குத் தெரிந்த இடத்திற்கெல்லாம் அவர்களையும் பரிந்துரை செய்து, அதன்மூலம் அவளுக்கும் தனிச் சம்பாத்தியம் பெற்றுக் கொள்கின்றாள்.
இனி தேவையாகப் பட்டது அலங்காரத்திற்கான ஆட்கள்தான் என்று யோசித்தவள், முகிலுக்கு அழைத்தாள்.
“சொல்லு இரா..” என்று அவன் கூற,
“என்ன பண்ற?” என்று கேட்டாள்.
“ஃபேக்டரிலதான்டா. ஸ்டாக் செக் பண்ணிட்டு வந்தேன்” என்று அவன் கூற,
“ஃப்ரீயா நீ?” என்றாள்.
“சொல்லுமா..” என்று அவன் கூற,
“ஒரு ஈவென்ட் ப்ளான் பண்ண அடிப்படைத் தேவைக்கு வேண்டிய மேக்கப் ஆர்டிஸ்ட், மெஹந்தி ஆர்டிஸ்ட், கேட்ரிங் சர்வீஸ்னு மூணும் என்கிட்ட இருக்குடா. அதுபோக இப்படிச் சில இடங்களில் லைவ் ஆர்ட்டும் கேட்டு வாங்குறாங்க. என்கிட்ட மேடை டெகரேஷன்ஸ்கு கஸ்டமைஸ் பண்ணித்தர நிறைய ஐடியாலாம் இருக்கு. ஆனா அதைச் செயல்படுத்த ஆட்கள், மொத்தமா கொள்முதல் செய்துக்க அலங்காரப் பூக்கள் வினியோகம் பண்றவங்க இல்ல. இது பற்றிப் பெருசா தெரியலை. என்ன செய்யலாம்?” என்று அனைத்தையும் ஒப்பித்தாள்.
அவளுக்கு முடிவுகளை எடுப்பதற்கும், சுய ஆலோசனைகளைக் கூர் தீட்டுவதற்கும் எப்போதும் துணையாக இருப்பது முகில் தானே?
தற்போதும் அவனிடமே தஞ்சம் கொண்டாள்.
“டீ.ஜே செட்டப்லாம் நீ ரொம்ப யோசிக்காத இரா. விஸ்காம் ஸ்டூடென்ட்ஸ் போதும் அதைச் செய்ய. மதிக்குத் தெரிஞ்சவங்க இருக்காங்களானே விசாரிப்போம். அந்தப் பூ அன்ட் அலங்காரம்… இதுல என் பக்க வ்யூ என்னன்னா, பொதுவா கல்யாண மண்டபத்திலேயே அலங்காரத்துக்கு வேண்டிய பொருட்கள் இருக்கும். பூக்கள் மட்டும்தான் நாம வெளிய வாங்க வேண்டி இருக்கும். எடுத்ததும் நாம அலங்காரப் பொருட்களுக்கு வெளிய தேடுறதைவிட கஸ்டமைஸ் டெகரேஷன்ஸ் அவங்க மண்டபத்தில் இருக்கும் பொருட்கள் வைத்துச் செய்து ஆரம்பிக்கலாம். போகப் போக நாம வேண்டிய சின்னச் சின்னப் பொருட்களா வாங்கிச் சேர்த்துக்கலாம். பூ அலங்காரங்களுக்குப் பூ மார்க்கெட் தான். ஆனா நார்மல் ரோஜா சாமந்தினு இல்லாம சூரியகாந்தி, டூலிப், லில்லி போன்ற பூக்கள் பயன்படுத்த நாம வெளியதான் ஆள் தேடணும். தோட்டக்கலைஞர்களைத்தான் பிடிக்கணும். நெட்ல தேடிப் பாரு.. அதுல உள்ள காண்டேக்ட் வச்சுப் பேசு. நானும் தெரிந்த யாரும் பூந்தோட்டம்லாம் வச்சுருக்காங்களா என்னனு விசாரிக்கிறேன்” என்று கூற,
அவளுக்கும் ஒரு தெளிவு கிடைத்தது.
