விசை-16

 விசை-16



அடித்துப்பிடித்து இறைவியின் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தான், முகில்வண்ணன்.

அவனுக்கு அழுகையாய் வந்தது. கண்ணில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது.

வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தவன் அலைபேசி அதிர, இறைவிதான் அழைப்பதோ என்று பதைபதைப்பாய், யார் அழைக்கின்றார்கள் என்றும்கூடப் பார்க்காது, “இரா.. ம்மா.. டேய்..” என்று பதறினான்.

அதில் இறைவிக்கு ஏதோ பிரச்சினையோ என்று அஞ்சி, “டேய் நான் வேலுடா.. என்னாச்சு?” என்று அய்யனார் கேட்க,

“அ..அத்தான்..” என்றவன் உடைந்துபோய் அழுதே விட்டான்.

முகில் இப்படியெல்லாம் உடைந்து அழுவதை அய்யனார் பார்த்ததோ கேட்டதோ இல்லை. “டேய்.. முகில்.. என்னாச்சுடா?” என்று அய்யனார் கேட்க,

“அ..அத்தான்..” என்று அழுதானே தவிர ஏதும் பேசவில்லை.

“என்னாச்சு முகில்? முதல்ல நீ எங்க இருக்கனு சொல்லு” என்று அய்யனார் கேட்க,

“இ..இரா வ்..வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் அத்தான்” என்றான்.

“என்னாச்சுடா? அ..அவளுக்கு எதும் பிரச்சினையா?” என்று அய்யனார் கேட்க, அவன் நெஞ்சம் அத்தனை பதற்றத்தை உணர்ந்தது அக்கேள்வியில்.

“நா..நானே என் இராவ ஹ..ஹர்ட் பண்ணிட்டேன் அத்தான்” என்று கதறலாய் மொழிந்தவன், தன் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டு, “அங்க போயிட்டுக் கூப்புடுறேன் அத்தான்” என்று அழைப்பைத் துண்டித்தவனாய் அவள் வீட்டை அடைந்தான்.

முகத்தைத் தன் சட்டையில் அழுந்தத் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றவன் கதவைத் தட்ட,

இறைவி சில நிமிடங்களில் கதவைத் திறந்தாள்.

வீராயியும் கோவிலுக்குச் சென்றிருந்தமையால் வீட்டில் யாருமே இருக்கவில்லை.

அவள் கதவைத் திறக்கவும், இயல்பாய் இருந்த அவள் முகம் காட்டிய பொய்யை விளக்கும் விதமாய் சிவந்துகிடந்த அவள் விழிகளைப் பார்த்த முகில், “சாரிடி..” என்பவனாய் அவளை இறுக அணைத்துக் கொள்ள,

அவனிடம் திடமாய் தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துப் போராடிய இறைவியும், முற்றுமாய் உடைந்தே போனாள்.

இருவரின் கண்ணீரும், கதறல் ஒலியும்தான் அவ்விடத்தையே நிறைத்தது.

“சாரிடா மா..” என்று அவன் உயிருக்குப் போராடும் தான் ஈன்ற சிசுவினை அரவணைத்துத் தலைகோதுவதாய் அவளைத் தழுவி தலைகோதிக் கொடுக்க,

“மு..முகி..” என்று வெடித்து அழுதபடி சரிந்து அமர்ந்தாள். தானும் அப்படியே அமர்ந்தவன் அவளைத் தன் பரந்த மார்புக்குள் தன்குழந்தையை அடைகாக்கும் அன்னையாய் அரவணைத்தான்.

“ம்மா.. டேய்.. அழாதடாமா... பாப்பா... இரா.. ப்ளீஸ்டா” என்று அவன் அவளிடம் கெஞ்ச,

“முகி.. நா.. நான் என்னடா பண்ணேன்? எ..எனக்குனு ஒ..ஒரு மா..மாரல் சப்போர்ட் கூட நான் எதிர்ப்பார்க்கக்கூடாதா? எ..என் வாயால நா..நானே எனக்கு யாரும் வேணாம்னு சொல்லனும்னு தான் எல்லாருமே எதிர்ப்பாக்குறாங்களா?” என்று கதறித் துடித்தாள்.

