விசை-18
விசை-18
அய்யனாருக்கு உள்ளங்கையில் ஆழமான காயமும், முழங்கைக்கு மேல் உள்ள காயத்தில் தையலும் போடப்பட்டிருந்தமையால், அவனுக்கு விடுப்பு வழங்கி இருந்தனர்.
முகில் அவனது காயம் பற்றிய விஷயம் தெரிந்துகொண்டு பதறியடித்துச் செல்ல, அய்யனார் கட்டிலில் படுத்தபடி விட்டத்தைப் பார்த்து கனவு கண்டு கொண்டிருந்தான்.
அவனவள் அவனுக்காகத் துடித்த துடிப்புகள் எல்லாம் அவனுள் இன்பச் சாரல் வீசும் விதமாய்..
“அத்தான்..” என்று முகில் பல முறை அழைத்தும் கூட அவன் கனவிலிருந்து வருவதாக இல்லை. இதில் நடுநடுவே புன்னகை வேறு..
ஒருகட்டத்தில் கடுப்பாகிப்போன முகில், அவன் தொடையில் ஓங்கி அடிக்க, “அடேய்..” என்றபடி எழுந்தவன், தையல் கொடுத்த அழுத்தத்தில் முகம் சுருக்கினான்.
“அய்யோ அத்தான்..” என்று பதறிப்போன முகில், “என்ன அத்தான்? எப்புடி ஆச்சு? அத்தை என்னமோ அடிபட்டு வந்திருக்கீங்கனு அழுதுட்டே ஃபோன் அடிச்சாங்க..” என்று கேட்க,
“ஓ.. அம்மாதான் சொன்னாங்களா?” என்று சோகம் போல் கேட்டான்.
“வேற யாரு சொல்லுவாக?” என்று முகில் புரியாமல் கேட்க,
“என் ஆளுதான்” என்றானே பார்க்க வேண்டும்..
“உங்க ஆளா?” என்று முகில் அரண்டுபோய் விழிக்க,
அவனைப் பார்த்துப் புன்னகைத்தபடி கண்ணடித்தான்.
முகில் அய்யனாரை ஆச்சரியமாய்ப் பார்த்தான்.
“கஞ்சி போட்ட காட்டன் சட்டை கணக்கா விறப்பா, பேருக்கேத்தாப்புல அய்யனார் கணக்க இருந்த எங்க அத்தானை கண்டு பிடிச்சுத் தாறீயளா போலீஸே” என்று முகில் கேட்க,
“ஏண்டா? போலீஸ்னா வெறப்பாத்தான் இருக்கணுமா? ஸ்டேஷன்ல இருக்க வேண்டிய பொறுப்போடவும் விறைப்போடவும்தான் இருக்கேன்..” என்று அய்யனார் கூறினான்.
“சரிதான்.. உங்களுக்கு ஆக்சிடென்டுனு அவளுக்கு எப்புடித் தெரியுமாம்?” என்க,
“ஆக்சிடென்டே இல்லடா” என்று மெல்லொலியில் அடுத்த குண்டைப் போட்டான்.
“ஏதே? பிறகு?” என்று முகில் கேட்க,
சுருக்கமாக நடந்ததை விவரித்தான்.
அரண்டுபோன முகிலுக்குப் பயத்தில் என்ன பேசவென்றே புரியாத நிலை..
பதட்டமான நெஞ்சை நீவிக் கொண்டு அவனது அடிபடாத கரத்தைப் பற்றிக் கொண்ட முகில், “என்ன அத்தான்? என்ன என்னமோ சொல்றீங்க? எனக்கு நெஞ்செல்லாம் பதறுது” என்று கூற,
“ஒன்னுமில்லடா.. இதெல்லாம் என் வாழ்க்கையில சகஜம். அதுக்குனு அசால்ட்டா இருக்க மாட்டேன்..” என்றவன், அவன் தோள் தட்டி, “உயிரைப் பத்திரமா உன் பிரெண்டுகிட்ட சேர்க்கணுமே” என்றான்.
அதில் பக்கென்று சிரித்த முகில், “லவ்ஸுல பத்து வயசு கொறஞ்சுபோச்சு போலயே.. அத்தைக்கு தெரியுமா?” என்று கேட்க,
“முதல்ல அவங்கட்டதான்டா சொன்னேன்” என்றான்.
