விசை-20
விசை-20
தன் கையிலுள்ள ஓவியத்தைக் கண்களில் கண்ணீரோடு பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான், கற்குவேல் அய்யனார்.
அவன் உடலெல்லாம் நடுங்கியது என்றாலும் மிகையில்லை… அவன் கையிலுள்ள ஓவியத்திலிருக்கும் கண்களில் தான் எத்தனை காதல்!
கண்ணின் ஓரமாய் நீர்மணி ஊர்ந்து காதுமடலில் அவள் காதல் துளியைச் சேர்ப்பித்து, அவன் நாசியெனும் வீணையைத் தன்னைப்போல் துடிக்க வைத்து, இசை மீட்டியதாய், இதழ் பெருமூச்செறிந்தது.
‘இறைவி’ என்ற கையெழுத்துடன் கீழே இருந்த தேதியை வருடியவனுக்கு, கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் முன்பு அவள் வரைந்த ஓவியம் அது என்று அறிந்துகொள்ள முடிந்தது.
ஏன்? எப்படி? இவளை நான் எங்கு பார்த்தேன்? எப்போது பார்த்தேன்? என்னை எங்கு கண்டு எப்படி மையலுற்றாள்? என்னை எப்படி அறிந்துகொண்டாள்? எதனால் என்மீது காதல் கொண்டாள்? என்று பல கேள்விகள் அவன் மனதை வண்டாய் குடைந்தது, அவன் கையிலிருந்த அவ்வோவியம்.
கழுத்தில் மாலையுடனும், கண்களில் காதலுடனும் அவள் நிற்க, அவளுக்கு நேர் எதிரே, அவளைப் போலவே மாலையும் காதலுமாய் நின்றிருந்தான், கற்குவேல் அய்யனார்….
இருவரின் கண்களில் அத்தனை உயிர்ப்பு… அந்த உயிர்ப்பைக் கொடுத்தது அவ்விழிகளில் தெறித்தக் காதல் என்றாலும் மிகையில்லை!
அதனை அப்படியே எடுத்த இடத்தில் வைத்தவன் கண்ணில், நிற்காமல் கண்ணீர் வழிந்தது. அவளும் தன்னைக் காதலிக்கின்றாள் என்ற உவகையில் பொழியும் கண்ணீரா? அவள் அதை மறைக்கின்றாளே என்ற வருத்தத்தில் வரும் கண்ணீரா? இத்தனை காலம் சொல்லவே இல்லையே என்ற கோபத்தில் வரும் கண்ணீரா? அது அவனே அறியாதது…
கண்களை அழுந்த துடைத்து மூச்சினை நன்கு இழுத்துவிட்டவன் வெளியே செல்ல, தர்ஷனும் சக்தியும் ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர்.
தர்வின் அக்கூடத்தில் அழகாய் சின்ன அலங்கார வேலைகளைச் செய்துகொண்டிருக்க, மதி குழந்தைகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டும், வீராயி தர்வினுக்கு உதவிக் கொண்டும் இருந்தனர். வள்ளி மதியுடன் அமர்ந்து பிள்ளைகளின் சந்தோஷத்தைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தார்.
தான்யா, முகில் மற்றும் இறைவி சமையலறையில் அணிச்சலை அலங்கரிக்கும் வேலையில் இருந்தனர்.
ஆம்! அது சக்தியின் பிறந்தநாளே!
சக்தி ஆசைப்பட்டதற்கு இணங்க, அன்று அவள் பிறந்தநாளைக் கொண்டாட அய்யனாரும் வந்திருந்தான்.
வந்திறங்கிய தன் சொந்தங்களைக் கண்டு குதூகலித்த சக்தி, “முகி மாமா” என்று ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டாள்.
“ஹாப்பி பர்த்டே ஏஞ்சல்” என்று தர்வின் கூற, “தர்விப்பா.. தேங்க் யூ” என்று அவனையும் தாவி அணைந்திருந்தாள்.
அனைவரையும் உற்சாகத்துடன் வரவேற்றவள் உள்ளே செல்லும் முன், “போலீஸ் சார் வரலை?” என்று கேட்க,
“பரவால்லயே.. என்னை நினைவு வச்சிருக்க?” என்று பின்னிருந்து குரல் கேட்கவும் சக்தி உற்சாகமாய் திரும்பினாள்.