“ஏன்டா? பா.. பாதிக்கப்பட்ட ஒருத்தர தூக்கிவிட வேணாம்.. ஏன் அவங்களா அவங்க வாழ்க்கையை அழிச்சுகிட்டு போயிடனும்னு எல்லாரும் நினைக்குறாங்க.. பாதிக்கப்பட்டவங்க மேல பரிதாபம் காட்டவேணாம்டா.. கண்டுக்காம இருக்கட்டுமே.. ஏன்? ஏன் இப்படி? நான் என்னடா பண்ணேன்? நான் என்ன பண்ணேன்? எவனோ ஒருத்தன் வந்து என்னை சிதைச்சு எனக்குள்ள ஒரு உயிர குடுத்துட்டுப் போனதுக்கு நான் என்னடா பண்ண முடியும்?” என்று ஆதங்கமாய் துவங்கி ஆக்ரோஷமாய் அவள் கத்த,

முகில் துடிதுடித்துப் போனான்.

“செத்துடனுமா? சொல்லு முகி.. நான் சாகனுமா? அப்பவாது இவ மேல தப்பில்லனு எல்லாரும் ஏத்துப்பாங்களா? ஒருத்தி வாழனும்னு ஆசைப்படக்கூடாதாடா? சொல்லு முகி‌‌.. வளைச்சுப் போடுறவளாடா நானு? ஆங்.. யாரை வளைச்சுப் போடனும்? எதுக்குடா வளைச்சுப் போடனும்? எதுக்கு? அப்புடி சம்பாதிக்க ஏன்டா நான் கை ஒடிய முதுகொடிய ஓடி உழைக்கனும்? எனக்கென்ன தலையெழுத்தா? என்னதான் செஞ்சா பேசாம இருப்பாங்க? செத்துடனுமா?” என்று அவள் ஆக்ரோஷமாக அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு கத்த,

“ம்மா டேய்.. ப்ளீஸ்டா” என்று அவள் முகத்தைத் தன் மார்பில் புதைத்துக் கொண்டவன், “அய்யோ..” என்று தன் தலையில் தட்டிக் கொண்டு அழுதான்.

“முடியலடா முகி.. எனக்கு வலிக்காதாடா? நான் என்ன ஜடமா? எத்தனைதான் பேசுவாங்க? வ.. வர வர.. எதாது செஞ்சுகிடுவோமோனு பயமாருக்குடா.. அ..அந்தளவு நம்மளை ட்ரமடைஸ் பண்ணிடுவாங்களோனு பயமாருக்கு.. தாங்கவே முடியலடா” என்று கதறியழுதவள், ஓய்ந்துபோய் அவனில் சாய்ந்தாள்‌.

“டேய்.. அழாதடா..” என்றவனுக்கு அவளை எப்படி சமாதானம் செய்வதென்றே புரியவில்லை.

“நான் யாரையாது அடிச்சுப் புடுங்குறேனாடா? யார் வாழ்க்கையையாவது கெடுக்குறேனா? இ..இதோ இந்தத் தெருவுல அக்கம் பக்கத்துல இருக்குறவங்ககூட புழுவ பாக்குற மாதிரி தான்டா பாக்குறாங்க. எ..என் பிள்ளைகூட அவங்க வீட்டுப் பிள்ளைகள சேரக்கூட விட மாட்டாங்க. அப்படிக்கு என்னத்த செஞ்சு தொலைச்சேன்னுதான் எனக்கும் புரியலடா..” என்று அவள் உச்சக்கட்ட ஆத்திரத்தோடு கத்த,

“இரா.. நான் இருக்கேன்டா.. ப்ளீஸ்டி.. அழாதமா.. யார் என்ன சொன்னாலும் என் இரா எப்படினு அவளுக்குத் தெரியும்.. எனக்குத் தெரியும்..” என்று கூறினான்.

