விசை-30

 விசை-30



நாட்கள் தென்றலாய்ப் படர்ந்து, மாதங்களாய்க் கடந்து, வருடங்களாய் வளர்ந்து, கடந்திருந்தது…

“வேணாம்.. அந்தத் தேதி எனக்கு ஒத்து வராது..” என்று இறைவி கூற,

“எதுதான்டி உனக்கு ஒத்து வரும்? இப்ப இது ஏன் வேணாம்னு சொல்ற?” என்று கேட்டான், அய்யனார்.

“ப்ச்..” என்று அவள் சலித்துக் கொள்ள,

அவனுக்குச் சிரிப்பு வந்தது.

“பார்த்த மூணு நல்ல நாள்ல, ஒரு நாள் கல்யாண ஆர்டர் வந்துருக்குனு சொல்லிட்ட.. ரொம்ப வேண்டப்பட்டவங்கனு சொன்னியேனு விட்டுட்டேன்.. இன்னொரு டேட் சொன்னதுக்குப் பரிட்சை இருக்குனு சொல்லிட்ட. சரினு அதுவும் விட்டுட்டேன்.. அடுத்த டேட்ல பாப்புக்குப் பரிட்சைனு சொல்லிட்ட.. சரினு அதையும் விட்டுட்டேன்.. இப்ப இந்தத் தேதிக்கு என்ன?” என்று அய்யனார் கேட்க,

“உங்கள யாரு செமஸ்டர் வரும் மாசத்தைப் பார்த்துக் குறிக்கச் சொன்னது?” என்று கோபம் போல் கேட்டாள்.

அதில் புன்னகைத்துக் கொண்டவன், “அம்மா இந்த மாசமே வைக்கணும்னு சொல்றாங்களே இறைவி..?” என்று கேட்க,

“அத்தைக்காகத்தான் நானும் உங்களைப் போனா போகுதுனு விடுறேன்..” என்றாள்.

“கடைசிவரை காரணத்தைச் சொல்ல மாட்டியே நீ?” என்று அவன் கேட்க,

“எனக்குப் பீரியட்ஸ் டேட்..” என்று கூறினாள்.

“ஓ..” என்றவன், “இப்ப வேற தேதி தேடனுமா?” என்க,

“சரி நான் டேப்லெட் போட்டுக்கிறேன்” என்றாள்.

“ப்ச்.. அதெல்லாம் வேணாம். உடம்பைக் கெடுத்துக்காத. நான் வேற தேதி பார்க்கச் சொல்லுறேன்” என்று அவன் கூற,

“அத்தை நிஜமா என்மேல கோபப்படத்தான் போறாங்க” என்று கூறினாள்.

“நேத்து உரிமை இருக்கும் இடத்துலத்தான் கோபம் வரும்னு யாரோ சொன்னதா நினைவு” என்று அவன் கேலியாய்க் கேட்க,

“ஆமா இப்பவும் அதான் சொல்றேன்.. உரிமை இருக்கும் இடத்துலத்தான் கோபம் வரும்.. நான் உரிமைப்பட்டவதானே? அவங்க கோபப்பட்டாலும் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்.. ஒன்னு ரெண்டுனா பரவால்ல.. கொடுத்த நாலு தேதியையும் நான் வேணாம்னு சொன்னா அவங்களும் என்னதான் பண்ணுவாங்க?” என்று கேட்டாள்.

“ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்..” என்றவன், “லாஸ்ட் எக்ஸாம் எப்படி பண்ணின?” என்று கேட்க,

“ம்ம் பண்ணியிருக்கேன்.. வர்ஸ்க் (வேலை) முடிச்சு நைட்டு வந்ததே ஒரு மணி மேலதான்.. ரொம்ப டயர்ட்.. எக்ஸாம்ல ஒழுங்காவே கான்ஸன்ட்ரேட் பண்ண முடியலை.. ரொம்ப மோசமா எழுதலேனாலும் ரொம்ப நல்லாவும் பண்ணலை” என்று கூறினாள்.