அங்கு அடர் சிகப்பு நிற சட்டையும், வெள்ளை வேட்டியும் உடுத்தி, தோரணையாய் வண்டியில் சாய்ந்து அமர்ந்தபடி, கைகளை மார்பிற்குக் குறுக்கே கட்டிக் கொண்டு நின்றிருந்தான் கற்குவேல் அய்யனார்.
“போலீஸ் சார்..” என்று உற்சாகமாய் அழைத்தபடி அவனிடம் ஓடிய மொட்டவளை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், அவள் கன்னத்தில் முத்தம் வைக்க,
தானும் அவனுக்குப் பதில் முத்தம் கொடுத்தவள் சந்தோஷத்தைத்தான் சொல்லவும் வேண்டுமா? அத்தனை உற்சாகத்துடன் அவனை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு வந்தாள்.
‘இது கிச்சன், இது பெட் ரூம், இது அம்மாவோட மருதாணி தோட்டம்’ என்று மொத்த வீட்டையும் சுற்றிக் காட்டியவள், அவனை அறைக்குள் அழைத்துச் சென்று, “உங்களுக்கு நான் ஒரு சர்பிரைஸ் காட்டுவேன்.. ஆனா யார்கிட்டயும் சொல்லக்கூடாது. பிராமஸ்?” என்க,
அவனும் புன்னகையாய்த் தலையசைத்தான்.
அழகிய, ‘ஆசை’ எனப் பெயரிடப்பட்டக் கோப்பை அவள் எடுக்கும் நேரம், “சக்தி” என்று இறைவி அழைத்திட,
பதட்டத்தில் அதைக் கீழே போட்டவளாய், வெளியே ஓடினாள்.
அங்கிருந்த அய்யனார் சிரித்துக் கொண்டே அதை எடுத்து மேஜையில் வைக்கப்போக, அதன் அலங்காரம் அவனைத் திறந்துப் பார்க்கத் தூண்டியது.
மெல்ல அதைத் திறந்து பார்த்தான். அவளது ஆசைகள் ஒவ்வொன்றையும் அவ்வோவியங்கள் நிறைவேற்றி வைத்திருப்பதைக் கண்டு, உள்ளுக்குள் நெகிழ்வாய் உணர்ந்தான்.
அவளுக்குள் எத்தனை அழகழகான சின்னச் சின்ன ஆசைகள்? வரிசையாக அவற்றைப் பார்த்துக் கொண்டு வந்தவன், உணர்வுப்பூர்வமாய் இருந்த ஓவியங்களில், அவளும் அவனும், மாலையும் கழுத்துமாய் இருக்கும் ஓவியத்தைக் கண்டு உறைந்து போனான்…
அந்த ஓவியத்திலிருந்து இன்னுமே அவனால் மீள இயலவில்லை… தற்போது அவளிடம் இதுகுறித்துக் கேட்பதா? வேண்டாமா? ஏன் தன்னிடம் மறைக்கின்றாள்? தான் அவளைத் தவறாகப் புரிந்துகொள்வோமென்று நினைக்கின்றாளா? என பல சிந்தனைகளோடு அவன் நிற்க,
அவன் தோள் தொட்ட முகில், “அத்தான்..” என்று அழுத்தமாய் அழைத்தான்.
அதில் தன் சிந்தை கலைந்து நிகழ்காலத்திற்கு மீண்டவன் முகிலை நோக்க, “என்னாச்சு அத்தான்?” என்று கேட்டான்.
சமையலறையிலிருந்து தான் தயாரித்த அணிச்சலைக் கையிலேந்தி, தாண்யாவுடன் பேசியபடி வரும் அவளைக் கண்டு, மீண்டும் அவன் உணர்வுகள், உணர்ச்சிகளின் பிடிக்குத் தாவத் துடித்து, கண்கள் கலங்கியது.
எத்தனை வழக்குகளைக் கடந்து, எண்ணற்ற கொடூரர்களைப் பார்த்து இயல்பிலேயே இறுகியிருந்தவனுக்குள் இருந்த ஈரத்தையெல்லாம் அவள்மீதான இந்த ஒற்றை நேசம் தட்டித் தகர்த்துக் கொண்டிருப்பதில், எத்தனை ஆழமாய் அவள் காதலில் வசப்பட்டுள்ளோம் என்பதை ஆத்மார்த்தமாய் உணர்ந்தான்.