தன் அத்தானைப் பெருமையாய்ப் பார்த்தவன், அவனுக்கும் காமாட்சிக்குமான பேச்சுவார்த்தை பற்றிக் கூறி, “ஆயிரம் இருந்தாலும் அவங்க பழைய ஆளுடா.. என் முடிவு தான்னு வம்படியா அவளைக் கூட்டிவந்து கடைசியில வார்த்தை வாங்குற நிலை வந்துடக் கூடாது பாரு.. அதான் முதல்ல அம்மாவுக்குப் புரிய வச்சேன்.. புரிஞ்சுகிட்டாங்க” என்று கூறவும், அவனை மெச்சுதலாய் பார்த்தான்.
பற்றியிருந்த அவன் கரத்தில் ஒரு அழுத்தம் கொடுத்து, “அவ பூ மாதிரி அத்தான்.. ஆனா அவளைக் கையாண்ட கையெல்லாம் குரங்கு கை.. அ..அவ.. எ..எவ்ளோ கஷ்டப்பட்டானு எனக்குத்தான் தெரியும் அத்தான்.. ஒருக்கா மதியம் அவளைப் பார்க்க போயிருந்தேன்.. தூங்கிட்டிருந்தா.. ஆத்தா எழுப்பவும் அரண்டுஅடிச்சு எழுந்தா. இன்னும் கூட உறக்கத்துல பட்டுனு எழுப்பினா அஞ்சிடுவா. அதுலருந்து வெளிய வந்துட்டாதான்.. ஆனா அந்த நாளோட தாக்கம்னு ஒன்னு இருக்குல்ல? அந்த வலி இருக்கும்ல?” எனும்போதே அவன் கண்கள் கலங்கிப் போனது.
அய்யனார் முகம் இறுக்கம் பூசியது.
“முதல்ல என்கிட்ட பழகவே தயங்கினாள் அத்தான்.. எனக்குப் பயந்து இல்ல.. ஊருக்குப் பயந்து. அவளை அக்கம் பக்கத்துல எல்லாம் அவ்ளோ பேசுவாங்க. அ..அன்னிக்கு பார்த்தீங்களே” என்ற முகில் தன் கரகரத்தத் தொண்டையைச் சீர் செய்துக் கொண்டு, “அவளால எனக்குக் கெட்டப் பெயர் ஆயிடுமோனு பயந்துதான் ஒதுங்கினாள். அப்பவும் அவளை யாரும் பேசுவாங்கனு அந்தப் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவ ஒதுங்கலைனு எனக்கு அவமேல கர்வம் உண்டு அத்தான். சக்தி ஒருநாள் அப்பாபத்தி கேட்டுத்தான் தாங்கமாட்டாம எங்க கிட்டயெல்லாம் வெடிச்சது.. அ..அன்னிக்கு அவ அழுத அழுகை இன்னும் என் கண்ணுக்குள்ள இருக்கு அத்தான்” என்றவன் கண்களிலிருந்து கோடாய் நீர் வடிந்தது.
“இறைவி ரொம்ப அடிபட்டுட்டா அத்தான்.. ஆனா அவ ரொம்ப ரொம்ப தைரியமானவ. இந்த ரெண்டு வருஷப் பழக்கத்துல அவ வெடிச்சு என்கிட்ட அழுதது ரெண்டே முறைதான்.. முதல் முறை சக்தி அப்பா பத்தி கேட்கும் போது.. ரெண்டாவது முறை இப்ப நடந்தது.. உயிரே போற மாதிரி ஆயிடுச்சு அத்தான்..” என்றவன் தோளில் கரமிட்டு அய்யனார் தட்டிக் கொடுக்க,
அவனை நிமிர்ந்து பார்த்துத் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவன், “அவளைச் சந்தோஷமா பாத்துப்பீங்க தானே அத்தான்?” என்று கேட்டான்.