“தெரியாத நாயெல்லாம் பிறகு எதுக்குடா பேசுது? என்னைப் பத்தி எதுமே தெரியாம ஏன் பேசனும்?” என்று கேட்டபடி நிமிர்ந்தாள்.

அண்டை வீட்டுப் பெண்மணி இருவரும் அணைத்தபடி அமர்ந்திருக்கும் நிலையை அத்தனை அதிருப்தியோடு முகம் சுழித்தபடி வேடிக்கைப் பார்த்திருந்தாள்.

ஆத்திரத்தோடு தட்டுத்தடுமாறி எழுந்தவள் அவரை நோக்கிச் செல்ல,

முகில், “இரா..” என்று குழப்பமாய் அவளை அழைத்தபடி எழுந்தான்.

அவள் அந்த பெண்மணியிடம் தள்ளாட்டமாய் செல்ல, அய்யனார் தனது இருசக்கர வாகனத்தில் வந்து நின்றான்.

“என்னடி வேணும் உனக்கு? ஆங்? என்ன வேணும்? உன் வீட்ல உனக்கு வேலையே இருக்காதா? எப்பவும் என் வீட்டுக்கு யார் வரா? யார் போறா? இவ என்ன பண்றானு பாத்துட்டே இருப்பியா?” என்று கத்த,

“ம்மா இரா..” என்று முகில் அவளைத் தடுக்க முற்பட்டான்.

அவன் கரத்தை ஆவேசமாய் தட்டிவிட்டவள், “இவளுக்கு என்னடா தெரியும் என்னைப் பத்தி.. வாய் ஓயாம சாயிந்தரம் ஆனா நாலு ஊர் பேச்சு பேச அலையுற ஜென்மங்கள கூப்டுவச்சுட்டு இவ வீட்டுக்கு அவன் வந்தான் இவன் போனான்னு பேசிட்டு இருக்கா. பால் காரன் ஒருநாள் எனக்கு முடியலைனு உள்ள வந்து பால் ஊத்திட்டுப் போயிட்டான். அடுத்த நாள் இந்தத் தெருவோட ஹாட் டாபிக் இந்தப் பொண்ணு பால்காரன வளைச்சுப் போட்டுட்டாங்குறதுதான். இவளுகளுக்குலாம் நான் எதைடா காட்டி நிரூபிக்கனும்.. ஆங்? சொல்லுடி.. என்ன வேணும்? ஒருகுடிகாரன் வந்து என் உயிர குடிச்சுட்டுப் போனானே.. அதோட வீடியோ எங்கயும் இருக்கானு தேடி எடுத்துட்டு வந்து காட்டவா?” என்று கத்தியபடி அந்த பெண்மணியின் கழுத்தைப் பிடிக்க,

“இரா” என்று அழுதபடி அவளைப் பிடித்துக் கொண்டான் முகில்.

இப்படி வந்து இறைவி கத்துவாள் என்று எதிர்பாராத பெண்ணும் அரண்டுபோய் நிற்க,

அப்படியே சாலையில் மடிந்து அமர்ந்தவள், “நான் செத்தாகூட இவளுக பேசுறத நிறுத்த மாட்டாளுகடா.. அப்பவும் எவன்கூட இருந்துட்டு செத்தாலோனுதான் சொல்லுவாளுக” என்று முகத்தை மூடி அழுதாள்‌.

முகில் அவள் ஓய்ந்த நிலையில் முற்றுமாய் உடைந்து நிற்க, அங்கு வாசலில் நடந்ததை வேடிக்கைப் பார்ப்போருடன் நின்றிருந்த அய்யனார், மனதில் அத்தனை வலி சுமந்து நின்றான்.

அங்கு வந்த வீராயி, கூட்டத்தைக் கண்டு என்னவோ ஏதோவென்று பதறி வர, இறைவி முகத்தை மூடி அழுது கொண்டிருந்தாள்.