பிள்ளையின் பசியுணர்ந்து இயற்கையாய் தாயின் தனங்கள் சுரக்கும் அமுதைப்போல் அல்லவா அவள் காதலின் விசைக்குத் தன் மனமும் காதலைச் சுரந்துள்ளதென்று எண்ண, இன்னுமின்னும் அவன் கண்கள் கலங்கியது.
அவன் நீர் தழும்பிய விழிகளைப் பார்த்து பதறிய முகில், “அத்தான்.. என்னாச்சு?” என்று மெல்லொலியில் கேட்க,
அவன் பார்வை அவள்மீதே!
அவன் நீர் ஊறிய விழி, பனியாய் வந்து அவள் இதயம் தாக்கித் தடுமாற வைத்ததோ? மனதின் தடுமாற்றத்தில் அவள் நிமிர்ந்து அய்யனாரை நோக்க, அவளை இமை சிமிட்டாது பார்த்து நின்றான்.
அவன் விழிகளில் பிரித்தறிய இயலா உணர்வுகள் ஒவ்வொன்றையும் அவள் விழி பிரித்தறிந்துக் கொண்டிருப்பதில், உள்ளம் தடதடக்கப் பெற்றாள் பாவை.
அந்த உணர்வுப் பரிமாற்றத்தைக் கலைக்கும் விதமாய் அவன் அலைபேசி ஒலி எழுப்ப, அதை எடுத்துக் கொண்டு விறுவிறுவென வெளியேறியிருந்தான்.
அவனுக்கு என்னவோ என்ற பதட்டத்தில் முகிலும் பின்னோடே செல்ல, ‘என்னாச்சு? ஏன் அழுறாங்க? அ..அந்த கண்.. அதுல.. அதுல.. கோவம், வலி.. அப்றம்..’ என்று பிரித்தறிந்த உணர்வுகளை மனதோடு சொல்லிப் பார்த்துக் கொள்ளும் திடமில்லாது தடுமாறினாள்.
“ஏ இறைவி.. என்னத்த பராக்குப் பாத்துட்டு இருக்க?” என்று மதி கேட்டதில் சுயம் மீண்டவள், “இ..இந்த கேண்டில் வை மதி. நான் முகியைக் கூட்டிட்டு வரேன்” என்று வாசலுக்கு ஓடினாள்.
அய்யனார் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, முகில் சற்றுத் தள்ளி நின்று காத்திருந்தான்.
முகிலிடம் வந்தவள், “கேக் வெட்டலாம் வாடா” என்றபடி அய்யனாரைப் பார்க்க,
‘கூட்டிட்டு வரேன்’ என்று சொல்ல வந்தவன் என்ன நினைத்தானோ?
“அத்தானைக் கூட்டிட்டுவா இரா” என்றவனாய் உள்ளே சென்றான்.
உள்ளுக்குள் தடுமாறினாலும், தடம் மாறாமல் திடம் காத்தவள், சரியென்று தலையசைக்க, பேசி முடித்தவன் திரும்பி அவளைப் பார்த்தான்.
“கேக் வெட்டலாம் வாங்க சார்” என்று அவள் அழைக்க,
ஆழமாய் அவன் பார்வை அவள் விழிகளில் ஊடுருவியது..
அப்பப்பா.. என்ன மாதிரியான பார்வையது.. பார்வையாலேயே உண்மைகளைப் பிடுங்கிக் கொள்வதில் வித்தகனாய் இருப்பான் போலும். அதன் வீச்சில் அவளையும் மீறி, கட்டுப்பாடின்றி காட்டாறாய் பீரிட்டு எழுந்த காதல், அவள் கண்களைப் பளபளக்க வைத்தது.
அந்த பொன்னான இளவரசியின் பிறந்தநாளையும்விட ஒரு பொன்னான நாள் இருந்திடுமா? என்ற எண்ணத்துடன், எந்த முகாந்திரமும், நெழிவு சுழிவும் இன்றி, “நான் உன்னை விரும்புறேன். உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு, நான், நீ, சக்தி, வீராயி பாட்டி, அம்மானு சந்தோஷமா வாழ ஆசைப்படுறேன்” என்றவனாய் விறுவிறுவென்று உள்ளே சென்றான்.
அப்படியே ஆணி அடித்தார் போல் அரண்டு நின்றவளுக்குக் கண்கள் இருண்டு போனது. அவள் பதிலை தெரிந்துகொண்டவனுக்கு ‘உன் முடிவை யோசித்துச் சொல்லு’ என்ற வாக்கியமே தேவையாக இருக்கவில்லை.