“சூப்பர் டா. நல்ல யோசனை. பாரு கூடிய சீக்கிரத்துல ஈவென்ட் மேனேஜர் ஆயிடுவேன். உன் கல்யாணத்துக்கு என் ஏற்பாடுதான்” என்று அவள் சந்தோஷமாய்க் கூற,
அவள் சந்தோஷம் அவனை நூறு மடங்கு சந்தோஷப்படுத்துவதாய் உணர்ந்தான்…
மனமாரப் புன்னகைத்தவன், “நீதான் பண்ணணும்” எனக் கூறி, “இப்பதிக்கு டெகரேஷன்ஸ்கு ஆள் கிடைக்காட்டிகூட டிசைனிங் சாட்ஸ் போல ரெடி பண்ணித்தா இரா. இன்ஸ்டால உன் பேஜ்ல கஸ்டமைஸ் டெகரேஷன் சார்ட்ஸ் போட்டுவிடு. லைக், குறிப்பிட்ட தீம்ல டெகரேஷன் வேணும்னா அதுக்கு எப்படி டிசைன் செய்யலாம்னு பண்ணித்தா. அவங்க டிசைனிங்கு பே பண்ணி மண்டபத்தில் சொல்லிகூட அதை புரோசீட் செய்துப்பாங்க” என்று கூற,
“நல்ல ஐடியாடா முகி.. தேங்ஸ்டா. லவ் யூ டா முகி..” என்று உற்சாகமாய் கூறினாள்.
“லவ் யூ டூ இரா குட்டி.. சீக்கிரமே பெரியாளாக வாழ்த்துக்கள்” என்று அவன் நிமிர,
அவன் முன் ருத்ர மூர்த்தியாய், செந்திலும், அவர் பக்க சொந்தமான அவரது மச்சானும் நின்றிருந்தனர்…
அவரது கோபம் உணராது, “மாமா வாங்க..” என்று அவன் எழ,
“என்னய்யா செந்திலு.. ஓம்மவள கட்டித்தாரேமுனு சொன்ன.. இங்கன வேற காதலு ஓடுது போல?” என்று அவரது மச்சான் கிசுகிசுப்பாய் கேட்டார்.
“ஏம்மாப்பிள்ளைய தப்பா பேசாதீக மச்சான்” என்று செந்தில் கூற,
“என்னப்பா வாரயிலயே வாசல்ல அம்மாவோட அய்யன்னு உன்னய அந்த வேலபாக்குற பொண்ணுட்ட அறிமுகம் செஞ்சதுக்கு இறைவிக்கு தாய் தகப்பன் இல்லனுல்ல கேட்டாக.. இங்க வந்து பாத்தா இப்புடி” என்றார்.
வாசலில் அவர்கள் நுழையும்போதே மேனேஜரின் மகள் புதிதாக அங்கு கணக்கு வேலைக்குச் சேர்ந்திருப்பதைக் கூற, அப்பெண்ணோ, அவர் மொட்டையாக ‘அம்மா’ என்றதும் அவ்வப்போது இங்கு வந்து செல்லும் இறைவி என்று நினைத்துக் கொண்டாள். மதி தொழிற்சாலைக்கெல்லாம் பெரும்பாலும் வந்ததில்லை என்பதால் அப்பெண்ணுக்கு மதியைத் தெரிந்திருக்கவில்லை.
செந்திலுக்குக் கோபமாக வந்தது. இப்படியான அவப்பெயர் முகிலுக்கு வரக்கூடாது என்றுதானே அவரும் இறைவியுடனான உறவை அத்தனை வெறுக்கின்றார்.
“என்னவோப்பா..” என்று அவர் நீட்டி முழக்க,
“பெரியப்பா.. வந்த சேதிய சொன்னீகனா நான் என் பொழப்பப் பாக்கப் போவேன்” என நேரடியாக அவரிடமே பேசினான், முகில்.