“ஆத்தா இறவி.. அய்யோ மவராசி.. என்னத்தா கண்ணு ஆச்சுது?” என்று வீராயி கேட்க,

பாட்டியைக் கட்டிக் கொண்டு, “நான் ஒழுக்கம்கெட்டவளா அப்பத்தா?” என்றாள்.

முகில் அந்தக் வார்த்தையைக் கேட்க இயலாதவனாய் காதுகளைப் பொத்திக் கொள்ள,

“அய்யோ சாமி.. யாரு சொன்னாவ?” என்று வீராயி பதறினார்.

“யாரு சொல்லல அப்பத்தா? ஆங்? யாரு சொல்லல? ஒ..ஓம் புள்ளையும் மருமகளும் கூட அதைத்தான சொல்றாக? யாரு சொல்லல? எங்க போனாலும் இதே பேச்சு.. கேட்டு கேட்டு காது புளிச்சுப்போச்சு..” என்று கத்தியவள், “இவளாம் யாரு அப்பத்தா என்னைய பேச?” என்று சிறுபிள்ளைபோல் பாட்டியிடம் குறை படித்தாள்.

“ஆத்தா மகமாயி.. எம்பேத்திய ஏம்மா இப்புடி நோகடிக்குற?” என்று அவளை நெஞ்சோடு அரவணைத்துக் கொண்டு அழுதவர், அவள் முகத்தைக் கையில் ஏந்தி, சேலைத் தலைப்பால் அவள் முகம் துடைத்து, “நீ ஏங்கண்ணு அழுவுற? கேடுகெட்டவளுக பொழுதுபோகாம பேசுற பேச்சுக்கு பாவம் தலைமேல ஏறி ஆடும்.. ஓன் அப்பன ஆட்டிவிக்கிதுயில்ல? அவன் செஞ்ச பாவத்துக்குத்தான் புழுவா துடிச்சு சாகவும் வலியில்லாம படுத்து கெடக்கான். ஒன் சுத்தம் எவளுக்கும் வராது கண்ணு.. ஆண்டவன் அத்தனபேருக்கும் கூலி குடுப்பான்” என்றார்.

“எ..எனக்கு வலிக்குதே அப்பத்தா” என்றவள், அழுகையில் தோய்ந்து, ஓய்ந்து மயங்கிச் சரிய,

“ஆத்தா.. இறவி.. அய்யோ எம்பேத்திய பேசியே சாகடிக்கப் பாக்குறாகளே” என்று அவளை மடியில் போட்டுக்கொண்டு அழுதார்.

முகில் வெறித்த நிலையிலேயே பிரம்மை பிடித்தார் போன்று நிற்க,

அய்யனார் தான் சுயம் பெற்று அவர்களை நெருங்கினான்.

வீட்டிலிருந்து வந்தமையால், காவல் உடையில் இல்லாமல் சாதாரண உடையில் அவன் நின்றிருந்ததால், யாரும் அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

ரத்தமென சிவந்த முகத்துடன் வீராயியிடம் வந்தவன், மயங்கி சரிந்து கிடக்கும் இறைவியைக் கையில் ஏந்த, அந்த அரை மயக்க நிலையிலும் அதை உணர்ந்து அவள் உடல் அதிர்ந்தது.

அதில் உள்ளுக்குள் நொருங்கிப் போனவன், அவளைத் தூக்கி, காற்றான குரலில், அவள் காதோரம், “நீ பாதுகாப்பாத்தான் இருக்க” என்று கூற,

அவளது நடுக்கம் மெல்ல மறைந்து, கரம் தன்னைப்போல் அவன் சட்டையைப் பற்றியது.

அய்யனாரைக் கண்டு அடையாளம் கண்டுகொண்டவராய், வீராயி, அக்கம் பக்கத்தாரைத் தீயாய் முறைத்துவிட்டு எழ,

முகில் இன்னமும் சித்தப் பிரமை அடைந்தவனாய் நின்றிருந்தான்.