இங்கு அவன் சொல்லிச் சென்ற செய்தியில் மிரண்டுபோனவளுக்கு அதனை ஆராய்ந்து, விளக்கமும், சந்தேகமும் கேட்கும் அளவுகூடத் தெம்பு இருக்கவில்லை…
‘என்ன சொல்கிறார் இவர்?’ என்ற அதிர்ச்சியோடு இருந்தவளுக்கு கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது. நிச்சயம் அதில் வலி இல்லை… பின் என்ன உள்ளது?
“ஆத்தா.. கண்ணு..” என்று வீராயி உள்ளிருந்து அழைக்க,
தன் புடவைத் தலைப்பில் விழிகளை அழுந்த துடைத்துக் கொண்டு உள்ளே ஓடினாள்.
கால்கள் ஏகத்துக்கும் தடுமாறின..
‘இறைவி காம் டௌன்.. பாப்பா பர்த்டே.. ப்ளீஸ் காம் டௌன்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
ஆனாலும் நடப்பதில் கவனம் செலுத்த இயலவில்லை.
அணிச்சலைச் சக்தி வெட்டி, “அம்மா..” என்று நீட்ட,
வலுவாய் புன்னகைத்து அதனை வாங்கிக் கொண்டவள், குழந்தைக்கும் ஊட்டிவிட்டு முத்தமிட்டாள்.
“போலீஸ் சார்” என்று அடுத்த துண்டை அவனுக்கு சக்தி நீட்ட,
“எப்பவும் முகி மாமாக்கு தான ஊட்டுவ? இன்னிக்கு என்ன போலீஸ் சார்?” என்று மதி கேலியாய் கேட்டாள்.
“போலீஸ் சார் புதுசுல? நான் ஆசையா கூப்டேன்னு வந்தாங்கள்ல? அதான் அவங்களுக்கு செகென்ட் பீஸ்” என்று சக்தி ஊட்ட,
அய்யனார் புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்.
கொண்டாட்டம் அத்தனை சந்தோஷமாய் இருந்தது. ஆனால் இறைவி இயந்திரகதியிலேயே செயல்பட்டாள். பிறர் கவனம் ஈர்க்காத வகையில் அவள் கவனம் வைத்தாலும், அவள் தோழனின் கருத்தில் அது பதியவே செய்தது.
அவ்வப்போது அய்யனாரை அவள் பார்ப்பதைக் கண்டவனுக்கு, விடயம் ஓரளவு புரியவும் செய்தது.
விழா இனிதே முடிந்து அனைவருமாகப் புறப்பட, மகிழுந்தில், தர்வின், தர்ஷ், தான்யா, மற்றும் வள்ளி சென்றனர்.
முகில் மதியை அவள் வீட்டில் விடுவதற்கு வண்டியை எடுக்க, அய்யனாரும் தன் வண்டியை எடுத்தான்.
தூக்கக் கலக்கத்தில் இருந்த சக்தியைத் தூக்கிப் பிடித்தபடி இறைவியும், உடன் வீராயியும் நிற்க,
“இரா..” என்று அழைத்த முகில், அவளது கலங்கத் துடிக்கும் விழிகளைப் பார்த்து, கண்கள் மூடித் திறந்து அருகே அழைத்தான்.
அவள் நிலையைப் புரியாமல் பார்த்த மதி, “என்னாச்சு மாமா?” என்று மெல்லொலியில் கேட்க,
“சொல்றேன்..” என்றவன், இறைவியிடம், “உன் மனசுக்கு சரினு படுறதை செய்” என்றான்.
‘அப்ப உனக்கும் தெரியும்’ என்பதாய் அவள் நோக்க,
“தெரியும்..” என்று அவள் பார்வையிலிருந்த கேள்விக்கு பதில் கொடுத்தான்.
தூங்கி வழிந்த குழந்தையின் தலை சாய,
அதை அரவணைத்துப் பிடித்தவள் கைகள் நடுங்கியது.
“அ..அப்பத்தா.. வாடையாருக்கு.. சளி பிடிச்சுகிடப்போகுது.. பாப்பாவ உள்ள தூக்கிட்டுப் போங்க வரேன்” என்று அவர் முகம் பார்க்காது கூறியவள் குழந்தையைக் கொடுக்க,
“நானே நெனச்சேன் கண்ணு” என்றபடி சக்தியை வாங்கியவர், “பாத்து போயிட்டு வாங்க சாமியளா. போயிட்டு சேதி சொல்லுங்க” என்றவராய் உள்ளே சென்றார்.