அய்யனார் என்றால் முகிலுக்கு எத்தனைப் பிடித்தம் என்பது குடும்பமே அறிந்த ஒன்று. அய்யனார் காகம் வெள்ளையாக இருக்கும் என்றால், அது பொய் என்று தெரிந்தாலும் கூட இனி அது மெய்யே என்று நினைத்துக் கொள்பவன் முகில். நம்பிக்கை என்ற வார்த்தையே வியக்கும் அளவு அவன் மீது நம்பிக்கை கொண்டவன், இன்று இறைவிக்காக யாசகம் கேட்பதுபோல், அவனிடம் கேள்வி கேட்டிருப்பதையே அவள் மீது அவன் எத்தனைத் தூய்மையான நேசம் கொண்டுள்ளான் என்பதை அய்யனாருக்கு உணர்த்தியது.
முகிலை அணைத்துக் கொண்டு முதுகைத் தட்டிக் கொடுத்தவன், “சாமி மாதிரி பாத்துக்குறேன்டா” என்று ஊணை உருக்கும் குரலில் கூற,
தன் அத்தானை இறுக அணைத்துக் கொண்டான்.
அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தவன், “என்னை நலம் விசாரிக்க வந்துட்டு உனக்கு நான் ஆறுதல் சொல்றபடி பண்ணிட்ட பாரு” என்று கூற,
“அய்யோ அத்தான்.. மறந்தே போனேன்.. இனியாவது கவனமா இருங்க அத்தான்” என்று அவனிலிருந்து பிரிந்தவனாய் முகில் கூறினான்.
இவர்கள் பேச்சு அடுத்து சிரிப்பில் தாவி விட, தனது கல்லூரிப்பையுடன், “அண்ணா..” என்றபடி மதி வந்தாள்.
கல்லூரியிலிருந்து நேராக வந்திருப்பாள் என்பதை அவளது கலைந்த தோற்றமும், கல்லூரிப் பையுமே காட்டியது.
அய்யனாருக்கு அடிப்பட்டதாய் காமாட்சி கூறியதில், கல்லூரி முடித்தக் கையோடு பார்த்துச் செல்வோம் என்று வந்தவள், முகிலை அங்கு எதிர்பார்க்கவில்லை. வாசலில் சற்றுத் தொலைவில் அவன் மகிழுந்தை நிறுத்தியிருந்ததால் அதனையும் அவள் கவனித்திருக்கவில்லை.
தற்போது கட்டிலில் அமர்ந்து சிரித்த முகமாய் பேசிக் கொண்டிருந்தவனைக் கண்டதும் இதயம் தாறுமாறாகத் துடிக்கத் துவங்க,
“வா மதி..” என்று அய்யனார் தான் அவளைச் சுயம் மீட்டான்.
“அ..அண்ணா.. பெரிம்மா ஏதோ அடின்னு சொன்னாங்க..” என்று தட்டுத் தடுமாறி அவள் கேட்க,
“வண்டியிலருந்து விழுந்துட்டேன்டாம்மா.. ஒன்னுமில்ல சின்ன அடிதான்” என்றான்.
“இவ்ளோ பெருசா ரெண்டு கட்டு போட்டிருக்கு சின்ன அடின்னு சொல்றீங்க? பார்த்து வரக் கூடாதா?” என்று அவள் கேட்க,
“நீ பாத்துக்கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?” என்று முகில் அவளைச் சீண்டினான்.
எப்போதும் அவன் சீண்டலுக்குப் பதிலாய் பட்டாசைப் போல் வெடிப்பவளுக்கு இன்று அது வரவில்லை.
தயக்கத்துடன் அவனைப் பார்த்தவள், அவன் குறும்புப் பார்வையில் பதட்டமாகி, சட்டெனத் தன் முகம் திருப்பிக் கொண்டு, “மருந்தெல்லாம் கொடுத்திருக்காங்களா?” என்று அய்யனாரின் நலம் விசாரித்தாள்.
“ஒழுங்கா ரெஸ்ட் எடுங்க. போலீஸ் மூளைக்குள்ள என்னத்தையாவது போட்டு உருட்டாதீங்க” என்றவள், “பெரிம்மாவ பாத்துட்டு வரேன்” என்றவளாய் எழுந்து செல்ல,
“என்ன உன் ஆளு உன்னைப் பார்த்து ரொம்ப பம்புறா?” என்று அய்யனார் கேட்டான்.