“இதுக்குத்தான் எக்ஸாம் முன்னாடி நாள் ஆர்டர் எடுக்காதனு சொன்னேன்” என்று அவன் கோபம் போல் கூற,

“அதைத்தான் நினைச்சுக்கிட்டேன்.. அவங்க ரொம்ப கேட்டுகிட்டாங்க.. அவங்க வீட்ல மேரேஜுக்குச் சம்மதிச்சதே ரொம்ப கஷ்டப்பட்டுதான்.. பட்ஜெட்டோட முடிச்சுக்க ரெண்டு பக்கமும் பிரச்சினை பண்றாங்க, உங்களோடதுதான் ஒத்துவருதுனு கேட்கவும் எனக்கும் தட்டிக் கழிக்க மனசு வரலைபா” என்று கூறினாள்.

“புரியுது.. ஆனா பிசினஸ்னு வந்துட்டா இப்படி எமோஷன்ஸ்ல கொஞ்சம் இன்வால்வ் ஆகாம இருக்கவும் கத்துக்கணும். அதுதான் உனக்கும் நல்லது” என்று அய்யனார் கூற,

“புரியுது” என்றாள்.

“சரி பாப்பாக்கு எப்ப எக்ஸாம் முடியுது?” என்று அவன் கேட்க,

“வரிசையா எனக்கும் எக்ஸாம் என் பொண்ணுக்கும் எக்ஸாம்.. எதோ முகிலால தான் என் வண்டி ஓடுது.. அவனே தர்ஷோட சேர்த்து வச்சு இவளையும் படிக்க வைக்குறான்.. எனக்கு நான் படிக்கவே நேரம் பத்த மாட்டேங்குது” என்று சோகமாய்க் கூறினாள்.

“ஹெக்டிக் டைம் அப்படிதான்டா இருக்கும்.” என்று அவள் தோள் சுற்றிக் கரம் போட்டுக் கொண்டவன், “சரி எப்ப முடியுது?” என்க,

“பாப்பாக்கு இந்த வெள்ளியோட முடியுது. எனக்கு அடுத்த புதனோட முடியுது” என்றாள்.

“சரி நான் வேற தேதி பாத்துட்டு சொல்றேன்.. ப்ளீஸ் அதுல எதும் கமிட்மென்ட்ஸ் வச்சுக்காத” என்று அவன் கூற,

“சாரிபா” என்று அவன் தோள் சாய்ந்தாள்.

அவள் தலையைப் பரிவாய்க் கோதிக்கொடுத்தவன், “எனக்கு உன் சாரியெல்லாம் வேணாம் இறை.. நீ இப்படி பிஸியா இருக்குறது நிஜமாவே எனக்குச் சந்தோஷம்தான்” என்று கூற,

அவள் இதழ் மெல்ல புன்னகைத்தது.

ஆம்! அவள் இத்தனை ஓய்வின்றி இருப்பதற்குக் காரணம், அவளது உழைப்பின் மேன்மையும், படிப்பில் பதித்தக் கால்தடமும்தான்…

ஒருவழியாக, தனது ஆறு வருட முயற்சியின் பயனாய்க், கடந்த ஆண்டு, ‘சக்தி ஈவென்ட் மேக்கர்ஸ்’ என்ற நிகழ்ச்சி மேலாண்மை மையம் துவங்கியிருந்தாள். அத்தோடு சேர்த்து, ஆடை மற்றும் ஆபரண வடிவமைப்புக் கலையிலும் தனது பட்டப் படிப்பை, வீட்டிலிருந்து படிக்கும்படித் துவங்கியிருந்தாள்.

இதில் அய்யனாரும் அவளுக்கு இன்றியமையாத துணையாக இருக்கின்றான் என்றாலும் மிகையாகாது. மகளையும் மனைவியையும் படிக்க வைத்திட, பண அளவிலும், மன அளவிலும் தன்னாலான துணையைத் தாராளமாகக் கொடுத்து, அவளுக்கு அத்தனை ஊக்கத்தோடும் உறுதுணையோடும் இருக்கின்றான்.