“என்னய்யா.. பேசயில குறுக்கால வந்து தடுத்துப்புட்டமாக்கும்?” என்று அவர் நக்கலாய் கேட்க,
“ஆமா பெரியப்பா..” என்றுவிட்டான், கூடுதல் திமிராக.
“ம்ம்.. எம்பிள்ளைக்குக் கல்யாணம்னு பத்திரிக்கை வக்கத்தாம் மச்சானோட வந்தேன்.. மச்சான் எப்ப பத்திரிக்கை வப்பாரோனு கேக்கப்பாத்தேன்” என்று அவர் கூற,
“வைக்குறப்பக் கூப்பிடுவாக” என்றான்.
அவர் நாசூக்காய்ப் பேசுவதையெல்லாம் கண்டுகொள்ளாதபடி அவன் பதில் கொடுத்துக் கொண்டே இருக்க, அவரும் கொடுக்க வந்ததைக் கொடுத்துவிட்டு விடைபெறுவதாய்க் கூறிச் சென்றார்.
வாசல் வரை சென்ற செந்தில் மட்டும் மருமகனிடம் வர,
“மாமா.. முன்னமே நீங்க அவள புரிஞ்சுகிடல.. இப்ப கோவத்துலவேற இருக்கீக. என்னமாது பேசி நமக்குள்ள மனஸ்தாபமாயிடப்போவுது. ஒங்களுக்கு எம்மேல நம்பிக்கயிருந்தா இத ஒரு பேச்சா எடுக்காது போங்க” என்றான்.
“என்னத்த மாப்ள.. முள்ளு மேல சேல விழுந்தாலும், சேல மேல முள்ளு விழுந்தாலும் சேலைக்குத்தான் சேதாரம். அந்த…. அந்த புள்ளகூட நீங்க சவகாசம் வச்சுகிட வேணாம்னு நானும் இதுக்குத்தான் தவிக்குறேன்.. உங்க பேரு கெட்டு ஒழியுது. புதுசா வேலைக்குச் சேந்த பொண்ணுக்கு எம்மளவ தெரியில.. ஆனா அவள தெரியுது. நீங்களும் எம்மவளவிட அவளுக்குத்தான உரிமைய தூக்கித் தாரீக?” என்று செந்தில் கூற,
“பாசமும் உரிமையும் அன்பு வைக்குற எல்லார் மேலையுமே வைக்கலாம் மாமா. அந்தந்த உறவுக்கான பரிணாமங்கள் தான் வேற. எனக்கு இறைவியும் மதியும் என் உசுருக்கும் மேல.. ஒரு கண்ணுல வெண்ணையும் இன்னொன்னுத்துல சுண்ணாம்பும் வெக்க முடியாது. அவுக ரெண்டு பேருமே அவுக உறவும், இடமும் எம்மனசுல என்னனு புரிஞ்சுகிட்டாக. அத அவுக போக என் அம்மாகூட புரிஞ்சுக்கனும்னு நான் எதிர்பார்க்கல” என்றான்.
என் மகளுக்கு இணையாக அவள்மீது அன்பா? யோசிக்கவே செந்திலுக்கு அத்தனை எரிந்தது.
“இது எனக்கு நல்லாப்படல மாப்ள. இப்புடி வேலையிடத்துல உக்காந்துகிட்டு நீங்க பேசுற பேச்சும்..” என்று அவர் கோபத்தை உள்ளடக்கியபடி கூற,
“லவ்யூங்குற வார்த்தை காதலிச்சவகட்டத்தான் சொல்லனுமுனு இல்ல மாமா. அப்பா அம்மா ஒடம்பொறந்தவகனு யாரு மேல வேணும்னாலும் நேசம் வெக்கலாம். எனக்கு அப்படியான உறவுகளுக்கும் அப்பார்பட்டவ இறைவி” என்றான்.