‘போச்சுடா..’ என்று எண்ணிய முகில், “அ..அப்படியா? இல்லையே அத்தான்” என்க,
“டேய்.. கேவலமா நடிக்காத” என்றான்.
“அது..அது..” என்று என்ன கூறுவதென்றே புரியாது தடுமாறியவனுக்கு வெட்கத்தில் பிடரி முடி சிலிர்த்தது.
அதில் சிரித்துக் கொண்ட அய்யனார், “நல்லாருடா ராசா” என்க,
“அத்தான்.. ஏன் அத்தான்..” என்றவன், “அவ நடந்துதான் வந்திருப்பா.. நானே கூட்டிட்டுக் கிளம்புறேன்” என்று எழுந்தான்.
“ம்ம்.. நடத்துங்க நடத்துங்க” என்று அய்யனார் கேலி செய்ய,
“நீங்களும் வேணும்னா நடத்துங்க. வேணாம்னா சொல்றோம்” என்றான்.
“சொல்ல வேண்டியவங்க சொல்லணும்டா” என்று அவன் கூற,
“அதுக்கு நீங்க சொல்ல வேண்டியதைச் சொல்லணும்” என்று கூறினான்.
அதில் வாய்விட்டுச் சிரித்தபடி எழுந்த அய்யனார், “சொல்லுவோம்டா.. உன் ஃப்ரெண்டும் என் தங்கச்சி போல சின்னப் பொண்ணுதான். வளரட்டும்.. சொல்லிக்கலாம்” என்று கூற,
முகில் புன்னகைத்துக் கொண்டான்.
இருவரும் வெளியே வர, மதி காமாட்சியை அமர்த்தி, தேநீர் ஆற்றிக் கொடுத்து, அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள்.
தாய்க்கு மகள் கூறும் ஆறுதல்…
ஆடவர்கள் இருவரும் அதை ரசித்துப் பார்க்க,
“எனக்கு ஒரு பொம்பளப் பிள்ளை இல்லையேனு கொறையெல்லாம் தீக்குற மதி நீதான்” என்று காமாட்சி கூறியதும்,
“எனக்கு அம்மா இல்லேங்குற குறையை நீங்க தீக்குறீங்க தானே? அப்ப நான் உங்க பொண்ணு தானே? அப்புறம் எதுக்கு பொண்ணு இல்லனு சொல்லிக்கிட்டு?” என்று மதி கூறினாள்.
வாஞ்சையான புன்னகையுடன் அங்கு வந்த அய்யனார் அவள் தலை கோத,
“சரியா தானே அண்ணா சொல்றேன்?” என்றாள்.
“ரொம்ப சரிதான்டா” என்று அய்யனார் கூற,
புன்னகையுடன் எழுந்தவள், “சரி நான் கிளம்புறேன் பெரிம்மா. காலேஜ்லருந்து நேரா இங்கதான் வரேன்.. வீட்ல வேலை கிடக்கு. போயிட்டு வரேன். அண்ணா ஒழுங்கா ரெஸ்ட் எடுத்து உடம்பைக் கவனிச்சுக்கோங்க” என்று கூறினாள்.
“சரிடாம்மா” என்று காமாட்சியும் அய்யனாரும் கூற,
அவளது கல்லூரிப்பையை எடுத்துக் கொண்ட முகில், “சரி அத்தை நானும் வரேன். அப்படியே இவளை வீட்ல விட்டுட்டு கிளம்புறேன். வரேன் அத்தான்” என்று கூறினான்.
மதி மறுத்துப் பேசும்முன்பே, “நானே கேட்க இருந்தேன்டா முகில். போறப்ப இவளை வீட்ல விட்டுட்டுப் போய்யானு.. இருட்டிப் போச்சுல்ல?” என்ற காமாட்சி, “இவனோடவே போய்ச் சேரு கண்ணு.. பாத்துப் போயிட்டு சேதி சொல்லுங்க” என்று கூறிட,
“ச..சரி பெரியம்மா” என்று தலையசைத்தாள்.
முகில் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு, “வரோம் அத்தான்.. வரோம் அத்தை” என்க,
மதியும் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தாள்.
சென்று வண்டியில் ஏறியவன் அவளுக்காகக் காத்திருக்க,
அவளும் வந்து அமர்ந்தாள்.