வீட்டு முன் வாசலில் நின்று கொண்டிருக்கும் இறைவியையும், அவன் அருகே வண்டியில் வந்து நின்ற அய்யனாரையும் பார்த்துக் கொண்ட முகில், அவள் கரத்தை அழுந்தப் பற்றி விடுத்து, “வரேன்” என்றவனாய்ப் புறப்பட்டான்.
வண்டியில் அமர்ந்தபடியே மௌனமாய் அய்யனார் இருக்க,
இவளுக்குப் பேச ஆயிரம் இருந்தும் பேச்சு வராத நிலை.. எப்படி உணர்கிறாள் என்று அவளாலேயே யூகிக்க இயலவில்லை.
கைகள் நடுங்கின.. இருள் பூசிய வானம்… வாடைக் காற்றின் குளிர்..
அசைந்தாடும் முந்தானையை முதுகைச் சுற்றி முன்னே கொண்டுவந்து பிடித்துக் கொண்டவள், “எ..எ..எதுக்கு..” என்றாள்.
என்ன கேட்க வந்து எதைக் கேட்கின்றோம் என்றே அவளுக்குப் புரியவில்லை. அவள் நிலை, தெளிநீரில் முகம் பார்க்கும்படியாய் அவன் அகத்தில்…
சற்றும் யோசிக்காமல், அவள் இடைபற்றித் தன்னை நோக்கி அவன் இழுக்க, அவன் வேகத்தில் அவன் பக்க உடம்பில் மோதிக் கொண்டு அவன் புஜம் பற்றி நின்றாள். அவள் வெற்றிடையில் தீண்டிய அவன் கரம், அவளுள் மின்சாரமாய்.
மான் விழிகளில் அதிர்ச்சிக்கான மிரட்சி இருந்ததே தவிர, அச்சமில்லை…
அவள் உடலில் தெரியாதவன், அறியாதவன் தீண்டியதற்கான இருக்கம் அன்றி, லேசான படபடப்பு மட்டுமே… அதுவே மீண்டும் அவள் மனம் உணர்த்தியது.
அவள் விழிகளை மிக அழுத்தமாய், ஆழமாய் பார்த்தான்…
அவளுக்குக் கண்ணீர் அருவியாய்க் கொட்டியது… அதன் தாக்கம் அவன் கண்களைக் கலங்கச் செய்தது.. பேச்சற்று, காற்றின் ஓசையில் அங்கே மௌனக் காவியம் தொடர்ந்தது…
சிரம் தாழ்த்தியவள், காற்றாகிப்போன குரலில், “ப்ளீஸ்.. அ..அப்றம் பேசலாம்..” என்றிட,
அவளையே ஆழ்ந்து பார்த்தான்.
அவளிடம் மெல்லிய விசும்பல் எழுந்தது..
“எ..என்னால முடியல..” அதே கிசுகிசுப்பான குரலில் மொழிந்தாள்…
“என்னைப் பார்த்து சொல்லு விட்டுடுறேன்..” என்றான்.
அவள் கால்கள் தள்ளாடியது.
எங்கனம் அவன் கண் பார்ப்பது? திடமெல்லாம் உரிஞ்சுக்கொண்டானே என்று மனதோடு அவனையே திட்டினாள்.
இடவலமாய் தலையாட்டினாள்.
அவன் பிடி இறுகியது.
சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
கலங்கி சிவந்த மான் விழிகள் பல காவியங்கள் பேசின.
அதன் மொழிபெயர்ப்பாளனும் விடயம் புரிந்துகொண்டோனாய் அவளை விடுத்து, வண்டியைக் கிளப்பிக் கொண்டு புறப்பட்டான். செல்பவனையே பார்த்து சிலையாகி நின்றாள்…
சில நிமிடங்களில் அப்படியே அவ்விடத்திலேயே மண்டியிட்டு அமர்ந்தவள், முகத்தைக் கைகளில் மூடிக் கொண்டு அழத் துவங்கிட்டாள். அத்தனை அழுகை அவளிடம்… ஆனால் இதழ் புன்னகைத்தது…

Comments
Post a Comment