தற்போது அய்யனாருக்கும் முப்பதோரு வயதான நிலையில், அவனது திருமணத்தை இந்த மாதத்திலேயே வைத்துக்கொள்வது நல்லதென்று யாரோ அறியாத ஜோதிடர் கூறியதில் காமாட்சி பிடியாய் இருக்க, அய்யனார் தான் வெகுவாக யோசித்தான். அவருக்கு இறைவி படிப்பது பிரச்சினை இல்லை‌. ஆனால் தன் மகனோடு திருமணம் செய்துகொண்டு படிக்க வேண்டும் என்று நினைத்தார். இந்த விடயத்தில் அவர் மகன் என்பதைத் தாண்டி யாருக்காகவும் யோசிப்பதாக இல்லை.

‘பிள்ளை பெத்து ஆறு மாசத்துலயே அவளையும் தோள்ல கட்டிக்கிட்டு வீடு விடாப்போய் மருதாணி போட்டவ நான்.. குழந்தை, படிப்பு, வேலையோட கல்யாணத்தைச் சேர்த்துக்கிறது கூடுதல் சுமைனா, ப்ராக்டிகலா அது நிச்சயம் சுமைதான்.. ஆனா தாங்க முடியாம நிச்சயம் இருக்காது. அதான் நீங்க இருக்கீங்களேங்க.. அதைத் தாங்க எனக்கு உதவ மாட்டீங்களா என்ன? எனக்குச் சம்மதம்தான். அத்தை ஆசைப்படியே நாள் குறிக்கச் சொல்லுங்க’ என்று கூறிய இறைவியை, இன்னும் இன்னும் தன் காதலால் மூச்சடைக்கச் செய்தால்தான் என்னவென்று நினைத்துக்கொண்டான்…

“பாப்பா முகில் வீட்ல இருக்காளா?” என்று அய்யனார் கேட்க,

“நான் இங்க இருந்தா அவ அங்கதானே இருப்பா?” என்றவள், “என்ன பாப்பா பத்தியே கேள்வி?” என்று கேட்டாள்.

அவள் தாடை பற்றி முகம் நிமிர்த்தியவன், “அம்மாக்குக் கோபம் வருதுபோலயே” என்க,

“எனக்கேன் கோபம் வரப்போகுது?” என்று முறுக்கிக் கொண்டாள்.

“அப்போ வரலையா?” என்றவன், அவள் நெற்றி முட்ட,

“வரல வரல” என்று அலட்டிக் கொண்டாள்.

“நமக்குக் கல்யாணம் முடிஞ்ச கையோட உனக்கு செமஸ்டர் லீவ் வந்துடும்ல?” என்று அவன் கேட்க,

“அதுக்கு?” என்று புருவம் உயர்த்தி கேட்டாள்.

“அதுக்கு…” என்றவன், நமட்டு சிரிப்போடு அவள் இமை படபடப்பைப் பார்த்துவிட்டு, “ஃபேமிலி டூர் போலாமா?” என்றான்.

பாவை சட்டென்று நிமிர, “நீ நான் பாப்பா.. மூணு பேரும்” என்று கேட்டான்.

அவனைத் திகைப்பாய்ப் பார்த்தவள், மனம் குளிர்ந்து, “இம்ப்ரஸ் பண்றீங்க” என்று கூற,

“நான் இம்ப்ரஸ் பண்ணாமலா என்னை லவ் பண்ணின?” என்றான்.

“ம்க்கும்.. இம்ப்ரஸ்க்கு ஸ்பெல்லிங்கூட தெரியாத வயசு அது..” என்று அவள் அழுத்துக் கொள்ள,

அதில் அட்டகாசமாய் சிரித்தவன், “அப்ப ஸ்பெல்லிங்கூட தெரியாத வார்த்தைக்கான உதாரணமா தானே இப்ப இருக்க?” என்று பெருமையோடு கூறிக் கொண்டான்.

அதில் நாணமும் மகிழ்ச்சியும் பொங்க புன்னகைத்தவள், “சரி நான் கிளம்புறேன்.. அவளைக் கூட்டிட்டுப் போய் படிக்கனும். நாளைக்கு வேலை இருக்கு. இன்னிக்கே முடிஞ்சளவு படிச்சுகிட்டாதான் உண்டு” என்று கூற,

“சரிமா.. பார்த்துப்போ. எனக்கும் வேலையிருக்கு” என்றான்.

இருவரும், காவலர்கள் குடியிருப்பிலிருக்கும், அவன் வீட்டு மொட்டைமாடியிலிருந்து இறங்கி வர,

காமாட்சி உள்ளே வந்தார்.