எதுவும் பேசாமல் வண்டியைக் கிளப்பிக் கொண்டு அவன் புறப்பட,
அவள் கரங்களைப் பிசைந்துக் கொண்டே தன் பதட்டம் குறைக்க முயற்சித்தாள்.
பாதி தூரம் சென்றதும், “என்கிட்ட என்ன மதி உனக்குத் தயக்கம்?” என்க,
அவளுக்குத் தற்போதைய பதட்டத்தைக் குறித்துக் கேட்கிறானோ? அன்றைய முத்தம் குறித்துக் கேட்கிறானோ என்று சந்தேகம்..
மளங்க மளங்க அவள் விழிக்க, “ஏன் இம்புட்டுப் பதட்டமா உட்கார்ந்திருக்க?” என்று அவள் சந்தேகத்திற்கு விடை கொடுத்தான்.
“அ..அப்படிலாம்.. இல்ல மா..மா” என்று அவள் தலை குனிந்தபடியே தடுமாற,
வண்டியை ஓரம் நிறுத்தினான்.
அவளுக்கு இன்னும் பதட்டம் கூடிட, நெற்றியோரமாய் கொட்டும் வியர்வையைத் துடைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
அனைத்திற்கும் ஒரு முதல் இருக்கும்.. அந்த முதல் பல உணர்ச்சிகளின் சிக்கலில் சிக்கித்தானே இருக்கும்? கடந்து வந்துவிட்டால் அந்தச் சிக்கல்கூட நினைத்து மகிழும் சிறப்புதானே!
“அ..அன்னிக்கு ஏதோ.. தெரியாம நடந்துருச்சு.. எ..எனக்கே சின்னப் பிள்ளைகிட்டப் போயினு.. சங்கடமா போச்சு.. நி..நீ படிக்கணும்னு சொல்லிட்டு நானே இப்படி பண்ணிட்டேனேனு சங்கடமா போச்சு மதி. சாரி” என்று எப்படியோ அவன் கூறிவிட, அவளுக்குத்தான் வெட்கம் தாளவில்லை.
பரவாயில்லை என்றும் கூற முடியவில்லை, சண்டை பிடிக்கவும் தோன்றவில்லை.
அவளுக்கு அவன் தீண்டல் தித்திக்காமலா அதில் கட்டுண்டு இருந்தாள்? ஆனால் அச்சத்திற்கு முன் அவையெல்லாம் செல்லாக் காசாகிப் போனதே…
“ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்துல பண்ணிட்டேன் மதி.. இனிமே இப்படி நடக்காது.. என்கிட்ட பழைய படியா இரு ப்ளீஸ்.. அன்ட் நான் உன்கிட்டப் பேசாம இருந்ததுக்கும் மன்னிச்சுருமா. தப்பு என்னோடதுதான். மனசார மன்னிப்புக் கேட்டுக்குறேன்டாமா” என்று அவன் கெஞ்சுதலாய்க் கூற,
“மா..மாமா.. எனக்கு வயத்துக்குள்ள என்னமோ பண்ணுது” என்று தலை கவிழ்ந்தபடியே கூறினாள்.
“என்னமா பண்ணுது? உனக்கு ஸ்மெல் ஆகாதுனு ஜன்னல்கூட திறந்துதானே வச்சிருக்கேன்?” என்று அவன் கேட்க,
அவளுக்கு அய்யோ என்றானது.
“அ..அது இல்ல.. நி..நீங்க பேசுறது..” என்று அவள் தடுமாற,
அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது.
“எ..எனக்கு என்ன சொல்லனு தெரியலை மாமா. எ..என்னமோ பண்ணுது.. இ..இது இப்படி.. அது.. நாம.. வந்து.. கல்யாணத்துக்கு முன்ன.. அது.. அப்பாவுக்குத் தெரிஞ்சா..” என்று அவள் அதிகம் தடுமாற,
அவனுக்குச் சிரிப்பாக வந்தது.