“முகில்..” என்று அய்யனார் ஓங்கி அழைக்க,

மயக்கத்தில் இருந்தவளுட்பட அனைவர் தேகமும் அதிர்ந்தது, அக்குரலுக்கு. அதனோடு அரைமயக்க நிலையிலிருந்து முழுமயக்கம் சென்றவள் கரம் அவன் சட்டையை விடுத்து தொப்பென்று விழுந்து ஊசலாடியது…

சுயம் மீண்ட முகில், கண்களில் கண்ணீரோடு, “அ..அத்தான்..” என்க,

கண்களை மூடித் திறந்தவன், உள்ளே சென்றான்.

அவளை உள்ளறை படுக்கையில் கிடத்தியவன், அவள் முகம் காண, பால் முகம் வாடி வதங்கி, கசங்கி இருந்தது.

அவன் உள்ளம் அனலிலிட்ட உயிராய் துடிப்பதைப் போல் உணர்ந்தான்

உள்ளே வந்த வீராயி முகிலிடம், “எய்யா ராசா.. என்னய்யா ஆச்சு?” என்று கேட்க,

அய்யனார் முகிலை நோக்கினான்.

கண்ணீர் பெருகியோட, கரகரத்தக் குரலில் முகில் நடந்ததை சுருக்கமாய் கூறி முடிக்க,

வீராயி, “என் பேத்திய நிம்மதியா வாழக்கூட விடமாட்டிக்காவளே” என்று அழுதார்.

அய்யனாருக்கு உள்ளம் அத்தனை துடியாய்த் துடித்தது. கண்ணீர் கண்ணில் தேங்கி நிற்க,

“என் இராக்கு என்னாலயே இப்படி ஆயிடுச்சே” என்று வெடித்தவனாய் அவள் பாதத்தில் முகம் மூடி அழுதான், முகில்.

அவன் அழுகையில் பதறிய வீராயி, “ஆத்தே.. ராசா.. சாமி.. அழுவாதய்யா” என்று அவனைத் தேற்ற முயல,

“அவ இன்னிக்கு இவ்ளோ அழுகுறானா எவ்ளோ பாதிச்சிருக்கும் ஆத்தா அவளுக்கு?” என்று கேட்டான்.

“அவ இன்னிக்கு நேத்திக்கு இல்ல சாமி.. ஆறு வருஷமாவே இந்தப் பேச்சோடத்தான் வாழுறா.. அவள பெத்த மகராசி பேசிட்டுப் போனதுலருந்து ரொம்ப ஒடுஞ்சு போயிட்டா.. அதுலதான் இன்னிக்கு வாங்கின வார்த்தை அம்புட்டுக்கும் சேத்து வெடிக்க வச்சுடுச்சு.. இதுல ஒன்னய ஏன்யா கூண்டுல ஏத்திகிடுற?” என்று வீராயி கேட்க,

“என்னாலதான ஆத்தா?” என்று முகத்தை மூடிக் கொண்டான்.

“சாமி.. நீயு இல்லனா அவ ஒன்னுமே இல்லாம போயிருப்பானு நான் சொல்ல மாட்டேன்.. ஏம்பேத்தி எம்புட்டுக்கு ஒழச்சு வந்தானு கண்கூடா பாத்தவ. ஆனா அவ கொஞ்சமாச்சு நிம்மதியா, தனக்குனு நாலு பேரு இருக்காவ, வெடிச்சு அழுதா அணைச்சு ஆருதலு சொல்ல தோழன்னு ஒருத்தேன் இருக்கியான்னு மனதளவுல துவளாம இருந்தது உன்னாலதான் சாமி.. இப்புடி ஏதாது பேசி, அவள வருத்தப்படவச்சுடாதய்யா.. காலத்துக்கும் ஒங்க ஒறவு நெலைக்கனும்.. ஆரோ எவரோ பேசினதுக்கு மனசொடைஞ்சுபோயி வெலக்கி நிறுபுடாதீகய்யா” என்று வீராயி கூற,

பதறிவிட்டான்.