“இதாம் மாப்ள எனக்கு இன்னும் பதறுது. ஒங்க ஒறவுனு கேட்டா தங்கச்சினுகூட சொல்ல மாட்றீங்களே” என்று செந்தில் கேட்க,
“அவ புள்ள என்னைய மாமானு வாய் நெறைக்கக் கூப்புடுதே. அது போதாதா?” என்றான்.
அவருக்குத் தகாத வார்த்தைகள் எல்லாம் வாயில் வந்தும் வம்படியாக விழுங்கிக் கொண்டார்.
“எம்புள்ளையா அந்த புள்ளையானு ஒரு கட்டம் வந்தா என்ன செய்வீக மாப்ள?” என்று அவர் கேட்க,
“சூழலையும், அதுல எங்க, யாருக்கு என் தேவை அதி முக்கியமுங்குறதையும் பொருத்தது மாமா. ரெண்டு பேரையும் வருத்தாதபடி தான் என் முடிவு இருக்கும்” என்றான்.
கண்ணை மூடிக் கொண்டு தன் மகளைத் தேர்ந்தெடுக்கவில்லையே இவன் என்று ஆத்திரம் கொண்டார்.
“அப்பன் ஆத்தாவே பெத்தத பாவமுனு நெனச்சு தண்ணி தெளிச்சவ மேல ஒங்களுக்கு என்னத்துக்கு மாப்ள வீணா இம்புட்டு அக்கறை?” என்று செந்தில் கேட்க,
“ஏன்னா அவ பரிசுத்தம் யாருக்கும் தெரியல” என்றான்.
“ஹ்ம்..” என ஏளனமாய் ஒரு சிரிப்புச் சிரித்தவர், “அவ பரிசுத்தத்தைத்தான் அஞ்சு வயசுல சுத்திவார அந்த புள்ள சொல்லுதே” என்று செந்தில் வார்த்தையை விட,
“மாமா” என்று கத்தினான்.
“நீங்க அதுகூட வண்டில போறதையும் வாரதையும் பாத்துட்டு, என் அங்காளி பங்காளிகளே மூஞ்சிக்கு நேரா கேக்காங்க மாப்ள. வளைச்சுப் போடுறவகனு தெரிஞ்சும் வலையில நாமலா கால விட்டுக்க வேணுமா? நீங்க சுத்தமாருந்தாலும் சேறும் இடம் சாக்கட..” என அவர் முடிக்கும் முன்,
“மாமா” என்று அழுத்தி அதட்டலாய் அவர் பேச்சை நிறுத்தியவன், “உங்க மேல ரொம்ப மரியாதை வச்சு அமைதியா இருக்கேன்.. என்னைப் பேச வச்சுடாதீங்க. உங்களுக்கு உங்க பொண்ணு வாழ்க்கை முக்கியமுனு நினைச்சீகனா தயவசெஞ்சு” என்று கையெடுத்துக் கும்பிட்டான்.
“மாப்ள..” என்று அவர் பதற,
“வேணாம் மாமா.. நான் இறைவிய நடமாடுற சாமியாதான் பாக்குறேன்.. என் சாமிய கொற சொல்லி என்ன ஆகாதத எதையும் பேச வச்சுடாதீக. தயவசெஞ்சு கிளம்புங்க” என்று கூறினான்.
யாரோ ஒருத்திக்காக தன்னையே பேசுகின்றானே என்ற கோபத்துடன் அவர் சென்றுவிட, விழிகளை இறுக மூடி அப்படியே நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான்.
கையில் உள்ள அலைபேசி அதிரவும் சட்டென அவன் அதை எடுத்துப் பார்க்க, அப்போதுதான் அத்தனை நேரம் இணைப்பில் இருந்த அழைப்பை இறைவி துண்டித்திருப்பது கண்டு பதறி எழுந்தான்…

Comments
Post a Comment