இருபது இருபத்தோரு வயதுடைய பெண்.. அதுவும் அவள் அவளது தந்தை, தனது படிப்பு என்று கட்டுக்கோப்பாய் வளர்ந்துவிட்டாள். திருமணம் அதுவும் அவள் மாமாவுடன் என்று சொன்னபோதுகூட, எப்போதும் அவனுடன் உரிமையாக நடந்துகொள்ளும் பேச்சை மீறி எதுவுமே அவளுக்குத் தோன்றியிருக்கவில்லை. அவனைப் பிடிக்கும்.. அவனுடனான திருமணத்திற்கும் சம்மதம் என்று தந்தையின் முடிவுக்கு ஒப்புக்கொண்டவளுக்கு, படிப்பு முடிந்ததும் திருமணம் என்று தந்தை சொன்னது உவப்பானதாக இல்லை.
அதைப் புரிந்துகொண்டு முகிலாகவேதான் அதனைத் தள்ளி வைத்தது. அப்போதிருந்துதான் அவனுடனான திருமணத்தில் திருமண பந்தம் என்பதை மீறி ஒரு தனிப் பிரியம் அவளுக்குத் தோன்றியது. அவனுடன் அலைபேசியில் ஓரிரு வார்த்தைகளே ஆயினும் அவள் பேசத் தொடங்கியது தற்போது கொஞ்ச மாதமாகத்தான்.
காதல் என்றால் என்னவென்று கேட்டாள், அவளுக்குத் தெரியாது. தன் மாமன் மீது தான் வைத்திருக்கும் ஆசை, அன்பு, பாசம், அக்கறை, மரியாதை, இந்த அழகிய நாணம் கொடுக்கும் ஈர்ப்பு இதுவெல்லாம்தான் காதலெனில் நிச்சயமாகத் தான் காதலிக்கின்றேன் என்றே கூறுவாள்.
இப்படியான சூழலில் இந்த முதல் தீண்டல் அவளை ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையில் திணற வைத்தது.
அதைப் புரிந்து கொண்ட முகில், நடுங்கும் அவள் கரம் பற்றித் தன் கரங்களுக்குள் பொத்திக் கொண்டான். அவள் உடல் ஒரு நொடி சிலிர்த்தடங்கியது.
“மதிமா..” என்று அவன் அழைக்க,
பதட்டமாய் நிமிர்ந்து பார்த்தாள்.
“உன் மாமாதானே?” என்று அவன் கேட்க,
தன்னைப் போல் அவள் தலை ஆம் என்று அசைந்தது.
“சாரி.. இனிமே இப்படி நீ தயங்கும்படி நடந்துக்க மாட்டேன்.. எனக்கு உன் நிலைமை புரியுது.. ச்சில்.. ரிலாக்ஸ்.. நீ நார்மல் ஆகக் கொஞ்சம் நாள் எடுக்கும்.. எனக்குப் புரியுது உன்னை. நான் உன்னைத் தப்பாவே நினைச்சுக்கலை. நான் எதுவும் நினைப்பேனோனு இன்னும் நீ இன்-செக்யூரா ஃபீல் பண்ணாதடாமா” என்று அவன் கூற,
அவளுக்குக் கண்கள் கலங்கியது.
எங்கே தனது உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் தவறாக நினைத்திடுவானோ என்றுதானே அவளும் அதிகம் அஞ்சியது. தற்போது தன்னைப் புரிந்துகொண்டு அவன் பேசுவதில் மனம் குளிர்ந்து, நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினாள்.
“மதிமா..” என்று அவள் கண்ணீரை அவன் துடைக்க,
“சாரி மாமா..” என்று அழுதாள்.
“ச்சூ.. எனக்குப் புரியும் என் மதிக்குட்டியை” என்று அவன் கூற,
நெகிழ்ந்து போனாள்.
சில நிமிட மௌனத்திற்குப் பின், “இறைவியை அப்பா என்ன சொன்னாங்க?” என்று மதி கேட்க,
முகில் அவளை ஆச்சரியமாய்ப் பார்த்தான்.