அவளை விலக்குவதா? தன் உயிரான தோழியை விலக்குவதா? முடிந்திடுமா என்ன? எளிதில் விலக்கிவிடும்படியானதா அவர்கள் மனதளவு கொண்டுள்ள பந்தம்?

கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டவன், “அவளுக்கு என்னமாவது கொண்டுவா ஆத்தா” என்று கூற,

அவன் தலைகோதி, “போறாத காலம்யா.. ஆண்டவன் அம்புட்டயும் பாக்கத்தான் செய்யுறான்.. எல்லாம் சரியாப்போகும்” என்றவராய் சென்றார்.

முகில் ஒரு பெரேமூச்சுடன் நிமிர, கண்கள் சிவந்து நீர்த்துளிகள் வைரமாய் மின்ன, அவள் அருகே அமர்ந்து அவள் தலையைக் கோதிக் கொடுத்தபடியே இருந்தான் அய்யனார்.

அவனது துடிக்கும் சிவந்த நாசியும், நடுக்கம் மறைக்க வேண்டி பற்களிடம் கடிபடும் அதரமும், வெளியே கொட்டிவிடக்கூடாதென்ற வைராக்கியத்தோடு விழியிலேயே உறைந்து மின்னும் கண்ணீர் துளியும், இவையாவும் கசியவிடும் அவன் உணர்வுகளுமே சொன்னது, அவன் மனதை…

ஆச்சரியமாய் அவனைப் பார்த்த முகில், தன் அத்தானை நெருங்கி, அவன் தோளில் கரம் வைத்து, “அ..அத்தான்..” என்க,

அய்யனாரின் ஒரு சொட்டுக் கண்ணீர் இறைவியின் முகத்தில் பட்டுத் தெறித்தது.

அழுத்தமாய் விழிகளை மூடிக் கொண்டு, நிமிர்ந்து முகிலைப் பார்த்தவன், “உ..உன்.. ஃபிரெண்ட நான் விரும்பக்கூடாதாடா?” என்று கரகரத்தக் குரலில் கேட்க,

முகில் அதிர்ந்தே போனான்.

“அ.. அத்தான்?” என்று முகில் கேள்வியாய் அழைக்க,

அவள் முகம் நோக்கியாவன், “ஏன்னுலாம் கேக்காத முகில்.. காதலிச்சுட்டேன்” என்றான், காற்றாகிப்போனக் குரலில்.

வீராயி தண்ணீருடன் உள்ளே வர,

எழுந்து கொண்டு அவருக்கு வழிவிட்டு நின்றான், அய்யனார்.

பேத்தியின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவளை எழச்செய்த வீராயி, அவளுக்கு நீரைப் புகட்ட, மயக்கம் கலைந்து நிலைபெற அவளுக்கு சிலபல நிமிடங்கள் தேவைப் பட்டது.

சுயம் மீண்ட பிறகுதான் தான் செய்த ஆர்ப்பாட்டமே அவளுக்குப் புரிய, ஒருவித சங்கோஜம் அவளைச் சூழ்ந்துக் கொண்டது.

கண்களை அழுந்த மூடி அப்படியே சாய்ந்தவள் மார்புக்கூடு, பெருமூச்சுக்களில் ஏறி இறங்க, விழியோரம் குட்டி நீர்த்துளி எட்டிப் பார்த்தது.

வாய் வழியாக மூச்சை இழுத்து விட்டவள், கண்களைத் திறந்தாள்.

யாருக்குமே அந்தச் சூழலை இதமாக்க என்ன செய்ய வேண்டுமென்றுதான் தெரியவில்லை…

“ப்ச்..” என்று அந்த அமைதியைத் தாள இயலாதவள் எழுந்து குளியலறைக்குள் புகுந்து கதவினை படீரென்று அடித்துச் சாற்றினாள்.