‘அய்யோ அத்தே’ என்று அவள் அதிர்ந்து விழிகள் விரிய விழிக்க,

அன்னையைப் பார்த்த அய்யனாருமே ஒரு நிமிடம் பதறித்தான் போனான்.

“இறைவி.. நீ எப்ப வந்த?” என்று காமாட்சி கேட்க,

“அ..அத்தை.. நா..நான்..” என்று தடுமாறியவள், “உங்களப் பாக்கத்தான் வந்தேன்” என்றாள்.

அய்யனாருக்குச் சிரிப்பு முட்டிக்கொண்டு வர, கடினப்பட்டு அதை அடக்கியபடி, “அவளுக்கு அந்தத் தேதிதான் டேட்டாம்மா.. அதான் வேற பார்க்கலாம்னு உட்கார்ந்து பேசி முடிவு செய்யலாம்னு வந்தா. நீங்க கோவிலுக்குப் போயிருந்தீங்களே” என்று கூற,

‘அதனாலதான தைரியமா வான்னு என்னைக் கூப்பிட்டீங்க’ என்று மனதோடு இறைவி அவனைக் கேலி செய்துகொண்டாள்.

“இந்தத் தேதியும் வேண்டாமா?” என்று அவர் அழுத்துக் கொள்ள,

“சாரி அத்தை.. அடுத்து பார்த்து சொல்ற தேதில வேலையே இருந்தாலும் நான் கேன்ஸல் பண்ணிக்குறேன்.. ப்ளீஸ்” என்று அவள் கூறினாள்.

இருந்தும் நாட்கள் தள்ளிப்போவதில் அவருக்குக் கொஞ்சம் வருத்தமே. ஆயிரமிருந்தாலும், அவரது ஒரே மகனின் திருமணம் அல்லவா? அதனால் கொஞ்சம் அதிருப்தியாகத்தான் உணர்ந்தார்.

அது அய்யனார் மற்றும் இறைவிக்கும் புரிந்திருந்தது.

“எனக்குப் புரியுது அத்தை.. நிஜமா சாரி.. இந்த ஒரே ஒருமுறை மட்டும் பாருங்களேன்.. வேற கிடைக்கலைனா நான் மாத்திரை எதும் போட்டுக்கிறேன்” என்று அவள் கூற,

“அதுலாம் வேணாம்.. நான் வேற பாக்குறேன்.. மாத்திரையைப் போட்டு உடம்ப கிடம்ப கெடுத்துக்காத” என்று கூறினார்.

புன்னகையாய் அவரைக் கட்டிக் கொண்டு, “தேங்க்ஸ் அத்தை” என்று அவள் கூற,

சிறு புன்னகையுடன், அவள் தோள் தட்டி, “காஃபி எதும் குடிக்குறியா?” என்றார்.

“இல்ல அத்தை.. பாப்பா முகில் வீட்ல இருக்கா.. கூட்டிட்டு வீட்டுக்குப் போய் படிக்கனும்” என்று அவள் கூற,

“இங்க என்கிட்ட கொண்டுவந்து விட வேண்டியது தானே?” என்றார்.

“அவளே இங்க வரத்தான் குதிச்சா அத்தை.. போலீஸ் அப்பா பாக்கலாம், பாத்தி பாக்கலாம்னு அடம்.. எக்ஸாம் நடக்குது. அங்க முகில் தர்ஷோட சேர்த்து உக்காத்தி படிக்க வச்சுடுவான்ல? அதான்” என்று அவள் விளக்கம் தர,

“சரிமா. பார்த்துப்போ. நீயும் ஒழுங்கா படி” என்று கூறினார்.

“சரி அத்தை” என்றவள், அவரிடம் விடைபெற்று, தனது சம்பாத்தியத்தில், தனக்காக அவள் வாங்கிக்கொண்ட இருசக்கர வாகனத்தில் ஏறி, முகில் வீட்டை அடைந்தாள்.