“அப்பா கொஞ்ச நாளாவே ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தாங்க. ரெண்டு நாளா உங்களைப் பத்தி, நான் உங்க கூடப் பேசுறேனானுலாம் கேட்டாங்க. முதல் முறை கேட்கும்போது தெரியலை.. மாமா பேசலைப்பானு சொல்லிட்டேன். அதுல ரொம்பப் பதட்டமாகி ஏன்னு கேட்கவும்தான் டவுட் வந்தது. வேலையா இருப்பாங்கனு சொல்லிட்டேன். நேத்து மறுபடியும் கேட்டாங்க.. பேசிட்டீங்கனு சொல்லும்போது அவங்கட்ட ஒரு ஆசுவாசம் தெரிஞ்சுது. அதுலயே புரிஞ்சுது அவங்கதான் ஏதோ பிரச்சினை பண்ணிட்டாங்கனு” என்று மதி கூற, முகிலுக்கு என்ன சொல்வதென்றே புரியாத நிலை.
“அவங்க என் அப்பா மாமா.. எனக்கு அம்மா இல்லாத குறையைத் தீர்த்து என்னை அம்மாவுக்கும் சேர்த்துத் தாங்கினவங்க.. அதுக்காக அவங்க செஞ்சது தவறாக இருந்தாலும்கூடச் சரினு நான் சொல்ல மாட்டேன். நான் நினைவு தெரிஞ்ச வயசுலருந்து அவரையும் பாக்குறேன் உங்களையும் பாக்குறேன்.. ரெண்டு பேருமே எனக்கு முக்கியம்தான். என் அப்பா எனக்கு நல்லவர்.. அதேபோல எல்லாருக்குமானு கேட்டா நிச்சயமா இல்லைனு நானே சொல்லுவேன்.. இன்னொரு முறை நான் சங்கடப்படுவேனோனு ஒரு விஷயத்தை என்கிட்டருந்து மறைச்சுடாதீங்க மாமா” என்று மதி கூற,
தற்போது நெகிழ்ந்து போவது அவன் முறையானது. அவள் தாயாகும் தருணங்களில் இவன் சேயாய்… இவன் தாயுமானவனாக மாறும் தருணங்களில் அவள் சேயாய்…
ஒரு பெருமூச்சு விட்ட முகில், நடந்தவற்றைக் கூற, “வீட்டுக்கு வண்டியை விடுங்க மாமா” என்றாள்.
“பிரச்சினை வேணாம் கண்ணம்மா. எனக்கு உன்னை ஃபேஸ் பண்ணவே பயமா இருந்தது. மாமாவை..” என்று முகில் பெருமூச்சுவிட,
“சண்டை போடுறது தப்பில்லை மாமா. பேசாம இருந்தா பிரிவுதான் வரும். சண்டை போட்டுட்டா அந்த ஆதங்கத்தையாவது தீர்த்துட்ட திருப்தியில மறுபடி பேசிடச் சொல்லும்..” என்றாள்.
‘திடீரெனப் பார்த்தால் சிறு பிள்ளையாய் பேசுகின்றாள், திடீரெனப் பெரிய மனுஷி அவதாரம் எடுக்கின்றாளே’ என வியந்து போன முகில் மெல்லிய புன்னகையுடன் வண்டியை அவள் வீட்டை நோக்கி விட்டான்.
அடுத்த அரை மணி நேரத்தில் செந்தில் முன்புதான் இருவரும் அமர்ந்திருந்தனர்.
“நீங்க இறைவிகிட்ட மன்னிப்பு கேட்கணும்ப்பா” என்று மதி கூற,
“மதி!” என்று செந்தில் அதிர்வாய் அழைத்தார்.
“என்னை யாராவது தப்பாப் பேசினா சும்மா விடுவீங்களாப்பா?” என்று மதி கேட்க,
“நீயும் அவளும் ஒன்னா?” என்று ஆத்திரத்தை உள்ளடக்கிய குரலில் கேட்டார்.