‘என்ன செய்ய அத்தான்?’ என்பதாய் முகில் அய்யனாரை நோக்க,

கண்களை மூடித் திறந்து பொறுமை காக்கும்படி தலையசைத்தான்.

சில நிமிடங்களில் முகம் கழுவி, முடி திருத்தி வெளியில் வந்தவள் முன் வந்த அய்யனார், “அந்தப் பக்கத்து வீட்டு லேடி மேல கம்ப்ளைன்ட் தரியா?” என்று கேட்டான்.

ஏளனமாய் மனதோடு சிரித்துக் கொண்டு, “குடுத்து?” என்று கேட்டவளாய் அவனை நோக்க,

அவன் பார்வையின் விசை அவளை என்னவோ செய்வதாய் உணர்ந்தாள்…

‘நீ பாதுகாப்பாதான் இருக்க’ என்ற வார்த்தை அவள் காதுகளில் கேட்க அவனைப் பார்த்தவள் உடல் சிலிர்த்தடங்கியது‌.

தன்னை நிதானித்தவளாய், “அப்பவும் உண்மையைச் சொன்னதால துரத்திவிட்டுட்டேன்னு தான சொல்லுவாங்க?” என்று கேட்க,

“அதுக்காக என்னவும் பேசட்டும்னு விடச் சொல்றியா?” என்றான்.

“விடலை.. கடக்கத்தான் முயற்சி செய்றேன்.. என்னைப் பேசுறவங்க மேல எல்லாம் புகார் குடுக்கனும்னா, என் அப்பா அம்மா, முகியோட மாமா உட்பட பாதி ஊரையே எழுதித்தரனும். அத்தனைப் பேரையும் கைது செய்துட முடியுமா? என்னைப் பேசுறாங்கனு அவங்கட்டப் போய் என்னால ஒவ்வொருத்தர் வீட்டு கதவையா தட்டித்தட்டி என்னைப் பேசாதீங்கனு நிரூபிக்க முடியாது.. அவசியமும் இல்லை.. அதுக்காக என்னவும் பேசுங்கனு சும்மாவும் இருக்க மாட்டேன். என்னைப் பேசுற பேச்சுலாம் அப்படியே கேட்டும் கேட்காம ஒன்னும் போகலை. அத்தனைக்கும் கணக்கு வச்சுருக்கேன்.. இதையெல்லாமும் தாண்டித்தான் போவேன்.. வலிக்குது.. சும்மா இல்ல.. உசுரே போற போலதான் இருக்கு.. போய் புகார் குடுத்து உள்ள புடிச்சுப்போடப்போறதால அதை போக்கிடவோ, அவங்க பேசினதுலாம் இல்லைனோ ஆகிடுமா? என் காதுபடவே என்னைப் பத்தி பேசினவங்க என்னைப் பேச பயப்படும் ஒரு நிலையை நான் உருவாக்குவேன்.. நான் கடவுளை நம்புறேன்.. கர்மபலனை நம்புறேன்.. ஒருத்தர் செய்யும் செயலுக்கான பாவம் அவங்களை வந்து சேரும்னும் நம்புறேன்.. என் பாதைல நான் போறேன்.. சும்மா உக்காந்து வாய் பேசுறவங்களுக்கான தண்டனையைக் கடவுள் குடுப்பார்.. என்னைப் பேசுற அதிகாரம் அவங்களுக்கில்லைங்குற எண்ணத்தை நான் கொண்டுவருவேன்” என்றவளாய் அவள் அறையைவிட்டுச் செல்ல,

“ஏம்பேத்தி மனசுக்கும் திடத்துக்கும் அவள பேசின வாயெல்லாம் ஆனு வேடிக்கைப் பாக்கத்தான் போவுது” என்றவராய் வீராயியும் அறைவிட்டுச் சென்றார்.


Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம்-03

திருப்பம் -02