அங்கு பரீட்சைக்குப் படித்து முடித்த சந்தோஷத்தோடு, குழந்தைகள் இருவரும் உணவு உண்டுகொண்டு இருக்க,

இறைவி வந்ததும், அவளிடம் ஓடிவந்த சக்தி, “அம்மா நீங்க பச்சாச்சா? சக்தி பச்சுட்டேன்” என்று உற்சாகமாய் கூறினாள்.

“அம்மா இனிதான்டா படிக்கனும்” என்று குழந்தைக்கு முத்தம் வைத்தவள், “பாப்பா குட் கேர்ள்” என்க,

“ஆமா ம்மா.‌ நீங்க வீத்துக்கு போய் படிக்கும்போது நான் டிஸ்டர்ப் பண்ணாம அம்மா பாட்டிக் கூட விளையாடுவேன்” என்று சக்தி கூறினாள்.

அதில் சிரித்தபடி நிமிர்ந்தவள், “மதிக்கு எக்ஸாம்லாம் முடிஞ்சதுல?” என்க,

“ம்ம்.. அவளுக்குக் காலேஜ்லருந்து இன்டர்வியூ ஒன்னு வந்துருக்கு. அட்டென்ட் பண்ணியிருந்தா.. அதோட ரிசல்ட்ஸ் ஒரு மாசத்துக்குள்ள வந்துடும்னு சொல்லிருக்கா” என்று கூறினான்.

“ஹே சூப்பர்டா..” என்று அவள் கூற,

“அவ வேலைக்குப் போனதுக்குப் பிறகு கல்யாணம் வச்சுக்கலாம்னு யோசிக்குறா. மாமாதான் அவசரப்படுறார்.. படிச்சுத்தான் முடிச்சாச்சே எப்ப வச்சுக்கலாம்னு” என்று கூறினான்.

“வேலை இன்னும் ஒரு மாசத்துல ஓகே ஆயிடப்போகுது. இப்பருந்தே நாள் குறிக்க ஆரம்பிச்சு கல்யாண வேலையெல்லாம் பார்க்க ஆரமிச்சுட்டா அதுவே ரெண்டு மூனு மாசம் ஆயிடும் முகில்” என்று அவள் கூற,

“அனுபவம் பேசுதோ?” என்றான்.

“ஆமா ஆமா.. பேசுது.. நானே அவசரக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.. அதனாலதான் உனக்கு அட்வைஸ் பண்றேனாக்கும்” என்று அவள் கூற,

“சித்தி.. நீங்க சிச்சாவை மேரேஜ் பண்ணிட்டா சக்தியைக் கூப்பிட்டுக்க சிச்சாதான் வருவாங்கள்ல?” என்று தர்ஷ் கேட்டான்.

“ஆமா தர்ஷ்.. நாம அப்பாகூட டூர் டூர் போலாம்” என்று சக்தி உற்சாகமாய் கூற, இருவரும் சந்தோஷத்தோடு துள்ளிக் குதித்தனர்.

அதனை முகத்தில் புன்னகையோடு பார்த்தவள், “மதிக்கு வாழ்த்துக்கள் சொன்னேன்னு சொல்லிடு.. கண்டிப்பா வேலை கிடைச்சுடும். அப்றம் செந்திலப்பாவை ரொம்ப தடுங்காதீங்க. வேலை கிடைக்கும்வரை அவளுக்கு வேணாம்னு சொல்றது அவளோட நியாயமான ஆசைதான்.. தப்பே சொல்ல மாட்டேன்.. மொட்டையா வேணாம் வேணாம்னு தள்ளிப்போட்டு அவரை கஷ்டப்படுத்தாம, முறையா இந்த மாசம் மேல வச்சுக்கலாம், இந்தத் தேதி பாத்துக்கலாம்னு நாள் மட்டுமாவது குறிங்க. அவர் வேண்டிய வேலையையாவது துவங்குவார்” என்று கூற,

மெல்லிய புன்னகையுடன், “சரிங்க மேடம்” என்றான்.

புன்னகையாய்த் தன் மகளோடு புறப்பட்டவள், தேர்வுக்காகப் படித்துவிட்டு, அவளவன் கரம் பற்றப்போகும் நாளுக்கான நினைவுகளோடு உறங்கிப்போனாள்.


Comments

Popular posts from this blog

திருப்பம் -01

திருப்பம் -02

திருப்பம்-03