“அவளோட அப்பா அவகூட நல்லா இருந்திருந்தா அவரும் இப்படித்தானே கோவப்பட்டிருப்பாரு? முகில் மாமாவும் அவளுக்கு அப்பா இல்லாத குறையைத் தீர்க்கத்தானேப்பா துணையா இருக்காரு? ஏதோ நீங்களா இருக்கப் போய், அதுவும் எனக்காகத்தான் முகி மாமா அவரைக் கட்டுப்படுத்திட்டு இருக்காருப்பா. உங்க இடத்தில் வேற யாருமாருந்தா மாமா என்ன செஞ்சிருப்பாங்கனு உங்களுக்கே தெரியும். இப்ப கூட முகி மாமா உங்கட்ட சண்டை போட வேணாம்னுதான் சொன்னாங்க.. எனக்கு என் அப்பா முகில் மாமா மனசுல கெட்டவராவே பதிஞ்சுடுவாரோனு பயமா இருக்குப்பா.. இயல்புல நீங்க நல்லவங்கப்பா.. ப்ளீஸ் இந்தப் பழைமையான குணத்தாலயும் பயத்தாலயும் நீங்களே என் முகி மாமாவை அசிங்கப்படுத்தி என்னையும் சங்கடத்துல நிறுத்திடாதீங்க.. அவகிட்ட மன்னிப்பு கேளுங்கப்பா.. அதுக்குமேல உங்க இஷ்டம்” என்றவள் வழியும் தன் கண்ணீரைத் துடைத்தவளாக உள்ளே செல்ல,
முகிலும் செந்திலும் இருவேறு உணர்வுகளோடு அவள் சென்ற திசை பார்த்து அமர்ந்திருந்தனர்.
அவ்விடத்தைப் பெரும் மௌனமே ஆட்சி செய்தது.
செந்தில் அருகே வந்தமர்ந்து அவர் கரம் பற்றிய முகில், அவர் நிமிர்ந்து பார்க்கவும், “அவ பட்ட கஷ்டம்லாம் உங்களுக்குச் சொன்னாகூட புரியாது மாமா..” என்க, அவன் கண்கள் ரத்தமெனச் சிவந்திருந்தது.
அதைக்கண்ட செந்திலுக்கு மனதிற்குள் என்னவோ செய்தது.
“மதி வயசுப் பொண்ணுதானே மாமா அவளும்? ச..சக்தி.. அஞ்சு வயசு சின்னக் குழந்தை.. அ..அவளைப் போய் எல்லாரும் தப்பாப் பேசுறாங்கனு அவ எவ்வளவு வருத்தப் பட்டிருக்கா தெரியுமா? மதியை யாராவது ஏதும் பேசினால் உங்களுக்கு வர்றது போலத்தானே அவளுக்கும்? தவறான முறையில பிறந்த குழந்தைனு அடைமொழி படுத்துற சமூகத்துல தன் குழந்தை தலை நிமிர்ந்து நடக்கணுமினு ஒரு அம்மாவா அவ போராடுற போராட்டம் யாருக்குமே புரியுறதில்ல மாமா.. அவளைத் தூக்கிவிட ஆள் வேணும்னு அவ யாருட்டயும் கெஞ்சலை.. மிதிச்சுத் தள்ளாம இருங்கனுதான் அழறா.. அன்னிக்கு நீங்க பேசிட்டீங்க.. லைன்ல இருந்த அவ அதெல்லாம் கேட்டு எப்படித் துடிச்சுப் போனா தெரியுமா மாமா?” என்றவன் கண்ணிலிருந்து கோடாய் நீர் வழிய, செந்திலுக்கு முதன் முறை தான் இறைவியைப் பேசியது பெரும் தவறோ என்றே தோன்றியது.
“ப்ளீஸ் மாமா.. எனக்காக.. அவளைத் தயவுசெய்து வார்த்தையால் கொல்லாதீங்க” என்றவன் அவர் கரத்தில் தன் சிரம் முட்டி கண்ணீர் சிந்த, செந்தில் மனம் வருந்திப் போனார். இறைவி மீதான அபிப்ராயம் மாறியதா என்றால் இல்லை.. ஆனால் அவளைத் தான் பேசுவது தன் மனதிற்கு இனியவர்களை வதைக்கின்றது எனப் புரிந்து கொண்டார்.
தன் குரலைச் செறுமியவர், “அ..அந்தப் புள்ளைட்ட ம..மன்னிப்புக் கேட்டேன்னு சொல்லிடுங்க மாப்பிள்ளை..இனி இப்..இப்படிப் பேச மாட்டேன்” என்றவராய் எழுத்துச் செல்ல, செல்லும் மாமனை சிறு புன்னகையுடன் பார்த்திருந்தவன், ‘லவ் யூ டி மதி’ எனக் கூறிக் கொண்டான்.

Comments
Post a Comment